Sunday, October 11, 2020

அப்பா இல்லாத வீட்டில் இனி பயமில்லாமல் விளையாடு கொண்டைக்குருவியே!ஆசை

அப்போது எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு சில நாட்களாகவே சந்தேகத்துக்குரிய நடமாட்டம் இருப்பதை உணர முடிந்தது. நானும் கண்டுகொள்ளாததுபோல் இருந்துவிட்டேன். சில நாள் கழித்து சந்தேகத்துக்குரிய நடமாட்டம் வெளிப்படையான நடமாட்டமாக மாறியது. யாரோ ஒரு அந்நியர் அடிக்கடி எங்களை வேவுபார்க்க வருவது தெளிவாகிவிட்டது. என்ன காரணத்துக்காக வேவு பார்க்க வருகிறார் என்று தெரியவில்லை. ஒரு கட்டத்தில் வேவுபார்த்தல் என்ற நிலையைத் தாண்டித் தன் உரிமையை நிலைநாட்டிக்கொள்வதுபோல் அவர் எங்கள் வீட்டை ஆக்கிரமித்துவிட்டிருந்தார்.

அவர் வேறு யாருமல்ல. கொண்டைக்குருவிதான். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் செம்பிட்டக் கொண்டைக்குருவி (Red-vented bulbul). எங்கள் வீட்டுச் சுற்றுச்சுவருக்குள் இருந்த மரத்தில் அது கூடு கட்ட ஆரம்பித்திருக்கிறது. அது தனி ஆள் கிடையாது, இன்னொருத்தரும் அதற்குத் துணை. இப்போதுதான் எனக்கு விஷயம் புரிந்தது. தான் கூடு கட்டுவதற்கு எந்த மரம் ஏற்றது, எந்தக் கிளை ஏற்றது, எந்த வீடு ஏற்றது என்பவற்றையும் கூடுகட்டும் இடம் பாதுகாப்பானதுதானா, அருகில் உள்ளவர்கள் ஆபத்தற்றவர்களா என்பதை முதலில் அறிந்துகொள்வதற்காகக் கொண்டைக்குருவி நோட்டம்பார்க்க முதலில் வந்திருக்கிறது. நோட்டம்பார்க்க வரும்போதெல்லாம் சுற்றுச்சுவரின் மேல் சற்று உட்கார்ந்துவிட்டுப் போவது, கொடியில் ஊஞ்சலாடுவது, அருகில் உள்ள செடிகொடிகளில் சற்று உலாவிவிட்டு வருவது என்று வழக்கத்தை வைத்திருந்தது. பிறகு தன் வருகையை அதிகரித்து, அதைத் தன்னுடைய பிரதேசமாக ஆக்கிக்கொண்டு அங்கிருக்கும் மரத்தில் கூடு கட்ட ஆரம்பித்தது.

அதன் கூடு உருவாகும் விதத்தை அறிந்துகொள்ள எனக்கு ஆவலாக இருந்தது. மாடிப்படிகளுக்கு அருகில் இருந்த மரத்தில்தான் கூடு உருவாக ஆரம்பித்தது. மாடியில் போய்ப்பார்த்தால் இரண்டு அடி தூரத்தில் பார்க்கலாம். அதன் கூடு உருவாகும் இடத்தைப் பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. இலைக்காம்பைவிடச் சற்றுப் பெரிய தளிர்க் கிளைகள் இரண்டுக்கு இடையில் பொதிந்து கூடு உருவாக ஆரம்பித்திருந்தது. அந்தத் தளிர்க் கிளையில் அணில் கூட ஓடாது, அவ்வளவு மென்மை. இதில் என்ன அப்படி பாதுகாப்பு என்று ஆயிரத்தெட்டு தடவை நோட்டமிட்டாய் கொண்டைக்குருவியே என்று எனக்குள் கேட்டுக்கொண்டேன். ஆனால் உண்மையில் அதற்கு அந்த இடம் போதுமானது, அவற்றின் கனத்தையும் போடக்கூடிய முட்டைகள், அதிலிருந்து வெளியாகக் கூடிய குஞ்சுகள் எல்லாவற்றையும் கணக்குப்போட்டுதான் கூட்டை உருவாக்க ஆரம்பித்திருந்தது. சிறுசிறு நார்கள் செத்தைகள் போன்றவற்றைக் கொண்டு சிறு கிண்ணம் போன்ற வடிவில் அந்தக் கூடு உருவாக ஆரம்பித்திருந்தது. அந்தக் கூட்டைக் கட்டி முடிப்பதற்குள் ஆயிரமாயிரம் தடவை கொண்டைக்குருவி கட்டுமானப் பொருட்களை எடுத்துக்கொண்டு கூட்டை நோக்கிப் பறந்திருக்கும். எப்படியோ கூடு உருவாகிவிட்டது.

