Friday, June 30, 2023

நெஞ்சை விரித்த பலூன்களே

 


வெறுப்பு
கோபம்
பொறாமை
எரிச்சல்
கழிவிரக்கம்
ஏக்கம்
எல்லாம்
ஏராளம் உண்டு
என்னிடம்

ஒவ்வொன்றும்
முடிச்சிட்டுக்கொண்டே
உள்ளுக்குள்
விரியும் பலூன் என்று
உணர்ந்தபோது
அவையெல்லாம்
ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டு
நெஞ்சை நெஞ்சை
முட்டித்தள்ளின

நெஞ்சு வெடிக்க
ஒரு நொடி என்றபோதே
உணர்ந்தேன்
பலூன்களின் இடம்
எதுவென்று

எடுத்து
ஒவ்வொன்றாய்
வெளியே பறக்க விட்டபோதுதான்
உணர்ந்தேன்
பலூன்கள் எவ்வளவு
அழகு என்று

அப்போதுதான் உணர்ந்தேன்
நெஞ்சுக்குள்
எவ்வளவு இடம்
இருந்திருக்கிறது
என்று

நெஞ்சை விரித்த பலூன்களே
மறுபடியும்
உள்ளே வந்துவிடாமல்
பார்வையிலிருந்தும்
தொலைந்துவிடாமல்
அங்கேயே பறந்துகொண்டிருங்கள்
எப்போதும்
            - ஆசை

Thursday, June 29, 2023

அல்-ஃபட்டாஹ்

 


எல்லா மகத்துவத்தையும்
விஞ்சி நிற்கிறது
உன் மகத்துவம்

எல்லா அணுத்துவத்தையும்
சென்று நிறைப்பதே
உன் மகத்துவம்

அணுத்துவம் திறக்க
மகத்துவம்
ஒன்றே சாவி

மகத்துவம் திறக்க
உன் பேரருளே
சாவி

பிறப்பிலிருந்து
திறப்புக்கும்
திறப்பிலிருந்து
பெருந்திறப்புக்கும்
இட்டுச்செல்லும் நீரே
பெருந்திறப்பாளர்
            -ஆசை

(அல்லாவுக்கு  99 திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பெயரும் பேரழகு மிக்க கவிதை. அல்லாவுக்கு நூறாவது பெயரும் ஒன்று உண்டு என்ற புனைவை அடிப்படையாகக் கொண்டு அமீன் மாலூஃப் 'Balthasar's Odyssey' என்ற நாவலை பிரெஞ்சில் எழுதியிருக்கிறார். அல்லாவின் ஒவ்வொரு திருப்பெயரும் 'தோள் கண்டார் தோளே கண்டார்' என்று தன்னைத் தாண்டிச் செல்ல விடாது. எனக்கு அல்-ஃபட்டாஹ் (Al-Fatah) அப்படி.  அல்-ஃபட்டாஹ் என்றால் திறப்பாளர் என்று பொருள்.) 

Tuesday, June 27, 2023

சூரியன் எதைச் சுற்றுகிறது?

ஓவியம்: வான் கா


ஆசை

சமகாலத்தின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான பெலா டார் எடுத்த அற்புதமான திரைப்படம் ‘வெர்க்மைஸ்டர் ஹார்மனீஸ்’. இதன் தொடக்கக் காட்சி ஒரு மது விடுதியில் இடம்பெற்றிருக்கிறது.

 படத்தின் இளம் நாயகனான யானோஸ் வலுஸ்கா தனது மூன்று நண்பர்களை வைத்து சூரியன், பூமி, நிலவு நடனத்தை நிகழ்த்துவார். சூரியன் போன்று ஒருவர் நடுவில் நிற்க இன்னொருவர் பூமியின் வேடத்தில் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுவார். பூமியை நிலவு பாத்திரத்தில் ஒருவர் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு பூமியைச் சுற்றுவார். ஆக, நிலவு மனிதர் ஒரே நேரத்தில் பூமியையும் சூரியனையும் சுற்றுவார். இந்த அறிவியல் விளக்கம் ஒரு அற்புதமான நடனம்போல் படத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அருகிலிருந்த என் நண்பர் கேட்டார், “சூரியன் பாத்திரத்தை ஏற்றவர் நபர் அப்படியே இருக்கிறாரே. உண்மையில் சூரியன் அசையாமல் இருக்கிறதா, அல்லது சுற்றுகிறதா?”

கொஞ்சம் தலைசுற்றவைக்கும் கேள்விதான்! நாம் எல்லோரும் தோற்றத்தை நம்பி வாழ்பவர்கள்; எதையாவது பற்றிப் புகார் கூறினால், “நீ கண்ணால் பார்த்தியா?” என்று கேள்வி கேட்பவர்கள். ஆனால், கண்ணால் பார்ப்பதுவும் முழு உண்மையாக இருக்காது என்பதற்கு பூமி, சூரியனின் சுழற்சிகளையும்கூட நாம் சான்றாக எடுத்துக்கொள்ளலாம்.

வெகு காலம் வரை சூரியன்தான் பூமியைச் சுற்றிவருகிறது என்று மனிதர்கள் நம்பினார்கள். போலந்தைச் சேர்ந்த கோப்பர்நிக்கஸ் என்ற அறிவியலாளர்தான் ‘பூமியைச் சூரியன் சுற்றவில்லை. பூமிதான் சூரியனைச் சுற்றிவருகிறது’ என்ற கோட்பாட்டுக்கு 16-ம் நூற்றாண்டில் அடியெடுத்துக்கொடுத்தார். பேருந்தில் ஜன்னலோரம் அமர்ந்திருக்கும் குழந்தை சாலையோரம் உள்ள மரங்கள்தான் ஓடுகின்றன என்றும், பேருந்து அப்படியே இருக்கிறது என்றும் நம்புவதைப் போல அதுவரை மனிதர்கள் ‘சூரியன்தான் பூமியைச் சுற்றிவருகிறது’ என்று நம்பிக்கொண்டிருந்தார்கள்.

‘சூரியனைத்தான் பூமி சுற்றுகிறது’ என்ற கருத்து கடந்த நான்கு நூற்றாண்டுகளாக நன்றாக நிறுவப்பட்டுவிட்டது. ஆனால், ‘சூரியனும் சுற்றுகிறதா, அப்படியென்றால் எதைச் சுற்றுகிறது?’ என்ற விஷயம் மட்டும் அறிவியலாளர்களைத் தாண்டிப் பொதுமக்களுக்கு இன்னமும் அறிமுகமாகாத ரகசியமாகவே உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்தக் கேள்வியே பெரும்பாலானோருக்கும் எழுவதில்லை. ‘சூரியன் எதைச் சுற்றினால் என்ன, நமக்குக் காலையில் பொழுது விடிந்தால் போதும்’ என்ற சராசரியான மனநிலைதான் இந்த அறியாமைக்குக் காரணம்.

சூரியன் மட்டுமல்ல இந்தப் பிரபஞ்சத்தில் அணுவின் உட்கருவில் தொடங்கி விண்மீன் மண்டலங்கள் (Galaxies) வரை சுற்றாத பொருளென்று ஏதும் இல்லை. அசைவு என்பது அனைத்துக்கும் அடிப்படை.

‘சரி, சூரிய குடும்பத்தில் உள்ள எல்லா கோள்களும் சூரியனைச் சுற்றுகின்றன; அதைப் போல சூரியன் எதைச் சுற்றுகிறது?’ என்று கேட்க வருகிறீர்களா? முதலில் சூரிய குடும்பத்தில் உள்ள எல்லாக் கோள்களும் சூரியனைச் சுற்றுகின்றன என்பது உண்மையல்ல. நம் குடும்பத்தில் உள்ள எல்லாக் கோள்களும் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றினால் வியாழன் மட்டும் சூரியனுக்குச் சற்று அருகில் உள்ள ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு சுற்றுகிறது. மிகப் பெரிய கோளாக இருப்பதால் இப்படி ஒரு விசித்திர அமைப்பு.

இப்போது சூரியனுக்கு வருவோம். நமது சூரியன் ‘பால்வீதி’ எனும் விண்மீன் மண்டலத்தில் ஒரு அங்கம். இந்தப் பால்வீதி சுமார் 2 லட்சம் ஒளியாண்டுகள் விட்டம் கொண்டது. (ஒளி ஒரு ஆண்டுக்குப் பயணிக்கக்கூடிய தொலைவுதான் ஒரு ஒளியாண்டு. அதாவது 9,50,000,00,00,000 கி.மீ. இத்துடன் 2 லட்சத்தைப் பெருக்கினால் பால்வீதியின் விட்டம்). அதில் சற்றே வெளிப்புறத்தில் நமது சூரியன் அமைந்திருக்கிறது. பால்வீதியின் மையத்தில் இருக்கும் மிகப் பெரிய கருந்துளையைத்தான் சூரியன் சுற்றிவருகிறது. ஒரு முழுச் சுற்றுக்கு ஆகும் காலம் சுமார் 22-லிருந்து 25 கோடி ஆண்டுகள்.

