Saturday, July 11, 2015

இதயத்தால் பார்ப்பது எப்படி?


ஆசை

(‘தி இந்து’ நாளிதழின் ‘உயிர்மூச்சு’ இணைப்பிதழில் 11-07-2015 அன்று வெளியான வெளியான கட்டுரை)

பறவைகளைப் பார்ப்பது என்பது பொழுதுபோக்காக, தொழிலாக, கலையாக இன்றைக்கு உருவாகி யிருக்கிறது. எல்லாவற்றையும் மீறிபறவை பார்த்தல்’ (Bird watching) என்பது அடிப்படையில் இயற்கையோடு நமக்கு இருக்கும் தொடர்பின் பொறியைத் தூண்டிவிடுவதுதான்; இயற்கை வேறு, நாம் வேறு அல்ல என்ற பேருணர்வு நமக்குள் இயல்பாகவே தோன்ற அனுமதிப்பதுதான். ‘பறவை பார்த்தல்மூலமாக அப்படிப்பட்ட உணர்வைப் பெற்றிருப்பவர்தான் உருகுவேயைச் சேர்ந்த ஹுவான் பாப்லோ குலாஸோ. அவர் பார்வையற்றவர் என்பதுதான் இதில் விசேஷம்.

பார்வையற்றவர் எப்படிப் பறவை பார்த்தலில் ஈடுபடுகிறார், முரணாக இருக்கிறதே என்ற கேள்விகள் நம்முள் எழலாம். பார்ப்பதற்கு ஒவ்வொருவரும் எந்தப் புலனைப் பயன்படுத்துகிறார் என்பதைப் பொறுத்து இருக்கிறது இந்தக் கேள்விகளுக்கான தெளிவு. ஹுவான் காதுகளால் பார்க்கிறார்!

இன்னும் சொல்லப்போனால் இதயத்தால் பார்க்கிறார். காதுகளும் இதயமும் மிகத் தெளிவாகப் பார்க்கக்கூடியவை, தேவையானவற்றை மட்டும் பார்க்கக்கூடியவை. அதனால், பார்வையுள்ளவர்களைவிட பறவை பார்த்தலில் வல்லவர் ஹுவான் என்றுகூட சொல்லலாம். ஹுவானின் பறவை பார்த்தல் சாகசத்தைப் பின்தொடர்ந்து, அற்புதமான வீடியோ பதிவொன்றை பி.பி.சி. உருவாக்கியிருக்கிறது.


இயற்கை ஒலிகள்

ஹுவானுக்குப் பிறப்பிலிருந்தே பார்வை கிடையாது. அவரது பறவை பார்த்தல் பயணத்தைத் தொடங்கிவைத்தது, அவருடைய தந்தைதான். ஹுவான் சிறுவனாக இருந்தபோது பியானோவில் பறவைகளின் சப்தங்களை, அவரது தந்தை இசைத்துக்காட்டுவார். அருங்காட்சியகத்துக்கு அழைத்துச்சென்று பறவைகளின் இறகுகளைத் தொடச் செய்வார்.

அவருக்கு 12 வயதானபோது இயற்கையின் ஒலிகளைப் பதிவுசெய்வதில் ஈடுபட ஆரம்பித்தார். ஹுவானுக்கு 16 வயது ஆனபோது டாக்டர் சாந்தியாகோ என்பவர் ஒலிப்பதிவு கருவியொன்றைக் கொடுத்து, எப்படிப் பதிவு செய்வது என்பதை ஹுவானுக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். ஒலிகளின் உலகத்தில் அவருடைய பயணம் மேலும் வேகமெடுக்க ஆரம்பித்தது.

இயற்கையின் ஒலிகளைப் பதிவு செய்ய ஆரம்பித்தபோது ஹுவானுக்கு, அது ஒரு புது விஷயம் போலவே தோன்றவில்லை. தான் பிறந்ததிலிருந்து செய்துகொண்டிருந்த ஒரு வேலையைப் போலத்தான் அவருக்கு அது தோன்றியது. ஆமாம், அவரது காதுகள் அந்த வேலையைத்தானே அவ்வளவு காலம் செய்துகொண்டிருந்தன.

