Wednesday, January 10, 2024

ஓர் அறிவிப்பு! - என்னை விடுங்க சாமிகளா!


(எச்சரிக்கை: இலக்கியம் உடலுக்கும் மனதுக்கும் பெருங்கேடு)

நான் இனிமேல் புத்தக விமர்சனங்கள் எழுதப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். குறிப்பாகத் தமிழ்ப் புத்தகங்களுக்கு. நான் விமர்சனம் எழுதுவதாக ஒப்புக்கொண்ட ஓரிரு நண்பர்கள் என்னை மன்னிக்கவும். அதே போல் எந்த இலக்கிய நிகழ்வுகளில் பேசுவதற்கும் என்னை தயவுசெய்து கூப்பிட வேண்டாம்!

நான் இந்த முடிவுக்கு வருவதன் பின்னணியில் பல்வேறு தொடர்ச்சியான காரணங்கள், அவமானங்கள், அவதூறுகள், இருட்டடிப்புகள் உண்டு. அவற்றுள் சமீபத்திய ஒரு சிறு சம்பவத்துக்குப் பிறகு இந்த முடிவுக்கு வந்தேன். இதனை நான் எழுதக்கூடாது என்றே இருந்தேன். சம்பந்தப்பட்டவர்களைச் சங்கடப்படுத்தும் என்று நினைத்தேன். ஆனால், அந்தச் சிறு சம்பவம் அதற்கு முன் நான் எதிர்கொண்ட எல்லா அவமானங்களின் தொடர்ச்சி என்பதால் என்னைத் தூக்கமிழக்கச் செய்துவிட்டது. அதனால்தான் எழுதுகிறேன். 

சமீபத்தில் ஒரு புதிய கவிஞர் என்னைத் தொடர்பு கொண்டார். எங்கள் இருவருக்குமே பரஸ்பர அறிமுகம் கிடையாது. ஆனால், கொஞ்ச நாட்களுக்கு முன் அவரது சில கவிதைகள் நன்றாக இருக்கிறது என்று ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தேன். அவரது முதல் நூல் வெளியிடப்போவதாகவும், அதனை நான்தான் வெளியிட்டு உரையாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். நான் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன். ஏனெனில், எனக்கெல்லாம் அப்படி நடந்ததே இல்லை. அதற்குச் சில நாட்கள் கழித்து அவரே என்னைத் தொடர்புகொண்டார். மிகுந்த சங்கடத்துடனும் வருத்தத்துடனும் பேசினார். “சார், யார் வெளியிட்டுப் பேசப்போறாங்க என்று கேட்டாங்க. நான் உங்க பேரைச் சொன்னேன். தவிர்க்கச் சொல்லிட்டாங்க. என்ன சார் செய்யுறது?’ என்று கேட்டார். அதற்குக் காரணம் இந்து தமிழ் நாளிதழில் நான் இருந்தபோது  அந்தப் பதிப்பகத்தின் புத்தகங்களையெல்லாம் நான் தவிர்த்துவிட்டதாக அவர்கள் (முற்றிலும் தவறாக) நினைத்துக்கொண்டதுதான். ‘நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க. உங்க முதல் புத்தகத்த வெளியிடுறாங்க. அவங்க சொல்லுறததான் நீங்க கேட்கணும். முதல் புத்தகம் முதல் குழந்தை மாதிரி. எந்தச் சங்கடமும் இல்லாமல் முழு மகிழ்ச்சியுடன் இருக்கணும்’ என்று சொன்னேன். அதனால் அது குறித்து அப்போது நான் ஏதும் வெளியில் எழுதவில்லை.   

உண்மை என்னவென்றால் நான் இந்து நாளிதழிலிருந்து புறப்படுவதற்கு முன் இறுதியாக எழுதிய விமர்சனம் அந்தப் பதிப்பகத்தின் இரண்டு நூல்களைப் பற்றித்தான். அந்த புத்தகங்களின் ஆசிரியரான இளைஞரை எனக்கு முன்பின் தெரியவே தெரியாது. மேலும், அந்தப் பதிப்பகம் வெளியிட்ட மேலும் இரண்டு இளம் எழுத்தாளர்களின் பேட்டிகளை நானே எடுத்திருக்கிறேன். இது தவிர சிறு சிறு குறிப்புகள், சிறு சிறு விமர்சனங்கள் என்று அந்தப் பதிப்பகத்தின் நூல்களைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. எல்லா நூல்களைப் பற்றியுமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடியும். இது எல்லாப் பதிப்பகங்களுக்கும் பொருந்தும்தானே. இந்தப் புள்ளியில்தான் அனைத்துப் பதிப்பகங்களும் கடந்த 10 ஆண்டுகளாக என்னிடமும் அணி நண்பர்களிடமும் குறையாகவும் புலம்பலாகவும் குற்றச்சாட்டாகவும் முன்வைத்துக்கொண்டிருக்கிறார்கள் ‘நீங்க எங்க பதிப்பகப் புத்தகங்களைக் கண்டுகொள்வதே இல்லை’.

