ஆசை
(இது முழுக்க முழுக்க கற்பனைக் கதை. அதே போல் மேலே உள்ள படமும் சித்தரிப்பு நோக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. கதைக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இந்தக் கதை தற்செயலாக எதையாவது யாரையாவது நினைவுபடுத்தினால் மன்னிப்பு கோருகிறேன்)
நேத்து நடந்த நேர்காணலப் பத்தியா கேக்கற, அது பெரிய கூத்து மாமா. நான் சின்னப்புள்ளயா இருக்கறப்பலருந்தே வாத்தியாரோட ரசிகன். எனக்குப் பத்து வயசா இருந்தப்ப கணக்குக் கேட்டாருன்னு அவரக் கட்சிய உட்டுத் தூக்குனாங்க. வெவரம் புரியாத அந்த வயசிலேயே எங்கப்பாவோட சேர்ந்துகிட்டு 'குள்ளநரி குருசாமியே கணக்குக் காட்டு கணக்குக் காட்டு'ன்னு கோஷம் போட்டுட்டுப் போனேன். கட்சி உறுப்பினரா முப்பது வருஷத்துக்கு மேல இருக்கன் மாமா, நானும் எவ்வளவோ தலையாலத் தண்ணி குடுச்சுப் பாத்துட்டன், கட்சில நல்ல நல்ல பதவியல்லாம் நம்ம கைல மாட்டாம போயிட்டே இருக்கு.
பாரு மாமா நேத்து வந்த பய இந்த செவலிங்கம், கைல செமத்தியா காசு இருக்கு, ஒரே நாள் ராத்திரியில புண்ணியமூர்த்தியிட்டேருந்து மாவட்டத்தத் தூக்கி இவங்கிட்டக் கொடுத்துட்டாங்க.
அன்னயிலேருந்து இன்ன வரைக்கும் செவலிங்கம் போஸ்டர் அடிச்சு ஒட்டாத நாளு கெடயாது. ஒருநாளு, 'அக்காவோ உன்னால்'னு அடிப்பான், இன்னோரு நாளு 'தமக்கையே உன் காலடியில்'னு அடிப்பான். போஸ்டர்ல வேற எந்த மேட்டரும் இருக்காது. ஒனக்கு விஷயம் தெரியுமா மாமா, பத்துமா லித்தோஸ்க்கு ஒரு தடவ போயிருந்தேன், அங்க சொன்னாங்க, வருஷம் முழுக்க செவலிங்கம் போஸ்டர் அடிச்சுகிட்டே இருக்கணும்னு சொல்லிருக்கானாம், இதுக்கு மட்டும் வருஷத்துக்கு லட்சக் கணக்குல செலவு பண்றானாம். கோடிகோடியா வருது, பண்ணாம என்ன பின்ன. எனக்குப் பதவி கெடச்சிருந்தா நானும்தான் பண்ணியிருப்பன். மேட்டருக்கு வாங்கிறியா. நேத்துக் காலயில பத்து மணிக்கு நேர்காணல் தொடங்குறதா குறிச்சியிருந்தாங்க. அது நடக்குறதுக்கு ஒரு மாசத்துக்கு முந்தியே நான் அப்புளியேசன்லாம் தலம ஆபிஸ்ல மெட்ராஸுக்குப் போயிக் கொடுத்துட்டு வந்தேன். ஒப்புராண ஒப்புராண, கூட்டம்னா கூட்டம் அந்த மாதிரி