Thursday, August 21, 2025

நகுலன்: தன்னைத் தானே எழுதிக் கலைக்கும் எழுத்து - நகுலன் பிறந்தநாள் பகிர்வு


ஆசை

நவீன தமிழ் இலக்கிய உலகம் எத்தனையோ சிறந்த எழுத்தாளர்களைக் கண்டிருந்தாலும் சிலருக்கே கல்ட் (cult) அந்தஸ்து கிடைக்கிறது. இந்த அந்தஸ்து அவர்களின் படைப்புலகுக்குள் நுழைவதற்கே தடையாகவும் ஆகிவிடக்கூடியது. அப்படிப்பட்ட கல்ட் அந்தஸ்தைப் பெற்ற சிலருள் நகுலனும் ஒருவர். நவீன கவிதைக்குள் நகுலனின் இடம் உறுதியானதொன்று என்றாலும் அந்த இடத்தை எப்படி வரையறுப்பதென்பது எப்போதும் சிக்கலாகவே இருக்கிறது. சிதறுண்ட 20-ம் நூற்றாண்டு நவீன மனம் என்று சில சமயம் நகுலன் (அவரது நாவல்கள், சிறுகதைகளையும் உள்ளடக்கி) வரையறுக்கப்பட்டாலும் அவரிடம் மரபின் தொடர்ச்சியும் இருக்கிறது. அந்த மரபும் எப்படிப்பட்டதென்றால் காலம்காலமாக மரபுக்குள்ளிருந்து கலகம் விளைவித்த போக்கைப் பின்தொடர்வதாக இருக்கிறது. சில விஷயங்களில் நகுலன் சித்தர் மரபுக்கு அருகில் இருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது. சில இடங்களில் இருத்தலியல் கவிஞராகவும் தென்படுகிறார். 

பல்வேறு அறிவுத் துறைகளைப் போலவே தத்துவமும் வெகுகாலமாகக் கவிதையின் ஆடையை உடுத்திக்கொண்டுதான் உலாவந்தது. இந்த மரபானது தமிழின் நவீனக் கவிதையிலும் தொடர்ந்தது. கவிதையில் தத்துவம் சொல்லக் கூடாது என்றில்லை. அது கவிதையைவிட அதிகமாகத்  துருத்திக்கொண்டு தெரியக்கூடாது என்பதுதான் முக்கியம். மாமத யானையை மரம் மறைக்கக்கூடாது. இன்று திரும்பிப் பார்த்தால் எழுத்துக் காலக் கவிஞர்கள் கணிசமானோரிடம் தத்துவத்தின் தாக்கம் துலக்கமாகத் தெரிகிறது. பிரமிளின் ஆரம்ப காலக் கவிதைகள் இதற்குச் சான்று. அந்தக் கவிதைகள் அல்ல, பிரமிளின் சாதனைகள். பிற்காலக் கவிதைகளே அவருடைய சாதனைகள்.

நகுலனின் கவிதைகளில் தொடக்கம் முதல் இறுதிவரை தத்துவச் சரடு காணப்படுகிறது. என்றாலும் அது உறுத்துவதில்லை. எளிய வார்த்தைகள், அக சந்தம் இரண்டும் சேர்ந்து ஆழமான தரிசனமாக அவரது தத்துவப் பார்வை வெளிப்படுகிறது. இவ்வகையில் திருவள்ளுவரின் தூரத்துத் தொடர்ச்சி என்று கூட நகுலனைச் சொல்லலாம். ‘இருப்பதற்கென்றுதான்/ வருகிறோம்/ இல்லாமல்/ போகிறோம்’ (பக்.163) என்ற கவிதையில் ‘நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்/ பெருமை உடைத்துஇவ் வுலகு’ என்ற குறளின் நிழலையும் அதைப் போன்ற கச்சிதம், எளிமை ஆகியவற்றையும் காண்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக இருத்தலின் நிலையாமை குறித்த மானுட துக்கம் இதைக் கவிதையாக நிலைநிறுத்துகிறது. இல்லையென்றால் வெறும் ஞானக்கூற்றாகவே எஞ்சியிருக்கும்.

’அண்டமெல்லாம் எடுத்து சாட ஒரு உள்ளம்/ அதுவே உன்னை நினைந்து/ மடங்கிக் குவிய நாட்டம்’ (பக். 4) என்ற தொடக்க கால வரிகளில் ஓடும் இழையின் இன்னொரு முனையை ‘முக்கோணம்/ முடிவில்/ ஒரு ஊசி முனை ஞானம்’ (பக்.201) என்ற பிற்காலக் கவிதையிலும் கண்டடையலாம். ஞானம் தன்னை ஊசி முனையளவு குறுக்கிக்கொண்டால்தான் மனம் அண்டமெல்லாம் எடுத்துச் சாடும் முக்கோணமாக விரியும் என்று நாம் இந்த இரண்டு கவிதைகளையும் இணைத்து விரித்துக்கொள்ளலாம். முக்கோணத்தின் முனை குவிந்திருப்பதால்தான் ஏனைய இரண்டு பக்கங்களிலும் அது விரிகிறது. விரிவதால் எல்லாப் பக்கங்களிலும் குவிகிறது. விரிதலும் குவிதலும் இணைபிரியாதவை. ஒரு தொடர் சுழற்சி. இந்த இரண்டு கவிதைகளும் கிட்டத்தட்ட 30 ஆண்டு இடைவெளியில் எழுதப்பட்டவை.

