Thursday, August 7, 2025

கலைஞர் இறுதி ஊர்வலத்தின் இலக்கியப் பதிவு!

ஓவியம்: ஜோ.விஜயகுமார்
அண்ணாவின் இறுதி ஊர்வலத்தை நேரில் கண்டவர் அப்பா. கலைஞரின் இறுதி ஊர்வலத்தை நேரில் கண்டவன் பிள்ளை. இரண்டு ஊர்வலங்களும் எனது ’மாயக் குடமுருட்டி’ (2025, எதிர் வெளியீடு) நெடுங்காவியத்தில் நெகிழ்ச்சியான ஆவணமாகியிருக்கின்றன. கலைஞர் இறுதி ஊர்வலத்தின்போது கலந்துகொண்ட ஒரு பிராமண இளைஞரைப் பற்றியும் இதில் பதிவாகியிருக்கிறது. அந்த இளைஞர் இந்தக் கவிதையைப் படித்துவிட்டு என்னிடம் நெகிழ்ந்துபோய்ப் பேசினார். கலைஞருக்கு ஒரு அஞ்சலி இக்கவிதை!

***
கோஷமிட்ட தீ
**
முன்னவர்
இறுதி ஊர்வலத்தில்
தான் கண்டதையெல்லாம்
கதைகதையாய்ச் சொன்னாரே அப்பா
ரயில்கூரையில் பயணித்ததையும்
பாலம் தட்டிப் பலபேர் மடிந்ததையும்
சென்னையே சேர்ந்து நகர்ந்ததையும்
மேலேறியவர்களின் பாரம் தாங்காமல்
மரக்கிளைகள் முறிந்து விழுந்ததையும்
உலகத்திலேயே இப்படியோர்
இறுதி ஊர்வலம்
வரலாறு கண்டதில்லை என்பதையும்
சொல்லிச்சொல்லி மாய்வாரே அப்பா
பின்னவர் இறுதி ஊர்வலத்தைக்
காண விடாத உடலுக்குள்
முடங்கிக்கிடந்த அப்பாவுக்காக
நான் போனேனே ஐயா
ஆ ஆ அது இறுதி ஊர்வலமா
கல்யாண ஊர்வலம் ஐயா
ஊர்தி கடக்கும் இடமெல்லாம்
நின்று நின்று
ஆயிரமாயிரம் தற்படங்கள்
ஆயிரமாயிரம் நாடகங்கள்
தலைவனுக்காகக் குத்தாட்டங்கள்
முன்னவர் காலம்
ஓங்கி உயர்ந்தெழுந்த
அழுகையின் காலமென்றால்
பின்னவர் காலமோ
அழுகைக்கு விடைகொடுத்த
ஆர்த்தெழும் காலம்
அப்பாவுக்காகத்தான்
வேடிக்கை பார்க்கப் போயிருந்தேன் ஐயா
ஆனாலும் அப்படி ஆகிவிட்டது
உடன்வந்திருந்த அய்யர் பையன்
ஊர்தி அருகே கடக்கும் தருணம்
அப்படி ஒரு குரலில் ஓலமிட்டான்
‘முத்தமிழறிஞர்
சமத்துவ நாயகர்…’
ஊர்தி மேலே ஒரு உருவம் மட்டும்
மௌனி கதையின் யாளியாய்
தன் விஸ்வரூபத்தால்
அந்த கோஷத்தை ஆசிர்வதித்ததை
நான் மட்டும் கண்டேன்
சற்றுப் பொறுங்கள் ஐயா
இன்னும் அந்த நொடி முடியவில்லை
இன்னொரு பாதி இல்லாமல்
இழுத்துக்கொண்டே போகுமல்லவா
கோஷமும் நொடியும்
நானே எதிர்பார்க்கவில்லை
பீறிட்டெழுந்தது ஒரு சொல்
என் அடிவயிற்றிலிருந்து
மூடிய வாயென்ன செய்யும்
அப்போது
‘வாழ்க’
அதையும் ஏற்றுக்கொண்டு
அமைதியானது யாளி
பூர்த்தியானது நொடியும் கோஷமும்
அமைதியிழந்தேன் நான்
ஆயிரம் ஆயிரம் நூல்கள்
எனக்குச் சொல்லித்தந்தது இதுதானா
நான் படித்த இலக்கியம்
எனக்குச் சொல்லித்தந்தது இதுதானா
ஒரு கவிஞன்
‘வாழ்க வாழ்க’ கோஷமிடலாமா
என்னை இனி நான்
எப்படி ஏறெடுத்துப் பார்ப்பேன் ஐயா
அடேய் தம்பி
ஏன்டா இந்தப் புலம்பல்
கோஷம் என்ன கெட்ட வார்த்தையா
அறிவு கோஷம் போடாது தம்பி
வயிறு கோஷம் போடும்
அப்படியே இருந்தாலும்
அங்கே இருந்தவன் கண்டவன் கேட்டவன்
மட்டுமே நீ
‘வாழ்க’வென்று கோஷமிட்டது
நீயில்லையடா
உன்னை ஓங்கியடித்து
உட்காரவைத்து
மாக்கடியென்று எகிறி குதித்த
உன் ஒப்பன்காரன்டா
உன் ஒப்பன்காரன்டா
ஏனென்றால்
அவன் வயிற்றுக் கவலை
ஓய்ந்த இடத்தில்தான்டா தம்பி
உன் அறிவுக் கவலை
தொடங்கியது
புலம்பலை விட்டுவிட்டு
இன்னொரு மடக்கை எடுத்துக் குடி
***

No comments:

Post a Comment