Wednesday, November 18, 2026

காதலைச் சுமந்து செல்லும் வாயேஜர் - வேற்றுலகுக்கு புவியின் செய்தி







ஆசை

காதல்வயப்பட்ட ஒரு பெண்ணின் உணர்வுகள் எவ்வளவு தூரம் வரை செல்லும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. ஆனால், ஆன் ட்ரூயன் என்ற பெண்ணைப் பொறுத்தவரை எவ்வளவு தூரம் என்று நம்மால் சொல்ல முடியும். 1,400 கோடி மைல் தொலைவைத் தாண்டி... ஆம், வாயேஜர்-1 துழாவி (probe) சூரியக் குடும்பத்தையே தாண்டிக் கொண்டுசெல்லும் காதல் செய்தி இது.  

விண்வெளியில் செலுத்தப்பட்ட வாயேஜர்-1, வாயேஜர்-2 ஆகிய இரண்டு துழாவிகளும் மனித அறிவின் உச்சபட்ச சாதனைகளுள் அடங்குபவை. மனித குல அறிவியல் சாதனையின் செய்தி இவை என்பதற்காக மட்டுமல்ல சூரிய குடும்பத்தைத் தாண்டி இவை கொண்டுசெல்லும் செய்திகளுக்காகவும் இவை முக்கியத்துவம் வாய்ந்தவை. இரண்டு துழாவிகளும் சுமந்துசெல்லும் தங்கக் குறுந்தகடுகளில்தான் அந்தச் செய்திகள் இருக்கின்றன.

வாயேஜர் துழாவிகளை அனுப்பும் திட்டம் அதன் உச்சக்கட்டத்தை எட்டிக்கொண்டிருந்த வேளையில் புகழ்பெற்ற வானியலாளரும் அறிவியல் எழுத்தாளரும் நாஸாவின் ஆலோசகருமான கார்ல் சேகன் தலைமையிலான குழு ஒரு முடிவு எடுத்தது. சூரியக் குடும்பத்தையும் தாண்டிச் செல்லக்கூடிய இரண்டு வாயேஜர் துழாவிகளிலும் புவியின் செய்தி அடங்கிய குறுந்தகடுகளை அனுப்புவதென்பதுதான் அந்த முடிவு. புவியின் செய்தியை யாருக்கு அனுப்புவது? வேற்றுகிரகவாசிகளுக்குத்தான்.

இந்தப் பிரபஞ்சத்தில் உயிர் வாழ்க்கைக்கு சாத்தியமுள்ள பல கிரகங்கள் இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் நம்புகிறார்கள். அப்படிப்பட்ட கிரகத்தில் உயிர்கள் இருந்து, அதில் மனித இனத்தைவிட அதிக நாகரிக வளர்ச்சி பெற்ற ஜீவராசிகள் இருந்தால், அவர்கள் வாயேஜர் துழாவிகளைக் காண நேரிட்டால் அவர்களுக்கு நம்மை அறிமுகம் செய்துகொள்ளத்தான் இந்தக் குறுந்தகடுகள். என்ன நூறு கோடி ஆண்டுகளுக்கு அப்படிப்பட்ட கிரகத்தை வாயேஜர் சென்று அடைய முடியாது.

அதற்கு முன்னர் 1972-73-ஆம் ஆண்டுகளில் அனுப்பிய பயனியர் விண்கலங்களில் சித்திரங்கள் பொறித்த தகடுகளை வைத்து அனுப்பியிருந்தார்கள். வாயேஜர் துழாவிகளில் அடுத்த கட்டத்துக்குச் சென்று மனிதர்களின் செய்திகள் அடங்கிய தங்கக் குறுந்தகடுகளை அனுப்புவதுதான் திட்டம்.