கூட்டம், அப்புளியேசன் வாங்குற அன்னிக்கு. ஏழெட்டு வரிசயா பிரிச்சு விட்டிருந்தாங்க. பெரிய கொடும என்னன்னா, நான் ஒரு வரிசயில ரெண்டு மணி நேரம் நின்னிருந்தேன். அந்த வரிசயில எனக்கு முன்னாடி நின்ன ஒருத்தனுக்குப் பக்கத்துல அவனோட ஒருத்தன் பேச்சுக் கொடுத்துகிட்டு நின்னுட்டுருந்தான். நேராமாவ நேரமாவ வர்றவங்கல்லாம் அவனுக்குப் பின்னாடி நின்னுநின்னு அதுதான் வரிச மாரி ஆயிட்டுச்சு. நான் என்னவோ வரிசயில எடையில வந்து சொருகிகிட்டு நின்னவன் மாரி ஆயிடுச்சு. நானும் எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன், இங்க வந்து நில்லுங்கய்யா இங்க வந்து நில்லுங்கய்யான்னு. ஆனா வர்றவன்லாம் அவன் பின்னாடியே போயி நிக்க, கடைசியில ஒரே தள்ளுமுள்ளாயிப் போச்சு. எனக்கு முன்னாடி இருந்தவன்ட்ட நான் கேட்டேன், ஏன்யா நான் ஓன் பின்னாடிதான நின்னுட்டுருந்தன்னு, அதுக்கு அந்த ஊர்ல ஒலுத்த கூதிப்பய மவன் நான் பாக்கலன்னுட்டான். நானும் எவ்வளவோ சொல்லிப் பாத்தேன் மாமா, எவனும் கேக்கல. என்னத் தள்ளி வுட்டுட்டாய்ங்க. மறுபடியும் வரிசயிலக் கடசீலப் போயி நின்னன். அப்புளியேசன 12 மணிக்கு வாங்க ஆரம்பிச்சாய்ங்க. நம்ப மாட்ட மாமா, என் அப்புளியேசன அவங்க வாங்கிக்கிட்டப்ப மணி சாய்ங்காலம் நாலு. எடயில நான் சாப்புடக் கூட போவல. கூட ஆள அழச்சிட்டு வந்தவங்க மட்டும் ஆள மாத்தி வுட்டுட்டுப் போயி சாப்புட்டுட்டு வந்தாங்க. எனக்குக் கண்ணக் கொண்ட சுத்திடுச்சு மாமா. சுகர் வேற இருக்கா, கைல சாக்லேட்டு வச்சிருந்தன் அத வாயிலப் போட்டுக்கிட்டேன். திட்டாத மாமா நேத்தய மேட்டருக்கு வாறேன்.
நேர்காணல் பத்து மணிக்கு ஆரம்பிக்கிறதா இருந்துச்சு. சாடா பயலுங்களும் காலயில எட்டு மணிக்கே அங்க வந்துடனுங்கறது மாவட்டத்தோட உத்தரவு. எல்லாம் காலயிலயே வந்துட்டோம். தாயளி மாவட்டம் வழக்கம்போல ஊர் முழுக்க ஒரு சொவரு உடாம 'தமிழ்த் தமக்கையே'ன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டிப்புட்டான். சரிதான் இந்த வருஷமும் அவனுக்குத்தான் மாவட்டம்ன்னு சிரிச்சிகிட்டே போனோம். அக்கா பத்து மணிக்கு வந்துடுவாங்கன்னு மாவட்டம் மைக்ல