Saturday, March 23, 2024

ஊரூரில் ஓர் சமத்துவக் கொண்டாட்டம்! - மேல்தட்டினரின் திணிப்பா?


கர்னாடக இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து சில நாட்களாக சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. கர்னாடக சங்கீத உலகின் வலதுசாரிகள் பெரும்பாலானோர் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருப்பதற்கு, கிருஷ்ணா பெரியாரைப் பற்றிப் பாடியது உட்பட பல குற்றச்சாட்டுகளைக் கூறி, எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இன்னொரு தரப்பும் டி.எம். கிருஷ்ணாவுக்கு அவர் ஒரு போலி முற்போக்கு என்று கூறி எதிர்ப்பு தெரிவிக்கிறது. உண்மையில் டி.எம். கிருஷ்ணா முன்னெடுத்த ‘ஊரூர் ஆல்காட் குப்பம் திருவிழா’வில் என்ன நடக்கிறது? சில ஆண்டுகளுக்கு முன் அந்த நிகழ்வைப் பார்த்த அனுபவத்தை எழுதினேன். அதன் மீள்பகிர்வு இங்கே: 

ஊரூர் ஆல்காட் குப்பத்துக்கும் ஆழ்வார்பேட்டைக்கும் இடையில் எவ்வளவு தூரம் இருக்கும்? 7 கி.மீ. என்கிறது ‘கூகுள்’. ஆனால், இந்த இரண்டு பகுதிகளின் வாழ்க்கை முறைக்கும் கலாச்சாரத்துக்கும் இடையேயுள்ள இடைவெளி இதைவிட பல மடங்கு அதிகம்.

இந்த இடைவெளியைக் குறைப்பதற்கும், கலையுலகில் எல்லாத் தரப்பு மக்களின் பங்கேற்பை ஊக்குவிக்கவும் கர்னாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா உள்ளிட்டோரால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் முயற்சிதான் ‘ஊரூர் ஆல்காட் குப்பம் விழா’.

இதுவரை மேல்தட்டு மக்களின் கலை என்று அறியப்பட்டுவந்த கர்னாடக இசை, பரத நாட்டியம் போன்றவற்றைக் குப்பத்து மக்களிடம் எடுத்துச் செல்லும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கலை விழா அதன் இரண்டாவது ஆண்டில் கூடுதல் அம்சங்களுடன் தற்போது கொண்டாட்டமாக நடந்து முடிந்திருக்கிறது.

இந்த ஆண்டில் ‘ஊரூர்- ஆல்காட் குப்பம் விழா’ வேறொரு பரிணாமம் எடுத்தது. ஆம்! குப்பத்தில் மட்டுமல்லாமல் சமூகத்தின் மேல்தட்டினர் வசிக்கும் பகுதியிலும் நிகழ்ச்சி நடந்தது. மாம்பலத்தில் பிப்ரவரி 20, 2016 அன்று நிகழ்ச்சியின் முதல் பகுதி நடைபெற்றது. ஊரூர் ஆல்காட் குப்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் வில்லுப்பாட்டும் காயத்ரி வெங்கட்ராகவன் குழுவினரின் கர்னாடக இசை நிகழ்ச்சியும் அப்போது நடைபெற்றன.

அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி மாதத்தின் 27, 28 ஆகிய தேதிகளில் ஊரூர் ஆல்காட் குப்பத்தில் விழா நடைபெற்றது. கர்னாடக இசை, பரத நாட்டியம், வில்லுப்பாட்டு, கானா பாட்டு, ஃப்யூஷன் இசை என்று பல்வேறு கலை வடிவங்களின் தொகுப்பாக இந்த இரண்டு நாள் விழாவும் களைகட்டியது.

பெசன்ட் நகருக்கு அருகில் அமைந்திருக்கும் ஊரூர் ஆல்காட் குப்பத்தில் கடல் பின்னணியில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நீல வண்ணத்தில் பாய்மரப் படகுக்கு முன்பாகப் பெரியதோர் தரைவிரிப்பு. பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் அதில் நடைபெற்றன. அதற்கு எதிர்த் திசையில் உள்ள மேட்டுப் பகுதியிலும் சில நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உள்ளூர்க் குப்பத்து மக்களும் மேல்தட்டுக் கலாரசிகர்களும் அருகருகே உட்கார்ந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளை ரசித்துக்கொண்டிருந்த காட்சி அற்புதமானது.