அந்தக் குறுந்தகடுகளில் ஏற்றுவதற்கான தகவல்களைத் தேர்ந்தெடுத்து, என்றுமே அழியாதபடி அந்தக் குறுந்தகடுகளைத் தயாரிப்பதற்கு அந்த விஞ்ஞானிகள் குழுவினருக்கு ஆறு மாத காலம்தான் இருந்தது. கார்ல் சேகன், அவருடைய மனைவி லிண்டா ஸால்ஸ்மேன், எதிர்கால மனைவி ஆன் ட்ரூயன், அறிவியல் எழுத்தாளர் டிமோத்தி ஃபெரீஸ் உள்ளடங்கிய குழு குறுந்தகடுகளில் ஏற்ற வேண்டிய தகவல்களைத் தேடி வேட்டையாட ஆரம்பித்தனர்.

புவியின் இன்றைய நிலை, அறிவியல் தொழில்நுட்பம், கலாச்சாரம் போன்றவை தொடர்பான 115 படங்களை இறுதி செய்தனர். அதேபோல், காற்றடிக்கும் ஒலி, இடியோசை, பறவைகள், விலங்குகளின் குரல்கள் என்று இயற்கையின் ஒலிகளைத் தேர்ந்தெடுத்தனர். கூடவே, வேற்றுலகவாசிகளுக்கு நம்முலகவாசிகளின் வணக்கத்தைத் தெரிவிக்கும் விதத்தில் மொத்தம் 55 உலக மொழிகளில் முகமன் கூறப்பட்டது.

உலகின் அனைத்து மொழிகளையும் பதிவுசெய்வதற்கு அப்போது நேரமும் வசதியும் இல்லாததால் 55 மொழிகளுடன் அவர்கள் திருப்திப்பட்டுக்கொண்டார்கள். இந்திய மொழிகளில் முகமன் கூறுவதற்கான ஆட்களைக் கொண்டுவரும் பொறுப்பு அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கார்ல் சேகனின் ஆய்வகத்தில் பணியாற்றிய இந்தியாவைச் சேர்ந்த பிஷுன் கரேவிடம் விடப்பட்டது. பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், பஞ்சாபி, தெலுங்கு, ராஜஸ்தானி, மராத்தி, ஒரியா, உருது ஆகிய மொழிகளைச் சேர்ந்தவர்கள் வேற்றுலகவாசிகளுக்கு தத்தமது மொழியில் ‘வணக்கம்’ தெரிவித்திருக்கிறார்கள். இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகளுள் ஒன்றாக இல்லாத ராஜஸ்தானி அந்தக் குறுந்தகட்டில் இடம்பெற்றிருக்கும் நேரத்தில் உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றான தமிழ் இடம்பெறாததை நினைத்தால் மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது. வடக்கிந்தியர்களுக்கு தமிழ் நினைவில் இருந்தால்தானே ஆச்சரியம்!

55 மொழிகளுடன் திமிங்கிலம் ஒன்று மற்றொரு திமிங்கிலத்தை அழைக்கும் வரவேற்புப் பாடலும் இடம்பெற்றிருக்கிறது. வேற்றுலகவாசிகளுக்கு வணக்கம் சொல்லும் உரிமை மனிதர்களுக்கு மட்டுமல்ல, மற்ற விலங்குகளுக்கும் உண்டு அல்லவா!

வணக்கம் சொல்பவர்கள் தத்தம் மொழிகளுக்கு உரிய வகையில் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ராஜஸ்தானிக்காரர், “எல்லோருக்கும் வணக்கம், நாங்கள் இங்கே சந்தோஷமாக இருக்கிறோம். நீங்களும் அங்கே சந்தோஷமாக இருங்கள்” என்று புவியின் மகிழ்ச்சி நிறைந்த முகத்தை முன்வைத்திருக்கிறார். “துருக்கி பேசும் நண்பர்களே, விடியலின் ஆசிர்வாதங்கள் உங்கள் மேல் பொழிவதாக” என்று வணக்கம் கூறுகிறார் துருக்கிக்காரர். வேற்றுலகவாசிகள் நிச்சயம் துருக்கி மொழியில் பேசுபவர்களாகத்தான் இருப்பார்கள் என்ற அசாத்திய நம்பிக்கை அவருக்கு. நமக்குக் கிடைத்திருக்கும் தரவுகளின் அடிப்படையில் உலகின் மூத்த மொழியான சுமேரிய மொழியில் தொடங்கும் வணக்கம், அமெரிக்கக் குழந்தையொன்றின் “புவியின் குழந்தைகளிடமிருந்து ஒரு ஹலோ” என்ற வணக்கத்தோடு முடிகிறது.

