Monday, January 30, 2017

புதிய தொடர் - என்றும் காந்தி!


ஆசை

சமீபத்தில் நடந்து முடிந்த மெரினா போராட்டத்தில் சில தனிச்சிறப்பு மிக்க அம்சங்களை நாம் கண்டிருக்கிறோம். இந்தியாவில் தலைமை இல்லாமல் நிகழ்ந்திருக்கும் மாபெரும் போராட்டம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். ஏன் தலைமை இல்லாமல் இந்தப் போராட்டம் நிகழ்ந்தது? அரசியல் தலைவர்களையும் பிற அமைப்புகளின் தலைவர்களையும் இந்த மாணவர்கள் ஏன் தங்கள் பக்கத்திலேயே சேர்க்கவில்லை? என்ற கேள்விகளுக்கு விடை ஒன்றும் அவ்வளவு கடினமல்ல. எல்லாத் தலைவர்களுமே மக்களிடம், குறிப்பாக இளைய சமுதாயத்திடம் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார்கள். சுயநலமும் குடும்ப நலமும் பீடித்த, ஊழலால் அழுகிப்போன, மதவாதத்தையும் சாதியவாதத்தையும் அடிப்படையாகக் கொண்ட, தங்கள் வளர்ச்சிக்கு வன்முறையை ஆயுதமாகக் கொண்ட சந்தர்ப்பவாதத் தலைவர்களைக் கண்டு கண்டு சலித்துப் போய் வெடித்த இளைஞர்களின் கோபமே அரசியல் தலைவர்களைத் தங்கள் பக்கம் அண்ட விடாமல் துரத்தியடித்தது.
கூட்டங்களைத் திரட்டுவதொன்றும் கட்சிகளுக்குப் புதிதல்ல. கட்சிக் கொள்கையின் பேரிலோ அல்லது பணம் வாங்கிக்கொண்டோ வரும் தொண்டர்களைக் கொண்டு ஒரு கூட்டத்தை அரசியல் கட்சிகளால் கூட்டிவிட முடியும்தான். அப்போதும் மெரினா போராட்டத்தில் கூடிய கூட்டத்தின் முன் சிறு துளியாகத்தான் கட்சிகளின் கூட்டங்கள் இருக்கும். மெரினா போராட்டமோ உலகம் தழுவிய ஆதரவைப் பெற்ற போராட்டம். எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அமைப்புக்கும் பெருங்கனவு இதுபோன்ற ஒரு கூட்டத்தைத் திரட்டுவதே. ஒரு வகையில் பலருக்கும் பெரிய அரசியல் அறுவடை. ஆற்றில் கரைபுரண்டு ஓடிவரும் நீரைப் பாசனத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கோடு விவசாயி பார்ப்பார் என்றால் குளிர்பான நிறுவனங்களும் மினரல் வாட்டர் நிறுவனங்களும் கொள்ளை லாபக் கண்ணோடுதான் பார்ப்பார்களல்லவா! அந்தக் குளிர்பான நிறுவனங்களின் பார்வையில்தான் கட்சிகள் இதைப் போன்ற கூட்டங்களை பெரும் ஏக்கத்தோடு பார்க்கும். ஆனால், சந்தர்ப்பவாதிகளுக்கு இப்படியொரு கூட்டத்தால் பயனேதும் இல்லாமல் போனதற்கான காரணங்களை இன்றைய அரசியல் தலைமைகள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
அறவழியில் மெரினா போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் கூட்டத்தினரில் அநேகமாக எவருமே காந்தியின் பதாகையை ஏந்தியிருக்கவில்லைதான். ஆனால், இந்தப் போராட்டத்தைப் பெருவியப்புடன் பார்த்துக்கொண்டிருந்த இந்தியாவின் பிற பகுதியினருக்கும் உலகத்துக்கும் காந்திதான் உடனடியாக நினைவுக்கு வந்தார். காந்தியின் பெயரும் உருவமும் நினைவும் ஒரு போராட்டத்துக்கு தார்மிக வலிமையையும் உலகினரின் பரிவையும் ஒருங்கே பெற்றுத்தருபவை என்பதற்கான அடையாளமே இது. காந்தியைப் பற்றிய தொடரை ‘ஜல்லிக்கட்டு’க்கான போராட்டத்தைக் குறிப்பிட்டு ஆரம்பிக்க வேண்டுமா என்று பலருக்கும் கேள்வி எழலாம். இந்தியாவில் அறவழியில் எந்தப் போராட்டம் நடந்தாலும் காந்தி அங்கே தொடர்புடுத்தப்படுகிறார். அதற்கான சமீபத்திய உதாரணத்துடன் தொடங்குவது பொருத்தமாக இருக்கும் அல்லவா?

