சு. தியடோர் பாஸ்கரன்
எழுத்தறிவு போன்று சூழலியல் கரிசனம் என்பது நம் எல்லாருக்கும் இருக்க வேண்டிய ஒன்று. ஆனால் இன்று அது மக்களிடம் இருந்து விலகி இருக்கிறது. படித்தவர்களும் வசதி படைத்தவரும் இது யார் வீட்டுக் கல்யாணமோ என்றிருக்கிறோம்.. சூழலியல் கரிசனம் ஒரு பாடமல்ல. அது ஒரு விழிப்பு. ஒரு பார்வைக் கோணம். நாம் வாழும் உலகைப் பற்றி ஒரு அடிப்படையான புரிதல். இது நமது வாழ்வாதரம் பற்றியது. நம்முடன் இந்த உலகில் வாழும் மற்ற உயிரினங்களைப் பற்றியும், ஒரு பெரிய சிலந்தி வலையைப்போல எப்படி எல்லா உயிரினங்களும் ஒன்றோடொன்று இணைப்பு கொண்டுள்ளன என்பதைப் பற்றியும் உணர்த்தக் கூடிய ஒரு கருத்தாக்கம் அது.
என்றாலும் புவிவெப்பமாதல், காலநிலை மாற்றம், கதிரியக்க மாசு போன்ற விவரங்களைப் பற்றிய அரிச்சுவடி தகவல் கூட நமது அச்சு ஊடகங்களில் காண்பதற்கு இல்லை. இந்நிலையைப் பற்றி சிந்தித்தால், தமிழில் சுற்றுச்சுழல் பற்றிய நூல்கள் அரிதாகவே இருப்பதை உணர முடிகின்றது. அண்மையில் சுற்றுச்சூழல் பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டிருந்தாலும் அதற்கேற்ற பாடப்புத்தகமோ அல்ல்து பயிற்சியளிக்கப்பட்ட ஆசிரியர்களோ இல்லை. தமிழ்நாட்டில் உயிரோட்டமான எந்த விதச் சுற்றுச்சூழல் இயக்கம் இல்லாததற்கும் இதுவும் ஒரு காரணம். இந்தப் பின்புலத்தில்தான் ஆசையின் இந்த நூலை நான் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.கருதுகோள்கள், வாழிடங்கள், ஆளுமைகள், காட்டுயிர் போன்ற பலதரப்பட்ட கட்டுரைகள் இந்நூலில் இருந்தாலும் அவற்றின் ஊடே இழையோடுவது நூலசிரியரின் சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறைகள். நன்னீர், காலநிலை மாற்றம் போன்ற பொருட்களை ஆசிரியர் எளிய மொழியில், ஆனால் நம்மைத் தொடும் முறையில் எழுதியுள்ளார். அதே போன்று அலையாத்தி காடுகளைப்பற்றிய கட்டுரையும். அது பல உயிரினங்களின் தனித்துவமான வாழிடம். ஆனால், அவையும் அந்தமான் தீவுகளில் பெருமளவு அழிக்கப்படுகின்றன. வெட்டுமரத்தொழிலுக்காகவும் பணப்பயிர்களுக்காகவும் ஊழிகாலமாய் நின்றிருந்த மழைக்காடுகளை அழித்துவிட்டோம். தேநீர் மட்டும் ஒரு பணப்பயிராக இந்தியாவிற்கு வராமலிருந்தால் எவ்வளவு மழைக்காடுகள் எஞ்சியிருந்திருக்கும்? இந்தக் காடுகளில் உருவாகும் ‘காவிரி தென்பெண்ணை, பாலாறு, புகழ் கண்டதோர் வையை, பொருநை நதி” எவ்வாறு இருந்திருக்கும் என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு.
மரங்களை
வெட்டுவதல்லாமல், மற்ற முறைகளிலும் காடு
சிதைக்கப்படுகிறது. தைலமரம், சவுக்குமரம், சீகை மரம் போன்ற
வேற்று மண்டல மரங்கள் நம் மலைப்பிரதேசங்களில் பயிரிடப்பட்டுவிட்டன. ஊட்டி அருகில்
உள்ள காடுகளில் இவற்றைப் பார்க்கலாம். வேற்றுப்பிரதேச மரங்களை நம் காடுகளில் நடவே
கூடாது. ஏனெனில், உள்ளூர் தாவரங்கள்
மீதும் காட்டுயிரின் மீதும் அவற்றின் தாக்கம் தீமையாகவே இருக்கும். அதுமட்டுமல்லாது, நிலத்தடி நீரளவைக் குறைக்கும். மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் சீரழிக்கப்படும். உண்ணிச்செடி போன்ற களைத்தாவரங்கள் பரவும். இயற்கையில் உள்ள இந்தப் பிணைப்பு
பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
ஆசிரியர்
சுட்டிக்காட்டும் இன்னொரு முக்கியமான வாழிடம் இஸ்ரேலில் உள்ள ஹூலா சதுப்புநிலம்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்த பறவை
சரணாலயத்தில் நான் இருந்த இரண்டு
நாட்கள் மறக்க முடியாதவை. கண்ணுக்கெட்டும்
தூரம் வரை செங்கால் நாரை, கூழக்கடா, பெருங்கொக்குகள்
போன்ற வலசை வரும் பறவையினங்கள்.