அடுத்ததாக, புவியின் இசை பொக்கிஷங்களைத் தேர்ந்தெடுத்து வேற்றுலகவாசிகளுக்கு அன்பளிப்பாக அனுப்புவது என்ற முடிவெடுக்கப்பட்டது. பாஹ், பீத்தோவன், மொசார்ட் என்று மேற்கத்திய இசையின் சிகரங்களை மட்டுமல்லாமல் உலக இசைக் கலாச்சாரங்கள் பலவற்றையும் உள்ளடக்க முடிவுசெய்யப்பட்டது. அந்தக் குறுந்தகட்டில் வணக்கம், புவியின் ஓசைகள் போன்றவற்றைத் தவிர்த்து ஒட்டுமொத்த இசைத்தொகுப்புக்கான நேரம் 90 நிமிடம் மட்டும்தான். அதற்குள் உலகின் ஒட்டுமொத்த இசைக்கலாச்சாரத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவது முடியாத காரியம். ஆகவே, மனதைத் தேற்றிக்கொண்டு தேர்ந்தெடுக்க ஆரம்பித்தனர். இந்தியாவிலிருந்து கேசர்பாய் கேர்க்கரின் ‘ஜாட் கஹான் ஹோ’ என்ற பைரவி ராகத்தில் அமைந்த பாடலை கார்ல் சேகனுக்கு இசையறிஞர் ராபர்ட் ஈ. பிரவுன் பரிந்துரைத்தார். அந்தப் பாடலின் எல்.பி. ரெக்கார்டைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாததால் அந்தப் பாடலுக்கு அடுத்தபடியாக சிறப்பான ஒன்றைப் பரிந்துரைக்கும்படி ராபர்ட்டிடம் கேட்டபோது அதைத் தவிர்த்துவிட்டு வேறொன்றைப் பரிந்துரைக்கவே முடியாது என்று பிடிவாதம் பிடிக்க, ஒருவழியாக அந்தத் திட்டத்தின் இறுதிக் கட்டத்தில் அந்தப் பாடலின் எல்.பி. ரெக்கார்டைக் கண்டுபிடித்துவிட்டார்கள். சாஸ்திரிய சங்கீதங்கள் மட்டுமல்லாமல் உலக நாட்டுப்புற இசை வடிவங்களும் சேர்க்கப்பட்டன. இசை என்பது உலகப் பொதுமொழி மட்டுமல்ல, பிரபஞ்சப் பொதுமொழி என்று கார்ல் சேகன் உள்ளிட்டோர் நம்பியதால் அந்தக் குறுந்தகடு ஏதாவது வேற்றுலகவாசிகள் கையில் கிடைக்குமானால் புவியின் இசை வளம் அவர்களைப் பிரமிக்கச் செய்யும் என்பது அவர்களின் நம்பிக்கை. 