பிரபஞ்சப் பார்வை

திரும்பத் திரும்ப நகுலனின் குறுங்கவிதைகள், சுசீலா கவிதைகள், மழை-மரம்-காற்று போன்றவை அலசப்பட்டதில் அவரது பிரபஞ்சப் பார்வையானது வெளிப்படாமல் போய்விட்டது. உலகின் புராதன மனமும் நவீன அறிவியலும் முயங்கிய ஒரு பார்வை அது. நகுலனிடம் இந்தப் பிரபஞ்சம், அதன் வாழ்வு, மரணம் குறித்த கேள்விகள் வெவ்வேறு வடிவில் உருவெடுக்கின்றன. ‘மூலதத்துவத்தின் யோனித்துவாரம்’ (பக்.137) என்ற வரி எத்தகைய சிறு துவாரத்திலிருந்து இந்தப் பிரபஞ்சம் பிதுங்கிவந்து இன்று இவ்வளவு பெரிய வியாபகத்தை அடைந்திருக்கிறது என்ற வியப்பை நம்முள் ஏற்படுத்துகிறது. இருத்தலை ஆண்சக்தியுடனும் அதைத் தோற்றுவிக்கும் இன்மையைப் பெண்சக்தியாகவும் கருதும் தாவோயிஸத் தத்துவத்தோடு நெருங்கிய தொடர்புடையது இந்த வரி. யோனியை ஒரு வட்டமாக, துளையாகக் கருதினால் அதன் உள்ளே இருப்பது இன்மை, காலியிடம், பூஜ்ஜியம். இந்த இன்மையில் ஏதுமில்லை என்றாலும் ஏதுமில்லாமலும் இல்லை. அதாவது இருத்தலைக் கருவுற்ற இன்மைதான் அது; இன்னும் சொல்லப்போனால் இருத்தலைக் கருவுறும் சாத்தியத்தைக் கொண்ட இன்மை அது. விரிந்துகொண்டே செல்லும் இருத்தலை ஒரு படச்சுருள் போல பின்னோக்கி ஓட்டினால் அதன் தொடக்கத்தில் இன்மை இருக்கும்; அதாவது பூஜ்ஜியமாக இருக்கும் பூரணம். இதைத்தான் நகுலனும் பின்னோக்கி இந்த வரிகளில் கொண்டுசெல்கிறார்:

‘ஒவ்வொன்றாகக்
கழித்துக் கொண்டு வந்து
கடைசியில் நிற்கும் பூஜ்யம்தான்
பூரணம் என்கிறீர்கள்’
(பக்.119)

இன்மை, இருத்தல் இந்த இரண்டும் தொடர்ந்து அலைக்கழிக்கின்றன நகுலனை:
 
‘யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது?
எல்லாம்’
(பக்.177)

என்ற கவிதையை முன்னிட்டு ஒரு புத்தகமே எழுதிவிடலாம். பிரபஞ்சம் யாரும், ஏதும் இல்லாத பிரதேசமாகத்தான் இருந்திருக்கிறது. அதில் சக்தி சலனமுற்றதால் சடம் தோன்றி, சகலமும் நடக்கிறது. இந்தக் கவிதையை குவாண்டம் கோட்பாட்டின் கண்கொண்டு பார்க்க வேண்டும் என்ற ஆவலை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. (அடிப்படையில் கவித்துவத்துக்கு நெருக்கமானது குவாண்டம் கோட்பாடு என்பதால் இலக்கியக் கோட்பாட்டு விமர்சகர்கள் என்னை மன்னிப்பார்களாக.) இந்தப் பிரபஞ்சமும் அதன் அனைத்துப் பொருள்களும் உயிர்களும் ஒரே நேரத்தில் அலை வடிவத்திலும் பொருள் வடிவத்திலும் இருக்கின்றன. அலை என்றால் உண்மையான கடலலை போன்றோ ஒலி அலை போன்றோ அல்ல. சாத்தியங்களின் அலை. ஒரு எலெக்ட்ரானை உற்றுநோக்குவதற்கு முன்பு வரை அது எண்ணற்ற இடங்களில் இருந்திருக்கக் கூடிய சாத்தியங்களின் தொகுப்பாகத்தான் இருக்கும். நாம் பார்க்கும் செயலானது அதை ஒரு இடத்தில் நிலைநிறுத்தி ஏனைய சாத்தியங்களைக் கழித்துக்கட்டிவிடுகிறது. உங்களைப் பார்க்க தஞ்சாவூரிலிருந்து வண்டியில் கிளம்பிய நண்பன் உங்களை வந்தடைந்து நீங்கள் அவனைப் பார்க்கும் வரை அவன் கீழ்க்கண்ட சாத்தியங்களின் தொகுப்பாகத்தான் இருக்கிறான்: கிளம்பிவிட்டான், கிளம்பவில்லை, இடையில் வந்துகொண்டிருக்கிறான், உங்களை நெருங்கிவிட்டான், இடையில் வண்டி கோளாறு, விபத்து, திடீரென்று மனம் மாறி வந்த வழியே திரும்பிவிட்டான் என்று அளவற்ற சாத்தியங்களின் தொகுப்பாகத்தான் அவன் இருக்கிறான். அவன் தற்போது என்ன செய்கிறான், என்னவாக இருக்கிறான், உங்களை அடைந்துவிட்டானா, இல்லையா என்பவற்றுள் ஏதாவது ஒன்றை நீங்கள் உங்கள் புலன்களின் ஏதாவதொரு வழியில் அறிந்துகொண்டால் (கண்ணால் பார்த்தல், உங்களைக் கைபேசியில் அழைத்து அவன் தகவல் சொல்லுதல் போன்றவை) மற்ற சாத்தியங்கள் அனைத்தும் கழித்துக்கட்டப்பட்டு ஒற்றை நிதர்சனமாகத்தான் அவன் உருவெடுக்கிறான். ஆக, யாரும் பார்க்காதவரை அவன் எல்லாமுமாக இருக்கிறான். இதையெல்லாம் சுருக்கமாக மூன்றே வரிகளில் நகுலன் சொன்னதுபோல் இருக்கிறது.

