Monday, August 28, 2023

யாருமில்லாத பிரபஞ்சத்தில் ஒரு தேன்சிட்டு

 




வரலாறு என்பது
வேறெதுவுமில்லை
தேன்சிட்டு தேன் குடித்தது
தேன்சிட்டு தேன் குடிக்கிறது
தேன்சிட்டு தேன் குடிக்கும்
அவ்வளவுதான்
என்று
முன்பு எழுதியிருந்தேன்

இப்போது அதற்கு
வருந்துகிறேன்

தேன்சிட்டு இல்லாமல் போகும் 
காலத்தையும்
தேன்  இல்லாமல் போகும் 
காலத்தையும்
வரலாறு  இல்லாமல் போகும் 
காலத்தையும்
ஏன்
கவிதையே  இல்லாமல் போகும் 
காலத்தையும்
காலமே இல்லாமல் போகும்
காலத்தையும் பற்றி
நான் எழுதியிருக்க வேண்டும்

இந்நிலையில்
யாருமில்லாத டீக்கடையில்
யாருக்காக டீ ஆற்ற வேண்டும்
என்ற கேள்வி இயல்பானதே

ஆனாலும்
யாருமில்லாத டீக்கடையில்
யாரோ எப்போதோ ஆற்றிய டீதான் 
இப்போது
ஆறாய்ப் பெருகி ஓடுகிறது என்பதை 
மறக்கக் கூடாது

பழைய பழக்கத்தில்தான்
இன்னும் டீ ஆற்றுகிறோம்
டீயாக இருக்கிறோம்
தேன்சிட்டாக இருக்கிறோம்
தேன் குடிக்கிறோம்
வரலாறு எழுதுகிறோம்
கவிதை எழுதுகிறோம்
காலம் ஆகிறோம்

இல்லாமல் போவதென்பது
பழக்கத்திலிருந்து
முற்றிலும் விடுபடுவது

ஒரு தேன்சிட்டு இல்லாமல் போய்விடும்
என்பதும்
அது அதற்கே தெரியாது என்பதும்
அது இல்லாமல் போய்விடும்போது
முன்பு தான் இருந்தது
அதற்குத் தெரியுமா தெரியாதா என்பதை
நாம் ஒருபோதும்
அறிந்துகொள்ள முடியாது என்பதும்
எவ்வளவு பெரிய துயரம்

அந்தத் துயரத்தை
ஆற்றிக்கொள்ளவாவது
யாருமில்லாத பிரபஞ்சத்தில்
ஒரு தேன்சிட்டு
தேன்குடித்துக்கொண்டிருப்பது பற்றி
நான் கவிதை எழுதித்தான் 
ஆக வேண்டும்
       - ஆசை

Thursday, August 17, 2023

அதிகாரம் என்பது தலித் மக்களுக்கு வெறும் கனவா?



ஆசை


I

அப்போது 2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்தது. பலருக்கும் மிகுந்த வலியை ஏற்படுத்திக்கொண்டிருந்த விஷயம் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பின்தங்கிக்கொண்டிருந்ததுதான். மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசம்தானே, எப்படியும் அவர் வென்றுவிடுவார் என்றே பலரும் நம்பிக்கொண்டிருந்தார்கள். அப்படியும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார். தேர்தல் ஆணையத்தின் இணையதளத்துக்குச் சென்று பார்த்தால் இன்னொரு விஷயமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே தொகுதியில் டி. திருமாவளவன் என்பவர் சுயேச்சையாக நின்று 289 ஓட்டுக்கள் பெற்றிருந்தார். அந்தத் தொகுதியில் நோட்டாவுக்காக விழுந்த ஓட்டு 1,025. இந்தக் கணக்குகள் சொல்லும் செய்திகள் புரிந்துகொள்வதற்கு அவ்வளவு கடினமானவை அல்ல. இத்தனைக்கும் அது தனித்தொகுதி; வென்றவரும் தலித் சமூகத்தினர்தான். ஆனால், அவர் தலித் சமூகத்துக்காக ஒரு கேள்வியைக்கூட சட்டமன்றத்தில் கேட்பார் என்றால் அது உலக அதிசயமாகத்தான் இருக்கும்.

