Wednesday, March 13, 2024

பச்சையின் ஆயிரம் வண்ணங்கள் - புதிய சிறுகதை


ஆசை

1. உலகம் கறுப்பு வெள்ளையாய் இருந்தபோது…

“கால்வின், கால்வின்! இன்னைக்கு உன் அப்பாகிட்ட என்ன கேட்டே?”

“‘பழைய படம் எல்லாம் ஏன் கறுப்பு வெள்ளையில இருக்கு? அப்போல்லாம் கலர் ஃபிலிம்கள் கிடையாதா அப்பா?’ன்னு கேட்டேன்”

“அவர் என்ன சொன்னார்?”

“‘இருந்துச்சி. உண்மையில அந்த பழைய படங்கள்லாம் கலர் படங்கள்தான். ஆனா, உலகம் அப்போ கறுப்பு வெள்ளை கலர்ல மட்டும்தான் இருந்துச்சு’ அப்படின்னார்.”

“அப்படியா சொன்னார்?”

“ஆமாம்! ‘1930கள் வரைக்கும் உலகம் கலரா ஆகலை. அதுக்கு அப்பறம்தான் கலரா மாறுனுச்சு. ஆனாலும் கொஞ்சம் மங்கலான கலர்தான்’ அப்படின்னார்.”

“விநோதமா இருக்கே?”

“நானும் இதேதான் அப்பாகிட்ட கேட்டேன். ‘உண்மைங்கிறது கதைகள்ல வர்றத விட விநோதமா இருக்கும்’னு அவர் சொன்னார்.”

“நீ அத்தோட விட மாட்டியே?”

“ஆமாம் காவிரி. ‘அப்புறம் பழைய கால ஓவியர்கள் வரைஞ்ச ஓவியங்கள் மட்டும் ஏன் கலர்ல இருக்கு? உலகம் அப்போ கறுப்பு வெள்ளையா மட்டும்தான் இருந்துச்சுன்னா அந்த ஓவியர்களும் கறுப்பு வெள்ளையிலதானே வரைஞ்சிருப்பாங்க?’ அப்படின்னு கேட்டேன்.”

“ஆமாம்ல.”

“அவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘அப்போல்லாம் நெறைய ஓவியர்கள் கிறுக்குப் புடிச்சவங்களா இருந்தாங்க’ அப்படின்னார்.”

“அது என்னவோ உண்மைதான். நான் பழைய ஓவியர்களைப் பத்தி நெறைய படிச்சிருக்கேன். வான்கோ தன்னோட ஒத்தைக் காத அறுத்துத் தன்னோட காதலிக்குப் பரிசா அனுப்புனாரு தெரியுமா?”

“அவருக்குக் காது வரையத் தெரியாம இருந்திருக்கும் காவிரி. அந்தக் கோபத்துல அறுத்து அனுப்பியிருப்பாரு.”

“உன்னோட அதிகப்பிரசங்கித்தனத்த உன் அப்பாவோட நிப்பாட்டிக்க. என்கிட்ட காட்டாத.”

“குறைஞ்சபிரசங்கித்தனத்தோட நான் இருந்திருந்தேன்னா உன்னோட நண்பன் ஆகியிருந்திருக்க மாட்டேன்ல காவிரி. அதான். இன்னும் கதை முடியல கேளு. அப்பாவ நான் விடாம கேட்டேன். “அந்தக் காலத்துல கலரே இல்லன்னா எப்படி கலர் ஓவியம் வரைஞ்சாங்க? அவங்களோட கலர்களும் சாம்பல் கலரோட ஷேட்ஸாத்தானே இருக்கணும்?’ அப்படின்னு கேட்டேன்.”

“‘அதெல்லாம் 1930கள்ல கலரா மாறிட்டு’ன்னு சொன்னாரா?”

“பாரு, நீங்கல்லாம் ஒரே மாதிரிதான் பேசுறீங்க. அப்பாவும் இதேதான் சொன்னாரு. நான் விடாம கேட்டேன் ‘அப்படின்னா கறுப்பு வெள்ளைப் படங்கள் ஏன் கலரா மாறலை’ன்னு.”

“இது பாய்ண்ட்!”

“அப்பா என்ன சொன்னார் தெரியுமா? ‘அதெல்லாம் கறுப்பு வெள்ளையா இருந்த உலகத்தோட கலர் படங்கள்’ அப்படின்னார்.”

“உங்க அப்பா சொல்றது உண்மைதான் போல கால்வின். எனக்கும் அப்படித்தான். என் உலகம் கொஞ்சம் கொஞ்சமா பச்சையா மாறிக்கிட்டு வருது தெரியுமா?”

“அப்படின்னா யாரோ பச்சை ஃபிலிமை மட்டும்தான் இப்போ கண்டுபிடிக்கிறாங்களா?”

“உலகம் ஃபிலிமை எப்போவோ கைவிட்டுடுச்சு கால்வின். இப்போ டிஜிட்டலுக்கு மாறியாச்சு.”

“ஏன் உலகம் எப்போவும் ஒன்னு வந்தா இன்னொன்ன விட்டுடுது? ஒரே நேரத்துல எல்லா உலகமும் பக்கத்துப் பக்கத்துல இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும். எங்க அப்பா சொல்றது உண்மைன்னா, எனக்குக் கறுப்பு வெள்ளை உலகமும் நம்ம கலர் உலகத்தோட பக்கத்துப் பக்கத்துல இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது. கலர் புடிக்காதப்போ அந்த உலகத்துக்குப் போய்ட்டு அப்புறம் அந்த உலகமும் அலுத்துப் போனா கலர் உலகத்துக்குத் திரும்பி வருவேன்.”  

“அப்படின்னா என்னோட பச்சை உலகத்துக்கு வந்துட்டுப் போ.”

“அது எப்படி இருக்குது காவிரி?”

“பச்சைப் பசேல்னு இருக்குது. எங்கேயும் என் கூடவே வருது. என்னை சுத்தி இருக்குது.”

“எந்த வயசுலருந்து இப்படி இருக்கு உனக்கு காவிரி?”

“சின்ன வயசுலருந்து இருக்கு கால்வின். ஆனா, அப்போல்லாம் இந்த அளவுக்கு அடர்ந்து இல்லை. நான் வளர வளர அதுவும் என் கூட வளர்ந்துகிட்டே இருக்கு.”

“உன் சொந்த ஊருல உங்களுக்குத் தோட்டம் இருக்கா, அல்லது இருந்துச்சா?”

“இல்ல கால்வின். எங்களுக்குன்னு ஒரு சதுர அடி நிலம் கூட கிடையாது. வீடு புறம்போக்கு நிலத்துல. வயலும் ஒத்திக்கு எடுத்து சாகுபடி செஞ்சது. அதுவும் ரெண்டு மூணு வருஷம் இருக்கும், அவ்வளவுதான். ஆனா, ஊர்ல செடி கொடிகள் நிறைய இருக்கும்.”

“ஒரு அமெரிக்கப் பையனுக்குத் தெரியாத வார்த்தைகள் நெறைய சொல்ற. பட் ஐ லைக் த வேர்ட் புறம்போக்கு! வாட்டர்ஸன் மறுபடியும் என்னை வரைய வந்தார்னா எங்காச்சும் அந்த வார்த்தைய நானே பேசிடுறேன்.”

“நீதான் நெறைய தத்துவமெல்லாம் பேசுவீயே? என் பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்லு. சைக்கியாட்ரிஸ்டப் போய்ப் பார்க்கலாமா?”

“ஐயய்யோ அத மட்டும் பண்ணிடாதே. எங்க அப்பாவ விட அவங்கல்லாம் ரொம்ப போரு. நான் ஹாப்ஸோட பேசிக்கிட்டு இருக்குறதப் பாத்து ஏதோ பொம்மைப் புலியை நிஜப் புலியா நினைச்சுட்டுப் பேசுறேன்னு பயந்து என்னை சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட அழைச்சுட்டுப் போகலாம்னு எங்க அப்பா அம்மா திட்டம் போட்டாங்க தெரியுமா? உனக்குத் தெரியாது, நான் பார்த்த ஒரு படத்துல செத்துப்போன சைக்காலஜிஸ்ட் தான் செத்துப்போனதுகூட தெரியாம உயிரோட இருக்குற ஒரு பையனுக்கு ட்ரீட் பண்ணுவாரு. சைக்கியாட்ரிஸ்டெல்லாம் அப்படித்தான். அவங்க செத்துப்போனதுகூட அவங்களுக்குத் தெரியாது. உனக்குப் பிரச்சினை இல்லைன்னா நானே உனக்கு சைக்கியாட்ரிஸ்டா இருக்கேன். உன்னோட பிரச்சினையச் சொல்லு.”

