ஆசை
(‘காந்தி, ஆங்கிலேயரின் கையாள்’ என்று மார்க்கண்டேய கட்ஜு திரும்பத் திரும்பக் கூறிவரும் அவதூறுக்கு எதிராக ‘தி இந்து’ நாளிதழில் 14-03-2015 அன்று நான் எழுதிய கட்டுரை)
காந்தி, மதத்தை அரசியலில் கலந்தாரா? புரட்சியை மழுங்கடித்தாரா?
‘காந்தி ஏகாதிபத்தியக் கைக்கூலி’ என்ற வாசகம் ஒன்றும் நமக்குப் புதிதல்ல. இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுத்ததும் அதில் இன்றுவரை முன்னணியில் இருப்பதும் தீவிர இடதுசாரிகளே. காந்தியை அவதூறு செய்தல் என்ற ஒரு விஷயத்தில் மட்டும் இடதுசாரிகளும் வலது சாரிகளும் கைகோத்துக்கொள்வதுதான் விசித்திரம்.
இடதுசாரி அமைப்பொன்றில் ஒருவர் சேரும்போது பாலபாடமே காந்தி வெறுப்புதான் என்று மூத்த தோழர் ஒருவர் பகிர்ந்துகொண்டார். ‘இந்தியாவில் புரட்சி மலர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவும், இந்தியச் சுதந்திரப் போராட்டத்தை மழுங்கடிப்பதற்காகவும் ஆங்கிலேயரால் கொண்டுவரப்பட்ட ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிதான் காந்தி’ என்பது அவர்களின் முதல் பாலபாடம். இந்த மூளைச்சலவையையெல்லாம் மீறிக் காலப்போக்கில் காந்தியைத் தான் அடையாளம் கண்டுகொண்டதாக அந்தத் தோழர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அது மட்டுமல்லாமல், “நாங்கல்லாம் அப்போ காந்தியை ஏகாதிபத்தியத்தோட கைக்கூலி அதுஇதுன்னு சொல்லிக்கிட்டுத் திரிஞ்சோம். காந்தி நம்ம ஆளுதாங்கிறது தாமதமாதான் தெரிஞ்சது. ஒருவகையில கம்யூனிஸ்ட் பழுத்தா காந்தியவாதி” என்று எண்பதுகளைத் தாண்டிய தோழர் ஒருவர் தன்னிடம் சொன்னதையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
இந்த வகையில் வயதில் பழுத்த நிலையில் ஒருவர் காந்தி எதிர்ப்பாளராக மாறியிருக்கிறார். உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியும் இந்தியப் பத்திரிகைகள் மன்றத்தின் முன்னாள் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜுதான் காந்திக்குக் கிடைத்த புதிய எதிர்ப்புவாதி/ அவதூறுவாதி.
கட்ஜுவின் குற்றச்சாட்டுக்களில் பிரதானமானவை இவை: 1. காந்தி எப்போதும் எல்லாவற்றிலும் மதத்தை நுழைத்தார். இந்து மதத்தையே முன்னிறுத்தினார். அரசியலில் இப்படி மதத்தைக் கொண்டுவந்ததால் ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு அவர் உடந்தையாக இருந்தார். ஆகவே, அவர் ஒரு ‘பிரிட்டிஷ் ஏஜென்ட்’.
2. புரட்சி இயக்கங்களையெல்லாம் மழுங்கடித்து, வன்முறையற்ற வழி என்று சொல்லிக்கொண்டு சத்தியாக் கிரகம் என்ற முட்டாள்தனமான பாதையை நோக்கி இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் திசைதிருப்பிவிட்டார் காந்தி. இதுவும் ஆங்கிலேயருக்கு உதவியது.
காந்தி இந்து மதத்தை முன்னிறுத்தினாரா?
இந்து மதத்தையும், இந்து மதத்தின் நூல்களையும் காந்தி புரிந்துகொண்ட விதம்போல் ஒரு சனாதனியால் புரிந்துகொள்ள முடியாது. காந்தி, மத நூல்களிலிருந்தும் மதங்களிலிருந்தும் தேவையான நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துக்கொள்வார். அதனால்தான் கீதைக்கு காந்தி அளித்த விளக்கவுரை சனாதனிகளால் கடுமை யாக எதிர்க்கப்பட்டது.
