மீனா மேனன்
(தமிழில்: ஆசை)
‘காபூலில் விதவைகள் நிலை, பராமரிப்பு ஆகியவற்றின் மானுடவரைவியல்’ இதுதான் மானுடவியலாளர் அனிலா தௌலத்ஸாயின் முனைவர் பட்ட ஆய்வின் ஒரு பகுதி. தனது முனைவர் பட்ட ஆய்வேட்டை அடிப்படையாகக் கொண்டு ஒரு புத்தகத்தையும் அவர் எழுதிக்கொண்டிருக்கிறார்.
தன்னுடைய பணிகள், காபுல் வாழ்க்கை, தொடர் போர்களால் சீரழிந்துபோன ஆப்கன் மக்களின் வாழ்க்கை, அந்நிய நிதியுதவியோடு நடக்கும் உள்நோக்கமுள்ள உதவித்திட்டங்கள் போன்றவற்றைப் பற்றி ‘தி இந்து’விடம் பகிர்ந்துகொள்கிறார்.
ஆப்கானிஸ்தானை உங்களுடைய ஆய்வுக்களமாகத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம்?
தொடர்ச்சியான போர்கள் ஆப்கன் மக்களுக்கு என்ன செய்திருக்கின்றன என்பதைப் புரிந்துகொண்டு கவனத்துடன் ஆவணப்படுத்த விரும்பினேன். மானுடவியல்தான் இதற்கு மிகவும் பொருத்தமான துறை என்பதை நான் உணர்ந்தேன்.
நான் பிறந்தது, வளர்ந்ததெல்லாம் அமெரிக்காவில்தான் என்றாலும், எனது குடும்பம் பாகிஸ்தானிலிருந்து வந்த குடும்பம். தற்கால ஆப்கானிஸ்தானை உருவாக்கிய, அழித்த சூழ்நிலைகளை இந்த இரண்டு நாடுகளும் சேர்ந்துதான் திட்டமிட்டு ஏற்படுத்தின. போரைப் பற்றியும், சமுதாயத்தில் போர் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றியும் முறையாக ஆய்வுசெய்ய நினைத்தேன்.
மானுடவியல் ஆய்வுக்காக நான் முதலில் ஆப்கானிஸ்தான் சென்றது 2003-ல். 2006-ல் மறுபடியும் ஆப்கன் சென்ற நான் 2011 வரை அவ்வப்போது அங்கே தங்கினேன். அதற்காக என் வாழ்க்கையை, உண்மையிலேயே நான் முழுதுமாக மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது.
உங்கள் ஆய்வு எப்படி இருந்தது? காபூலில் உங்கள் அனுபவங்கள் என்ன?
ஆப்கன் மக்களின் அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கும், அவர்கள் என்ன செய்வார்கள், அவர்கள் எங்கெல்லாம் செல்வார்கள், எங்கே போனால் விதவைகளை அதிகமாகப் பார்க்க முடியும் என்பதைத்தான் நான் முதலில் யோசித்தேன். ‘உலக உணவு செயல்திட்ட’த்தால் ‘விதவைகள் அடுமனைத் திட்டம்’ (விடோ பேக்கரி புராஜெக்ட்) ஒன்று நடத்தப்படுவதாகக் கேள்விப்பட்டேன்.
நான் அங்கே வேலைபார்க்க விரும்பினேன். அதற்கென்று அனுமதிகள் பெறுவதற்கு எனக்கு ஆறு மாதங்கள் ஆயின. “ஆக, போர்ப் பிரதேசங்களில் ராணுவத்தோடு ஒட்டிக்கொண்டு செய்திசேகரிக்கும் நிருபர் போல நீங்கள் ஆகப்போகிறீர்களா?” என்றெல்லாம் கேள்வி கேட்டார்கள். மானுடவியலாளர் என்பவர் யார் என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு நிவாரணப் பணி மேற்கொள்பவர்
களையும் பத்திரிகையாளர்களையும்தான் தெரியும். சர்வதேச நிவாரணப் பணியாளர்களின் சமூகத்தைச் சேர்ந்தவளல்ல நான் என்பதை என்னுடைய சக பணியாளர்களான விதவைகளுக்குப் புரியவைக்கச் சில காலம் ஆனது.
