Thursday, June 18, 2020

க்ரியா ராமகிருஷ்ணன்-75


ஆசை

நுழைவாயில்

நவீனத் தமிழுக்குப் பெரும் பங்காற்றியவர்களுள் ஒருவரான க்ரியா ராமகிருஷ்ணனுக்கு இன்று 75-வது பிறந்த நாள். அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்து தமிழுக்குப் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அவரைப் போல ஒருவர் மேலைச் சமூகத்தில் இருந்திருந்தால் அவரை அந்தச் சமூகம் கொண்டாடியிருக்கக்கூடிய விதமே வேறு. அவரைப் போல பல சாதனையாளர்களுக்கும் வாழும் காலத்தில் புறக்கணிப்பையே தந்துவந்திருக்கிறோம். க்ரியா ராமகிருஷ்ணனைப் பொறுத்தவரை அதிகார பீடங்களிலிருந்து விலகி இருப்பதாலும், தன்னை முன்னிறுத்துவதில் அவருக்குச் சிறிதும் ஆர்வம் இருப்பதில்லை என்பதாலும் இந்தப் புறக்கணிப்பில் அவருக்கும் ஒரு பங்குண்டு.   க்ரியா பதிப்பகத்தின் மூலம் சி.மணி, ந.முத்துசாமி, அசோகமித்திரன், மௌனி, ஜி. நாகராஜன், எஸ்.வி. ராஜதுரை, சுந்தர ராமசாமி, பூமணி, திலீப் குமார், இமையம்  முக்கியமான பல படைப்பாளிகளின் எழுத்துக்களை ராமகிருஷ்ணன் வெளியிட்டிருக்கிறார். காஃப்கா, காம்யு, அந்த்வான் து எக்சுபரி உள்ளிட்ட உலகப் படைப்பாளிகள் பலரின் புத்தகங்களின் நேரடி மொழிபெயர்ப்புகளை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்ட ‘டாக்டர் இல்லாத இடத்தில்…’ நூல் மிகவும் பிரபலமானது. தமிழின் தொன்மையை நிறுவும் ஐராவதம் மகாதேவனின் ‘Early Tamil Epigraphy’ என்ற நூலும் (ஹார்வார்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து வெளியிடப்பட்டது) க்ரியாவின் மைல்கற்களுள் ஒன்று. கூத்துப்பட்டறை, மொழி ட்ரஸ்ட், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் போன்றவற்றை உருவாக்கியதில் அவருக்கும் பெரும் பங்கு உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக, ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ (முதல் பதிப்பு 1992, விரிவாக்கப்பட்ட பதிப்பு 2008) தமிழுக்கு எஸ்.ராமகிருஷ்ணன் செய்த மிகப் பெரிய பங்களிப்பு. க்ரியா ராமகிருஷ்ணன் தனது 75-வது வயதை நிறைவு செய்திருக்கும் இத்தருணத்தில் அவருடன் 20 ஆண்டுகாலம் பழகியவன் என்ற முறையில் எனக்கென்று சொல்வதற்குச் சில அனுபவங்களும் விஷயங்களும் உள்ளன. அவற்றைக் குறுந்தொடர் வடிவில் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். அவருடன் பழகியவர்களும் அவர் மீது மதிப்பு கொண்ட பிறரும் கூட இத்தருணத்தில் அவரைப் பற்றி எழுதலாம். 'பெரியோரை வியத்தலும் இலமே’ என்பது மிகச் சரியானதுதான் என்றாலும் சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்வது முக்கியம் என்று நான் கருதியதால் இந்தக் குறுந்தொடர்.

1.

க்ரியா ராமகிருஷ்ணனை நான் சந்தித்து இருபது ஆண்டுகள் நிறைவடைகின்றன. அப்போது, மன்னார்குடியில் பி.ஏ. ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். சென்னையில் காலச்சுவடு பதிப்பகம் ‘தமிழினி-2000’ என்ற நிகழ்வை நடத்தினார்கள். அதுவரை இலக்கிய இதழ்களிலும் புத்தகங்களிலும் மட்டுமே நான் சந்தித்திருந்த எனது அபிமான எழுத்தாளர்களை சந்திக்க வேண்டும் என்று அந்த நிகழ்வை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். என் சித்தி கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்திருந்த 500 ரூபாயை எனக்குக் கொடுத்து அந்த நிகழ்வுக்கு அனுப்பிவைத்தார். சென்னையில் சைதாப்பேட்டையில் சித்தப்பா வீட்டில் தங்கியபடி ‘தமிழினி’ நிகழ்ச்சிக்கு தினமும் போய்வந்தேன். அங்கே, பிரம்மராஜன், அம்பை, பெருமாள் முருகன், சாரு நிவேதிதா என்று பலரும் அந்த நிகழ்ச்சிக்கு வந்தார்கள். நான் முக்கியமாக அந்த நிகழ்வுக்கு வந்தது என்னுடைய அப்போதைய ஹீரோ சுந்தர ராமசாமியைப் பார்த்துப் பேசத்தான். ஆனால், அவர் அந்த நிகழ்வில் இருந்தாலும் அவரைப் பார்க்க முடியாமல் ஏதோ ஒரு மனத்தடை என்னைத் தடுத்துவிட்டது. மனுஷ்யபுத்திரன் ஒருவருடன் மட்டும்தான் பேசினேன். அங்கே நிகழ்ச்சி நடந்த அரங்குக்கு வெளியில் என் பட்ஜெட்டுக்கு உட்பட்டு ஒருசில புத்தகங்களை வாங்கினேன். அதில் ஒன்றிரண்டு க்ரியா புத்தகங்களும் அடக்கம்.