திருமாவளவன் என்ற ஒரு கட்சித் தலைவர் வெல்ல வேண்டும் என்று ஏன் முற்போக்காளர்கள் துடித்தார்கள்? ‘அவரும் அரசியல் குட்டையில் ஊறியவர்தானே? பாரபட்சமே இல்லாமல் எல்லாக் கட்சிகளுடனும் கூட்டணி வைத்துக் கடைசியில் விஜயகாந்த்தைத் தங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏற்றவர்தானே? கட்டப்பஞ்சாயத்து செய்யும் கட்சிதானே அது?’  என்றெல்லாம் அவர்மீது  இந்தத் தோல்விக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து விமர்சனங்கள், அவதூறுகள் அள்ளிவீசப்படுகின்றன. ஊழலிலும் அதிகாரத்திலும் காலம்காலமாகத் திளைத்தவர்கள் மீது கூட இவ்வளவு குற்றச்சாட்டுகள் சொல்லப்படுவதில்லை. எந்த அதிகாரத்திலும் இல்லாத திருமாவளவன் போன்றவர்கள் மீது மட்டும் இந்தச் சமூகமும் விமர்சகர்களும் இவ்வளவு குற்றம் சுமத்துகிறார்களே என்ற கேள்விக்கு பதில் காண முயன்றால் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஊறித் திளைத்திருக்கும் சாதியம் நமக்குப் புலப்படும்.

திராவிடக் கட்சிகளின் கணக்கு

கடந்த ஆண்டு வாக்குப் பதிவு அன்று எங்கள் தெருவில் இருந்த தேமுதிக கட்சிக்காரர் ஓட்டுப் போட்டுவிட்டு இப்படி வந்து சொல்கிறார், ‘தே.மு.தி.கவுக்கு ஓட்டு போட்டிருப்பேன். ஆனால், இவர் (திருமாவளவன்) இந்தக் கூட்டணியில் இருக்கிறார் இல்லையா. மேல்ஜாதிப் பொண்ணுங்களெல்லாம் போய் லவ் பண்ணுங்கன்னு சொன்ன ஆளு இருக்குற கூட்டணிக்கு நான் ஓட்டு போட மாட்டேன்’ என்றார். (திருமாவளவனை ஒருமையில்தான் விளித்தார் என்பதைச் சொல்லத் தேவையில்லை). தன் பையனோ பெண்ணோ பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த பையனையோ பெண்ணையோ காதலிப்பார்கள் என்றால் அவருக்கு இந்த அளவுக்குப் பிரச்சினை இருந்திருக்காது. இந்த ஒரு வாக்காளரின் மனநிலைதான் அதிமுக, திமுக என்று கட்சிகள் தொடங்கி ஒட்டுமொத்த சமூகத்திலும் நிலவுகிறது. விசிகவைச் சேர்த்துக்கொண்டால் முக்குலத்தோர் ஓட்டுகள், வன்னியர் ஓட்டுகள் உள்ளிட்ட ஆதிக்க சாதியினர் ஓட்டுகள் தங்களுக்குக் கிடைக்காது என்பது மட்டுமல்ல, அந்தந்த சமூகங்களைச் சேர்ந்த கட்சிகளும் தங்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ளாது என்பது இருபெரும் திராவிடக் கட்சிகளின் கணக்கு. இத்தனைக்குப் பிறகும் திமுக தோற்றதற்கு சமூகநீதி உணர்வுள்ள கருத்தாளர்கள் கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பதுதான் வேடிக்கை. ஆரம்ப காலத்தில் வேண்டுமானால் சமூக நீதி என்ற விஷயத்தில் (பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூக நீதிதான்!) திமுக பங்களிப்பு செய்திருக்கலாம். இப்போதோ அதிமுகவுக்கும் திமுகவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டது. கருணாநிதியின் பிடி திமுகவில் தளர்ந்ததன் விளைவாகவும் இதைக் கருதலாம். ‘தி இந்து’வுக்கு திருமாவளவன் அளித்த விரிவான பேட்டியொன்றில் தலித் சமூகத்தின் உரிமைகள், பிரச்சினைகள் குறித்துத் தன்னால் கருணாநிதியிடம் பேச முடிந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அதே திமுகதான் தற்போது திருமாவளவனுக்குப் பாராமுகம் காட்டியிருக்கிறது. சரி திமுக, அதிமுகதான் இப்படி என்றால் மக்கள்நலக் கூட்டணி மட்டும் என்ன லட்சணம். திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்வைக்கும் துணிச்சல் யாருக்காவது இருந்ததா? தோற்றிருந்தாலும் எவ்வளவு மகத்தான முன்னுதாரணமாக இருந்திருக்கும். 

