Monday, March 11, 2024

வார்ஸன் ஷைர்: வீடென்பது சுறாமீனின் வாயானால்...ஆசை
(அறிமுகமும் கவிதைகளின் மொழிபெயர்ப்பும்)

சம காலத்தின் முக்கியமான இளம் பெண்கவிஞர்களுள் ஒருவர் வார்ஸன் ஷைர் (Warsan Shire). சோமாலியப் பெற்றோருக்கு கென்யாவில் 1988-ல் பிறந்தவர் வார்ஸன் ஷைர். சிறு வயதிலேயே இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்த வார்ஸன் ஷைர் லண்டன்வாசியானார். பிரிட்டனைத் தாயகமாக்கிக்கொண்டாலும் அங்கே ஒரு அந்நியராகவே வார்ஸன் ஷைர் தன்னை உணர்கிறார்.

தனது பூர்வீக நாடான சோமாலியாவுக்கு வார்ஸன் ஷைர் போனதே இல்லை என்றாலும் தனது எழுத்துகளின் வாயிலாக ஆப்பிரிக்கக் கலாச்சாரம், ஆப்பிரிக்கர்களின் வலி, அகதி வாழ்க்கையின் துயரம், குறிப்பாக அகதிப் பெண்களின் துயரம் போன்றவற்றை வார்ஸன் ஷைர் தொடர்ந்து பதிவுசெய்கிறார். தன் பூர்வீக நாட்டவர்களைச் சந்திக்கும்போது அவர்கள் குரலில் அவர்கள் தேசத் தொல்கதைகளை வார்ஸன் ஷைர் பதிவுசெய்துகொள்கிறார். பிறகு, அவற்றுக்குத் தன் கவிதைகளில், இன்ன பிற எழுத்துகளில் உரு கொடுக்கிறார்.

அவரது பல கவிதைகளில் இடம்பெயரும் துயரம் அவருடையது இல்லையென்றாலும் எல்லா அகதிகளின் துயரத்தையும் தன்னுடையதாகப் பார்க்கும் சகவுணர்ச்சி வார்ஸன் ஷைரிடம் இருக்கிறது. “ஒன்று, நான் எந்த நபரைப் பற்றி எழுதுகிறேனோ அவரைப் பற்றி எனக்குத் தெரியும் அல்லது நான் எழுதும் ஒவ்வொரு நபரும் நான்தான். ஆனால், அவர்களின் ஆழ்மன அமைப்பை என்னால் கற்பனை செய்துபார்க்க முடியும்” என்கிறார் ஷைர்.

வார்ஸன் ஷைர் இளம் வயதிலேயே தன் கவிதைகளுக்காகப் பல பரிசுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றிருக்கிறார். 2013-ல் ப்ரூனெல் பல்கலைக்கழகம் உருவாக்கிய ஆப்பிரிக்கக் கவிதைப் பரிசை அதே ஆண்டில் வென்றார். 2014-ல் லண்டனின் இளம் அரசவைக் கவிஞராக ஷைர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு ஆஸ்திரேலியாவின் ‘குயின்ஸ்லேண்ட் உறைவிடக் கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரபல பாப் பாடகி பியான்ஸே நோல்ஸ் 2016ஆம் ஆண்டு வெளியிட்ட ‘லெமனேடு’ ஆல்பத்தில் வார்ஸன் ஷைரின் கவிதை வரிகள் இடம்பெற்றன. அதற்குப் பிறகு வார்ஸன் ஷைரின் புகழ் பல மடங்கு பரவியது. எனினும் இந்தப் புகழ் வெளிச்சத்துக்கு ஆட்பட விரும்பாதவராகவே ஷைர் தோன்றுகிறார்.

வார்ஸன் ஷைரின் கவிதைகள் அகதி வாழ்க்கையில் ஆட்பட்டவர்களுக்கிடையில் முழக்கங்களைப் போல் பிரபலமாகியிருக்கின்றன. குறிப்பாக, ‘வீடென்பது சுறாமீனின் வாயாக இருந்தாலொழிய/ யாருமே தங்கள் வீட்டை விட்டு வெளியேறுவதில்லை’ என்ற வரிகள் அகதி வாழ்வின் அடையாள வாசகங்களாக ஆகியிருக்கின்றன.