ஐரோப்பவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் வலசைபோகும் பறவைப் பெருங்கூட்டங்கள் இங்கு தங்கி இளைப்பாறிச் செல்கின்றன. இந்தச் சதுப்புநிலம் தக்க சமயத்தில் அழிவிலிருந்து
காப்பாற்றப்பட்டதை ஆசிரியர் விவரிக்கிறார். நம்மூர்
பள்ளிக்கரணை சதுப்பு நிலமும் அவ்வாறு காப்பாற்றப்பட்ட ஒரு வாழிடம்தானே.
டி.சி. ஜோர்டான், டி.என்.சி. வித்யா, சுந்தர்லால் பகுகுணா, மகாத்மா காந்தி போன்ற ஆளுமைகள் எவ்வாறு நம் கவனத்தைப் புறவுலகின் மீது திருப்பினார்கள் என்று அவர்களைப் பற்றிய தனித்தனி கட்டுரைகளில் விளக்குகின்றார். பிரிட்டிஷ் இந்தியாவுக்கு மருத்துவராக வந்த ஜோர்டன் இங்குள்ள புள்ளினங்களைப் பற்றி நூல்கள் எழுதி உலகின் கவனத்தை ஈர்த்தார். இன்று பெங்களூரில் வசிக்கும் பெண்மணி வித்யா பன்னாட்டார் போற்றும் காட்டுயிரியியலாளராக விளங்குகிறார். பகுகுணா இமயமலைச் சாரலில் மக்களிடையே பணி செய்து அங்கு ஒரு சுற்றுச்சூழல் இயக்கத்தையே தோற்றுவித்தார். சிப்கோ இயக்கம் உருவானது அங்கேதான்.
மகாத்மா
காந்தி வாழ்ந்தபோது சூழலியல்,
சுற்றுச்சூழல் போன்ற சொற்கள் புழக்கத்தில் வந்திருக்கவில்லை. இச்சொற்களைப் பயன்படுத்தாவிட்டாலும், அவரது சித்தாந்தம், அவர் போற்றிய வாழ்வு
முறை சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தைப் பேணியது. அவர் இயற்கையுடன் ஒன்றிய
எளிய வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார். காந்தியச் சிந்தனையின் இந்தப் பரிமாணத்தைப் பற்றி ஆசை எழுதுகிறார். இந்தக்
கருத்தாக்கங்களில் தனது ஈடுபாடு பற்றி அவர்
ஏற்கனவே பதிவு செய்துள்ளார் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
ஒரு
சமூகத்தில் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்பு ஏற்படுகிறது என்பதற்கு ஒரு அறிகுறி பசுமை
இலக்கியத்தின் தோற்றம். தமிழில்
அவ்வவ்போது வந்த சில புதினங்களை
குறிப்பிட வேண்டும். அந்தப்
படைப்பாளிகள் புறவுலகை கவனிக்கின்றார்கள்.. கி.ரா.வின் படைப்புகளில்
இயற்கை பற்றிய அவதானிப்புகளையும் உயிரினங்களின் பெயர்கள் பற்றியும் ஒரு கட்டுரை இந்நூலில்
உள்ளது. பெருமாள் முருகன், சோ. தர்மன் இவர்களது
படைப்புகளும் என் நினைவுக்கு வருகின்றன.
பல ஆண்டுகளாக எழுதி வளப்படுத்திக்கொண்ட தனது மொழியாற்றலால் அறிவியல் கருதுகோள்களையும் நமது இருப்பு பற்றிய அவதானிப்புகளையும் ஆசை எளிய மொழியில் விளக்குகிறார். ஒரு சமூகத்தில் புதிய புதிய கரிசனங்கள் உருவாகும்போது அக்கரிசனங்கள் வளர வேண்டுமென்றால் அவற்றைப் பற்றிய ஒரு சொல்லாடல் உருவாக வேண்டும். இதற்கு மொழி வளமூட்டப்பட வேண்டும். மொழியின் விரிவாற்றலை பயன்படுத்திப் புதிய அக்கறைகளை வளர்க்க வேண்டும். அத்தகைய பணியை இந்த நூல் செய்கின்றது. இந்த வரவேற்கத்தக்க புத்தகத்துக்கு அணிந்துரை எழுத கிடைத்த வாய்ப்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.
நூல்: அந்தத் தவிட்டுக்குருவி இறந்துகொண்டிருந்தது (சுற்றுச்சூழல் கட்டுரைகள்)
ஆசிரியர்: ஆசை
வெளியீடு: உயிர் பதிப்பகம்
ஆண்டு: 2025


No comments:
Post a Comment