இன்மையிலிருந்துதான் இந்தப் பிரபஞ்சம் தோன்றியது என்று ஒரு குழந்தைக்குச் சொன்னால் ‘அது எப்படி ஒண்ணுமே இல்லாததிலிருந்து பிரபஞ்சம் தோன்றியிருக்கும்’ என்று குழந்தை திருப்பிக் கேள்வி கேட்கும்போது நாம் திகைத்துப்போவோம். ரிக் வேத காலத்திலிருந்தே இந்தக்  கேள்வியும் திகைப்பும் மனிதர்களுக்கு இருந்திருக்கிறது:

‘அப்போது இருத்தலின்மை இல்லை,
இருத்தலும் அப்போது இல்லை.
அப்போது இடைப்பகுதியும் இல்லை
அப்பால் விண்ணகமும் இல்லை.
என்ன சலனமுற்றது? எங்கிருந்து, யாருடைய பாதுகாப்பிலிருந்து?
நீர் இருந்ததா, வெகு ஆழம் இருந்ததா?

அப்போது மரணமோ மரணமின்மையோ இரண்டும் இருக்கவில்லை.
இரவு பகல் இரண்டின் அறிகுறிகளும் இல்லை.
அந்த ஒன்று சுவாசித்தது, காற்றில்லாமல்
தன் உள்ளார்ந்த சக்தியால்.
அதற்கப்பால் வேறு ஏதும் இருந்திருக்கவில்லை.

தொடக்கத்தில் இருள் இருந்தது,
இருளால் சூழப்பட்டு.
இது எல்லாமே எந்தவொரு வடிவமும் இல்லாத பெருங்கடல்.
அந்த ஒன்று பிறக்கும்போது
வெற்றிடத்துக்குள் மறைந்திருந்தது,
அப்போதுதான் அந்த ஒன்று வெப்பத்தால் பிறப்பெடுத்தது.
                            
அப்போது, தொடக்கத்தில், எண்ணத்திலிருந்து வேட்கை உருவெடுத்தது,
அதுவே ஆதி விந்தாக இருந்தது.
எழுச்சிபெற்ற சிந்தனையால்
தங்கள் இதயங்களுக்குள் தேடுவதன்மூலம்
கவிஞர்கள் இருத்தலின்மைக்குள் இருத்தலின் தடயத்தைக் கண்டார்கள்’
    (ரிக் வேதம், 10.129, ஆங்கிலம் வழி தமிழில்: ஆசை)

ரிக் வேதம் கூறிய, இருத்தலின்மைக்குள் இருத்தலின் தடயத்தைக் கண்ட கவிஞர்களுள் ஒருவராக கீழ்க்கண்ட வரிகளில் நகுலனும் தெரிகிறார்:

‘அர்த்தமற்ற பெரு வெளியில்
இதழ் இதழாக
ஒரு பூ விரிவதைக் கண்டு
பூ என்று உதறி எழுந்து
போக விரைந்தவன்
பூ என்று சொல்லி
வாயடைத்து நின்றேன்.’
  (பக்.159)

பாழ், அதாவது இன்மை என்பது இருத்தலைப் பிறப்பித்த பின் எங்கும் போய்விடவில்லை. அது இருத்தலுக்குள்தான் இருக்கிறது. சீனத்தின் யிங் யாங் தத்துவத்தைப் போன்றது இது. இன்மைக்குள் இருத்தல், இருத்தலுக்குள் இன்மை. இரண்டும் தனித்தனியல்ல.

‘உள்ளுக்குள்ளே இருக்குது
இன்னொரு கிளியும் தானும்
அண்டங் குலுங்கினாலும்
அற்புதங்கள் நிகழ்ந்தாலும்
ஆடாமல் அசையாமல்
என்றென்றுமது
இல்லாமல் இருக்கும்
அந்தக்கிளி அப்பா.’
  (பக்.113)

என்று நகுலன் சொல்லும் அந்தக் கிளிதான் இன்மை. ஒவ்வொருவரும் தங்களை இருத்தலுடன் மட்டுமே தொடர்புபடுத்திக்கொள்கிறோம். அதனால்தான் பிரபஞ்சம் முழுவதும் ஆண்மை மனதை மனித குலம் விசிறிவிட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் அவரவருக்குள் இருக்கும், பெண்சக்தியின் அடையாளமான இன்மையை உணர்வதில்லை. ஜென் தியானங்களில் ‘இன்மை’யை (nothingness) தியானிப்பதுண்டு. அதை நோக்கிச் செல்லச் செல்ல நகுலன் சொல்லும்,
‘வேடங்களைந்த பெரும் பாழ்;/ பாரதி அரற்றிய/ பராசக்தி துகிலுரித்த
வெறுஞ் சக்தி’ (பக்.33) நமக்குப் புலப்படும். நகுலனை இப்படிப் பார்ப்பது பலருக்கும் உவப்பில்லாத விஷயமாக இருக்கலாம். ஆனால், நகுலனின் கவிதைகள் முழுக்க இருத்தல், இன்மை, சூனியம், பூஜ்ஜியம் போன்றவற்றின் தடயங்களை நாம் காண முடியும். எடுத்துக்காட்டாக கீழ்க்கண்ட வரிகள்:

‘எங்கும்
“வெளிப்பூச்சின்
ஏகாதிபத்தியம்.”
பூச்சுக் கலைந்துவிட்டால்
சூன்யம் பல்லிளிக்கிறது.’
(பக்-33)