அப்படியென்றால் சூரியன் இதுவரை எத்தனை முறை பால்வீதியின் மையத்தைச் சுற்றியிருக்கும்? ஒரு கணக்குப் போட்டுப் பாருங்களேன். பூமியின் வயது சுமார் 450 கோடி ஆண்டுகள். அப்படியென்றால் சூரியனை பூமி 450 கோடி முறை சுற்றிவந்திருக்கிறது என்று அர்த்தம். அதேபோல் சூரியனுக்குக் கணக்கிட்டுப் பார்ப்போமா? சூரியனின் வயது 460 கோடி ஆண்டுகள். பால்வீதியின் மையத்தை ஒருமுறை சுற்றிவர சூரியன் எடுத்துக்கொள்ளும் காலம் சுமார் 22-25 கோடி ஆண்டுகள். ஆக, தன் ஆயுளில் இதுவரை 19 முறைதான் சூரியன் பால்வீதியைச் சுற்றிவந்திருக்கிறது. சூரியனோடு சேர்ந்து பூமியும் கிட்டத்தட்ட 19 முறை பால்வீதியைச் சுற்றிவந்திருக்கிறது என்றும் சொல்லலாம்.

சூரியன் எவ்வளவு வேகத்தில் தன் சூறாவளி ‘சுற்று’லாவை மேற்கொண்டிருக்கிறது என்பது தெரிந்தால் மலைத்துப்போவீர்கள். மணிக்கு 8,28,000 கி.மீ. வேகம்! இந்த வேகத்தில் பூமியின் நிலநடுக்கோடு வழியாக ஒரு வாகனத்தில் (இந்த வேகத்தில் செல்லும் வாகனம் ஏதும் பூமியில் இல்லை என்றாலும்) நீங்கள் புறப்பட்டால் 2 நிமிடங்கள் 54 நொடிகளில் பூமியை ஒரு முறை சுற்றிவிட்டுப் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்வீர்கள்.

‘சூரியன் சுற்றுகிறது என்பதை ஒப்புக்கொள்கிறோம்; பால்வீதியும் சுற்றுகிறதா?’ என்று நீங்கள் கேட்பது என் காதில் விழாமல் இல்லை. ஆம், சுற்றுகிறதுதான்.

பால்வீதி மண்டலமும் அதற்கு அருகில் உள்ள ஆண்ட்ரோமிடா விண்மீன் மண்டலமும் தங்களுக்கு இடையே உள்ள ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு சுற்றுகின்றன. இடையே உள்ள புள்ளி என்றால் கருந்துளையையோ இன்னொரு விண்மீன் மண்டலத்தையோ அல்ல. இடையில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தைதான். குழப்புகிறதா? இரண்டு சிறுமிகள் ஒருவரையொருவர் கையைக் கோத்துக்கொண்டு தட்டாமாலை சுற்றுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அதைப் போலத்தான். என்ன, இந்த மண்டலங்களுக்குக் கைகள் கிடையாது. இரண்டும் ஏறக்குறைய சம அளவிலான நிறை கொண்டவை என்பதால், ஒன்றுக்கொன்று சம அளவு ஈர்ப்புவிசையைச் செலுத்துவதால் அவை இரண்டுக்கும் இடையிலான ஒரு புள்ளியை மையம் கொண்டு சுற்றுகின்றன. இப்படிச் சுற்றிக்கொண்டே சுமார் 300 அல்லது 400 கோடி ஆண்டுகளில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கலக்கும். பயப்பட வேண்டாம். விண்மீன் மண்டலங்களில் பொருட்களைவிட இடைவெளிதான் மிக அதிகம் என்பதால் நமது சூரியக் குடும்பம் இந்த மோதலில் தப்பிப் பிழைக்கவே பெரும் வாய்ப்பு இருக்கிறது.

பால்வீதியும் ஆண்ட்ரோமிடா மண்டலமும் அமைந்திருக்கக்கூடிய பிரபஞ்சப் பகுதிக்கு ‘அருகமை குழு’ (Local group) என்று பெயர். அது ‘விர்கோ பெரும்கொத்து’ (Virgo Supercluster) எனும் பிரம்மாண்டத்தைச் சுற்றிவருகிறது. ‘விர்கோ பெரும்கொத்து’ அதனை விட பிரம்மாண்டமான இன்னொன்றைச் சுற்றிவரக்கூடும். இப்படிப் பெரிதாக்கிக்கொண்டே போனால் இறுதியில் பிரபஞ்சம்தான்.

அப்படியென்றால் பிரபஞ்சம் எதைச் சுற்றுகிறது என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? கேட்டால் தப்பில்லை. இப்படி அசாதாரண விஷயங்களைப் பற்றிய கேள்விகள்தான் நமது  அறிவை விரிவாக்கிக்கொண்டே இருக்கின்றன. உங்கள் கேள்விக்கு பதில் இப்போது. சுற்றுவது என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்களுக்கிடையிலான, ஒன்றையொன்று சார்ந்த செயல். பிரபஞ்சத்தில் எண்ணற்ற கோள்களும் விண்மீன்களும் விண்மீன் மண்டலங்களும் பெருங்கொத்துகள் இருக்கின்றன. அதனால் சிறியது பெரியதைச் சுற்றிவருகிறது. ஆனால், பிரபஞ்சம் என்பது நமக்குத் தெரிந்தவரை ஒன்றுதானே இருக்கிறது. பிரபஞ்சத்துக்கு வெளியில் எதுவும் இல்லை என்பதால் பிரபஞ்சம் வேறு எதையும் சுற்றவில்லை என்று கூறலாம். சுற்றவில்லையே தவிர, பிரபஞ்சம் அசையாமல் அப்படியே இருக்கவுமில்லை. ஒரு நொடிக்கு 68 கி.மீ. வேகத்தில் இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டிருக்கிறது. ஆக, பாரதியாரைப் போல் சொல்ல வேண்டுமென்றால் ‘அசையாத பொருளில்லை இந்த இந்த அவனியிலே’!

Thursday, June 22, 2023

தம்பி ஒரு மீம் குழந்தை



அண்ணன்காரன் வாட்ஸப் மீம்களைத் தம்பிக்குப் படித்துக் காட்டிவிட்டு அவன் முகம் பார்க்கிறான் தம்பி அண்ணன் முகம் பார்க்கிறான்
மறுபடியும் மீம்களைப் படித்துக் காட்டுகிறான்
தம்பியோ கல்மாதிரி
வெறிக்கிறான்
தம்பியை எப்படியோ
சிரிக்க வைக்க வேண்டும்
என்ற முயற்சியில்
இறங்குகிறான்
முழுவெறியில்
இன்னும் இன்னும்
குழந்தைக்கு
எளிதாய்ப் புரியும்படியாய்
மீம்கள் படித்துக் காட்டுகிறான்
அண்ணன்
தம்பியோ கதை கேட்பது போல்
உம் கொட்டுகிறான்
'பாரும்மா
எவ்வளவு ஜோக்கு
படிச்சாலும் சிரிக்க மாட்டேங்கிறான்
சரியான முட்டாளைப்
பெத்திருக்கியே
இவனைப் பேசாம
வித்துரும்மா'
என்று கடும் விரக்தியில்
கைபேசியை மெத்தையில்
தூக்கிப் போடுகிறான்
அம்மா
எடுக்கிறாள் அதை
குழந்தையை ஒரு கையால்
அணைத்தபடி
மீம்களை மனதுக்குள்
படித்துவிட்டு
வெடித்துச்
சிரிக்கிறாள்
குழந்தையோ
குலுங்கிச் சிரிக்கிறான்
அண்ணனோ
கடுப்பில் முறைக்கிறான்

- ஆசை 

Wednesday, June 21, 2023

ஒளியான சொல்


சொற்களெல்லாம்

இடைவிடாமல்

பொருள் குறித்துக் கொண்டிருக்க

பொருளெல்லாம்

இடைவிடாமல்

நோய்ப்புற்றாய்க் கிளைத்துக்கொண்டிருக்க

பொருளறியப் புலனெல்லாம்

கிளைதோறும்

தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்க

பொருள்வெடிப்பின்

ஒருமைநிலை

எட்டிவிட


சாபமிட்டேன்


எல்லாச் சொல்லும் 

பொருள் குறிக்காமல்

போகுக


இட்டது கேட்டேன்

விட்டது அறிந்தேன்


வெறிச் 

என்ற சொல்லும்

வெறிச்சோடியதுபோல்

ஆனது உலகு


அப்போது

மேகத்தைக் கடல் நீர்

வேடிக்கை பார்ப்பது போல்

சொற்களை

அண்ணாந்து வேடிக்கை பார்க்க

ஆரம்பித்தன

பொருள்கள்

(அங்கிருந்து சொற்களும்

அப்படிப் பார்த்துக்கொண்டிருக்கலாம்

யாருக்குத் தெரியும்

நானோ பொருள்களின்

உலகினன்)


எங்கோ பார்த்ததுபோல்

இருக்கின்றதே

என்று வியப்பு கொண்டன


தன் மகனென்று தெரியாமல்

ஒருவனைப் பார்க்கும்

திரைப்படத் தாய்போல்

அவற்றுக்கு

அடிவயிறு பிசைகிறது


வேண்டாம் வேண்டாம்

உன் பிள்ளைகள் பொல்லாதவர்கள்

காலந்திருப்பிகள்

மீண்டும் சுருங்கிச் சுருங்கி

நுண்மையாகி வந்து

உன்னுள் சூல்கொண்டுவிடுவார்கள்

என்று எச்சரித்தேனோ இல்லையோ

அவையெல்லாம் கேட்டதோ இல்லையோ


சொல்லிழந்த நிலையில்

பொருளெல்லை மறைந்து

ஒரே பொருளாகி

ஒரே பொருளின்

உள்ளே

மகாகருவறை

அதனுள்ளே நான்


அப்போது

அப்போது

இருட்துணையாக

இருளச்சம் போக்க

இருட்குளிர்காய

உச்சரிக்கிறேன்


என்னைப் போலவே இருக்கும்

ஒரு சொல்லை


அது தீ

கொண்டுவருமா

வென்றெண்ணி


பின்

அறிகிறேன்

அது எல்லாவற்றுக்கும் முதல் சொல்

என்று


அறிகிறேன்

இருப்பது

அந்த ஒரே சொல்லென்று


அச்சொல்

என்னை ஒளியாக்

கென்றது


அப்படியே

ஆகுக என்றேன்


ஒளியான சொல்தான்

ஓரிடம் நில்லாதே


கருவறை

வெளிவாசல் விலக்கி

தனக்கென்றொரு விரைவு சூடி

இனி காலமெல்லாம்

அவ்விரைவளக்கும்

கணக்கு தேடி

தலைகொள்ளாமல் தெறித்தோட


அலகிலா திசைகளில்

ஒரு சொல்லின்

தற்படம்

     - ஆசை

Friday, June 16, 2023

நிர்மலா லெட்சுமணனுக்கு வாழ்த்துகள்!