அடுமனை மட்டுமல்லாமல், வேறு பல இடங்களிலும் விதவைகளைச் சந்தித்தேன். அப்படிப்பட்ட இடங்களில் தெருவோரங்களும் ஒன்று. விதவைகள் என்று சொல்லிக்கொண்டு நிறைய பெண்கள் தெருவோரத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பிச்சை போடுபவர்களின் கார்களைப் பின்தொடர்ந்து சென்று, ஏன் பிச்சை போட்டீர்கள் என்று அவர்களிடம் கேட்பேன்.
“அவளொரு விதவையல்லவா, அதனால்தான் கொடுத்தேன். ஆனால், அவள் உண்மையிலேயே விதவையா இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பது என் வேலையல்ல. ஆனால், அவள் தன்னை விதவை என்றுதான் சொல்லிக்கொள்கிறாள். கொடுக்க வேண்டியது இஸ்லாமியர்களான நமது கடமை” என்று அவர்கள் பதிலளிப்பார்கள். காபூலில் விதவைகள் என்பவர்கள் சமூக யதார்த்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில்,
ஏராளமான விதவைகள் இருக்கிறார்கள் என்பதையும் அவர்களுக்கு உதவ முடியாத நிலையில் அரசாங்கம் இருக்கிறது என்பதையும் அங்குள்ள மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். விதவைகள் அல்லாத சில பெண்களும் தங்களை விதவைகள்போல் காட்டிக்கொள்வதற்குக் காரணமும் இருந்தது. விதவைகளுக்கு உணவுப்பொருள் வழங்கும் இடங்களில் பங்கேற்புப் பார்வையாளராகவும் நான் இருந்திருக்கிறேன்.
விதவைகளை உங்கள் ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்த காரணம் என்ன? உங்கள் ஆய்வில் நீங்கள் என்னென்ன கண்டறிந்தீர்கள்? இவையெல்லாம் போர் அனுபவத்தை எப்படிப் பிரதிபலிக்கின்றன?
ஆப்கன் குடும்பங்களுக்குப் போர் என்னென்ன தீமைகளை இழைத்திருக்கிறது என்பதை விதவைகளை ஆய்வுசெய்வதன் மூலம் நான் கண்டறிய விரும்பினேன். முன்பெல்லாம் விதவைகள் தங்கள் கணவரின் சகோதரரை மறுமணம் செய்துகொள்வார்கள். ஆனால், அது இப்போது அரிதாகிவிட்டது. இந்தக் கடப்பாடுகளையெல்லாம் நிறைவேற்றும் வழிவகைகள் அந்தக் குடும்பங்களுக்கு இப்போது கிடையாது.
விதவைகளெல்லாம் தங்கள் சொந்தக்காலிலேயே நிற்பதை நான் பார்த்திருக்கிறேன், விதவைகள் பலரும் ஒன்றுசேர்ந்து வாழும் வீடுகளையும் நான் பார்த்திருக்கிறேன்.
மேலும், ஆப்கானிஸ்தானில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கைகளைப் பற்றிப்பேசாமல் போர்குறித்து விவாதிக்க முடியாது என்பதால், நான் விதவைகள் மேல் கவனம் செலுத்தினேன். ஒரு நாட்டின்மீது நீங்கள் குண்டு போடுவீர்கள், நிறைய பெண்களை விதவைகளாக்குவீர்கள், அப்புறம் நீங்கள் அவர்கள்மீது அக்கறை காட்டுவீர்கள்- புகழ்பெற்ற மானுடவியலாளர் தலால் ஆஸாத் இதைத்தான், தாராளமய தேசத்தின் கொடூரமாகவும் கருணையாகவும் சித்தரிக்கிறார்.
உங்கள் ஆய்வின்போது உங்களை மிகவும் வியப்புக்குள்ளாக்கிய விஷயம் எது?