‘வார்த்தையென்றாலும்
அதற்குமுண்டு
அதனுள் நின்ற
சூன்யத்தில்
ஆகாயத்தின் மேலுருவம்’
(பக்.59) 

‘எல்லாவற்றிற்கும்
இடைவிட்டு இடை
தொடர்ந்து வருமொரு
சூன்யம்தான்
நம்மைக் காக்கிறது.’
(பக்.66)

‘ஆகாய வடிவமான
உன்னை நான்
ஊழி தோறும்
தேடி நின்றேன்.’
(பக்.66)

குடத்துக்குள்  உள்ளதும் ஆகாயமே (குடாகாயம்), குடத்துக்கு வெளியில் இருப்பதும் ஆகாயமே (மகாகாயம்) என்பது இந்திய தத்துவ மரபின் பார்வைகளுள் ஒன்று. உள்ளும் வெளியும் ஒன்றுதான். இந்தப் பார்வை நகுலனுக்கும் இருந்திருக்கிறது. குடம் தன்னை ஆகாயத்தின் ஒரு பகுதியாக உணர்வதற்குத் தன்னை உடைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தனக்குள் இருக்கும் ஆகாயத்தை உணர்ந்தாலே,  அதை மேலும் மேலும் நெருங்கினாலே போதும். இதைத்தான் ‘உட்சென்று/ வெளியுலவுமொரு வித்தை’ (129) என்ற வரிகளின் மூலம் நகுலன் தெரிவிக்கிறார். இன்னொரு கவிதையில்,
‘உள்ளுக்குள்ளிருப்ப
துள்ளமென்றால்
கண்முன்
காண்பதேதோ?’
(பக்.52)
என்கிறார். உள்ளம் உள்ளேயும், உள்ளம் காண்பதற்கான பொருட்கள் வெளியேயும் இல்லை. உள்ளே இருப்பதும் வெளியே இருப்பதும் உள்ளம்தான். உள்ளம் வீழ்த்தும் படம்தான் உலகம்.

காலம் - இடம்

இருத்தல், இருத்தலின்மை ஆகியவற்றுடன் காலம், இடம் பற்றிய சிந்தனைகளும் நகுலனிடம் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. இடம்-காலம் இரண்டும் பிரிக்க முடியாதவை என்றாலும் இடத்தைக் காலமாக்கியும் காலத்தை இடமாக்கியும் விளையாடுகிறார் நகுலன். ‘குளம் போன்ற சூரல் நாற்காலியில்/
முடங்கிச் சுருண்டேன்.’ (பக்.8) என்று ஒரு கவிதையில் வரும். சூரல் நாற்காலி என்ற இடம் காலமாக ஆனதால்தான் குளம் போன்ற திரவநிலையை அது எட்டுகிறது. சூரல் நாற்காலியைக் காலம் என்று இங்கே வெளிப்படையாகக் குறிப்பிடவில்லையென்றாலும் கீழ்க்கண்ட கவிதையில் அது வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்நிலையில்
சூரல் நாற்காலி
என்னைத் தாங்கிச்
சமைந்து சலனமற்றுக்
காலபீடமாகப் பரவெளியாகப்
படர்ந்து விரியும்.
(பக்.10)

அதனால்தான் சூரல் நாற்காலியில் உட்கார்ந்து நகுலன் வேடிக்கை பார்க்கும்போது ஒரு ‘சொரூப’ நிலை ஏற்படுகிறது. காலம் தனித்த பிறவியல்ல, இடத்தின் உடலினூடேதான் ஊர்ந்து ஊர்ந்து முன்னே செல்ல முடியும். அது இடத்தையும் சேர்த்து எடுத்துக்கொண்டு, இடத்தினூடாக ஊர்ந்துசெல்கிறது. அப்படி இருக்கையில், ‘திரும்பிப் பார்க்கையில்/ காலம் ஒரு இடமாகக் காட்சி/
அளிக்கிறது’ (பக்.166) என்று எப்படிச் சொல்ல முடியும்? உண்மையில் இங்கே இரண்டு காலக் கோடுகள் உருவாகின்றன.  காலம் எடுத்துக்கொண்டு வரும் இடம் ஒரு காலக் கோடு என்றால், அதே காலம் தனக்குப் பின்னால் விட்டுச் செல்லும் அதே இடம் இன்னொரு காலக் கோடு. இதை இன்னும் விளக்கமாகப் பார்க்கலாம். 1950-ல் இருந்த கும்பகோணத்தை யதார்த்தத்தில் நம்மால் பார்க்க முடியுமா? முடியாது. ஏனெனில் காலம் அதனைத் தன்னுடன் எடுத்துக்கொண்டுவந்துவிட்டது. காலத்தின் கூடவே வருவதால் கும்பகோணத்தின் தோற்றத்திலும் உள்ளடக்கத்திலும் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. ஆனாலும், 1950-ம் ஆண்டின் கும்பகோணம் என்பது உண்மையில் இருந்த ஒன்றுதானே. அது தற்போது எங்கே? அது ஒரு தனிநபரின் நினைவிலோ, சமூகத்தின் கூட்டு நினைவிலோதான் இருக்கிறது. இடத்தைத் தனக்குப் பின்னே விட்டுச்செல்ல முடியாது என்பதால் காலம் இடத்தின் வடிவத்தை ஏற்றுக்கொண்டு நினைவாக மாறிவிடுகிறது. காலம் ஊர்ந்து செல்வதையும், அது உருக்கொள்வதையும் பற்றிய கீழ்க்கண்ட கவிதை எனது இந்தப் பொருள்கொள்ளலுக்கு வலு சேர்க்கிறது:   

