ஆசை
(இன்று ஸ்டீவன் ஹாக்கிங் நினைவு நாள். 2018ல் அவர் மறைந்தபோது எழுதிய கட்டுரை இது)
'மரணத்தின் குகைவாயில் கண்ணுக்குத் தெரியும்போது, எழுத்தில் ஒளி ஊடுருவுகிறது' என்று சுந்தர ராமசாமி ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவலின் தொடக்கத்தில் எழுதியிருப்பார். அது ஸ்டீவனுக்கும் பொருந்தும்! ஆனால், அருகில் தெரிந்த குகைவாயிலைத் தனது அசாத்தியக் கற்பனையின் எரிபொருள் தந்த உத்வேகத்தின் மூலம் நெடியதாக்கி, இரண்டு ஆண்டுகளை 55 ஆண்டுகளாக ஆக்கி, இறுதியில் காலத்தின் குகைவாயில் என்ற கருந்துளைக்குள் போய் மறைந்தார்.
மரணத்தை வாழ்க்கை வென்ற தன் கதையைப் பற்றி ஸ்டீவன் கூறும்போது, “அகால மரணம் என்ற சாத்தியத்தை எதிர்கொண்டிருக்கும்போதுதான் இந்த வாழ்க்கையானது வாழத் தகுந்தது என்றும், நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் ஏராளமாக இருக்கின்றன என்றும் உங்களுக்குப் புரிபடும்” என்றார்.
ஹாக்கிங்கால் எழுதவோ பேசவோகூட முடியாது. இருந்த ஒரே சாதனம் அவரது மூளைதான். மூளையின் அவரது ஆய்வகம். கற்பனைதான் அவரது கருவி.
அங்கிருந்து தொடங்குகிறது இந்தப் பிரபஞ்சத்தை அளக்க முயன்ற அறிவியல் மேதையின் பயணம்.ஸ்டீவன் ஹாக்கிங் தனது 76-வயதில் மார்ச்-14, 2018 அன்று காலமானார். 1942, ஜனவரி 8-ம் தேதி பிறந்த ஸ்டீவன் ஹாக்கிங் தனது பிறந்த நாளைப் பற்றிக் கூறும்போது மாபெரும் விஞ்ஞானி கலீலியோ இறந்து சரியாக 300 ஆண்டுகள் கழித்துப் பிறந்தேன் என்பார். கலீலியோ நினைவுநாளில் பிறந்த ஸ்டீவன் ஹாக்கிங் மற்றுமொரு மாபெரும் அறிவியலாளர் ஐன்ஸ்டைனின் பிறந்து சரியாக 139 ஆண்டுகள் கழித்து அதே தினத்தில் இறந்தது அறிவியலைப் பொறுத்தவரை ஒரு தற்செயல் நிகழ்வாக இருக்கலாம். ஆனால், அந்தத் தற்செயலிலும் ஒரு தொடர்பை நம்மால் காண முடியும். மூன்று பேருமே அவரவர் காலத்தில் இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றி இருந்த புரிதலைப் பல மடங்கு அதிகரித்தவர்கள். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் அதுவரை பிரபஞ்சத்தைப் பற்றி மனித குலம் நம்பியதைப் புரட்டிப்போட்டவர்கள்.
