Wednesday, May 8, 2013

சென்னை: நடப்பவர்களுக்கல்ல!

                                           படம்: நன்றி: வேளச்சேரி பாலு 

சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் இது. நானும் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த ஒரு நண்பரும் ஒரு நாள் இரவு 8 மணி வாக்கில் திருவான்மியூரில் உள்ள 'ஹாட் சிப்ஸ்' ஓட்டலுக்குச் சாப்பிடப் புறப்பட்டோம். நாங்கள் இருந்த இடத்திலிருந்து ஜெயந்தி சிக்னலுக்கு அருகில் உள்ள மேற்படி ஓட்டல் பத்து நிமிடங்களுக்குள் கடந்துவிடக்கூடிய தூரம்தான். ஆனால், அதைக் கடக்க அன்று எங்களுக்கு அரை மணி நேரம் ஆனது.
   எனக்கு சென்னையில் சாலையின் குறுக்கே புகுந்து சுற்றிச் சுழன்று கடக்கும் சாகசம் தெரியும். ஆனால், கூட ஒருவர் இருந்ததால் -- அவருக்குச் சென்னையில் அதிக பழக்கமில்லை என்பதால் -- அவரைப் பத்திரமாக அழைத்துச் செல்லும் பொறுப்பு எனக்கு இருந்ததால், வழக்கமான சாகசத்தை நான் தவிர்த்திருந்தேன். அப்போதுதான், நாம் எவ்வளவு மோசமான சூழலில் இருக்கிறோம் என்பதை என்னால் உணர முடிந்தது. நாங்கள் அவ்வளவு மெதுவாகவும் ஜாக்கிரதையாகவும் நடந்துகொண்டிருந்தோம்.  ஆனாலும், ஒரு விபத்திலிருந்து மயிரிழையில் தப்பித்தோம். சம்பந்தமே இல்லாத ஓரிடத்திலிருந்த வந்த பாய்ந்து வந்த ஒரு பைக் ஓட்டி எங்கள் உயிருக்கு உலை வைக்கப் பார்த்தார். ஒரு விபத்திலிருந்து தப்பித்த அதிர்ச்சியே பல நிமிஷங்கள் எங்களை அப்படியே உறையச் செய்திருந்தது.
   ஆனால், அந்த பைக்கோ எதையும் பொருட்படுத்தாமால் அதே வேகத்தில் சென்று மறைந்தது. அப்புறம் சுதாரித்துக்கொண்டு சாலை நடுவில் வந்து நின்று (அது ஒரு இருவழிச் சாலை) எதிர்புறம் கடப்பதற்காக மீண்டும் காத்திருந்தோம். வெகு நேரம் கழித்துக் கடந்துசென்று நடைபாதையில் ஏறினோம். நடைபாதையில் வரிசையாகத் தள்ளுவண்டிகள். அப்புறம் நடைபாதையை விட்டுக் கீழிறங்கினோம். நடைபாதையை ஒட்டி வரிசையாக நிறுத்தப்பட்ட வாகனங்கள். பார்த்துப்பார்த்து நடந்தோம். இதைவிட ஆபத்து என்னவென்றால் இதுபோன்ற அகலமான சாலைகளில் ஓரத்தை ஒட்டியபடி அனுமதிக்கப்பட்ட திசைக்கு எதிர்த்திசையில் பைக்காரர்களும் ஆட்டோகாரர்களும் சகஜமாகச் செல்வதுதான். நீங்கள் எதிரே வரும் பேருந்து, கார்களைப் பார்த்தபடி ஓரமாக நடந்தாலும் முறைதவறி பின்னே வரும் பைக்காரர்கள், ஆட்டோக்காரர்கள் உங்களை இடித்துவிட்டுச் செல்லக்கூடும். ரொம்பவும் சிரமப்பட்டு முன்னும்பின்னும் மேலும் கீழும் பார்த்து முன்னேறி ஜெயந்தி சிக்னலை அடைந்து அங்கே மிகவும் சிரமப்பட்டு திரும்பி நாலு எட்டு தூரத்தில் உள்ள 'ஹாட் சிப்'ஸை அடைந்தோம், அப்பாடா என்று.
  இதைப் படிக்கும்போது உங்களுக்கு ரொம்பச் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், இது எவ்வளவு பெரிய கொடுமை என்று. என்னுடன் வந்த நண்பர் என்னிடம் கேட்டார்: ''சென்னையில் நடப்பதுகூட ஏன் இவ்வளவு சிரமமாகிவிட்டது?'' சென்னையில் வாழ்வதே சிரமமாகிப்போய்விட்டதால் நடப்பதும் சிரமமாகிவிட்டது என்ற பதிலை நான் அவருக்குச் சொல்லவில்லை.
