Friday, April 5, 2019

மகேந்திரனின் மூன்று பாடல்கள்




ஆசை

பாடலைப் படமாக்குவது என்பது வரிகளுக்கு உருவம் கொடுப்பதல்ல. ‘மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகுஎன்று விஜயகாந்த் கையாலேமே மூக்கைத் தொட்டுக்காட்டிப் பிறகு காற்றில் மூன்றாம் பிறை வரைந்து காட்டுவாரே அப்படியல்ல. பாடல் கொடுக்கும் உணர்வைக் காட்சியில் கொண்டுவருவதும் அல்லது பாடலுக்கே புது அர்த்தத்தைக் காட்சியால் கொண்டுவருவதும்தான் பாடலைச் சிறப்பாகப் படமாக்குவதன் வரையறை.

தமிழ்த் திரை வரலாற்றில் மிகச் சில படங்களே இயக்கியிருந்தாலும் பல பாடல்களை அற்புதமாகப் படமாக்கியவர் மகேந்திரன். இன்றைய இயக்குநர்களைப் போல அவசர அவசரமாக இயங்கியவர் அல்ல அவர். பாடல் பதிவுக்குப் பிறகு ஒரு மாதம் ஒன்றை மாதம் கழித்துத்தான் அந்தப் பாடல்களுக்கான படப்பிடிப்பு நடக்கும். அதுவரை அந்தப் பாடல்களை மனதில் ஓட்டிக்கொண்டே இருப்பார். அப்போது அவரது மனதில் வரும் உணர்வுகளை, எண்ணங்களைத்த்தான் படப்பிடிப்பின்போது பதிவுசெய்வார்.

உறவுகள் நீயே

உதிரிப்பூக்கள்படத்தைப் போலவே மறக்க முடியாததுஅழகிய கண்ணேபாடலும். மடியில் ஒரு பிள்ளை, பக்கத்தில் ஒரு பிள்ளை. இருவரும் ஏதோ சொல்ல அதை உள்வாங்கிக்கொள்ளாமலேயே அஸ்வினி தலையாட்டிக்கொண்டிருக்கும் காட்சி மிகவும் பிரசித்தமானது. ரயிலில் போகும்போது கண்ட காட்சியிலிருந்து பெற்ற தாக்கம் இது என்று மகேந்திரன் பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

அந்தத் திரைப்படத்தில் அவளுடைய கதாபாத்திரத்தின் துயரத்தை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தப் பெண்களின் துயரத்தையும் சொல்லிவிடக் கூடிய துணுக்குக் காட்சி. இழையோடும் துயரத்தோடு அழகான சிறுசிறு வாழ்க்கைத் துணுக்குகளையும் அந்தப் பாடல் முழுவதும் இழைத்திருப்பார். மகனைக் குளிப்பாட்டிவிடுவார் அன்னை. பக்கத்தில் தன் அண்ணனைத் துவட்டிவிடுவதற்கான துண்டுடன்பெரிய மனுஷிதோரணையில் நிற்கும் குட்டி தேவதை அஞ்சு. மகனின் இடுப்புக்குக் கீழே அஸ்வினியின் கை சோப்புடன் செல்வது தெரிகிறது. அதற்குப் பிறகு அந்தப் பிள்ளை சிறு வலியால்என்று பாவம் காட்டுகிறான். குளோஸப் காட்சியில் அஸ்வினியின் முகத்தில் வெட்கம் கலந்த புன்னகை. மிகவும் குறைந்த கால அளவே கொண்ட, ஆனால் அவ்வளவு ரசனையான காட்சித் துண்டு அது. அதேபோல், பாடலினிடையே ஓடையில் துவைத்த துணியொன்றை அம்மாவும் அண்ணனும் பிழிந்துகொண்டிருக்க தான் கட்டிக்கொண்டிருக்கும் பாவாடையின் விளிம்பை ஓடை நீரில் கலக்கிக்கொண்டிருப்பாள் குழந்தை அஞ்சு. இதுபோன்ற வாழ்க்கைக் கவிதைகளுக்காகத்தான் மகேந்திரன் இந்த அளவுக்கு நேசிக்கப்படுகிறார் என்று தோன்றுகிறது.

பிரத்யேக தேவதை

ஜானிபடத்தின் ஒவ்வொரு பாடலும் ஒரு வகை கருப்பொருளுடன் எடுக்கப்பட்டிருக்கும். காதல் அரும்பிய பெண்ணொருத்தி பியானோ வாசிக்க அவளுடைய பிரத்யேக ரசிகன் அருகிருந்து கேட்டால் அவனுக்கு என்ன தோன்றுமோ அதையேதான்என் வானிலே ஒரே வெண்ணிலாபாட்டில் மகேந்திரன் காட்சியாக்கியிருப்பார். பாடலும் இசையும் ஆரம்பித்துக் கொஞ்ச நேரத்தில் பரந்த வெளி நோக்கிக் காட்சியை மகேந்திரன் கொண்டுசென்றிருப்பார். அம்மா-குழந்தை பாட்டாக இருந்தாலும் சரி காதலன்-காதலி பாட்டாக இருந்தாலும் சரி மனவெளியிலிருந்து திறந்த வெளிக்குக் கொண்டுசென்றுவிடுவது மகேந்திரனின் இயல்பு.