இதெல்லாம் பரவாயில்லை. ‘வெண்முரசு’ தொடரை ஜெயமோகன் எழுத ஆரம்பித்த சில காலத்தில் அவரது பெரிய பேட்டி ஒன்றை நடுப்பக்கத்திலும் அவரது வேறு பேட்டி ஒன்றை இன்னும் விரிவாக தீபாவளி மலரிலும் வெளியிட்டோம். எடுத்தவர் நண்பர் ஷங்கர்ராமசுப்பிரமணியன். ஆனால், ஜெயமோகன் திரும்பத் திரும்ப இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கிறார், “உலகிலேயே பெரிய நாவல். எவ்வளவு பெரிய சாதனை. என்னை மலையாள இதழ்களின் அட்டைப் படத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். தமிழில் முழுவதும் புறக்கணித்துவிட்டார்கள். இந்து தமிழில் வந்த ஒரே ஒரு பேட்டியும் விஷ்ணுபுர வாசகர் வட்ட நண்பர்களின் முயற்சியால் வெளிவந்தது.” எவ்வளவு பெரிய பொய்! தன்னைக் கொண்டாடவில்லை என்று புலம்பும் ஒருவர் கொண்டாடியவர்களை இருட்டடிப்பு செய்வது உண்மையில் அயோக்கியத்தனமன்றி வேறென்ன? நான் பார்த்த அவரது ஒரே ஒரு நிகழ்ச்சியிலும் இதையே அவர் கூறினார். 

வெண்முரசு பற்றி ஒரு பாரபட்சமில்லாத மதிப்புரையை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று முயன்றுகொண்டிருந்தேன். வி.பு.வா.வ நண்பர் ஒருவரிடமும் இதுகுறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். ஆனால், ஜெ.மோ. தொடர்ந்து இப்படிச் செய்துகொண்டிருந்ததில் வெறுப்புற்று முயற்சியைக் கைவிட்டுவிட்டேன். ஆனால் பதிலுக்கு அவரோ தமிழ் இலக்கியத்துக்கு வெகுஜன இதழ்களில் கடற்கரயும். நா.கதிர்வேலனும் மட்டுமே பங்களிப்பு செய்தார்கள், இந்து தமிழ் ஏதும் செய்யவில்லை என்று இந்து தமிழ் நாளிதழ் நண்பர்கள் அத்தனை பேரின் அர்ப்பணிப்பையும் ஒரே வரியில் டிஸ்மிஸ் செய்துவிட்டார். அவரே இந்து தமிழ் ஒரு மாபெரும் அறிவியக்கம் என்றும் பேசியிருக்கிறார். அவரைப் பற்றிதான் நமக்குத் தெரியுமே. கூடவே, ஆசை, (அப்புறம் இன்னொரு சகாவும்) ஒரு இலக்கிய மொண்ணை என்று எழுதினார். இதுவும் சரி கண்ணன் தொடர்ச்சியாகச் செய்த அவதூறுகளும் சரி என்னை மன உளைச்சலின் உச்சத்துக்கே கொண்டுபோய்த் தள்ளி மனநல மருத்துவரைத் தொடர்ச்சியாகப் பார்க்க வைத்தது. இவ்வளவு நாளும் இதைப் பற்றி எழுத வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் உள்ளுக்குள்ளே வைத்துப் புழுங்கிக்கொண்டிருக்கவும் என்னால் முடியவில்லை. எந்தப் பின்புலமும் இல்லாமல் வந்த ஒருவனால் இதையெல்லாம் தாங்க முடியாது. எந்த நிறுவனமும் பின்னால் நிற்காது. 