அனெளன்ஸ் பண்ணிகிட்டிருந்தான். அக்கா வர வரைக்கும் 'புரட்சி அக்காவின் புகழ் பாடுவோம்' குழுவுலருந்து பாட்டுல்லாம் பாடிக்கிட்டிருந்தாங்க. இந்த சனியனுவலல்லாம் எப்பதான் நிப்பாட்டுவாய்ங்களோன்னு இருந்திச்சி. மேட டெக்கரேசன்லாம் மாவட்டம் அசத்திப்புட்டான். வழக்கம்போல அக்காவோட பெரிய படத்தயும் ஓரத்துல சின்னதா வாத்தியாரு கடவாயில வழியிற எச்சிய கர்சீப்பால தொடைக்கிற படத்தயும் வரைஞ்சு வச்சியிருந்தாங்க. கீழ மாவட்ட இலக்கிய அணித் தலைவரோட கவிதை இருந்துச்சு. சும்மா சொல்லக் கூடாது நல்லாதான் எழுதுறான்; '
'தாய் பெற்றாள் எம்மை,
தமிழ் பெற்றாள் உம்மை'
அப்புடின்னு எழுதியிருந்தான். அ.ஸ்.க.மு.கவுல இருக்க வேண்டியவன் இங்க இருக்கான் அப்புடின்னு நெனச்சுக்கிட்டேன். கடசியில அக்கா பதினோரு மணிக்கு வந்து சேந்தாங்க, வாசல்லயே அக்காவ மாவட்டம், பொருளாளர் எல்லாம் காலில் விழுந்து வரவேற்றாங்க. அதில என்ன விட்டுன்னா, பொருளாளரு கெழவருக்கு மூட்டுவாதம்போல காலுல விழுந்தவருக்கு எந்திரிக்க முடியல. எந்திரிய்யா எந்திரிய்யான்னு மாவட்டம் மெதுவா சொல்லிப்பாத்தாரு. பொருளாளரு முக்கிக்கிட்டு கெடக்க அக்கா மொகம் கோணிப்போச்சு. அப்பறம் மாவட்டம் புடிச்சுத் தூக்கிவுட்டாரு. அநேகமா பொருளாளருக்கு இன்னக்கி சீட்டு அவ்வளோதான்னு நெனச்சுகிட்டோம். அக்கா உள்ள வரவும் வெளியில ஒரே வேட்டு சத்தமாக் கேட்டுச்சு. பாட்டுப் பாடுற கோஷ்டி மேடைய வுட்டுக் கீழ எறங்கிப் பக்கத்துல நின்னுகிட்டு 'தங்கத் தமிழ் பெற்றெடுத்த சிங்கப் புதல்வியாம் சீரார் திருவாம் எங்கள் புரட்சி அக்காவாம்'ங்ற பாட்ட சத்தமா பாடுனாங்க. அக்கா மூஞ்சில எதயும் காமிக்காம மெதுவா மேடக்கி நடந்து போனாங்க. ரெண்டு பக்கமும் நாங்க எல்லாம் நின்னுட்டே 'புரட்சி அக்கா வாழ்க! தங்கத் தமக்கை வாழ்க! தமிழ்நாடு பெற்றெடுத்த தவப்புதல்வி வாழ்க! தமிழே வாழ்க!'