க்ரியா பதிப்பகத்துக்கே சென்று சில புத்தகங்களை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு, அந்தப் பதிப்பகத்தின் தொலைபேசி எண்ணை அழைத்தேன். எடுத்தவர் க்ரியா ராமகிருஷ்ணன். எனக்கு அப்போது தொலைபேசியில் அதிகம் பேசிப் பழக்கமில்லை. மேலும், புதிய மனிதர்களுடன் பெரிய ஆட்களுடன் பேசுவதில் ஒருவகை பீதியும் (phobia) உண்டு. ஆகவே, அவருடன் பேச ஆரம்பித்தபோது எனக்கு ‘திக் திக்’ என்றது. சைதாப்பேட்டையில் நான் எந்த பேருந்தில் ஏற வேண்டும் என்பதில் தொடங்கி, திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இறங்கி எப்படி வர வேண்டும் என்பதுவரை கையில் தெளிவான  வரைபடத்தைக் கொடுப்பதுபோல் அவர் நான் வர வேண்டிய வழியை விவரித்தார். என்னுடைய பிரச்சினை என்னவென்றால் யாருக்கும் என்னால் ஒழுங்காக வழி சொல்லத் தெரியாது, யாரும் சொல்லும் வழியையும் மனதில் சித்திரமாக மாற்றிக்கொள்ளவும் தெரியாது. ஆனாலும் என்ன ஆச்சரியம்! திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இறங்கி யாரையும் விசாரிக்காமலேயே அவர் சொன்ன வழியைப் பின்பற்றி க்ரியா அலுவலகத்துக்கு வந்துவிட்டேன்.

அலுவலகத்தில் அவரே என்னை வரவேற்றார். மிகக் குறைவானவர்களே அங்கு இருந்தார்கள். எங்கிருந்து வருகிறீர்கள், என்ன (படிப்பு) படிக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டார். மன்னார்குடி கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்கிறேன் என்று சொன்னதும் “ ஓ தங்க.ஜெயராமன் மாணவரா? ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யில் அவர் நிறைய பங்களிப்பு செய்திருக்கிறார் தெரியுமா?” என்று கேட்டார். “அதில் வேலை பார்த்திருக்கிறார் என்பதை அறிவேன்?” என்றேன். க்ரியாவின் புத்தகங்கள் ஒவ்வொன்றையும் பற்றி எனக்கு விளக்க ஆரம்பித்தார். நான் வைத்துள்ள சொற்ப பணத்தில் எல்லாவற்றையும் வாங்க முடியாது என்பதால் ’அந்நியன்’, ‘விசாரணை’ உள்ளிட்ட சில புத்தகங்களை வாங்கிக்கொண்டேன். “ஏன் இது வேண்டாமா?” என்று ‘குட்டி இளவரசன்’ புத்தகத்தை எடுத்து நீட்டினார். தயக்கத்துடன் “பணம் குறைவாகத்தான் இருக்கிறது” என்றேன். இத்தனைக்கும் அப்போது அதன் விலை 40 ரூபாய் மட்டும்தான். “பரவாயில்லை, எடுத்துக்கொள்ளுங்கள். ஊருக்குப் போய்ப் படித்துவிட்டுப் பிடித்திருந்தால் பணத்தை மணியார்டர் செய்யுங்கள். ஆனால், தவற விடக்கூடாத புத்தகம்” என்றார். எடுத்துக்கொண்டேன். ஊர் திரும்பிய பிறகு ‘குட்டி இளவரசன்’ படித்தேன். அது எவ்வளவு அழகான பரிசு என்பதை உணர்ந்தேன். க்ரியாவுக்கு 36 ரூபாயை மணியார்டர் செய்தேன். ஒரு சிறுநகரத்திலிருந்து சென்னைக்கு வந்த, வெளியுலகமே ஏதும் தெரியாத ஒரு இளைஞனுக்கு அவருடைய இந்த எளிய செய்கைகள் எவ்வளவு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருக்கும் என்பதை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது.
(தொடரும்)

2 comments:


  1. மிகச் சிறப்பு .
    க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களுடன் உங்களின் அனுபவங்களை எழுதுவதன் வழியாக தமிழ்ப் பதிப்புலகில் அவரின் பங்களிப்பை நாங்கள் அனைவரும் அறிய வாய்ப்பாக இருக்கும். தொடர்ந்து எழுதுங்கள்.. ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...

    ReplyDelete
  2. உயர்த்திவிட்ட ஏணியாக இருந்த அரிய மனிதரைப் பற்றிய அருமையான அனுபவப்பகிர்வு. ஒவ்வொருவர் வாழ்விலும் இவ்வாறாக ஒருவரோ, சிலரோ அமைந்துவிடுகின்றனர். அவரை நீங்கள் நினைவுகூர்ந்த விதம் சிறப்பாக உள்ளது. வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு இவர் பாடமாக இருப்பார், இத்தகைய உங்கள் பதிவுகள் ஒரு ஊக்குவிப்பைக் கொடுக்கும்.
    ஒரு சிறுநகரத்திலிருந்து சென்னைக்கு வந்த.....இந்த அனுபவத்தை நான் 1979இல் பெற்றவன். கல்லூரிப்படிக்கு முடிந்த சில நாள்களில் சென்னையில் பணியில் சேர்ந்தேன். அந்த நாள்கள் எனக்கு நினைவிற்கு வந்தன.

    ReplyDelete