அடுத்தது மனுஷ்ய புத்திரன்! அவர் முகநூலில் எனது நட்பில் இல்லை. இருந்தாலும் நண்பர்கள் அவ்வப்போது எனக்கு அவரது சில பதிவுகளைக் காட்டுவார்கள். அவர் பெரும்பாலும் ‘இந்து தமிழில் என்னைப் புறக்கணிப்பு செய்தார்கள். சமஸ், அரவிந்தனோடு முரண்பாடுகள் இருந்தாலும் அவர்கள் என்னைப் பற்றி இடம்பெறச் செய்வார்கள். ஆனால், உள்ளே என் மீது வன்மம் கொண்டவர்கள் இருந்தார்கள்’ என்றரீதியில் எழுதியிருந்தார். இன்னொரு முறை, ‘மிஸ் யூ’ வெளியாவதற்கு முன் அதன் முன்வெளியீட்டுத் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டு கைபேசி எண்ணுடன் கொடுத்திருந்தோம். அவர் எழுதுகிறார். ‘குறைந்தபட்சம் இந்து தமிழாவது வெளியிடுகிறார்களே. 2000 கவிதைகளுக்கு 9 வரிகள். அடுத்த ஆண்டு 5000 கவிதைகள் எழுதினால் 20 வரிகளுக்கு மேலாவது எழுதுவார்களா என்று பார்ப்போம்’ (நினைவிலிருந்து எழுதிய வரிகள். ஸ்க்ரீன்ஷாட் வேண்டுமென்றால் பல கி.மீ. பயணிக்க வேண்டும்.) முன்வெளியீட்டுத் திட்டத்தைப் பற்றி எழுதியவர்களுக்கு புத்தகம் கூட அனுப்பவில்லை. ஆனால் புலம்பல். இதை என்னவென்று சொல்வது? மேலும் அவருடைய இரண்டு கவிதை நூல்கள் வெளியானபோது அவற்றின் முன்னுரைகளை வெளியிட்டோம். அவருடைய புத்தகங்கள் வெளியான வெவ்வேறு தருணங்களில் எனக்குத் தெரிந்து மூன்று பேட்டிகளாவது வெளியிட்டிருக்கிறோம். அவற்றை எடுத்தவர்கள் வேறு நண்பர்கள் என்றாலும் இரண்டு பேட்டிகளில் கணிசமான கேள்விகள் என்னுடையவை. (நான் பேட்டி எடுத்தாலும் நண்பர்களின் கேள்விகள் அதில் இருக்கும்). ஆனால், நாங்கள் இருட்டடிப்பு செய்துவிட்டோம், புறக்கணிப்பு செய்துவிட்டோம்! 

பிரபல நால்வரான ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன் ஆகியோருக்கு நாங்கள் பெரும்பாலும் நூல் விமர்சனம் வெளியிட்டதே இல்லை. அதற்குப் பதிலாகப் பேட்டிகள் , முன்னுரைகள் உள்ளிட்டவற்றை வெளியிட்டோம். ஏனென்றால், விமர்சனம் எழுதி ஒரு வரி கூட அவர்களைப் பற்றி குறையாக எழுதிவிட முடியாது, முன்னோடிகள் என்று ஆகிவிட்டவர்கள் என்பதால்.  

மனுஷ்யபுத்திரனின் முன்னெடுப்பில் இலக்கியவாதிகளை வைத்து எத்தனையோ நிகழ்வுகள் நடத்தப்படுகின்றனவே. அதில் ஒன்றில்கூட ஆசையின் பெயரை நீங்கள் பார்த்திருப்பீர்களா. லட்சம் கவிஞர்களை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தினாலும் அதில் ஆசையின் பெயர் இருக்காது. மனுஷ் மட்டுமல்ல மற்றவர்களின் நிகழ்வுகளிலும் அப்படியே. அதில் எனக்கொன்றும் பிரச்சினையில்லை. அது தனிப்பட்ட ரசனையின் தெரிவாக இருக்கும். எந்தச் சதியோ வஞ்சமோ வன்மமோ இருக்காது என்று நம்புகிறேன். அதே சுதந்திரத்தை எனக்கும் என்னைப் போன்ற நண்பர்களுக்கும் வழங்க வேண்டுமல்லவா. 

