Monday, September 29, 2025

கரூர் துயரம்: தொண்டர்களைத் தயார்ப்படுத்தாத அரசியலின் விளைவு!


கரூரில் கூடிய யாரும் அரசியல்வாதி விஜய் பேசுவதைக் கேட்க வந்த தொண்டர்கள் இல்லை. நடிகர் விஜயைப் பார்க்க வந்த ரசிக வெறியர்கள். பெண்கள் உட்பட பலரும் முதல் நாள் இரவே அந்த இடத்தில் வந்து படுத்துக்கொண்டனர். 12 மணி நேரத்துக்கு மேலாக சாப்பிடாமல் தண்ணீர் குடிக்காமல் ஒன்றுக்குப் போகாமல் விஜய்க்காகக் காத்திருக்கிறார்கள். அதுதான் மயங்கி விழுந்திருக்கிறார்கள். நெரிசலில் மூச்சுத் திணறி இறந்திருக்கிறார்கள். விஜய் நேரத்துக்கு வந்திருந்தால் இவ்வளவு அசம்பாவிதம் நடந்திருக்காது. நடந்ததற்கு விஜய்தான் முழுமுதல் காரணம்.

எம்.ஜி.ஆர். தன் படங்களின் வழியே பொறுப்பான பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தார். திரையில் மது அருந்த மாட்டார், புகைப்பிடிக்க மாட்டார், ரவுடியிசத்தில் ஈடுபட மாட்டார். அவரது ரசிகர்களும் அவரைப் பின்பற்றினார்கள். எனக்குத் தெரிந்து என் நண்பரின் தந்தை ஒரு எம்.ஜி.ஆர். ரசிகர். இன்றுவரை மதுப் பழக்கம், புகைப்பழக்கம் கிடையாது. கேட்டால் தலைவர்தான் காரணம் என்பார். ஆனால், விஜய் இதற்கு நேரெதிர். தன் ரசிகர்களைத் தன் திரைப் பிம்பத்தைப் போலவே தற்குறிகளாக ஆக்கிவிட்டிருக்கிறார். அதுதான் இதற்கு காரணம். தன் ரசிகர்களை எந்த விதத்திலும் தயார்படுத்தாமல் அரசியலில் குதித்திருக்கிறார். 

சௌரிசௌரா வன்முறை (1922) நடைபெற்றபோது காந்தி வெற்றிகரமாகப் போய்க் கொண்டிருந்த ஒத்துழையாமையை, மக்கள் இன்னும் தயாராக ஆகவில்லை என்று கருதி நிறுத்திவிட்டார். இதற்காக அவர் இன்னும் விமர்சிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அந்தப் போராட்டம் தொடர்ந்திருந்தால் மேலும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்கும்; அது மக்களுக்குத்தான் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என்று காந்தி நன்கு அறிந்திருந்தார். அதற்குப் பிறகு 8 ஆண்டுகள் கழித்தே உப்பு சத்தியாகிரகம் (1930) என்ற பெரிய போராட்டத்தை காந்தி முன்னெடுத்தார். அப்போது தொண்டர்கள் ஒரு பெரிய போராட்டத்துக்குத் தயாராக அரசியல்மயப்பட்டிருந்தார்கள். 

அதுமட்டுமல்ல காந்தி எந்தப் பகுதியில் போராட்டம் நடத்தச் சென்றாலும் அங்கே முதல் காரியமாக அங்குள்ள மக்களுக்கு போராட்டத்துக்கு அடிப்படையான கல்வியைப் புகட்டினார். சுத்தம், சுகாதாரம், ஒழுங்கு ஆகியவற்றைப் பேணுதல், எல்லோரும் ஒன்றாக சமைத்து உண்ணுதல், எல்லா வேலைகளையும் எல்லோரும் செய்தல் (கழிப்பறைகளைச் சுத்தம் செய்தல் உட்பட), கல்வி கற்பித்தல், தீண்டாமையைப் பின்பற்றாமல் இருத்தல் என்று அவர் மேற்கொண்டநடவடிக்கைகளில் மக்கள் அரசியல்மயமானார்கள். அதனால்தான் அவருடைய போராட்டங்கள் கட்டுக்கோப்பாக நடைபெற்றன. அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தாலும் போராட்டம் கட்டுக்கோப்பாக நடக்கும். அந்த அளவுக்குத் தனக்குக் கீழே அடுத்த கட்ட தலைவர்களைத் தயார்செய்திருந்தார். 