இந்தப் பாடலிலும் அதையே செய்திருப்பார். திறந்த வெளியில் நமக்காக ஒரு தேவதை பியானோ வாசித்துக்கொண்டிருந்தால் நமக்கு எப்படி இருக்கும்! அந்த உணர்வுதான் இந்தப் பாடலில் நமக்குக் கிடைக்கும். பியானோ வாசித்துக்கொண்டே சற்று முன்னகர்ந்து, மாடிப்படியில் அமர்ந்திருக்கும் தன் உதவியாளரைப் பார்த்து ஒரு வெட்கச் சிரிப்புச் சிரிப்பாரே ஸ்ரீதேவி, அந்தச் சிரிப்பு ஒரு மனிதப் பிறவிக்கு எப்படி சாத்தியமாகியிருக்கும் என்று நீங்கள் வியந்துபோனால் அங்கும் மகேந்திரன் இருக்கத்தான் செய்வார்!

பருவம் பாடிய பாடல்!

நெஞ்சத்தைக் கிள்ளாதேபடத்தின்பருவமே புதிய பாடலைப் போலவே அதன் உருவாக்கமும் அவ்வளவு அழகானது. பெங்களூரில் காலைப் பனியில் எடுத்த பாடல் அது. அதிகாலைப் பனியில் மோகனும் சுஹாசினியும் ஓடுவது போன்று காட்சிப்படுத்த நினைத்திருக்கிறார் மகேந்திரன். ஒரு அரைமணி நேரம்தான் பனி இருக்கும். அதற்குப் பிறகு வெயில் வந்துவிடும். எல்லோரும் காலை உணவைச் சாப்பிட உட்கார்கிறார்கள். அந்த நேரத்தில் ஒரு சிறுமி கையில் சுள்ளிகளைப் பொறுக்கிக்கொண்டு சற்று தூரத்தில் வருவது மகேந்திரனின் கண்ணில் பட்டிருக்கிறது.

சாப்பிடத் தயாராக இருந்த அசோக்குமாரிடம்தயாராகுப்பா, அதை ஷூட் பண்ணணும்என்றிருக்கிறார். அந்தக் குழந்தைக்கே தெரியாமல் லென்ஸ் வைத்து தூரத்திலிருந்தே அசோக்குமார் படம்பிடித்துக்கொண்டார். அப்புறம் படப்பிடிப்பெல்லாம் முடிந்து படத்தொகுப்பு செய்யப்படும் வேளையில் பாடலில் வரும் ஹார்மோனியம் துணுக்கு இசைக்கு ஒரு காட்சி தேவைப்படுகிறதே என்றிருக்கிறார் எடிட்டர். உபரியாக எடுத்த பிலிம்களிலிருந்து தேடியெடுத்து இது சரிவருமா என்று அந்த சிறுமி காட்சியைக் கொடுத்திருக்கிறார் மகேந்திரன். படம் வெளியாகி ஒரு வருடம் ஓடி, பாட்டும் பெரிய ஹிட்டானது.

ஆனால், படம் வெளிவருவதற்கு முன்பே அந்தப் பாட்டும் அதில் பனியில் எடுக்கப்பட்ட காட்சிகளும் மிகவும் பிரபலமாகி விட்டிருந்தன. ரெக்கார்டிங்குக்கு வருபவர்களிட மெல்லாம்அண்ணன் எப்படி ஷாட் எடுத்திருக்கிறார் பாருங்க. அண்ணன் எப்படி ஷாட் எடுத்திருக்கிறார் பாருங்கஎன்று சொல்லிச் சொல்லி இளையராஜா ஒரு நூறு பேரிடமாவது அந்தப் பாடலைப் போட்டுக்காட்டிப் பரவசப்பட்டிருப்பாராம்.

மேற்குறிப்பிட்ட படங்களின் பிற பாடல்களும்முள்ளும் மலரும்’, ‘நண்டு’, ‘பூட்டாத பூட்டுக்கள்’, ‘மெட்டிபோன்ற படங்களின் பாடல்களும் என்று நிறைய பாடல்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு அழகான பாடல்களைப் படமாக்கியிருப்பவர் அவர். மகேந்திரன், இளையராஜா, அசோக்குமார் என்ற அற்புதமான மூன்று கலைஞர்களின் விளைச்சல் அது. அதைத்தான் நாம் இன்று யூடியூப் காலத்திலும் அறுவடை செய்துகொண்டிருக்கிறோம்.
-நன்றி: ‘இந்து தமிழ்’ நாளிதழ், 05-04-19 அன்று வெளியான கட்டுரை

No comments:

Post a Comment