மனதாரச் சொல்கிறேன், யாரையும் தடுக்கவோ யாருக்கெதிராகவும் சதி செய்யவோ நானும் நண்பர்களும் ஒருபோதும் நினைத்ததில்லை. எதிர்வினைகளைக் கூட முகநூலில்தான் ஆற்றியிருக்கிறோம். அதற்காகப் பத்திரிகையைப் பயன்படுத்தவில்லை. நூல்விமர்சனப் பக்கம் என்பது ஒரு வாரத்தில் ஒரு பக்கம் மட்டுமே, முன்பு இரண்டு பக்கங்களாக வந்தது. எங்கள் பெரும்பாலான சக்தி வாரம் முழுவதும் இடம்பெறும் நடுப்பக்கங்களுக்கே போய்விடும். இருக்கும் ஆட்களை வைத்துக்கொண்டு அதிலும் ஜனநாயகத்தன்மையைக் கடைப்பிடிப்பதற்காக எல்லோரையும் உள்ளடக்கி இலக்கியப் பக்கங்கள் நடத்தப்பட்டன. நூல் விமர்சனம், பேட்டி போன்றவற்றுக்கான வரையறை இதுதான்: 1. அந்த நூல்கள் நமக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும் (அனுப்பப்படாத நூல்கள் நல்ல நூல்கள் என்று கேள்விப்பட்டால் சொந்தக் காசில் வாங்கியும் விமர்சனங்கள் எழுதியிருக்கிறோம்), 2. அவற்றைப் படித்திருக்க வேண்டும். 3. படித்தவருக்கு ஏதோ ஒரு வகையில் அந்த நூல் பிடித்திருக்க வேண்டும். 4. அணியினரின் ரசனைக்கு உட்பட்டதில்லை என்றாலும் அதற்குப் பொதுவெளியில் ஒரு முக்கியத்துவம் உருவாகியிருந்தாலும்  அதைப் பற்றியும் எழுதுவோம் (எ-டு. ராஜேஷ்குமார்) இதைத் தாண்டியும் நேரமின்மை, எல்லோருக்கும் இருக்கக் கூடிய போதாமை போன்றவற்றால் முக்கியமான நூல்கள் விடுபட்டிருக்கலாம். எல்லோரும் விடுபட்டதன் சித்திரத்தைதான் பெரிதுபடுத்திப் பேசுகிறார்களே தவிர, வரையப்பட்டதன் சித்திரத்தை யாருமே பார்ப்பதில்லை, அதைப் பற்றிப் பேசுவதும் இல்லை. 

புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவர். எனது ‘அண்டங்காளி’, ‘குவாண்டம் செல்ஃபி’ (2021) கவிதை நூல்கள் வெளியானபோது, கடந்த காலத்தில் அவர் எனக்குக் காட்டிய நட்பின் நிமித்தமாக அந்த நூல்களை அனுப்பிவைத்தேன். வேறொரு விஷயமாக அவரிடம் ஒருமுறை தொலைபேசியில் பேசியபோது அவராகவே, “உங்க ரெண்டு தொகுப்புகளும் படித்தேன். ரொம்ப முக்கியமான தொகுப்புகள். ஆனா சூழல்ல இதைப் பத்தியெல்லாம் பேசப்படுறதேயில்லைங்கிறதுதான் துரதிருஷ்டம்” என்று வேதனைப்பட்டார். அவரும் வெளியில் அந்தத் தொகுப்புகளைப் பற்றிப் பேசவில்லை. ஆனால், எவ்வளவு புகழ்பெற்றாலும் தன்னை யாரும் கண்டுகொள்ளவில்லை, தன்னைத் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறார்கள் என்று புலம்பல். ஐயா நீங்களே புலம்பினீர்கள் என்றால் யாருடைய வாங்கும் விருப்பப் பட்டியலிலோ, வாங்கிய பட்டியலிலோ, பிடித்த கவிஞர்கள் பட்டியலிலோ, ஒரு சிறு மேற்கோளாகவோ மேலும் கவியரங்கங்கள், புத்தக வெளியீடுகள், விமர்சனக் கூட்டங்கள் என்று எதிலும் சிறு இடம் கூட வழங்கப்படாத ஒருத்தன் எவ்வளவு புலம்ப வேண்டும்?

பத்து ஆண்டுகள் ஒருத்தன் ஒரு வெகுஜனப் பத்திரிகையில் இருந்திருக்கிறேன். மிகப் பெரிய இலக்கிய நிகழ்வுகள் இரண்டுக்கு முக்கியப் பொறுப்பு வகித்திருக்கிறேன். ஏராளமான நூல் விமர்சனங்கள் எழுதியிருக்கிறேன். இலக்கியப் பக்கங்களுக்குச் சில ஆண்டுகள் பொறுப்பில் இருந்திருக்கிறேன். ஆனால் நம்புவீர்களா, இதுவரை நான் அழைக்கப்பட்டுப் பேசிய இலக்கிய நிகழ்ச்சி நடராஜன் பாரதிதாசனின் கவிதை நூலுக்கு மட்டும்தான். 

