சம்ஸ்காரா திரைப்படத்தில் சினேகலதா
நந்தனா ரெட்டி
(நெருக்கடி நிலை காலத்தில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் சித்திரவதைக்கு ஆளாகி உயிரிழந்த சினேகலதா ரெட்டியின் மகள் நந்தனா ரெட்டி, தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். ‘தி இந்து’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் 05.07.2015 அன்று வெளியான இந்தக் கட்டுரையின் முழு வடிவம் இங்கே. தமிழில்: ஆசை)
சூழலின் அமைதியைக் கிழித்தபடி, திடீரென்று ஒலிக்க ஆரம்பித்தது தொலைபேசி அழைப்பொலி. நான் போய் எடுப்பதற்குள் அது நின்றுவிடக் கூடாது என்று நினைத்துக்கொண்டே மாடிப்படி வழியாகக் கீழே ஓடினேன். உடைந்த குரலில் என் அம்மாவின் குரல் கேட்டது. “என்னை மறுபடியும் இங்கே அழைத்துக்கொண்டுவந்துவிட்டார்கள். என்னைப் பார்க்க வருகிறாயா?” என்று கேட்டார். நான் போய்ச்சேர்வதற்குள் அவரை மறுபடியும் அங்கிருந்து அவர்கள் கொண்டுசென்றுவிடக் கூடாது என்று வேண்டிக்கொண்டே நான் விக்டோரியா மருத்துவமனைக்கு விரைந்தோடினேன்.
இந்தக் காட்சிகள்தான் 40 ஆண்டுகளுக்குப் பிறகும் என்னைத் துரத்துகின்றன. அந்தத் தொலைபேசி ஒலியின் அழைப்பைக் கேட்டு நான் இன்றுவரையிலும் திடுக்கிட்டு, வேர்க்க விறுவிறுக்க விழித்துப்பார்க்கிறேன். நெருக்கடி நிலையின் மடத்தனத்தைப் பற்றிப் புரிந்துகொள்ள இன்னும் முயன்றுகொண்டிருக்கிறேன். என் அம்மாவை அவ்வளவு சீக்கிரம் இழந்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவ்வளவும் இளம் வயதில், அர்த்தமேயில்லாமல். ‘ஏன், ஏன்’ என்று இன்னும்கூட எனக்குள் கேள்விகள் எழுந்துகொண்டிருக்கின்றன. எனக்குள் எழும் கோபத்தை ஆக்கபூர்வமான செயல்களைச் செய்வதன் மூலம் தணித்துக்கொள்ள முயல்கிறேன். அப்படிச் செய்வதன் மூலம் அவருக்கு நான் உயிர் கொடுக்கவோ அவரது கனவுகளை நிறைவேற்றவோ என்னால் முடியும். ஆனால், இந்தப் பணியில் எவ்வளவு மோசமாக நான் தோல்வியடைகிறேன் என்பதை ஒவ்வொரு நாளும் நான் உணர்கிறேன். ‘ஆராதனை நாயக’ பிரதமர் ஒருவர் இருக்கும் இந்த நேரத்தில் பழைய அச்சங்களெல்லாம் மீண்டும் தலைகாட்டுகின்றன.
ஆர்.எம்.ஓவின் அறையில் அமர்ந்தபடி பொதுச் சுகாதாரத்தையும், சிறையில் இருக்கும் பெண் கைதிகள் பராமரிப்பு பற்றியும் என் தாய் சூடாக விவாதித்துக்கொண்டிருப்பதை எப்போதும் நான் காண்கிறேன். அந்த விவாதத்துக்கு நடுவில் அவர் என்னை நோக்கித் திரும்புகிறார். அவருடைய தோரணை கிட்டத்தட்ட ஒரு ராணிக்குரியதுபோல் இருக்கும். ஆனாலும், அவரது அழகிய கண்களில் வலியும் வேதனையும் தென்படும். ஏதும் பேசிக்கொள்ளாமல் நாங்கள் தழுவிக்கொண்டு முத்தமிட்டுக்கொள்கிறோம். ஒரு கணம் அவரை நான் இறுகப் பற்றிக்கொள்கிறேன்; அவரை இறுகப் பற்றிக்கொண்டால் அவர்கள் எங்களைப் பிரிக்க முடியாது என்றே கிட்டத்தட்ட நம்புகிறேன்.