ஸ்டீவன் ஹாக்கிங் நமக்கு ஏன் முக்கியமானவர்? அவருடைய கண்டுபிடிப்பால் நம் அன்றாட வாழ்க்கையில் ஏதும் பயனடைந்திருக்கிறோமா? கணினித் துறை உள்ளிட்டவற்றில் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு ஸ்டீவன் ஹாக்கிங்கின் கண்டுபிடிப்புகள் ஏதும் பங்காற்றியிருக்கின்றனவா? அல்லது, அன்றாடம் பசியில் துடித்துக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களின் பசியை ஸ்டீவன் ஹாக்கிங்கின் கண்டுபிடிப்புகள் ஆற்றியிருக்கின்றனவா? இப்படி, நடைமுறை சார்ந்து நிறைய கேள்விகள் கேட்டுப்பார்த்தால் அதற்கு நாம் வருவித்துக்கொள்ளும் பதில்கள் எதிர்மறையாக இருக்கலாம். இன்னும் நேரடியாக நிரூபிக்கப்படாத கருந்துளைகளைப் பற்றி மாற்றி மாற்றி அறிவியலாளர்கள் பேசிக்கொள்வதில் நமக்கு என்ன பயன் என்றும் கருதலாம். சார்பியல் கோட்பாடு, குவாண்டம் கோட்பாடு போன்றவற்றின் தொடக்க காலத்தில் அந்தக் கோட்பாடுகள் அளித்த கற்பனையையும் ஈர்ப்பையும் தாண்டிப் பலருக்கும் நடைமுறை சார்ந்த கேள்விகள் இருந்திருக்கலாம். உண்மை, என்னவென்றால் மனித குலத்தின் அறிவு வளர்ச்சியில் இந்தக் கோட்பாடுகள் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியதோடு மட்டுமல்லாமல் நம் அன்றாட வாழ்க்கையையும் ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்திருக்கின்றன. செயற்கைக்கோள்கள், கணினித் தொழில்நுட்பம், இடமறிதல் தொழில்நுட்பம் (ஜிபிஎஸ்), தகவல்தொடர்பு என்று ஏராளமான வகையில், கிட்டத்தட்ட இன்று நம் வாழ்வின் அனைத்து வழிகளிலும் சார்பியல் கோட்பாடும் குவாண்டம் கோட்பாடும் நம்முடன் உறவாடிக்கொண்டிருக்கின்றன. அறிவியல் புனைகதைகள் தரும் கிளர்ச்சியைத் தாண்டியும் நம் அன்றாடத்தை இந்தக் கோட்பாடுகள் மாற்றியமைத்திருக்கின்றன. ஹாக்கிங்கின் கண்டுபிடிப்புகள், அதாவது கண்டறிதல்களின் நடைமுறைப் பயன் நம்மை நேரடியாக வந்தடைய சில பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், நடைமுறைப் பயன்களைக் கடந்தும் ஹாக்கிங்கின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் மிக முக்கியமான செய்தி ஒன்று உண்டு. அதுதான் கற்பனைத்திறன்!
ஐன்ஸ்டைனின் புகழ்பெற்ற வாக்கியம் ஒன்று: “அறிவை விட மிகவும் முக்கியமானது கற்பனைத்திறன். ஏனெனில், அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவற்றோடு முடிந்துவிடுகிறது. கற்பனைத்திறனோ இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் அளாவுவது; இன்று நாம் அறிந்திருப்பதை மட்டுமல்ல இனி நாம் அறிந்துகொள்ளப்போவதையும் உள்ளடக்கியது.” இதற்கு நேரடி உதாரணமாக ஐன்ஸ்டைனின் வாழ்க்கையும் இருந்தது. அறிவியலையும் இந்த உலகத்தையும் புரட்டிப்போட்ட ஐன்ஸ்டைனின் முக்கியமான மூன்று கோட்பாடுகள் 1905-ல் வெளியாகின. ‘ஒளிமின் விளைவு’, ‘பிரௌனியன் இயக்கம்’, ‘சிறப்பு சார்பியல் கோட்பாடு’ ஆகிய மூன்று அறிவியல் கட்டுரைகளும் அந்த ஆண்டில் வெளியாயின. காலமும் இடமும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை, ஒளியின் வேகத்தைத் தாண்ட முடியாது, ஒளியின் வேகத்தை நெருங்கினால் ஒரு பொருள் அளவில் மிக மிகச் சுருங்குவதுடன் அதன் நிறையானது நம்பவே முடியாத அளவில் அதிகரிக்கும் என்பது போன்ற கருத்துகளை அவர் உருவாக்கியது சுவிட்சர்லாந்தின் காப்புரிமை நிறுவனம் ஒன்றில் சாதாரண கிளர்க்காகப் பணியாற்றியபோது. பெரிய பெரிய தொலைநோக்கிகள், நுட்பமான கருவிகளைக் கொண்ட ஆய்வகம் போன்றவற்றின் உதவியைக் கொண்டு அல்ல, வேலை நேரத்துக்கு இடையே வெறும் பென்சிலையும் காகிதத்தையும் எல்லாவற்றுக்கும் மேலாகத் தன் கற்பனையையும் கொண்டே தன் ஆரம்பகாலக் கண்டுபிடிப்புகளை ஐன்ஸ்டைன் நிகழ்த்தினார். ஒரு பென்சில், காகிதம், ஒரு கற்பனை... இந்த உலகம் அதற்குப் பின் முற்றிலுமாக மாறியது.