ன்னு ஆளுக்கொன்னா கத்திகிட்டிருந்தோம். எல்லாம் ஆளுக்கொன்னா கத்துனதுனால கடசில என்னா கத்துறோங்கங்கறதே தெரியாத அளவுக்கு வெறும் கூச்சல்தான் இருந்துச்சு. சத்தம் தாங்க முடியாம அக்கா மொகம் சுழிச்சிகிட்டே மேடய நெருங்குனாங்க. என்னா கத்துறோம்ங்கறது புரியலன்னாலும் நாங்க கத்துறத நிறுத்தல. ஏன்னா எவனாச்சும் நீ வாழ்க சொல்லல நான் வாழ்க சொல்லலன்னு போட்டுக்கொடுத்துட்டா என்ன பண்றது. அக்கா மேடயில ஏறப்போனதும் மாவட்டம் ஆளுங்களுட்ட கண்ணக் காட்டுனான். அவங்க மேடயில இருந்த மத்த எல்லா நாற்காலியும் எடுத்துக் கொண்டுபோயி கீழே போட்டாங்க. மேடயில அக்கா மட்டும் ஒக்கார்றதுக்கு நல்லா அரியாசணம் மாதிரி போட்டுருந்தாங்க. அதுக்கு முன்னாடி அக்காவுக்கு பிஸ்லரி தண்ணி எல்லாம் வச்சிருந்தாங்க. ஒரு மைக்கும் இருந்துச்சு. மேடைக்குப் பீச்சாங்கை சைடு, நின்னுட்டுப் பேசுற மாரி மைக்கும் வச்சிருந்தாங்க. அக்கா வந்து நாற்காலியில ஒக்காந்தும்கூட நாங்க கோஷம் போடறத நிறுத்தல. ஒரு நிமிசம் அக்கா பாத்துக்கிட்டு இருந்தாங்க. அப்புறம் கைய அமர்த்துனாங்க. எல்லாம் கொஞ்சம்கொஞ்சமா அடங்குனாங்க. அந்த நேரம் பாத்து நான் இதுதான் சரியான வாய்ப்புன்னு, எல்லா கோஷமும் அடங்குன ஒடனே தனியா 'புரட்சி அக்காவின் புகழ் ஓங்குக!'ன்னு நல்லா சத்தமா கோஷம் போட்டன். அக்கா என் சைடு பாத்தாங்க. என்ன நிச்சயம் பாத்தாங்க, ஏன்னா நான் எம்பிக் குதிச்சு கத்துனேன். ஒடனே மத்த பயலுவளும் ஆரம்பிச்சிட்டாங்க. மறுபடியும் எல்லா கோஷத்தையும் அடக்குறதுக்குள்ள மாவட்டத்துக்குப் போதும்போதும்னு ஆயிடுச்சி. ஒருவழியா கோஷம்ல்லாம் நின்னுடுச்சி. ஆனா நாங்க யாரும் ஒக்காரல. இப்பன்னு இல்ல, எப்பவுமே அக்காவுக்கு முன்னாடி நாங்க யாரும் ஒக்கார மாட்டோம். அக்கா எல்லாரையும் கைய அமத்தி ஒக்காரச் சொன்னாங்க. ஆனா நாங்க யாரும் ஒக்காரல. யாராச்சும் ஒக்காருவாங்க அதுக்கப்பறம் ஒக்காரலாம்னு சுத்திமுத்தியும் பாத்துகிட்டேயிருந்தோம். ஒரு பயலும் ஒக்காரல எல்லாம் யாரு ஒக்காருவாங்க அதுக்கப்புறம் ஒக்காரலாம்னு பாத்துகிட்டுதான் இருந்தோம். மாவட்டம் மைக்ல கத்துனாரு, 'அக்கா இங்க நேர்காணல முடிச்சிட்டு நாகப்பட்டணம் போவனும். அக்கா அயராம இப்புடி சுத்துப்பயணத்துல இருக்குறப்ப. தயவுசெஞ்சு அக்காவின் நேரத்தை வீணாக்காதீர்கள்'னு கேட்டுக்கிட்டான். அப்புறம் அங்க ஒரு ஆளு இங்க ஒரு ஆளுன்னு ஒக்கார ஆரம்பிச்சி எல்லாம் ஒக்காந்துட்டோம்.