இந்தத் தங்கக் குறுந்தகட்டுக்காக ஜாவாவைச் சேர்ந்த ‘மலர்களின் வகைகள்’ என்ற இசைத் துணுக்கைக் குறித்து கார்ல் சேகன் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். அப்போது, ஜாவானிய கேமிலன் இசை மரபு குறித்த அற்புதமான தகவல் ஒன்று அவருக்குக் கிடைத்தது. அந்த மரபைப் பொறுத்தவரை ‘ஆன்ம இசை’ என்ற ஒன்று இந்த உலகில் இருக்கிறது, அது எப்போதும் அமைதியாக ஒலித்துக்கொண்டிருக்கும். இசைக் கலைஞர் அதை வாசிக்கும்போது வெறுமனே அந்த நித்திய இசையின் தற்கணத்தை மற்றவர்களுக்குக் கேட்கச் செய்கிறார்கள், அவ்வளவே. இப்படியான ஒரு நம்பிக்கை! வாயேஜர் குறுந்தகட்டில் உள்ள விஷயங்கள் அனைத்தையும் ஜாவா இசையைப் போல நாம் நினைத்துக்கொள்ளலாம் என்கிறார் கார்ல் சேகன். அவர் சொல்கிறார், “இப்போதிலிருந்து பல நூறு கோடிக் கணக்கான ஆண்டுகள் கழித்து நம்முடைய சூரியன் தனது சக்தியை இழந்து சிவப்பு நிறத்தில் ஊதிப் பெருத்திருக்கும்; புவி சிறிய கரித்துண்டாக ஆகியிருக்கும். ஆனாலும், வாயேஜரில் உள்ள தங்கத்தகடு நமது பால்வெளி அண்டத்தின் ஏதாவது ஒரு மூலையில் அப்போதும் அழியாமல் இருக்கும்.”

இதில் மிகவும் முக்கியமான அம்சம் ஒரு காதல் கதை! இந்தத் தங்கக் குறுந்தகட்டுத் திட்டத்தின் பொறுப்பாளர்களுள் ஒருவர் ஆன் ட்ரூயன். வேற்றுலகவாசிகளுக்கு புவியின் ஓசைகள், முகமன், இசை மட்டுமல்லாமல் மனிதர்களின் உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதையும் உணர வைக்க முயற்சி செய்யலாமே என்று முடிவெடுக்கப்பட்டது. ஆன் ட்ரூயன் தனது உணர்வுகளைப் பதிவுசெய்ய முன்வந்தார். இதற்காக, அவருக்கு ஈ.ஈ.ஜி. (Electroencephalography) எடுக்கப்பட்டது. நம் உணர்வுகளுக்கு ஏற்ப மூளையின் மின்னோட்டத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பதிவு செய்யும் முறை இது.

இந்தத் தங்கக் குறுந்தகடு திட்டத்தின்போதுதான் கார்ல் சேகனும் ஆன் ட்ரூயனும் காதலில் விழுந்திருக்கிறார்கள். (கார்ல் சேகன் ஏற்கெனவே திருமணமானவர் என்பதும் அவரது அந்நாள் மனைவியான லிண்டா ஸால்ஸ்மேனும் அந்தத் திட்டத்தில் பணியாற்றினார் என்பதும் சுவாரசியம்!) தன் காதலை கவுரவப்படுத்தும் விதத்தில் புவியின் ஓசைகளில் கார்ல் சேகனின் சிரிப்பொலியைப் பதிவுசெய்து ஆன் ட்ரூயன் சேர்த்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் கார்ல் சேகனை அவர் சந்தித்தபோது சேகனின் சிரிப்பு ஆனின் மனதில் அப்படியே பதிந்துவிட்டிருக்கிறது. ஒரு வகையில் அதுதான் காதலின் அடித்தளம். இப்போது காதலில் விழுந்த பிறகு தனது உணர்வலைகளை ஈ.ஈ.ஜி. முறையில் பதிவுசெய்யும்போதும் கார்ல் சேகனைப் பற்றியே பெரும்பாலும் ட்ரூயன் நினைத்துக்கொண்டிருந்தார். தங்கக் குறுந்தகடு கையில் கிடைக்கப்பெற்ற வேற்றுலகவாசி அதை இயக்கிப் பார்த்தால் காதலில் விழுந்த ஒரு பெண்ணின் உணர்வலைகளை, எண்ண ஓட்டங்களை அவர்களால் படித்துப் பார்க்க முடியும். வேற்றுலகவாசிகளுக்கு நம்முடைய மிகச் சிறந்த பரிசாக புவியின் காதலைத் தவிர வேறெது இருக்க முடியும்.