 



நிர்மலா லெட்சுமணன் அவர்கள் The Hindu Group Publishing Private Limited‘ தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.  இந்த சமயத்தில் 'இந்து தமிழ்' நாளிதழுடனான அவருடைய உறவையும் அணுகுமுறையையும் கொஞ்சம் இங்கே பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

‘தி இந்து’ குழுமத்தின் உரிமையாளர்களில் ஒருவரான அவர் ஆங்கில நாளிதழின் இலக்கிய முகமாகவும் இருப்பவர். ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ என்ற இலக்கியத் திருவிழாவை முன்னெடுத்து நடத்துபவர். இந்தியாவின் முக்கியமான இலக்கியத் திருவிழாக்களுள் ஒன்றாக அது பெயர்பெற்றிருக்கிறது. 

முன்னதாக 'இந்து தமிழ்' நாளிதழின் தலைவராக நிர்மலா லக்ஷ்மண் சில காலம் செயல்பட்டார். 
'தி இந்து' ஆங்கில இலக்கிய விழாவைப் போல தமிழிலும் 'லிட் ஃபெஸ்ட்' நடத்த வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருந்தது. இதற்கான திட்டமிடல், நிகழ்ச்சிப் பொறுப்பு, நெறியாள்கை உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகள் நடுப்பக்க அணியிடம் இருந்தன. ஆசிரியர் அசோகனும், நடுப்பக்க ஆசிரியர் சமஸும் முழுமையாக இந்தப் பணிகளை என்னிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பான ஆலோசனைக்காக நிர்மலா அவர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. 

தமிழ் ஆளுமைகளில் ஐந்து பேருக்கு  சாதனையாளர் விருதும் ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கலாம் என்று அப்போது நான் முன்மொழிந்தேன்.  விருதுத் தொகை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் விளம்பரத் துறையினரைச் சார்ந்திருந்தது. ஏனென்றால், ஏராளமான பொருள் செலவில் நடக்கும் இந்த விழாவில் விளம்பரதாரர்களின் பங்களிப்பு முக்கியமானது.  ஆங்கில நாளிதழ் அளவுக்கு தமிழ் நாளிதழுக்கு விளம்பரம்  பெறுவது சிரமம். ஆகையால், சமகாலச் சாதனையாளர்களுக்கு நபருக்குத் தலா ரூ.25 ஆயிரமும், வாழ்நாள் சாதனையாளருக்கு ரூ. 1 லட்சமும் வழங்கலாம் என்று விளம்பரத் துறையினர் கூறியிருந்தார்கள். எனக்கோ ஆங்கில எழுத்தாளர்களுக்குக் கொடுக்கப்படுவது போன்ற ஒரு கணிசமான விருதுத் தொகை தமிழ்ப் படைப்பாளிகளுக்குக் கிடைத்தால்தானே உரிய மரியாதையாக இருக்கும் என்ற எண்ணம் அழுத்திக்கொண்டே இருந்தது. விளம்பரத் துறையினருடனான கூட்டத்தில் ஆசிரியர் குழு நடத்திய பேச்சில் வெற்றி கிடைக்கவில்லை. இப்போது நிர்மலா அவர்களுடன் பேசும்போது இதை ஒரு வலியுறுத்திப் பார்ப்போம் என்று எண்ணினேன். 

விளம்பரத் துறையினரின் முடிவு, தமிழ் - ஆங்கில எழுத்தாளர்கள் இடையே பாகுபாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்துவிடும் என்று நிர்மலா அவர்களிடம் குறிப்பிட்டேன். ஏனென்றால் 'தி இந்து' ஆங்கிலம் நடத்தும் லிட்ஃபெஸ்ட் இலக்கிய விழாவில் போட்டியில் வென்ற எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் விருதுத் தொகை ரூ. 5 லட்சமாக இருந்தது. நிர்மலா அவர்களிடம் இதைத் தெரிவித்தேன். 
  
உடனே துளி தயக்கமும் இல்லாமல் அவர் சொன்னார், ‘எஸ் எஸ் யு ஆர் கரெக்ட். பார்ஷியாலிட்டி காட்டக் கூடாது. ஆசைத்தம்பி சொல்றதுபோலவே லைஃப் டைம் அச்சீவ்மென்ட்டுக்கு ஃபைவ் லேக் ருப்பீஸும் மற்ற எழுத்தாளர்களுக்கு ஒவ்வொருத்தங்களுக்கும் ஒன் லேக் ருப்பீஸும் கொடுத்திடுவோம்! அதனால் என்ன தொகை குறைவாகுதோ அதை மேனேஜ்மென்ட் கொடுக்கும்’ என்றார். அந்த நிமிடம் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. 

விளைவாக, தமிழில் அதுவரை இல்லாத வகையில், முதல் ஆண்டு இலக்கியத் திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு ரூ. 5 லட்சமும், சமகாலச் சாதனையாளர்களுக்கு ரூ.ஒரு லட்சமும் வழங்கப்பட்டது.  பிந்தைய ஆண்டுகளில் இந்தத் தொகை குறைந்தது தனிக் கதை.
 நான் நிகழ்ச்சிப் பொறுப்பேற்றிருந்த இரண்டு விழாக்களில் மட்டும் மொத்தம் ரூ. 15 லட்சம் தமிழ் எழுத்தாளர்களுக்கு விருதுத் தொகையாக வழங்கப்பட்டிருந்தது.

இந்திரா பார்த்தசாரதி, கோவை ஞானி, விக்கிரமாதித்யன், இமையம், பா.வெங்கடேசன், சீனிவாச ராமாநுஜம், தமயந்தி, கீரனூர் ஜாகீர்ராஜா, சயந்தன் ஆகியோர்தான் அந்த விருதாளர்கள். 

. “ஜெய்பூர் லிட்ஃபெஸ்ட் மாதிரியான சர்வதேச நிகழ்வுகளில் கலந்துக்குற எழுத்தாளர்களைத்தான் சொகுசான உயர்தர ஹோட்டல்ல தங்க வச்சு கௌரவப்படுத்துவாங்க. அதுமாதிரியான கௌரவம் தமிழ் எழுத்தாளர்களுக்குத் தமிழ்நாட்டுலேயே கிடைக்கணும்னு நெனைச்சிருக்கேன். தாஜ் கொரமண்டல் ஹோட்டல்ல தங்கவைச்சு அந்தக் குறைய ‘இந்து தமிழ்’ போக்கிடுச்சி. அப்பப்பா அற்புதமான கவனிப்பு” என்று மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி என்னிடம் கூறியபோது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. 

எழுத்தாளர்களையும் உரையாளர்களையும் மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று நிர்மலா மேடம் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டார். உரையாளர்களுக்கு மதிப்புத் தொகையுடன் சிறந்த புத்தகங்களும் தர வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டு அப்படியே வழங்கப்பட்டது. பிறகு கோவையில் நடைபெற்ற லிட்ஃபெஸ்ட்டில் பரிசுத் தொகுப்பில் என் தனிப்பட்ட தேர்வாக ஃப்ரண்ட்லைன் - தி இந்து வெளியீடான ‘The Art of India' (இரண்டு தொகுதிகள் ) நூலை நான் தயக்கத்துடன் முன்வைத்தேன். ஏனெனில் அதன் விலை ரூ. 5,000. ஆனால், என்னுடைய பரிந்துரை உடனே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்தப் புத்தகம் உள்ளிட்ட பல புத்தகங்கள் பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றன. 


நிர்மலா லெட்சுமணன் அவர்களும் க்ரியா ராமகிருஷ்ணனும் நண்பர்கள். முதல் லிட்ஃபெஸ்ட் நடந்து முடிந்தபோது நிர்மலா மேடத்திடம் ராமகிருஷ்ணன் முறையிட்டார், ‘இப்படிப் பண்ணிட்டீங்களே?’ அதற்குப் பதறிப் போய் நிர்மலா மேடம் கேட்டார், ‘அய்யோ என்னாச்சு?’ அதற்கு ராமகிருஷ்ணன் ‘இப்படி ஆசைத்தம்பியை என்கிட்ட இருந்து பறிச்சிக்கிட்டீங்களே’ என்றார். அதற்கு சிரித்துக்கொண்டே ‘உங்ககிட்ட இருந்து இப்படி ஒருத்தர் கிடைச்சா எப்படி மிஸ் பண்ணுவோம்’ என்றார் நிர்மலா மேடம். திறமையைச் சரியாக அங்கீகரிக்கத் தெரிந்தவர் அவர். 

