Friday, March 29, 2024

திருவயிற்றின் கனி - புனித வெள்ளி சிறப்புக் கவிதைகள்



1. புனித வெள்ளியின் உதிரத் துளி

இவ்வெள்ளியின்
தரையில்
ஆழ ஊன்றியிருக்கிறது
ஒரு புனித மனம்

அசைவாடா கிளைபோல
தொய்ந்திருக்கும் தலை

களைப்பு நிரம்ப
இனி
இடமில்லா உடல்

கீழிறங்கும்
ஒவ்வொரு சொட்டும்
தரையின் ஆழத்துக்குள்
மேலும் மேலும்
ஒரு அடி என
இறுதிச் சொட்டு
பூமியின் மையத்தை
எட்டியதும்
பெருங்குரலொன்று
ஓவென்றெழுந்து
அண்டம் உலுக்கியது

ஆதியிலிருந்து
அங்கே குமைந்திருப்பதும்
எல்லா உதிரச் சொட்டுகளின்
ஆகர்ஷணப் புள்ளியாய்
அமைந்திருப்பதும்
 படைப்பின்போது
பிதாவிடமிருந்து பிய்ந்து தங்கியதுமான
ஆதாரவலியின் குரல் அது

‘என் தேவனே என் தேவனே
என்னை ஏன் கைவிட்டீர்’
என்றபோது
விசும்பி எழுந்தாலும்
வெளிப்பட விரிசலில்லாமல்
தவித்த குரல் அது

ஒரு சொட்டு
தட்டிக் கதவகற்ற
வீறிட்டெழுந்து
மூன்றாம் நாளில்
கல்லறை பெயர்த்ததும்
எழுப்பித்ததும்
உயிர்ப்பித்ததும்
விண்ணேற்றியதும்
அக்குரலே

அக்குரலை எட்டுமொரு
சொட்டு
எம்முடலிலும்
தாருமென் பிதாவே

அது
கண்ணீராக இருந்தாலும் சரி
உதிரமாக இருந்தாலும் சரி
--   

2. உலகின் உச்சியில் ஒரு திருவுரு

முன்னூறு ரூபாய் கொடுத்து
வாங்கியது
கைக்குள் வைத்துக்
கையைத் திறந்து திறந்து
மூடுகிறேன்

அப்படிச் செய்வதன்மூலம்
அதனை ஒரு கண்
ஆக்கிவிடலாம்
என்பதுபோல

அப்படியாவது
என் இதயத்தை
அழுத்திக்கொண்டிருக்கும்
முள்முடியை
அது கண்டுவிடும்
என்பதுபோல

இரண்டாயிரம் ஆண்டுக்கு
முன்பு
சிலுவையில் வைத்துக்
கைகளிலும் கால்களிலும் கூட
கண்களைத் திறந்தனர்

வெளியே வந்த ரத்தம்
எல்லாவற்றையும் பார்த்தபடி
ஓட ஆரம்பித்தது

சிலுவையுடன்
அவர் நடந்து வந்த
பாதையைத் தழுவி
அதன் வேதனையைக்
கழுவி நின்றது

வெளியே
அவ்வளவு குளிரைக் கண்டு
வந்த இடம் நோக்கித்
திரும்பியோட முடியாமல்
திகைத்து
உறைந்து நின்றது

அதே குளிரை
உணர்கின்றேன்
இவ்வுலோகத்தில்

அது
இவ்வுலோகத்தின் இயல்பா
அதிலுள்ள
திருவுருவின் இயல்பா
என்று தெரியவில்லை

இதே உலோகம்
இதே குளிரையும்
இதே ஆறுதலையும்
குண்டு வடிவத்தில்
தருமா என்றும் தெரியவில்லை

எனினும்
உணர்கிறேன்
வடிவத்துக்குத்
தனிப்பட்ட மனம் உண்டென்று
நிராதரவாக
உலோகத்தில்
தனித்து விடப்பட்ட
இவ்வுருவைப் பார்க்கும்போது

ஒரு நிராதரவை
உலகின் உச்சியில்
தூக்கி வைக்கும்போது
எவ்வளவு
ஆறுதல் அளிக்கிறது

அதைத்தான்
கைக்குள் வைத்து
நெஞ்சுக்குள்
கடத்துகிறேன்
--

3. பாவிகளின் நெல்மணி

அது சிலுவைப் பாதை
போலில்லாமல்
ஏதோ உழவு வேலை
போலத்தான் தெரிந்தது

ஏரை விஸ்தரித்து
ஏசுவின் தோள்மேல்
ஏற்றிவிட்டார்கள்

அவரோ
பல தலைமுறை
பாகப்பிரிவினைகளுக்குப் பிறகு
எஞ்சிய துண்டு நிலமாகத்
தோன்றிய மேடையின்
சிறுபரப்பில்
ஓரேர் கொண்டு
ஓராள் உழவு
செய்துகொண்டிருந்தார்

