Monday, August 4, 2014

பாலு மகேந்திரா ஒரு நினைவுகூரல்



ஆசை

(‘மூன்றாம் பிறை’யின் இறுதிக்காட்சியில் நிராதரவாகக் கமல் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கும்போது ‘சுப்பிரமணிக்குட்டி’ நாய்க்குட்டியின் நினைவு ஏனோ வந்தது. 

அந்த இறுதிக் காட்சியின் தாக்கத்தில் 2005-ல் எழுதிய கவிதைஇது. எனது முதல் கவிதைத் தொகுப்பான ‘சித்து’ (2006) புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.

பாலு மகேந்திராவுக்குச் சமர்ப்பணம் செய்யும் அளவுக்கெல்லாம் தகுதியில்லை என்றாலும் ஒரு நினைவுகூரல்.)



நீயறியாத உன் கண்ணீர்த் துளிகளின் துக்கம்

நிச்சயம் நீ போட்டியிட்டிருக்கக் கூடாது
இத்தனை பிரமாண்டமான
வல்லமை மிக்க
நீண்ட
கொடூரமான ஒரு ரயிலுடன்

மழை கரைத்த கேவலுடன்
திரும்புகிறாய்
நொண்டிக்கொண்டு
ஒரு சிமெண்ட் பெஞ்ச் நோக்கி

எண்ணற்ற மழைத்துளிகளுடன்
அடையாளமற்று வீழும்
நீயறியாத உன் கண்ணீர்த்துளிகள்

தண்டவாளத்தின் நேர்கோட்டில்
இதழ் விரியும்
தாரைகள்

ஒரு ஆட்டுக்குட்டிகூட ஒதுங்காத
கூரையில்லாத ரயில் நிலையம்

தண்டவாளத்தை
முடிவில்லாததாக விட்டுச்செல்கிறது
தூரத்தே மறையும்
ரயிலின் கடைசிப் பெட்டி

மழை வகிடு பிரித்த தலையுடன்
அமர்ந்திருக்கிறாய்
யாரையும் குற்றம் சொல்வதற்கு ஏதுமற்று

சீக்கிரம் வீடு திரும்பு
நீயறியாத உன் கண்ணீர்த்துளிகளின்
துக்கத்தை
இந்த ரயில் நிலையத்தில்
ஒரு கைகாட்டியாய் விட்டுவிட்டு

சீக்கிரம் வீடு திரும்பு

யாருமற்ற உன் வீட்டில்
யாருமற்ற உன் நாய்க்குட்டி
சீக்கிரம் வீடு திரும்பு
19.02.05

No comments:

Post a Comment