அக்டோபர் 2001-ல் குண்டுமழை பொழியத் தொடங்கியவுடன் ராணுவம் நிவாரணப் பொருட்களையும் பொழிந்தது. உதவிக்கும் ராணுவத்துக்கும் இடையே மனிதாபிமானம் என்ற கோட்பாடு சிக்கி மரித்துப்போனது. தங்களை மனிதாபிமானிகளாகக் காட்டிக்கொள்வதற்காக ராணுவம் பள்ளிக்கூடங்களையும் கட்டியது.
சில விதிவிலக்குகள் இருந்தாலும், மனிதநேய அமைப்புகள் நிவாரண உதவிக்காக வரும் நன்கொடைகள்மேல் அதிகம் அக்கறை கொண்டிருந்தனவே தவிர, ஆப்கன் மக்கள்மீது அவர்களுக்கு அக்கறை இல்லை.
நிவாரண அமைப்புகள், ஆப்கானிஸ்தானின் மறுசீரமைப்பு ஆகியவற்றில் நவதாராளமயத் திட்டங்கள் எந்த அளவுக்குப் பங்குவகிக்கின்றன என்று எனக்குத் தெரியவந்தது. விதவையாக இருத்தல் என்பதன் அடிப்படை அர்த்தத்தையே நவதாராளமயத் திட்டங்கள் மாற்றிக்கொண்டிருக்கின்றன. “நீங்கள் வேலைக்குச் சென்றால் என்ன?”என்பது மாதிரியெல்லாம் ஆப்கானியர்கள் திடீரென்று விதவைகளிடம் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் முன்பு இதுபோலவெல்லாம் நான் பார்த்ததேயில்லை.
பாலின சமத்துவத்தைப் பரவலாக்கும் செயல்திட்டங்கள் வேலைவாய்ப்புகளைக் குறிவைக்கின்றன. விதவைகளுக்கு உதவி செய்வதற்கான ஒரே நோக்கம், அவர்களை வேலைசெய்ய வைப்பதே. வேலைபார்க்க விரும்பும் விதவைகள் இருக்கிறார்கள். வேலையில் ஈடுபடுவது ஒருவகையில் மற்ற விஷயங்களை மறக்க வைக்கிறது. விதவைகளுக்குக் கிடைக்கக்கூடிய ஒரே உதவி இதுதான், அடிப்படையிலேயே பெரும் மாற்றங்களை இது ஏற்படுத்துகிறது.
கடைசியில் பார்த்தால் இது நவதாராளமயவாத, நவபழமைவாதச் செயல்திட்டம்தான். ஆனால், இஸ்லாமிய தர்மஸ்தாபனங்கள் எல்லாம் தொடர்பற்றவையாகவும் சந்தேகத்துக்கு உரியவையாகவும் ஆக்கப்பட்டுவிட்டன. அமெரிக்காவில் இது பெரும் பிரச்சினைதான், உலகின் பிற நாடுகளிலும் இப்படித்தான். ஆனால், இந்த நாடு தொடர் போர்களைச் சந்தித்திருக்கும் நாடு.
அப்படிப்பட்ட நாட்டில் மக்கள் நலத்திட்டங்களை எப்படிச் செயல்படுத்துவது என்ற உணர்வுள்ள திட்டங்கள், இஸ்லாமிய மக்களின் உணர்வுகளோடு ஒத்துப்போகும் திட்டங்கள் என்று பார்த்தால், கடைசியில் மிகச் சில திட்டங்கள்தான் இருக்கின்றன.
நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல வேண்டுமென்றால், ஆப்கானியர்கள் சந்தைப் பொருளாதாரத்தில் ஆக்கபூர்வமாகப் பங்கேற்க வேண்டும் என்று கொடையாளர்கள் வலியுறுத்துகிறார்கள் - ஆனால், போரே இல்லையென்றால் இன்னும் ஆக்கபூர்வமாக இருக்குமல்லவா? ஆப்கானியர்களுக்கு ஆக்கபூர்வமாக இருக்கத் தெரியாது என்பது போலல்லவா சொல்கிறார்கள்.
எல்லாவற்றையும் தாண்டித்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள். இதைத்தான் நான் ஆக்கபூர்வம் என்று கருதுகிறேன் (உலகின் பிற பாகங்களில் உள்ள மக்கள் இதையெல்லாம் தாக்குப்பிடித்திருக்கவோ குறைந்தபட்சம் இதையெல்லாம் புரிந்துகொண்டிருக்கவோ மாட்டார்கள்).