அதுபோன்று தலைமைகளுக்குத் தன் தொண்டர்கள் மீது கட்டுப்பாடு வேண்டும். எம்.ஜி.ஆருக்கு கூடாத கூட்டமா? ஆனால், விஜய்க்காகக் கூடியவர்களெல்லாம் தற்குறிகள். அவ்வளவு ஏன் விஜயகாந்த் கூட்டத்தில் யாராவது ஏதாவது செய்தால் விஜயகாந்த் மேடையில் இருந்தே மிரட்டுவதைப் பார்க்கலாம். விஜய் அப்படி எதுவும் செய்யவில்லை. மரங்களில் ஏறுதல், அத்துமீறி பிறர் வீடுகளின் பால்கனியில் ஏறுதல், மின்சார கம்பங்களில் ஏறுதல், பிறருடைய சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் என்று தன் ரசிகர்கள் செய்த எதையும் அவர் கண்டிக்க வில்லை. அவர் இதையெல்லாம் ரசிக்கவே செய்தார்

திமுக, அதிமுக தொண்டர்களெல்லாம் ஒழுக்கமானவர்கள் என்று சொல்வதற்கில்லைதான். ஆனால் கட்டுக்கோப்பானவர்கள்.  வார்டு மெம்பர், வட்டச் செயலாளர் தொடங்கி மாவட்டச் செயலாளர் வரை அவர்களைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்வார்கள். இங்கே விஜய், புஸ்ஸி ஆனந்த் தவிர இரண்டாம் கட்ட மூன்றாம் கட்டத் தலைவர்கள் என்று எவரும் இல்லை. இறந்துபோனவர்களையும் காயம்பட்டவர்களையும் பார்க்க விஜயில் தொடங்கி எந்தக் கட்ட நிர்வாகிகளும் வரவில்லை என்பது கட்சி நிர்வாகம் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அங்கே விஜய் மட்டும்தான் முகம், தலைவர், கடவுள். எம்.ஜி.ஆருக்கும் ஓரளவு அப்படித்தான் என்றாலும் அவருக்கு வலுவான மாவட்டச் செயலாளர்கள் இருந்தார்கள். திமுகவை பின்பற்றிய கட்டமைப்பு இருந்தது. த.வெ.கவில் ஒவ்வொரு உள்ளூர் பகுதியிலும் யார் வட்டச் செயலாளர் என்று பார்த்தால் 25 வயது அரைவேக்காடாக, ரசிகத் தற்குறியாக இருக்கும்.

தன் தொண்டர்களைத் தயார்ப்படுத்தவும் அரசியமயப்படுத்தவும் எம்.ஜி.ஆர். திரைப்படங்களைப் பயன்படுத்திக்கொண்டார். அதற்குக் குறிப்பிட்ட காலம் எடுத்துக்கொண்டார். ஆனால், விஜய் தன் பிம்பத்தைக் கட்டமைக்க, வெறியர்கள் கூட்டத்தை உருவாக்க மட்டுமே திரைப்படங்களைப் பயன்படுத்திக்கொண்டார். அவரும் அரசியலுக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ளவில்லை. அவருடைய தொண்டர்களையும் அவர் தயார்ப்படுத்தவில்லை. அதன் விளைவுதான் கரூர் மரணங்கள். இந்தத் துயரம் இதற்கு முன்பே வேறு விஜய் பேரணிகளிலோ மாநாடுகளிலோ ஏற்பட்டிருக்கலாம். வெடிக்கக் காத்திருந்த அணுகுண்டு போல் இப்போது வெடித்துவிட்டது. இனி  முன்பைப் போல அரசியல் செய்ய முடியாது என்பதை ராஜா வீட்டுக் கன்றுக்குட்டியான விஜய் உணர்ந்திருப்பார்.

 - ஆசை

No comments:

Post a Comment