உயிருள்ள ஏரும் நானே
உயிருள்ள நிலமும் நானே
என்றொரு வசனம்
விவிலியத்தில் இல்லையென்றாலும்
பாஸ்கா* நாடகத்திலாவது
சேர்த்துவிட்டிருக்கலாம்

மண்ணகத்தையும்
விண்ணகத்தையும்
ஒருசேர உழுவதற்கு
சரியான ஆள் இவரே என்று
தண்டனை விதித்ததும்

இவர் உழுத நிலத்தில்
நடுவதற்குச் சரியான நாற்று
இவரே என்று
ஆக்கினை செய்ததுமான
எல்லையற்ற கொடுங்கோன்மையின்
அரசர் எவரோ
அவரிடம் ஒன்று
கேட்க வேண்டும் நான்

அந்நாற்றின் உச்சியில்
விளைந்து
ஒளியுண்டு மிளிரும்
நெல்மணிகளைப் பாருங்கள்

அவற்றைக்
கொத்திச் செல்லும் தகுதி கொண்ட
ஒரு பறவைகூட
ஏன் படைக்கவில்லை
நீர்

நீரே அழகு பார்த்து
அழகு பார்த்துக்
கொறிக்க வேண்டும் என்ற பேராசையா

செசாருக்கு** உரியதை செசாருக்கும்
பாவிகளுக்கு உரியதைப் பாவிகளுக்கும்
ஒழுங்காய்க் கொடுத்துவிடும்
நீர்
--                         

4. ஏசுவுக்காகச் சுமந்தவர்கள்

அருகிலுள்ள மேசையில்
வந்தமர்ந்தவர்கள்
இரண்டு நாட்களுக்கு முன்பு
பிலாத்துவின் வீரர்கள்

சிலுவையின் பாரம்
தாங்க முடியாத
அந்தோணி மாமாவுக்காகப்
பக்கவாட்டில்
தாங்கிக்கொண்டவர்கள்

கூடவே
பெயரற்றவர்களின் பாரத்தை
யுகங்கள் கடந்தும் சுமந்து
பெயரற்றவர்களாக
நடிப்பவர்கள்

வருத்தப்பட்டு பாரம் சுமந்தவர்கள்
இளைப்பாறுதலுக்கு
வந்திருக்கிறார்கள்

உமக்காகச் சுமந்த இவர்களுக்கு
உம் விண்ணரசில்
இடம் உண்டா ஏசுவே
என்று கேட்டுக்கொண்டு
என் மிடறை அருந்துகிறேன்

அவர்கள் தட்டித் திறக்கும்
புட்டிகளிலிருந்து
விசுக்கென்று பாயும் ஒளி
பிளாஸ்டிக் கோப்பைகளை நிறைக்க
இப்போது மண்ணரசு
அவர்கள் உடல் நிறைக்கிறது
விண்ணரசு பொறாமை கொள்ள
--

5. ‘சாத்தானே அப்பாலே போ’வுக்கு முன்னே...

1.
நசரேத் ஏசுவே
எத்தனை முறை
உன் கண்ணைக் கசக்கித் தெளிவாக்கினாலும்
உன் கண்முன் தெரியும் இருள் விலகாது

அது மரியாளின் கருவறையிலிருந்து
உன்னைத் தொடரும்
இருள்

ஒளியாய்த் துடித்துக்கொண்டிருந்த
உன்னைப் பொதிந்து
போர்த்திக்கொண்ட புனித இருள்

உன்னைப் பேரழகு
மின்மினியாக்கவே
என்னை மேலும் மேலும்
கும்மிருட்டாக்கிக்கொண்டு
அங்கே நான் அவ்வளவு
அழகு பார்த்தேன்