மாவட்டம் மைக்ல வரவேற்புரை ஆத்த ஆரம்பிச்சான். 'ஒப்பாரும் எப்பாரும் முப்பாரும் இப்பாரும் இல்லாத எங்கள் புரட்சி அக்காவே! தமிழ்த்தாய் தனக்குப் பிள்ளைப்பேறு இல்லையே என்று காலம் காலமாய்த் தவம்கிடந்து கடைசியாய்ப் பெற்றெடுத்த அரிய பேறாம், தமிழகம் அல்ல இந்தியா அல்ல அகில உலகும் புகழும் தங்கத் தமக்கையாம் பொன்மனக் குமாரியாம், தாய்மை உள்ளம் தூய்மை எண்ணம் கொண்டவராம்' அப்புடின்னு பேசிக்கிட்டுருக்குறப்பவே அக்கா தனக்குப் பக்கத்துல நின்னுட்டு இருந்த உதவியாளருட்ட ஏதோ சொன்னாங்க. அநேகமாக, பேச்ச வளத்த வேண்டாம்னு அக்கா சொல்லியிருப்பாங்க. உதவியாளரு மெதுவாப் போயி மாவட்டத்துகிட்ட ஏதோ சொல்ல அவரும் தலைய ஆட்டிக்கிட்டே பேச்ச விட்ட எடத்துலருந்து ஆரம்பிச்சாரு 'அப்படிப்பட்ட அன்னையும் நமது முன்னறி தெய்வமுமான அக்கா நம் கட்சியைச் சீர்நடத்திச் சென்றிட, தொண்டர்களின் உழைப்பை மதித்து அவர்களுக்கு உரிய மதிப்பையும் சிறப்பையும் பதவியையும் அளித்திட, குருசாமியின் காட்டுமிராண்டித்தனமான சிறுபான்மை அரசை அடுத்த தேர்தலில் வீழ்த்தும் திறன் படைத்த வீறு கொண்ட சிங்கங்களைத் தேர்ந்தெடுத்திட மனம் இசைந்து இங்கு வருகை தந்திருக்கிறார். குருசாமியைப் பெற்றதால் களங்கப்பட்ட இந்தத் திருவாரூர் மாவட்டம் அக்காவின் வருகையால் இன்று புனிதப்பட்டது. அக்கா இனி தனது நேர்காணலைத் துவங்குவார். இறுதிவரை எல்லாரும் அமைதி காக்கவும்'ன்னு சொல்லிட்டுப் போயி அக்காவுக்கு நாலடி தள்ளிப்போயி நின்னுக்கிட்டான். அக்கா பக்கத்துல நிக்குற எல்லாருமே அப்புடித்தான் நாலடி தள்ளிதான் நின்னுக்கிட்டுருந்தாங்க. எனக்கு இதான் ரொம்ப நாளு சந்தேகம், மைனரு மாப்புள்ளகிட்ட கேட்டேன் அவன்தான், 'நம்ம ஆளுங்க சும்மா நிக்க மாட்டானுவப்பா, குசுக்களப் போட்டுக்கிட்டேயிருப்பானுவோ. அது மட்டுமா கட்சியில எல்லாரயும் பாரு. மேலிடத்துல ஆரம்பிச்சு மாவட்டம் வரக்கும் ஒரு பய பக்கத்துலயும் போவ முடியாது. பல்லுகூட ஒழுங்கா வெளக்க மாட்டானுவ போலருக்கு. அதான் அப்புடி நிக்கனும்னு ஆயிருக்கு. அத அக்கா சொன்னாங்களா, இல்ல இவனுவளா நிக்கறானுவளான்னு தெரியல. சட்டசபயில பாத்துருக்கல்ல அக்காவுக்கு நாலடி தள்ளிதான் அடுத்த நாற்காலியே போட்டிருப்பான். அதுலயும் ஒக்காந்துருக்கவன் நல்லா சாஞ்சு ஒக்காந்து நான் பாத்ததே இல்ல, எப்பவும் சீட்டு நுனிலதான் எப்பக் கீழே உளுவானுவளோங்கிற மாதிரி பவ்யமா ஒக்காந்துப்பானுவோ. அக்கா ஆட்சியில இல்லன்னாதான் நல்லா சாஞ்சு நிம்மதியா