Monday, March 4, 2024

மாம்பழத்தின் சுவை - புதிய சிறுகதை



ஆசை

வைக்கோல் லாரியின் மேல் ஏறிப் படுத்துக்கொண்டேன். கொஞ்ச நேரத்தில் சுணை அரிக்க ஆரம்பித்தது. அரிப்பையும் மீறி வைக்கோலின் மெத்து சுகமாகத்தான் இருந்தது. அதைவிட, காலையிலிருந்து விடுபட முயன்றுகொண்டிருக்கும் சூரியனின் கதிர்கள்தான் கொஞ்சம் சிரமம் கொடுத்துக்கொண்டிருந்தன. லாரி போகும் திசையில் படுத்திருப்பதால் சற்றே சாய்வாகத்தான் கண்களின் திசை இருக்கும் என்பதாலும் அது நோக்கும் காட்சியில் பிரதானமாக சூரியன்தான் இருக்கும் என்பதாலும் இந்தச் சிரமம். பிறகு அது கண்ணுக்கு வைக்கோல் மெத்தைபோல் ஆகிவிட்டது. கண்களை இறுக்க மூடி, சற்றே இறுக்கத்தை விடுவித்து ஆனால் மூடிய நிலையிலேயே வைத்திருந்து, பிறகு மெலிதாக மட்டும் திறந்து என்று நிறங்களின் விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தேன். முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு என் நாற்பத்திரண்டாவது வயதில் இந்த விளையாட்டை மீட்டுக்கொண்டேன்.

அது மட்டுமல்ல சிறுவயதில் சர்க்கரை ஆலைக்கு இந்த வழியாகத்தான் கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு டிராக்டர்கள் செல்லும். அப்போது, டிராக்டருக்குப் பின்னே ஓடி, அதிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு கரும்பைப் பிடித்தேறி, ஒரு கட்டுக் கரும்பையே கீழே தள்ளிவிட்டுவிடுவோம். அதெல்லாம் இப்போது உதவியிருக்கிறது. சிறுபிராயமும் பெரும்பிராயமும் ஒன்றுக்கொன்று எப்படியோ உதவிக்கொள்கின்றன. ஆனால் ஒன்று, கீழே இழுத்துப்போட்ட கரும்புக் கட்டில் ஒன்றிரண்டு கரும்பை மட்டும் கடித்துத் தின்போம், இல்லையென்றால் கஷ்டப்பட்டுப் பிழிந்து சாறு குடிப்போம். மற்றதெல்லாம் காய்ந்துபோய் கொஞ்ச நாட்களில் குச்சியாகிவிடும்.

லாரி மெதுவாகத்தான் போய்க்கொண்டிருந்தது. உர ஆலைக்கும் சர்க்கரை ஆலைக்கும் லாரிகளும் டிராக்டர்களும் போகும், ஆற்றையொட்டிய பைபாஸ் சாலை என்பதால் குண்டும் குழியுமாக இருக்கும். ஒரு இடத்துக் குலுங்கலில் கண்ணில் நிழல்படரக் கண்ணைத் திறந்தேன். மாமரம். காயும் செங்காயும் பழங்களுமாகத் தொங்கின. லாரியின் மேற்கூரையை இடித்தும் சில பழங்கள் என் மேல் விழுந்தன. படுத்தபடியே கைநீட்டிச் செங்காயாகவும் பழமாகவும் சிலவற்றைப் பறித்துக்கொண்டேன். இருந்த இடத்துக்கே வருகிறதே, இதுவல்லவோ சொர்க்கம். அந்த இடத்தில் லாரியல்ல, காலம் மிக மெதுவாகச் சென்றுகொண்டிருப்பதை உணர முடிந்தது. என் பிள்ளைகள் விரும்பிச் சாப்பிடும் நீல மாம்பழம். இப்போதெல்லாம் அதிகம் கிடைப்பதில்லை. இந்த மாம்பழங்களையும் இனி அவர்களிடம் கொண்டுசேர்க்க முடியாது. நான்தான் அடுத்து உணவு கிடைக்கும் வரை வைத்துச் சாப்பிட வேண்டும்.

அம்மாவை நினைத்து அழுகையாகத்தான் வருகிறது. எழுவத்தைந்து வயதில் கடைப்படாத காலத்தில் இந்தப் பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டு கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார். என் பிள்ளைகளின் அம்மா அவர்களுடன் இல்லை. உயிருடன் இருக்கிறாள். எங்கே இருக்கிறாள் என்று தெரியவில்லை. அவள் வாழ்க்கையில் ஒரு நாள் அவளுக்கு ஒரு தெரிவு வந்தது. இந்தக் கணவன், இந்தப் பிள்ளைகள் என் வாழ்க்கையில்லை என்று முடிவெடுத்தாள். சென்றும் விட்டாள். ஆரம்பத்தில் என்னால் அந்த முடிவைத் தாங்க முடியவில்லை. துடிதுடித்துப்போனேன். பிறகு அவள் முடிவை மதிக்க ஆரம்பித்தேன். அவள் மீது பொறாமை கொள்ளவும் ஆரம்பித்தேன். எல்லோருடைய வாழ்க்கையும் வேறு வேறுதான். எல்லோரும் தங்கள் கணவன், மனைவி, பிள்ளைகள், குடும்பத்துக்கு ஆயுளுக்கும் கட்டுப்பட்டவர்கள் இல்லைதான். ஆனால், அதை உணர்வதற்கும் விடுபட முடிவதற்கும் இடையிலான பெருந்தவிப்பில் புத்தியே பேதலித்துவிடும்போல் இருக்கிறது. அதனால்தான் சட்டென்று இந்த லாரியில் ஏறிவிட்டேன். அம்மா இருக்கும் வரை பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வாள். அதற்குப் பிறகு யாராவது பார்த்துக்கொள்ளட்டும். நானொன்றும் அப்போதும் பொறுப்பான அப்பாவாக இருந்திருக்கவில்லைதானே. கிளம்பிவிட்டேன்.