“ஏய் நீ எப்படி சிக்ஸ்த் சென்ஸ் படம் பாத்துருக்க முடியும்? உன்னை வாட்டர்ஸன் வரையிறத 95லேயே நிப்பாட்டிட்டாரே.”

“நிப்பாட்டினாலும் இப்பவும் உன்கூட பேசிக்கிட்டிருக்கேன்ல. வாட்டர்ஸன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது எனக்காக அவர் டிவியும் வரைஞ்சிருக்காரு. அதுலதான் நான் எல்லாம் பாத்துக்கிட்டிருக்கேன். அவர் என்னை வரைஞ்சாரு, நான் காலத்த வரைஞ்சிக்கிட்டேன்.”

“நீ உன் வயசுக்கு மீறின பேச்சு பேசுற.”

“பேச்சுக்கு மீறின வயசு உள்ளவங்க இப்படித்தான் என்னைச் சொல்றாங்க காவிரி.”

“அப்போ நீதான் என்னை ட்ரீட் பண்ணனும் கால்வின். என்னைச் சுத்தி வளர்ந்துருக்க பயிரையெல்லாம் உன் ஹோப்ஸ விட்டுத் திங்கச் சொல்லிடு.”

“புலி பசிச்சாலும் புல்லைத் திங்காது காவிரி. அந்தப் பயிர நான் பாத்துக்குறேன். இப்போ எனக்கு களைப்பா இருக்கு. நம்ம செஷன நாளைக்கு வைச்சுக்கலாம்… ஹாப்ஸ் நீ எங்கே எலி புடிச்சிக்கிட்டு இருக்கே. ஒரு புலியா இருந்துகிட்டு இப்படி எலி புடிச்சிக்கிட்டு இருக்கீயே,  வெக்கமா இல்லே… இதோ வர்றேன்.”

2. பயிர் வட்டம்

காவிரி கொஞ்சம் காலமாக வாழ்வது பச்சை உலகத்தில்தான். ஆரம்பத்தில் இயல்பான மற்றெல்லா நிறங்களுக்கிடையில் ஒரு பச்சை அலையடித்ததுபோல் இருந்தது. கானல் பச்சை. எல்லா நிறங்களுக்குள்ளும் ஒளிந்துகொண்டிருக்கும் பச்சையை யாரோ தூண்டிவிட்டது போலவும் அந்தப் பச்சை அரக்கப் பரக்க எல்லா நிறங்களின் மீது தாவியோடி மீண்டும் ஏதோ ஒரு நிறத்துக்குள் ஒளிந்துகொண்டது போலவும் இருந்தது. ஆனால், நாளாக நாளாக அந்தப் பச்சைக்கு ஒரு பெரும் தன்னம்பிக்கை வந்துவிட்டதாக காவிரி உணர்ந்தாள். தன்னை ஒன்றும் அப்படி ஒளித்துவைத்துக்கொள்ளத் தேவையில்லை என்று நினைத்திருக்குமோ? வண்ணங்களின் உலகிலும் சுயமுன்னேற்ற நூல்கள், வீடியோக்கள் இருக்கும் என்றும் அவற்றைப் பச்சை படித்தும் பார்த்தும் அந்த தன்னம்பிக்கையைப் பெற்றிருக்கும் என்று கற்பனை செய்துகொண்டாள். 

அலையடிப்பிலிருந்து ஏறிப்போய்ப் பச்சை கொஞ்சம் கொஞ்சமாக நிலைத்து நிற்கவும் ஆரம்பித்தது. அதற்குக் காரணம் அவளைச் சுற்றிலும் வளர்ந்து நிற்கும் பயிர்தான். இவ்வளவு உயரம் வளர்ந்தாலும் கதிர்பிடிக்காதது மாதிரிதான் இருந்தது. கதிர்பிடித்து முற்ற ஆரம்பித்திருந்தால்தான் பச்சை மஞ்சளாக மாறியிருக்குமே.  

விநோதம் என்ற கட்டத்தைத் தாண்டி இனம்புரியாத அச்சம் என்ற கட்டத்தை அப்போது காவிரி வந்தடைந்திருந்தாள். அன்றாட வாழ்வில் வண்ணங்கள் சார்ந்து மேற்கொள்ள வேண்டிய சின்னச் சின்ன தெரிவுகளில் ஏற்படும் தடுமாற்றம் உயிருக்கும் பணிக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்ற அஞ்சினாள். அதுவும் காட்சி ஊடகத்தில் பணிபுரிபவள் என்பதால் தோற்றத்துக்கு அடிப்படையான வண்ணத்தில் காவிரி ஏதும் தவறு செய்துவிடக் கூடாது. பொருத்தமான சுடிதார், அதற்கான கீழாடை, உதட்டுச் சாயம், பொட்டு, மை, காதணி, கைகலன் என்று எல்லாம் ஒத்திசைவோடு பொருந்திப்போக வேண்டும். இல்லையென்றால் அலுவலகத்தில் பிரச்சினையாகிவிடுவது மட்டுமல்ல, சமூக ஊடகங்களில் கேலிக்கும் உள்ளாகிவிடக் கூடும். எனினும் காவிரி இந்தப் பிரச்சினையை ஓரளவு சமாளித்துக்கொண்டுதான் இருக்கிறாள். அவள் மிதமான ஒப்பனையையே விரும்புபவள். எனினும் அவள் கண்ணுக்குத் தெரியும் பச்சையிலும் ஒரு ஒத்திசைவை அவள் கூடிய சீக்கிரமே கண்டுபிடித்தாள். ஆடைகள் தெரிவிலும் அப்படித்தான் இருந்தது. அவள் அலுவலகத் தோழிகள் பாராட்டும் அளவுக்கு ஒரு கட்டத்தில் அவளுடைய ஆடைத் தெரிவு ஆனது. போக்குவரத்து சிக்னல் போன்ற நிறம் சார்ந்து முக்கியமான, உடனடியான முடிவு எடுக்க வேண்டிய விஷயங்களிலும் அவள் பழகிக்கொண்டாள். ஏனெனில் பச்சைக்குரிய இடம், சிவப்புக்குரிய இடம், மஞ்சளுக்கு உரிய இடம் என்று தனித்தனியே ஒதுக்கப்பட்டிருக்கிறது அல்லவா. மொத்தத்தில் உலகைப் பச்சையின் அடர்த்தி வேறுபாடுகளாகப் பார்ப்பதற்குப் பழகிக்கொண்டாள். அதுமட்டுமல்ல, அடர்த்தியின் தன்மையை வைத்தும் இடம் பொருளைக் கொண்டும் அது மற்றவர்களின் கண்ணுக்கு என்ன வண்ணமாகத் தெரிகிறதோ அதையும் எளிதில் ஊகித்துவிடுவாள். பிறகு பச்சையால் அவளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லைதான்.  