ஒக்காந்துப்பானுங்க, ஏன்னா அக்காதான் சட்டசபக்கு வரவே வராதுல்ல' அப்புடின்னான். அக்கா மைக்க எடுத்துப் பேச ஆரம்பிச்சிச்சு, நீ என்னாதான் சொல்லு மாமா பாப்பாத்தி பாப்பாத்திதான் மாமா, என்னா கொரலு என்னா மொகம். சினிமாவுல இருந்தப்பகூட இந்தக் கலரு இல்ல மாமா. என்னா காவாளித்தனம் பண்ணாலும் அக்காகிட்ட மொகத்துல அந்தக் கள இருக்குல்ல அது யாருக்கும் வராது மாமா. சொட்டத்தல குருசாமி மூஞ்சப் பாரு எப்பவும் அதுல நரித்தனந்தான் தெரியும். அந்தாளு மூஞ்சி என்னக்காவது சாந்தமா இருந்து பாத்திருக்கியா மாமா. எப்பப்பாரு, ஓடிப்போன பொண்ணோட அப்பன் மாதிரி மூஞ்ச வச்சுக்கிட்டு. சரி சரி நம்ம கதைக்கு வர்றேன். அக்கா பேச ஆரம்பிச்சாங்க, 'கழகக் கண்மணிகளே, கட்சி நிர்வாகிகளே, கட்சி அபிமானிகளே உங்கள் அனைவருக்கும் கட்சியின் சார்பில் நன்றியையும் வணக்கத்தையும் செலுத்திவிட்டு இந்த நேர்காணலை நான் துவக்குகிறேன். இதுவரைக் கட்சியின் மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரிவுகளில் பொறுப்பிலிருந்து செயல்பட்டு வந்தவர்களுக்கும் இனியும் செயல்பட இருப்பவர்களுக்கும் இந்த நேர்காணல் ஒரு பாலமாக இருக்கும். 2012 தேர்தலிலே சிறுபான்மை அ.ஸ்.க.மு.கழக அரசையும் அவரது குடும்ப அரசியலையும் தூக்கி எறிய வேண்டுமானால் அதற்கு மிகுந்த எழுச்சியுடன் நாம் உழைக்க வேண்டும். அதற்காகத்தான் வேறு எந்தக் கட்சியிலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டிலே ஏன் இந்தியாவிலே, இல்லையில்்லை உலகிலேயே முதன்முறையாக இது போன்றதொரு நேர்காணலை நமது கட்சியிலே நாம் நடத்திக் கட்சி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கிறோம். உங்களிலே பலரும் மாவட்டத்தின் பல்வேறு பொறுப்புகளுக்காகப் போட்டியிடுகிறீர்கள். உங்களுடைய தகுதிகளையும் விண்ணப்பங்களையும் கட்சி நிர்வாகிகள் தீர பரிசீலித்து அதன் அடிப்படையில் இப்போது நாம் தேர்ந்தெடுக்க இருக்கிறோம். முதலில் மாவட்டச் செயலாளர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரை அறிவிக்கிறேன். கட்சிக்காகத் தன்னலம் கருதாது இரவுபகல் பாராது உழைத்துக்கொண்டிருக்கும் சிவலிங்கம் அவர்கள் இந்த முறையும் மாவட்டச் செயலாளராக, ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்' அப்புடின்னதும் செவலிங்கத்தோட ஆளுங்க 'அக்கா வாழ்க, புரட்சித் தமக்கை வாழ்க'ன்னு கோஷம் போட ஆரம்பிச்சிட்டாங்க. செவலிங்கம் அக்காட்டப் போயி அவங்க கால்ல உழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கிட்டாரு. அப்பறம் அக்கா மைக்ல பேச ஆரம்பிச்சாங்க. மாவட்டத் செயலாளருக்கப்பறம் பொருளாளர் பதவி. அதயும் கால்ல விழுந்த கெழத்துக்கே ஒருமனதாத் தந்தாங்க. தப்பிச்சிட்டான்டா கெழவன்னு நாங்கல்லாம் பேசிகிட்டோம். பெரும்பாலும் மாவட்ட லெவல் பதவிக்கெல்லாம் போட்டி இருக்காது மாமா. ஊர் லெவல்ல வர்றப்பதான். அதுக்கப்பறம், மன்னார்குடி நகரச் செயலாளருக்கான நேர்காணல். ரெண்டு பேரு எழுந்திருச்சாங்க. சம்முவமும், குலசேகரனும். மொதல்ல சம்முவத்த அக்கா பேசச் சொன்னாங்க. அந்தாளு பேச ஆரம்பிச்சாரு 'அக்கா நான் கச்சியில 45 வருஷமா இருக்கன்'னு ஆரம்பிச்சதும் ஒருத்தன் கத்துனான் 'யோவ் கச்சி ஆரம்பிச்சுி 35 வருஷம்தான் ஆவுது'ன்னு. வேற யாரு குலசேகரன் ஆளாத்தான் இருக்கும். 'மன்னிக்கணும், வாய்தவறிவிட்டது. கச்சியில நான் 35 வருஷமா இருக்கன். அக்கா நீங்க மொத மொதல்ல மொதலமச்சரா நின்னப்ப நான் கோயில்ல நாக்குல அலகு குத்திகிட்டு பால்கொடம் தூக்குனேன். ஒங்கள அராஜக அ.ஸ்.க.மு.க ஆட்சியில அரஸ்டு பண்ணப்போ தீக்குளிக்கப் போயி எல்லாரும் என்னக் காப்பாத்திட்டாங்க. நீங்களே பாருங்க என் ஒடம்புல தீக்காயத்த'ன்னு சட்டுன்னு மேசட்டய கழட்டிக் காட்டிப்புட்டான். இதுக்காவவே உள்ள பனியன் போடாம வந்துருப்பான் போல இருக்கு. பதறிப்போன மாவட்டம் ஆள அனுப்பி அவன சட்டயப் போட வச்சான். அப்பறம் அக்கா அவனுக்கு எதிரா நின்ன குலசேகரனப் பேசச் சொன்னாங்க. அவன் 'என் உயிரிலும் இதயத்திலும் கலந்திட்ட அக்காவை நான் வணங்குகிறேன். சண்முகம் சொன்னதுபோல் அவர் 35 வருஷமெல்லாம் கட்சியில இல்ல. அ.ஸ்.க.மு.கவுல இருந்து ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடிதான் நம்ம கட்சியில சேந்தாரு. அதுவும் எலக்ஷன் நேரத்துல நான் குடுத்த 100 ரூவாய்க்காவ. அதுமட்டுமில்லாம, தீக்காயம் அவரு குடிபோதயில அடுப்புல தடுக்கி விழுந்ததால வந்தது'ன்னு சொன்னதும் சம்முவம் பதறிப்போயி 'அக்கா அந்தாளு சொல்லுறதெல்லாம் பொய்யி. நம்பாதிங்க, நீங்க வேணும்னா யாருட்ட வேணும்னாலும் கேட்டுப்பாருங்க'ன்னு ஒளற ஆரம்பிச்சதும் மாவட்டம் அவர வாய மூடச் சொல்லி சைகை காட்டுனாரு. அம்மா குலசேகரனச் சுத்தி இருக்குற ஆளுங்களப் பாத்து 'இவர் சொல்வதெல்லாம் உண்மையா'ன்னு கேட்டாங்க. வந்தவங்க எல்லாம் குலசேகரன் ஆளுங்க, எல்லாம் குலசேகரன் சொன்னதுதான் உண்மைன்னு கத்த கடசியில அக்கா குலசேகரனயே நகரச் செயலாளராத் தேர்ந்தெடுத்தாங்க. சம்முவம் குலசேகரனப் பாத்துக் கறுவிக்கிட்டே