நம்பகத்தன்மை
இன்றைய தலைவர்கள் மீது நாம் நம்பிக்கை இழக்கிறோம். ஆனால், 69 ஆண்டுகளுக்கு முன்பு தன் மூச்சை நிறுத்திக்கொண்ட ( நிறுத்தப்பட்ட என்பதுதான் இன்னும் பொருத்தமாக இருக்கும்) ஒரு தலைவரை நாம் இன்னும் ஏன் நம் தலைவராகக் கருதுகிறோம்? மதுவுக்கு எதிரான போராட்டம், பழங்குடிகளை அழிக்கும் அணைக் கட்டுமானங்களுக்கு எதிரான போராட்டங்கள், ஊழலுக்கு எதிரான போராட்டங்கள், எல்லாவற்றுக்கும் ஏன் காந்தியின் முகம் தேவைப்படுகிறது? இதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் மிக மிக எளிய காரணம் ஒன்றும் உண்டு. அதுதான் ‘நம்பகத்தன்மை’.
தற்போதைய தலைவர்களிடம் இல்லாததும் தலைமைக்குஅவசியமானதுமான முதன்மைப் பண்பு நம்பகத்தன்மை. ‘சீஸரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்’ என்று சொல்வார்கள். ஒரு தலைவரும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஒரு நாட்டில் அல்ல, இரண்டு நாடுகளில் மாபெரும் போராட்டங்களை நடத்தியவர் காந்தி. இந்தியா, தென்னாப்பிரிக்கா இரண்டுமே பன்மைக் கலாச்சாரத்தைக் கொண்டவை. அப்படிப்பட்ட நாடுகளில் பெரும் மக்கள் திரளை காந்தியால் திரட்ட முடிந்ததற்கு அடிப்படைக் காரணமே அவரது நம்பகத்தன்மைதான். காந்தியிடம் இந்த நம்பகத்தன்மை ஒரே நாளில் உருவாகிவிடவில்லை. அதற்கான விதைகள் அவருடைய சிறுவயதிலேயே தூவப்பட்டுவிட்டன. முளைவிட்ட விதைகளை இளமைப் பருவத்தில் மிகுந்த அக்கறையுடன் பல்வேறு அக, புற போராட்டங்கள் மூலம் வளர்த்தெடுத்தார். தான் வளர்த்த செடிகளை, தனது முதுமைப் பருவத்தில் தேசத்துக்கே நிழலும் கனியும் தரும் பெருமரங்களாக மாற்றினார். அப்படி காந்தி வளர்த்து நம்மிடம் விட்டுச்சென்ற மரங்கள் இன்னும் நிழலும் கனிகளும் நமக்குத் தந்துகொண்டிருக்கின்றன என்றாலும் கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் அந்த மரங்களை நாம் வாட விட்டுக்கொண்டிருக்கிறோம். இப்படி, காந்தி கட்டியெழுப்பிய நம்பகத்தன்மையை உருவாக்கிய கூறுகள்தான் இந்தத் தொடரின் மையம்.

ஏன் காந்தி?
காந்தி வாழ்ந்த காலத்தில் கண்ணுக்குத் தெரிந்த எதிரி ஒருவர்தான் (அவர் மனிதர்கள் யாரையும் எதிரியாகக் கருதியதில்லை என்றாலும்). அது ஆங்கிலேயர்தான். அது தவிர நமக்குள்ளே இருக்கும் எதிரிகளும் உண்டு. தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், மதப்பிரிவினைவாதம் ஆகியவைதான் அந்த எதிரிகள். எதிரிகள் தரப்பின் எண்ணிக்கை வேண்டுமானால் அப்போது குறைவாக இருந்திருக்கலாம். ஆனால், வலிமையும் தீமையும் நிறைந்த எதிரிகள் அவர்கள். இந்த எதிரிகளை எதிர்த்துதான் காந்தி தனது வாழ்நாள் முழுவதும் போராட்டம் நடத்தினார். ஆனால், இந்தியாவும் மனித குலமும் சந்திக்கும் எதிரிகள் தரப்புகளின் எண்ணிக்கை காந்தியின் காலத்துக்குப் பிறகுதான் பல மடங்காக அதிகரித்தன, அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. இந்த எதிரிகளை எதிர்க்க நம்மிடையே ஆன்ம பலம் கொண்ட தலைவர்கள் அநேகமாக யாரும் இல்லை என்பதே உண்மை. காந்தியின் காலத்துக்குப் பிறகு முன்பைவிட பிரம்மாண்டமாக உருவெடுத்த எதிரிகளான முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், சுற்றுச்சூழல் அழிப்பு, போர்கள் முதலான சர்வதேச எதிரிகளையும் இந்தியர்களிடையே இன்னும் வலுகுறையாமல் இருந்துகொண்டிருக்கும் எதிரிகளான தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், மதப்பிரிவினைவாதம் போன்றவற்றையும் எதிர்கொள்ள காந்தியின் வாழ்க்கை நமக்குப் பெரிதும் உதவக்கூடும். அதற்காகத்தான் காந்தி நமக்கும் உலகுக்கும் திரும்பத் திரும்பத் தேவைப்படுகிறார்.