நிர்மலா லெட்சுமணன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!

குயில் செருகிய வாள்



முதலில்

மெதுவாகத்தான் ஆரம்பித்தது


நான் இருக்கிறேன்

என்பதைத் தானே

அறிந்துகொள்ள

ஒரு 'கூ'வை

எடுத்து

விட்டது குயில்


தான் இருப்பது

தனக்கே உறுதிப்பட்ட

பரவசம் தந்த

சிறுதிமிரில்

நான் இருக்கிறேன்

என்று

எல்லோருக்கும்

எல்லாவற்றுக்கும்

தெரியப்படுத்த ஆசைப்பட்டு

இன்னொரு 'கூ'வை 

எடுத்து

விட்டது


ஏதும் நிகழவில்லை


மறுபடியும் மறுபடியும்

கூ கூ கூ

ஒன்றும் ஒருவரும் அசைந்துகொடுக்கவில்லை


தான் இருக்கிறேன்

என்பதைச் சொல்ல

ஒரு குயில்

எவ்வளவு

கழுத்தறுத்துக்கொள்ள

வேண்டியிருக்கிறது


விரக்தியிலும்

கோபத்திலும்

அடுத்து எடுத்தது

ஒரு பென்னம்பெரிய வாளை


அதை ஒரு

கூவில் தோய்த்துக்

கண்சிமிட்டும் நேரத்தில்

சொருகியது

சூழலுக்குள்

சோம்பல் முறித்துக்கொண்டிருந்த

அனைத்திலும்


அப்போதும்

ஏதும் நிகழ்ந்ததாய்த்

தெரியவில்லை


ஆனால்

வானம்தான்

எவ்வளவு நேரம்

வலிக்காதது போலவே

நடித்துக்கொண்டிருப்பது


கூர்முனை எழுப்பிய

வலியை

புதிதாய்க்

கனன்றுகொண்டு வந்த

காயம்

காட்டிக் கொடுத்தது


அந்தக் காயத்தின்

தகிப்பில்

இந்நாளின் குடைக்குள்

குறுக்குமறுக்காய்

நாம் ஓடிக்கொண்டிருக்க

வேண்டும்


இந்தக்

குயில் நடத்தும் கூத்து

கோடை முழுக்கத் தொடருமே


அதை யார்

கோடையின்

காவல் தெய்வமாய் ஆக்கியது

எடுத்ததற்கெல்லாம்

கொடை கேட்கிறதே

         - ஆசை


Thursday, June 15, 2023

ஜேசிபிகளின் எதிர்க் கடவுள்


ஆயிரம் ரூபாய் கொடுத்து

வாங்கிய ஜேசிபி

அன்று மாலையே

அக்குவேறு ஆணிவேறாகக்

கிடக்கிறது


எது ஜேசிபியை

ஜேசிபி ஆக்குகிறது

என்று வாங்கிய உடனே தோன்றிய 

ஆன்மீகக் கேள்வியின்

விளைவு அது


அல்லது

ஈவிரக்கமற்ற நபரொருவர் கையில்

அகப்படும்போது

ஜேசிபிகளின் மனதில் 

என்னென்ன உணர்வுகள் எழும்

என்பதைக் கண்டறிவதற்கான

உளவியல் ஆராய்ச்சி அது


அல்லது 

ஜேசிபிகளின் பின்னுள்ள

நோக்கத்தை உருவி

அங்கே எதிர்நோக்கம் ஒன்றை

உருவாக்கும் முயற்சி அது


கிரேன்கள்

கார்கள்

ஹெலிகாப்டர்கள்

கரடிகள்

புலிகள்

எல்லாவற்றுக்கும்

இதே கதிதான்


ஜேசிபியின் பாகங்கள் 

வீட்டின் வெவ்வேறு திசைகளின்

ரகசியங்களை அறிந்துகொள்ள

அனுப்பப்படும்போது

அதன் கண்டுபிடிப்பாளர்  கல்லறைக்குள்

நீர் நிரம்புகிறது


அது தோண்டிய பள்ளங்கள்

மலைகளாகின்றன


இப்படித்தான்

கிரேன்களின் விதியால்

கட்டிடங்கள் சரிந்து

அதே இடத்தில்

முந்தைய உயரத்தை ஈடுசெய்யும்

ஆழங்கொண்ட

கிணறுகள் தோன்றுகின்றன


புலிகளின் வயிறு குதறப்படும்போது

உள்ளிருந்து தப்பியோடுகின்றன

மான்களும் ஆடுகளும் மாடுகளும்


பெரியபெரியனவற்றின் கடவுள்

அவற்றைப் படைக்கும்போது

அவற்றின் ஆணவத்தையும்

மூர்க்கத்தையும் கண்டஞ்சினார்


பின் எல்லாவற்றுக்கும்

பொம்மை செய்தார்


பின் பெரியபெரியனவற்றின்

ஆணவத்தையும் மூர்க்கத்தையும்

பரிகசிக்கும் தேவதூதனைச் செய்தார்


தேவதூதன்

முதல் வேலையாகக் கடவுளை

அக்குவேறு ஆணிவேறாகக்

கழற்றிப்போட்டுவிட்டு

அவருக்கு எதிர்ப்பொருள் செய்தான்


அதன் பின்தான்

ஆயிரம் ரூபாய்

ஜேசிபி மீது

கை வைத்தான்

    - ஆசை

    23-04-23

Wednesday, June 14, 2023

மாம்பழ நிறப் புடவைக்குக் கறுப்பில் கரைக்கட்டு நெய்யும் கலை



தங்க. ஜெயராமன்

(ஆசையின் ‘இந்தப் பிரபஞ்சமே பேபல் நூலகம்தான்’ கட்டுரைத் தொகுப்பில் பேராசிரியர் தங்க. ஜெயராமன் எழுதிய மதிப்புரை)

தற்காலத் தமிழ்ச் சமூகத்தின் இலக்கிய ரசனை என்ன? அதன் இலக்கிய விமர்சனங்களில் நாம் காண்பது விமர்சனக் கோட்பாடுகளின் தேக்கமா, வளர்ச்சியா? உலக இலக்கிய வாசிப்பின் தாக்கம் நம் சமூகத்தின் இலக்கியப் படைப்புகளில் துலக்கமாகத் தெரிவதுபோல் அதன் ரசனையிலும் விமர்சனக் கோட்பாடுகளிலும் தென்படுகிறதா? தன் இலக்கிய மரபின் தொன்மையிலேயே  திளைத்துக் கிடக்கும்  சமூகத்துக்குத் தன்னைப் பற்றிய சுய விமர்சனமாக இப்படிக் கேட்டுக்கொள்ளும் முதிர்ச்சித் தருணங்கள் அனுபவமாவது உண்டா? 

இலக்கியப் படைப்புகள் மீதான மதிப்பீடுகள் என்பதோடு ஆசையின் விமர்சனங்களை இத்தகைய கேள்விகளுக்கான விடைகளாகவும் நாம் பார்க்க இயலும். சில நேரங்களில் படைப்புகளுக்கான விமர்சனம், தானே நல்ல படைப்பிலக்கியமாகப் பரிணமிக்கும். இலக்கிய மாணவர்கள் படைப்புகளைப் போல அவற்றின் விமர்சனங்களையும் அதிகம் நேசிக்கும் வழக்கத்துக்குக் காரணம் இதுதானே! இது விமர்சனக் கட்டுரையா, இதுவே இலக்கியமா என்று நாம் வியக்கும் ஆக்கங்களும் ஆசையின் விமர்சனங்களில் உண்டு.     

ஒரு நாவல், தன் புனைவுக் கோலத்தின் சாத்தியமாகக் காட்டும் முழு வீச்சையும் வசப்படுத்த வேண்டும். புனைவுப் புலத்தில் புதிய சாத்தியங்களையும் காட்ட வேண்டும். இவற்றைச் சாதித்துக்காட்டியது பா. வெங்கடேசனின் ‘பாகீரதியின் மதியம்’ என்கிறார் ஆசை. புனைவுக்கு இப்படி ஒரு உரைகல்லைக் காட்டி, ஒரு நாவலையும் அதில் உரைத்துத் தரம் காட்டுகிறது ஆசையின் விமர்சனம். நாவலை எழுதும் நாவலாசிரியர் யதார்த்தத்தில் இருக்கும் மனிதர். அந்த நாவலைக்  கதையாகச் சொல்லும்  கதைசொல்லியோ அந்தப் புனைவு சுட்டும் ஒரு படைப்பு. அந்தக் கதைசொல்லியே ஒரு கதாபாத்திரத்தின் கற்பனை. இப்படி சுவாரசியமான புனைவு உத்திகளைக் கையாள்வதான நாவல் பா. வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’. புனைவுப் புலம் பற்றிய மேலை இலக்கிய விவாதங்களில்  புனைவு உத்திகளை நுணுக்கமாகப் பேசுகிறார்கள். நம் வாசிப்பு ஆர்வத்தின் வேகத்தில் இப்படியான உத்திகளின் இயக்கத்தை நாவலில் கவனிக்கத் தவறுவோம். கதைக்குள் இயங்கும் கதைகளையும், ஒரு தளத்தின் ஊடாகத் தெரியும் இன்னொரு அர்த்தத் தளத்தையும் நமக்குக் கவனப்படுத்தும் ஆசை பாத்திரங்கள், வர்ணனைகள், சித்தாந்தப் பின்புலங்கள் போன்ற வழக்கமான விமர்சனக் கூறுகளை ஒதுக்கி ரசனையை மற்றொரு தளத்துக்குக் கொண்டுசெல்கிறார்.   