மேலும் சமீபத்தில் என்னுடைய கவிதை நூல்களுக்கு முதன்முறையாக ஒரு கூட்டம், அதுவும்கூட ஜூம் மீட்டிங்கதான், நடக்கவிருந்தது. அதனை ஏற்பாடு செய்தவர்கள் பேராசிரியர்கள், கல்விப் புலத்தைச் சேர்ந்தவர்கள். நவீன இலக்கிய உலகோடு அவ்வளவாகத் தொடர்பற்றவர்கள். ஜெயமோகனின் வாசகர்கள். ஜெயமோகனை நான் விமர்சித்து எழுதிய கட்டுரைகளைப் படித்துவிட்டு என் வலைப்பூவில் கவிதைகளையும் படித்துப் பார்த்து மகிழ்ந்துபோனவர்கள். அந்த மீட்டிங்கில் என் கவிதைகளைப் பற்றிப் பேசுவதற்கு யாராவது முக்கியமான எழுத்தாளர்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினார்கள். நானும் சில நண்பர்களிடம் கேட்டுப்பார்த்தேன். அவர்களுக்கு உண்மையிலேயே நியாயமான காரணங்கள் இருந்ததால் அவர்கள் தயக்கத்துடன் மறுத்துவிட்டார்கள். எனக்கு யாருமே கிடைக்கவில்லை. நான் ஏதோ ஒரு வகையில் விமர்சனம் எழுதிய, பேட்டி எடுத்த எழுத்தாளரிடம் கேட்கக் கூடாது என்று உறுதியாக இருந்தேன். நன்றிக்கடன் போன்று நான் எதிர்பார்ப்பதாக அவர்கள் நினைத்துவிடக் கூடாது என்பதற்காக. மேலும் அவர்களில் பெரும்பாலானோர் என் எழுத்துகளைப் படித்திருக்கிறார்களா, அவர்களின் ரசனைக்கு என் எழுத்துகள் உட்பட்டவையா என்று தெரியாத நிலை. ஆகவே, ‘ஆசை படைப்புலகம்’ (!) பற்றி கவிஞர் ஆசையே பேசினார். அந்தப் பேராசிரியர்களும் பேசினார்கள். 

இந்த நிகழ்வு குறித்து ஃபேஸ்புக்கில் தொடர்ந்து பதிவு போட்டுக்கொண்டுவந்தேன். என் வாட்ஸப்பில் ஸ்டேட்டஸும் வைத்திருந்தேன். ஆனால், எனக்குத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் அந்த நிகழ்வுக்கு வந்திருந்தார்கள் தெரியுமா? மூன்றே மூன்று பேர். அதில் ஒருவர் கவிதையுடன் தொடர்பற்ற, என் மேல் அன்புள்ள என் முன்னாள் சகா, மற்ற இரண்டு பேரும் என் கவிதைகளைப் படித்திருக்கிறார்களா என்று தெரியாது, அவர்களும் என் மேல் உள்ள அன்பினால் பார்வையாளர்களாக வந்திருந்தார்கள். ஒருவரை இதுவரை நான் சந்தித்ததே இல்லை, இலங்கையிலிருந்து கலந்துகொண்டார். இத்தனைக்கும் பலருக்கும் வசதிப்பட வேண்டுமென்று ஞாயிறு அன்றுதான் வைத்திருந்தோம். என் நெருங்கிய நண்பர்கள்கூட வரவில்லை. ச்சே என்று அலுத்துப்போனது. ஒரு solidarityiயைக் கூட சம்பாதிக்காமல் போய்விட்டோமே என்று வெறுப்பாக இருந்தது. நானும் எல்லோரும் எல்லா நிகழ்வுகளிலும் கலந்துகொள்வதில்லைதான். ஆனால், ஒருத்தருக்கு ஒரு முக்கியமான நிகழ்வென்றால் ஆதரவு கொடுப்பதற்கென்று சிறு குழுவாவது இருக்குமல்லவா!   

இதற்கெல்லாம் நானும் ஒரு காரணம். நான் இலக்கிய அமைப்புகள், எழுத்தாளர்கள் என்று யாரோடும் என்னை Align செய்துகொள்ளவில்லை. ஃபேஸ்புக்கில் ஒரு எழுத்தாளருக்கு நண்பராக இருந்தால்கூட அவருக்கு ஏதோ ஒரு வகையில் நாம் கட்டுப்பட்டுவிடுவோம் என்று நான் பெரும்பாலான முக்கிய எழுத்தாளர்களின் நண்பராக இல்லை. நட்பில் இருக்கும் கணிசமான எழுத்துலக நண்பர்களும் அவர்களின் நட்பழைப்பை நான் ஏற்றுக்கொண்டதே. அதனால்தான் இன்னும் மூவாயிரத்திலேயே முட்டிக்கொண்டு நிற்கிறது. எழுத்தாளர்கள் நண்பர்களாக இருப்பதில் தவறில்லை. ஆனால் இங்கே அது மட்டுமா நடக்கிறது.  கடுமையான அகமண முறையில் சிக்கிக்கொண்டு கிடக்கிறது தமிழ் இலக்கியச் சூழல். நச்சுச் சூழல். இந்த அகமண முறைக்குள் நீங்கள் இல்லையென்றால் கவிஞர் அபி மாதிரி 80ஐ ஒட்டிய வயதுகளில்தான் உங்களுக்குச் சிறு அளவிலாவது அங்கீகாரம் கிடைக்கும். தமிழ் நவீன கவிதையின் சிறந்த கவிஞராக நான் கருதும் அபியைத்தான் நினைத்துக்கொள்கிறேன். அதலபாதாள கிணற்றில் பெரிய பெரிய பாறைகள் எறியப்பட்டு யாருக்கும் தெரியாமல் கிடக்கின்றன. நாமெல்லாம் சிறு கல் என்றுதான் சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டும். 