காதெனும் பதிவுக் கருவி

தற்போது 29 வயது ஆகும் ஹுவான் இன்றைக்குத் தென்னமெரிக்கக் கண்டத்தின் மிகச் சிறந்தபறவை பார்த்தல்வல்லுநர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். அசாதாரணமான மூளைத்திறன் கொண்டவர்களுக்கிடையே 2014-ல் தென்னமெரிக்கக் கண்டம் முழுவதும் நடத்தப்பட்ட போட்டியில் ஹுவான் வெற்றிபெற்றிருக்கிறார். அந்த அளவுக்கு பறவைகளின், இயற்கையின் ஒலிகளெல்லாம் அவரது மூளையின் ஒவ்வொரு இடுக்குகளிலும் நிரம்பிவழிகின்றன.

சாதனங்கள் நமக்குப் பக்கத் துணையாக இருக்க வேண்டுமே தவிர, அவற்றுக்கே முழுவதும் அடிமையாகிவிடக் கூடாது என்பதில் தெளிவுள்ளவராக இருக்கிறார் ஹுவான். ஒலிப்பதிவுக் கருவியைஆன்செய்துவிட்டு, கிடைப்பதை எல்லாம் அவர் பதிவுசெய்துகொண்டே வருவதில்லை. அவரது முழுமுதல் சாதனம், அவருடைய காதுதான். பறவைகளின் ஒலியை தன் காதுகளில் முதலில் அவர் பதிவுசெய்துகொள்வார்; ஒலி வரும் திசையை உன்னிப்பாகக் கவனித்துவிட்டு, அதற்குப் பிறகே தனது கருவியை அவர்ஆன்செய்கிறார்.


ஹுவானின் தற்போதைய கதையில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். அந்தக் கதாபாத்திரம் வேறு யாருமல்ல அவரது செல்ல நாயும் வழிகாட்டியுமான ரானியாதான். "ரானியாதான் எனது கண். இதைவிட அழகான விஷயம் ஏதுமில்லை. ரானியா மிகவும் உறுதியான ஆளுமை கொண்டவள். சமீபகாலமாக அவளுடன் ஒரே தமாஷ்தான். சில சமயங்களில் பதற்றத்துடன் அவள் காணப்படுவாள்" என்கிறார் ஹுவான்.

பறவைகளும் வண்ணங்களும்

பறவைகளின் சப்தங்கள் குறித்து ஆரம்பத்தில் அவருக்கு இருந்த எண்ணங்களே வேறு. அது குறித்து ஹுவான் சொல்கிறார், "வண்ணமிகு பறவைகளும் எடுப்பான சிறகமைப்பு கொண்ட பறவைகளும்தான் மற்ற பறவைகளைவிட அழகாகப் பாடும் என்றே, எனது மனக்கண்ணில் சித்திரம் பதிவாகியிருந்தது. அதற்குப் பிறகு, இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்துக்குச் சென்றிருந்தேன்.

அங்கே இருந்த பறவைகளைத் தொட்டுப்பார்த்தேன். அவற்றின் வண்ணங்களைப் பற்றி, எனது நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள். அவர்கள் சொன்னது என் கண்ணோட்டத்தை தலைகீழாக மாற்றியது. எடுப்பான நிறங்கள் இல்லாத, கவர்ச்சியற்ற பறவைகள்தான் மிகவும் இனிய பாடல்களைப் பாடுகின்றன என்பதை அப்போது உணர்ந்தேன்."

புதுவித ஓசைகள்

பறவைகளின் ஒலிகளை மட்டுமல்ல, இயற்கையின் எந்த ஒலியையும் நேசிப்பவர் ஹுவான். மழைக்காடுகளின் மழை, இடி போன்றவற்றின் ஒலிகளையும் அவர் பதிவுசெய்கிறார். அதுபோன்ற இடங்களின் அடையாளங்களே, அந்த ஓசைகள்தான் என்கிறார் ஹுவான்.