2011-ல் ‘குழந்தை பெற்றுக்கொள்ள என் தாய்க்குக் கற்றுக்கொடுத்தல்’ (Teaching My Mother How to Give Birth) என்ற சிறிய தொகுப்பை ஷைர் வெளியிட்டார். ‘தன் தலைக்குள் ஒரு குரலால் வளர்க்கப்பட்ட மகளை ஆசீர்வதி’ (Bless the Daughter Raised by a Voice in Her Head) என்ற தொகுப்பை 2022லும் வெளியிட்டார். பல்வேறு தொகுப்பு நூல்களிலும் ஷைரின் கவிதைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. முதல் தொகுப்பு வெளியாகும் முன்னே ஷைரைப் போல் உலகப் புகழ்பெற்றவர்கள் வெகு அரிது!


வார்ஸன் ஷைரின் கவிதைகள் சில இங்கே:

1. வீடு


வீடென்பது சுறாமீனின் வாயாக இருந்தாலொழிய.
யாருமே தங்கள் வீட்டை விட்டு வெளியேறுவதில்லை
ஒட்டுமொத்த ஊரும்கூட ஓடும்போது
நீயும் எல்லைப் பகுதியை நோக்கித்தானே ஓடுகிறாய்
உன் அண்டை அயலார்
உன்னைவிட வேகமாக ஓடுகிறார்கள்
தொண்டையில் மூச்சுடன் ரத்தத்தையும் சுவாசித்தபடி,
உன்னுடன் பள்ளியில் படித்த அந்தப் பையன்
பழைய தகரத் தொழிற்சாலைக்குப் பின்புறம்
நீ கிறங்கும்வண்ணம்
உனக்கு முத்தமிட்ட அந்தப் பையன்
தற்போது ஏந்தியிருக்கிறான்
தன்னைவிட பெரிய துப்பாக்கியை
இனியும் தங்குவதற்கு வீடுன்னை
அனுமதிக்காதபோதுதான்
வீட்டிலிருந்து நீ வெளியேறுகிறாய்.

குதிகால் நெருப்பாக தகிக்க
அடிவயிற்றில் ரத்தம் கொதிக்க
நம்மை வீடு துரத்தினாலொழிய
யாரும் வீட்டை விட்டு வெளியேற மாட்டோம்
உன் கழுத்தினுள் தீய்த்து
கிலியைக் கத்தியொன்று உள்ளே இறக்கும் வரை
இப்படிச் செய்வது குறித்து
நீ நினைத்துப்பார்த்திருக்கக்கூடிய விஷயமல்ல இது
அப்போதும் கூட உன் தேசிய கீதத்தை
உன் சுவாசத்துக்குள் சுமந்து செல்கிறாய்
விமான நிலையக் கழிவறைகளுக்குள்
உன் கடவுச்சீட்டைச் சுக்குநூறாகக் கிழித்து
விழுங்கும் ஒவ்வொரு வாய்க்கும்
தேம்பி அழுவது மட்டுமே
தெள்ளத் தெளிவாக்குகிறது
நீ திரும்ப மாட்டாய் என்பதை.

நிலத்தைவிட நீர் பாதுகாப்பானதாகத்
தோன்றாத வரை
யாருமே தம் பிள்ளைகளைப்
படகிலேற்ற மாட்டார்கள்
என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் நீங்கள்
யாருமே ரயில் பெட்டிகளுக்கு
அடியில் வண்டிகளுக்குக் கீழே
தம் கைகளைத் தீய்த்துக்கொள்ள மாட்டார்கள்
யாருமே செய்தித்தாள்களைத் தின்றுகொண்டு
டிரக்குகளின் வயிற்றுக்குள்
இரவுபகலாகப் பதுங்கியிருக்க மாட்டார்கள்
அவர்கள் பயணித்த தூரத்துக்கு
வெறும் பயணம் என்பதற்கு அப்பால்
வேறேதும் அர்த்தம் இல்லையென்றால்
யாருமே எல்லைவேலிகளுக்குக் கீழே
ஊர்ந்துசெல்ல மாட்டார்கள்
யாருமே பரிதாபத்துக்குரிய வகையில்
தாக்கப்படுவதை விரும்ப மாட்டார்கள்

யாருமே அகதிகள் முகாம்களையோ
ஆடைகளை அவிழ்த்து, பிறகு உடல் முழுவதும்
வலித்துக்கொண்டிருக்கும் விதத்தில், நிகழ்த்தப்படும்
தேடல்சோதனைகளையோ
அல்லது சிறையையோ
-- பற்றியெரிந்துகொண்டிருக்கும் நகருக்குச்
சிறை எவ்வளவோ மேல் என்பதால்
உங்கள் தந்தையைப் போன்ற தோற்றம் கொண்டு
ஒரு டிரக் முழுவதும் ஏறிக்கொண்டுவரும் ஆட்களைவிட
இரவில் ஒரே ஒரு சிறைக்காவலாளி
எவ்வளவோ மேல் என்பதால்--
தேர்ந்தெடுக்க மாட்டார்கள்
யாரலும் ஏற்றுக்கொள்ள முடியாது இதை
யாராலும் தாங்க முடியாது இதை
யார் தோலும் போதுமான அளவுக்கு
உறுதியாக இருக்காது