‘பாகீரதியின் மதியம்’ நாவலின் கட்டமைப்பை ‘மிதக்கும் வண்ணம்’ என்ற கலைநுட்பம் தீர்மானிப்பதாகக் காண்கிறார் விமர்சகர். வண்ணங்களின் கலவையில் விளைவது ஓவியம், சொற்களின் கோர்வையில் பிறப்பது புனைவு - இரண்டுக்கும் பொதுவான கட்டமைப்பு முறையை விமர்சகர் காட்டுகிறார். கவி ஒருவர் சொற்களில் விவரிப்பதைக் கல்லில் சிற்பமாகவும், கோடுகளில் சித்திரமாகவும் நம் கண்கள் காணும் காட்சியாக மாற்றுவது போன்றதல்ல இது. ஒரு கலைப் படைப்பு எப்படி சோடித்துக் கட்டப்படுகிறது என்ற சிருஷ்டி சூட்சுமம். ததும்பும் குளங்களின் கரை உடைவதுபோல் கலை வடிவங்களுக்கு இடையேயான எல்லைகள் தீவிர ரசனையின் உச்சத்தில் உடைந்து ஒரே அனுபவ சமுத்திரமாகிவிடும்.   

மொழியின் எல்லையிலிருந்து தன் பயணத்தைத் தொடங்கி மொழியை விரிவாக்குகிறார் மெளனி என்பது ஆசையின் மதிப்பீடு. தர்க்க ஒழுங்குக்குள் ஒடுங்கிவிட்ட மொழிக்கு என்றைக்கும் அகப்படாத உணர்வு, காலமும் வெளியும் அதனதன் அடையாளம் அழிந்து கூடிக்கொள்ளும் மாயத் தருணம் - இவ்விடங்களில் வழக்கமான மொழியின் போதாமையைச் சமாளிக்க வேண்டும். இப்படிச் சொல்லும் விமர்சகர் இங்கேதான்  மெளனியின்  மொழி மீறல்கள் நிகழ்வதாகக் கூறுகிறார். 

கவிகள் மொழியை பலவந்தப்படுத்தியும், தேவைப்பட்டால் அதன் அமைப்பைக் குலைத்தும் தங்கள் அர்த்தங்களை உருவாக்கிக்கொள்கிறார்கள் என்று ஒரு கட்டுரையில் டி.எஸ். எலியட் சொல்கிறார். மொழியை இலக்கியப் படைப்பின் முதன்மையான கூறாக்கி விவாதிக்கும் ஆசை தமிழ் இலக்கிய விமர்சனத்துக்கு அதன் மூலம் வளம் சேர்க்கிறார். ஆசையின் விமர்சனங்கள் ஆய்வுக் குறிப்புகளல்ல, ஒரு தேர்ந்த ரசிகரின் ஆழமான அனுபவம். இலக்கியப் படைப்பின் கூறுகளாகவும்  தன்மைகளாகவும் பொதுக் கருத்து எவற்றை வைத்துக்கொண்டிருக்கிறதோ அவற்றிலிருந்தெல்லாம் வெகுவாக விலகிச் செல்லும் பாதை இது.   

மெளனியின் கதைகளை இவர் ‘பாழின் வசீகரம்’ என்று சொல்வதை நாம் இங்கே கவனிக்க வேண்டும். தானே ஒரு கவிஞராக இருக்கும் ஆசை இன்னொரு படைப்பாளி பற்றி எழுதும் விமர்சனம் வழக்கமான விமர்சன பாணியிலோ மொழியிலோ இருக்க இயலுமா? எது இலக்கியம் என்பதற்கான பொது லட்சணப் பட்டியல் ஒன்றை வைத்துக்கொண்டு அதில் உள்ளவை ஒருவரின் படைப்பில் இருக்கிறதா என்று ஆராய்ந்து நமக்குச் சொல்வது அவரே கவியாக இருக்கும் ஆசை போன்ற விமர்சகர் செய்வதல்ல. சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் இப்படிக் கவிஞர்களே விமர்சகர்களாக இரட்டிக்கும் மரபு பற்றி  விவாதங்கள் நடந்திருக்கின்றன. கவித்துவமும் திறனாய்வுத் திறனும் ஒருவரிடமே கூடும்போது அதன் விளைவு என்ன என்பதை ஆரய்ந்திருக்கிறார்கள்.  எழுத்துக்கு இலக்கியத் தகுதியைத் தருவது எது? என்னென்ன தன்மைகள் இருந்தால் அதை இலக்கியம் என்று சொல்கிறோம்? இந்தக் கேள்விகளுக்கு தானே கவியாகவும் விமர்சகராகவும் இருக்கும் ஒருவரும் விமர்சனத்தைத் திறன் மேம்பாடாகப் பயின்ற இன்னொருவரும் ஒரே விடையைத் தருவார்களா? ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,/ வள்ளுவர்போல், இளங்கோவைப்போல்/ பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை’ என்ற பாரதியின் கூற்றும் விமர்சனமே. ஆனால், ஒரு விமர்சகரின் வாக்குமூலத்திருந்து இது வேறானது. ஒரு கவியாக பாரதிக்கு சிருஷ்டித் தொழிலின் வலி தெரியும் என்பதற்காக அல்ல. கவியின் இலக்கிய ரசனை வேறொரு வகையைச் சேர்ந்தது. நூறு விமர்சகர்கள் ‘கம்பன் மிகச் சிறந்த கவி’ என்று சொல்லியிருந்தாலும் தமிழ்ச் சமூகம் அவர்கள் சொல்லுக்கு மசிந்திருக்காது. ரசனையில் பிறக்கும் பாரதியின் சொற்கள் நம்மை மிக எளிதாகத் தொற்றிக்கொள்ளும். தான் உன்னதம் என்று கண்ட  படைப்புகளின் தன்மையை நாமும் உணரவும் அனுபவிக்கவும்  உதவுவதுதான் ஆசையின் விமர்சனம். அது உணர்வுத் தளத்திலும் அனுபவத் தளத்திலும் இயங்கித் தொற்றிக்கொள்ளும் ரசனை. 

இலக்கியமாகத் தான் ரசித்த ஒரு படைப்பில் தன்னை ரசிக்கத் தூண்டியவை எவை என்று அடையாளம் கண்டு அவற்றுக்குப் பெயரிடுகிறார் ஆசை. ரசனையிலிருந்துதான் கோட்பாடு பிறக்கிறது. நம் விமர்சன மரபு ஏற்கெனவே அடையாளம் கண்டவற்றைக் கைக்கொள்வதோடு அவர் திருப்தியடைவதில்லை. ‘எனக்கு இது அற்புதமாகத் தோன்றுகிறது’ என்று ஒரு படைப்பை வியந்து அதற்குமேல் எதுவும் சொல்லாமலும் சென்றுவிடுவதில்லை. ரசனையை மட்டுமே, தான் ரசித்தவற்றை மட்டுமே, அளவுகோலாக வைத்துக்கொள்ளும் சம்பலான முரண்டு என்றும் நாம் அவரை எளிமைப்படுத்திப் புரிந்துகொள்ள முடியாது. ஒரு கவி விமர்சகராக இருப்பதன் வலுவும் வலிவருத்தமும் அவருக்கு ஒருசேர வாய்த்துள்ளன. 

‘பாகீரதியின் மதியம்’ என்ற  நாவல்  அரசியலையும் சமூகப் பிரச்சினைகளையும் ரசிக்கும்படியான துடுக்கோடு பேசுகிறது. இருந்தாலும், நாவல் என்ற தன் இலக்கியத் தன்மையை இந்தப் படைப்பு இழப்பதில்லை. சமூக, அரசியல் பிரச்சினைகள் கதைசொல்லலுக்குள் ‘இழைந்து, இயைந்து பரவியிருப்பதுதான் மற்ற அரசியல் நாவல்களிலிருந்து இது விலகி இருப்பதைக் காட்டுகிறது’ என்பது ஆசையின் விமர்சனம். பா. வெங்கடேசனின் ’தாண்டவராயன் கதை’ நாவலில் உள்ள சம்ஸ்கிருதமையப் பார்வை, தேசியவாதப் பார்வை போன்றவற்றிலிருந்து நாவல் அதன் உள்ளேயே இருக்கும் கலகத் தன்மையால் மீண்டுகொள்கிறது என்கிறார் ஆசை. சுவை கூட்டும் உப்பு பதார்த்தத்தில் கரைந்திருப்பதுபோல் கலைத்தன்மை அவற்றைத் தன்மயமாக்கிக்கொள்கிறது. ஆசையின் விமர்சனக் கட்டுரைகள் பலவற்றிலும் இந்தக் கலைப் பண்பு ஒரு பொதுக் கோட்பாடாக இழைந்திருப்பதைக் காணமுடியும். நகுலனின் கவிதைகளில் அவற்றின் தத்துவச் சரம் உறுத்துவதில்லை என்றும் கவிதையில் தத்துவம் துருத்திக்கொண்டு தெரியக் கூடாது என்றும் இன்னொரு இடத்தில் சொல்கிறார். 