ஒட்டுமொத்த அரசியலும் வாக்கு வங்கியை நம்பிச் செயல்படுகிறது. அப்படியிருந்தும் தலித் மக்கள் என்ற பெரும் வாக்கு வங்கி யாருக்கும் தேவையில்லை. வாக்கு வங்கி என்ற அளவில் கூட தலித் மக்கள் பொருட்படுத்தப்படுவதில்லை என்பது எவ்வளவு வேதனையான விஷயம். இதில் பொதுச் சமூகத்துக்கு எவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவுக்கு தலித் கட்சிகளுக்கும் இருக்கிறது என்று குற்றம்சாட்டப்படுகிறது. அரசியல் மையநீரோட்டத்தில் கலந்துகொள்ளும்போது மற்றவர்களைப் போலவே தலித் தலைவர்களும் ஊழல்மயப்பட்டுவிடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதில் என்ன பிரச்சினை என்றால், அரசியல் மையநீரோட்டம் என்பது முழுக்க முழுக்க பணபலத்தை நம்பி இயங்குவது. சமூகநீதிக்காகப் போராடும் கட்சியொன்று மையநீரோட்டத்தில் கலந்துகொள்ள விரும்பினால் ஊழல்மயப்பட்டாக வேண்டிய கட்டாயத்தை அமைப்பே ஏற்படுத்திவிடுகிறது. பணத்தை நம்பாமல் அரசியலில் ஈடுபடவும் முடியாது. ஆகவே, தலித் கட்சிகளின் பிரச்சினை என்பது புலி வாலைப் பிடித்த கதைதான்.  


II

அதிகாரமின்மையின் இரண்டாயிரம் ஆண்டுகள்…

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரத்துக்குத் தொடர்பே இல்லாமல் வாழ்ந்துவருகிறார்கள் தலித் மக்கள் என்று திருமாவளவன் ‘தி இந்து’ பேட்டியில் குறிப்பிட்டிருந்தது பெரும் தவிப்பின் அடையாளம். அப்படியே தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அதிகாரம் கிடைக்கிறது என்றாலும் அதற்கு அவர் எந்த அளவுக்குப் போராட வேண்டும் என்பதற்கு அம்பேத்கரை விட சிறந்த உதாரணத்தைக் காட்ட முடியாது. அவர் காலத்து இந்தியர்கள் யாரை விடவும் அதிகம் படித்திருந்தும், உயர்ந்த பட்டங்களைப் பெற்றிருந்தும், தலித் சமூகத்தில் பிறந்தவர் என்ற ஒரே காரணத்துக்காகப் போகும் இடங்களிலெல்லாம் புறக்கணிப்பை எதிர்கொண்டார். தனது புரவலரின் அலுவலகத்தில் ஆரம்பத்தில் அவருக்கு வேலை கிடைத்தாலும் அங்கும் தனக்குக் கீழ்நிலையில் பணிபுரியும் ஆதிக்கசாதி ஊழியர்களிடமிருந்து கடுமையான சாதிய ஒடுக்குமுறையை எதிர்கொண்டார். அவர் வேலை பார்த்த அலுவலகத்தின் பியூன் கோப்புகளை அம்பேத்கர் மேசைமீது தூக்கித்தான் எறிவார். அலுவலகத்தில் உள்ள தண்ணீர்ப் பானையில் அம்பேத்கர் தண்ணீர் குடிக்கவும் முடியாது.

இன்னும் நெடுக, சமூகத்தினரிடமிருந்தும் அரசியல் வட்டத்திலும் கடும் ஒடுக்குமுறையை எதிர்கொண்டே மேலே மேலே வந்துகொண்டிருந்த அம்பேத்கர் தேர்தல்களில் கூட அதிகம் தோல்விகளையே பெற்றார்.