ஒருநாள் மாடிக்குப் போய்ப் பார்த்தேன். கூட்டுக்குள் கொண்டைக்குருவி உட்கார்ந்திருந்தது. அது முட்டையிட்டு அடைகாத்துக்கொண்டிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். சற்றுப் பக்கத்தில் மாடியில் செருகப்பட்டிருந்த கம்பு ஒன்றில் இன்னொரு கொண்டைக்குருவி என்னைப் பார்க்காததுமாதிரி பார்த்துக்கொண்டிருந்தது. சரி அவற்றின் குடும்ப வாழ்க்கையில் தலையிடக் கூடாது என்று நான் நல்லபிள்ளையாகக் கீழே வந்துவிட்டேன். ஆனால் அந்த அந்நியர்கள் என் அளவுக்குக் கண்ணியமாக இல்லை.

காம்பவுண்டு சுவரை ஒட்டி இருந்த தண்ணீர்க் குழாய்க்குக் கீழே உள்ள வாளியில் குதித்துக் குளிப்பது, தண்ணீர் குடிப்பது என்று எங்கள் அனுமதியில்லாமல் அநாகரிகமான செயல்களில் ஈடுபட ஆரம்பித்தார்கள்! அது மட்டுமல்லாமல் போர்டிகோ மாதிரி இருந்த இடத்தின் மேலே ஒரு மின்விசிறி இருக்கும். அதன் மேல் வந்து உட்கார்ந்துகொண்டு விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் அத்துமீறிச் செயல்பட்டாலும், அது எங்கள் வீடாக இருந்தாலும் நான் அவர்களை இடையூறு செய்யக் கூடாது என்று எவ்வளவு ஒதுங்கி நடந்தேன் தெரியுமா? அவர்கள் வந்து விளையாடும்போது சிறுவர்கள் பெரியவர்கள் யாரையும் சத்தம்போடாமல் பார்த்துக்கொண்டதுடன் அவை விளையாடும் இடத்துக்கு அருகில் யாரும் வராமலும் பார்த்துக்கொண்டேன். முரட்டு ஆசாமியான என் அப்பாவைக்கூட அதட்டி ஒடுக்கினேன். வீட்டுக் கதவை மெலிதாகத் திறந்துவைத்துவிட்டு அந்த அந்நியர்கள் என்ன அட்டூழியம் செய்துகொண்டிருக்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டிருப்பேன்.

லேடிபேர்ட் சைக்கிளுக்கு முன்னால் உள்ள கூடையில் வந்து படுத்துக்கொள்வது அந்த அந்நியர்களுக்குப் பிடித்தமான செயல். படுத்துப் புரள்வார்கள், சமயத்தில் ஆள் வரும்போதுகூட பயப்படாமல் மும்முரமாக விளையாடிக்கொண்டிருப்பார்கள். மனிதர்களை மதிப்பதே இல்லை. உண்மையான வீட்டுக்காரர்களான நாங்கள் அவர்களுக்காக அடங்கி ஒடுங்கி நடந்துகொள்ள அவர்களோ எங்களைச் சட்டை செய்வதே இல்லை. ஆகா! எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆபத்து புரிய வந்தது. அவர்கள் நம் வீட்டை அபகரித்துவிட்டிருக்கிறார்கள். கயவர்கள், இருக்க இடம் கொடுத்துச் சுதந்திரமாக உலவ விட்டதற்கு நன்றியுணர்ச்சியே இல்லாமல் வீட்டைக் கைப்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். போலிப் பத்திரம் ஏதாவது தயாரித்திருப்பார்களா என்று வேறு எனக்குச் சந்தேகம். அந்நியர்களை ஆட்சியை விட்டுத் துரத்த இன்னொரு சுதந்திரப் போர் நிச்சயம் தேவை என்பது எனக்குத் தெரிந்தது. அந்தச் சுதந்திரப் போருக்கு என்ன பெயர் வைக்கலாம்? ‘கொண்டையனே வெளியேறு இயக்கம்’ என்று பெயர் வைக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