   நடப்பவர்களை மதிக்காத, நடப்பவர்களிடம் கருணை காட்டாத, நடப்பவர்கள் மீது கொஞ்சமும் அக்கறை இல்லாத இந்த நகரத்தின் மீதும் சமூகத்தின் மீதும் உண்மையில் எனக்கு அவ்வளவு கோபம் வருகிறது.
   தான் இருக்கும் நாட்டில் ஓரளவு நடப்பவர்களுக்கு மரியாதை கொடுப்பார்கள் என்றும் யாராவது சாலையைக் கடக்க முயன்றால் அவர்கள் கடக்க வசதியாக வாகனாதிகள் சற்று நிற்பார்கள் என்றும் நண்பர் என்னிடம் சொன்னார்.
   திருவான்மியூரில் நான் வெகு நாளாக ஒரு தொண்டு கிழவியைக் கவனித்துவருகிறேன். அந்தக் கிழவிக்கு எண்பதுக்கும் குறையாத வயதிருக்கும்; முற்றிலும் கூன்விழுந்து கம்பு ஊன்றிதான் நடப்பாள். வீடுகளில் தரும் குப்பையைக் கொண்டுபோய்க் குப்பைத் தொட்டியில் போடும் சிறு ஜீவனம். ஒருநாள் அவள் சாலையைக் கடப்பதற்காகக் கால்பகுதிச் சாலைவரை வருவதும் வாகனங்கள் நிற்காமல் போவதால் மீண்டும் ஓரத்துக்கு வருவதுமாக இருப்பதைத் தூரத்தில் வந்துகொண்டிருக்கும்போதே நான் கவனித்தேன். அந்தச் சாலை மிகவும் மோசமான இடம். கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுக்கு சற்று முன்பு எதிர்ப்புறம் இருக்கும் சாலையில் திருப்பி விடப்பட்டு அது வந்து மறுபடியும் திரும்பக்கூடியதும், சென்னையிலேயே மிக அதிக வாகனங்கள் வரக்கூடியதுமான ஒரு பகுதி. அதைக் குறுக்கே கடக்க என்னாலேயே முடியாது; அந்தக் கிழவி என்ன செய்வாள்? நான் நெருங்கி வந்து அவள் கையைப் பிடித்துக்கொண்டு, கிழவிக்குப் பாதுகாப்பாக இருந்தபடி பிடிவாதமாகச் சாலையைக் கடக்க முயன்றேன்; நம்ப மாட்டீர்கள் யாரும் தங்கள் வேகத்தைக் குறைத்துக்கொள்ளவில்லை; குறைத்துக்கொள்ளும் வேகத்திலா வருகிறார்கள்? நேர்சாலையில் போகும்போது உள்ள வேகத்தைவிட திரும்பும் இடத்தில் செல்லும் வேகம்தான் அதிகம். பாதிவரைபாதிவரை வந்து பிறகு மறுபடியும் ஓரத்துக்கே திரும்ப வேண்டியிருந்தது. வாகனாதிகளுக்குத்தான் வெற்றி. இறுதியில் கிழவி தானாகவே கடந்துவிட்டிருக்கக்கூடிய நேரத்தில்தான் நானும் கிழவியைப் பத்திரமாக இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்துக்குக் கொண்டுபோய் விட்டேன்.   
    'மனிதன் நடப்பதற்காகப் பிறந்தவன்' என்று நடப்பதன் சிறப்பைப் பற்றி எனது  யோகா ஆசிரியர் அடிக்கடி எனக்கு மேற்கோள் காட்டுவார். சென்னையைப் பார்க்கும்போது எனக்கு இதற்கு எதிர்மறையாகத்தான் தோன்றுகிறது; மனிதன்  நடப்பதற்குப் பிறந்தவன் அல்ல, ஓடுவதற்கு அல்லது பறப்பதற்குப் பிறந்தவன். நடப்பவர்களின் இருப்பு சென்னையில் மறுக்கப்படுகிறது. சாலைகளும் சரி போக்குவரத்து விதிமுறைகளும் சரி எல்லாம் உணர்த்துவது இதைத்தான்: இது நடப்பவர்களுக்கான நகரம் அல்ல; நடப்பவர்களே தயவுசெய்து காத்திருங்கள் அல்லது நகரத்தை விட்டு வெளியேறுங்கள்.