ஆனாலும் ஏன் பச்சை என்ற கேள்விக்கான பதிலை அறிந்துகொள்வதில்தான் அவளுக்குப் பெரும் உளைச்சல் ஏற்பட்டது. அவளைச் சுற்றிலும் வளர்ந்திருக்கும் பயிரும் அதன் பச்சை நிறத்தில் ஊடுருவி வரும் ஒளியும்தான் அந்தப் பச்சை நிறத்துக்குக் காரணம். எனில், ஏன் தன்னைச் சுற்றிப் பயிர் வளர்ந்திருக்கிறது என்பதுதான் முதன்மையான கேள்வி. சிறு வயதில் அந்தப் பயிர் உயரம் குறைவாக இருந்தபோதே சில தடவை தன் அப்பாவிடமும் அண்ணனிடமும் சொல்ல முயன்றாள். அவர்கள் ‘பித்துக்குளி மாதிரி உளறாத’ என்று கூறிவிட்டார்கள். வகுப்புத் தோழிகளிடம் சொன்னபோது ‘காவிரிக்கு மண்டையில மயிரு காலுல பயிரு’ என்று கேலி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அதற்குப் பிறகு அந்தப் பயிர் அவளுடைய ரகசிய உலகமாக ஆகிவிட்டது. தன்னைச் சுற்றி முளைத்திருந்தாலும் அது எதையும் மறைக்கவோ தடுக்கவோ இல்லை என்பதால் காவிரி அப்படியே விட்டுவிட்டாள். மேலும், ஒட்டுமொத்த உலகத்தினரிடமிருந்து தன்னை வேறுபடுத்தும் ஒன்றாக இந்தப் பயிர் இருப்பதால் அதை நேசிக்கவும் ஆரம்பித்துவிட்டாள். அதுவும் நகரும் பயிர். தன் கூடவே எங்கிலும் வரும் பயிர். காலம் இடம் இரண்டையும் கேலி செய்து வளரும் பயிர். தனது நிரந்தரச் சுற்றுச்சூழலாக அது ஆன பிறகு அது அவளின் மனதின் வெளிப்படையாகத் தெரியும் மேல் பகுதியிலிருந்து அடியாழத்துக்குச் சென்று மறைந்துகொண்டது. அவள் வாழ்வின் நிரந்தரப் பின்னணியாக மாறிவிட்டிருந்தது. 

அம்மாவைக் குழந்தைப் பருவத்தில் இழந்து அப்பாவைப் பள்ளி இறுதிப் பருவத்தில் இழந்து அண்ணன் தன்னைப் படிக்க வைத்தாலும் உணர்வுரீதியாக ஒருபோதும் தன்னோட தொடர்புகொள்ள அவன் தயாராக இல்லாத சூழலில் அவளுக்கென்ற தனிப்பட்ட உலகத்தின் சொத்து அந்தப் பயிர். அப்படிப்பட்ட அரிய ஒன்றை சாதாரணப்படுத்திவிடக் கூடாது என்பதிலும் காவிரி எச்சரிக்கையாக இருந்தாள். ஆகவே அடிக்கடி தன் கால்களைக் குனிந்து பார்ப்பதைத் தவிர்த்தாள். மிகுந்த தவிப்பான, உளைச்சலான தருணங்களில் மட்டும் கால்களைக் குனிந்து பார்ப்பாள். அங்கே அவளுக்கான அந்தப் பயிர் அந்தச் சிறு வட்டப் பரப்பில் ஏதோ மிதக் காற்று அடித்ததுபோல் அசைந்துகொண்டிருக்கும். காற்றில் பச்சை அலையடித்துக்கொண்டிருக்கும் பெரும் வயல் பரப்பின் ஒரு சிறு வட்டப் பகுதியை மட்டும் விட்டுவைத்துவிட்டு சுற்றியுள்ள பெரும் பரப்பை ரப்பர் வைத்து அழித்துவிட்டால் எப்படி இருக்கும். பயிர் வட்டங்களைப் பற்றி காவிரி கொஞ்சம் படித்திருக்கிறாள். 

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கோதுமை வயல்கள், சோளக்கொல்லைகள் போன்றவற்றில் வளைய வளையமாக சிக்கலான வடிவங்கள் திடீரென்று உருவாகியிருக்கும். பயிர்களின் மேலே யாரோ புல்லட் ஓட்டியதைப் போல. அந்த வடிவங்களை உருவாக்கியவர்கள் வேற்றுகிரகவாசிகள் என்று சிலரும் மனிதர்களின் குறும்புதான் அது என்று சிலரும் இன்னும் வாதிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அது போன்ற ஒரு பயிர் வட்டமாக இது இருக்குமோ என்றும் ஒரு ஐயம். அப்படியே இருந்தாலும் பயிர்களை அழித்துதான் வேற்றுகிரகவாசிகள் பயிர் வட்டங்களை உருவாக்குவார்கள். இங்கே நட்டுவிட்டு அல்லவா போயிருக்கிறார்கள். 

ஆக எந்த முழுமையிலிருந்தோ சிறு வட்டம் ஒன்று கத்தரிக்கப்பட்டுத் தன் காலுக்குக் கீழே ஒட்டப்பட்டுவிட்டது. ஒரு இடத்தின் தொடர்ச்சி வேறு ஒரு இடத்தில் எப்படி இருக்க முடியும் என்று கேட்டுக்கொண்டாள் காவிரி. 

இப்படிப்பட்ட சூழல்களில் எப்போதும் ஒன்றுக்கும் மேற்பட்ட பதில்களைச் சொல்லிப்பார்ப்பாள் காவிரி. அவற்றுள் நடைமுறை சாத்தியமான, உண்மையான பதில்களும் இருக்கும் நடைமுறை சாத்தியமற்ற கற்பனையான பதில்களும் இருக்கும். அவளுடைய வாழ்க்கையை அவள் மனதுக்குள்ளிருந்து யாரேனும் பார்ப்பார்கள் என்றால் அவள் இரண்டாம் வகை பதில்களையே நாடுவாள் என்பதை அறிந்துகொள்ள முடியும். இதுவும் அவளைப் பற்றிய துல்லியமான வரையறை அல்ல. பெரும்பாலும் அவள் முதல் வகைப் பதில்களை அங்கீகரிப்பாள் என்றால் இரண்டாம் வகை பதில்களை வரித்துக்கொள்வாள். ஒரு இடத்தின் தொடர்ச்சி இரண்டு இடங்களில் எப்படி இருக்க முடியும் என்ற கேள்விக்கும் இரண்டு சூழல்களைத் தன் மனதுக்குள் கொண்டுவந்தாள். அவை: 1. (மேற்கு) பாகிஸ்தானுக்கும் இன்றைய வங்கதேசமான அன்றைய கிழக்கு பாகிஸ்தானுக்கும் இடையே இந்தியா இருந்திருக்கவில்லையா? ஒரே நாடு; ஆனால் நிலத் தொடர்ச்சி இல்லை. அதிகாரத் தொடர்ச்சி, ஆளுகைத் தொடர்ச்சி மட்டுமே. 2. ஒரே ஆறு. நடுவே காணவில்லை. அதற்கு எந்தத் தொடர்பும் இல்லாமல் தொலைதூரத்தில் ஓடும் இன்னொரு ஆறு முந்தைய ஆற்றின் தொடர்ச்சியாகக் கருதப்பட்டால் எப்படி இருக்கும். காவிரி இந்தப் பதில்கள் இரண்டையும் வெகு நேரம் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள். உற்றுப்பார்ப்பதன் மூலம் எல்லாக் கேள்விகளையும் ஒரே கேள்வியாக ஆக்கிவிடுவாள், எல்லா பதில்களையும் ஒரே பதிலாக ஆக்கிவிடுவாள். இன்னும் சொல்லப்போனால் கேள்வியையும் பதிலையும்கூட ஒன்றாக ஆக்கிவிடுவாள். அப்படித்தான் இந்த இரண்டு பதில்களையும் ஆக்கினாள். ஆறு தூரத்திலிருந்து இன்னொரு ஆற்றின் மேல் அதிகாரம் செலுத்துகிறது. அதனால் அதுவும் இதுவும் ஒரே ஆறாகக் கருதப்படுகிறது. ஆறு இன்னொரு ஆற்றின் மேல் அதிகாரம் செலுத்துகிறது என்றால் அந்தத் தண்ணீரில் குளிப்பவர்கள், அந்தத் தண்ணீரைத் தங்கள் வயலுக்குப் பாசனம் செய்பவர்கள், வேறு எதற்கெல்லாமோ அதைப் பயன்படுத்துபவர்கள், அவர்களின் ஐதீகங்கள், மதங்கள், கதைகள், பாட்டுகள் என்று அனைவரின் மீதும் அனைத்தின் மீதும் ஆறு அதிகாரம் செலுத்துகிறது என்றுதான் அர்த்தம்.

ஆக தன் காலுக்குக் கீழே அலையடிக்கும் சிறு பரப்பின் பெரும் சுற்றுப் பரப்பு எங்கோ இருக்கிறது. அதைக் கண்டுபிடித்தால் இந்தப் பச்சைக்கான காரணத்தையும் பயிருக்கான காரணத்தையும் கண்டுபிடித்துவிடலாம். தன்னைச் சுற்றிச் சிறு வட்டமாக இருக்கும் பயிரைப் பெருவட்டத்துடன் சேர்த்துவிடலாம். உண்மையில் தன் பச்சைப் பயிர்ப் பரப்பை விரிவாக்கி அதன் காற்றோடு சேர்ந்து தானும் அலையடிக்கலாம் என்று ஏங்கினாள் காவிரி. இதற்கு கால்வின் உதவுவான் என்று நம்பினாள்.

