Friday, May 10, 2013

சென்னை: வாழ்க்கையும் பிழைப்பும்-1


(தமிழ் இன்று என்ற இணைய இதழுக்காக 2010ஆம் ஆண்டு நான் எழுதிய கட்டுரையின் முதல் பகுதி)

ஆசை


2001இல் எல்லாரையும்போல எண்ணற்ற கனவுகளுடன் நான் சென்னை வந்தேன். சத்யஜித்ரே போன்று பெரிய இயக்குநர் ஆவது, பெரிய கவிஞனாக ஆவது, பெரிய நாவலாசிரியனாக ஆவது என்றெல்லாம். நிறைய உலகத் திரைப்படங்கள் பார்க்கலாம், நிறைய எழுத்தாளர்களைச் சந்திக்கலாம், நிறைய கற்றுக்கொள்ளலாம் என்று எவ்வளவோ ஆசைகள். நிறைய உலகத் திரைப்படங்கள் பார்த்தேன், ஆனால் இயக்குநராக ஆகவில்லை. எழுத்தாளர்களைச் சந்தித்தேன், நான் ஒன்றும் பெரிய எழுத்தாளனாக ஆகவில்லை, நிறைய கற்றுக்கொண்டேன், எல்லாம் உயிரற்ற அறிவு.



அப்புறம் 2010இல் எந்தக் கனவும் மிஞ்சியிராமல் நான் சென்னையை விட்டுக் கிளம்பிவிட்டேன். இது என்னுடைய கதை மட்டுமல்ல ஏராளமானோரின் கதையும்கூட. ஒரே ஒரு வித்தியாசம்; நான் தப்பித்து ஓடிவந்துவிட்டேன்.

ஏன் என்ன பிரச்சினை? சென்னை தமிழ்நாட்டிலே மிகப் பெரிய நகரம், எல்லாப் பெரிய நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் இருக்குமிடம், தரமான மருத்துவமனைகள், உணவகங்கள், பள்ளி கல்லூரிகள் இருக்குமிடம், திரையரங்குகள் மெகா மால்கள், மல்டிபிளக்ஸ்கள் என்று எல்லா வசதிகளும் இருக்கும் இடம், போதவில்லை என்றால் மெரீனா கடற்கரை, பூங்காக்கள். இவ்வளவு இருக்கிறது அப்புறம் ஒருவருக்கு என்ன பிரச்சினை இருக்க முடியும்? பார்க்கப்போனால் சென்னையில் இருக்கும் வசதிகளில் ஒரு சதவீதம்கூட இல்லாத ஊர்கள் தமிழ்நாட்டில் ஆயிரக் கணக்கில் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது சென்னையில் என்ன குறை என்று நீங்கள் கேட்கலாம். வாஸ்தவம்தான், இல்லை என்று நான் கூறவில்லை. ஒரே ஒரு வசதி மட்டும் சென்னையில் இல்லை; வாழ்க்கை (அதன் உயிர்ப்பான பொருளில்). அது மட்டும் இருந்திருந்தால் சென்னை அற்புதமான ஒரு நகரமாக இருந்திருக்கும். ஆனால் சென்னையில் இருப்பதோ பிழைப்பு என்கிற வசதிதான்; இது உண்மையில் வசதி அல்ல நிர்ப்பந்தம்.

சென்னையில் எல்லாரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். வேகமாக ஓடும்போது ஒருவரால் சிந்திக்க முடியாது என்று மிலன் குந்தேரா சொல்வார். ஓடும்போது மூளை, இதயம் எல்லாவற்றையும் கழட்டிவைத்துவிட்டு ஓடுகிறார்கள். நிற்பதற்கு யாருக்கும் நேரமில்லை. சிக்னலின் பச்சை விழும்போது முன் நிற்கும் மோட்டார் திடீரென்று நின்றுவிட்டால் அதை ஓட்டுபவர் வண்டியைக் கிளப்புவதற்கு பிரம்மபிரயத்தனம் செய்துகொண்டிருப்பார்; பின்னால் நிற்பவர்களோ பொறுமையிழந்து ஹாரன் சத்தத்தை விடாமல் எழுப்ப அந்த மோட்டார் வண்டிக்காரர் மேலும் பதைபதைப்புக்குள்ளாவார். ஆனால் பின்னால் நிற்பவர்கள் இதைப் போன்ற ஒரு சூழ்நிலையில் தாங்கள் எப்போதும் அகப்பட்டதே இல்லை என்பதுபோலவோ அகப்படவே மாட்டோம் என்பதைப் போலவோ ஹாரன் எழுப்பிக்கொண்டிருப்பார்கள். யாருக்கும் பிறரிடத்தில் பொறுமை இல்லை; எல்லார் மீதும் எரிச்சல்; சக மனிதனை வெறுக்காமல் இருக்க எவ்வளவோ முயற்சிசெய்துபார்த்தாலும் முடியவில்லை; இது சென்னை போன்ற பெருநகரங்களில் தோன்றி எல்லா இடங்களுக்கும் பரவிக்கொண்டிருக்கும் வியாதி.