நிவாரணப் பணியாளர்கள் எல்லாம் 50 லட்சம்டாலர்கள் மதிப்பிலான பாலின நலத்திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்; ஆனால், பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு, அவர்களால் தேநீர் பரிமாறும் பெண்களைத் தவிர வேறெந்த ஆப்கன் பெண்களையும் சந்திக்க முடியவில்லை.
பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் திட்டங்களில் பணிபுரிய பெண்களை நியமிக்கவே, அவர்கள் குறைவான தகுதிகளைப் பெற்றிருப்பினும், சர்வதேச நிவாரண அமைப்புகள் பல விரும்புகின்றன. ஆண்கள் பணிபுரியும் நிறுவனங்களில் வேலைபார்ப்பது என்பது ஆப்கன் பெண்கள் மீது சந்தேகத்தையும் பெரும்பாலான குடும்பங்களில் பிரச்சினையையும் ஏற்படுத்தியது.
ஆப்கன் குடும்பங்களில் நிலவும் போட்டி மனப்பான்மையைப் பற்றி இந்தத் திட்டச்செயல்பாட்டாளர்கள் அறிய மாட்டார்கள். சர்வதேசப் பாலின சமத்துவ முன்னெடுப்புகள் எல்லாம் பெண்களையே குறிவைப்பதால், அவர்களின் சகோதரர்கள் சந்தேகத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். கொடையாளர்களுக்கு எத்தனை பெண்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதில்தான் ஆர்வமே தவிர வேறெதிலும் இல்லை.
ஆப்கானிஸ்தான் சமூகத்தைப் போர் எப்படிப் பாதித்திருக்கிறது?
தொடர்ச்சியான போர்கள் சந்தேக மனப்பான்மையை உருவாக்கியிருக்கின்றன - எல்லோரும் எல்லோரையும் சந்தேகக் கண்கொண்டே பார்க்கிறார்கள். பெரும்பாலான செயல்பாட்டாளர்கள் சர்வதேச அளவிலான, கவர்ச்சிகரமான ஊதியங்களால் ஈர்க்கப்பட்டார்கள், தங்கள் பணியின் செயல்திட்டங்களுக்கு இணங்கச் செயல்பட்டார்கள். நான் அவர்களைக் குற்றம்சாட்டவில்லை, ஆனால் உண்மை என்னவென்றால் ஆப்கன் மண்ணுக்கே உரித்தான பெண்ணிய இயக்கங்கள் எதுவும் தற்போது அங்கே இல்லாமலாகிவிட்டது.
அமெரிக்காவுக்காகவும், பிற நாடுகளுக்காகவும் கொள்கை வகுப்பாளர்களாகப் பணிபுரியும் ஆப்கனைச் சேர்ந்த ஒருசில கல்வியாளர்கள், மானுடவியலாளர்கள் ஆகியோரின் நிலையும் இதுதான். ஊதியம் மிகவும் அதிகம்தான் என்றாலும், ஆப்கானிஸ்தான் அதன் அறிஞர்களை இழந்துவிட்டது; அப்படிப்பட்ட அறிஞர்களை உருவாக்குவதற்கும் எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. எவ்வளவு வருத்தத்துக்குரிய நிலை இது.
திறமைவாய்ந்த ஆப்கானியர்களுக்குக் கிடைக்கும் ஃபுல்பிரைட் கல்வி உதவித்தொகை, அமெரிக்காவில் படிப்பதற்குக் கிடைக்கும் ஆதரவு ஆகியவற்றின் வடிவில் தாராளமய மனிதாபிமானம் தன்னைக் காட்டிக்கொண்டிருக்கிறது. இருந்தும் ஏராளமான நவதாராளமய கொள்கையாளர் - அலுவலர்களையே இது உருவாக்குகிறது. அவர்களெல்லாம் ஆப்கானிஸ்தானின் அறிஞர்கள் அல்ல. நவதாராளமய அறிஞர்களாகவே அவர்கள் அறியப்படுவார்கள்.