3. புலியோடு உறங்கும் சிறுவன்

காவிரியின் இருபதாவது பிறந்த நாள் அன்று அவளிடம் வந்து சேர்ந்தான் கால்வின். அவளுடைய முன்னாள் காதலி தபித்தா அவளுக்குப் பரிசாகக் கொடுத்தது ‘கால்வின் அண்டு ஹாப்ஸ்’ நான்கு புத்தகங்கள் அடங்கிய தொகுப்பின் மூலம் கிடைத்தவன். அப்போதே விலை ரொம்பவும் அதிகம். ஆனால் செல்வச் செழிப்பில் திளைத்திருந்த தபித்தாவுக்குத் தன் காதலிக்கு இந்தப் பரிசைக் கொடுப்பது ஒரு பொருட்டல்ல. இவருமே அதற்கு முன்பே கால்வினுக்கும் ஹாப்ஸுக்கும் தீவிர ரசிகர்கள்.
1985லிருந்து 1995வரை தினமும் செய்தித்தாள்களில் பில் வாட்டர்ஸன் வரைந்த கால்வின் அண்டு ஹாப்ஸ் இடம்பெற்றன. அமெரிக்காவில் தொடங்கி உலகம் முழுவதும் பல்லாயிரக் கணக்கான பத்திரிகைகளில் கால்வின் அண்டு ஹாப்ஸ் உலா வந்தான். இங்கே டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் வெளியானது. புகழின் உச்சத்தில் இருக்கும்போது சட்டென்று ஒருநாள் இனிமேல் நான் கார்ட்டூன் வரையப்போவதில்லை. இந்த ஊடகத்தில் என்னால் சாத்தியமானதை நான் சாதித்துவிட்டேன் என்று பில் வாட்டர்ஸன் நிறுத்திக்கொண்டு தனிப்பட்ட வாழ்க்கைக்குள் மூழ்கிவிட்டார். எந்தப் பத்திரிகையாளர்களையும் சந்திப்பதில்லை. வெகு அரிதாகத்தான் அவருடைய பேட்டிகள் வெளியாகியிருக்கின்றன. வனம் சூழ்ந்த ஒரு பகுதியில் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கிறார். கார்ட்டூனுக்குப் பதில் ஓவியத்தில் மூழ்கிவிட்டார். இவை எல்லாமே காவிரிக்கு அவர் மீதும் அவர் படைத்த கால்வின் மீதும் பெரும் நெருக்கத்தைச் சேர்த்துவிட்டன. கால்வினின் நட்பு மூலம் வாட்டர்ஸனின் மனதை அடைய முடியலாமா என்று அவள் முயன்றுகொண்டிருக்கிறாள் என்றுகூட சொல்லிவிடலாம். ஹாப்ஸ் என்ற பொம்மைப் புலியை உயிருள்ள புலியாக பாவித்ததன் மூலம் கால்வின் ஒரு நீட்டிப்பு செய்தான் என்றால் கால்வின் என்ற கார்ட்டூன் பாத்திரத்தைத் தன் அந்தரங்க நண்பனாக இன்னும் சரியாகச் சொல்லப் போனால் பேசும் வளர்ப்புப் பிராணியாக இவள் நீட்டிக்கிறாள். இதன் மூலம் வயதில் வளராமல் கால்வின் இருத்தலில் வளர்ந்துகொண்டே போகிறான்.

மேலும் கால்வினுக்கும் காவிரிக்கும் நிறைய ஒற்றுமைகள். கால்வின் சிறுவயதிலேயே அதிகப்படியாகப் பேசுபவன். தெருவில் ஆறு வயதில் கெட்ட வார்த்தைகள் பேசி மாட்டிக்கொண்டவள் காவிரி. இத்தனைக்கும் அந்தப் பகுதியில் யாரும் அப்படியெல்லாம் பேச மாட்டார்கள்.

கால்வினின் கீழ்க்கண்ட கார்ட்டூன்தான் காவிரி முதன்முதலில் படித்தது. இதைப் படித்தபோது சிறு வயதிலிருந்து தன்னிடம் இருந்துவரும் நார்சிஸத் தத்துவவாதிக்கு ஒரு சகாவைக் கண்டடைந்த பரவசம் ஏற்பட்டது.

கால்வினுக்கும் ஹாப்ஸுக்கும் இடையிலான உரையாடல்:
கால்வின்: நான் யோசிச்சுக்கிட்டே இருக்கேன் ஹாப்ஸ்…
ஹாப்ஸ்: சனி ஞாயிறு என்ன பண்ணலாம்னா?
கால்வின்: எல்லாத்துக்கும் ஒரு நோக்கம் இல்லாமலேயே இருந்திருக்கும்…
கால்வின்: வரலாறுங்கிறது ஒரு விசைன்னும் நம்புறேன்.
கால்வின்: அதோட பேரலையை யாரும் தடுக்க முடியாது. வழியெல்லாம் இருக்குற மனிசங்க அமைப்புகள்னு எல்லாத்தையும் அடிச்சுக்கிட்டுப் போயிடும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றும் வரலாற்றோட ஒரே ஒரு நோக்கத்துக்காகத்தான் இருக்காங்க, இருந்திருக்காங்க.
ஹாப்ஸ்: அது என்ன நோக்கம்?
கால்வின்: என்னை உருவாக்கிறதுதான், வேறென்ன? வரலாற்றோட இறுதி விளைபொருள் நான்தான்.
ஹாப்ஸ்: நீயா?
கால்வின்: ஆமாம்! யோசிச்சுப் பாரு ஆயிரக்கணக்கான தலைமுறைகள் வாழ்ந்து மடிஞ்சது எதுக்கு? என்னோட, குறிப்பிட்ட, இந்த அம்மா அப்பாவை உருவாக்குறதுக்குதானே? இவங்க பொறந்து வாழுறதுக்குக் காரணம் நான்தானே.
கால்வின்: இந்தப் புள்ளி வரை ஒட்டுமொத்த வரலாறுமே என் ஒருத்தனை உருவாக்குறதுக்குத்தான் கழிஞ்சிருக்கு
ஹாப்ஸ்: ஹ்ம்ம்! 450 கோடி வருஷமும் பத்தலைதான் போல.
கால்வின்: இதோ நான் இங்கே இருக்கேன். வரலாறு நிரூபணம் ஆயிடுச்சு.
ஹாப்ஸ்: சரி வரலாறு உன்னை உருவாக்குனுச்சு. இப்போ நீ என்ன செய்யப் போறே
அடுத்து சோபாவில் ஹாப்ஸுடன் தொலைக்காட்சி முன் கார்ட்டூன் நிகழ்ச்சி பார்த்துக்கொண்டு “ஹுர்ரே… துவம்சம்…” என்று அதகளம் செய்கிறான் கால்வின்.

இதைப் படித்தபோது தன் ஒற்றை ஆளுக்காகவே வாட்டர்சன் இதை வரைந்திருக்கிறார் என்று காவிரிக்குத் தோன்றியது. கால்வினை விட இன்னும் ஒருபடி மேலே காவிரி போனதுண்டு. சிறு வயதில் அவளுக்கு ஒரு சந்தேகம். சந்தேகம் என்பதைவிட ஒரு சிறு நம்பிக்கை. தான் ஒரு கடவுளோ என்பதுதான் அது. ஒரு நாள் மாமா வீட்டு மாடியில் நின்றுகொண்டிருக்கும்போது அங்கிருந்து எட்டிப்பிடித்துவிடும் இடைவெளியில் மின்கம்பிகள் போய்க்கொண்டிருந்தன. தான் ஒரு கடவுள்தானே, தன்னைத்தான் மின்சாரம் ஒன்றும் செய்யாதே தொட்டுப் பார்ப்போமா என்று அவளுக்குத் தோன்றியது. மேலும் மின்சாரம் எப்படி இருக்கும் என்று அறிந்துகொள்ளும் குறுகுறுப்பு. தொட்டும் விட்டாள். ஒன்றும் ஆகவில்லை. அவள் நேரம் அப்போது மின்சாரம் இல்லாமல் இருந்திருக்கலாம்.