‘பல கட்டங்களில்
“நான் யார்?”
என்ற எதிர்க்குரலை நம்மால்
எழுப்ப முடிவதில்லை
அதனால்
காலம் ஊர்ந்து செல்கிறது
ஒரு உருத்தெரியா
தவேளை
நம்முள் உருக்கொள்கிறது’
(பக்.203)

காலமும் இடமும் மறைந்தால் பிரபஞ்சமே நகுலனுக்கு ஒரு யோனிபீடமாய்த் தெரிகிறது:

காலம் பின்விலக இடம் மறைய
உலகனைத்தும்
யோனிபீடமாய்ப் படர்ந்து விரிய
நாமுள் மறைய
(பக்.137)

நகுலன் எனும் சித்தர் தொடர்ச்சி

இருத்தல், இன்மை, காலம்-இடம்  போன்றவற்றை நவீன மனம் கொண்டு பார்க்காமல் மரபு வழிப்பட்ட இந்திய மனம்கொண்டு பார்ப்பது நகுலனை நம் சித்தர் மரபின் தொடர்ச்சியாக ஆக்குகிறது. கீழ்க்கண்ட கவிதைப் பகுதிகள் இதற்கு உதாரணம்:

உடலுக்குள்ளே
அடிவயிற்றினுக்கு
அடியிலே
ஒரு பாம்பு
ஒரு பாம்பு
சும்மாச்
சுருண்டு கிடக்குதடா!
ஒரு பாம்பு! ஒரு பாம்பு!

அதை முடுக்கி
விட்டால்
அந்தப் பாம்பு
மேலெழுந்து
சாடுகையிலே
அந்தரங்கத்திலே
ஒரு சுகம்
தட்டுதடா!
ஒரு சுகம் தட்டுது! தட்டுது!
(பக்.142)

அந்தகார வெளியில் அலைந்து திரிந்தாலும்
ஆதார சுருதி என்று ஒன்று உண்டன்றோ?
(பக்.116)

தன்னைக்காணத் தான் வேறாகி நின்றால்,
அன்று வரும் அமரர்நிலை
(112)

ஏகாந்தப் பெருவெளியிலே
ஒரு கள்ளிச் செடி பூத்து நிக்குது
அதுவெள்ளை வெளேரென்று
பாத்து நிக்குது.
(பக்.105)

‘எனக்கு/ யாருமில்லை/ நான்/ கூட…’ என்பது போன்ற சுருக்கமான, புகழ்பெற்ற நகுலன் கவிதைகளுக்கு நேரெதிர்தான் மேற்கண்ட கவிதைகள். நகுலனை இந்தக் கோணத்தில் வைத்து அதிகம் பேசப்படவில்லை. திருமந்திரம், தாயுமானவர், சித்தர் பாடல்களில் நகுலனுக்கு இருந்த ஈடுபாடு இந்தக் கவிதைகளில் துலக்கமாகத்  தெரிகிறது. அவற்றின் வெளிறிய நிழலாக இல்லாமல் நவீனத் தொடர்ச்சியாகவே இந்தக்  கவிதைகள் இருப்பது நகுலனின் பலம்.

இருத்தலியல் கவிஞர் நகுலன்

நகுலனை ஒரு பக்கம் சித்தர் மரபின் நவீனத் தொடர்ச்சி  என்று பார்ப்பதற்கான முகாந்திரம் இருக்கிறது என்றால் இன்னொரு பக்கம் அந்தத் தொடர்ச்சி நவீன வாழ்வை எதிர்கொள்ளும் பதற்றத்தையும் பார்க்க முடிகிறது. இதன் காரணமாக அதுவரை ஒன்றாக இருந்த உடல்-மனம் வேறாகின்றன. அதன் பிறகு ‘இந்த மனதை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய’ முடியாமல் போகிறது. இருபதாம் நூற்றாண்டு மனிதரின் மிகப் பெரிய அச்சம்தான் ‘தான்’. தன்னைக் கண்டு அஞ்சி ஓடுகிறார்கள், தன்னிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காகவே புணர்வதிலிருந்து போர்புரிவது வரை ஒவ்வொரு செயலும். கண்ணாடியில் தன்னைப் பார்ப்பது ஒரே நேரத்தில் தன்மிதப்பையும் பேரச்சத்தையும் தருகிறது. சொல்லப்போனால் ஒருவரைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள் எல்லாமே அவருக்கான கண்ணாடியாகின்றன. விளைவு, அவர்கள் தங்களிடமிருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகளையும் தொழில்நுட்பங்களையும் கண்டறிகிறார்கள். ‘நம்முடன் நாம்  இருப்பதற்கு நாம் பழக்கப்படவில்லை, நம்மையே நமக்குப் பிடிக்காதது போலவும், நம்மிடமிருந்து நாம் தப்பியோட முயல்வது போலவும் நாம் நடந்துகொள்கிறோம்’ என்கிறார் வியட்நாமிய புத்தத் துறவி திக் நியட் ஹான் கூறுகிறார். நகுலனுக்கும் தன்னுடன் இருத்தல் என்பது பெரும் தத்துவக் கேள்வியாக உருவெடுக்கிறது. தன் முன்னால் ஊர்ந்துசெல்லும் தன் நினைவை அவரால் பார்க்க பயமாக இருக்கிறது; அதே நேரத்தில் பார்க்காமலும் இருக்க முடியவில்லை. இந்த வகையில் அவர் ஒரு இருத்தலியல் கவிஞராகவும் தோற்றம் கொள்கிறார்.