27-ம் தேதியன்று ‘ஃப்ரண்ட்ஸ்’ கலைக்குழுவின் பறையாட்டத்துடன் ‘ஊரூர் ஆல்காட் குப்பம் விழா’ தொடங்கியது. அதிர அதிர அடித்துக்கொண்டு அவர்கள் ஆடும் ஆட்டத்தைப் பார்த்துவிட்டுப் பலரும் எழுந்து ஆட ஆரம்பித்துவிட்டார்கள். அந்தக் குழுவைச் சேர்ந்த இளைஞர் ‘பறையை எதற்கெல்லாம் அடிப்பாங்கன்னு சொல்ல முடியுமா? என்று அங்கே கூடியிருந்தவர்களைக் கேட்டார். அந்த இளைஞரே தொடர்ந்தார், ‘சாவுக்குன்னு எல்லாரும் நெனைச்சுட்டிருப்பீங்க.

உண்மை என்னன்னா, கல்யாணத்துக்கு, வளைகாப்புக்கு, குழந்தைக்குப் பேரு வைக்கிறதுக்கு, காதுகுத்துக்கு, ஆயாக்கள்லாம் வயசுக்கு வந்தா, சாவுக்கு அப்பிடின்னு வாழ்க்கை மொத்தத்துக்குமானது பறை இசை. சாவுக்கு ஏன் பறை அடிக்கிறாங்க தெரியுமா? பறையை அடிச்சா ஆடாம இருக்குறது பிணம் மட்டும்தான். அதாவது பறை இசைங்கிறது உயிர்ப்போட அறிகுறி!” என்று சொல்லி முடித்ததும் அந்தத் திறந்தவெளி அரங்கே கைதட்டலால் அதிர்ந்தது. இடையே டி.எம். கிருஷ்ணா நுழைந்தார். “என்னப்பா, இந்த ஏரியாவுல நல்லா விசிலடிப்பாங்கன்னு சொன்னாங்க, விசில் சத்தத்தையே காணோமே” என்று கலாய்க்க, தொடர்ந்து விசில் பறந்தது.

அடுத்ததாக, அப்படியே நாற்காலிகளைப் பின்பக்கமாகத் திருப்பிக்கொண்டு உட்காரச் சொன்னார்கள். மேட்டுப்பகுதியில் குப்பத்துக் குழந்தைகளின் வில்லுப்பாட்டு. பெருவெள்ளத்தின்போது சென்னையைக் காப்பாற்றியது மனித நேயமே என்ற கருத்தில் அவர்கள் பாடிய வில்லுப்பாட்டுக்கும் அள்ளியது விசில். உள்ளூர் மக்கள் பலரும் பெருமிதத்துடன் தங்கள் வீட்டு மாடிகளிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

வில்லுப்பாட்டு முடிந்ததும் ஸ்ரீஜித் குழுவினரின் பரத நாட்டியம். பரத நாட்டியத்துக்கு அடுத்ததாக ஒரு அமர்க்களம்!

அதிபுதுமையான இசைக்கலைஞர் ரகு தீக்‌ஷித்தின் இசை நிகழ்ச்சிதான் அது. தமிழில் சில வார்த்தைகள்தான் தெரியும் என்றும் தனக்கு மொழிபெயர்ப்பாளராக டி.எம். கிருஷ்ணா இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பாடல்களுக்கு இடையே ரகு பேசியதையெல்லாம் ஒரு வகையாகத் தமிழில் மொழிபெயர்த்துச் சொல்ல கிருஷ்ணா சிரமப்பட்டதும் ஒரு வேடிக்கைதான்! எல்லாவற்றையும் விட வேடிக்கை ரகு கட்டியிருந்த சலங்கையும் அதற்கென்று வைத்திருந்த மைக்கும்தான்.

ரகு தன் கையில் கிடாருடன் இசை சகாக்கள், ‘பெட்டி’ மேளம் வாசித்த மகன் சகிதம் பெரும் விருந்தை அளித்தார். சேட்டைகளும் நிறைய! நிகழ்ச்சியின்போது அந்த இடத்தைக் குறுக்கே கடந்துசென்ற அம்மா ஒருத்தரைப் பார்த்து, “அம்மா நில்லுங்கோ, போகாதீங்கோ, கேட்டுட்டுப் போங்கோ” என்று கலாய்க்க, அந்த அம்மா வெட்கத்துடன் குடுகுடுவென்று ஓடிப்போனார்.

சில கன்னடப் பாடல்கள், இந்திப் பாடல், ஒரு தமிழ்ப் பாடல் என்று அசத்தினார் ரகு தீக்‌ஷித். ரகுவின் பாடல்களுக்கு ஒரு பாட்டி எழுந்து ஆட ஆரம்பித்ததுதான் உச்சம். ரகுவைப் பற்றிய முக்கியமான செய்தியை டி.எம். கிருஷ்ணா நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அதாவது, ஊரூர் ஆல்காட் இசைவிழாவுக்கு அதிக அளவில் பண உதவி செய்ததே ரகு தீக்‌ஷித்தானாம்!