அதன் பிறகு கால்வின் கார்ட்டூன்களுக்காகவே டைம்ஸ் ஆஃப் இந்தியா வாங்கினாள். பிறகு தபித்தா கால்வினின் ஒட்டுமொத்த தொகுப்புகளையும் வாங்கிக்கொடுத்தாள். தபித்தாவுக்கும் காவிரிக்கும் இடையிலான காதல் முறிவும் காலடியில் வளர்ந்துகொண்டிருந்த பயிரின் உயரம் அதிகரித்ததும் கால்வினுடன் காவிரிக்கு நெருக்கத்தை அதிகரித்தது. மிகச் சரியாக அந்த முதல் காதல் முறிந்ததற்குக் காரணமும் காவிரி எப்போதும் கனவுலகத்தில் இருக்கிறாள் என்பதுதான்.

“நாம லவ் பண்றப்பயும் செக்ஸ் வச்சுக்கிறப்பயும் மட்டும்தான் கனவுலகத்துல இருக்கணும் இல்லையா” என்று தபித்தாவிடம் கண்கலங்க முறையிட்டாள் காவிரி.

“நிறைய உலகம் இருக்கு காவிரி. நீ ஒரே உலகத்துல இருக்க நினைச்சா எப்புடி?” என்று கேட்டாள் தபித்தா.

அதற்குப் பின் வந்த நிரஞ்சனியுடனும் அதிக நாள் உறவு நீடிக்கவில்லை. இப்படித்தான் கால்வினுடன் நெருக்கமானாள். அங்கேயும் பிரச்சினை என்னவென்றாள் அவள் ஹாப்ஸாக இல்லை. இன்னொரு கால்வினாக இருந்தாள். இரண்டு கால்வின்களுக்கும் இடையில் தீராத சண்டையாக இருக்கும்.

“நீ என்னை ஹாப்ஸாக மாற்றிவிட்டு நீ கால்வினாக ஆகத் துடிக்கிறாய்” என்று கால்வினே ஒருநாள் குற்றம் சாட்டிவிட்டான்.  
அதில் நியாயம் இருப்பதாக உணர்ந்தாலும் அவள் காவிரியாக இருப்பதே கால்வினாக இருப்பதற்குச் சமம்தானே. சண்டையாக இருந்தாலும் பிரியாத இரட்டைச் சகோதரனோக கால்வின் அவளுடன் இருந்தான். அவள் அண்ணன் அப்படித்தான் தன்னுடன் இருந்திருக்க வேண்டும் என்றும் காவிரிக்குத் தோன்றியது.  

4. லா.ச.ராமாமிர்தம்

“அப்படி ஏதும் நடந்தது இல்லை டாக்டர். எனக்கு அப்யூஸ் நடந்தது, ஐ மீன் என்கிட்ட தப்பா ஒருத்தன் நடந்துக்க முயன்றது காலேஜ் படிக்கிறப்போதான். அப்போ நான் ஓரளவு தெளிவா இருந்ததனால அதுலருந்து ஈஸியா தப்பிச்சிட்டேன். ஆனா, இந்த பச்சைப் பசேல் நினைவு அதுக்கும் முன்னாடி இருந்து இருக்கு.”

“உங்க வீட்டுலயோ சொந்தக்காரங்க கிட்டேயே யார்கிட்டேயாவது சொன்னீங்களா?”

“இல்லை.”

“ஏன்?”

“என்னைப் பைத்தியம்னு சொல்லிடுவாங்களோன்னு ஒரு பயம். அப்புறம், இந்தப் பச்சை என்னை சுத்தி இருக்குறத தவிர எனக்கு வேற எந்தத் தொந்தரவும் தர்றதில்லை. ஆனா, எனக்குப் பிற நிறங்கள் ஏதும் தெரியிறது இல்ல. எல்லாமே பச்சையோட ஷேட்ஸ் மாதிரிதான் தெரியும்.”

“எல்லாம் பச்சையா தெரியிறது எத்தனை நாளா இருக்கு? சின்ன வயசுலே இருந்தா, சமீபத்தில இருந்தா?”

“கொஞ்ச வருஷமாத்தான் டாக்டர். அது என்னை சுத்திக் கொஞ்சம் கொஞ்சமா வளந்துகிட்டு இருந்த பயிர் என் கண் மட்டத்துக்கு வந்ததுலருந்து சுத்திலும் பச்சையாத் தெரியுது. அதுக்கு முன்னாடி நான் பார்த்த சிவப்பு, நீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள் எல்லாம் நினைவுகளாத்தான் மிஞ்சுது. ஆனா, பச்சையாக இருந்தாலும் ஷேட்ஸ வைச்சு அது உண்மையில என்ன நிறமா இருக்கும்னு கண்டுபிடிச்சிடுவேன். நான் பார்த்துக்கிட்டிருக்க பச்சையோட ஷேட்ஸ் அவ்வளவு அழகானது. இவ்வளவு அழகா பச்சையோட வேறுபாடுகளை உலகத்துல வேற யாரும் பார்த்துருப்பாங்களான்னு தெரியலை. ஆனா, போகப் போக எனக்கு மொனாட்டனஸா தெரியுது. எல்லா நிறங்களையும் உணரணும்னு ஏக்கமா இருக்கு.”

“நீங்க லா.ச.ராவோட ‘பச்சைக்கனவு’ கதை படிச்சிருக்கீங்களா? ஒருத்தர் பார்வையை இழக்குறதுக்கு முன்னாடி கடைசியா பார்த்த நிறம் பச்சை. அதனால அவரோட விழித்திரையில பச்சை நிறமே நிரந்தரமாத் தங்கிடும்னு நினைக்கிறேன். உங்களுக்குப் பார்வையிழப்பு ஏற்பட்டுடும்னு நான் சொல்லலை. ஜஸ்ட் ஏதாவது பச்சை தொடர்பான விபத்துகளை அது நினைவுபடுத்துமோன்னுதான் அதைப் பத்தி சொன்னேன்.”

“அந்தக் கதையைத் திரும்பத் திரும்பப் படிச்சிட்டிருக்கேன் டாக்டர். இத்தனைக்கும் நான் அவ்வளவா இலக்கியம் வாசிக்கிறவ இல்லை. ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ‘பச்சை’ அப்படின்னு கீவேர்டு போட்டு நெட்ல தேடுனப்போ அந்தக் கதையைப் பத்தின குறிப்புகளைப் பார்த்தேன். அதுக்கு அப்புறம் லா.ச.ரா. எழுத்துகள் முழுக்க படிச்சிட்டேன். நான் அவரோட எழுத்துகளுக்கு அடிமை.”

“ஸீ, இது அநேகமா நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையா இருக்கும்னு நெனைக்கிறேன். நீங்க முதல்ல நியூராலஜிஸ்ட்டப் பார்க்கணும். அவங்க சில ஸ்கேன் எடுக்கச் சொல்வாங்க. அதைப் பார்த்துட்டுதான் முடிவெடுக்க முடியும்.”

“நான் அவங்களையெல்லாம் பார்த்துட்டேன் டாக்டர். நரம்புலயோ பார்வையிலயோ எந்தப் பிரச்சினையும் இல்லைனு சொல்லிட்டாங்க. இதோ இருக்கு அந்த ரிப்போர்ட்டுலாம்” என்று சொல்லிவிட்டு ரிப்போர்ட்டுகளையெல்லாம் எடுத்து மருத்துவரிடம் கொடுத்தாள் காவிரி.

மனநல மருத்துவர் ஆனந்த் செல்வன் அவற்றை ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்த்தார்.

“வேற என்ன பிரச்சினையா இருக்கும் டாக்டர்?”

“நிறைய விஷயங்கள் இதுல இன்வால்வ் ஆகியிருக்கலாம். மூளையில கொஞ்சம் கெமிக்கல் இம்பேலன்ஸ் ஏற்பட்டிருக்கலாம், வம்சாவளியா வர்ற பிரச்சினையா இருக்கலாம். சின்ன வயசுல ஏற்பட்ட விபத்து, அப்யூஸ் போன்ற காரணங்கள் இருக்கலாம். நாம தொடர்ந்து சில செஷன்ஸ் பேசுவோம். பை த வே, நீங்க இப்போ நியூஸ் 18 மாறிட்டீங்க போல இருக்கு?”