காலையில் சாப்பிடாமல் வேறு வந்துவிட்டேன். அணில் கடித்திருந்த ஒரு மாம்பழத்தை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தேன். அதன் சுவை எனக்குச் சிறுவயதில் சொந்த ஊரில் ஆயா வீட்டு மரத்தின் சுவையை நினைவுபடுத்தியது. இந்தப் பழங்களைப் பிள்ளைகள் எப்படிச் சாப்பிடுவார்கள். நான் ஓடிப்போய்விட்டுப் பல ஆண்டுகள் கழித்துத் திரும்பினாலும் அவர்கள் வளராமல் இருந்தால் இந்தப் பழங்களை நான் நீட்டினால் எதையும் பற்றி யோசிக்காமல் என்னைக் கட்டிக்கொண்டு முத்தமிட்டு வாங்கிக்கொள்வார்கள்.

திரும்புவதில் எனக்கு இஷ்டமில்லை. ஆனால், இந்த மாம்பழத்தை, இந்த மாம்பழத்தின் சுவையை அவர்களிடம் எப்படிக் கொண்டுபோய்ச் சேர்ப்பது? நம் உடலின் ஒவ்வொரு புலனும் நம் பிணைப்புகளுக்கான நினைவுதானா? இவ்வளவு அலைக்கழிப்பில் என்னால் இன்னும் ஒரு பத்து கிலோ மீட்டர் கூட ஓடிப்போக முடியாது. இப்போது வீட்டிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர்தான் வந்திருப்பேன். ஒன்றரை கிலோ மீட்டர் ஓடிப்போனவனை யாரும் நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். லாரியிலிருந்து நலுங்காமல் குதித்துவிட்டேன். இப்போது முட்டியில் சற்றே அடிபட்டுவிட்டது.

காலை இயல்பாக்கிக்கொண்டு திரும்பி லாரிக்கு நன்றி சொல்லிவிட்டு நடந்தேன். என் வலது பக்கம் ஆறு. இடது பக்கம் வரிசையாகக் குடிசை வீடுகள். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் அதிகபட்சமாக ஐந்துபேர் கால் நீட்டி நெருக்கிக்கொண்டு படுக்கலாம். இரண்டு பேர் மட்டுமே படுக்கக்கூடிய வீடுகளும் உண்டு. இந்த வரிசையின் இன்னொரு முனையில் என் வீடு. இவற்றைவிட மூன்று நான்கு மடங்கு பெரிதாக இருக்கலாம். இந்த வரிசையில் முதன்முதலில் மின்சாரம், டேப்ரெக்கார்டர், டிவி, டிவிஎஸ்-50 போன்றவற்றைக் கண்ட வீடு. ஆனால், கழிப்பறையெல்லாம் எங்கள் வீடு உட்பட யார் வீட்டிலும் கிடையாது. ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் ஆற்றங்கரைச் சரிவு, அக்கரைப் பன்றிக் காடு. அவ்வளவுதான்.

சிலர் வீட்டு வாசலில் அடுப்பு மூட்டிச் சமைத்துக்கொண்டிருந்தார்கள். சிலர் வெறுமனே ஒடுக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். நான் கடக்கும்போது அவர்கள் பார்வையிலோ தலையிலோ சிறு சலனம் கூட இல்லை. உண்மையில் நான் கடக்கிறேனா என்ற சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டார்கள். அப்போதுதான் கவனிக்கிறேன் எனக்கு வலது பக்கம் நான்கடி இடைவெளியில் இரண்டடி முன்பாக ஒரு இளம் பெண் நடந்துபோய்க்கொண்டிருந்தாள். ஒரு தோளில் கல்லூரிப் பை போன்று ஒன்று மாட்டியிருந்தாள். இந்த நேரம் கல்லூரி விடும் நேரம் கிடையாதே. ஒருவேளை முதல் பீரியட் முடிந்ததுமே அவளுக்கு வரத் தோன்றி வந்துவிட்டாளோ. கல்லூரியில் வீட்டில் திட்டுவார்களே என்றெல்லாம் கவலைப்படாமல் கிளம்பியிருக்கிறாள். அவளது சுதந்திரத்துக்கு ஒரு காதலன் என்ற காரணம்கூட தேவைப்படவில்லை. ரொம்பப் பொறாமையாக இருக்கிறது.

