Monday, August 4, 2014

இதுதான் நமக்கான தருணம்!

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

(தமிழில்: ஆசை)

சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலின்போது பஞ்சாப் மாநிலத்தில் 28.10.1951 அன்று ஆற்றிய உரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்:


நீண்ட காலப் போராட்டத்துக்குப் பிறகு நமக்கென்று சில அரசியல் அதிகாரங்கள் கிடைத்திருக்கின்றன. இப்போது, பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகுதிகள் மூலமாகச் சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் நமக்கேயான பிரதிநிதிகளை நாம் அனுப்ப முடியும். ஆனால், இந்த உரிமையை எல்லாம் கொத்திச்செல்ல நிறைய கட்சிகள் கழுகுபோல் காத்திருக்கின்றன. நம்முடைய வாக்குகளைப் பெற்றுக்கொண்டு தங்களுடைய கைக்கூலிகளை நம் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிடச் செய்வதற்கு அவர்கள் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய நோக்கங்களை நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.

பத்திரிகைகளின் பாரபட்சம்
சில நாட்கள் முன்னதாக பண்டித நேரு இங்கு வந்தார். அவருடைய பேச்சைக் கேட்பதற்காக மூன்று லட்சம் பேர் வந்ததாகப் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. நேற்று நான் ஜலந்தருக்குச் சென்றிருந்தேன்; இரண்டு லட்சம் மக்களுக்கும் மேலே திரண்டிருந்தார்கள். ஆனால், முப்பதாயிரம் பேர் மட்டுமே வந்திருந்ததாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. இதன் மூலம் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது என்னவென்றால், காங்கிரஸ் கூட்டங்களுக்கு மிகக் குறைவான மக்கள் வந்திருந்தாலும் மாபெரும் கூட்டம் திரண்டதாகப் பத்திரிகைகளில் எழுதுவார்கள். எனக்கொன்றும் பெரும் கூட்டம் எல்லாம் திரள வேண்டாம். நான் விரும்புவ தெல்லாம் இந்த சாதி இந்துக்களின் கொடுமைகளுக்கு எதிராக நம் மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என்பதுதான். அப்படிக் கூடும் நம் மக்கள், எண்ணிக்கையில் கூடுதலாகவோ குறைவாகவோ இருப்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.
அறிக்கைகளும் வாக்குறுதிகளும்
ஒவ்வொரு கட்சியும் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கின்றன. ஆட்சிக்கு வந்தால் நாங்கள் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. பட்டியல் இனத்தவர் அமைப்பும் ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டி ருக்கிறது. காங்கிரஸும் தலையணை அளவில் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. ஆனால், சாதாரண மக்கள் அதைச் சீந்த மாட்டார்கள் என்று தெரிந்ததும் அந்த அறிக்கையைச் சுருக்கி மிகவும் சிறியதாக்கிவிட்டார்கள். அவர்களுடைய அறிக்கை மேலும் மேலும் இளைத்துக்கொண்டே வந்து கடைசியில் இல்லாமலே போய்விடும் காலம் ஒன்று வரக்கூடும் என்று நம்புகிறேன். வாக்குறுதி களை அள்ளி வீசுவது மிகவும் எளிது, அதை நடை முறைப்படுத்துவதுதான் கடினம். தேர்தல் அறிக்கை என்பது வாக்குறுதிகளின் பட்டியலாக மட்டுமே இருக்கக் கூடாது. அது பிரச்சினைகள் குறித்துப் பேச வேண்டும். காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் அதுபோன்று ஏதாவது இருக்கிறதா என்ன?
ஏன் வெளியேறினேன்?
நமது குறைகளைக் களைவதற்கான முயற்சிகள் எதுவும் எடுப்பதற்கான சாத்தியங்கள் காங்கிரஸில் இருந்திருந்தால் நான் அந்தக் கட்சியைவிட்டு வெளியேறியிருக்கவே மாட்டேன். காங்கிரஸிடம் போதுமான அளவு பணம் இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு அவர்கள் வாக்குகளை விலை கொடுத்து வாங்குவார்கள் என்று எனக்குத் தெரியும்.