சுதந்திரத்துக்குப் பிறகு அமைந்த முதல் அமைச்சரவை என்பது உலகத்துக்கே ஓர் முன்னுதாரணம். ‘சுதந்திரம் என்பது காங்கிரஸுக்கு மட்டும் கிடைக்கவில்லை. எல்லோருக்கும்தான்’ என்று சொல்லிய காந்தி, திறமையானவர்கள், தகுதியானவர்கள் காங்கிரஸுக்கு எதிர் அணிகளில் இருந்தாலும் அவர்களையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். காந்தியின் பரிந்துரையைத் தாண்டியும் அம்பேத்கருக்கு நிகரானவர்கள் அப்போது அநேகமாக யாரும் இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

அந்த முதல் அமைச்சரவைதான் அப்படிப்பட்ட கடைசி அமைச்சரவையாக அமைந்துபோய்விட்டது என்பது இந்திய ஜனநாயகத்தின் பெருந்துயரம். அதற்குப் பிறகு மறுபடியும் தேர்தல் அரசியலில் அம்பேத்கர் தோற்றுப்போனார். தலித் வேட்பாளர்களுக்கான தனித்தொகுதி இருந்தாலும் பெருங்கட்சிகளைச் சேர்ந்த தலித் வேட்பாளர்களாலோ, பெருங்கட்சியினருடன் கூட்டணி வைத்த தலித் வேட்பாளர்களாலோதான் இந்தத் தேர்தல் அரசியலில் வெல்லவோ தாக்குப்பிடிக்கவோ முடிந்தது. தலித் கட்சிகளாக இருந்தால் அவற்றுக்குப் பொதுச் சமூகத்தின் ஆதரவும் ஓட்டுக்களும் கிடைக்காது. தலித் சமூகத்தினரின் ஓட்டுக்களும் பெருங்கட்சிகளிலுள்ள தலித் வேட்பாளர்களுக்கே பெரும்பாலும் விழும். அந்த வேட்பாளர்கள் தலித்களின் உரிமைகளுக்காக அநேகமாகப் பேசுவதே இல்லை என்பதுதான் நிதர்சனம்.

தலித்களுக்குக் கொடுக்கப்படும் பதவிகள், பொறுப்புகள் பெரும்பாலும் பெயரளவில் அடையாளச் சின்னமாகத்தான் இருக்கின்றன. முன்னாள் குடியரசுத் தலைவர் நாராயணன், பாஜகவின் முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணன் போன்றவர்களை அப்படித்தான் பார்க்க வேண்டும். இதையும் தாண்டி, மாயாவதியின் வருகை என்பது இந்திய அரசியலில் ஓர் அதிசயம்தான். பிஹார் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்சிகூட ஒரு வகையில் பொம்மை முதல்வராகத்தான் ஆக்கப்பட்டிருந்தார்.

மாயாவதியின் முக்கியத்துவம்

தலித்கள் அதிகாரத்துக்கு வருவதற்கான அவசியம், முக்கியத்துவம் குறித்துப் பிற சமூகத்தினர் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. மாயாவதியின் மீது மற்ற எல்லோரையும்விட அதிகமாக ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதில் பெருமளவு உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தலித் நண்பர் ஒருவர் சொன்ன செய்தியின் மூலம் மாயாவதி என்ற நிகழ்வின் முக்கியத்துவத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.  “தலித் முதல்வர் என்பதெல்லாம் சரிதான். ஆனால், இந்த அளவுக்கு ஊழல்வாதியாக இருக்கிறாரே மாயவாதி, அவரை எப்படி நாம் ஏற்றுக்கொள்வது?” என்ற கேள்விக்கு அவர் இப்படிப் பதில் அளித்தார்: “நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், ஒரு விஷயத்தை நீங்கள் பார்க்க வேண்டும். மாயாவதி முதல்வராக ஆவதற்கு முன் ஒரு தலித் ஏதாவது புகார் கொடுக்கக் காவல் நிலையம் சென்றால், ‘ஓ, காவல் நிலையம் வந்து புகாரெல்லாம் கொடுக்கும் அளவுக்கு வந்துவிட்டாயா?’ என்று கேட்டுக் கைகால்களை முறித்துவிட்டுத்தான் அனுப்புவார்கள். மாயாவதி முதல்வரான பின்புதான் தலித்கள் புகார் கொடுக்க வந்தால் மதித்து உட்காரச் சொன்னார்கள். தலித் உரிமைகளைப் பொறுத்தவரை இது எவ்வளவு பெரிய பாய்ச்சல் என்பதைப் புரிந்துகொண்டால்தான் உங்களால் மாயாவதியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும்” என்றார். திருமாவளவன் மீது யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் குற்றச்சாட்டுகள் வைக்கட்டும்; அவர்களுக்கும் சேர்த்துதான் அந்த உத்தர பிரதேசத்துக்காரர் பதில் சொல்லியிருக்கிறார்.