ஒக்காந்தாரு. அடுத்தது நகரப் பொருளாளரு பதவிக்கு நானும் தேவராஜனும் எந்திரிச்சு நின்னோம். அக்கா என்ன மொதல்ல பேசச் சொன்னாங்க. நான் அக்காவப் புகழ்ந்து பேசிட்டு அப்புறம் கட்சிக்காவ நான் பட்ட கஷ்டத்தயெல்லாம் சொன்னேன். அக்கா நடத்தறதா இருந்த இலவசக் கல்யாணம் அக்கா வராமப் போனதால நின்னுபோகவும் அத நாந்தான் நடத்துனேங்கறதயும், அக்காவ அரெஸ்டு பண்ணுனப்ப பஸ்ஸைக் கொளுத்துனதயும், அ.ஸ்.க.மு.க எம்எல்யேவ பாஞ்சு அடிச்சு மண்டய ஒடச்சதயும் சொன்னேன். எல்லாத்துக்கும் ஆதாரமும், அதான் தினத்தந்தி, தினமலர் பேப்பர்ல இங்கருக்கப் பசங்ககிட்ட காசக்கொடுத்தப் போட்டமுல்ல அந்த நியுஸு கட்டிங்கல்லாம் விண்ணப்பத்தோடு வச்சிருந்தத அக்காட்ட சொன்னேன். அக்கா தாங்கிட்ட இருந்த விண்ணப்பத்தப் பொரட்டிப் பாத்தாங்க. பாத்துட்டு அப்புறம் தேவராஜப் பேசச் சொன்னாங்க. அவன் 'அக்கா இந்த ஆளு சொல்றதெல்லாம் பொய்யி. பஸ் டெப்போல வெறும் கூடா நின்னுட்டிருந்த பஸ்ஸோட பாடியத்தான் கொளுத்துனாரு. அதக் காசக் கொடுத்துப் பத்திரிகயில போட்டுகிட்டாரு'ன்னு என்னெ்னமோ சொன்னான். அக்கா யாரு சொன்னது உண்மன்னு கேட்டாங்க. நான் தேவராஜனவிட அதிக ஆளுங்களக் கூட்டிக்கிட்டுப் போயிருந்தன்ல எல்லாம் நான் சொன்னதுதான் உண்மன்னு சொல்லவும் அக்கா என்னயவே நகரப் பொருளாளரு பதவிக்குத் தேர்ந்தெடுத்துட்டாங்க. எனக்குன்னா சந்தோஷம் தாங்க முடியல, நம்ம பசங்க 'அக்காவுக்கு ஜே, அக்காவுக்கு ஜே'ன்னு கத்தி அமர்க்களம் பண்ணிட்டாங்க. அப்பறம் எல்லாப் பதவிக்கும் ஆளுங்கல எடுத்ததும் ஒருவழியா நேர்காணல் முடிஞ்சிச்சு மாமா. அக்கா எறங்கிக் கீழே வந்தப்ப புலிப்பாண்டி நாயி எழுந்திருச்சு, அக்கா ஒரு நிமிஷம்ன்னதும் அக்கா கொஞ்சம் நின்னு என்னங்கறதுமாதிரி அவனப் பாத்தாங்க. 'அக்கா என் பேரு புலிப்பாண்டி, இந்த ராஜமாணிக்கம் சொன்னாருல்ல எம்எல்ஏவப் பாஞ்சு அடிச்சேன்னு. அது பொய்யிக்கா. நாந்தான் புலி மாதிரி பாஞ்சி அடிச்சு அந்தாலு மண்டய ஒடச்சன். அதுனால எல்லாரும் என்னப் புலிப்பாண்டின்னு கூப்புட ஆரம்பிச்சாங்கக்கா. அதுக்காவ நான் செயிலுல்ல ஒரு வருஷம் கெடந்தேங்க்கா'ன்னதும் அவன் கூட இருந்தங்கல்லாம் ஆமாம்ம்மா இவரு சொல்லுவதுதான் உண்மன்னு சத்தம் போடவும் அக்கா செவலிங்கத்தக் கூப்புட்டு புலிப்பாண்டிய நகரப் பொருளாளராப் போடச் சொல்லிட்டாங்க மாமா.
(அழகுசுந்தரம் என்ற புனைபெயரில் நான் எழுதி 2010ஆம் ஆண்டு ‘தமிழ் இன்று’ இணைய இதழில் வெளியான சிறுகதை)
No comments:
Post a Comment