நான் காங்கிரஸில் நிரந்தரமாக இருக்க விரும்பி யிருந்தால், அங்கே எனக்கென்று நல்ல ஸ்தானம் நிச்சயமாகக் கிடைத்திருக்கும். என்னுடைய மக்க ளின் நலன்களைக் கருதாமல் சுயலாபத்தின் அடிப் படையில் சிந்தித்திருந்தால் மட்டுமே அப்படி நான் செய்திருந்திருப்பேன். எனக்கென்று ஏதாவது உரிமமோ பர்மிட்டோ தேவைப்பட்டிருந்தால் நான் அங்கேயே இருந்திருப்பேன். காங்கிரஸ் அரசில் நான் பங்குவகித்த போது எனக்குக் கிடைத்த அனுபவம் இதுதான்.
ஆங்கிலேயர் என்ன செய்தார்கள்?
ஆங்கிலேயர் இந்தியாவில் இருந்த நாட்களில் அவர்கள் நினைத்திருந்தால், நமது மக்களின் நலனுக்காக ஏதாவது செய்திருக்கலாம். ஆனால், அவர்களும் நம்மை ஏமாற்றிவிட்டார்கள். அந்தக் காலம் இப்போது போய்விட்டது, இப்போது வேறு விதமான காலம் தொடங்கியிருக்கிறது. இந்த முறை நாமெல்லாம் எச்சரிக்கையாக இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டிருந்தோம் என்றால், நாம் அழிக்கப்பட்டுவிடுவோம். நாம் பட்ட சிரமங்கள் எல்லாம் நம்மோடு முடிந்துபோகட்டும், நம் வருங் காலத் தலைமுறைகளுக்காவது நல்வாழ்க்கைக் கிடைக்கட்டும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் இப்போது நிச்சயம் ஏதாவது செய்தாக வேண்டும்.
நம்முடைய பிரதிநிதிகள்
நமக்கென்றே உண்மையான பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், நம்மால் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது. சுதந்திரம் என்பது நமது மக்களைப் பொறுத்தவரை கேலிக்கூத்தாக ஆகிவிடும். நமக்கான சுதந்திரமாக இல்லாமல் ஆதிக்கச் சாதியினரின் சுதந்திரமாக ஆகிவிடும். நமது உண்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இருந்தால் மட்டுமே நமது பிரச் சினைகள் சரியாவதற்காக அவர்களால் போராட முடியும். அப்போதுதான் நம் பிள்ளைகள் முறையான கல்வியைப் பெறுவார்கள்; அப்போதுதான் வறுமையை ஒழிக்கலாம்; தொடர்ச்சியாக வாழ்வின் அனைத்து நிலையிலும் நமது மக்கள் சரிசமமான பங்கைப் பெறுவார்கள்.
இதுதான் தருணம்
சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்றவற்றில் இடஒதுக்கீடு என்பது இன்னும் 10 ஆண்டுகளுக்குத்தான் என்பதை உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்பு கிறேன். இந்தியாவில் தீண்டாமைக் கொடுமை இருக்கும் காலம் வரை இந்த இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்பினேன். ஆனால், காங்கிரஸின் டிக்கெட்டுகளில் நின்று வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களான நம் சொந்த மக்களே காங்கிரஸில் உள்ள ஆதிக்க சாதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகப் பேச விடாமல் என்னைத் தடுத்துவிட்டார்கள். இதுவாவது கிடைத்ததே என்று திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். எனவே, இந்த ஒதுக்கீடு இன்னும் இரண்டு தேர்தல்கள் வரைக்கும்தான். காங்கிரஸ் போன்ற கட்சிகள் அதுவரைக்கும்தான் உங்களுடைய வாக்குகள் வேண்டி உங்கள் வீடு தேடி வருவார்கள். இந்த வகையில் 10 ஆண்டுகள் ஓடிவிடும். அப்புறம் இந்த ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று யாரும் கேட்கப்போவதில்லை. அப்போது என்ன செய்வீர்கள்?
எல்லாக் கட்சிகளும் பணபலத்தையோ அதிகார பலத்தையோ கொண்டிருக்கின்றன. நம் மக்களிடம் இந்த இரண்டுமே கிடையாது. நாமெல்லாம் சிறுசிறு எண்ணிக்கையில், கிராமங்களில், இந்த ஆதிக்கச் சாதியினரின் தயவில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, நீங்கள் உங்களுக்காக ஏதாவது செய்துகொள்ள வேண்டுமென்றால் இதுதான் தக்க தருணம்.
                       - தமிழில்: ஆசை
                                           ‘தி இந்து’ நாளிதழின் இணையதளத்தில் இந்த உரையைப் படிக்க: இதுதான் நமக்கான தருணம்!

No comments:

Post a Comment