Thursday, May 28, 2015

மோடி 365° - பிரச்சாரத்தின் வெற்றி


ஷிவ் விஸ்வநாதன்
(‘தி இந்து’ நாளிதழில் 28-05-2015 அன்று வெளியான மொழிபெயர்ப்புக் கட்டுரை. தமிழில்: ஆசை)

நரேந்திர மோடிக்கு மிகவும் பிடித்தமான அவதாரம் ‘முப்பரிமாண பிம்பம்’ (ஹோலோகிராம்). அவரது ஆகிருதிக்கு அது கூடுதல் பரிமாணங்களைச் சேர்த்தது; உண்மையான ஆளுமைக்கும் நகலுக்கும் நடுவே அவரை வைத்தது. ஏனெனில், சமூகத்தின் பிம்பமாகத் தன்னை முன்வைக்கவே மோடி விரும்புகிறார். அவர் ஒரு சமூகக் கருதுகோள். மேலும் அவர் முடுக்கிவிட்ட, ஆதிக்கம் செலுத்திய, உருவாக்கிய சமூக மாற்றத்தைப் பற்றித்தான் நாம் விவாதிக்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக முன்பு முதலமைச்சராக இருந்தபோதும் சரி, தற்போது பிரதமராக இருக்கும்போதும் சரி, தேசிய அரசு என்ற லட்சியத்தை மோடி உருவாக்கினார். அறுதி விசுவாசம் அதற்கே என்பதை நிறுவினார். பிறகு, தேசத்தின் வரலாற்றை திருத்தியமைக்க முயன்றார். முதன்முறையாக வரலாறு, நவீன காலம் ஆகிய இரண்டிலும் திருப்திப்பட்டுக்கொள்ளும் ஒரு பெரும்பான்மை - மைய அரசை உருவாக்கினார். வரலாற்றில் தங்கள் தருணம் வந்துவிட்டது என்று பெருமைகொள்ளும் நடுத்தரவர்க்க இந்துக் குடும்பங்களை ஒன்றுதிரட்டினார். நேரு இல்லா பாரதத்தை உருவாக்கினார். சோஷலிசம், மதச்சார்பின்மை போன்ற சொற்களையே ஒழித்துக்கட்டியது அவரது அரசு. அரசியல் சட்டத்திலிருந்து அந்தச் சொற்களை பாஜகவால் நீக்க முடியவில்லை என்றாலும், அந்தச் சொற்களைப் பாஜக செயலிழக்கவைத்துவிட்டது.
இப்படியாக மோடி ஆட்சியின் முதல் ஆண்டு என்பது திட்டங்களிலோ பொருளாதாரத்திலோ நிகழ்த்தப்பட்ட சாதனையாக அல்ல; ஒரு பிம்பத்தை நிறுவி, தேர்தல் உலகத்தில் அதைப் பிரதிபலிக்கச் செய்ததில் அடைந்த வெற்றிதான் அது. பிரச்சாரத்துக்குக் கிடைத்த வெற்றி அது. வளர்ச்சிக்காக ஏங்கிய நடுத்தர மக்கள் அதில் தங்களுக்கேயான பிரத்யேக உலகைக் கண்டுகொண்டார்கள். இந்த உலகத்தின் எண்ணங்கள், நம்பிக்கைகள் போன்றவை குறித்து இனியும் அவமானம் கொள்ளத் தேவையில்லை. இங்கே மதத்தையும் அறிவியலையும் ஒன்றுசேர்க்கலாம். நினைவுகளூடாகக் கடந்த காலத்தை மீட்டெடுக்கலாம். வரலாற்றைப் புராணமாக்கி, அறிவியல் அடிப்படையில் அதை நிறுவ முயலலாம். பன்மைக் கருத்துகளின் இந்தியாவை அல்ல, குறிப்பிட்ட ஒரு இந்தியாவைத்தான் மோடியும் அவரது பாஜக அரசும் உருவாக்கினார்கள்.