அவற்றை வெளியேற்றுவதற்கான வேலைகளில் நிஜமாகவே எங்கள் அப்பா ஏற்கனவே இறங்கிவிட்டிருந்தார். கூடு இருந்த மரத்தில் நிறைய கொசு அடைவதாகப் பக்கத்து வீட்டுக்காரர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். அதனால் அப்பா மரத்தை வெட்டத் தீர்மானித்துவிட்டார். அப்போதுதான் முட்டையிட்டு அடைகாத்துக்கொண்டிருக்கிறது. அதற்குள் மரத்தை வெட்டினால் அவ்வளவுதான் என்பதால் அப்பாவிடம் நயமாகக் கெஞ்சினேன். அவர் முரட்டு மனிதர், அவரிடம் மென்மைக்கு இடமே கிடையாது. சாப்பிடும்போது கரப்பான் பூச்சியைப் பார்த்தால்கூட அப்படியே கையால் சப்பென்று அடித்துக் கொன்றுவிடுவார். பக்கத்து வீடுகளில் பாம்பு என்று கேள்விப்பட்டாலே வீட்டில் அதற்காகப் பிரத்தியேகமாகத் தயாரித்து வைத்திருக்கும் சுளுக்கியை எடுத்துக்கொண்டு ஓடுவிடுவார். இதுவரை பாம்பை அடிப்பதில் அவருக்குத் தோல்வியே கிடையாது. அப்படிப்பட்டவரிடம் கெஞ்சிப் பிரயோசனம் இல்லை. பாவபுண்ணியத்தைச் சொல்லிதான் தடுக்க வேண்டும் என்று சொல்லித் தற்காலிகமாக அவரைத் தடுத்துவிட்டேன். குஞ்சு பொறித்து பறந்து சென்ற பிறகு வெட்டிவிடலாம் என்ற ஒப்பந்தத்துக்கு வந்தோம்.

சென்னைக்கு வந்துவிட்டு மறுபடியும் ஊருக்குத் திரும்பியபோது அங்குள்ள சிறுவர்கள் வந்து என்னிடம் சென்னார்கள், குஞ்சு பொறித்துவிட்டதென்று. மாடியில் நின்றுகொண்டு அவர்கள் கிளையைச் சற்று இழுத்துக் கூட்டினுள் இருந்த குஞ்சைப் பார்த்திருக்கிறார்கள். நான் அப்படிச் செய்யக் கூடாது என்று அவர்களை எச்சரித்துவிட்டு மாடிக்குச் சென்று கிளையையோ கூட்டையோ தொடாமல் எட்டிப் பார்த்தேன். கூட்டினுள் ஒரே ஒரு குஞ்சு அப்படியே பொதிந்து உட்கார்ந்துகொண்டிருந்தது. அருகே இருந்த ஒரு கம்புக்கு மேலே அதன் தாய்ப் பறவை உட்கார்ந்து கண்காணித்துக்கொண்டிருந்தது. நான் அதைப் பார்த்தபோது, "நான் கண்காணிக்கவில்லை, உன்னைப் பற்றித்தான் எனக்குத் தெரியுமே, நான் சும்மாதான் இங்கு உட்கார்ந்துகொண்டிருக்கிறேன்" என்று அது என்னிடம் சொன்னது.

என் வாழ்வில் என்னை மிகவும் நெருங்கி வந்த பறவைகள் காகமும் கொண்டைக்குருவியும்தான். காகம் என் கையில் இட்லியோ பிஸ்கட்டோ வாங்கித் தின்னும் அளவுக்கு நெருங்கிவந்திருக்கிறது. கொண்டைக்குருவியோ மாடியில் சாயங்காலம் நான் படித்துக்கொண்டிருக்கும்போது இரண்டடி தள்ளியிருக்கும் கட்டையில் வந்து உட்கார்ந்துகொண்டிருக்கும். அப்படி உட்கார்ந்திருக்கும்போது நான் அதை மிகவும் என் மனதுக்கு நெருக்கமானதாக உணர்வேன். ஒரு துணையோடுதான் நாம் மாடியில் இருக்கிறோம் என்று எனக்கு உற்சாகமாக இருக்கும். மற்ற பயல்கள் அப்படியில்லை. கரிச்சான் பயல்கூட ஓரளவுக்குப் பக்கத்தில் வருவான். ஆனால் இந்தத் தேன்சிட்டுப் பயல் பண்ணிக்கொள்ளும் பிகு இருக்கிறதே. அருகில் போனாலே ஓடிவிடுவான். என்னவோ தான்தான் உலக அழகி (அழகன்) என்று நினைப்பு, அவனை/ளை ஒளிந்து நின்றுதான் பார்க்க வேண்டுமாம். ஆனால் கொண்டைக்குருவிப் பயல் அப்படியில்லை. ஆமாம் அவன் ஏன் என்னருகில் வரப் பயப்பட வேண்டும். அவன்தான் இந்த வீட்டை உரிமையாக்கிக்கொண்டானே. நான்தானே அவனுக்குப் பயப்பட வேண்டும். தன் உரிமையை நிலைநாட்டிக்கொள்ளும் விதத்தில்தான் அவன் எனக்கு அருகில் தைரியமாக உட்கார்ந்திருக்கிறான் போல. அவன் என்னருகில் வரும்போதெல்லாம் ஏதோ அவனுடைய இடத்தில் நாம் இருக்கிறோமோ என்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடுவான்.

