Saturday, November 21, 2020

வல்லபி: மலை தேவதையின் காதல் பாடல்கள்


தேன்மொழி தாஸின் கவிதைகளைப் படிக்கும்போது சமவெளியிலிருந்து வந்து தன்னை நேசித்துவிட்டுப் பிரிந்துசென்ற ஒருத்தனுக்காக ஒரு மலை தேவதை நெடிய காத்திருப்பில் இருப்பதுபோன்ற பிம்பம் உருவாகும். குறிஞ்சி நிலத்தில் பிறந்த தேன்மொழி தாஸின் பெரும்பாலான கவிதைகளுக்கான உரிப்பொருள் முல்லைத் திணைக்கான காத்திருத்தலும், பாலைத் திணைக்கான பிரிவும்தான். திணை மயக்கம் சங்கக் கவிதைகளிலேயே காணப்படும் ஒரு விஷயம்தான் என்பதால் நவீன கவிதை அந்தக் கட்டுப்பாட்டையெல்லாம் பொருட்படுத்தத் தேவையில்லைதான். இந்தத் திணை மயக்கம்தான் தேன்மொழி தாஸின் கவிதைகளுக்கு ஒருங்கே அழகும் துயரமும் ஊட்டியிருக்கிறது. 

நவீன கவிதைகளுக்கு நேர்ந்த பெரும் துயரங்களுள் ஒன்று அது இடத்தையும் சூழலையும் பெரிதும் இழந்தது. பறவை வெறுமனே பறவையாகத்தான் வரும், மரம் பெயரின்றி மரமாக வரும், சிலர் விதிவிலக்குகளாக இருந்தாலும் பெரும்பாலான போக்கு அப்படி. தேன்மொழி தாஸ் கவிதைகளில் அக உலகத்தோடு புற உலகும் பின்னிப் பிணைந்தே அவையவற்றின் அடையாளங்களுடன் வருகின்றன. ஆதிமனது இயற்கையை வியப்பதன் அல்லது வழிபடுவதன் தொடர்ச்சி என்றும் தேன்மொழி தாஸின் கவிதைகளைக் கூறலாம். குளவிப் பூம்புதர், வலம்புரிக் காய், வெந்தயப் பூ, தும்பிகை மரம், அடைக்கலாங் குருவி, காட்டுப்பூனை, மலைவேம்பு, நீலச் சங்குப்பூ, வச்சிரதந்திப் புழுக்கள், புல்குருவி, மலைராணிப் பூக்கள், கிளிப்பூக்கள், அழிஞ்சில் கனி, பேய்க்காளான், மந்திரக் காளான், தூக்கணாங்குருவி, கடமான் என்று காடும் மலையும் சார்ந்த உயிர்கள் பலவும் துருத்தாமல் தேன்மொழி தாஸின் கவிதையில் இடம்பெற்றிருக்கின்றன. 

‘வச்சிரதந்திப் புழுக்கள் மரம்குடையும் காட்சி/ மனதை மத்தியானம் ஆக்கும்’ என்ற வரிகளெல்லாம் நவீன படிம மொழியில் சங்க இலக்கியத்தின் தொடர்ச்சியாகவே தென்படுகின்றன. வார்த்தைகளால் விவரிக்க முடியாத சௌந்தர்யங்களை அடுத்தடுத்து வெவ்வேறு உணர்வு நிலைகளைக் கொண்டு கோத்துத் தருபவை தேன்மொழி தாஸின் கவிதைகள். ஒரு கருவை எடுத்துக்கொண்டு அதை விரித்துச்செல்பவையல்ல அவை; கரு அல்லாமல் மனநிலையே கவிதையாகிறது. அந்த மனநிலை பிரிவின் வலியைச் சுமந்திருக்கலாம், காத்திருப்பைச் சுமந்திருக்கலாம், ஏமாற்றத்தைச் சுமந்திருக்கலாம். ‘நித்திரையடையாமல்/ இமையினுள் உருளும் காதல் கண்களுக்கு/ கடுகுத்தோலின் மினுமினுப்பு’, ‘கண்கள்/ வருத்தங்களைக் குவித்து விளையாடும்/ கண்ணாடி/ அவைகளுக்கு மூளையின் முடிச்சிலிருந்து ஒருவரியேனும்/ காதல் கடிதம்/ எழுதிவிட வேண்டும்’, ‘காத்திருப்பது/ காதலின் ஈரப்பதத்தை/ காற்றின் ஒத்திசையில் இசைப்பது’, ‘கதவருகே நின்றுகொண்டு நினைவுகளோடு பேசுவது/ காட்சிப் பிழையாகவேனும் நீ/ வந்துவிடுவாய் என்பது தான்’ போன்ற வரிகளெல்லாம் அப்படி அந்தந்தச் சமயத்தின் மனநிலைகள் கவிதைகளாக ஆனதற்குச் சில உதாரணங்கள். 