ஐயாக்களே ஏதோ சதி செய்தோம், வன்மம் கொண்டோம், வஞ்சம் கொண்டோம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களே. நானும் வெகுஜனப் பத்திரிகையில் 10 ஆண்டுகள் இருந்தவன்தான், என்னுடைய படைப்புகள் குறித்த ஒரு வரியை நீங்கள் எந்த வெகுஜன இதழிலாவது பார்த்திருக்கிறீர்களா? எனக்கு முதல் விருது கிடைத்தபோது இந்து தமிழில் அதைப் பற்றி ஒரு வரி வெளியாகவில்லை. எனக்குக் கலைஞர் பொற்கிழி விருது கிடைத்தது. அதைப் பற்றி நண்பர் எழுதிய கட்டுரையில் கூட என் பெயரை நீக்கிவிட்டுத்தான் அனுப்பினேன். நண்பர் மிகவும் வருத்தப்பட்டார். (இதையெல்லாம் சொல்லிக்காட்டக் கூடாது என்று நினைத்தாலும் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருப்பது துரதிர்ஷ்டமானது). 

நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் விருது பெறும்போது அவர்களுடைய பெயர்கள் இடம்பெறவே செய்தன. நான் என்னுடைய பெயரோ, புத்தகங்களோ வெளியாக வேண்டாம் என்று முடிவெடுத்துப் பின்பற்றினேன். ஆனால் ஷங்கர், மண்குதிரை அரவிந்தன் போன்றவர்களின் நூல்கள் பற்றியோ மு.முருகேஷ், கவிதா முரளிதரன் போன்றவர்கள் பெற்ற விருது செய்திகளோ நம் பக்கத்திலேயே வெளியாகத்தான் செய்தன. ஆகையால் சமஸ் உள்ளிட்ட நடுப்பக்க அணியினர்  இத்தகைய முடிவை சுயகட்டுப்பாடோடு பின்பற்றினோம்.

இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால், சொல்ல வைத்துவிட்டார்கள். சமீபத்தில் ஒரு பாடத்திட்டக் குழுவில் பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இரண்டு நாட்கள் கூட்டம். போகும்போதே இரண்டு கட்டைப்பைகள் நிறைய புத்தகங்கள் கொண்டுசென்றேன். வழியில் ஒரு முக்கியமான எழுத்தாளரிடமும் சில புத்தகங்கள் பெற்றுக்கொண்டேன். இரண்டு நாட்கள் முடிவில் எல்லோரும் வெவ்வேறு வகைமைகளைப் பிரித்துக்கொண்டோம். நான் நவீன இலக்கியம், திராவிட இயக்கம் போன்ற சில விஷயங்களைக் கேட்டுப்பெற்றுக்கொண்டேன். போகும்போது ஆயிரம் ரூபாய்க்கு காசோலை கொடுத்தார்கள். எல்லோரும் வாங்க மறுத்துவிட்டோம். நான் கேட்டேன் ‘ஜெயமோகனைக் கூப்பிட்டு இப்படி ஆயிரம் ரூபாய் நீட்டுவீர்களா?’ என்று. எங்கள் குழுவில் ஒரு தோழர் உடல்நல பாதிப்பு கொண்டவர் இரண்டு நாட்களும் ஆட்டோவில்தான் வந்துசெல்ல வேண்டும். ஆட்டோ செலவே ஆயிரம் ரூபாயைத் தாண்டியிருக்கும். என்னுடைய இரண்டு நாள் சம்பளத்தின் மதிப்பு ரூ. 10,000. பணத்துக்காக வரவில்லை யாரும். பணம் கொடுக்காமல் இருந்திருந்தால் பிரச்சினையே இல்லை. அந்தத் தொகைதான் அவமதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், எங்களை ஒருங்கிணைத்தவர் பாவம். மேலுள்ள அமைப்பு அப்படியென்றால் அவர் என்ன செய்வார். (என்ன லட்சணத்தில், எப்படிப்பட்ட அவசரத்தில் புதிய கல்விக் கொள்கைக்கான எதிர்வினையை அரசு ஆற்றுகிறது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் இது. இதைப் பற்றி தனியே பிறகு பேசலாம்.) 

