Friday, February 23, 2024

நிலைமத்தின் பாடல்கள்

Inertia - painting by Soraya Silvestri

1. 
நிலைமத்தின் பொறுப்பற்றதனம்
**
மோதிய வேகத்தில்
முன் கண்ணாடியை
உடைத்துக்கொண்டு
வெளியே வந்து
விழுந்து கிடக்கிறார்
லாரி ஓட்டுநர்

இப்படித்தான்
எதையாவது
எல்லை தாண்டித்
தொடர்ந்து
போக வைத்துக்கொண்டிருக்கிறது
நிலைமம்
ஒரு தொடரோட்டம் போல

அவரது
பிள்ளைகளுக்கும்
பெண்டாட்டிக்கும்
நிலைமத்தின் மேல்
பழிபோடத் தெரியாது

விபத்தைப் பார்த்த நான்
நேரடியாகப் பழிபோடுவேன்

உலகத்தின்
எல்லா விபத்துகளுக்கும்
காரணம்

ஆனால்
விபத்து நடந்த
இடத்திலிருந்து
நழுவிச் செல்லும்
முதல் ஆள்

நிலைமத்தின்
இந்தப் பொறுப்பற்றதனத்தை
யாராவது ஒருவர்
தட்டிக்கேட்கத்தானே வேண்டும்
*

2. நிலைமத்தின் மறுமொழி
**
தொடங்கும் போதே
உருவாகிவிடுகிறது
போய்ச்சேரும் வரையிலான
உன் வழி

இருக்கும் வரை
இருக்கிறது
நீ தொடர்ந்து
இருப்பதற்கான
உன் இடம்

நீயே குறுக்கீடாய் மாறிவிட
குறுக்கீடு
உனையெட்டிப்
பார்த்துவிட
நிகழ்கிறது
ஆங்கோர் பெருவிபத்து
அண்டம் குலைய
ஆகாசம் சிதற

இரண்டு தனி வழி
ஒன்றையொன்று
எட்டிப்பார்க்கும்
ஆவலில்
ஊடுருவிக்கொண்டால்
உயிர்போனதென்றால்
விழுகிறது
என் மேல் பழி
*


3. நிலைகுத்திய விழிகள்
**
விபத்தில் உயிரிழந்த
ஓட்டுநர் குடும்பத்தைப்
பார்க்கப் போயிருந்தேன்
இன்று

நிலைகுத்திப் போயிருந்தன
ஓட்டுநர் மனைவியின்
விழிகள்

ஓடியாடிய
குழந்தைகள் விழிகளும்
அப்படியே

அவற்றிலிருந்து
ஒரு காட்சி
நிரந்தரமாய்
நீக்கப்பட்டுவிட்டது

நீக்கப்பட்டு
நிலைகுத்தியதன் பெயரும்
நிலைமமே
என்று சொன்னால்
உன் கருமாந்திரம்
எனக்குத் தேவையே இல்லை
*

4. உண்ட களைப்பு
**
எவ்வளவு
அசைந்தாலும்
அசையாமல் இருந்தாலும்
ஆடாமல் அசையாமல்
உயிரை
அசைபோட்டுக்கொண்டிருப்பது
நிலைமம்

முழுவதும்
உண்ட களைப்பில்
அது உறங்கிக் கிடக்கும்போதே
கண்ணுக்குள் வந்து
நிலைகுத்திப் போகும்
*

5. என்றுமுள்ள நிலைமம்
**
என்றுமுள்ள
நிலைமத்தைத் தேடி
எல்லா உயிர்களும்
உடலிழுத்துச் செல்கின்றன

கண்டடையும்போது
உடலைத் தவிக்க விட்டுவிட்டு
உயிர் போகின்றது

நன்றிகெட்ட
உயிரை
ஏதும் செய்ய முடியாத
வேதனையில்
உடல் இங்கேயே கிடந்து
அழுகிச் சாகின்றது
*

6. நிலைமத்தின் வீணை
**
நிலைமத்தை
முடுக்கேற்றியது யாரோ
நிலைமத்தை
உசுப்பேற்றியது யாரோ
உசுப்பேறித்
தலைதெறிக்க
மோதிச் சிதறும்போது
அதை வீணையாய்
மாற்றி மீட்டியது யாரோ
அதைக் கேட்கும்
செவிகளை
எங்கும்
இறைத்தது யாரோ
பின் நாதம் முடிந்ததும்
அதையெல்லாம்
கூட்டிப்பெருக்கி
ஒன்றுமற்ற
குப்பைக் கூடையில்
போடுவதும் யாரோ
*

7. பெருநிலைமம்
**
சிறுநிலைமமெல்லாம்
ஆடை அணிந்திருக்கிறது
ஓட்டை அணிந்திருக்கிறது
கூட்டை அணிந்திருக்கிறது
தோலை அணிந்திருக்கிறது
மயிர்கள் அணிந்திருக்கிறது

பெருநிலைமம்
கண்டதும்
மோதித் துகிலுரிந்து
ஒன்றாய்க் கலக்கிறது

போன உயிர்
கவலையில்லை
இருக்கும் மயிர்
வலிக்கின்றது
*

8. நிலையாமையின் தலைவிதி

நிலையாய் இருந்தால்
நிலைமம்
நிலையாய் சென்றால்
நிலைமம்

நிலையாமைக்கும்
இவ்விதி என்பதால்
நிலையற்ற
வாழ்வதற்கு

முடுக்கும் கணம்
விழிக்கும்
விழிப்பில் நிலைத்தால்
இறக்கும் 
        -ஆசை

No comments:

Post a Comment