இந்தக் கவிதைகளைப் படிக்கும்போது கம்பீரமான ஒரு பெண், அதுவும் காதல் வயப்பட்டதாலேயே கம்பீரமான ஒரு பெண், இன்னும் சொல்லப்போனால் பிரிவுவயப்பட்ட பெண் பற்றிய சித்திரம் நம் மனதில் தோன்றிவிடுகிறது. ‘பெண் ஸ்தனங்களின் கம்பீரமே/ ஆண் விழிகளின் மேல் தோல்களில்/ பல அடுக்குகளாக இருப்பதையும் கண்டேன்’ என்று ஒரு இடத்தில் எழுதுகிறார். இன்னொரு இடத்தில், ‘எனது அகத்தின் புன்னகை அசையா தீபச்சுடர்’ என்கிறார். பெண்ணின் காதலுக்கு முன்பு ஆண்கள் சுருங்கித்தான் போகிறார்கள். 

கவிதையே பெரிதும் தர்க்கத்தை மீறுவதுதான் என்றாலும் சமயத்தில் சேர்த்துவைத்துப் பொருள்கொள்ள முடியாத அளவுக்கு, ஆனால் அழகுடன் தேன்மொழி தாஸின் கவிதைகளில் தர்க்கம் மீறப்பட்டிருக்கிறது. ‘ஆணின் கணிதம்/ பெருங்காய வாசனையோடு விரியும் வளைகோடு’, ‘அகம் அழிவின்மையின் நீலத் தீ’, ‘காற்று பொற்கம்பியாய்/ பார்வையை எங்கோ இழுத்துச்செல்கிறது’, ‘பூமி கணித இதயம் கொண்ட நூல்கண்டு/ அதன்மேல் அவர்களோ நெல்பூவாய் நடப்பார்கள்’ போன்ற வரிகளை உதாரணமாகக் காட்டலாம். 

புனைகதையில் ‘நனவோடை’ என்பது ஒரு உத்தி. மனதில் எண்ணங்கள் ஒரு ஒழுங்கற்று வெளிப்படுவது இயல்பு. அந்த இயல்பில் அந்தப் போக்கில் எண்ணங்களைப் புனைகதையில் எழுதுவார்கள். கவிதையே சில சமயங்களில் நனவோடையின் ஒரு துண்டாக வெளிப்பட்டாலும் இது தேன்மொழி தாஸின் கவிதைகளில் ஆழமாக வெளிப்படுகிறது. வழக்கமாக இது நவீன இலக்கிய உத்தி என்றாலும் தேன்மொழி தாஸின் கவிதைகளில் இது செவ்வியல் தொனியில் வெளிப்பட்டிருக்கிறது. அகமொழி ஒரு இடத்தில் தொடங்கி இடையே புறமும் ஆங்காங்கே எட்டிப்பார்த்து கவிதை வேறொரு இடத்தில் முடியும். அப்படி வரும்போது இரண்டிரண்டு தொடர்புடைய வரிகளின் தொகுப்புபோல் கவிதை காட்சியளிக்கிறது. ஆழ்ந்த கவித்துவத்துடன் இப்படி தேன்மொழி தாஸ் எழுதும்போது ஒரே சமயத்தில் புரியாமையும் தித்திப்பும் ஈர்ப்பும் சௌந்தர்யமும் ஏற்படுகிறது. 