இலக்கியப் படைப்புகளுக்கும் அவற்றின்  தத்துவ உள்ளீட்டுக்கும் இடையே உள்ள உறவு நூறு ஆண்டுகளாக விவாதிக்கப்படும் பிரச்சினை. உயர்வான தத்துவத்தைத் தன் பொருளாகக் கொண்ட படைப்பும் அதன் காரணமாகவே உயர்வானதாகிவிடுமா? வெறும் உரைநடையில் தெளிவான கருத்துகளாகச்  சொல்லக் கூடியவற்றைத்தான் கதைகளில் சம்பவங்களாகவும் கவிதைகளில் அணிவகைகளாகவும் பொதிந்து வைக்கிறார்களா? வழக்கமான இந்தக் கேள்விகளை ஆசை வழக்கமான முறையில் அணுகவில்லை. பிரச்சினையின் பரிமாணங்கள் எல்லாவற்றையுமே பார்க்க முயல்கிறார். 

லா.ச. ராமாமிர்தத்தின் படைப்புகளைப் பற்றி, அவை அன்றாட வாழ்க்கையை தத்துவத்துக்கான சாக்காக வைத்துக்கொள்வதில்லை, அன்றாடம் தத்துவமாகவும் கவிதையாகவும் மாற்றம் பெறுகிறது என்று சொல்கிறார் ஆசை. கவித்துவமும் தத்துவமும் ஒன்றையொன்று பின்னிக்கொண்டுள்ளதாகச் சொல்கிறார். முதலாவது உணர்வு சார்ந்தது, அடுத்தது சிந்தனை சார்ந்தது.  வழக்கமாக இவை ஒன்றோடு ஒன்று பிணங்கும், முதலாவது இருக்கும் இடத்தில் அடுத்ததற்கு வேலை இல்லை என்பதுதான் பொது நம்பிக்கை. லா.ச.ரா. படைப்புகளில் இவை பின்னிக்கிடக்கும் என்றால் அது ரசனைப் புரட்சி. இதனையொத்த ஒன்றைப் பற்றி டி.எஸ். எலியட் பேசியிருக்கிறார். 17-ம் நூற்றாண்டின் ஆங்கிலக் கவிகள் சிலரிடம் சிந்தனையும் உணர்வும் ஒன்றியிருந்ததை அல்லது உணர்வை அம்பு நுனியாகக் கொண்ட அவர்களின் சிந்தனையை அக்காலத்தில் இருந்து பின்னர் மறைந்துபோய், மீட்கப்படாத ரசனையாக அவர் சிலாகித்துச் சொல்வார் (காண்க: டி.எஸ். எலியட்டின் ‘The Metaphysical Poets’ கட்டுரை).  

இலக்கிய ரசனையில் நம் உணர்ச்சிகளின் பங்கு அந்தந்தக் காலங்களில் ஏற்றஇறக்கம் காண்பது உண்டு. தி.ஜா. தற்காலத்தில் எப்படி வாசகர்களால் வரவேற்கப்படுகிறார் என்பதை கணிக்கும் ஆசை ‘உணர்ச்சிகளுக்கு இடம்கொடாத இன்றைய நிதானமான வாசகர்கள்’ என்று வாசர்களை விவரிக்கிறார். ரசனை அப்படியே உறைந்து இறுகிவிடுவதல்ல. வாசகர்களின் ரசனை படைப்புகளையும் படைப்புகளின் ரசனை வாசகர்களையும் தீர்மானிக்கின்றன. இந்த ஊடாடலுக்கு நல்ல விமர்சனம் ஒரு கருவி. விமர்சனங்களும் பொது ரசனையைத் தீர்மானிக்கின்றன. ஆசையின் விமர்சனங்களுக்கு இந்தப் பிரக்ஞை அடித்தளம். அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் நகுலனின் தத்துவார்த்தக் கவிதைகள் அவரது கவித்துவத்தின் பன்முகத்தை மறைத்துவிடுகின்றன என்று சொல்கிறார் ஆசை. தத்துவப் பொருளை  ஏற்று வரும் படைப்பு வாசகர்களின் இலக்கிய ரசனையை எப்படியெல்லாம் திரித்துவிடுகிறது! படிக்கும் காலத்தில் நாங்கள் கவிதைகளிலிருந்து மேற்கோள் காட்டிப் பேசுவதை எங்கள் பேராசிரியர்கள் கண்டிப்பார்கள். எங்கள் நினைவுத்திறனைப் பீற்றிக்கொள்கிறோம் என்பதற்காக அல்ல, கவிதைகளைக் கவிதைகளாகவே பார்க்கும் ரசனையை வளர்த்துக்கொள்ளவில்லை என்பதற்காக. ஞானக்கூத்தனின் கவிதைகளில், அவை மேலைத் தத்துவம், கீழைத் தத்துவம் இரண்டுமே முயங்கிப் பேசினாலும்,  தத்துவம் கனிந்து கனிந்து கவிதையாகிறது. இப்படிச் சொல்லிச் செல்லும் ஆசை இன்றைய விமர்சனக் கோட்பாடு ஒன்றையும் தொட்டுச்செல்கிறார். கவிதையில் தற்போது கதைசொல்லல் என்பது விலக்கிவைக்கப்பட்ட ஒன்றாக இருப்பதுதான் அது. இந்த விமர்சனத் தெளிவிலிருந்து நம் இலக்கிய போதனை எவ்வளவு விலகிச் செல்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். ‘கவிஞர் ஒரு நாள் ஒரு மலையின் மீது ஏறிக்கொண்டிருந்தார். அப்போது அவர்…’ - இப்படி ஒர் அநாமதேய இடத்தையும் நேரத்தையும் கதை சொல்லும் பாணியில் குறிப்பிடாமல் கவிதைகளை வகுப்பில் சொல்லித்தருவதில்லையல்லவா!. இப்போது கதை இல்லாமலேயே கவிதையை ருசிக்கக் கற்ற சமூகத்தின் ரசனை தேக்க நிலையிலிருந்து விடுபட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த இடத்தில் ஆசை இன்றைய ரசனை பற்றிக் கூறுவதை நாம் கவனிக்க வேண்டும்.  பொன்முகலியின் கவிதைகளை விமர்சிக்கும்போது இதம், கவித்துவம் போன்ற பண்புகளை இன்றைய கவிதைகள் ஒதுக்கி நகர்வதைச் சொல்கிறார். தேவதச்சன் கவிதைகளை விமர்சிக்கும்போது இப்போது செய்யுள், சந்தம், இசை, உவமை, படிமம் போன்றவற்றைக் கைக்கொள்ளாமல் கவிதை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தைக் குறிப்பிடுகிறார். 

ஒரு படைப்பு தன் பொருளாகக் கொள்வது தத்துவமானாலும், சமூகப் பிரச்சினைகளானாலும் அவை கலையாக மாற வேண்டும். தஞ்சை ப்ரகாஷின் சிறுகதைகளை விமர்சிக்கும் ஆசை, பாலியல் பிறழ்வு, குற்றம் போன்றவற்றை தஞ்சை ப்ரகாஷ் தாராளமாகப் பேசுபவர்… அதில் கலாபூர்வமான வெற்றி பெற்றுள்ளார்… சிலவற்றில் கலைத்திறமை கைகூடவில்லை என்று சொல்கிறார்.  தேம்பித் தேம்பி அழும் ஒருவர் கலையை படைப்பதில்லை. அவர் யதார்த்த உளையிலிருந்து மீள்வதில்லை. ஆனால், அப்படி அழுவதே நாடகத்தில், திரையில் வரும்போது நாம் விரும்பிப் பார்க்கும் சோகரசக்  காட்சியாகிவிடுகிறது. 

ஜான் க்ரோ ரான்சம் என்ற விமர்சகர் இரண்டு புதிய இலக்கிய கூறுகளை அறிமுகப்படுத்தினார். ஒரு படைப்பின் அமைப்பு, அது கட்டப்பட்டிருக்கும் விதம் என்பது ஒன்று. மன்றொன்றை நாம் படைப்பின் செறிவு என்பதாகப் புரிந்துகொள்ளலாம். இதற்கு அவர் நெசவில் புழங்கும் சொல்லான ‘texture’ என்பதைப் பயன்படுத்தினார். துணியின் ’ஊட்டம்’ என்று இதை நாம் புரிந்துகொள்ளலாம். இரண்டுமே உருவகங்கள்தான். அமைப்பைத் தொடக்கம் என்ற முதல், இடை, உச்சக் காட்சி, முடிவு என்ற கடை என்பதாகப் புரிந்துகொள்ளக் கூடாது. மாம்பழ நிறப் புடவைக்குக் கறுப்பில் கரைக்கட்டு நெய்யும் கலையைப் போன்றதாகப்  புரிந்துகொள்ள வேண்டும். புடவையின் ஊடும் பாவும் எவ்வளவு நெருக்கி நெய்யப்பட்டிருக்கிறதோ அது துணியின் ஊட்டத்தை தீர்மானிக்கிறது. அதை விரல்களால் நெருடி உணரலாம். ஞானக்கூத்தனின் கவிதைகளில் தத்துவத்தின் சாயலும் பகடியும் ஊடாடும் என்பது ஆசையின் விமர்சனம். அங்கே மரபும் நவீனமும் ஒரே நேரத்தில் இழையோடுவதாகவும் சொல்கிறார். அமைப்பு, ஊட்டம் என்ற இரண்டு இலக்கியக் கூறுகளும் மற்ற படைப்பாளிகளிடம் எப்படிச் செயல்படுகிறது என்று ஆசை சொல்வதை அவர் சொற்களிலேயே நாம் சுருக்கித் தரலாம்: 

நகுலனின் படைப்புகள் தத்துவம் பேசினாலும் அதை மீறிய மனோநிலையும் அங்கு உண்டு. அவருடைய பரிசோதனை முயற்சிகள் மரபின் பரிச்சயத்தோடு நிகழ்ந்தவை. சபரிநாதனின் அப்பட்டங்கள் ரகசிய மூடல்களைக் கொண்டுள்ளன. அவை தொடர்ச்சியான அர்த்தத்துக்கு எதிரான கட்டமைப்புகள். அபியின் கவிதைகளுக்கு எளிமையின் அடர்த்தி உண்டு. அடரும் எளிமை, பூடகத்துக்கும் இருண்மைக்கும் இட்டுச்செல்கிறது. பொன்முகலியினுடையவை சாதாரணமானவை என்பதாலேயே அழகானவை. ’பொம்மை அறை’ என்ற நாவலில் கதைசொல்லி நன்மை-தீமை போன்ற எதிர் நிலைகளுக்கு ஊடாக ஊசலாடுகிறார். 