வாயேஜர் செயற்கைக்கோள் அனுப்பப்பட்ட சில நாட்களுக்குள் தங்கள் காதலை கார்ல் சேகனும் ஆன் ட்ரூயனும் வெளியுலகுக்கு அறிவித்தார்கள். 1981-இல் கார்ல் சேகனும் லிண்டாவும் விவாகரத்து பெற்றனர். அதே ஆண்டில் சேகனும் ட்ரூயனும் மணவாழ்வில் இணைந்தனர். 1996-இல் கார்ல் சேகனின் மறைவு வரை இணைபிரியாமல் இருவரும் வாழ்ந்தனர்.

தங்கள் காதலை வெளியுலகத்துக்கு அறிவித்தவர்களைத்தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், தங்கள் காதலை இந்தப் பிரபஞ்சத்துக்கே அறிவித்தவர்கள் அவர்கள். மனது சரியில்லாத போதெல்லாம் ஆன் ட்ரூயன் அந்தத் தங்கக் குறுந்தகடுகளைப் பற்றி நினைத்துக்கொள்வாராம்: “எனக்கு எப்போதெல்லாம் மனது சரியில்லையோ அப்போதெல்லாம் ‘தன்னுடைய காதல் செய்தி மணிக்கு 35,000 மைல் வேகத்தில் சூரியக் குடும்பத்தை நீங்கி விண்மீன்களுக்கு இடைப்பட்ட வெளியை நோக்கி இன்னும் சென்றுகொண்டிருக்கிறது’ என்று நினைத்துக்கொள்வாராம்.

புவியின் மிகச் சிறந்த இசை, ஒலி போன்றவற்றை மட்டுமல்ல, மிகச் சிறந்த உணர்வான காதலையும் சுமந்து செல்லும் அந்தத் தங்கத் தகடுகள் பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு வேற்றுலகவாசிகளின் கையில் கிடைத்தால் நம் கிரகத்துக்கு அவர்கள் மொழியில் ‘காதல் கிரகம்’ என்ற பெயர் கூட வைக்கலாம்.

இரண்டு வாயேஜர்கள்

நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சூரியக் குடும்பத்தின் புறப் பகுதியில் உள்ள கோள்களைத் துழாவுவதற்கு மணிக்கு சுமார் 38 ஆயிரம் மைல் வேகத்தில் புறப்பட்டன இரண்டு துழாவிகள். முதலாவது துழாவியின் பெயர் வாயேஜர்-2, இரண்டாவது துழாவியின் பெயர் வாயேஜர்-1. எழுபதுகளின் இறுதியில் வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்கள் குறிப்பிட்ட அமைவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டது. அருகருகே அப்படி 175 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இந்தக் கோள்கள் அமையும் என்பதால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அந்தக் கோள்களை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்டவை அந்தத் துழாவிகள். தனித்தனியாக அந்தக் கோள்களை ஆராய்வதற்குத் துழாவிகளை அனுப்புவது அதிகச் செலவு பிடிக்கும் என்பதால் இரண்டே கல்லில் நான்கு மாங்காய்கள் அடிப்பதற்கான திட்டம்தான் வாயேஜர் துழாவிகள். இந்தக் கோள்களின் ஈர்ப்புவிசை இந்தத் துழாவிகளை உந்தித்தள்ளிவிடக்கூடும் என்பது இந்தத் திட்டத்துக்குக் கிடைத்த வரப்பிரசாதம். அந்தத் துழாவிகளில் உள்ள அணுசக்தி எரிபொருள் 2030 வரைக்கும் நீடிக்கும். அதற்குப் பிறகு அண்டவெளியில் ஆதரவற்ற குழந்தைகளாய்ச் சுற்றித்திரியும்.