III

எந்த பாதை நோக்கி?

தலித் மக்கள் காலம்காலமாக அனுபவித்துவரும் கொடுமைகளுக்குத் தீர்வு  என்பது அவர்கள் அதிகாரத்துக்கு வருவதுதான். ஆனால், அதிகாரத்தை நோக்கி மற்றவர்கள் சென்ற பாதையிலேயே அவர்களும் கட்டாயம் காரணமாகச் செல்ல முயன்றுகொண்டிருப்பதும், சமூகத்தின் புரையோடிய சாதிய உணர்வும்தான் தலித்களின் அதிகாரப் பாதை நோக்கிய பயணத்தை சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதற்குக் காரணங்கள். பொதுச் சமூகத்தின் பொதுப்புத்தியை மாற்றாமல் தலித்களால் அதிகாரத்தை அடையவே முடியாது. இதற்கு அரசியல் அதிகாரத்துக்கான முயற்சிகள் மட்டுமே போதாது. ஏனெனில், அந்த முயற்சிகளை அடையும் வழியை வழக்கமான ஊழல் பாதையாகவே அமைப்பு போட்டு வைத்திருக்கிறது. ஊழலை விட சாதியம் எவ்வளவு மோசமானது, இந்தியாவின் தலையாய பிரச்சினை சாதிதான் என்பதை தலித் மக்களும் முற்போக்காளர்களும் சொல்லிவந்தாலும் பொதுச் சமூகத்தின் பொதுப் புத்தியில் ஊழல்தான் பிரதானப் பிரச்சினையாகத் தோன்றும். (வெளித்தோற்றத்துக்காகவாவது) ஊழலற்ற மனிதர்களால், ஊழலற்ற அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களே பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. ஆகவே, ஒரு பக்கம் அரசியல் பாதையை நோக்கிய பயணம் இருக்க, இன்னொரு பக்கம் தலித் மக்களிடையே இயங்கி, பொதுச் சமூகத்துக்கும் தலித் மக்களுக்கும் இடையிலான உரையாடலை, உறவை மேம்படுத்தி, அரசியலின் ஊழலுக்கு அப்பால் இயங்கும் தலித் அமைப்புகள் ஆகிய இரண்டு தரப்புகளும் அவசியமகின்றன.

காந்தியின் காலத்தில் ஆதிக்கசாதியினரிடையே அவர்களது மனசாட்சியைத் தட்டியெழுப்ப அவர் பணியாற்றியதுபோல் இன்று யாரும் செய்யக் காணோம். இரு தரப்பும் பிளவுபட்டு, உரையாடலும் உறவும் சாத்தியமற்ற சூழல் காணப்படுகிறது. தலித் அமைப்புகள்-கட்சிகள், இடதுசாரிகள், பெரியாரியர்கள், திராவிடக் கட்சிகள், காந்தியர்கள் போன்றோர் தங்கள் கருத்துவேறுபாடுகளைத் தூரத்தில் வைத்துவிட்டு சாதியொழிப்பை நோக்கியும் தலித் மக்கள் உள்ளிட்ட நசுக்கப்பட்ட மக்கள் அதிகாரம் பெறுவதை நோக்கியும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நிச்சயம் பெருமளவிலான மாற்றம் ஏற்படும். ஆனால், இங்கே தலித் அமைப்புகள், தலித் தலைவர்கள் காந்தியையும் காந்தியவாதிகளையும் அடியோடு வெறுக்கின்றனர். பெரியார் மீதும் கணிசமானோருக்கு விமர்சனம் உண்டு. இடதுசாரிகள் மீதும் முழு நம்பிக்கை இல்லை. இது ஒரு பக்கம் என்றால், காந்தியவாதிகளுக்கு அம்பேத்கர் ஒரு பொருட்டல்ல (காந்தி அப்படிக் கருதியவரல்ல), பெரியாரியர்கள் பலரும் பிராமணியத்துக்கு எதிராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காகவும் போராடிய அளவுக்கு தலித் மக்களின் உரிமைகளுக்காகப் போராடவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. கீழ்வெண்மணி போன்ற பிரச்சினைகளில் தலித் மக்களுடன் நின்றவர்கள் இடதுசாரிகள். ஆனால், அவர்களில் பலரும் சாதியத்தை வர்க்கப் பிரச்சினையாக பார்க்கும் மனநிலையைத் தாண்டி வரவில்லை. இப்படி இரு தரப்பிலும் காணப்படும் வேறுபாடுகளால், பிளவுகளால் இழப்பென்பது தலித் மக்களுக்கும், லாபம் என்பது சாதியவாதிகளுக்குமாகத்தான் இருக்கிறது. இந்தப் பிளவு மேலும் மேலும் மோசமாகிக்கொண்டுதான் போகிறது. அதிகாரத்தை நோக்கிய தலித் மக்களின் பயணம் இதனால் அடைந்திருக்கும் பின்னடைவை முற்போக்காளர்கள் அனைவரும் ஆழமான அகவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