உங்கள் நாட்டுக்குச் செல்லுங்கள் கருப்பர்களே
அகதிகளே
அழுக்குப் பிடித்த வந்தேறிகளே
தஞ்சம்கோருபவர்களே என்ற கோஷங்கள்
எங்கள் தேசத்தை ஒட்டுமொத்தமாக உறிஞ்சியெடுத்துவிட்ட
விரிந்த கரங்கள் கொண்ட கருப்பர்கள்
விசித்திரமான வாடை அவர்கள் மீது
காட்டுமிராண்டிகள்
அவர்கள் நாட்டை அலங்கோலமாக்கிவிட்டு இப்போது
நம்முடையதையும் அப்படியே செய்ய வேண்டுமாம்
அவர்களுக்கு
அவர்கள் பேசும் சொற்கள்
அவர்களின் கேவலமான பார்வைகள்
உங்கள் முதுகின் மேல் எப்படிப் பாய்கின்றன
ஒருவேளை, கைகால்களைத்
தனியே பிய்த்தெடுப்பதைவிட
அந்த அடி ரொம்பவும் மெதுவானதாக இருக்கலாம்

அல்லது உன் தொடைகளுக்கிடையில்
பதினான்கு ஆண்களைவிட வார்த்தைகள்
கனிவானவையாக இருக்கலாம்
அல்லது உடைசல்களைவிட
எலும்புத்துண்டைவிட
துண்டுதுண்டாக வெட்டப்பட்ட
உன் குழந்தையின் உடலை விட
மெல்வதற்கு எளிதானவையாக இருக்கலாம்
வசைகள்

வீடுசெல்ல வேண்டும் நான்,
ஆனால் வீடென்பது சுறாமீனின் வாய்
வீடென்பது துப்பாக்கியின் குழல்
எனினும் யாருமே தங்கள் வீட்டை விட்டு
வெளியேறுவதில்லை

வீடு நம்மைக் கடலுக்குத் துரத்தினாலொழிய
உன் துணிமணிகளை விட்டுவிட்டு
வேகமாய் ஓடு என்றும்
பாலைவனத்தில் மண்டியிட்டுத் தவழ்ந்துசெல் என்றும்
பெருங்கடல்களில் இறங்கி நட
மூழ்கிப்போ
உன்னைக் காப்பாற்றிக்கொள்
பட்டினிகிட
பிச்சையெடு
உன் சுயகவுரவத்தைக் கைவிடு
உயிர்தான் எல்லாவற்றிலும் முக்கியம் என்றும்
வீடு உன்னிடம் சொன்னாலொழிய
போய்விடு
என்னைவிட்டு ஓடிப்போ
நான் என்ன ஆனேன் என்பது பற்றி
எனக்கேதும் தெரியாது
ஆனால் இந்த இடத்தைவிட
வேறெந்த இடமும் பாதுகாப்பானதுதான் என்று
நம் காதில் வீடு சொன்னாலொழிய
யாருமே வீட்டை விட்டுப் போவதில்லை


2. நமக்குச் சொந்தமானவை
 
நம் ஆண்கள்
நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல.
ஒரு மதியம் எங்களை விட்டுச்சென்ற
என் சொந்தத் தந்தையும்கூட
சொந்தமில்லை எனக்கு.

சிறைப்பட்ட என் சகோதரனும்
சொந்தமில்லை எனக்கு.
வீடுதிரும்பியபின் தலையில் சுடப்படும்
என் மாமன்களும் சித்தப்பாக்களும்
சொந்தமில்லை எனக்கு.

எதிலோ ரொம்பவும் அதிகம் என்பதற்காகவோ
எதுவோ போதாது என்பதற்காகவோ
நடுத்தெருவில் கத்தியால் குத்தப்பட்ட
என் ஒன்றுவிட்ட சகோதரர்களும்
சொந்தமில்லை எனக்கு.

அப்புறம், நாங்களெல்லாம் அளவுக்கதிகமாகவே
இழப்பைச் சுமந்துதிரிகிறோம்,
அளவுக்கதிகமாகவே கறுப்பு தரித்திருக்கிறோம்,
வளையவருவதற்கு முடியாத அளவில்
மிகவும் பருமனாகவே இருக்கிறோம்,
காதல் கொள்ள முடியாத அளவுக்குச்
சோகமாக இருக்கிறோம்
என்றெல்லாம் சொல்கிறார்கள்
நாம் நேசிக்க முயலும் ஆண்களும்.
பிற்கு அவர்கள் நம்மை விட்டு நீங்குகிறார்கள்.
அதன்பின் அவர்களையெண்ணியும்
துயர்கொள்கிறோம்.