“ஆமாம் டாக்டர், ரெண்டு மாசம் ஆச்சு. உங்க ப்ரோகிராம் பண்ணோம்ல அந்த மாசம்தான் எனக்கு ‘புதிய தலைமுறை’யில கடைசி மாசம்.”

“ஓ! ஆல் த பெஸ்ட் ஃபார் யுவர் நியூ ஜாப் அண்ட் நியூ பிளேஸ்”

“தேங்க்யூ டாக்டர்.”

5. நாற்று      

காவிரிக்கு ஒரு நாள் ஒரு கனவு வந்தது. தன்னைச் சுற்றி வளர்ந்த பசுமையின் காரணத்தை அதன் மூலம் தான் அநேகமாகக் கண்டுபிடித்துவிட்டதாக அவள் நம்பினாள். உடனே டாக்டரிடம் நேரம் வாங்கிக்கொண்டு பார்க்கச் சென்றாள்.

“டாக்டர் எனக்கு ஒரு விஷயம் புடிபட்டுருக்கு. அதுவும் ஒரு கனவுலதான் அதை நான் கண்டுபுடிச்சேன்” என்றாள் காவிரி.

“சொல்லுங்க” என்றார் டாக்டர்.

“எங்க சொந்த ஊர் மன்னார்குடி பக்கத்துல இருக்கிற வடுவூர். ஆனா நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் மன்னார்குடிதான். அதிலருந்து நீடாமங்கலம் போற வழியில கொஞ்சம் உள்தள்ளி நாவல்பூண்டின்னு ஒரு கிராமம். அங்கேதான் எங்க அப்பா ரெண்டு மூணு வருஷம் குத்தகைக்கு விவசாயம் பண்ணிக்கிட்டு இருந்தாரு. நடவு, அறுப்பு அதாவது ஹார்வெஸ்ட் இப்படிப் பல தடவை என்னையும் அங்கே அழைச்சிக்கிட்டுப் போவாரு. அப்படி ஒரு தடவை போறப்ப நாத்து நட்டுக்கிட்டு இருந்தாங்க. அப்போ எனக்கு அஞ்சு இல்லன்னா ஆறு வயசு இருக்கும். எனக்கு வயல் சேத்துல நடக்கணும்னு ஆசை. குட்டைப் பாவாடையைப் புடுச்சிக்கிட்டு கவனமா இறங்கி சேத்துல நடக்க ஆரம்பிச்சேன். அப்பத்தான் வரிசையா நாத்து நட்டுக்கிட்டு இருந்த அம்மா ஒருத்தங்க வேகமா என்கிட்ட வந்து என்னைச் சுத்திலும் நாற்றை நட்டுட்டுக் காசு கொடுத்தாதான் விடுவிப்பேன்னு அப்பாகிட்ட காசு கேட்டாங்க. அப்பா என்ன செஞ்சாருன்னு தெரியலை. எனக்கு பயம் தாங்க முடியலை. திகிலில் அலறிட்டேன். என்னவோ புதிரான கோட்டைக்குள் மாட்டிக்கிட்ட மாதிரி பயம். ரொம்ப நாள் எனக்கு இது கனவுல வரும். நேத்துகூட இந்தக் கனவு வந்துச்சு. அப்பதான் ஒருவேளை என்னோட பச்சைக்கும் அந்தப் பயிருக்கும் தொடர்பு இருக்கலாம்னு எனக்குத் தோணுச்சு. அதனாலதான் உங்க கிட்ட வந்தேன்” என்றாள்.

“க்யூரியஸ்! இதை போஸ்ட்-ட்ரமாட்டிக் ஸ்ட்ரெஸ் டிஸார்டர் மாதிரின்னு சொல்லலாம், ஹாலுசினேஷன்ஸ், அப்ஸஸிவ் இமேஜரிஸ் அப்படின்னும் சொல்லலாம்” என்றார் டாக்டர்.

“இப்போ இதை சரிபண்ணுறதுக்கு வழி என்ன டாக்டர்” என்று கேட்டாள் காவிரி.

“நாங்க வழக்கமா குரூப் தெரபி கொடுப்போம். அங்கே சைக்கோட்ராமால்லாம் பண்ணுவோம். ஒவ்வொருத்தரும் ரோல் ப்ளே பண்ணுவாங்க. இதுமூலமா ரீஃப்ரேமிங் நடக்கும். உங்க மனநிலை வேறொரு திசைக்கு வந்துடும்” என்றார்.

“கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுங்க டாக்டர்” என்று கேட்டாள் காவிரி.

டாக்டர் சொல்ல ஆரம்பித்தார். காவிரிக்குப் பிரச்சினை அந்த நாற்று நடும் பெண் இவள் காலைச் சுற்றி கோட்டை போல் நாற்றை நட்டுவிட்டு, பணம் கொடுத்தால்தான் விடுவேன் என்று கூறியதிலிருந்து தொடங்கியது. குரூப் தெரபியின் ரோல் ப்ளேயின்போது காவிரிக்குச் சிறு வயதில் நடந்ததை மறுபடியும் நடிப்பார்கள். ஒருத்தர் காவிரியின் காலுக்குக் கீழ் நாற்று நடுவதுபோல் நடித்துவிட்டுக் காசு கேட்பார். காசெல்லாம் கொடுக்க முடியாது என்று காவிரி சொல்லிவிட்டு அந்த நாற்றுக் கோட்டையிலிருந்து வெளிவர வேண்டும். இல்லையென்றால் காசு கொடுத்துவிட்டு வெளிவர வேண்டும். இது ஓரளவுக்கு உதவும் என்றார் டாக்டர்.  

“நல்ல ஐடியாதான் டாக்டர். ஆனா, எனக்கு ஒரு யோசனை. நான் ஏன் நாவல்பூண்டிக்கு ஒருமுறை போய்ட்டு வந்துடக்கூடாதுன்னு நெனைப்பும் எனக்கு வருது. சைக்கியாட்ரிஸ்ட் ரோலை நானும் அதிகப்பிரசங்கித்தனமா எடுத்துக்கிறேன்னு நெனைக்க வேண்டாம் டாக்டர். எனக்கென்னமோ எங்களுக்குச் சொந்தமா நிலம் இல்லாததும் கூட ஒரு பிரச்சினையோன்னு தோணுது. பாருங்க கனவுல கூட குத்தகை நிலம்தான் வருது. குத்தகை நிலத்துல வளர்ந்த பயிர்தான் என் கண்ணை மறைக்கிற அளவுக்கு வளர்ந்து உங்களை வந்து பார்க்க வச்சிருக்கு” என்று அழ ஆரம்பித்தாள் காவிரி.
டாக்டர் அவளை நிறுத்தவில்லை. அவர் யாருடைய அழுகையையும் நிறுத்துவதில்லை என்பது அழுது முடிந்த பிறகு அவளுக்கே நன்றாகத் தெரிந்தது.

“இப்படித்தான் டாக்டர். ஊர்ப் பக்கத்துலேருந்து வர்ற நாங்க எவ்வளவோ படிச்சிருந்தாலும் தைரியமான லெஸ்பியனா இருந்தாலும்கூட எங்க மனசுல நிலம் அப்படிங்கிறது அவ்வளவு ஆழமாப் பதிஞ்சிருக்கும். ஒண்ணு சொந்த நிலம் போயிடக்கூடாதுங்கிற தவிப்பு. இல்லைன்னா போன நிலத்தோட நினைப்பு. எங்களுக்கோ நிலமே இல்லையேங்கிற ஏக்கம். எப்போவாவது இருந்திருக்கும்னு நினைக்கிறேன். அதனால்தான் அப்பா விவசாயம் பண்ணியிருக்காரு” என்றாள் காவிரி.

“ஐ அண்டர்ஸ்டேண்ட் யுவர் பெய்ன் காவிரி. நீங்க ஒருமுறை போய்ப் பார்த்துட்டு வாங்க. நாம அப்புறம் பேசுவோம். அதுவரைக்கும் ட்ரீட்மெண்ட் ஏதும் வேண்டாம்” என்றார்.
   