அவர் இந்து மதத்தைத்தான் முன்னிறுத்தினார் என்பது உளறலின் உச்சம். காந்தியின் ஆசிரமத்தில் அவருடைய அறையின் சுவரில் தொங்கிய ஒரே ஒரு புகைப்படம் ஏசுவுடையது. ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தினாரேயொழிய எந்த ஆலயத்துக்குள்ளும் சென்று கடவுளை அவர் வழிபட்டதில்லை. ஒரு முறை காசியில் உள்ள கோயிலுக்குச் செல்ல நேரிட்ட போது, கோயில்களெல்லாம் அழுக்குகளின் கூடாரமாக இருப்பதாகச் சொன்னார். ஆனால், வாடிகனில் சிஸ்டீன் ஜெபக்கூடத்தில் ஏசுவின் சொரூபம் முன்பு நின்றபடி கண்ணீர் மல்கியிருக்கிறார். அதுமட்டுமல்ல, காந்தியவாதிகளாக இருந்த/ இருக்கும் கிறிஸ்தவப் பாதிரியார்களின் எண்ணிக்கை சொல்லி மாளாது. ஸ்டேன்லி ஜோன்ஸ் என்ற பாதிரியார் ‘ஏசு கிறிஸ்துவுக்குப் பின்னால் வந்தவர்களிலேயே கிறிஸ்துவின் குணாதிசயங்களை அதிகமாகக் கொண்ட ஒருவர் கிறிஸ்தவர் இல்லை என்பதுதான் விந்தை’ என்று காந்தியைக் குறிப்பிடுகிறார்.
அதேபோல் அவருடைய பிரார்த்தனைக் கூட்டங் களில் எல்லா மதங்களின் வேதங்களிலிருந்தும் வாசகங் கள் சொல்லப்படும் என்பது உலகறிந்த ஆனால், கட்ஜு அறியாத விஷயம். தன்னுடைய ‘ராமராஜ்யம்’ என்பது கிறிஸ்தவர்களுக்கு ‘கிறிஸ்தவ ராஜ்ய’மாகவும் முஸ்லிம்களுக்கு ‘கிலாஃபத்’தாகவும் ஒரே சமயத்தில் இருக்கும் என்றும், அது ஒரு சமத்துவ சமுதாயமாக இருக்கும் என்றும் சொன்னவர் அவர்.
‘காந்தி அரசியலில் மதத்தைக் கலந்தார்’ என்று அருந்ததி ராயில் ஆரம்பித்து கட்ஜு வரை ஒரே பாட்டாய்ப் பாடுகிறார்கள். மதம் என்பதைப் பிரார்த்தனைகளோடு நிறுத்திக்கொண்டவர் காந்தி. தான் சர்வாதிகாரியாக வந்தால் அரசியலிலிருந்து மதத்தை முற்றிலுமாக நீக்கிவிடுவேன் என்றார். எல்லா மதங்களுக்கும் பொது வானவர் என்பதால், நாத்திகர் நேருவைத் தனது அரசியல் வாரிசாகவும் இந்தியாவின் முதல் பிரதமராக வும் தேர்ந்தெடுத்தார் காந்தி.
கைக்கூலி இப்படித்தான் செய்வாரா?
காந்தி ஆங்கிலேயர்களின் கைக்கூலி என்றால், அந்நியத் துணிகள் உள்ளிட்டவற்றை அவர் ஏன் புறக்கணித்திருக்க வேண்டும்? வட்டமேசை மாநாட்டுக் காக காந்தி இங்கிலாந்து சென்றபோது, தனது ‘அந்நியத் துணி பகிஷ்கரிப்பு’இயக்கத்தால் வேலையை இழந்த ஆங்கிலேய மில் தொழிலாளர்களை அவர் சந்தித்ததற்கு வரலாற்று/ புகைப்பட ஆதாரங்களே இருக்கின்றன. காந்தியால் வேலை இழந்திருந்தாலும் அந்தத் தொழி லாளர்களுக்கு காந்தியின் மீது கோபம் இல்லை. ‘நாங்கள் இந்தியாவில் இருந்திருந்தால் உங்கள் பக்கம்தான் இருந்திருப்போம்’ என்று அவர்கள் காந்தியிடம் சொல்லியிருக்கிறார்கள். இப்படி, அந்நியத் துணி பகிஷ்கரிப்பு, உப்பு சத்யாக்கிரகம், ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றால் பிரிட்டனின் பொருளாதாரமே கிட்டத்தட்ட முடங்கிப்போகவில்லையா? இதையெல்லாம் ஆங்கிலேயக் கைக்கூலிதான் செய்தார் என்று சொல்கிறீர்களா கட்ஜு?