அதற்காகத்தான் நாம் இங்கிருக்கிறோமா?
இறந்துபோனவர்கள், நம்மை நீங்கிச்சென்றவர்கள்,
போலீஸ்காரர்களால் தூக்கிச்செல்லப்பட்டவர்கள், போதைமருந்துகளாலோ
நோயாலோ
மற்ற பெண்களாலோ
கொள்ளைகொள்ளப்பட்டவர்களையெல்லாம்
விரல் விட்டு எண்ணிக்கொண்டிருக்கிறோம்
சமையல் மேசையில் அமர்ந்தபடி.

இதில் எந்த அர்த்தமும் இல்லை.
உன் தோலைப் பார், அவள் வாய்,
இந்த உதடுகள், அந்தக் கண்கள், அடக் கடவுளே,
அந்தச் சிரிப்பொலியைக் கேளேன்.

நம் வாழ்வில் நாம் அனுமதிக்க வேண்டிய
ஒரே இருள் என்பது இரவுதான்,
அப்போதும்கூட நமக்குண்டு நிலவு.  


3. தாய்மண்ணைப் பற்றிய உரையாடல்கள் (குடிவெளியேற்ற மையத்தில்)
 
சரி, தாய்வீடு என்னைத்
துப்பியெறிந்துவிட்டதென்று நினைக்கிறேன்,
நகர்களின் இருட்டடிப்புகளும் ஊரடங்கு உத்தரவுகளும்
வாய்க்குள் ஆடும் பல்லைத் தடவும் நாக்கைப் போல.

கடவுளே, பழைய சிறையைத் தாண்டி,
பள்ளி வாயில்களைத் தாண்டி,
கம்பங்களில் கொடிகளைப் போல் ஏற்றப்பட்டு
எரிந்துகொண்டிருந்த உடல்களைத் தாண்டி,
நம் சொந்த ஊரே
நம்மைத் தலைமுடி பற்றியிழுத்துக்கொண்டு சென்ற
நாளைப் பற்றிப் பேசுவது
எவ்வளவு சிரமம் என்பது
உனக்குத் தெரியுமா?

என்னைப் போன்ற மற்றவர்களைச் சந்திக்கும்போது,
அந்த ஏக்கத்தையும், அந்த இழப்பையும்,
சாம்பலின் நினைவை
அவர்களின் முகங்களிலும்
என்னால் கண்டுகொள்ள முடிகிறது.

வீடென்பது சுறாமீனின் வாயாக இருந்தாலொழிய    
யாருமே தங்கள் வீட்டை விட்டு வெளியேறுவதில்லை.
பழைய கீதத்தை என் வாய்க்குள்
வெகுகாலமாகச் சுமந்துகொண்டிருக்கிறேன்,
இன்னொரு பாடலுக்கோ, இன்னொரு நாவுக்கோ,
இன்னொரு மொழிக்கோ இடமில்லாத வகையில்.

மூடுவதும், முழுமையாக ஆட்கொள்வதுமான
ஒரு அவமானத்தை நானறிவேன்.
என் கடவுச்சீட்டைச் சுக்குநூறாகக் கிழித்து
விழுங்கினேன்.

அதை மறப்பேனென்றால்
நான் அவ்வளவுதான் எனுமளவில்
ஒரு மொழி என்னுள் ஊறிப்போயிருப்பதால்
ஊதிப்போயிருக்கிறேன் நான்.        

4. வேதியியல்

தொடைக்குமேல் ஏறியிருக்கும்
டஃபேட்டா உடைபோன்று
அணிந்துகொள்கிறேன்
என் தனிமையுணர்வை
உனக்கு நான் வேண்டும் வேண்டும்
என்ற உணர்வை
இப்போது உன்னால் தவிர்க்கவே இயலாது.
ஒரு கவிதை எழுதுவதற்காக
எப்படி நான் உனது இதயத்தை நொறுக்குகிறேன்
இது என்ன கொடூரம் என்று நினைக்கிறாய் நீ.
நானோ அதுவொரு ரசவாதம் என்று
நினைக்கிறேன்.

- கவிதைகளின் மொழிபெயர்ப்பு: ஆசை

(இந்து தமிழ் நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் சில ஆண்டுகளுக்கு இவற்றுள் ஒரே ஒரு கவிதையின்  மொழிபெயர்ப்பு மட்டும் வெளியானது.)

No comments:

Post a Comment