6. வீரம்மா

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் கழித்து நாவல்பூண்டி செல்கிறாள் காவிரி. விவசாயம், அதற்குரிய பருவம், பரிபாஷை எல்லாமே தொல்நினைவுகளாக மாறிவிட்டதால் அந்தப் பகுதிகளில் நடவு எப்போது இருக்கும் என்று விசாரித்து அதற்கேற்பதான் புறப்பட்டிருந்தாள். முன்பு அந்த நிலத்தின் உரிமையாளராக இருந்த ஒன்றுவிட்ட சித்தப்பா ஒருவர் மன்னார்குடியில் இருந்தார். அவரிடம் விசாரித்துவிட்டுதான் அவர் தந்த ஸ்கூட்டியிலேயே நாவல்பூண்டிக்குச் சென்றாள். இப்போது அந்த வயலின் உரிமையாளரும் மன்னார்குடிக்காரர்தான் என்றாலும் வயலில்தான் இருப்பதாகச் சொன்னார்கள்.

மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில் இடது பக்கம் 6 கி.மீ. தொலைவில் காளாஞ்சிமேடு வந்தது. அங்கே திரும்பிய உடனே பாமணி ஆறு. அதில் இப்போது சற்றே அகலமான பாலம். அப்போது குறுகலான பாலம் என்று நினைவு. பாலத்தின் முடிவில் வலது பக்கம் திரும்பினால் நாவல்பூண்டி என்றார்கள். இந்த இடத்தையெல்லாம் உள்வாங்கிக்கொண்டே செல்ல வேண்டும் என்று நிதானமாக வண்டியை நிதானமாக ஓட்டிச்சென்றாள். அவளுக்கு அழுகை தாளவில்லை. “அப்பா அப்பா” என்று வாய்விட்டுச் சொல்லிக்கொண்டே வந்தாள். அப்பாவுடன் அந்த சைக்கிளில் முன்னால் உட்கார்ந்துகொண்டு இனி வரவே முடியாதா?  
நாவல்பூண்டியில் காவிரிக்கு நினைவில் இருந்த ஒருசில பெயர்களைச் சொல்லி விசாரித்தாள். அவர்கள் உயிரோடு இல்லை. ஆனால் இன்னார் மகள் என்று சொன்னதும் காவிரியைப் பலரும் வாஞ்சையுடன் சூழ்ந்துகொண்டார்கள். “வடுவூராரு பொண்ணாம்மா நீ. உனக்குக் கல்யாணம் ஆச்சாம்மா” என்று கேட்டார்கள். இல்லையென்று காவிரி சொன்னதும் “ஒனக்கு ஒரு கல்யாணங் கங்காட்சியைப் பண்ணிவைக்காமக்கூடப் போயிட்டாரே அந்த மனுஷன்” என்று வருத்தப்பட்டார்கள்.

அவர்களிடம் சிறுகச் சிறுக ஒரு பிரியத்தை அந்த நேரத்துக்குள் ஏற்படுத்திக்கொள்கிறாள் காவிரி. கொண்டுவந்த பழங்கள், தின்பண்டங்கள் எல்லாவற்றையும் அங்கிருக்கும் சிறியவர்கள், பெரியவர்கள் என்று எல்லோருக்கும் கொடுக்கிறாள். சிறு வயது நாவல்பூண்டி நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறாள். “பாரேன் இத்துனூண்டு இருந்தப்ப நடந்ததெல்லாம் ஆயி ஞாபகம் வச்சிருக்கு” என்று மாய்ந்துபோனார்கள். இதுதான் தருணம் என்று நாற்று நட்ட சம்பவத்தை அங்கே எடுத்து வைத்தாள். “அப்போ ரொம்ப பயந்துட்டியா ஆயி. எல்லாம் அந்த வீரம்மாக் கெழவி வேலையாத்தான் இருக்கும். அவதான் சட்டுன்னு போயி நட்டுப்புட்டுக் காசு குடு காசு குடுன்னு கேப்பா. இப்போ அந்தப் பழக்கம் அவ்வளவா கிடையாது. ஆனா முன்னாடி பல ஊர்கள்ல வயல்ல யாராச்சும் நடந்தா இப்புடிச் செய்வாங்க” என்றார் ஒரு பாட்டி. தோதாக அந்தப் பாட்டியைப் பிடித்துக்கொண்டு வீரம்மா வீட்டுக்குப் போய்விட்டாள் காவிரி. 

இன்னார் மகள் என்றதும் “அந்தக் கடன்காரன் மவளா நீ” என்றுவிட்டார் வீரம்மா பாட்டி. காவிரி அதிர்ந்துபோய்விட்டாள். பிறகு காவிரிக்கு முன் வீரம்மா சுதாரித்துக்கொண்டு “நீ ஒண்ணும் தப்பா எடுத்துக்காதே ஆயி நான் ஏதோ மனசுல உள்ளதைக் கொட்டிட்டேன்” என்று பதறிப்போய்விட்டார்.

சிறு வயதில் அப்பா அழைத்து வந்த இடங்களையெல்லாம் பார்க்க வந்ததாகவும் அவர்களுடைய வயலைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருப்பதாகவும் காவிரி சொன்னாள். மேலும் தன்னைச் சுற்றி நாற்று நட்டது பற்றியும் தயங்கித் தயங்கிச் சொன்னாள்.
அவர்களுக்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டும் என்பதால் 

“அன்னைக்கு நீங்க நாத்து நட்டது இன்ன வரைக்கும் கனவுல விடாம வருது” என்றாள்.

“வராம என்னடியம்மா பண்ணும். அப்ப உங்கப்பன் என்னைச் சொன்ன ஒவ்வொரு சொல்லும் எனக்கு இன்னைக்கு வரைக்கும் மறக்கலைடியம்மா” என்றார் வீரம்மா பாட்டி.

“நீங்க என் காலைச் சுத்தி நாத்து நட்டதைத் தவிர எனக்கு வேறு எதுவும் ஞாபத்துல இல்லையே பாட்டி.”

“நீ சின்னப் புள்ளம்மா. உனக்கு நடந்ததைத் தவிர வேற எதுவும் ஞாபகத்துல இருக்காது” என்று சொல்ல ஆரம்பித்தார் பாட்டி.

காவிரியின் அப்பாவிடம் காசுக்குக் கைநீட்டியபோது முதலில் அவர் அங்குள்ள வழக்கப்படி பிடிகொடுக்காமல் விளையாட்டின் ஒரு பகுதிக்குள் அவரும் இருந்துகொண்டிருந்தார். “ஆர்சுத்தியாரே நீங்க காசு கொடுக்கலைன்னா புள்ளை என்னோடது. காசு கொடுத்துட்டு மீட்டுட்டுப் போங்க” என்றதும் காவிரியின் அப்பாவுக்கு எங்கிருந்து அவ்வளவு கோபம் வந்ததென்று தெரியவில்லை. “என் புள்ளை வந்து உன் புள்ளையாடி **ப் **டாமவளே” என்று சொல்லிவிட்டு நாற்றுக் கோட்டையை விட்டு காவிரியின் அப்பா அவளைத் தூக்கிக்கொண்டு போர் செட்டுக்குப் போய்விட்டார். வீரம்மா இடிந்துபோய் நின்றிருந்தார். நினைவுதெரிந்த நாளிலிருந்து வீரம்மாவுக்கு இது போன்ற அவமானம் பழகிப்போயிருந்தாலும் வயலுக்குள் கால் வைத்த காவிரியைப் பார்த்தும் இரண்டு வயதிலேயே தவறிப்போன தன்னுடைய பெண் குழந்தையின் நினைவு வந்து ஓடிவந்து வாஞ்சைவாஞ்சையாக அவளைச் சுற்றிலும் இந்தக் கோட்டையைக் கட்டினார். நாற்றுக் கோட்டைக்குள் காவிரியின் பரிதவிப்பில் தனக்குள் பால் பொங்கியதுபோல் வீரம்மாவுக்கு இருந்தது. அந்தச் சின்னப் பிள்ளையின் முன் எல்லாக் கோட்டையையும் கண நேரத்தில் காவிரியின் அப்பா இடித்து நாசம் செய்ததைத்தான் வீரம்மாவாள் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நாற்று நட்ட மற்ற பெண்களும் வீரம்மாவுக்கு சொந்தபந்தங்கள்தான். ஆனால், வடுவூராருக்கு எதிராக வாய் திறக்க முடியாது அல்லவா. வீரம்மாவைச் சமாதானப்படுத்தி அழைத்துக்கொண்டு போய் வேலையைத் தொடர்ந்தார்கள்.