அப்புறம் பல வாரங்கள் பல புத்தகங்களைத் திரட்டிக் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று பெரும் பட்டியலைத் தயாரித்துக்கொடுத்தேன். இறுதியாகப் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற படைப்புகளின் வரிசையைப் பார்த்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சிறுகதைகள் 100% என்னுடைய தெரிவு இடம்பெற்றிருந்தது. கவிதைகள் 50%. வேறென்ன வேண்டும் எனக்கு? இத்தனைக்கும் நான் கவிதைப் புத்தகங்கள் போட்டிருக்கிறேன் என்றோ, சிறார் இலக்கியத்தில் என் மகன் மகிழ் ஆதனைச் செருகிவிட வேண்டும் என்றோ நான் நினைக்கவே இல்லை. என்னால் அவனுக்குத்தான் இழப்பு. (’மகிழ் புத்தகத்துக்கு நீங்கள் விமர்சனம் போட வேண்டும்’ என்று அவனது இரண்டாவது புத்தகத்தின் பதிப்பாளர், அது ஒரு பதிப்பாளரின் நியாயம்தான், கேட்டுக்கொண்டபோது ‘நான் இலக்கியப் பக்கத்துக்குப் பொறுப்பாக இருக்கும் வரை அது நடக்காது’ என்று சொல்லிவிட்டேன்.) அது மட்டுமல்லாமல் மற்ற பிரிவுகளிலும் reference books என்ற வகைமையிலும் பல புத்தகங்களைப் பரிந்துரைத்து அவை சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவற்றுக்காக குழுத் தலைமைக்கும் ஏற்பாடு செய்தவர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனக்குப் பிடித்த பா.வெங்கடேசன் படைப்பு எதையும் நான் அந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை. என்னை மொண்ணை என்று சொன்ன ஒருத்தரின் படைப்பைத்தான் முன்வைத்தேன். மாணவர்களின் வாசிப்புத் திறனுக்கு ஏற்றவையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். சமீபத்தில் நிகழ்விலிருந்து என்னைத் தவிர்த்த பதிப்பகம் வெளியிட்ட புத்தகத்திலிருந்தும் ஒரு கதை அந்தப் பட்டியலில் இருக்கிறது. இந்தப் பட்டியலுக்காகவும் நான் விமர்சிக்கப்படலாம். என்ன செய்வது, அதில் பத்து இதில் பத்து மட்டும் வேண்டும் என்றால் யாரால்தான் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியும்?

அது மட்டுமல்ல  17 ஆண்டுகளுக்கு முன்பு, காலஞ்சென்ற மொழிபெயர்ப்பாளர் லஷ்மி ஹோம்ஸ்ட்ராம் உள்ளிடோர் க்ரியாவுக்கு வந்திருந்தனர். தமிழ் நவீன கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறோம், அதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவ முடியுமா என்று க்ரியா ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது ‘கவிதை என்னுடைய ஏரியா இல்லை. ஆசைத்தம்பி உங்களுக்கு உதவுவார்” என்று அவர் கூறினார். நானும் பல நாட்கள் என்னிடம் இருந்த தொகுப்புகளைப் புரட்டிப் புரட்டி மொழிபெயர்ப்பில் அழகாக வரக்கூடிய, இன்னொரு மொழியினருக்குச் சேரக்கூடிய சாத்தியங்களைக் கொண்ட கவிதைகளின் பட்டியலைத் தேர்ந்தெடுத்து, கூடவே என்னிடம் இருந்த புத்தகங்கள் சிலவற்றையும், அவரிடம் கொடுத்தேன். இந்தத் தொகுப்புக்கு நான் உட்பட பலரும் உதவியிருக்கிறோம். நன்றி பட்டியலில் (அகரவரிசைப்படி) என் பெயர் முதலில் இடம்பெற்றிருக்கிறது. (என் பங்கு தெரிவுகளின் மனுஷ்ய புத்திரனின் கவிதைகளும் அடங்கும். இதெல்லாம் அவரிமிருந்து நான் விலகல் கொண்ட பிறகு.)