    ஒரு சாலை போடுவதற்கு முன்பு அந்த இடத்தில் மக்கள் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்துக்கு எந்தப் பிரச்சினையுமின்றி கடந்திருப்பார்கள். சாலை போட்டு சிக்னல் வந்த பிறகு அப்படியல்ல. முறைப்படியும் பிரச்சினையில்லாமலும் சாலையைக் கடக்க வேண்டும் என்றால் நீங்கள் ஒரு சிக்னலுக்குத்தான் வந்தாக வேண்டும் (சிக்னலில் கடப்பது எவ்வளவு பாதுகாப்பானது என்பதும் கேள்விக்குறியே). சிக்னல் இல்லாத இடங்களிலும் கடக்கலாம். ஆனால் அதற்காக நீங்கள் உயிரையும், வாகனங்கள் வராத தருணம் வரை காத்திருப்பதற்காக நேரத்தையும் பணயம் வைக்கத் தயாராக இருக்க வேண்டும். பத்தடிக்கு ஒரு சிக்னல் போடவே முடியாது; இந்தப் பக்கம் (குறைந்தபட்சம்) கால் கி.மீ. அல்லது அந்தப் பக்கம் கால் கி.மீ. கடந்து சிக்னலை அடையலாம். அது நான்கு சாலைகளின் சந்திப்பு என்றால் பத்து நிமிடம் காத்திருந்து பின் அரக்கபரக்கக் கடக்கலாம்; நீங்கள் சென்னையின் கரப்பான் பூச்சிகளில் ஒருவர் என்றால் வாகனாதிகள் செல்வதற்கான ஒரு சிக்னலுக்கும் இன்னொரு சிக்னலுக்கும் இடையேகூட நுழைந்து செல்லலாம். ஆனால் கவனம் வாகனாதிகள் உங்களை விடத் தேர்ந்த கரப்பான் பூச்சிகள். வாகனாதிகளைத் தேர்ந்த கரப்பான் பூச்சிகள் என்று நான் சொன்னதற்கு ஒரு எடுத்துக்காட்டு; பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் என்றால் எப்படியாவது குடியிருப்புப் பகுதிகளின் சிறு சந்துபொந்துகளில் புகுந்து போய்விடலாம் என்று ஒரு சந்தில் புகுவார்கள்; அங்கு ஏற்கனவே ஏகப்பட்ட வாகனங்கள் அடைத்துக்கொண்டு தாங்களும் போக முடியாமல் குடியிருப்புவாசிகளும் நகரவிடாமல் அணைபோட்டுவிடுவார்கள். 
    ஆனால், நடப்பவர்கள் எப்படியோ சமாளிக்கக் கற்றுக்கொண்டுவிட்டார்கள். எனக்கிருக்கும் பதட்டத்தில், கோபத்தில் கொஞ்சம்கூட அன்று அந்தக் கிழவியிடம் என்னால் காண முடியவில்லை. சாலையில் நான் நடக்கும்போது  வாகனங்களில் செல்பவர்களையும் நடப்பவர்களையும் சற்றுக் கூர்ந்து கவனிக்கும் பழக்கம் எனக்குச் சமீப காலமாக ஏற்பட்டிருக்கிறது. அப்படிப் பார்க்கும்போது எனக்கு இப்படித் தோன்றும், அடைய வேண்டிய இடத்துக்குச் சென்று அடைந்தும்கூட இவர்களின் வேகமும் பரபரப்பும் பதட்டமும் அடங்குமோ என்று.
    வாகனாதிகளும்கூட சில நேரங்களில் நடப்பவர்கள்தான் என்றாலும் அவ்வப்போதைய பாத்திரத்தைக் கனக்கச்சிதமாக ஏற்றுச் செயல்படுகிறார்கள்;  ஆனால் முந்தைய பாத்திரத்தின் நினைப்பு மட்டும் மறந்துவிடும். நடப்பவர்களின் மேல் அவர்கள் கொள்ளும் எரிச்சல் அளவில்லாதது. ஒரு சாலையைக் குறுக்கே கடப்பதற்கு நடப்பவர் ஒருவர் எடுத்துக்கொள்ளும் நேரமும் அவர் குறுக்கே கடக்கும் இடத்தை நேரே கடப்பதற்கு ஒரு வாகனம் எடுத்துக்கொள்ளும் நேரமும் ஒன்றா? எப்படியோ கடந்துவிடலாம் என்று கணக்குப்போட்டு பலமுறை சாலையின் பாதியில் வந்து எதிரெதிர்த் திசையில் வரும் வாகனங்களுக்கு நடுவே மாட்டிக்கொண்டு எத்தனையோ முறை நான் கண்பிதுங்கியிருக்கிறேன். அப்போது வாகனங்களில் உள்ளவர்கள் நம்மைப் பார்த்துவிட்டுச் செல்லும் பார்வை இருக்கிறதே, அது வாயால் சொல்லப்படும் ஆயிரம் 'பாடு'வுக்குச் சமம். சைக்கிளில் செல்பவர்கூட அப்படிப் பார்த்துவிட்டோ திட்டிவிட்டோ செல்வது இன்னமும் கொடுமை.   
