Wednesday, September 23, 2015

தட்டானுக்குள் வானம்


ஆசை

 (‘தி இந்து’ நாளிதழின் ‘மாயாபஜார்’ சிறுவர்கள் இணைப்பிதழில் 23-09-2015 அன்று வெளியான கதை)

வாண்டுகளின் குட்டி இளவரசி ஆனந்தியைப் பற்றிப் போன வாரம் கொஞ்சம் சொல்லியிருந்தேன் அல்லவா!

ஆனந்தி, அழகான குட்டிப் பெண். அவளுக்குக் கண்கள் சிறியதாகவும் அழகாகவும் இருக்கும். அவளைக் கடந்து செல்லும் யாரும் அவளுடைய கண்களைப் பார்த்துவிட்டால், அவர்களுடைய முகம் பெரிதாக மலர்ந்துவிடும்.
ஆனந்திக்கு ஒரு பழக்கம். தினமும் வீட்டுக்கு வெளியில் வந்து விளையாடிக்கொண்டிருப்பாள். அப்போது தெருவில் யார் போனாலும் அவளுடன் பேசிவிட்டுப் போயாக வேண்டும். தெரிந்தவர்களோ, தெரியாதவர்களோ எல்லோரும் அவளுடன் பேசிவிட்டுத்தான் போக வேண்டும். இல்லையென்றால் அழ ஆரம்பித்துவிடுவாள்.

ஒரு நாள், தரையைப் பார்த்தபடி பூனை மாதிரி பதுங்கிப் பதுங்கிப் போய்க்கொண்டிருந்தாள் ஆனந்தி. என்னவென்று போய்ப் பார்த்தேன். நெருப்பெறும்பு ஒன்று தத்தித் தடுமாறிப் போய்க்கொண்டிருந்தது. ஆனந்தியைப் பார்த்தேன். அவள் கண்களில் நீர்.
‘ஏன்டிச் செல்லம் அழுதுட்டிருக்கிறே?’ என்று கேட்டேன்.

‘நான் இந்த எறும்புப் பாப்பாவத் தெரியாம மிதிச்சிட்டேன் சித்தப்பா. பாவம், அதோட அம்மா எறும்புகிட்டே போய்க்கிட்டிருக்கு. எறும்புப் பாப்பாவக் காணோம்னு, அதோட அம்மா தேடுவாங்கள்ல’ என்று சொல்லிக்கொண்டே அழுதாள் ஆனந்தி.

ஆனந்தி இப்படித்தான். சின்னஞ் சிறியனவற்றின் இளவரசி. சின்னச் சின்ன உயிர்கள். சின்னச் சின்னப் பொருட்கள். இவைதான் ஆனந்தியின் உலகம்.
குளத்தில் ஆமையைக் காட்டினால், அதற்கு முன்னதாகவே ஆமைக் குட்டியைப் பார்த்திருப்பாள். மீனைக் காட்டினாள் அதைச் சுற்றிலும், நம் கண்ணுக்குத் தெரியாதபடி சிறுசிறு குமிழ்கள் போல நீந்திக்கொண்டிருக்கும் மீன் குஞ்சுகளைப் பார்த்துவிடுவாள். இரவில் நிலாவைக் காட்டினால், அவள் விண்மீன்களை எண்ணிக்கொண்டிருப்பாள்.

நான் கம்ப்யூட்டரைப் போட்டால் போதும், அவள் என் மடியில் உட்கார்ந்துகொள்வாள்.
“சித்தப்பா, எனக்குக் குட்டிக் குட்டிப் பறவை காட்டு சித்தப்பா” என்பாள்.
தேன்சிட்டைக் காட்டுவேன், “இதைவிடக் குட்டிக் குருவி?” என்று கேட்பாள். அப்படிக் கேட்கும்போது, அவள் கண்களை நன்றாகச் சுருக்கி, உதடுகளைக் குருவி மாதிரியே குவித்து அழகாகக் கேட்பாள்.
“இதுதான் இந்தியாவிலேயே சிறிய பறவை” என்று செம்மார்பு மலர்க்கொத்தியைக் காட்டினேன்.
“இன்னும் குட்டி” என்று கேட்டாள்.
“இதுதான் உலகிலேயே குட்டிப் பறவை” என்று ரீங்காரத் தேனீக்குருவியை (Bee Hummingbird) காட்டினேன்.
“இன்னும் குட்டி” என்று விடாப்பிடியாகக் கேட்டாள்.
“இன்னும் குட்டின்னா, அந்தக் குருவியோட குட்டிதான்” என்றேன்.
இப்படித்தான், குட்டிக் குட்டி மரம், குட்டிக் குட்டிப் பூ, குட்டிக் குட்டி வீடு என்று கேட்டுக்கொண்டே போவாள்.