என் கவிதைத் தொகுப்புகள் எல்லாமே எனக்கும் பதிப்பாளர்களுக்கும் துரதிர்ஷ்டம். முதல் தொகுப்பு ‘சித்து’ (2006 ) 350 பிரதிகள் போட்டு, கணினியில் ஏற்பட்ட பிரச்சினை ஒன்றினால் அத்தனை பிரதிகளையும் தூக்கி எறிந்தோம். மறுபடியும் 350 பிரதிகள் போட்டு அதே விலை வைத்தார் ராம். ஆச்சு 17 ஆண்டுகள் அவற்றில் ஒரு 300 பிரதிகள் நானே வாங்கி நோட்டீஸ் கொடுப்பதுபோல் கொடுத்திருக்கிறேன். சில வாரங்களுக்கு அந்த அதிசயப் பொருளின் இறுதிப் பிரதியை கோவை விஜயா பதிப்பகத்தில் பார்த்துவிட்டு நண்பர் ஒருவர் போட்டோ அனுப்பியிருந்தார். ‘கொண்டலாத்தி’ (2010) சாதாரணமாக வெளியிட்டிருந்தால் கூட இந்த 14 ஆண்டுகளில் நஷ்டமில்லாமல் ஒரு 500 பிரதிகளாவது விற்றிருக்கலாம். ராமகிருஷ்ணனோ பறவைகளின் படங்களுடன் ஆர்ட் பேப்பரில் வெளியிட்டதால் விலை அதிகம் வைக்க வேண்டியிருந்தது (இத்தனைக்கும் அடக்க விலையின் இரண்டு மடங்கு கூட இல்லை). அதுவும் போச்சு. ’சூழலியல் ஆர்வலர்+பறவை ஆர்வலர்+கவிதை வாசகர்’ என்ற அரிய உயிரிகள் ஒருசிலரிடம் மட்டுமே போய்ச்சேர்ந்தது. அதையும் நோட்டீஸ் போல நிறைய கொடுத்தேன். 

பாவம், இப்போது டிஸ்கவரியில் இரண்டு கவிதைத் தொகுப்புகள். என்னால் நான் நிறைய நஷ்டமடைந்துவிட்டேன், என் பதிப்பாளர்கள் நஷ்டமடைவதை நான் விரும்பவில்லை. ஆகவே, எல்லாக் கவிதைத் தொகுப்புகளையும் நூறு நூறு பிரதிகள் வாங்கிக்கொண்டேன். மற்ற புத்தகங்களையும் கணிசமான பிரதிகள் வாங்கிக்கொண்டேன். வீட்டுக்கு வாருங்கள் அனைவருக்கும் அன்புடன் தருகிறேன்.

இதனாலெல்லாம்தான் கையில் ஏழெட்டுக் கவிதைத் தொகுப்புகள் இருந்தும் என்ன ஹேருக்குக் கொண்டுவர வேண்டும் என்ற சலிப்பு. அப்படியே விட்டுவிட்டேன். நல்லா இல்லன்னு சொன்னால் கூட ரொம்ப சந்தோஷப்படுவேன். விடுங்க! நம்மளுக்கெல்லாம் சூப்பர் சீனியர்கள் தமிழ் இலக்கியச் சூழலில் நிறைய பேர் இருக்கிறார்கள். நமக்காச்சும் மூன்று விருதுகளும் சில ரகசிய வாசகர்களும் இருக்கிறார்களே என்று திருப்தியடைய வேண்டியதுதான்.

இரண்டு எழுத்தாளர்களிடம் மட்டும் நான் மன்னிப்பு கேட்டாக வேண்டும். ஒருவர் எஸ். சண்முகம், இன்னொருவர் யுவன் சந்திரசேகர். அவர்களுடைய மொழிபெயர்ப்புகளைப் பற்றி நான் எழுதிய விமர்சனங்கள் சரியானதுதான் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. வெகுஜன இதழொன்றில் எழுதியிருக்க வேண்டாமோ என்று பின்னாளில் வருந்தத் தொடங்கினேன். ஆனால், அந்த விமர்சனங்களுக்காக நான் எதிர்கொண்ட அவதூறுகள், காயங்கள் மிக மிக அதிகம். அதில் அவர்களுக்குத் தொடர்பில்லாமல் இருக்கலாம். ஆயினும் அவர்களிடம் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

என் போதாமைகளை, குறைகளை முன்வைத்துப் பேசுங்கள். தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன், திருத்திக்கொள்ள முயல்கிறேன். எனது நேர்மையைச் சந்தேகிக்கும்போதும் என்னைத் தங்களுக்கு எதிரான சதிக்காரன் என்று சித்தரிக்கும்போதுதான் வெறுத்துப்போகிறது.

இறுதியாக, உறுதியாக ஒன்று சொல்லிக்கொள்கிறேன். கடும் நச்சு அகமண முறையில் சிக்கிக்கொண்டிருக்கும் தமிழ் இலக்கியச் சூழலில் நான் கடைசி வரை முரட்டு சிங்கிளாகத்தான் இருப்பேன். 

நன்றி!

கீழ்க்கண்ட பதிவுகளையும் படித்துப் பார்க்கலாம்:




No comments:

Post a Comment