எங்கு பார்த்தாலும் கூட்டம்; பேருந்தில் ரயில்களில் கடற்கரையில் மெகா மால்களில். ஒரு வித நசநசப்பைத்தான் எங்கும் உணர முடிகிறது. எதாவது ஒரு இடத்துக்குப் போவதென்றாலே அலுப்பாக இருக்கிறது. எந்த நேரமும் பேருந்துகளில் கூட்டம், காத்திருந்து அடுத்த பேருந்தில் போகலாம் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தால் அடுத்ததில் இன்னமும் அதிகக் கூட்டம். அப்படியும் சிரமப்பட்டு ஏறி வேலை பார்க்கும் இடத்துக்குப் போய்ச் சேர்வதற்குள் எல்லா வியர்வையும் வெளியேறி களைப்பு, வியர்வை நாற்றம், மனச்சோர்வு எல்லாம் வந்து சேர்ந்துவிடும். இப்படிப்பட்ட மனநிலை ஒரு முழு நாளையே கொன்றுவிடும். இதனால் எப்போதுமே ஒருவருடைய உண்மையான திறனுக்கு ஏற்றபடி வேலை செய்ய முடியாத நிலை. இப்படி இருக்கும்போது ஒருவரால் எப்படிப் படைப்பூக்கத்துடன் செயல்பட முடியும்? படிப்பது, உலகத் திரைப்படங்களைப் பார்ப்பது நல்ல இசையைக் கேட்பது எல்லாம் இதுமாதிரியான மனநிலையுடனே எப்படி செய்வது?

இந்தச் சூழலில் தொடர்ந்து இருந்தால் ஒருவர் முதலில் இழப்பது அவரது நுண்ணுணர்வை, பிறகு மனிதாபிமானத்தை, பிறகு வாழ்க்கையின் மீதான பிடிப்பை. எனது ஆசைகள் இலட்சியங்கள் எல்லாவற்றையும் கொன்று புதைத்துவிட்டு எல்லாரையும்போல நானும் ஓட முடியாமல் போனாலும் ஓடுவதற்கு முயற்சிசெய்துகொண்டிருந்தேன். அப்படியே அன்றாட வாழ்க்கையில் உழன்றுஉழன்று... திடீரென்று ஒருநாள் ஒரு குரல் எனக்குள் எழுந்தது: 'இப்படியே தொடர்ந்தால் நீ அவ்வளவுதான், சீக்கிரம் விழித்துக்கொள்'
(தொடரும்)

3 comments:

  1. சென்னையை பற்றி மிக அதிகமாகவே பயந்து இருக்கிறீர். சென்னை மிக அற்புதமான நகரம். இந்தியாவின் மற்ற நகரங்களோடு ஒப்பிட்டால், மனிதாபிமானம் நிறைந்த ஒரு நகரம். நான் கல்லூரி (AVC College Mayiladuthurai) முடித்து 1995-ல் சென்னை வந்து விட்டேன். அன்றும் இன்றும் என்னை பெற்றெடுத்த அன்னையை விட சென்னைதான் என்னை காப்பாற்றி வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துகளுக்கு நன்றி நண்பரே!

      Delete
  2. இந்த 10 வருடங்களில் உங்கள் கருத்து மாறியிருக்குமே. சென்னையின் கொடும் வெப்பத்தை தவிர அஞ்ச வேண்டியது ஏ துமில்லை

    ReplyDelete