அதே போல்தான் ஸ்டீவன் ஹாக்கிங்கும்! ஐன்ஸ்டைனின் மேதைமை புரிந்துகொள்ளப்படாமல் காப்புரிமை அலுவலத்தின் அவர் முடக்கப்பட்டார் என்றால், ஸ்டீவன் ஹாக்கிங்கின் நிலை இன்னும் மோசம். சக்கரநாற்காலியில் முடங்கி, கண்களையும் ஓரிரு விரல்களையும் தவிர எதையும் அசைக்க முடியாத நிலை. ‘ஆமியோட்ராஃபிக் லேட்டரல் ஸ்கிலரோஸிஸ்’ என்ற நோயின் காரணமாக தசை-நரம்புகள் கட்டுப்பாட்டைக் கொஞ்ச கொஞ்சமாக இழந்து குறுகிய காலத்தில் இறந்துவிடுவார் என்று மருத்துவம் அவருக்கு எச்சரிக்கை கொடுத்தபோது ஸ்டீவனுக்கு வயது 21. இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்தையும் விளக்கக்கூடிய ‘மாபெரும் விதி’யைக் கண்டுபிடிக்க முயன்ற அந்த இளைஞனிடம் ‘இன்னும் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள்தான் நீ உயிரோடு இருப்பாய்’ என்று மருத்துவர் கூறியபோது ஹாக்கிங் என்ன நினைத்திருப்பார்? எல்லா மனிதர்களையும் போல அப்படியே நொறுங்கித்தான் போனார். ஆனால், மனிதர்கள் இரண்டு வகைப்படுவார்கள். அதீதமான அழுத்தத்தில் ஒன்று மடிந்துபோவார்கள், இல்லையென்றால் திமிறி, வெடித்தெழுவார்கள். ஸ்டீவன் இரண்டாவது ரகம்.
அறிவியல் களத்துக்குள் ஸ்டீவன் ஹாக்கிங் நுழைந்தபோது கருந்துளைகள், ஒருமைநிலை ஆகியவற்றைப் பற்றிய விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியிருந்தன. சூரியனை விடப் பல மடங்கு நிறை கொண்ட விண்மீன் ஒன்று ஒரு கட்டத்தில் தன் அதீத நிறையின் காரணமாக உள்குலைவு அடைகிறது. வெடிப்பின் நேரெதிர் உள்குலைவு. வெடிப்பு என்பது, சிதறி வெளிப்புறமாக விரிவடையும் என்றால் உள்குலைவு என்பது குலைந்து மேலும் மேலும் குறுகிக்கொண்டே போவது. அப்படிக் குறுகிக்கொண்டே போகும் விண்மீன் மிகமிகச் சிறியதாகவும் மிக மிக அதிக அளவு அடர்த்தி கொண்டதாகவும் மாறும். எடுத்துக்காட்டாக, பூமி ஒரு கருந்துளையாக மாறுகிறது என்று வைத்துக்கொள்வோம். இரண்டு செண்டிமீட்டர் விட்டம் கொண்ட ஒரு கோலிக்குண்டு அளவுக்கு பூமி சுருங்கிவிடும். அந்த கோலிக்குண்டை எடைபோட்டுப் பார்க்கிறீர்கள் என்று கற்பனை செய்துகொள்வோம். அதன் எடை குத்துமதிப்பாக 6,000,00,00,000,00,00,000,00,00,000 கிலோ இருக்கும். இதையே விண்மீனின் கருந்துளைக்குக் கற்பனை செய்துபாருங்கள். ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியல் கோட்பாட்டின்படி அந்த அளவுக்கு நிறையுள்ள பொருள் தன்னைச் சுற்றியுள்ள இடத்தையும் காலத்தையும் வளைத்து, மாயஜாலக்காரர் தன் மேல் ஒரு போர்வையைப் போர்த்திக்கொண்டு ‘சூ மந்திரக்காலி’ என்று சொல்லிவிட்டு மறைந்துபோவதுபோல், மறைந்துவிடும். மறைந்துவிடும் என்றால் காணாமல்போவது என்று அர்த்தம் அல்ல. எந்த ஒரு பொருளையும் அதிலிருந்து வரும் ஒளியை வைத்துதான் நாம் காண்கிறோம். கருந்துளையிலிருந்து ஒளி வெளிப்படாதது மட்டுமல்ல, அதைக் கடந்துசெல்லும் ஒளியையும் அது வளைத்துக்கொண்டு விழுங்கிவிடும் என்பதால் அதை நாம் காண முடியாது. கருந்துளையின் மையத்தில் காலமும் இடமும் ஸ்தம்பித்துப்போயிருக்கும். இந்த நிலைக்குப் பெயர் ‘ஒருமைநிலை’ (சிங்குலாரிட்டி). ஸ்டீவன் ஹாக்கிங்கின் பிரதான களம் கருந்துளையும் ஒருமைநிலையும்தான்.
கருந்துளைக்குள் போன எதுவும் வெளியில் வர முடியாது என்ற கருத்தாக்கம்தான் அப்போது பரவலாக நிலவியது. அந்த எண்ணத்தை ஸ்டீவன் ஹாக்கிங்கின் கண்டுபிடிப்பு புரட்டிப்போட்டது. கருந்துளைகளிலிருந்து ஒரு கட்டத்தில் கதிர்வீச்சும் அணுத்துகள்களும் கசிய ஆரம்பித்து இறுதியில் கருந்துளை வெடித்து மறைந்துவிடும் என்று ஹாக்கிங் கண்டறிந்தார். அதுமட்டுமல்லாமல், பரவலாக நம்பப்படுவது போலல்லாமல் கருந்துளைகள் உண்மையிலேயே கருப்பாக இருப்பதில்லை என்றும் அவர் கூறினார். தனது கண்டுபிடிப்பை ‘நேச்சர்’ இதழில் ‘கருந்துளை வெடிப்புகள்?’ என்ற தலைப்பில் 1974-ல் கட்டுரையாக எழுதினார் ஹாக்கிங். இயற்கையைப் பற்றிய ஒருங்கிணைந்த ஒற்றைக் கோட்பாட்டை நோக்கிய, அதாவது ஒன்றுக்கொன்று பிணைக்க முடியாதபடி இருக்கும் சார்பியல் கோட்பாட்டையும் குவாண்டம் கோட்பாட்டையும் இணைக்கும் முயற்சியை நோக்கிய பயணத்தில் முதல் மைல்கல் என்று அறிவியலாளர்களால் இந்தக் கட்டுரை புகழப்படுகிறது.
