Tuesday, February 27, 2024

இனிமேலும் இப்படியெல்லாம் அசிங்கப்படுத்தாதீர்கள்!


கடந்த ஆண்டு திருவாரூரிலோ தஞ்சையிலோ நடந்த இலக்கிய விழாவில் நண்பர் ஒருவர் பேசுகிறார் என்ற அறிவிப்பைப் பார்த்தேன். அவருக்கு வாழ்த்து தெரிவித்து வாட்ஸப் செய்தி அனுப்பினேன். அவருக்கு ஏதோ குறுகுறுத்திருக்கும் போலிருக்கிறது, ஏனெனில் அவர் எந்த மெசேஜும் எனக்கு அனுப்பாத, தொடர்பில் இல்லாத நிலையில் போய்விட்டவர், உடனே என்னை அழைத்து “ஆசை நீங்கள் சென்னை இலக்கியத் திருவிழாவில் இருக்கிறீர்கள்” என்றார். ஓஹோ முடிவெடுக்கும் இடத்தில் அவர் இருக்கிறார் என்று தெரிந்துகொண்டேன். சென்னை இலக்கியத் திருவிழாவும் வந்து போனது. என்னை யாரும் அழைக்கவில்லை. நானும் வருந்தவில்லை.   நான் அதை மறந்துவிட்டேன்.

இந்த ஆண்டு திருவாரூர் இலக்கியத் திருவிழா, காவிரி இலக்கியத் திருவிழா முடிந்தபோது என் ஊர்க்காரர்கள், நண்பர்கள் பலரும் வருத்தப்பட்டார்கள்.

நான் உண்மையிலேயே மேடைக்கூச்சம் உள்ளவன் எனினும் உள்ளூர்க்காரர்கள் மத்தியில் கிடைக்கும் அங்கீகாரம் யாருக்கும் பெரிதல்லவா. மேலும் ஒரு பெண் கடந்த ஆண்டு திருவாரூர் இலக்கியத் திருவிழாவில் கலந்துகொண்டு இந்த ஆண்டு நெல்லை இலக்கியத் திருவிழாவிலும் கலந்துகொண்டதை நண்பர்கள் சுட்டிக்காட்டினார்கள். அதனால் ஒரு பதிவிட்டேன். 

உடனே அதே நண்பர் என் எண்ணுக்கு உடனே அழைத்திருந்தார். நான் குளித்துக்கொண்டிருந்ததால் எடுக்கவில்லை. மறுபடியும் மாலை அழைத்தார். அதே வசனம் பேசினார், “ஆசை உங்கள் அறச் சீற்றத்தைக் கண்டேன். நீங்கள் சென்னை இலக்கியத் திருவிழாவில் இருக்கிறீர்கள். உங்கள் பெயரையெல்லாம் கொடுத்திருக்கிறோம்” என்றார். காதுபுளித்தது. அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் நண்பரே என்று சொல்லிவிட்டேன். இன்னொருவரும் இன்பாக்ஸுக்கு வந்து ‘பட்டியலில் நீங்கள் இருக்கிறீர்கள்’ என்றார்.

இப்போது சென்னை இலக்கியத் திருவிழாவும் வந்துவிட்டது. அந்த நண்பரின் மனநிலையை எண்ணித்தான் வருந்துகிறேன். இப்படி வாய்விட்டுவிட்டோமே என்று வருந்துகிறாரா, அதிகார மட்டத்தில் வந்துவிட்டதன் நடைமுறைகளுக்குப் பழகிக்கொண்டிருக்கிறாரா  என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் நண்பரே நீங்கள் என் பதிவுகளைப் பார்க்கிறீர்கள் என்பதை நான் கடந்த ஆண்டே அறிந்துகொண்டேன்; என் கைபேசி எண்ணும் உங்களிடம் இருக்கிறது என்றும் தெரிந்துகொண்டேன். ஆனால், அவமானப்படுத்தப்பட வேண்டியவர்கள் பட்டியலில் நான் இருக்க விரும்பவில்லை. தயவுசெய்து என்னை இனிமேல் அவமானப்படுத்தாதீர்கள். நான் ஏற்கெனவே கொந்தளிப்பான ஒரு மனநிலையில் இருக்கிறேன். 