எனக்கு என்னிடமிருந்து எப்படித் தப்புவது என்று
தெரியவில்லை.
(பக்.42)

என்ற கவிதை வரிகளிலும்,

நான் என்னைப்
பார்த்துக் கொண்டிருந்து
வாழ விரும்பவில்லை
(பக்.84)

என்ற கவிதை வரிகளிலும்,

எனக்கு
யாருமில்லை
நான்
கூட…
(பக்.123)

என்ற வரிகளிலும்

என்னைத் துரத்திக் கொண்டு நான் செல்கிறேன்
எல்லாரும் சிரிக்கிறார்கள்.
(பக்.181)

என்ற வரிகளிலும் கேட்பது ஒரே குரல்தான். இதையே,

என்னுடன் ஒருவருமில்லை.
நான் கூட இல்லை; எவ்வளவு சுகம்.
(பக்.71)

என்று சுகமாக ஆக்கிக்கொள்ளவும் நகுலன் முயல்கிறார். எனினும், தன்னுடன் இருப்பதற்குக் கற்றுக்கொள்ளவும் முயல்கிறார் நகுலன். ‘எழுதுவது என்பதுகூட என்னுடன் இருப்பதற்கு நான் காத்திருப்பது என்பதுதான் என்பதை நான் கண்டுகொண்டேன். நமது பிரக்ஞை இயல்பாகவே அரைவட்டம்; அது முழுவட்டமாக ஆவதற்கு இந்தக் காத்திருத்தல் ஒரு தத்துவம்’ (பக்.147) என்கிறார் நகுலன்.

நவீன மனிதனுக்கு மனமும் மனசாட்சியும்தான் பெரும் சிக்கல். சுசீலாவின் கைகள் நகுலனுக்குப் பரவசமூட்டுபவை என்றால் சொந்தக் கைகளோ தன்னையே வெறுக்குமளவுக்குச் செய்கின்றன:

’“எவ்வளவு பாபகிருத்தியங்கள்,
துஷ்பிரயோகங்கள்,
மனமறிந்த பொய்கள்”
இவ்வளவும் ஒரு கைப்பரப்பில்
அரசு செலுத்துகின்றன.’
(பக்.42)

யூதாஸ் காலத்திலிருந்து நவீன காலம் வரை 40 வெள்ளிக் காசுகள் மாறவில்லை. அவைதான் அவனை இன்னும் யூதாஸாக வைத்திருக்கின்றன. அவனொன்றும் விருப்பப்பட்டு ஏசுவைக் காட்டிக்கொடுப்பவனல்ல. வெள்ளிக்காசுக்கான தேவையை அவனுக்கு எப்போதும் வைத்திருப்பது யார்?:

’அவன் தொழிலில்
அவன் சமர்த்தன்தான்
யாரில்லை என்றார்கள்
என்றாலும்
இவ்வளவும்
பேசிய பிறகு
நாற்பது வெள்ளிக்
காசுகள் சம்பாதிக்க
வேண்டுமென்றால்
அதற்கு ஏசுவின்
தலையைத்தான் வெட்ட
வேண்டுமா?
நீ என்ன உளறுகிறாய்.’
(பக்.64)

காட்சியின்பம் – சொல்லின்பம் - கருத்தின்பம்

அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் நகுலனின் தத்துவார்த்தக் கவிதைகள் அவரது கவித்துவத்தின் பன்முகத்தை மறைத்துவிடுகின்றன. நகுலன் காட்சி இன்பமும் சொல் இன்பமும் கற்பனை இன்பமும் கூடிய பல வரிகளை எழுதியிருக்கிறார். அவரது நெடுங்கவிதையான ‘மழை: மரம்: காற்று’ முழுக்கவும் கண்ணிலும் பிரக்ஞையிலும் வந்து விழும் காட்சிகளால் நிரம்பியது. காட்சியும் காட்சியில் ஏற்படும் சலனமும் காற்றின் சலிப்பும் அவரது பல கவிதைகளை உருவாக்கியுள்ளன. காட்சி ஒரு நிச்சலனக் குளம், அதில் ஏற்படும் சலனமே நகுலனின் கவிதையில் உருவங்களாக மாறுகின்றன. அதாவது சாலைக்கும் பாலைவனத்தின் மணல் பரப்புக்கும் மேலுள்ள, ஏதுமற்ற அந்தரத்தில், வெயிலின் கொதிப்பு பேய்த்தேரை (கானல்) உருவாக்குவதுபோல. தொடக்க காலத்திலிருந்து நகுலன் கவிதையில் இப்பண்பு காணப்படுகிறது. இவ்வகையில் ‘காத்திருந்தேன்’ என்ற கவிதை முக்கியமானது:

கண்ணெதிரே
கானல் கொதிக்கப்
பார்க்கும் தென்னை மரமனைத்தும்
பதுமையெனத் தாங்கி நிற்க,
ஆலின் ஆயிரமாயிரம்
சிறு இலைகள் பதறி மின்ன
வானம் நீலமாக விரிய
நான் தனித்திருந்தேன்.
(பக்.8)

’சிறு இலைகள் பதறி மின்ன’ என்னும் வரியானது, வெயிலை உள்வாங்கும் ஆலமரம் அதை எப்படிச் சிதறிப் போன கண்ணாடி வெயிலைப் பிரதிபலிக்குமோ அப்படி ஆயிரமாயிரச் சிதறலாகப் பிரதிபலிக்கும் ஒளிப் பிரம்மாண்டத்தை நம் கண்ணுக்குள் விதைத்து பிரக்ஞையில் விரியச் செய்கிறது.