அவருடைய கண்டுபிடிப்பு ‘ஹாக்கிங் கதிர்வீச்சு’ என்று பெயரில் அழைக்கப்படுகிறது. அதுவரை கருந்துளைகள் ‘அழிவுசக்திகள்’ என்றுதான் பார்க்கப்பட்டுவந்தன. ஹாக்கிங்கின் கண்டுபிடிப்பு இந்தக் கண்டுபிடிப்பு கருந்துளைகளைப் பற்றிய கருத்தாக்கங்களைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது. எல்லோரும் நினைத்துக்கொண்டிருப்பதுபோல் கருந்துளைகள் அழிவுசக்திகள் மட்டுமல்ல, அவை படைப்புசக்திகளும்கூட. இன்னும் சரியாகச் சொல்லப்போனால் கருந்துளைகள் இந்தப் பிரபஞ்சத்தின் மறுசுழற்சியாளர்கள் என்ற அடையாளத்தை ‘ஹாக்கிங் கதிர்வீச்சு’ என்ற கோட்பாடு வழங்கியது.
கருந்துளைகளை அதுவரை இந்தப் பிரபஞ்சத்தின் தனித்தீவாகத்தான் அறிவியலாளர்கள் பார்த்தார்கள். ஆனால், “கருந்துளை என்பது, சூழ்ந்துள்ள பிரபஞ்சத்திலிருந்து தன்னைத் தனியாகத் துண்டித்துக்கொண்ட பொருள் அல்ல என்பதை ‘ஹாக்கிங் கதிர்வீச்சு’ காட்டுகிறது. இதுதான் மிகவும் முக்கியமான விஷயம்” என்றார் ஹாக்கிங். ஒரு வகையில் தாவோயிஸம் கூறும் பிரபஞ்ச ஒருமையை நிலைநாட்டுகிறது கருந்துளையைப் பற்றிய ஹாக்கிங்கின் கருத்து.
இஸ்ரேலிய கோட்பாட்டு இயற்பியலாளர் ஜேக்கப் பெக்கன்ஸ்டைனுடன் ஹாக்கிங் போட்ட சண்டையின் விளைவுதான் ‘ஹாக்கிங் கதிர்வீச்சு’ என்ற கோட்பாடு! கருந்துளைகளின் வெப்பத்தைப் பற்றிய விவாதம்தான் அது. கருந்துளைகள் ‘வெப்பச் சிதறல்’ (என்ட்ரோப்பி) என்ற பண்பைக் கொண்டிருப்பதாக பெக்கன்ஸ்டைன் கூறியதை மறுத்த ஹாக்கிங் ‘கருந்துளையிலிருந்து எதுவும் தப்ப முடியாது. ஆகவே, அதன் வெப்பநிலை பூஜ்ஜியமாகத்தான் இருக்க வேண்டும்’ என்றார்.
இந்த விவாதத்துக்கு விடை காண்பதற்காக ‘அணுவளவு கருந்துளை’களின் இயல்புகளை ஆராய்வதென ஹாக்கிங் முடிவுசெய்தார். இதை மேற்கொள்வதற்கு, அணுவுலகின் புதிரான விதிகளின் தொகுப்பான குவாண்டம் கோட்பாட்டுடன் ஈர்ப்புவிசையை முடிச்சுப்போட வேண்டியிருந்தது. அதுவரை யாருமே இந்த வெற்றிகரமாக இந்த முடிச்சைப் போட்டிருக்கவில்லை. மாதக்கணக்கில் தன் தலைக்குள் யுத்தம் நடத்திப் பார்த்த ஹாக்கிங்குக்கு அவருக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தும்விதத்தில் அவரது கணக்கீடுகள் ஒரு திசையைச் சுட்டிக்காட்டின. கருந்துளைகளிலிருந்து அணுத்துகள்களும் கதிர்வீச்சும் உமிழப்படுகின்றன என்பதுதான் அது. ஆக, பெக்கன்ஸ்டைன் சரி என்பதை ஹாக்கிங்கின் கண்டுபிடிப்பு உறுதிசெய்தது.