பொது மனசாட்சியைக் குறிவைத்து…

ஜனநாயகத்துக்குத் தேர்தல் எவ்வளவு அவசியமாக இருந்தாலும் தேர்தலுக்கு ஜனநாயகம் பொருட்டல்ல என்பதுதான் அம்பேத்கரில் ஆரம்பித்து திருமாவளவன் வரையிலானோரின் தோல்விகள் நமக்கு உணர்த்தும் உண்மை. அந்த அளவுக்கு சாதியத்துக்குள் பொதிந்துவைக்கப்பட்டிருக்கிறது நம் சமூகம். மற்றவர்களெல்லாம் கோபம் வந்தால் வன்முறையில் இறங்கலாம், கலவரத்தில் ஈடுபடலாம். ஒரு தலித் அப்படிச் செய்ய முடியாது. எதிர்க்க நினைத்தாலும் பாதிப்பு அவருக்குத்தான். அவர் ஒரு அடி கொடுத்தால் அவர் சமூகம் முழுமைக்கும் பல அடிகள் திருப்பி விழும். ‘அம்பேத்கர் நினைத்திருந்தால் நம்மீது வன்முறையைப் பிரயோகித்திருக்கலாம். அதற்குரிய எல்லா நியாயமும் அவருக்கு இருந்தது. ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. அவர் நம்மீது காறித் துப்பினாலும் அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று காந்தி கூறினார். தலித்கள் என்னவோ அகிம்சையை விரும்பித் தேர்ந்தெடுத்ததுபோல் நமக்குத் தோற்றமளித்தாலும் உண்மை என்னவென்றால் அவர்கள் திருப்பி அடிக்க முடியாதவாறு, அப்படிச் செய்தால் அவர்களுக்கே பாதிப்பு ஏற்படும்விதத்தில் இந்தச் சாதியச் சமூகம் அவர்களைச் சூழ்ந்துகொண்டிருக்கிறது. அதுதான் யதார்த்தம்! தலித்கள் அகிம்சையை மேற்கொண்டிருப்பது இருக்கட்டும், இந்தச் சமூகம் எப்போது அகிம்சைக்குத் திரும்பப் போகிறது என்ற கேள்விக்குப் பதில் காண வேண்டுமானால், தலித்களின் அதிகாரத்தை நோக்கிய பயணம் முன்திசையில் செல்ல வேண்டுமானால் பிளவுகளைக் கடந்த உரையாடலும் உறவாடலும் பொது மனசாட்சியைக் குறிவைக்கும் முயற்சிகளும் நடைபெற்றால் மட்டுமே சாத்தியம்! இது ஒரு கை ஓசையாக இல்லாமல் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் கரகோஷமாக ஆக வேண்டும். ஒற்றுமையாய்க் கைகோத்துக்கொண்ட சாதியப் பெருமிதங்களை உள்வாங்கிக்கொண்டு பிரம்மாண்டமாய் இந்துத்துவம் எழுச்சி பெற்றிருக்கும் இந்தக் காலத்தில் முற்போக்காளர்கள் மட்டும் சிதறிக் கிடப்பது இந்தக் கனவைக் கனவாகவே வைத்திருக்கும் என்பதை எல்லோரும் உணர வேண்டும்.