அப்போது என் நண்பன் அவனுடைய மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து ஓரிரு நாட்கள் தங்கினான். அவனுக்கு மூத்தது ஒரு பெண், அடுத்து ஒரு சிறு பையன். அந்தப் பையன் வீட்டுக்குள் நுழைந்த கணத்தில் ஒட்டுமொத்த வீடும் தலைகீழாகப் புரள ஆரம்பித்தது. புதிய இடம் என்ற உணர்வு சற்றும் இல்லாமல் ஓடவும் உருளவும் புரளவும் ஆரம்பித்தான். அவனுடைய விளையாட்டுக்குத் துணை யாரும் தேவையில்லை. அவன் விளையாடுவதற்கு அவன் மட்டுமே போதும். யாராலும் அவனை அடக்க முடியவில்லை. அவ்வளவு விளையாட்டு! நண்பனும் நானும் நெருக்கமாகப் பேசிக்கொள்வதற்காக வெளியில் வந்தோம். அப்போது தன் பையனைப் பற்றி அவன் வியந்து பேசினான். "தம்பிகிட்ட ஒரு இயல்பு இருக்கு அவன் எந்த எடத்துக்குப் போனாலும் அவன் அதத் தன்னோட இடமா மாத்திக்குவான்" என்றான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது, முதல் நாள்தான் கொண்டைக்குருவியைப் பற்றி இந்தக் கவிதையை எழுதினேன்:

என் இடம்
நீ வந்தால்
அது
உன் இடம்
ஆகிவிடுகிறதே
எப்படிக்
கொண்டைக்குருவியே?

கொண்டைக்குருவியைப் பற்றி நான் எழுதியது என் நண்பன் தன் குழந்தையைப் பற்றிச் சொன்னதோடு எவ்வளவு பொருந்திப்போகிறது!

***

சில நாட்கள் கழித்து கூட்டில் ஆட்களை யாரும் காணோம். அப்பா மரத்தை அடியோடு வெட்டாமல் பாதி மட்டும் வெட்டியிருந்தார். மாடியில் உட்கார்ந்து ஒருநாள் படித்துக்கொண்டிருந்தபோது மாடியின் சுவரில் இரண்டு ஆசாமிகளைப் பார்த்தேன். ஒரு ஆசாமி வாயைப் பிளந்துகொண்டிருந்தார்; மற்றொரு ஆசாமி ஒரு வேப்பம்பழத்தை அப்படியே முழுசாக மேற்படியார் வாயில் ஊட்டியதும் அவர் அப்படியே விழுங்கிவிட்டார். நமக்கெல்லாம் தொண்டையை அடைத்துக்கொள்ளுமே, மேற்படியார் எப்படி விழுங்கினார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதை விட ஆச்சரியம் மேற்படியார் எவ்வளவு விரைவில் வளர்ந்திருக்கிறார். கூட்டில் பார்த்த முட்டை இனி வானை அளக்க ஆரம்பிக்கும்!

***

மரம் வளர்வதும் அதில் அதே கொண்டைக்குருவியோ அல்லது வேறு ஒரு கொண்டைக்குருவியோ கூடு வைப்பதும், கொசுவுக்காக அப்பா மரத்தை வெட்டுவதும் எல்லாம் திரும்பத்திரும்ப இயற்கையின் சுழற்சிபோல் மாறிமாறி நிகழ்ந்துகொண்டிருந்தது. சமீபத்தில் அப்பா மரணமடைந்த பின் ஒட்டுமொத்த வானத்தையும் அதன் கீழுள்ள அந்த வீட்டையும் ஏகபோகமாக அந்தக் கொண்டைக்குருவியே எடுத்துக்கொண்டிருக்கும். இனி அதனுடன் போர் தொடுக்க அந்த வீட்டில் யாருமில்லை!  

No comments:

Post a Comment