கருந்துளையிலிருந்து அணுத்துகள்கள் எப்படித் தப்பி வெளிவருகின்றன என்பதற்கு ஒரு விளக்கத்தையும் ஹாக்கிங் கண்டறிந்தார். குவாண்டம் கோட்பாட்டைப் பொறுத்தவரை கருந்துளைக்கு அருகில் உள்ள வெளியானது ‘மெய்நிகர் அணுத்துகள்களால் (வர்ச்சுவல் பார்ட்டிக்கிள்ஸ்) நிரம்பிவழியும்; அந்த அணுத்துகள்கள் ஜோடியாக, அதாவது துகள்-எதிர்த்துகள் என்று சட்டென்று தோன்றி மிகமிக நுண்ணிய கணப்பொழுதில் மறைந்துபோய்விடும். கருந்துளையின் அதிதீவிர காந்தப்புலத்திலிருந்து பெற்றுக்கொண்ட ஆற்றலின் காரணமாக அப்படிப்பட்ட அணுத்துகள்கள் உயிர்பெற்றுக் கணத்தோற்றம் காட்டி மறையும்.
கணப்பொழுதில் கன வேகத்தில் அந்த எதிரெதிர் துகள்கள் சந்தித்துக்கொண்டு, ஒன்றையொன்று அழித்துக்கொண்டு மறைந்துவிடும். ஆனால், அந்த ஜோடியில் ஒன்று, அதாவது எதிர்த்துகள், கருந்துளைக்குள் விழுந்துவிட, மற்றொன்று அங்கிருந்து புறப்பட்டு மெய்யுரு பெற்றுத் திரியும் என்றால் அது ஏதோ கருந்துளையிலிருந்து தப்பித்து வந்திருக்கிறது என்றும், கருந்துளையின் ஆற்றலைப் பெற்று வந்திருக்கிறது என்றும் நமக்குத் தோன்றக்கூடும். கருந்துளைக்குள் சென்றது எதிர்த்துகள் என்பதால் கருந்துளையை அது மேலும்மேலும் குறுகச் செய்கிறது. ஒரு கட்டத்தில் பெருவெடிப்பின்போது நிகழ்ந்ததைப் போன்று கருந்துளை வெடித்துச் சிதறுகிறது என்றார் ஹாக்கிங்.
கருந்துளைக்கு நிகழ்வதைப் பிரபஞ்சத்துக்கும் பொருத்திப்பார்க்கிறார் ஹாக்கிங். திரைப்படத்தைப் பின்னோக்கி ஓட்டிப்பார்ப்பதைப் போல பிரபஞ்சத்தின் பரிணாமத்தைப் பின்னோட்டிப் பார்த்தோம் என்றால் ஒரு கட்டத்தில் பெருவெடிப்பு வரும்; அந்தப் பெருவெடிப்பு ஒருமைநிலையிலிருந்துதான் தொடங்குகிறது என்றார் ஹாக்கிங்.
ஹாக்கிங்கும் அவரது சகாக்களும் சேர்ந்து
பிரபஞ்சத்தின் வரலாற்றைப் பற்றிய ஒரு கருத்தாக்கத்தை முன்வைத்தனர். பிரபஞ்ச வரலாற்றை
பூமி போன்று கோள வடிவில் அவர்கள் கற்பனைசெய்தார்கள். இந்தப் பிரபஞ்சத்தின் காலத்தை
பூமியின் அட்சக்கோடாக நாம் உருவகித்துக்கொள்ளலாம். அப்படியென்றால் காலம் வடதுருவத்தின்
பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி தெற்கு நோக்கிச் செல்கிறது. ‘பெருவெடிப்பு’க்கு முன்பு
என்ன நிகழ்ந்தது என்று கேட்பவர்களுக்கு ஹாக்கிங் இப்படி பதில் கூறினார்: “வட துருவத்துக்கு
வடக்கே என்ன என்று கேட்பதுபோல்தான் இது. பெருவெடிப்புக்கு முன்பு இடமும் இல்லை, காலமும் இல்லை.”
