|
நன்றி: wiki commons, வடிவமைப்பு: கே.சதீஷ் |
இந்தக் கதையில் வரும் மனிதரை நான் சந்தித்தது
23 ஆண்டுகளுக்கு முன்பு. அப்போது இந்தக் கதையை நான் எழுதியிருந்தால் அந்த அனுபவத்தின்
மீதான, அந்த மனிதரின் மீதான, என் நினைவு மீதான நம்பிக்கை எனக்கு முழுதாக இருந்திருக்கும்.
இப்போது எனக்கு வெறும் குழப்பம் மட்டுமே மிஞ்சுவதால், தெளிவையல்ல குழப்பத்தையே என்
வாசகர்களுக்கு நான் தர விரும்புவதால் இப்போது, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இதனை எழுதுவதுதான்
பொருத்தமாக இருக்கும். எந்த அளவுக்கு நீங்கள் என்னை நம்பவில்லையோ அந்த அளவுக்கு எனக்கு
மகிழ்ச்சி.
என்னை அறிந்த பலருக்கும் தெரியும், மன்னார்குடியிலிருந்து சென்னைக்குப் படிக்க
வந்தவன் நான். இங்கே வந்த ஆண்டு 2001. அப்போது சென்னை மாநிலக் கல்லூரியில் ஆங்கிலம்
முதுகலை படித்துக்கொண்டிருந்தேன். அந்தக் கல்லூரியில் ஏதும் நான் பெற்றுக்கொள்ளவில்லை
என்றாலும் வகுப்பு நடக்கும்போது ஆசிரியரைக் கவனிக்காமல், தெளிவாகத் தெரியும் வங்காள
விரிகுடாவை அங்கிருந்தே பார்த்துக்கொண்டிருப்பது அவ்வளவு மகிழ்ச்சியைத் தரும். கூடுதலாக,
அருகிலுள்ள விக்டோரியா விடுதியிலிருந்தும் காலையோ மாலையோ கடற்கரைக்கு வந்து சிறிது
உலவலாம், உட்கார்ந்து காற்றுவாங்கலாம். மாநிலக் கல்லூரி, விக்டோரியா விடுதி இரண்டும்
ஆங்கிலேயர் காலத்துக் கட்டிடங்கள் என்பதால் அங்கே நடப்பதெல்லாம் ஷேக்ஸ்பியர் நாடகங்கள்
என்றும் நான் ஷேக்ஸ்பியர் காலத்துப் பார்வையாளன் என்றும் கற்பனை செய்துகொள்வேன்.
அப்படித்தான் ஒருநாள் ஷேக்ஸ்பியர் நாடகத்திலிருந்து வெளியேறி விடுதிக்குச் சென்று
ஓய்வெடுத்துவிட்டு மாலையில் கடற்கரை சென்றேன்.