Wednesday, November 20, 2013

பழங்குடிகளின் ஒலிம்பிக்ஸ்


(‘தி இந்து’, தலையங்கம், 19.11.13)

அடுத்த உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டி 2014-ம் ஆண்டும், ஒலிம்பிக் போட்டிகள் 2016-ம் ஆண்டும் பிரேசிலில் நடக்க இருக்கின்றன. ஆனால், அந்தப் போட்டிகளுக்கு முன்னதாக, அவற்றைவிட முக்கியமான விளையாட்டுப் போட்டிகள் பிரேசிலில் நடந்துமுடிந்திருக்கின்றன - பழங்குடிகளின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள். பிரேசிலின் 48 பழங்குடியினங்களைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்டோர்; கூடவே, பிற நாடுகளின் பழங்குடி இன மக்களும்; இவர்கள்தான் பங்கேற்பாளர்கள்.

விளம்பர நிறுவனங்களின் இலச்சினை பொறித்த தொப்பி, சீருடை போன்றவை எதுவுமில்லை. ஒவ்வொருவரும் அவரவர் இனத்துக்கே உரித்தான தனித்துவமான உடையுடனும் பாரம்பரிய அலங்காரத்துடனும் உடலில் தங்கள் குலக் குறிகளுடனும்தான் இந்தப் போட்டிகளில் கலந்துகொண்டனர். ‘எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நடைமுறைகளையெல்லாம் விட்டுவிட்டு, எல்லாரையும் போல மேற்கத்திய நடைமுறைகளைப் பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். இங்கிருந்து போன பிறகு, பாரம்பரிய வழக்கங்களை நானும் பின்பற்றுவேன், மற்றவர்களையும் பின்பற்றச் சொல்வேன்’ என்று ஒரு பங்கேற்பாளர் தெரிவித்திருக்கிறார்.
பழங்குடிகளின் விளையாட்டுகளில் வெற்றி - தோல்விகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. இவை விளையாட்டுகள் தானே தவிர, போட்டிகள் அல்ல’ என்கிறார்கள் ஒருங்கிணைப்பாளர்கள். அதை நிரூபிக்கும் வகையில், அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் பரிசுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. மரத்தில் செதுக்கப்பட்ட பதக்கங்கள், விதைகள் போன்ற இயற்கையான பொருட்கள்தான் அந்தப் பரிசுகள். 12-வது முறையாக நடைபெறும் இந்த விளையாட்டு நிகழ்வின் கருப்பொருள் - உணவுப் பாதுகாப்பு. ஒவ்வொரு இனமும் தங்களுக்கே உரித்தான உணவுப் பொருட்களைக் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கவும், பிற இனங்களிடமிருந்து உணவு தானியங்களை வாங்கிச் செல்லவும் அங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுற்றுச்சூழல், பண்பாடு போன்றவற்றின் பாதுகாவலர்கள் என்ற அடையாளத்தைப் பெறுவதற்கு உலக நாடுகளும் உலகத் தலைவர்களும் போட்டிபோட்டுக்கொண்டிருக்கிறார்கள். பழங்குடிகள்தான் சுற்றுச்சூழல், பண்பாடு போன்றவற்றின் உண்மையான காவலர்கள். ஆனால், பொதுச்சமூகமானது இந்த உண்மையை வசதியாக மறந்து விட்டு, பழங்குடிகளின் வாழ்வாதாரங்களையும் பண்பாடு, மொழி போன்றவற்றையும் அவர்களிடமிருந்து பறித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அரசியல், விளையாட்டு போன்ற பெரும் நீரோட்டங்களில் பழங்குடிகளின் பங்கேற்பு அவசியமாகிறது. இந்தியாவில் நியமகிரி டோங்க்ரியா-கோண்ட் மக்கள் நடத்திய அரசியல் போராட்டமும், பிரேசிலில் நடந்து முடிந்த விளையாட்டுப் போட்டிகளும் இந்தப் பாதையில் முக்கியமான முன்னெடுப்புகள்.
பொதுச்சமூகத்தில் பழங்குடிகளை இணைப்பது என்பது மிகவும் சிக்கலான விஷயம். அவர்களின் அடையாளங்களை அழித்துவிட்டு தான் இதுவரை இந்த இணைப்பு நடந்திருக்கிறது. ஆனால், அவர்களின் அடையாளங்களை அழிக்காமல், அவர்களின் வாழ்வில் எதிர்மறைக் குறுக்கீடுகள் எதுவும் செய்யாமல் அவர்களின் இருப்பை அங்கீகரிக்கும் வகையில்தான் அந்த இணைப்பு இருக்க வேண்டும். பழங்குடி இனத்தைச் சேர்ந்த திறமையான வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைக்குமென்றால் நல்லதுதான். ஆனால், அதைவிட முக்கியம், பழங்குடியின விளையாட்டுகளை கிரிக்கெட் அளவுக்கு நாம் மதித்து, அவற்றுக்கு உரிய கவனம் கொடுக்க வேண்டும்.

                                            நன்றி: தி இந்து
                                             தி இந்து இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க:  பழங்குடிகளின் ஒலிம்பிக்ஸ்

1 comment:

  1. வணக்கம் கவிஞரே வாழ்த்துகள் இந்து இதழில் உங்கள் கட்டுரைகளை வாசிக்கிறேன் அவசியமான உள்ளடக்கம் உள்ள கட்டுரைகளை அழுத்தமாக அதே நேரம் எளிமையாகத் தருகிறீர்கள் .. பழங்குடிகளின் ஒலிம்பிக் புதிய செய்தி.. துவக்க காலங்களில் கிரீசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கூட பரிசுகள் பதக்கங்கள் கிடையாது. ஆலிவ் இலைகளால் ஆன ஒரு கிரீடம் அவ்வளவுதான். ஆனால் அவர்கள் கிரீஸில் எங்கு சென்றாலும் அவர்களை கவுரவப்படுத்த உணவு விடுதிகளில் பணம் வாங்க மாட்டார்களாம் ..இப்பொழுதெல்லாம் மனிதர்களை விட பணமே அதிகம் விளையாடுகிறது.... நிறைய எழுதுங்கள் உங்கள் நடை வசீகரிக்கிறது

    ReplyDelete