ஹாக்கிங் கண்டறிந்த விஷயங்களைப் போலவே அவரால் கண்டறிய முடியாமல் போன விஷயங்களும் மிக முக்கியமானவை. இயற்பியலாளர்கள் தேடிக்கொண்டிருக்கும் ‘புனிதக் கோப்பை’ என்று ஒரு விஷயம் உண்டு. இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்து விஷயங்களையும் விளக்கிவிடும் ஒற்றைக் கோட்பாடுதான் அது. ‘மகத்தான, ஒருங்கிணைந்த கோட்பாடு’ (த கிராண்ட் யூனிஃபைடு தியரி) என்றும் ‘அனைத்தையும் பற்றிய கோட்பாடு’ (எ தியரி ஆஃப் எவரிதிங்) என்றும் அதற்குப் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. ஹாக்கிங்கின் வாழ்க்கையைப் பற்றி எடுக்கப்பட்ட படத்தின் பெயரும் ‘த தியரி ஆஃப் எவெரிதிங்’தான். 1980-ல் நடந்த ஒரு அறிவியல் கருத்தரங்கின்போது “இருபதாம் நூற்றாண்டு முடிவதற்குள் அனைத்தையும் பற்றிய கோட்பாடு கண்டுபிடிக்கப்பட்டுவிடும். அதற்குப் பிறகு கோட்பாட்டு இயற்பியலுக்கு (தியரிட்டிக்கல் ஃபிஸிக்ஸ்) எதிர்காலம் என்ற ஒன்றே இருக்காது” என்று ஸ்டீவன் ஹாக்கிங் உரையாற்றினார். 19-ம் நூற்றாண்டின் முடிவிலும்கூட அப்படித்தான் நம்பப்பட்டது. ஆனால், இருபதான் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐன்ஸ்டைன் என்ற ஒருவர் வந்து அனைத்தையும் முதலிலிருந்து தொடங்கிவைத்தார்.
அனைத்தையும் பற்றிய கோட்பாடானது குவாண்டம் கோட்பாட்டையும் ஐன்ஸ்டைனின் பொதுச்சார்பியல் கோட்பாட்டையும் ஒன்றுசேர்ப்பதற்கான முயற்சி. பிரபஞ்சம், கருந்துளை என்று பிரம்மாண்டமான விஷயங்களைப் பொறுத்தவரை ஐன்ஸ்டைனின் பொதுச்சார்பியல் கோட்பாடு பொருத்தமாக இருக்கிறது. அணுவுக்குள்ளான விநோத உலகைச் சித்தரிப்பதில் குவாண்டம் கோட்பாடு பொருத்தமாக இருக்கிறது. ஆனால், அணுவுலகத்தை விளக்குவதில் பொதுச்சார்பியல் கோட்பாடு உதவுவதில்லை. இப்படி முரண்பட்டு முறுக்கிக்கொண்டிருக்கும் இரண்டு கோட்பாடுகளையும் பிணைத்து ஒரே கோட்பாடாக ஆக்கி ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தையும் அதன் மூலம் விளக்கிவிட வேண்டும் என்ற முயற்சியில் ஐன்ஸ்டைன் காலத்திலிருந்து பலரும் முயன்றுகொண்டிருந்தார்கள். ஹாக்கிங் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார். ‘அனைத்தையும் பற்றிய கோட்பாடு’ மிகவும் எளிமையாக, எல்லோராலும் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும் என்று நம்பினார். காலம் அவரை ஏமாற்றிவிட்டது.
ஹாக்கிங்கின் மேதைமையைப் பல்வேறு விருதுகளும் கௌரவங்களும் அலங்கரித்தன. முழு உடல்நலத்துடன் இருக்கும் பெரும்பாலானோரைவிடவும் சாகசங்கள் பலவற்றை ஹாக்கிங் புரிந்திருக்கிறார். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விமானமொன்றில் பூஜ்ஜிய ஈர்ப்புவிசைப் பயணத்தை மேற்கொண்டு எடையில்லாத நிலையை உணர்ந்தார். அண்டார்க்டிகா உட்பட அனைத்துக் கண்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டிருக்கிறார். பிரபஞ்ச உலா ஒன்றை மேற்கொள்ளும் நம்பிக்கையில் இருந்தார். அதற்கும் மரணம் இடைமறித்துவிட்டது.