ஒருமுறை வானத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தவள் என்னிடம் இப்படிக் கேட்டாள்: “வானம் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு? குட்டி வானம் ஏதாச்சும் இருக்கா சித்தப்பா?”
தும்பைப் பூவில் இருந்த பனித்துளியை அவளிடம் காட்டினேன். குனிந்து அதையே ஆச்சரியத்துடன் ரொம்ப நேரம் பார்த்தாள்.
“ஐ! இந்த வானம்தான் ரொம்ப அழகா இருக்கு சித்தப்பா. இதுலே நானும் தெரியிறேன் சித்தப்பா” என்று வியந்துபோனாள் ஆனந்தி.
தும்பைப் பூ வானம்
துளித்துளியாய் வானம்
ஆனந்தியின் வானம்
அழகான வானம்
என்று நான் பாடியதும், குட்டி இளவரசி கையைத் தட்டிக்கொண்டே ஆட ஆரம்பித்தாள்.

ஒரு நாள் வீட்டுக்கு அருகே இருந்த புல்மேட்டில் எதையோ பார்த்துக்கொண்டு கைதட்டிச் சிரித்துக்கொண்டிருந்தாள்.
“என்னோட ஆனந்திக் குட்டிக்கு, இன்னைக்கு என்ன ஒரே குஷி?” என்று கேட்டேன்.
“அங்க பாரு சித்தப்பா, தட்டான் நிறையப் பறக்குது” என்றாள்.
“ஆமாம். தரையோடப் பறக்குது. அப்படின்னா மழை வரப்போகுதுன்னு அர்த்தம்” என்றேன்.
“ஏன் சித்தப்பா?” என்று கேட்டாள் ஆனந்தி.
“தட்டான்கள் தாழப் பறந்தா, மழை வரும்னு சொல்லுவாங்க” என்றேன்.
“மழை வரப்போறது எனக்கும் தெரியனும்னா, நான் என்ன செய்யணும் சித்தப்பா?” என்று கேட்டாள்.
நான் சொன்னேன், “அதுக்கு நீயும் தட்டானா ஆகணும்” என்றேன்.
அதைக் கேட்டுவிட்டு ரொம்ப நேரம் யோசித்துக்கொண்டிருந்தாள்.
எதையோ பார்த்துவிட்டு என்னை இப்படிக் கேட்டாள், “நான் தட்டானா ஆனேன்னா, என்னையும் இதுமாதிரி கரிச்சான் குருவி பிடிச்சுத் தின்னுடுமே?” - அங்கே ஒரு கரிச்சான் குருவி தட்டான்களை பறந்து பறந்து வேட்டையாடிக் கொண்டிருந்தது.
“கரிச்சானுக்குள்ளேயும் வானம் இருக்கும். அதிலும் தட்டான் பறக்கும்” என்றேன்.
“அப்படின்னா, தட்டானுக்குள்ளேயும் வானம் இருக்குமா சித்தப்பா?” என்று கேட்டாள்.
“ஆமாண்டி குட்டி. தட்டானுக்குள்ளேயும் வானம் இருக்கும். அதில் நீதான் பறந்துகிட்டிருக்கே” என்றேன்.
“ஐ தட்டானுக்குள்ள வானம். அதுல நானா? சித்தப்பா, நீங்க சொன்னது அழகா இருக்கு. இத அப்படியே பாட்டா சொன்னா நல்லா இருக்குமில்லே!” என்று கேட்டாள்.
நாங்கள் இருவரும் பாடினோம்:
‘தாழப் பறக்கும் 
தட்டான் பிடிக்கும் 
கரிச்சான் கூட்டம்

கரிச்சான் உள்ளும் 
வானம் இருக்கும் அதில் 
தட்டான் பறக்கும்’

ஓவியம்: ராஜே
 - நன்றி: ‘தி இந்து’
  ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கதையைப் படிக்க: http://goo.gl/NIKWHg

No comments:

Post a Comment