    வாகனங்களின் வேகமும் நகரச் சாலைகளின் அமைப்பும் போக்குவரத்து முறைகளும் எப்போதும் நடப்பவர்களாக இருக்கும் என்னைப் போன்றவர்களை விரட்டிவிரட்டிப் பதட்டத்துக்குள்ளாக்குகின்றன. போ, போய் ஒரு பைக்கோ, காரோ வாங்கிக்கொண்டு அப்புறம் வா, நீ சொகுசாக நடந்துசெல்வதற்காகவா அரசாங்கம் சாலையைப் போட்டிருக்கிறது?; என்றெல்லாம் அசரீரி கேட்கிறது எனக்கு.
    மக்களுக்காக வளர்ச்சி, முன்னேற்றம், வசதிகள், தொழில்நுட்பம் என்பதைவிட அவற்றுக்காக மக்கள் என்று ஆகிவிட்டது. மத்திய கைலாஷிலிருந்து டைடல் பார்க் வழியே அகலமாக சாலை ஒன்று போடப்பட்டிருக்கிறது, யாருக்காக என்றால் டைடல் பார்க், அசென்டாஸ் போன்ற எண்ணற்ற ஐடி பார்க்குகளில் பணிபுரியும் 'பாட்டாளி'களின் வசதிக்காக. மத்திய கைலாஷிலிருந்து இரண்டு மூன்று நிமிடங்களில் வாகனங்கள் டைடல் பார்க்கைக் கடந்துவிட வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்தில் போடப்பட்ட நீண்ட சாலை. இதனால் அந்தச் சாலைக்கு இரு புறமும் நடந்து குறுக்கே கடக்க வேண்டியவர்களுக்கு எவ்வளவு நேரம் ஆனாலும் அதைப் பற்றிக் கவலை யாருக்கும் கிடையாது. வெளிநாட்டுச் சாலை போன்று இருக்கும் அந்த சாலையின் ஓரத்தில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் போன்று சென்னையில் வேறு எங்கும் இருக்காது; அதுமட்டுமல்ல சாலை நடுவே நீண்டிருக்கும் பகுதியில் அழகிய செடிகொடிகள், எல்லாம் வாகனாதிகளின் வசதிக்காக. அவர்கள் இந்தச் சாலையில் செல்லும்போது வசதியாகவும் இன்பமயமாகவும் கடக்க வேண்டும் என்பதற்காக.
    நடப்பதன் நோக்கத்துக்காக மட்டும் நடப்பவர்களைப் பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் விடியற்காலையில் கடற்கரைக்குத்தான் வர வேண்டும். அங்கு மட்டும்தான் நடப்பவர்களுக்கு ஓரளவு சுதந்திரம்; கூடவே கடலின் பிரமாண்ட தரிசனம். இங்கே நடப்பதற்காக நடக்கும் யாவரும் உண்மையில் நாள் முழுதும் பறப்பவர்கள்தான். நாள் முழுதும் நடப்பவர்கள் என்றால் அவர்கள் ஏன் இங்கு வர வேண்டும்? நடைப் பயிற்சி முடித்துவிட்டு குளித்துச் சாப்பிட்டுவிட்டு வாகனத்தில் ஏறி உட்கார்ந்தால் போதும் அவர்களுக்கு நடப்பவர்கள் யாரும் கண்ணுக்குத் தெரியாமல் போவதுடன் தாங்களும் நடப்பவர்கள்தான் என்ற உண்மையும் தெரியாமல் போய்விடும்.

('தமிழ் இன்று' இணைய இதழில் 2010ஆம் ஆண்டு வெளிவந்த கட்டுரை )

1 comment:

  1. சென்னையைப் போல மற்ற நகரங்களும் மாறிக்கொண்டிருக்கின்றன. சகஉயிர்கள் மீதான அன்பு குறைவதும், அதிவேகமும், பதட்டமான மனநிலையும் இப்போது இயல்பாகிக் கொண்டே வருவது அச்சத்தை தருகிறது.

    ReplyDelete