ஹுவானுக்கு மிகவும் பிடித்தமான பொழுது இரவுப் பொழுது. நட்சத்திரங்களின் அமைதி உரத்து ஒலிக்கும் இரவுப் பொழுதில்தானே, எல்லா சத்தங்களும் அவற்றுக்கே உரிய தனித்துவத்துடன் துல்லியமாகக் கேட்கின்றன. ஒவ்வொரு ஓசைக்கும் ஓர் இடம் உண்டு. ஒவ்வொரு ஓசைக்கும் இடைவெளி உண்டு. ஓசையே இல்லாத நேரங்களும்கூட உண்டு. அதுவும்கூட ஒரு ஓசையைப் போலக் கேட்பதுதான், இரவின் அழகு.

இரவின் காவலாளியாக இருக்கும் ஆந்தையின் அழைப்பு அவருக்கு ரொம்பப் பிடிக்கும். "இரவு வந்தால் எனக்கு இன்னும் நிம்மதியாக இருக்கும். இரவின் முழு அர்த்தத்தை எனக்குச் சுருக்கமாகச் சொல்வதுமா--லூவா’ (நிலவுத் தாய் என்று அர்த்தம்) என்ற சத்தம்தான். அது ஒரு ஆந்தை எழுப்பும் ஒலி. மிகவும் தனித்துவமான ஓசை அது. மிகவும் ஆழமான, இனிமையான ஒலி" என்கிறார் ஹுவான்.

உள்ளொளி

புற-அக சப்தங்களைக் குறைத்துக்கொண்டு இயற்கையின் சப்தங்களுக்கு நம் காதுகளைத் திறந்துவைத்துப் பொறுமையாகக் காத்திருப்பதும்கூட ஒரு தியானம்தான். அதுபோன்ற நீடித்த தியானத்தில் இருப்பதுதான் ஹுவானின் வாழ்க்கை. இதனால் அவருடையபறவை பார்த்தல்செயல்பாடு, ஆழமான தத்துவார்த்த நிலையை எட்டுகிறது.

ஒலிகள் கண்ணுக்குத் தெரியாதவை என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாத ஒலிகளைக் கண்ணுக்குத் தெரியவைப்பதுதான் தன்னுடைய வேலை என்கிறார் அவர். அவரைப் பொறுத்தவரை, "கேட்பதற்கான திறன் எல்லோருக்குள்ளும் உறைந்து கிடக்கிறதுஎன்ன ஒரே விஷயம், பெரும்பாலோரிடம் அந்தத் திறன் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறது."





பார்வையின்றியேபறவை பார்ப்போர்

பார்வையற்ற ஹுவான் பறவை பார்த்தலில் ஈடுபடுகிறார் என்ற செய்தி உங்களுக்கு வியப்பை ஏற்படுத்துகிறது என்றால், டோனா போஸாண்ட்டைப் பார்த்தால் என்ன சொல்வீர்கள்?! ஆம், பார்வையற்றவரான டோனா போஸாண்ட் பறவை பார்த்தலுக்கான வழிகாட்டி யாகவே இருக்கிறார்.

பார்வையற்றோருக்கான எல்லையற்ற வாய்ப்புகள்என்ற அமைப்பின் களச்சேவை இயக்குநராக இருக்கும் டோனா, பார்வையற்றோருக்குப் பறவை பார்த்தலில் பயிற்சியளித்து அவர்களை வழிநடத்திச் செல்கிறார். இது குறித்து அமெரிக்க ஊடகமான சி.பி.எஸ்.ஸில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு செய்தியும் வீடியோவும் வெளியாகின.