வாழ்க்கை வரலாறு அல்ல, சுருக்கமான அறிமுகம்
காந்தியை இப்படியொரு மாபெரும் தலைவராக இந்தியாவும் உலகமும் கருதக் காரணம் யாவை, அதற்கு அடிப்படையாக அமைந்த அவரது பண்புகள், கோட்பாடுகள், செயல்பாடுகள் யாவை என்பதையெல்லாம் ஒவ்வொன்றாக இந்தத் தொடரில் நாம் பார்க்கப் போகிறோம். ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். காந்தி அளவுக்கு இடைவிடாது செயல்பட்ட தலைவர்கள் உலக வரலாற்றில் மிகவும் குறைவு. அவ்வளவு செயல்பாடுகளுக்கு மத்தியிலும் அவர் எழுதிய நூல்கள், பத்திரிகைக் கட்டுரைகள், கடிதங்கள், உரைகள் போன்றவற்றின் தொகுப்பே நூறு பெரிய வடிவத் தொகுதிகளாக ‘Collected Works of Mahatma Gandhi’ என்று ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது. தமிழிலும் ‘மகாத்மா காந்தியின் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துகள்’ 20 தொகுதிகளாக வெளியாகியிருக்கிறது. இயேசு கிறிஸ்து, முகம்மது நபி போன்றோருக்கு அடுத்தபடியாக காந்தியைப் பற்றிய நூல்கள்தான் அதிகம் வெளியாகியிருக்கிறது என்பார்கள். அப்படியும் தீராமல் ஆண்டுதோறும் ஏராளமான நூல்கள் காந்தியைப் பற்றி வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை வெளிநாட்டினர் எழுதுபவை. இவ்வளவு செயல்பாடுகளும் எழுத்துகளும் கொண்ட காந்தியை ஒரு சிறு தொடரில் அடக்குவது கடினம். ஆகவே, காந்தியை வரையறுக்கக்கூடிய முக்கியமான அம்சங்கள், அவரது கோட்பாடுகள், செயல்பாடுகள், அவர் செலுத்திய தாக்கம் போன்றவற்றிலிருந்து ஒருசிலவற்றைப் பற்றி இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோமே தவிர காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அல்ல. ஒரு வகையில் ‘தொடக்க நிலையினருக்கான காந்தி’ என்று கூட இந்தத் தொடரைச் சொல்லலாம். காந்தியின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்குத் தமிழிலேயே ஏராளமான நூல்கள் கிடைக்கின்றன. அவற்றில், காந்தியின் ‘சத்திய சோதனை’ (நவஜீவன் வெளியீடு), காந்தியின் ‘தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்’ (காந்திய இலக்கியச் சங்கம் வெளியீடு), லூயி ஃபிஷரின் ‘காந்தி வாழ்க்கை’ (தி.ஜ.ர-வின் மொழிபெயர்ப்பு, பழநியப்பா பிரதர்ஸ் வெளியீடு), வின்சென்ட் ஷீன் எழுதிய ‘மகாத்மா காந்தி: மகத்தான வாழ்வின் வரலாற்றுச் சுருக்கம்’ (கே. கணேசன் மொழிபெயர்ப்பு, பப்ளிகேஷன் டிவிஷன் வெளியீடு), ராமச்சந்திர குஹாவின் ’தென்னாப்பிரிக்காவில் காந்தி’ (சிவசக்தி சரவணன் மொழிபெயர்ப்பு, கிழக்கு பதிப்பகம்), ரொமெய்ன் ரோலந்தின் ‘வாழ்விக்க வந்த காந்தி’ (ஜெயகாந்தன் மொழிபெயர்ப்பு, கவிதா வெளியீடு), போன்றவற்றைப் படித்துப் பார்க்கலாம்.

இனி, காந்தியத்துக்குள்ளே ஒரு சிறு சுற்றுலா செல்லலாமா?
(நாளை தொடரலாம்...)
 - நன்றி: ‘தி இந்து’ (https://goo.gl/6rmxZh)

No comments:

Post a Comment