இவற்றிலெல்லாம் மேற்கத்திய சொனாடா இசையின் கட்டமைப்பைக் காண முடியும். நம் விமர்சனக் கோட்பாடுகளும் இலக்கியப் படைப்புகளும் ஒரு புது ரசனையை எட்டியிருக்கின்றன. ஒரு விமர்சகர் இந்த இரண்டின் போக்கையும் கணிக்க வேண்டும். ஆசையின் விமர்சனங்கள் அந்த வகையில் ஒரு துல்லியமான கணிப்பு. 

தன் விமர்சனங்களில் ஆசை மீண்டும் மீண்டும் பேசுவது மொழிக்கும் கற்பனைக்கும் இலக்கியப் படைப்புகளுக்கும் உள்ள உறவு. பொதுவாக இலக்கிய மொழி தர்க்கத்தை மீறும் தன்மை கொண்டது. அந்தத் தன்மையைக்  காட்டுவதாக ஆசை சில படைப்பாளிகளைக் குறிப்பிட்டுப் பேசுகிறார்:

லா.ச.ரா.வின் ‘புத்ர’ நாவலின் மொழிக்குக் கவிதை, வசனம் என்ற பாகுபாடு இல்லை. பாரதியின் மொழி அர்த்தத்தைப் பொதியாகச் சுமக்கவில்லை. அங்கே அர்த்தத்தை சோதித்தால் அழகு மறைந்துவிடும். அவர் கவிதைகளில் மொழியின் தளை இல்லாமல் உணர்ச்சி வெளிப்படுகிறது. தேவதச்சனுடையது சுமையற்ற சொல்முறை. அபியின் சொற்கள் அர்த்தச் சுமையற்றவை. அவை மங்கலான உணர்வு நிலையிலும் அனுபவ நிலையிலும் ஒரு அநிச்சயப் பிரதேசத்தில் இயங்குபவை. பொன்முகலியின் சொற்களின் சுமை கழிவதால் ஆழம் கூடுகிறது.   

இவை எல்லாமே இலக்கிய மொழியின் அதர்க்கம் ஏற்கும்  பல்வேறு பரிமாணங்கள். 

தத்துவத்துக்கும் இலக்கியத்துக்கும், மொழிக்கும் இலக்கியத்துக்கும் உள்ள உறவைப் பற்றி ஆசை விரிவாகப் பேசுகிறார். பல இடங்களில் அவருக்குப் படைப்பூக்கமிக்க உளநோக்குகள் (insights) வாய்த்திருக்கின்றன. அவற்றை மேலும் விரிவுபடுத்திச் சென்றிருந்தால் இன்னும் பல சாத்தியங்களை அவர் அடைந்திருப்பார் என்று சொல்லத் தோன்றுகிறது. அடுத்தடுத்த தொகுப்புகளில் அது நிகழும் என்று நம்புகிறேன். 

இந்த இலக்கிய விமர்சனக் கட்டுரைகளோடு மேலும் இன்றைய படைப்பாளிகள் சிலரைப் பற்றியும் விமர்சனம் செய்து இதையே தற்காலத் தமிழ் இலக்கிய வரலாற்றுக்கு ஒரு புதிய பங்களிப்பாக ஆசை செய்ய இயலும். அப்போது உலக இலக்கியப் போக்குகள், விமர்சனக் கோட்பாடுகள், இசை மரபுகள், சித்திர மரபுகள், தத்துவ மரபுகள், நம் மரபான இலக்கியப் படைப்புகள் எல்லாம் ஆசையின் விமர்சன பார்வைக்கு மேலும் சிறப்பான விரிவையும் வீச்சையும் தரும் என்பதில் ஐயமில்லை.


தங்க. ஜெயராமன்                                                                                   திருவாரூர்               

                                                                                                                       13/11/2011

      


*தங்க. ஜெயராமன்: ஓய்வு பெற்ற ஆங்கிலப் பேராசிரியர், ‘காவிரிக் கரையில் அப்போது…’, ‘காவிரி வெறும் நீரல்ல’ ஆகிய நூல்களின் ஆசிரியர். ‘இந்து தமிழ்’ நாளிதழ், ‘அருஞ்சொல்’ மின்னிதழ் ஆகியவற்றில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார். 


நூல் விவரங்கள்:

இந்தப் பிரபஞ்சமே பேபல் நூலகம்தான்

ஆசை

வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்

தொடர்புக்கு: 99404 46650

email: discoverybookpalace@gmail.com

website: www.discoverybookpalace.com

அமேசானில் 20% கூடுதல் கழிவுடன்பெற: https://tinyurl.com/57auw4cb

அமேசானி கிண்டில் அன்லிமிட்டடில் இலவசமாகப் படிக்க: https://tinyurl.com/4ezmd7hf


Tuesday, June 13, 2023

நிலாவுக்குப் போகும் வழி



அண்ணன்காரன் சொல்லிக்கொண்டிருந்தான்

'நான் பெரியவனாகி

சயன்டிஸ்ட் ஆகி

அயர்ன்மேன் சட்டை கண்டுபுடிப்பேன்

தோர் சுத்தியல் கண்டுபுடிப்பேன்

கேப்டன் அமெரிக்கா கவசம் கண்டுபிடிப்பேன்

ஸ்பைடர்மேன்பூச்சி கண்டுபிடிப்பேன்'


கடற்கரை மணலில் 

குழி தோண்டிக்கொண்டிருந்த

தம்பிக்காரனிடம் கேட்டால்

நாற்பத்தைந்து டிகிரியில் கையை

உயர்த்தி

நிலாவைக் காட்டிச் சொல்கிறான்

'இலா ஆவணும்'


நிலா பதறிப்போய்விட்டதைப்போல்

தெரிந்தது

நானே குத்துமதிப்பாக நிலாவாக இருக்கிறேன்

என்று புலம்ப ஆரம்பித்ததைப் போன்றும் 

தெரிந்தது


சற்றைக்கெல்லாம்

நிலாவுக்குப் பரிதாப முகம்


'அம்மாவும் நிலா

ஆகணும்னா என்ன

செய்யணும்டி'

என்று கேட்டால்

'இந்த மண்ண நோண்டணும்'

என்கிறான்


'எப்போ வரைக்கும்

நோண்டணும்'

என்று கேட்டதற்கு

'நேத்தைக்கு வரைக்கும்'

என்று தலைநிமிராமல்

சொல்லிவிட்டுத்

தொடர்ந்து மண்ணைத் தோண்டுகிறான்

நான்கு திசையிலும்

அண்ணனின்

அயர்ன்மேனையும்

தோரையும்

கேப்டன் அமெரிக்காவையும்

ஸ்பைடர்மேனையும்

காவலுக்கு நிறுத்திவிட்டு


மலைப்பாக இருந்தது எனக்கு

நிலாவுக்குப் போகும் வழியில்

இவ்வளவு மண்ணை யார் கொட்டியது என்று


அதனால்தான்

அம்மாவுக்காக அதையெல்லாம்

அப்புறப்படுத்திக்கொண்டிருக்கிறான்

               -ஆசை

               24-04-23

Monday, June 12, 2023

இடிப்பாரை இல்லாத ஏமரா ஜெயமோகன்!


ஆசை

ஜெயமோகனுக்கு பி.கே. சிவகுமார் நீளமான, ஆதாரங்களுடன் கூடிய ஒரு மறுப்பு (https://tinyurl.com/ycxxf3jw) எழுதியிருக்கிறார். அதனை அவசியம் எல்லோரும் படிக்க வேண்டும். குறிப்பாக,  வி.பு. வாசகர் வட்டம்தான் உலகம், ஜெ.மோதான் ஒரே சூரியன் என்று இருக்கும் வா.வட்டத்தினர் படிக்க வேண்டும். நான் ஜெயமோகனைப் பற்றி அறிவேன், பி.கே.சிவகுமார் பற்றி தெரியாது. ஆயினும் இந்த மறுப்புக் கட்டுரையின் மூலம் ஜெயமோகனைப் பற்றிய நம் கருத்து மேலும் உறுதியாகிறது. 'பொருட்டுப்படுத்தும் ஒரு வரியாக எழுதியிருக்கிறாரா' 'பிறரின் சிறுமையை என் அகங்காரத்தால் கடந்துசெல்கிறேன்' போன்ற வரிகள் பலவும் ஜெயமோகனிடமிருந்து நான் விலகக் காரணம். பிறர் மீது எவ்வளவு கீழ்மையை, இளக்காரத்தை இறக்குகிறார்! பிறர்மை என்பதன் மீது எவ்வளவு வெறுப்பு!.ஒருவர் பொருட்படுத்தும் வரி எழுதியிருக்கத்தான் வேண்டுமா? எல்லாவற்றையும் இலக்கியத்தை வைத்து அளவிட முடியுமா? சமீபத்திய செங்கோல் கட்டுரை ஒன்றில் 'அதிகாரத்திடம் புனிதத்தை ஒப்படைக்கக் கூடாது' என்று ஜெயமோகன் எழுதியிருந்தார். முக்கியமான கருத்து. அதைப் போல இன்னொன்றும் சொல்ல வேண்டும்: எழுத்தாளரிடமும் புனிதத்தை ஒப்படைக்கக் கூடாது. இதை வி.பு.வா.வட்டத்தினரும் உணர வேண்டும். எழுத்தாளர்கள் முக்கியமானவர்கள்; ஆனால் அவர்கள் சன்னிதானங்கள் அல்ல!