பறவைகளின் குரல்

டோனாவின் தலைமையில் பறவை பார்ப்பதற்குச் செல்லும் முன் ஒவ்வொருவரும் பறவைகளின் ஒலிகளை மனப்பாடம் செய்துகொள்கிறார்கள். அவர்கள் மனப்பாடம் செய்துகொள்ளும் விதமே அலாதியானது. நம் ஊரில் மழைக் காலத்தில் தவளைகள் இடும் சத்தத்தை ஒலிபெயர்த்துகடன்குடு கடன்குடுதர்….றேன், தர்றேன்என்று சிறுவர்கள் பாடுவதுண்டு. அதேபோல், ஒவ்வொரு பறவையின் ஒலியையும் எளிதில் மனப்பாடம் செய்துகொள்ளவும், அவற்றை அடையாளம் காண வசதியாக அந்த ஒலிகளுக்குப் பொருத்தமான ஒரு சொல்லையோ, பாடலையோ அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். இவர்களில் பலரும் பறவைகளின் குரலை அப்படியே நகலெடுத்து எழுப்பக்கூடியவர்கள்.

டோனா முன்னே செல்ல இவர்கள் எல்லோரும் அவரைப் பின்தொடர்வார்கள். அவர்களின் காதுகளின்இமைகள்மட்டும் அகலமாகத் திறந்திருக்கும். ‘கொக்கரிஎன்று டோனா குரல் கொடுக்க, அருகில் இருக்கும் மரக்கிளையிலிருந்து ஒரு பறவைகொக்கரிஎன்று பதில் சொல்கிறது. அதுமட்டுமா, ", மரங்கொத்தியின் சத்தம்", "கார்டினல் பறவை இங்கே பாடுகிறது" என்றெல்லாம் ஒருவர் மாற்றி ஒருவர் பரவசத்தில் மெதுவாகக் கத்துகிறார்கள். பறவைகளுக்குத் தொந்தரவு தந்துவிடக் கூடாதல்லவா.

எத்தனை பறவைகள்?

நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் வாழ்க்கையின் இந்தப் பாதை டோனாவுக்குத் துலங்கியது. அதிலிருந்து பறவை பார்ப்பவராக மட்டுமல்லாமல், பறவை பார்ப்பவர்களுக்கு வழிகாட்டியாகவும் அவர் இருந்துவருகிறார்.

சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் எல்லோரும் இந்தச் செயல்பாடுகளில் உற்சாகமாகக் கலந்துகொள்கிறார்கள். ஒரு சிறுவன் சொல்கிறான், "பறவைகளைத் தங்களால் நெருக்கமாகப் பார்க்க முடியும் என்றெல்லாம் பார்வை உள்ளவர்கள் பீற்றிக்கொள்வார்கள். அப்படியென்றால் நாங்கள் இன்னும் விசேஷமானவர்கள், எங்களால் ஒரே நேரத்தில் பல பறவைகளின் சத்தங்களைத் துல்லியமாகக் கேட்க முடியும், மற்றவர்களைவிடவும்."


இந்த வகையான பறவை பார்த்தலுக்குகாதுகளால் பறவை பார்த்தல்என்று பெயர். இதன் மூலமாகப் பார்வையற்றோரின் இதயக் கண்களைத் திறக்க முடியும் என்கிறார் டோனா. பறவை பார்த்தல் என்பதைவிட பார்வையற்றோராகத் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கை நடத்தத் தங்களால் முடியும் என்ற உணர்வை, அவர்களிடத்தில் உறுதிப்படுத்துவதுதான் இதன் நோக்கம் என்கிறார் டோனா. ஒரே நேரத்தில் இயற்கை ஆர்வலர்களையும் தன்னம்பிக்கைப் பேச்சாளர்களையும் ஈர்க்கும் விதத்தில் இருக்கிறதல்லவா டோனாவின் வாழ்க்கை!
 - நன்றி: ‘தி இந்து’
 - ‘தி இந்து’ நாளிதழின் இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: இதயத்தால் பார்ப்பது எப்படி?

No comments:

Post a Comment