“இந்த **ப் **டாமவ நாத்து நட்டு களைபறிச்சு அறுப்பறுத்ததைதான் ங்கொப்பனும் நீயும் தின்னீங்க ஆயி. அப்பல்லாம் ங்கோப்பனுக்குத் தெரியலை. ஆனா நான் ஏதும் சாபம் விடலைம்மா. அந்த வருஷம் சாகுபடி அய்யோன்னு போச்சு. அறுப்பறுக்குறதுக்கு ரெண்டு மூணு வாரத்துக்கு முன்னாடி ஒரே மழை. எல்லாம் போச்சு. நான் ஒண்ணும் சந்தோஷப்படலை. ஏன்னா அங்கே நான் வேலை பார்த்துக் கூலி வாங்கியிருக்கேன் ஆயி. போனது என்னோட வேர்வையும்தான். அதுக்கப்புறம் ங்கொப்பன் விவசாயத்தை விட்டுட்டான். அவனே பெந்தகத்துக்கு நிலத்துல விவசாயத்தைப் பண்ணிக்கிட்டு எவ்வளவு கெப்பரு பாரு” என்றார் வீரம்மா.

காவிரிக்கு உடம்பெல்லாம் தூக்கிப்போட ஆரம்பித்தது. அவ்வளவு சூடு எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. தன்னைச் சுற்றி நடப்பது நாற்றுக் கோட்டை மட்டும் இல்லையா. எந்தக் கோட்டையாக இருந்தாலும் சுற்றிலும் உள்ளதைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் அதற்குள் இளவரசியாக இருந்திருக்கோமே. வீரம்மா பாட்டியைக் கட்டிப்பிடித்துக்கொண்டு காவிரி அழுகிறாள். “எங்கப்பா பண்ணுன தப்புக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் பாட்டி. எனக்கு இதைப் பத்தியெல்லாம் தெரியலை. நீங்க நட்ட நாத்துதான் என் கண் முன்னாடி பெரிசா வளர்ந்து பச்சையா இருக்குன்னு உங்களைப் பார்க்க வந்தேன். ஆனா நீங்க எந்த நிறத்துல மாட்டிக்கிட்டு இருக்கீங்கன்னு என்னால கற்பனையே செஞ்சு பார்க்க முடியலை” என்று அழுதாள். காவிரி பேசுவது பாதி புரிந்தும் பாதி புரியாமலும் வீரம்மா பாட்டியும் அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதார்.

அன்று முழுவதும் வீரம்மாவுடனேயே காவிரி இருந்தாள். அவள் வாழ்க்கைக் கதையை முழுவதும் கேட்டாள். அவருடைய குழந்தை போன பிறகு சில ஆண்டுகளில் குடித்துக் குடித்து அவருடைய கணவரும் போய்விட்டிருக்கிறார். அதன் பின் முழுவதும் வயல் வேலைதான். அதற்கு முன்பும் அப்படித்தான். இப்போது கொஞ்சம் தள்ளவில்லை. மகளிர் உதவித் தொகை. நூறு நாள் வேலைத் திட்டம். ரேஷன் அரிசி என்று தன் காலம் ஓடுகிறது என்றார் வீரம்மா பாட்டி.  

இதற்குப் பிறகும் வயலுக்குப் போக வேண்டுமா என்று யோசித்துப் பார்த்தாள் காவிரி. வேண்டாம் என்றே தோன்றியது. அங்கே வயலை மட்டுமல்ல அப்பாவையும் பார்க்க நேரிடும், தனக்குப் புரிந்திராத அப்பா. ஆனால் அவரும் தன் மேல் வாஞ்சை காட்டிய அப்பாவும் ஒன்றுதான். வீரம்மா பாட்டியின் வார்த்தைகளால் அப்பாவை உதறிப்போட முடியாது என்றாலும் அதே நேரத்தில் இனிமேல் தூய அலங்காரத்துடன் அப்பாவுடன் சைக்கிளில் போய்க்கொண்டிரும் இருக்க முடியாது.

மத்தியானத்துக்கு மேல் எல்லோரிடமும் சொல்லிவிட்டு வீரம்மா பாட்டி எவ்வளவோ மறுத்தாலும் அவர் கைகளில் இரண்டாயிரம் ரூபாயைத் திணித்துவிட்டு காவிரி கிளம்பினாள். தன்னுடைய கைபேசி எண்ணையும் ஒரு துண்டுச் சீட்டில் எழுதிப் பாட்டியிடம் கொடுத்திருந்தாள். பாட்டியிடம் கைபேசி இல்லையென்றாலும் ஊரில் உள்ள யாரிடமாவது வாங்கிப் பேசும்படி காவிரி கூறியிருந்தாள். மேலும் பக்கத்தில் உள்ள ஒருவரின் கைபேசி எண்ணையும் காவிரி வாங்கிக்கொண்டாள்.

7. அமெரிக்கப் பையனுக்குப் புரியாத ஒரு பாடம்

“நீ தப்பு பண்ணிட்ட காவிரி” என்றான் கால்வின்.

“என்ன”

“அந்தப் பாட்டிக்குப் பணம் கொடுத்திருக்கக் கூடாது.”

”ஏன்”

“யோசிச்சுப் பாரு. அன்னைக்கு உங்க அப்பா காசு கொடுக்காததாலதான உன்னைச் சுத்தி இவ்வளவு பெரிசா பயிர் வளர்ந்திருக்கு. அப்படின்னா என்ன அர்த்தம். நீ அந்தப் பாட்டியோட பிள்ளையாதான் இருந்திருக்க. இப்போ நீ பணம் கொடுத்துட்ட இல்லை. இனிமே நீ அவங்க பொண்ணு கிடையாது” என்றான் கால்வின்.

“அதுக்கு வயலுக்குப் போயி அவங்க மறுபடியும் நாத்து நட்டு நான் காசு கொடுக்கணுமாம். நான்தான் வயலுக்குப் போகலியே. வீட்டுலதானே பணம் கொடுத்தேன். இந்தப் பச்சை இன்னும் போகலங்கிறதுதான் அதுக்கான அடையாளம்” என்றாள் காவிரி.    

“எனக்குப் புரியாதது ஒரு விஷயம்தான். இந்த ஊரு கெட்ட வார்த்தைகூட எனக்கு புரியுது. ஆனா அதுல கலந்துருந்த விஷயம்தான் எனக்குப் புரியலை” என்றான் கால்வின்.

“இங்கே இருக்கிற எனக்கே அது இன்னும் சரியாப் புரியலை. புரியலைங்கிறதவிட அந்த உலகமே எனக்குள்ள வராம வாழ்ந்திருக்கேன். அமெரிக்கக் குழந்தை உனக்கு எப்படிப் புரிய வைக்கிறது.”

“என்னை யாரும் குழந்தைன்னு சொன்னாதான் எனக்குக் கோபம் கோபமா வரும். அதுசரி இப்போ என்ன முடிவுல இருக்க பச்சையோடவே வாழ்ந்திடுறதா.”

“ஆமாம். அது அந்தப் பாட்டி நட்ட பச்சை. நீயும் இதுக்குள்ளே வந்திடேன்” என்று கூப்பிட்டாள் காவிரி.

“என்னோட ஹாப்ஸையும் அழைச்சுட்டு வரவா”

“ஆனா அது எனக்குக் கண்ணுக்குத் தெரியாதே”

“என் கண்ணுக்குத் தெரியாத உன்னோட பச்சைக்குள்ள நான் வர்றது மாதிரி உன் கண்ணுக்குத் தெரியாத என்னோட ஹாப்ஸோட அந்தப் பச்சைக்குள்ள நான் இருக்கிறதையும் நீ சகிச்சிக்கிட்டுதான் ஆகணும்” என்று சொன்னான் கால்வின்.

“உன் புலி என்னோட புல்லையெல்லாம் திங்கிறவரைக்கும் எனக்கொன்னும் பிரச்சினை இல்லை” என்றாள் காவிரி.  
                 -ஆசை

No comments:

Post a Comment