ஆப்கனின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? இதில் தலிபன்களின் பங்கு எப்படி இருக்கும்?
அமெரிக்க ராணுவம் இங்கிருப்பது தொடரும், நிவாரண உதவிகள் குறைக்கப்படும். அடையாளபூர்வமாக அமெரிக்கா இங்கிருந்து அகன்ற பிறகு, எந்த வன்முறையும் “உள்நாட்டுப் போர்” என்றே அழைக்கப்படும். ஆப்கானிஸ்தானைக் குறிவைத்துச் சொல்லப்படும் “உள்நாட்டுப் போர்” என்ற சொல்லையே நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் (அதாவது, 1990-களில் சொல்லப்பட்டதையும், 2014-க்குப் பிறகான அந்தச் சொல்லின் பயன்பாட்டையும்).
ஏனென்றால், சர்வதேசச் சமூகத்துக்கு இதில் உள்ள பங்கையும், தங்கள் திட்டங்களை ஆப்கானிஸ்தானில் செயல்படுத்தக்கூடிய கூட்டாளிகளுக்கு ஆயுத உதவிகளும் நிதியுதவியும் செய்யும் அந்நிய சக்திகளின் செயல்பாட்டையும் மேற்கண்ட சொல்லானது உணர்த்தத் தவறுகிறது. “போர்க் காலத்தில்தான் ஆப்கானியர்கள் அமைதியாக இருக்கிறார்கள்” என்ற தேய்ந்துபோன வசனத்தை மிஸ்டர் ஒபாமாவின் நிர்வாகமும், பிற நாடுகளின் நிர்வாகங்களும் சொல்லக்கூடும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இருப்பினும், என் எதிர்பார்ப்பு நிறைவேறக் கூடாது என்றே நாம் நம்புகிறேன்.
தலிபன்கள் தற்போது இல்லாத சூழலிலும்கூட அவர்கள் தங்கள் இருப்பைக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள், அவர்கள் யார் என்று நினைக்கும்போது ஏற்படும் பயத்தாலும் அவர்கள் எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்களோ அதாவது அவர்களுடைய காட்டுமிராண்டித்தனத்தின் கொடும் நினைவாலும்தான் இந்த நிலை.
இந்தக் காட்டுமிராண்டித்தனத்தைக் காரணம் சொல்லி, ஆப்கானிஸ்தான் மீது குண்டுபோடலாம், அதை ஆக்கிரமிக்கலாம் (தற்போது பாகிஸ்தானையும்கூட), ஆளில்லா விமானத் தாக்குதலையும் பிற வன்முறைகளையும் ஆப்கானிஸ்தான், பழங்குடி பகுதிகள், கைபர் பக்துன்க்வா ஆகிய பகுதிகள்மீது ஏவும் மனிதத்தன்மையற்ற செயல்களிலும் நாம் ஈடுபடலாம்.
அதே சமயத்தில், சர்வதேசச் சமூகத்தின் கண்களில் நியாயமாக நடந்துகொள்வது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்தலாம். மிக மோசமான வன்முறைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன, என்ன காரணத்துக்காகத் தெரியுமா? அரசு சாராதவர்கள் இந்தப் பகுதிகளில் நிகழ்த்தும் மிக மோசமான வன்முறைகளைத் துடைத்தெறிவதற்காகத்தான் என்று அவை நியாயப்படுத்தப்பட்டன.
வன்முறைக்கு வன்முறையே மருந்து. இப்போது எல்லாமே பாதுகாப்பு தொடர்பானதாக, உலகளாவிய பாதுகாப்பு தொடர்பானதாக ஆகிவிட்டது. ஆனால், ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை ஒரு பொருட்டாகவே யாரும் எடுத்துக்கொள்ளவில்லை. எப்போதுமே அமெரிக்கா அல்லது வேறு நாடுகளின் பாதுகாப்பு அவ்வளவுதான். உண்மையிலேயே ஆப்கானியர்களின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படுவார் யாருமில்லை.
© தி இந்து (ஆங்கிலம்), தமிழில்: ஆசை
‘தி இந்து’ நாளிதழின் இணையதளத்தில் இந்த நேர்காணலைப் படிக்க:
No comments:
Post a Comment