 (2017-ல் வெளியான கட்டுரை)

Tuesday, August 15, 2023

எல்லோருக்குமாம் ஒரு இன்னறுங் கனிமரம்


 

சிறுவயதில்
தெருவில் கொடியேற்றம்
அப்பாவிடம் கேட்டேன்
இது என்ன மரமென்று
கொடிமரம்டி என் தங்கம்
என்றார்
கொடிமரம் என்றால்
பூ பூக்குமா
காய் காய்க்குமா
பழம் பழுக்குமா
என்று கேட்டேன்
கண்டிப்பாய் என்றார்
நான் பறித்துக்கொள்ளலாமா
என்று கேட்டேன்
எல்லோரும் பறித்துக்கொள்ள வேண்டுமென்றுதான் ஊர்ப்பொதுவில் நட்ட மரம்
நான் பிறந்தபோது இல்லை
உனக்கு இருக்கிறது
எவ்வளவு தாத்தா
எவ்வளவு ஆத்தா
இதை நடுவதற்குப்
படாதபாடு பட்டிருக்கிறார்கள் தெரியுமா
என்றார்
ஒரு மரம் நடுவது என்ன
அவ்வளவு பெரிய சிரமமா அப்பா
என்று கேட்டதற்கு
ஆமாம்
மரநிழலில் இளைப்பாறக்கூட
முடியாது என்றபோது
நம் ஒவ்வொருவரும்
சொந்தமாய் நட்டுக்கொள்ள
ஒரு மரம் தந்தார்களே சும்மாவா
மரம் நடுவது சிரமம்தான்
அதைவிடச் சிரமம்
நட்டமரம்
பட்டுப்போகாமல் பார்த்துக்கொள்வது
அப்போதுதான்
மரம் உனக்குக் கனி தரும்
உனக்கான கனி
எல்லோருக்கும் இனிக்கும்
என்று சொல்லிவிட்டுக் கேட்டார்
உனக்கான கனியை
எல்லோருக்கும் இனிக்கச் செய்வாயா
அப்பா பேசியதும் புரியவில்லை
அதற்கு என்ன பதில் சொல்வதென்றும்
தெரியவில்லை
பேசியது மட்டும்
அழியாமல் நினைவில் இருக்கிறது
அதே மரத்திலிருந்து பறித்து
எல்லோருக்கும் கசப்பின் கனிகள்
வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் இன்று
என் வீட்டின் நடுவே
நட்டுவைத்திருக்கிறேன்
அப்பாவின் கேள்வியை
கசப்பிடம் தோற்ற
என் இனிப்பை
என் பிள்ளைகள்
வெல்லச் செய்வார்கள்
- ஆசை
15-08-23


தொப்புள்கொடி

 


ஏற்றுவதற்காகச்
சிந்தப்பட்ட
எவ்வளவோ குருதியும்
கண்ணீரும்
வியர்வையும்
இரண்டு கைகளாய்
உருத்திரண்டு
ஏற்றப்பட்ட
கொடி

எல்லா கண்ணீரையும்
காயங்களை
ஆற்றவே
அது அசைந்தாடி
காற்று வீச வேண்டுமென
ஏற்றிய கொடி

அண்ணாந்து பார்க்கும்
எல்லா விழிகளுக்கும்
வானத்தையே வாழ்வாகத்
தரும் கொடி

அது அசைக்கும்
காற்று
அதன் கீழுள்ள
எல்லா உயிர்களையும்
ஒரு தளையின்றி
அந்த வானில் பறக்க விடும்
கொடி

தாயின் மணிக்கொடி
சுதந்திர வாழ்வின்
தொப்புள் கொடி

கண்களைக் கட்டிப்போட்டு
ஏற்றினாலும்
உயிர் உணரும் கொடி
உயிர் மூச்சு தரும் கொடி
உயிர் மேல் ஏற்றிய கொடி

அது உயிர்மேல் 
அசைந்தாடிப் பறக்கட்டும் என்றும்
உயிருள்ள கைகள் மட்டுமே
ஏற்றட்டும் என்றும்
     -ஆசை