ஆனால், தருணம் நெருங்கிவிட்டது. ‘ஐ லவ் யூ’ என்று சொல்லிக்கொண்டு நாங்கள் அவசர அவசரமாகத் தழுவிக்கொள்கிறோம். அவரைத் திரும்பவும் கூட்டிச் செல்வதற்காக போலீஸார் வந்திருக்கிறார்கள். கால்கள் முடமானதைப் போலவும், நிராதரவானதுபோலவும் ஓர் உணர்வு எனக்கு. போலீஸார் அவரை வேனை நோக்கி நடத்திச் செல்வதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். வேன் கதவுகள் மூடப்படுகின்றன. மிகவும் சிரமப்பட்டுதான் வேனின் வலைஜன்னல்கள் வழியே அவரைப் பார்க்க முடிந்தது. எங்கள் கண்கள் சந்தித்துகொண்டன. பெங்களூரின் வீதிகள் வழியாக மத்தியச் சிறைச்சாலைக்குச் சென்ற அந்த வேனை நான் பின்தொடர்ந்தேன். கோட்டையைப் போன்று இருக்கும் பெரிய கதவுகள் உரத்த உலோக சத்தத்துடன் திறந்துகொள்கின்றன. சுவரின் உட்பக்கத்தில் அந்தக் கதவுகள் மோதும் சத்தம் காதடைக்கும் அளவுக்குக் கேட்கிறது. வேன் உள்ளே செல்கிறது; கையசைப்பதற்காக நான் கைகளை உயர்த்துகிறேன். அவரும் அதே மாதிரி கைகளை உயர்த்துகிறார். கையசைப்பின் பாதித் தருணத்தில் எங்கள் கைகள் உறைந்துபோயிருக்க இறுதியாக ஒரு பெரும் சத்தத்துடன் கதவுகள் மூடிக்கொள்கின்றன. அவரை எனது மனதால் பின்தொடர்ந்துகொண்டிருக்கும் அதே வேளையில் வேறு எதையும் என்னால் பார்க்க முடியவில்லை. அவரது உடலிலும் ஆடைகளிலும் மேற்கொள்ளப்படும் தேடல் சோதனை. சிறையறையை நோக்கிய நீண்ட நடை. சிறையறையின் கதவு வெளிப்படுத்தும் உலோகச் சத்தம். சாவிகள் ஒன்றையொன்று மோதும் சத்தம். வார்டனின் கிறீச்சிடும் சிரிப்பொலி. செயலிழந்து கட்டிலில் உட்கார்ந்திருக்கும் என் அம்மா. என் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுக்கிறது. அவர் மிகவும் அருகில் இருக்கிறார்; எனினும் வெகு தூரத்தில் இருக்கிறார்.
சினேகலதா ரெட்டி- அல்லது எல்லோரும் பிரியமாகக் கூப்பிடும் சினேகா- கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தவர். இரண்டாம் தலைமுறைக் கிறித்தவர்கள். ஆங்கிலேயரையும் அவர்களது ஆதிபத்தியத்தையும் என் தாய் வெறுத்தார். எனவேதான், தனது இந்தியப் பெயருக்கு அவர் திரும்பினார். இந்திய உடைகளையே அணிந்தார். அவரால் மாயஜாலமே நிகழ்த்த முடியும், மேகமூட்டத்தை பிரகாசமான சூரிய ஒளியாகவும் அச்சத்தை சாகசத்தால் ஏற்படும் பரவசமாகவும் மாற்றுபவர் அவர். அவரது குழந்தைப் பருவம் பிரச்சினைக்குரிய பருவம் என்பதால் என்னுடைய பதற்றங்களை அவர் நன்றாகப் புரிந்துகொண்டார். அவர் எல்லோரையும் நேசித்தார்; கொடுமையையும் அநீதியையும் வெறுத்தார். சாதி, வர்க்கம் போன்றவற்றையெல்லாம் அவர் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. தேச எல்லைகள் போன்ற வரையறைகள், பாகுபாடுகளெல்லாம் அவருக்குக் கிடையாது. மனிதர்களை மதிக்கவும் அறிவையும் அனுபவத்தையும் பொக்கிஷமெனப் போற்றவும் அவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். பெண்ணியவாதியான அவர் பெண்-ஆண் சமத்துவத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தவர். மரபின் போர்வையில் பெண்களை மோசமாக நடத்திக்கொண்டிருந்த ஆண்களை அவர் வெறுத்தார்.