இரண்டாம் நாள் நிகழ்வு இசைக் கல்லூரி மாணவர்களின் நாகஸ்வரக் கச்சேரியுடன் தொடங்கியது. அடுத்ததாக, ‘நாளந்தாவே’ என்ற சிறுவர்களின் சேர்ந்திசைக் குழுவினரின் பாடல் நிகழ்ச்சி. இருபதுக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் உண்மையிலேயே அசத்திவிட்டார்கள். அது முடிந்ததும் விஜய் சிவா குழுவினரின் கர்னாடக இசை நிகழ்ச்சி.

இசை நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு மேடையருகில் நின்றுகொண்டிருந்த விஜய் சிவாவின் குழுவினரை, மேல்சட்டை போடாமல் நின்றிருந்த குப்பத்துச் சிறுவர்கள் அருகில் போய் அதிசயமாய் வேடிக்கை பார்த்தார்கள். தம்பூராவைச் சுண்டிச் சுண்டிப் பார்த்தார்கள். அவர்களுக்கு இன்முகத்துடன் அந்தக் குழுவினர் பதிலளித்துக்கொண்டிருந்த காட்சி அலாதியானது.

விஜய் சிவா தனது இசை நிகழ்ச்சியில் தமிழ்ப் பாடல்களையே பாடினார். ஒவ்வொரு பாடல் தொடங்குவதற்கு முன்பும் இந்தப் பாடல் எந்த சாமியைப் பற்றி என்று சொல்லும் குழந்தைகளுக்குப் பரிசு என்று அறிவித்ததும் அங்குள்ள குழந்தைகளுக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது. ஒவ்வொரு பாடலும் முடிந்ததும் பரிசைப் போட்டிப் போட்டு வாங்கினார்கள் (சாக்லேட்டை விட குழந்தைகளுக்கு வேறு பெரிய பரிசு என்ன இருக்க முடியும்?!).

இரண்டாம் நாள் நிகழ்ச்சியின் மிக முக்கியமான அம்சங்களுள் ஒன்று அந்தக் குப்பத்துச் சிறுமிகளின் பரத நாட்டியம்தான். சமீபத்தில் கற்றுக்கொண்டதுதான் என்றாலும் மிகவும் நம்பிக்கையுடன் அந்தச் சிறுமிகள் ஆடியது அனைவருக்கும் உற்சாகத்தை அளித்தது.

இறுதியாக, ‘முண்டாசுப்பட்டி’ இசையமைப்பாளர் ஷான் ரோல்டனும் பாடகர் அந்தோணிதாஸும் இணைந்து வழங்கிய அட்டகாசமான ஃப்யூஷன் இசை. மக்களைப் பரவசப்படுத்திய நிகழ்ச்சி அது! நிகழ்ச்சியின் இறுதியில் முக்கியமான ஒருவர் எழுந்து ஆட ஆரம்பித்துவிட்டார். அவரைப் பார்த்ததும் எல்லோரும் எழுந்து ஆட ஆரம்பிக்க மணல் மூட்டம் புறப்பட்டது. அவர் வேறு யாருமல்ல, சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன்தான்.

நித்தியானந்த் ஆடுவதைப் பார்த்துவிட்டு டி.எம். கிருஷ்ணா சும்மா இருப்பாரா? அவரும் குத்தாட்டம் போட ஆரம்பித்தார். ஆகா, நாக்கை மடக்கி மடக்கி அவர் போட்ட குத்தாட்டத்தைத் திரைப்பட இயக்குநர்கள் யாராவது பார்த்திருந்தால் அவரைக் கொத்திக்கொண்டு போயிருப்பார்கள்! அவர் மனைவி சங்கீதாவும் ஆடினார். பெரும் கூட்டமே ஆடியது. ஆடி முடிந்ததும் டி.எம். கிருஷ்ணா இப்படிச் சொன்னார், ‘இந்தப் பரவச ஆட்டம் இந்த நிகழ்ச்சியின் முடிவல்ல. அடுத்த ஆண்டு நிகழ்ச்சிக்கான ஆரம்பம்!”

            - ஆசை, நன்றி: ‘இந்து தமிழ்’

     


1 comment:

  1. ஊரூரில் நடைபெறும் இக்கொண்டாட்டத்தை படிக்கப் படிக்க விழாவில் பங்கெடுத்தது போன்ற‌ ஒரு உணர்வு ஏற்படுகிறது. விழாவை கண்முன் காட்சிப்படுத்திய அண்ணாவிற்கு நன்றி

    ReplyDelete