கருத்துகளின் போரில் மோடி வென்றிருக்கிறார். இப்போது அதைச் சுற்றிக் கலாச்சாரங்களையும் அமைப்புகளையும் கட்டியெழுப்பக்கூடும். கலாச்சாரம், தேசிய உணர்வு, மதம், தொழில்நுட்பம் எல்லாம் கலந்த ஒரு விசித்திரக் கலவையான இந்த உலகை நனவாக்குபவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களே. தாய்நாட்டில் சகஜமாகவும் வெளிநாட்டில் பாதுகாப்பாகவும் செல்வாக்குடனும் இருக்க விரும்பியவர்கள் இவர்கள். புதிய நடுத்தரவர்க்க இந்தியர்கள் என்ற மோடியின் கனவை நனவாக்கியவர்கள் இவர்களே. தனது முதலாண்டில் ஒரு சமூகக் கற்பனையை உருவாக்கி, அதைச் சாத்தியப்படுத்தும் விதத்தில் தேர்தல் மற்றும் அரசியல் இயந்திரத்தை முடுக்கிவிட்டார்.
வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஒரு புதிய மதத்தைக் கட்டமைத்ததன் மூலம் முறையற்ற பொருளாதாரம் எழுப்பிய கோரிக்கைகளையும், விளிம்புநிலை மக்கள் சிறுபான்மையினர் ஆகியோரின் அச்சங்கள், போராட்டங்கள் ஆகியவற்றை நீக்குவதற்கும் அது உதவியது. வளர்ச்சிக்குக் கொடுக்கும் விலையைப் பற்றி விமர்சித்த மக்கள் உரிமைக் குழுவினரெல்லாம் பிரிவினைவாதிகள் என்றே குற்றம்சாட்டப்பட்டார்கள். வளர்ச்சியில் முனைப்பாக இருக்கும் புதிய தேசிய அரசு என்னும் வழிபாட்டுக்கு முன்பாக விளிம்புநிலை மக்கள், குடிமைச் சமூகம், புரட்சி, சிறுபான்மையினர் எல்லாமே பின்வாங்க வேண்டியதாக ஆயிற்று. மோடிதான்
இந்தப் புதிய மதத்தின் இறைத்தூதர், அர்ச்சகர் எல்லாமே. கனடாவிலிருந்து திரும்பியபோது அணுசக்தியை இரண்டாவது நவீனத்துவம் என்று மோடி பிரகடனப் படுத்தியதிலிருந்தே அந்த மதத்தின் சுவிசேஷத் தன்மையை நாம் அறிந்துகொள்ளலாம்.
கருத்துகளின் களத்திலும் அவற்றைக் கலாச்சாரத்தில் திணிப்பதிலும்தான் இந்த ஆட்சி இயங்கிக்கொண்டிருக்கிறது. அதிகாரவர்க்கம், பொருளாதாரம், நிறுவனங்களைக் கட்டமைத்தல் போன்றவற்றில் அரசு ஏதும் செயல்பட்டதாகத் தெரியவேயில்லை. உண்மையில் மோடி அரசின் ஓராண்டு நிறைவுக் கொண்டாட்டம்கூடத் தேர்தல் வெற்றி, முதலீடுகள்குறித்த வாக்குறுதிகள் போன்றதுதான்.
இவையெல்லாமே தெள்ளத்தெளிவு. இதில் புரிந்துகொள்ளச் சிரமம் தருவது இந்த ஆட்சியால் உருவான மவுனம், ஐயங்கள், குழப்பங்கள் போன்றவைதான். மோடியின் பேரணியில் கலந்துகொள்ளச் சென்ற மக்களை சர்வசாதாரணமாக நக்ஸலைட்டுகள் கடத்த முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் யாரும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. மூர்க்கத்தனமான கருத்தொற்றுமையாலும் ஆர்ப்பரிப்புகளாலும் ஒரு சமூகத்தை இந்த ஆட்சி உருவாக்கியிருக்கிறது. மோடியைச் சுற்றி தேனிக்கள் போல உழைத்துக்கொண்டிருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள்பற்றி நிறைய செய்திகள் வருகின்றன. உடனடி நகரங்கள், நகலெடுக்கப்பட்ட ஐஐடிகள், தனியார்மயப்படுத்தப்பட்ட மருத்துவத் துறை ஆகியவற்றைப் பற்றிய மோடியின் கனவை உருவாக்க அவர்கள் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மை-மைய இந்தியா மேற்கண்ட கருத்தாக்கங்களின் கலவையைக் கொண்டாடுவார்கள். ஆனால், ஐந்து ஆண்டுகள் கழித்து வரலாறும் எதிர்காலமும் திறந்த மனதுடன் இந்த ஆட்சியைப் பற்றி அணுகுமா என்பதே கேள்வி. எல்லா எதிர்ப்புகளையும் கருத்து வேற்றுமைகளையும் வென்று வந்திருக்கும் மோடியின் பக்கமே அரசியல் தர்மத்தின் அதிர்ஷ்டம் தற்போது இருக்கிறது.
- ஷிவ் விஸ்வநாதன், அரசு மற்றும் பொதுக் கொள்கைக்கான ஜிண்டால் கல்லூரியின் பேராசிரியர்.
 - நன்றி: ‘தி இந்து’
 ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: மோடி 365° - பிரச்சாரத்தின் வெற்றி

No comments:

Post a Comment