எனது பெற்றோர் சோஷலிஸ்டுகள்; லோஹியாவால் பெரும் தாக்கம் பெற்றவர்கள்; அவர்களது செயல்பாடுகளும் சித்தாந்தமும் அவர்களது வாழ்க்கையிலும் ஊடுருவியிருந்தது. அன்பையும் மதிப்பையும் அடிப்படையாகக் கொண்ட உறவு அவர்களுடையது. உத்வேகமும் நட்புணர்வும் மிக்கவர் எனது தாய்; எனது தந்தையோ அமைதியானவர், தர்க்க அடிப்படையில் பேசுபவர், சாந்தமான புரட்சியாளர். என் தாயின் ஜோதியைப் பாதுகாத்த விளக்குக் கூண்டு அவர்.
என் தாயின் மிகக் குறைவான உடைமைகளிலிருந்து ஒரு குறிப்பேட்டை நாங்கள் கண்டெடுத்தோம். அதில் பெங்களூர் மத்தியச் சிறையைப் பற்றி அவர் எழுதியிருந்தார். “ஒரு பெண் உள்ளே நுழைந்தவுடன் எல்லோருக்கும் முன்னால் அவர் நிர்வாணமாக்கப்படுவார். ஒரு மனிதர், அவர் ஆணாக இருக்கலாம் பெண்ணாக இருக்கலாம், அவருக்கு அளிக்கப்படும் தண்டனை மூலமாக அவர் போதுமான அளவு ஏற்கெனவே தண்டிக்கப்படுகிறார். மனித உடலும் இந்த அளவுக்கு அவமதிக்கப்பட வேண்டுமா? இந்த வக்கிரமான நடைமுறைகளுக்கெல்லாம் யார் பொறுப்பு? அறிவார்ந்த சிறைக்கண்காணிப்பாளர்கள், சிறைக்கான ஐ.ஜிகள் போன்றோரெல்லாம் இந்தச் சூழல்களை மேம்படுத்த வேண்டாமா? ஒவ்வொரு மனித உயிரும் இந்த உலகில் பிறப்பெடுப்பதன் நோக்கம் என்ன? உன்னத நிலையை நோக்கி மனித குலத்தைச் சற்று உயர்த்திவிடுவது மனிதப் பிறப்பின் நோக்கம் இல்லையா? மனிதர்கள் எந்த வாழ்க்கை முறையை, எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களது நோக்கம் என்பது தங்களால் முடிந்த அளவுக்கு மனித உணர்வுகள், சிந்தனைகளின் தரத்தை உயர்த்துவதுதான்.”
ஜூன் 9, 1976-ல் அவர் இப்படி எழுதியிருக்கிறார்; “இங்கே என்னால் முடிந்த அளவுக்குக் கொஞ்சம் செய்ய முடிந்திருக்கிறது. பெண் கைதிகளை மூர்க்கமாக அடிப்பதை நான் தடுத்து நிறுத்தியிருக்கிறேன். அவர்களுக்கு வழங்கப்படும் சாப்பாட்டின் தரத்திலும் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும் தண்ணீர்ப் பிரச்சினைதான் மோசம். இருப்பினும், குழாய்கள் இணைப்பு மேற்கொள்ளப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார்கள் என்பது சற்றே நிம்மதி அளிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, அவர்களிடமுள்ள அச்சத்தை அகற்றுவதில் கொஞ்சம் வெற்றி பெற்றிருக்கிறேன். சாப்பாடு விஷயத்தில் நான் பட்டினிப் போராட்டம் மேற்கொண்ட பிறகு கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.”
1971-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றிக்குப் பிறகு இந்திரா காந்தி புகழ் உச்சியில் இருந்தார். எனினும், பணவீக்கம், பொருளாதார ஸ்திரமின்மை, ஊழல், வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் சீரழிவு போன்றவற்றை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களால் 1973 வாக்கில் வட இந்தியாவே குலுங்கியது. ஜூன் 1975-ல், அலகாபாத் உயர் நீதிமன்றம் முந்தைய தேர்தலின்போது இந்திரா காந்தி முறைகேடான வழிகளை மேற்கொண்டிருந்ததைக் கண்டறிந்தது. இந்திரா காந்தி ராஜிநாமா செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் கூக்குரல் எழுந்தது. அந்தச் சூழலில், ஜூன் 26, 1975-ல் நெருக்கடி நிலையை இந்திரா காந்தி பிரகடனப்படுத்தினார்.