என் கண்முன்னே
உருவாகிக்கொண்டிருந்தது
உமி நீக்காப் பார்வை

உமியின் நெளிவுசுளிவில்
கண்டேன்
உள்ளே நிகழும் பேரலையடிப்பை

பார்வையின்மை நிகழ்த்தும் பார்வையின்
அலையடிப்பு அது

கோதகன்று
கொட்டுவிழிவந்ததும்
உள்ளே உன் முதல் காட்சி நான்
காட்சியின் கதகதப்பு நான்

என்னை நீங்கிச் சென்ற முதல்நொடி
நீயழுத பிரிவாற்றாமையின் கீதம்
என் இருள்மனச்சுவர்களில்
மோதிமோதி என்னை
இன்றும் உடைக்கிறது

2.
என் செல்ல மின்மினியே
காடுகளிலும் கடல் நடுவிலும்
மலையுச்சியிலும்
உபவாசம் இருக்கிறாய்

பேரொளி நாடி
பேரொளி சேர
பெருந்தவமிருக்கிறாய்

புற வெளிச்சம்தான்
மின்மினிக்குப் பேரெதிரி
என்பதை
மரியாளின் மகனே உன்னைவிட யார்
நன்கறிவார்

இத்தனை ஆண்டு
உனைச் சூழ
தவம்செய்த இருட்கோது
உனை அழைக்கிறேன்

கண்ணைக் குருடாக்கி
உன்னைத் தன்னில் கரைக்கும்
பேரொளி நீக்கிப்
பேரிருள் காட்டில்
மிதக்கும்
தனி மின்மினியாய்க்
உன்னை அழைத்துச் செல்கிறேன்

அங்கே நீ ஒளிர்வாய்
இருளின் கனவாய்

நான் நீட்டும்
கைக்குள்
வந்து பொதிந்துகொள்

நீ நீங்கிய கனவெல்லாம்
இனி என்றும்
காண்பாய்
மின்மினியிலிருந்து
நீவிண்மீன் ஆவாய்
வா
[சாத்தானின் மனக்குரல்:
விண்மீனின் ஒளிப்புள்ளியால்
இருளின் வியாபகம்தான்
எத்தனை பெரிது
என்பதை
உன் ஒளித்தேவனுக்கு
நீ என்றும் மின்னி மின்னிச் சொல்லு]
--

6. மல்லுக்கட்டல்

தகரத்திலோ
பிளாஸ்டிக்கிலோ செய்தால்
மேடையில்
அவ்வளவு
கஷ்டம் இருக்காதே
மரச்சிலுவை ஏன் என்று
பாலு அண்ணனிடம் கேட்டேன்
பாஸ்காவுக்குச் சில நாட்கள் முன்பு

'ம்ஹூம்
சிலுவையாலதான்
ஏசு சாமிக்கும்
இந்த பாலுவுக்கும் மதிப்பு
நடிப்பு நம்மகிட்ட இருக்கலாம்
சிலுவை கிட்ட இருக்கக் கூடாது
இல்லையா தம்பி'
என்றார்

சிலுவைப் பாடு
எனக்குக் கண்முன்
திரை விரித்தது

ரத்தமும் வியர்வையும்
சொட்டச் சொட்டக்
கல்லிலும் முள்ளிலும்
நடந்து வருகிறார் ஏசு
தட்டுத் தடுமாறி
விழுந்து எழுந்து

சிலுவை நடித்துவிடக் கூடாது
என்று அவர் மல்லுக்கட்டியது போல்தான்
எனக்குத் தெரிந்தது

இருபது நூற்றாண்டுகளாக
இன்று பாலு வரை
தொடரும் மல்லுக்கட்டல்

பாஸ்கா மேடைக்கு
முன்னுள்ள திடலில்
திரண்டமர்ந்த மக்கள்
இறுதியில் அவ்வளவு கண்ணீர்
விடுவதெல்லாம்
ஏசுவுக்காகவும்
அவரைப் பறிகொடுத்த மரியாளுக்காகவும்
என்றா நினைத்தீர்கள்

சிலுவைக்கு நடிக்கத்
தெரியவில்லையே
என்று மறுகித்தான்
இத்தனை கண்ணீரும்

பாஸ்கா முடிந்த மறுநாள்
நான் கண்டேன்
பின்னரங்கில் சாய்த்துவைக்கப்பட்ட
அச்சிலுவையை

அதற்குத்
திகைக்கவும் தெரியவில்லை

    -ஆசை, எழுதிக்கொண்டிருக்கும் ‘திருவயிற்றின் கனி’ கவிதை நூலிலிருந்து…

*பாஸ்கா – இயேசுவின் திருவாழ்க்கை நாடகம்

**செசார் – சீசர் (காண்க மாற்கு 12:17) 





No comments:

Post a Comment