ஐன்ஸ்டைனுக்குப் பின்பு மிக முக்கியமான அறிவியல் மேதை என்று பலராலும் புகழப்பட்டாலும் இறுதிவரை அவருக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. அதைப் பற்றி அவரே ஒரு முறை இப்படிக் குறிப்பிட்டார்: “நோபல் பரிசு என்பது நேரடியான ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்ட கோட்பாடுகளுக்குத்தான் வழங்கப்படும். எனது கோட்பாடுகளெல்லாம் கருந்துளைகளுக்கு மத்தியில் என்ன நடக்கிறது, மேற்பரப்பில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றியவை. இதை நேரடியான ஆய்வுகளின் மூலம் நிரூபிப்பது மிக மிகக் கடினம்.” நோபல் பரிசு கிடைக்கவில்லையென்றாலும் ஐன்ஸ்டைனுக்குப் பிந்தைய அறிவியல் மேதைகளுள் உலக மக்களின் அன்பை ஹாக்கிங் அளவுக்குப் பெற்றவர்கள் வேறு யாரும் இல்லை. இதைவிட ஒரு மேதைக்கு வேறு பெரிய கௌரவம் கிடைத்துவிட முடியாது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் நோபல் அவரைக் கைவிட்டாலும் ஆஸ்கர் விருது அவரைக் கைவிடவில்லை. ஆம்! ‘த தியரி ஆஃப் எவெரிதிங்’ என்ற, ஹாக்கிங் பற்றிய திரைப்படத்தில் ஹாக்கிங் வேடத்தில் நடித்த எடி ரெட்மேய்னுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது (2014) கிடைத்தது.
ஹாக்கிங்கின் கண்டுபிடிப்புகள் நிரூபிக்கப்படலாம், நிரூபிக்கப்பட முடியாமல் போகலாம். இதையெல்லாம் தாண்டியும் ஹாக்கிங்கின் முக்கியமான பங்களிப்பொன்று உண்டு. அன்றாட வாழ்க்கையின் பரப்புக்கு கருந்துளை, பெருவெடிப்பு போன்ற விஷயங்களைக் கொண்டுவந்தது. அவரது ‘காலத்தைப் பற்றிய சுருக்கமான வரலாறு’ நூல்தான் இந்தக் கோட்பாடுகளைக் கிட்டத்தட்ட ‘பேஷன்’ என்று சொல்லும் அளவில் ஆக்கியது. பொதுமக்களிடையே அணைந்துபோயிருந்த அறிவியல் குறித்த கற்பனையை, ஆர்வத்தைக் கடந்த 50 ஆண்டுகளில் ஹாக்கிங் அளவுக்கு யாரும் கிளறிவிட்டதில்லை. இரவு உணவின்போது குடும்பத்தினர் உணவு உண்டுகொண்டே கருந்துளை, செர்ன் பரிசோதனை போன்றவற்றைப் பற்றி இன்று பேசுகிறார்கள் என்றால் அதில் ஹாக்கிங்கின் பங்களிப்பு அளப்பரியது. ஹாக்கிங் முன்வைத்த அறிவியலும் ஹாக்கிங்கும் இந்த அளவுக்குப் பிரபலமாக ஆனதற்கு அவரது வாழ்க்கையும் ஒரு முக்கியக் காரணம். சக்கர நாற்காலியில் ஒரு பக்கம் தலையைச் சாய்த்தபடி நம் மனக்கண்ணில் தோன்றும் அவரது உருவமும் ஒரு முக்கியக் காரணம். இவை அனைத்துக்காகவும்தான் நாம் என்றென்றும் ஹாக்கிங்கைக் கொண்டாட வேண்டும்!
-ஆசை, நன்றி: இந்து தமிழ்
thankyou!
ReplyDelete