Friday, August 11, 2023

அனிருத்தின் புள்ளீங்கோ



நினைவுகளின்
கனிரசம் பிழிந்து
மொண்டுமொண்டு
நீங்கள் குடித்துக்கொண்டிருக்கிறீர்கள்

அதிகாலையை வரவேற்க ஒரு பாடல்
இரவின் தூக்கத்துக்காக ஒரு பாடல்
காதலியின் நினைவு வந்தால் ஒரு பாடல்
அம்மா ஏக்கத்துக்கு ஒரு பாடல்
என்றெல்லாம் திளைத்துக் கிடந்த
உங்களை
இழுத்துக்கொண்டு வந்து
அனிருத்திடம் சரணடைய வைக்கிறார்கள்
அடம்பிடித்து
ஆடவும் வைக்கிறார்கள்

டோராவின் புச்சியாக்கி
உங்களை பியானோ பாலத்தில்
நடக்க வைக்கிறார்கள்

ஸ்பைடர்மேன்பூச்சியாகி
உங்கள் கையில் செல்லக்கடி கடித்து
உங்களை ஸ்பைடர்மேன் ஆக்குகிறார்கள்

தோர்  சுத்தியலைக் கையில் கொடுத்து
பலங்கொண்ட மட்டும்
சுழற்றியெறியச் சொல்கிறார்கள்

அதுபோய் விழுந்து
உங்கள் நினைவின் கனிரசம்
தெறித்தெழுந்து
விண்ணில் போய் ஒட்டிக்கொண்டுவிடுகிறது
நட்சத்திரங்களாய்

அவற்றை நிமிர்ந்து பார்த்து விடாதீர்கள்
ஆடும் கால்களுக்குச்
சிலைவைத்துவிடுவார்கள்

உங்கள் பிள்ளைகள்
வேறு யாருமல்ல
விபத்துக்குள்ளாகிச் சிதிலமானதால்
வேர்க்க விறுவிறுக்க
நீங்கள் இழுத்துவரும் வண்டியின்
கயிற்றைத் துண்டிக்க வந்தவர்கள்

துண்டிக்கப்பட்டபின்
நீங்கள் உணர்வீர்கள்
இழுக்க ஏதுமில்லை என்றால்
பறக்கத்தான் எல்லாம் என்று

உங்கள் பிள்ளைகள்
உங்களூடாக வந்தவர்கள் மட்டுமல்ல
உங்களைப் புள்ளீங்கோ
ஆக்க வந்தவர்களும் கூட

கொஞ்சம் ஆகித்தான் பாருங்களேன்
       - ஆசை
      26-04-23
      நன்றி: கலீல் ஜிப்ரான்

Thursday, August 10, 2023

அமுதுகுடி வல்லாள்

நடனக் கலைஞர் இஷா ஷர்வாணி



அருள் திரண்டு நிற்கிறது
உன் வலமுலை
காமம் திரண்டு நிற்கிறது
உன் இடமுலை

வலமுலை தடவி
இரந்தும் 
கரந்தும் குடிக்கிறது
என் கை

இடமுலை கவ்வி
துழாவியும்
அளாவியும் குடிக்கிறது
என் வாய்

சக்திக் கடலில்
ஊன்றி ஆடிய
ஒற்றைக் காலிலிருந்து
உறிஞ்சி அமுது குடிப்பவளோ 
நீ

ஆடவல்லான் பெரியவனா
அமுதுகுடி வல்லாள் பெரியவளா
என்று தீராத கேள்வி நாடகம்
காலமெல்லாம்
அம்பலமேறட்டும்

அவ்வம்பலத்தே எழும்
அருட்பெரும் காமம் 
தனிப்பெரும் சக்தி
வெடித்து மறையும் நடனம்
   - ஆசை
    09-08-23 

Wednesday, August 9, 2023

காமம் கரைந்து - கவிதை



உன் காமம் 
முலைகளோடும் யோனியோடும்
பருத்த தொடைகளோடும்
திரண்ட தோள்களோடும்
திறந்த
ஆனால் பார்க்காத விழிகளோடும்
துடிக்கும்
ஆனால்
அசையாத வயிற்றோடும்
ஏன் சிலையாய்க்
கிடக்கிறது

அதை 
என் காமம்
படர்ந்து கழுவி விடும்போது
ஏன் கரைந்து
காணாமல் போய்
தெய்வமாகி விடுகிறது

அதுவரை கல்லாய்
ஏன் வேடிக்கை பார்த்தது
- ஆசை
  09-08-23