தலைமறைவு இயக்கத்தைத் தொடங்கலாம் என்று ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் கூறினார். அந்த இயக்கம் அகிம்சை வழியில் இயங்க வேண்டும் என்று என் தாயும், தேவைப்பட்டால் வன்முறையை மேற்கொள்ளலாம் என்று ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸும் வாதிட்டனர். நானும் சேர்ந்துகொள்ள முன்வந்தேன். எனது பாதுகாப்பு குறித்த அச்சம் இருந்தாலும் தயக்கத்துடன் என் தாய் ஒப்புக்கொண்டார். எனது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு இணங்க நான் எனது அரசியல் கடமைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை அவர் புரிந்துகொண்டார். அவர் எங்களுக்கு நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறார். நமது அரசியல்சாசனம் வழங்கிய உரிமைகள் நமக்கு மறுக்கப்படும் சூழலில் வெறுமனே நின்றுகொண்டு நாம் வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்க முடியாது.
இவைதான் என் தாய் தனக்கும் நமக்கும் முன்வைத்த கொள்கைகள்.
அவரளவுக்கு அன்பும் அக்கறையும் காட்டும் தாய் வேறு யாரும் இருக்க முடியாது; தெரியாத விஷயங்கள் குறித்து தேடல் நிகழ்த்தவும், தடுமாறி நிற்கும் சூழலிலும் நிதானமாக இருக்கவும், யாரும் முயன்றிராத விஷயங்களை முயன்று பார்க்கும் துணிவு கொள்ளவும், பரிசோதனையிலும் அனுபவத்திலும் விஷயங்களைக் கண்டறியவும், நான் விரும்பிய அறிவைப் பெறுவதற்கும் அவர் எனக்கு ஊக்கம் தந்திருக்கிறார். அதுதான் அவர் எனக்களித்த பரிசு.
மே 1, 1976-ல் என் தாய் இப்படி எழுதினார்: “ஆன்மாவின் உண்மையான கும்மிருட்டு சூழ்ந்த இரவில், ஒவ்வொரு நாளும் எப்போதும் காலை மூன்று மணியாகத்தான் இருக்கிறது.”
நடுங்கும் வியர்வையில் கண்விழித்துப் பார்க்கிறேன். அதிகாலை மூன்று மணி. கனவு கலைந்துவிடக் கூடாது என்பதற்காகக் கண்களை மூடியே வைத்திருக்கிறேன்.
சிறைக் கதவுகள் சாத்தப்படும் சத்தம், அதனுள்ளே மறையும் போலீஸ் வேன், கையசைப்பின் நடுவே உறைந்துபோன அவரது கை. இது இங்கேயே முடிந்துவிட நான் விட மாட்டேன். அவரை என்னுடனே வைத்துக்கொள்கிறேன். நாங்கள் இப்போது கடற்கரையில் உட்கார்ந்திருக்கிறோம்; அற்புதமான சூர்யாஸ்தமனத்தைப் பார்த்தபடி, கைகளால் ஒருவரையொருவர் அரவணைத்தபடி உட்கார்ந்திருக்கிறோம். அவர் நிம்மதியாகவும் அமைதியாகவும் இருக்கிறார். நான் பாதுகாப்பாக இருக்கிறேன். எனது கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டேன்.
ஆனால், இப்போது நாங்கள் அதே நிகழ்வின் மறு அரங்கேற்றத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்- நீண்டுகொண்டே வந்து நம்மையும் நமது அரசியல் சாசன உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் விழுங்கிவிடுவதுபோல் அச்சுறுத்தும் கரு நிழலொன்று.
இந்த முறை இது இன்னும் பூடகமாகவும் சாமர்த்தியமாகவும், ஆனால் பட்டவர்த்தனமாக அதே எதேச்சாதிகாரத்துடனும் திரும்பிவந்திருக்கிறது. ஆனால், நான் என் பெற்றோருடன் செய்துகொண்ட ஒப்பந்தம், வெறுமனே நின்றுகொண்டு வேடிக்கைபார்க்க என்னை அனுமதிக்காது. என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கொண்டு நான் போரிடுவேன்.
-நந்தனா ரெட்டி, மக்கள் உரிமைச் செயல்பாட்டாளர்
நன்றி: ‘தி இந்து’
‘தி இந்து’ நாளிதழின் இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: ஒரு மகளின் நினைவுகூரல்
No comments:
Post a Comment