‘கண்ணாடிகள் சூழ
நான் ஏன் பிறந்தேன்
பகல் பொழுது
என்னைச் சுற்றி வட்டமிடுகிறது’
என்று சற்றே துயருற்ற தொனியில் ஆரம்பிக்கும் கவிதையொன்று

‘ராத்திரியில்
ஒவ்வொரு நக்ஷத்திரமும்
என்னை ப்ரசவிக்கிறது’
(பக்.84)

என்று அழகான வரிகளோடு முடிகிறது. பகலில் ஆலமரம் என்றால் இரவில் நட்சத்திரம். உண்மையில் நகுலனின் சிதறுண்ட மனம் என்பது இதுதானோ?

‘கண்ணுக்குள்
கருவிழியும் வெள்ளை நிறமும்
கூடு கட்டும்’
(பக்.111)
என்ற வரிகளும் நகுலனின் அழகுணர்வுக்கு எடுத்துக்காட்டுகள்.

மேலும் சில எடுத்துக்காட்டுகள்:

ஒரு மரம் கொத்திப் பறவை
பளீரென்று
தன் மஞ்சள் சிறகடித்து
அந்தரத்தைக்
கிழித்துச்செல்கிறது
(பக்.89-90)

 ‘வாழை இலையில்
சாம்பல் பூத்த
அடிப்பச்சை’
(பக்.82)
என்ற வரிகள் அழகிய காட்சியொன்றைத் தனது கச்சிதமான விவரணையால் உருவாக்கினால் இதற்கு மாறாக,

 ‘தெருவில் யாரோ
ஒரு பிச்சைக்காரன்
அவன் கால் புண் மீது
ஒரு பச்சைத்
தளம்’
(பக்.83)

என்ற வரிகள் எதிர் அழகியலுக்கான காட்சியை உருவாக்குகின்றன. வசந்தத்தை வரவேற்ற கலாப்ரியாவின் நாயை இந்த வரிகள் நினைவூட்டுகின்றன.

‘கவிதையில் ஒலி முக்கியமான அம்சம் என்று நான் கருதுகிறேன்… மூச்சுத் தட்டாமல் வாசிக்கும் ஒரு சப்த ரேகையே வரி’ (பக்.127) என்கிறார் நகுலன். இதற்கு எதுகை, மோனை, தொடை போன்றவற்றுடன் நவீன கவிதை எழுத வேண்டும் என்பதில்லை. உள்ளார்ந்த சந்தம் ஒன்று அவசியம். ஆனால், தற்காலக் கவிதைகள் பலவற்றையும் வரி உடைக்காமல் படித்தால் கவித்துவமான உரைநடையைப் படிப்பது போன்றுதான் இருக்கின்றன. நகுலனின் பல கவிதைகளில் அகசந்தம் காணக்கிடைக்கிறது.

கன்னியொருத்திக் கருத்தரிக்க
கருத்திசைந்து முன்வரக்
கையினைக் கைகௌவும்
அவ்வமயம்
தீ எரிய
மத்தளம் அதிர
ஒரு மதயானை நின்று தளரும்
(பக்.32)

என்ற வரிகளில் ‘மத்தளம் அதிர/ ஒரு மதயானை நின்று தளரும்’ என்பதில் உள்ளதுதான் அகசந்தம். இந்த அகசந்தம் வார்த்தைகளின் சுமை களைந்த  தூயநிலையிலும் கிடைக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு கீழ்க்கண்ட கவிதைகள்:

’வீங்கு திரைக்கடலில்
பாய்ந்து சென்றதொரு
பாய்மரக் கப்பல்;
கரை நெடுக
ஒரு வரிசை மீன் வற்றல்’
(பக்.49)

‘தவளைப்
பாட்டி!
நீயும் அறிந்தனையோ
சூல்போன்ற நின் வயிறு
பகர்வதும் காதலென்று’
(பக்.52)

தவளைப் பாட்டி கவிதை ஹைக்கூ கவிதைகளை நினைவூட்டுகிறது. நகுலன் கவி நடையின் பன்மைத்தன்மைக்கு இதுபோன்ற கவிதைகள் எடுத்துக்காட்டு.

அதேபோல், சொல்லின்பத்துக்கு ஒருசில உதாரணங்கள்:

‘கண்நுகரும் ஒளிச் சிறப்பு’
(பக்.33)

சப்பாத்தி முட்செடிகள்
சச் சச் சச் சச்சென நிற்கும்.
(பக்.49)

நனவோடைக் கவிதைகள்

நகுலனுடைய கவிதைகள் பலவும் முழுமையானவையோ ஒரு சரட்டைப் பின்பற்றிச் செல்பவையோ அல்ல. இவரது நாவல்களில்  வருவதுபோல் அதே நனவோடை உத்திதான். அதனால் ஆழ்மனதில் இருக்கும் அனைத்தையும் அள்ளிக்கொண்டுவரும் வலைதான் இந்த உத்தி. அப்படி அள்ளிக்கொண்டு வரும்போது குப்பைகள், ரத்தினங்கள் எல்லாம் சேர்ந்தேதான் வரும். குப்பைகளின் ஆதிக்கத்தைப் பார்த்து நகுலனை நாம் புறக்கணிப்பதும் நடக்கும் ரத்தினங்களைத் தேடியெடுத்து நகுலனைக் கொண்டாடுவதும் நடக்கும். கலைந்த மனதிலிருந்து அள்ளிக்கொண்டு வருவதால் புறாக்களுக்கு இறைந்த அரிசிகள் ஒவ்வொரு முறையும் தரையில் ஒவ்வொரு தோற்றம் பெறுவதைப் போல் நகுலனின் எழுத்தும் இணைந்தும் கலைந்தும் தோற்றம் காட்டுகிறது. அவர் தன்னுடைய எழுத்தைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்:

 ‘என்ன எழுத்து உன் எழுத்து?
எழுதிக் கலைக்கும்
தன்னைத் தானே
என் எழுத்து’
(பக்.45)

தன்னைத்  தானே நகுலன் எழுதிக் கலைக்கும்போது கலகமான வரிகள் வந்து விழுவதுண்டு. கீழ்க்கண்ட வரிகளும் அப்படிப்பட்டவைதான்:

உணவு உண்டா?
உண்பது உண்டு
உணவில்லை.
(பக்.45)

 ‘ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;/ உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்!’ என்ற பாரதியின் வரிகளின் நிழலை இங்கே காணலாம். உணவு என்பது உடைமையானபோதுதான் மனித குலம் நாடோடி வாழ்க்கையை விடுத்து ஓர் இடத்தில் நிலைகொண்ட விவசாய வாழ்க்கையை மேற்கொள்ள ஆரம்பித்தார்கள். மனிதர்கள் உணவு சேமிப்பதற்கும் எறும்புகள் உணவு சேமிப்பதற்கும் வேறுபாடு உண்டு. மனிதர்கள் உணவைச் சேமிக்க ஆரம்பித்தபோது முதலாளித்துவத்தின் விதை விழுந்தது. மனிதர்களின் முழு சிந்தனையும் தனக்கான, தன் குடும்பத்துக்கான உணவுத் தேடலில் இருக்கும்போது அன்புசெய்தலைத் தொழிலாகக் கொள்வதெங்கே?

நகுலன் நூற்றாண்டைக் கொண்டாடும் இந்த நேரத்தில் அவரது படைப்புகள் செம்மையாகப் பதிப்பிக்கப்படாதது பெருந்துயரமே. நகுலன் உயிரோடு இருந்தபோது 2001-ல் காவ்யா வெளியிட்ட ‘நகுலன் கவிதைகள்’ தொகுப்பு முழுக்க அவ்வளவு பிழைகள். எழுத்துப் பிழைகளையெல்லாம் மன்னித்துவிடலாம். ‘கோதம-இந்ரம்’ என்ற பிரமிள் கவிதையின் இறுதிப் பகுதியான ‘சூர்ய உவாச:’ நகுலன் கவிதையாக காவ்யா தொகுப்பில் இடம்பெற்றுவிட்டதை (பக்.122-123) எப்படி மன்னிப்பது? அதே தொகுப்பை அப்படியே ஸ்கேன் செய்து 2020-லும் வெளியிட்டிருக்கிறார்கள். அதன்படி  நகுலன் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் (1921 ஆகஸ்ட்டில் பிறந்தது கும்பகோணம். எனினும் வளர்ந்ததும் வாழ்வதும் திருவனந்தபுரம்தான் – நகுலன் கவிதைகள்: சில குறிப்புகள் பகுதியில் இடம்பெற்ற குறிப்பு). நகுலனின் நூற்றாண்டை அடுத்தாவது அவருக்கு ஒரு செம்பதிப்பு கொண்டுவர வேண்டியது அவசியம்.

- ஷங்கரராமசுப்ரமணியன் தொகுத்த ‘நகுலன்-100: அருவம் உருவம்’ (நூல்வனம் வெளியீடு) நூலில் இடம்பெற்ற கட்டுரை 

நகுலன் நூற்றாண்டு தினத்தில் நான் எழுதிய கவிதை:

நகுலன் ஊர்ந்து வருகிறார்
---
புணர்ச்சிக்கு நடுவே
நினைவுக்கு வருகிறது
இன்று
நகுலனின்
நூறாவது பிறந்த நாள்
என்று

தனக்கு யாருமில்லை
தான்
‘கூட’
என்று சொன்ன
அந்த வாழ்நாள் ஒண்டிக்கட்டைக்குச்
செய்யும் அவமதிப்பில்லையா இது
என்று கேட்கலாம்

நகுலன் இல்லாத இடத்தில்
எல்லாம்தானே
நடந்துகொண்டிருக்கும்

உண்மையில்
ஒரு நூற்றாண்டென்பது
வெகு தொலைவு

இவ்வளவு தூரம்
ஊர்ந்து ஊர்ந்து
வந்திருக்கிறார்
நகுலன்
இடையில் மரணம் வேறு
அதற்கு முன்பு
சுசீலா வேறு

ஆமாம்
நகுலன் போன பிறகு
எந்தக் கதவைத்
தட்டிக்கொண்டிருக்கிறாள்
சுசீலா

அவள் கேட்டால்
திறப்பவர் எவரோ
அவர் சொல்லிவிடுங்கள்
நகுலன் தன்னைத் தானே
துரத்திக்கொண்டு
சென்றிருக்கிறார் என

உண்மையில்
ஒரு நூற்றாண்டு
என்பது
வெகு தொலைவுதான்

ஏனெனில்
திரும்பிப் பார்க்கும்போது
நகுலனே
ஒரு இடமாகக் காட்சியளிக்கிறார்

சூரல் நாற்காலியின் மீது
நகுலனின் பிறப்புக்கு முந்தைய வெயில்
இறப்புக்குப் பிந்தைய வெயிலுடன் சேர்ந்து
அடித்துக்கொண்டிருக்கிறது
அதில் வண்ணாத்திப் பூச்சிகள்
பறந்து கொண்டிருக்கின்றன

உண்மையில் ஒரு
நூற்றாண்டு என்பது
வெகு தொலைவுதான்

தன் இறப்புக்குப் பிறகும்
ஊர்ந்து ஊர்ந்து
வந்துகொண்டிருக்கிறார்
நகுலன்
பார்க்க பயமாக இருக்கிறது
பார்க்காமலும் இருக்க முடியவில்லை
       -ஆசை 


No comments:

Post a Comment