1930-ல் ஒத்துழையாமை இயக்கம் தொடங்குவதற்கு முன்பு வைஸ்ராய் இர்வின் பிரபுவுக்கு ‘பிரிட்டிஷ் கைக்கூலி!’ எழுதிய கடிதத்திலிருந்து சிறு பகுதியைப் பாருங்கள்:
(உங்கள் அரசின்) நிர்வாகம் உலகத்திலேயே மிக அதிகமாகச் செலவாகும் ஒன்று என்று என்னால் நிரூபிக்க முடியும். உங்கள் சம்பளத்தையே பாருங்கள்: மாதம் ஒன்றுக்கு 21,000 ரூபாய்க்கு மேல் (சுமார் 1,750 பவுண்டுகள்) உங்கள் சம்பளம். இதைத் தவிர, மறைமுகமான வேறு பல தொகைகளும் சேர்கின்றன. தினம் ஒன்றுக்கு 700 ரூபாய்க்கு மேல் நீங்கள் பெறுகிறீர்கள். இந்தியாவில் ஒரு மனிதனின் சராசரி வருமானமோ இரண்டு அணாவுக்கும் கம்மி. எனவே, இந்தியனின் சராசரி வருமானத்தைப் போல் ஐயாயிரம் மடங்குக்கு மேல் நீங்கள் பெறுகிறீர்கள். பிரிட்டிஷ் பிரதம மந்திரியோ பிரிட்டிஷ்காரனின் சராசரி வருமானத்தைப் போல் தொண்ணூறு மடங்குதான் பெறுகிறார். நீங்கள் பெறுகிற சம்பளம் உங்களுக்குத் தேவையில்லை என்பதை நான் அறிவேன்… இப்படிப் பட்ட ஏற்பாட்டுக்கு இடம்தரும் ஒரு முறையை முன்பின் பாராமல் அழித்துவிடுவதே நியாயம்.”
(‘காந்தி வாழ்க்கை’; மொழிபெயர்ப்பு: தி.ஜ.ர.)
மவுண்ட்பேட்டனிடம் அவரது ஆடம்பர மாளிகையை விட்டு வெளியேறும்படியும், அந்த மாளிகையை அகதிகளுக்கான மருத்துவமனையாக மாற்றிவிடும் படியும் கேட்டுக்கொண்டதும் அதே ‘பிரிட்டிஷ் கைக்கூலி’தான்!
எந்தப் புரட்சியை மழுங்கடித்தார்?
ஆசாத், பகத்சிங் போன்றோரின் தியாகங்கள் மகத்தானவை. ஆனால், அவர்களின் வன்முறைப் பாதையை காந்தி அங்கீகரிக்கவில்லை. ஒரு செயலின் பலன் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அந்தச் செயல் செய்யப்படும் விதமும் முக்கியம் என்றவர் அவர். ஆயுதம் எடுத்துப் போராடியவர்களைக் கண்டல்ல, அகிம்சையைக் கண்டுதான் ஆங்கிலேயர்கள் நடுநடுங்கினார்கள்.
ஒரே ஒரு சம்பவம்: உப்பு சத்தியாக்கிரகத்தைத் தொடங்கிய பின் காந்தி கைதுசெய்யப்படுகிறார். ஆனால், அவருடைய தொண்டர்கள் போராட்டத்தைத் தொடரும் வகையில் உப்பெடுக்கச் செல்கிறார்கள். அவர்களுக்கு எதிரில், அவர்கள் உப்பெடுக்க முன்வந்தால், அவர்களை அடித்து நொறுக்கப் பெரும் படையொன்று தயாராக நிற்கிறது. தொண்டர்கள் அஞ்சாமல் முன்செல்கிறார்கள். முன்செல்பவர்கள் அடித்து நொறுக்கப்படுகிறார்கள். ஆனாலும், தொடர்ந்து தொண்டர்கள் முன்செல்கிறார்கள். அடித்து நொறுக்கப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் அடிப்பவர் களுக்குக் கை நடுங்க ஆரம்பிக்கிறது. ஆனால், காந்தியின் தொண்டர்கள் நடுங்கவில்லை. இதைவிட என்ன புரட்சி வேண்டும்?
எப்படிப்பட்டப் போராட்டத்தையும் வன்முறையையும் எதிர்கொள்ளும் துணிவு, நீண்ட காலப் போராட்ட வாழ்வின் விளைவாலும் அசாத்தியமான மனப்பக்கு வத்தாலும் காந்திக்கு இயல்பாகவே இருந்தது. ஆனால், அந்தத் தொண்டர்களுக்கு இவ்வளவு சக்தி, மன உறுதி எங்கிருந்து வந்தது? அதுதான் காந்தியின் சக்தி. எல்லோருக்குமான மன உறுதியைக் கதிர்வீச்சுபோல் பரப்பும் சக்தி அது. அந்த சக்தியைக் கண்டுதான் ஆங்கிலேயர் அதிகம் அஞ்சினார்களே தவிர, ஆயுதங்களையோ ஆயுதப் போராட்டங்களையோ கண்டு அல்ல.
உண்மையில், காந்தியின் காலத்துக்கு முன்னாலும், அவரது காலத்திலும் எத்தனையோ ஆயுதக் கிளர்ச்சிகளை நசுக்கியிருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள். ஆகவே, ‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ய’த்தைக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களை வன்முறைப் புரட்சி அடித்துத் துரத்தியிருக்கும் என்றும், அதை காந்திதான் மழுங்கடித்தார் என்றும், இதற்காகவே ஆங்கிலேயர்கள் காந்தியைக் கொண்டுவந்தார்கள் என்றும் சொல்வதைவிட அபத்தம் வேறெதுவும் இருக்க முடியுமா?