அந்த நண்பர் சென்னை இலக்கிய விழாவிலும் பேசுகிறார். அவருக்கு என் வாழ்த்துகள்!

**

காவிரி இலக்கிய விழாவை ஒட்டி நான் பதிவிட்டிருந்த கொஞ்ச நேரத்தில் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் ஒரு பதிவிட்டிருந்தார். எனக்கான எதிர்வினையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அது என்னையும் உள்ளடக்கும் தொனியில்தான் இருந்தது. இன்னொரு மாநிலம் கோயில் கட்டும்போது தமிழ்நாடு அரசு நூலகம், இலக்கியத் திருவிழா போன்ற முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. இதில் உள்ள குறைகளை விமர்சிக்கக் கூடாது என்ற தொனியில் எழுதியிருந்தார். அதைக் கண்டுகொள்வது தன்னுடைய முதிர்ச்சிக்கு அழகல்ல என்று கருதியிருப்பதாக எழுதியிருப்பார். “இப்படியான ஒரு மாபெரும் சமூகப் புரட்சியை உருவாக்கும் ஒரு முன்னோடி செயல்பாட்டை விமர்சிப்பவர்கள் ஒன்று அசடாக இருக்க வேண்டும். இல்லையேல் மோசமான காரியக்காரர்களாக இருக்க வேண்டும்” என்று முத்தாய்ப்பாக முடித்திருப்பார்

ஆம், நான் ஒரே நேரத்தில் அசடாகவும் காரியக்காரனாகவும் இருக்கிறேன் என்று அவருடைய இந்தப் பதிவின் மூலம் தெரிந்துகொள்கிறேன். 

மாபெரும் சமூகப் புரட்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திட்டமிட்டு முதல் நாள் ஒவ்வொருவருக்கும் போஸ்டர் அனுப்பப்படுவதுதான் மாபெரும் கூத்து. சர்வதேச இலக்கியவாதிகளை அழைத்து ஒரு இலக்கிய விழா நடத்தினால் இப்படித்தான் தமிழ்நாடு அரசு செய்யுமா? இந்த அரசுதான் இதுவரை வந்த அரசுகளிலேயே எழுத்தாளர்களை அதிகம் கௌரவிக்கும் அரசு என்பது உண்மை என்றாலும் இதெல்லாம் கேலிக்கூத்து அல்லவா! என்ன கௌரவித்தாலும் அரசு எழுத்தாளர்களுக்குக் கொடுக்கும் இடம் இப்படித்தான் இருக்கிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒரு கூடுதல் தகவல்: உரையாளர்கள் பட்டியலில் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் பெயரைக் கண்டேன். வாழ்த்துகள். அவமானப்படுத்தப்படுபவர்கள் பட்டியலில் நான் இருப்பேன், எனக்கும் வாழ்த்துகள்!

என்னை அழைக்கவில்லை என்று நான் ஒன்றும் ஒப்பாரி வைக்கவில்லை. ஏற்கெனவே நான் கூறியுள்ளபடி அதற்கு ஆசைப்பட்டிருந்தால் கடந்த பத்து ஆண்டுகளில் பல மேடைகளை நான் கண்டிருப்பேன். அழைக்கிறோம், நுழைக்கிறோம் என்று நீங்களாகவே வந்து அவமானப்படுத்தாதீர்கள் என்றுதான் கேட்டுக்கொள்கிறேன். 

இறுதியாக ஒரு விஷயம்! கவிஞர் நடராஜன் பாரதிதாஸின் ’ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக்...’ ஒரு முக்கியமான தொகுப்பு. அதற்கு சாகித்ய அகாடமி விருது தர வேண்டும் என்று சுகுணா திவாகரும் நானும் பேசியிருக்கிறோம். ஆனால், அப்படிப்பட்ட கவிஞருக்கு இங்கே விருது மேடைகளுக்காகவும் விழா மேடைகளுக்காகவும் அழைப்பு வராதது கெடுபேறு. அவரைத் தவற விடுவதன் மூலம் இலக்கியத்தின் ஒரு பகுதியையும் இலக்கியச் சமூக நீதியையுமே இந்த மேடைகள் தவறவிடுகின்றன. இதற்காக வருந்துகிறேன்!

No comments:

Post a Comment