இந்தத் துழாவிகளுள் இரண்டாவதாக அனுப்பப்பட்ட வாயேஜர்-1 தன் அக்காவையும் முந்திக்கொண்டு முன்னே சென்றுகொண்டிருக்கிறது. 1,323,42,30,380 மைல் தொலைவைக் கடந்து இன்னமும் பயணித்துக்கொண்டிருக்கிறது. மனிதர்கள் உருவாக்கிய பொருட்களில் சூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்ற முதலாவது பொருள், விண்மீன்களுக்கு இடைப்பட்ட வெளியில் பயணிக்கும் முதலாவது பொருள் என்ற புகழை 2012 ஆகஸ்ட் 25 அன்று வாயேஜர்-1 பெற்றது. வாயேஜர்-2 இதுவரை 1,091,42,65,852 மைல் தொலைவை கடந்திருக்கிறது. (இந்தக் கட்டுரையை எழுதி முடிக்கும்போது இரண்டு துழாவிகளும் கடந்திருக்கும் தொலைவுதான் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதைப் படிக்கும்போது வாயேஜர்கள் இன்னும் வெகு தொலைவுக்குச் சென்றுவிட்டிருக்கும்.  இரண்டு துழாவிகளும் தற்போது எவ்வளவு தொலைவில் சென்றுகொண்டிருக்கின்றன என்பதை நாஸாவின் இணையதளத்தில் உள்ள இந்த லிங்குக்குச் சென்று பார்க்கலாம்: https://voyager.jpl.nasa.gov)

கார்ல் சேகனின் ஆசை நிறைவேறியது!

வாயேஜர் அனுப்பப்பட்ட பிறகு இந்தத் தங்கக் குறுந்தகட்டில் உள்ள இசை, ஒலி, வணக்கங்கள் போன்றவற்றையெல்லாம் ஒரு குறுந்தகடாக வெளியிட வேண்டும் என்று கார்ல் சேகன் விருப்பப்பட்டார். காப்புரிமை உள்ளிட்ட பிரச்சினைகளால் அது அப்போது நடக்கவில்லை. எனினும், இந்தத் தங்கக் குறுந்தகட்டின் உருவாக்கம் குறித்து அந்தத் திட்டத்தில் பங்கேற்ற கார்ல் சேகன், ஆன் ட்ரூயன், லிண்டா உள்ளிட்டோர் 1978-ல் ‘புவியின் முணுமுணுப்புகள்’ (Murmurs of Earth) என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டார்கள். வாயேஜர் துழாவிகள்  விண்ணுக்கு அனுப்பப்பட்டு நாற்பது ஆண்டுகள் கழித்து கார்ல் சேகனின் விருப்பம் நிறைவேறியிருக்கிறது. ஆம்! அந்தத்  ‘குறுந்தகடு’ இந்த ஆண்டில் முதன்முறையாக வெளியிடப்பட்டிருக்கிறது. எல்.பி. ரெக்கார்டு வடிவத்திலும்  குறுந்தகடு வடிவத்திலும் வெளியாகியிருக்கிறது. கூடவே, 96 பக்கப் புத்தகமும் இணைப்பாகத் தருகிறார்கள். இந்தப் பேழை ரொம்பவும் விலை அதிகம், இந்தியாவிலும் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. என்றாலும், இந்தக் குறுந்தகட்டில் உள்ளவற்றை நாஸாவில் உள்ள வாயேஜருக்கான தளத்துக்குச் சென்று கேட்டு மகிழலாம். இசைத் தொகுப்பு காப்புரிமை பெற்றது என்பதால் அந்தத் தளத்தில் உள்ள பட்டியலைக் கொண்டு யூடியூபில் தேடிக் கேட்கலாம். வேற்றுக்கிரகவாசிகளுக்கு நாம் அனுப்பிய செய்தியை அவர்கள் கேட்கிறார்களோ இல்லையோ நாம் கேட்கலாம்!

 -2021

-('விண்மீன் துகள்கள் நாம்’ எனும் எனது அறிவியல் கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்ற கட்டுரை, சீர்மை வெளியீடு)

No comments:

Post a Comment