இந்த மலையுச்சியில் இருந்துகொண்டு எதிரே உள்ள மலைச்சரிவின் காட்டைப் பார்க்கும் உணர்வை அவரது பல கவிதைகள் தருகின்றன. ‘பெருவனம் காலங்களால் புலம்புகிறது’ எனும்போது காடே காலத்தின் ரூபம் கொள்கிறது. அபி தனது கவிதைகளில் ‘மாலை’ எனும் அரூபத்துக்குச் செய்திருப்பதை தேன்மொழி தாஸ் ‘மலை’, ‘காடு’ எனும் ரூபங்களுக்குச் செய்திருக்கிறார். ‘புலிக் குட்டியின் மேல் சவாரி செய்யும்/ புல் குருவி காற்றைச் சுவைக்கும்/ சம்பூரணராகம் காடுகளின் மத்தியில் தொங்குகிறது’ என்பது போன்ற வரிகள் இதற்கு உதாரணம். 

மொழி அலங்காரத்தை நவீன கவிதை புறக்கணித்தே வந்திருக்கிறது. அது நல்லதே. அதே நேரத்தில் மொழியழகும் தீண்டப்படாத ஒரு வஸ்துவாக ஆகிவிட்டதோ என்ற உணர்வு ஏற்படுகிறது. ஆனால், தேன்மொழி தாஸின் கவிதைகள் சொல்லின்பம் கூடியவையாக இருக்கின்றன. ‘நுழுந்துதல்’, நீல வாசம்’, ‘தில்லோலம்’, ‘மணிமான் கதிர்’, ‘வாழ்வின் ஆயல் மொழி’, ‘ஒழுங்கின்மையின் பச்சைச் சுடர்’, ‘குளவிப் பூம்புதர்’, ‘புலரி நிலப்பூண்’ போன்ற சொற்களும் பிரயோகங்களும் அவருடைய கவிதைகளுக்குப் பேரழகைச் சேர்க்கின்றன. அவருடைய உணர்வையும் உலகத்தையும் சொல்வதற்கென்று விரிந்த சொற்களஞ்சியம் அவரிடம் இருக்கிறது. அகத்தின் மொழி அவருக்குப் பலம் என்றால் புறத்தைப் பற்றி எழுதும்போது சில இடங்களில் கவித்துவப் பொன்மொழிகளாகவே வரிகள் எஞ்சிவிடுகின்றன. ‘கிணற்றில் கேதுதல் சூரன்கலையாகுமோ’ போன்ற வரிகளை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். 

‘வல்லபி’ தேன்மொழி தாஸின் ஆறாவது கவிதைத் தொகுப்பு. அபூர்வமான, அழகிய, செறிவான கவிதைகளுக்குச் சொந்தக்காரரான தேன்மொழி தாஸின் கவிதைகள் பரவலாகச் சென்றடையும்போது அவற்றின் சௌந்தர்யங்கள் வாசகர்களைத் திளைக்க வைப்பது நிச்சயம். வல்லபி 

தேன்மொழி தாஸ் 

எழுத்துப் பிரசுரம் வெளியீடு 

அண்ணா நகர், சென்னை – 40. 

தொடர்புக்கு: 98400 65000 

விலை: ரூ.200 ('இந்து தமிழ்’ நாளிதழில் 21-11-20 அன்று வெளியான கட்டுரை)

1 comment:

  1. அருமையான மதிப்புரை. நவீன கவிதைகளுக்கு நேர்ந்த பெரும் துயரங்களுள் ஒன்று அது இடத்தையும் சூழலையும் பெரிதும் இழந்தது....ஆதங்கத்தை உணர்த்தும் வரிகள்.

    ReplyDelete