அவள் முகத்தின் பக்கவாட்டுத் தோற்றமே அவ்வளவு ஆனந்தத்தைத் தருகிறது. வீடு திரும்புதல், வீடு நீங்குதல், வீட்டில் இருத்தல் என்ற வேறு வேறு தோற்றங்கள் ஒரே பொருளில் அந்த முகத்துக்குள் குடியிருக்கின்றன. அவள் கூட இப்போது போகிறாளா வருகிறாளா என்று தெரியவில்லை. மாலையில் தூங்கி விழிக்கும்போது வரும் குழப்பம் போல் இருக்கிறது.

இப்போது அவள் தலை சற்றே திரும்புகிறது. முகம் மட்டுமல்லாமல் ஒரு தலையே வியந்து இப்போதுதான் பார்க்கிறேன். அவள் தலை திரும்பிய திசையில் ஒருவர் சாலையோரமாகக் குளித்துக்கொண்டிருந்தார். பிறந்த மேனியாக. இந்த வரிசையில் பலரும் வாசலில்தான் குளிப்பார்கள். ஆனால், இடுப்பில் துண்டாவது கட்டியிருப்பார்கள். இவர் அப்படியில்லை. இவருக்கு வயது அறுபது இருக்கலாம். ஆனால் கட்டுத்திட்டான, கன்னங்கரேலென்ற உடல். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் கோயிலில் உள்ள ஆளுயர முரட்டுச் சிலையொன்று குளிப்பதுபோல் இருந்தது. வைத்த கண் வாங்காமல் அந்தப் பெண் அவரையே பார்த்து நடக்க, நான் இருவரையும் பார்த்தபடி நடந்தேன். மெதுவாக நடக்க நாங்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆனால் ஒவ்வொன்றும் துலங்குவதற்குப் போதிய அவகாசம் இருந்தது. அப்படித்தான் குளிக்கும் அந்தச் சிலை மனிதர் எந்த வீட்டு வாசல் முன்னும் குளிக்கவில்லை என்பதும் புலனானது. அவர் சிறிய வாளியிலிருந்து ஒரு குவளையால் மொண்டு ஊற்றிக்கொள்வதும் சற்றே வளைந்து நெளிந்து உடலைத் தேய்த்துக்கொள்வதும் ஒரே மாதிரி தொடர்ந்து நடந்தது. இந்த அசையும், குளிக்கும் சிலை இந்த இடத்தில் இவ்வளவு நாள் இருந்து என் பார்வையிலிருந்து எப்படியோ தப்பியிருக்கிறது. ஒரு பெண்ணின் வியப்பு அதனைக் காட்டிக்கொடுத்திருக்கிறது.

அந்தச் சிலை மனிதரைக் கடக்கும்போது அதே கோணத்தில் அவள் பார்வையும் இரண்டு கோணங்களில் என் பார்வையும் திரும்பின. அந்த மனிதரின் முன்னழகு இன்னும் அற்புதம். கறுப்பு ரஸ்தாளி ஒன்று இப்படியும் அப்படியும் ஆடுவதுபோல் அவர் குளிக்கும் அசைவுக்கு ஏற்ப அவர் குறி ஆடியது. அவளுடைய வியப்பு இன்னும் விரிந்தது. அதே இடத்தில் நின்றுவிட்டாள். அந்த மனிதர் எங்கள் யாரையும் பார்க்கவில்லை. குளியலையும் நிறுத்தவில்லை. ஆனால் நான் அங்கேயே நின்றுகொண்டிருக்க முடியாது. அந்த மனிதர் எப்படிச் சிலை மனிதரோ அதுபோல் அவள் ஒரு மோகினிப் பெண்ணாகவும் இருக்கலாம்.

ஐயோ மாம்பழங்களை விட்டுவிட்டு வந்துவிட்டோமே என்று அவளைக் கடந்த பிறகுதான் நினைவு வந்தது. இன்னும் கொஞ்ச தூரத்தில் மாமரம் வந்துவிடும் பறித்துக்கொள்ளலாம் என்று நடந்தேன். குண்டும் குழியுமான அந்த இடமும் வந்துவிட்டது. ஆனால் மாமரத்தைக் காணோம். இதென்ன கொடுமை, அதற்குள் மாமரத்தை வெட்டிவிட்டார்களா? அது இருந்த தடம் கூடக் காணவில்லையே. ஒருவேளை பறக்கும் மாமரமாக, குறிப்பிட்ட நேரம் மட்டும் ஒரு இடத்தில் நின்று செல்லும் மாமரமாக அது இருக்குமோ.

ஐயோ! ஒருபோதும் அந்த மாம்பழத்தின் சுவையை என் பிள்ளைகளுக்குச் சேர்க்க முடியாதே!    
** 
"அப்பாஸ் கியாரோஸ்தமியின் ‘டேஸ்ட் ஆஃப் செர்ரி’ திரைப்படத்துக்கு”

No comments:

Post a Comment