ஜெயமோகன் எத்தனையோ பேரைப் பற்றியும் விஷயங்களையும் பற்றி அளந்துவிட்டிருக்கிறார். அவர் பொய் சொல்கிறார் என்று நான் நினைக்கவில்லை. தனக்கேயான ஒரு உண்மையை உருவாக்கிக்கொண்டு அதை உண்மையென்று ஆத்மார்த்தமாக  நம்பிக்கொண்டு அதையே எழுதுகிறார் என்று நினைக்கிறேன். சமீபத்தில் படித்த அறிவியல் கட்டுரையொன்றில் ஒரு விஷயம் படித்தேன். இடது மூளை உருவாக்கும் கதையை வலது மூளை எந்தக் கேள்வியும் இல்லாமல் உண்மையென்று ஏற்றுக்கொள்கிறது என்று அந்தக் கட்டுரை கூறுகிறது. அதுபோல் ஜெயமோகனின் இடது மூளை அபாரமான கற்பனை வளம் கொண்டதாகவும் வலது மூளை அப்பிராணியாகவும் இருக்கலாம். வெண்முரசு நாவல் தொடரை அவர் எழுத ஆரம்பித்தபோது உலகின் நீண்ட நாவலாக இது அமையுமென்றும், ஜெயமோகனை மரியாதை செய்வது அவசியம் என்றும் இந்து தமிழ் அணியினர் முடிவுசெய்தது. நண்பரும் கவிஞருமான ஷங்கர், ஜெயமோகனை அவர் ஊருக்கே சென்று பேட்டி எடுத்து வந்தார். எங்கள் குழுவில் உள்ளவர்கள் பலருடன் ஜெயமோகனுக்கு உரசலும் முரண்களும் உண்டு. ஆனால் நாங்களோ விருப்புவெறுப்புக்கு இடம் கொடுக்காமல் அவரைப் பேட்டி எடுப்பது என்று முடிவு செய்தோம். இந்து தமிழ் நாளிதழில் முக்கால் பக்கத்துக்கு அந்தப் பேட்டி வந்தது. ஓரிரு மாத இடைவெளியில் அதே வெண்முரசு தொடர்பாக அவர் பேட்டியை இந்து தமிழ் தீபாவளி மலரில் வெளியிட்டோம். ஆனால் ஜெயமோகன் என்ன சொல்லிவருகிறார் தெரியுமா? 'வெண்முரசு எவ்வளவு பெரிய சாதனை. இது தொடர்பாக மலையாள பத்திரிகைகளில் அட்டையில் என் படத்தை வெளியிட்டார்கள். தமிழ் பத்திரிகைகள் எதுவுமே கண்டுகொள்ளவில்லை. இந்து தமிழில் வந்த ஒரே ஒரு பேட்டியும் விஷ்ணுபுர நண்பர்கள் முயற்சியால் வெளிவந்தது' என்றரீதியில் தொடர்ந்து பலமுறை சொல்லிவருகிறார். தன் பேட்டியை எடுத்த மலையாளப் பத்திரிகைகளுக்கு விசுவாசத்தையும் எங்களுக்கு துரோகத்தையுமே இதன் மூலம் அவர் காட்டியிருக்கிறார். இரண்டு மாத இடைவெளியில் இரண்டு பேட்டிகள் வெளியிட்ட பத்திரிகையை பற்றியே மறந்துவிட்ட ஒருவருக்குத் தன்னை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று மற்றவர்களைக் குறைசொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது? அந்தப் பேட்டிக்காக எங்களிடம் விஷ்ணுபுரத்தினர் அணுகியது உண்மை என்றால் அந்த நண்பர்கள் வெளிப்படையாக அதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பேட்டி மட்டுமல்லாமல் வெண்முரசின் நிறை குறைகளை அலசி நடுநிலையான விமர்சனம் ஒன்றை வெளியிட வேண்டும் என்று வி.பு.வா.வட்ட நண்பர் ஒருவரை அணுகினேன்.  தொடர்ந்த ஜெயமோகனின் அணுகுமுறை காரணமாக மனம் கசந்து அந்த முயற்சியைக் கைவிட்டேன். இந்த விஷயத்தை ஜெயமோகன் கவனத்துக்கு அந்த நண்பர் கொண்டுசெல்வார் என்று நம்புகிறேன்.

க்ரியா ராமகிருஷ்ணன் இறந்தபோது ஜெயமோகன் எழுதிய  வன்மாஞ்சலியைப் படித்துவிட்டு நண்பர் ஒருவர் என்னைக் கைபேசியில் அழைத்துத் தெரிவித்தார். 'தயவுசெய்து படித்துவிடாதீர்கள்' என்று கேட்டுக்கொண்டு, ஜெயமோகன் கக்கிய வன்மத்தின் சாரத்தை என்னிடம் கூறினார். அவருடன் பக்கத்தில் பணிபுரிந்த பத்து ஆண்டுகள் உட்பட இருபது ஆண்டுகள் நெருங்கிய நட்பில் இருந்த நமக்கே தெரியாத கதையையெல்லாம் எழுதிய ஜெயமோகனுக்கு எவ்வளவு பெரிய கற்பனை இருக்கும் என்று தோன்றியது. க்ரியா ராமகிருஷ்ணன் செய்த சில பணிகள் கடந்த நூறு ஆண்டுகளில் தமிழுக்கு செய்திருக்கும் மிகப் பெரும் பங்களிபபுகளுள் அடங்கும். அவரைப் பற்றி தொடர்ந்து அவதூறு செய்துவருகிறார் ஜெயமோகன். க்ரியா ராமகிருஷ்ணன் உயிரோடு இருந்தபோது அவர் என்னிடம்  ஒரு தகவல் பகிர்ந்துகொண்டார். இடம்மாறுதல் தொடர்பாக ராமகிருஷ்ணனின் நண்பரிடம் சிபாரிசு செய்யும்படி ஜெயமோகன் ஒருநாள் ராமகிருஷ்ணனைத் தொலைபேசியில் அழைத்துக் கேட்டாராம், ராமகிருஷ்ணன் பொதுவாக சிபாரிசு போன்ற விஷயங்கள் செய்ய மாட்டார். அதனால் மறுத்துவிட்டாராம். (இந்த விவகாரத்தில் ஜெயமோகன் தரப்பு குறித்து தெரியாமல் இதை எழுதுவது குறித்து சற்று தயக்கமாகத்தான் இருக்கிறது). அந்த உதவியை ராமகிருஷ்ணன் செய்திருந்தால் அவர் மறைவுக்கு எழுதப்பட்ட மிகச் சிறந்த புகழாஞ்சலி ஜெயமோகனுடையதாகத்தான் இருந்திருக்கும். 


நிற்க. பி.கே. சிவகுமார் - ஜெயமோகன் விவகாரத்தை கவனித்தால் ஜெயமோகனின் பொய்கள் வெகு அப்பட்டமாக வெளிப்படுவது புலனாகிறது. அது மட்டுமல்லாமல் தான் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள் திக்விஜயம் செய்தால் அங்குள்ளவர்கள் ஆரத்தி எடுத்து தங்கள் வேலையையெல்லாம் விட்டுவிட்டுத் தங்களை அங்கே முழு நேரமும் வழிபட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்ற மனநிலையும் தெரிகிறது. அதே நேரத்தில் அங்குள்ளவர்கள் தங்களின் குடும்ப, பொருளாதார, அலுவலக நெருக்கடிகளை வெளிக்காட்டிக்கொள்ளாமலேயே தங்கள் விருப்பத்துக்குரிய எழுத்தாளர்களுக்கு அவர்கள் மனம்கோணாமல் பணிவிடை செய்துவருகிறார்கள் என்பதும் தெரிய வருகிறது. இந்த யதார்த்தம்தான் பி.கே சிவகுமார் எதிர்வினையில் நம் நெஞ்சைத் தொடும் விஷயம். இதற்கு அவர் நிறைய ஆதாரங்களைக் கொடுத்திருக்கிறார். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் இத்தனைக்கும் மத்தியில் ஜெயமோகன் மீதான தன் மதிப்பையும் அவர் தன்னுடைய ஆசிரியர்களுள் ஒருவர் என்பதையும் உரிய மரியாதையுடன் பல இடங்களில் குறிப்பிட்டே தன் எதிர்வினையை சிவகுமார் எழுதுகிறார். அவர் பற்றி நமக்குத் தெரியவில்லை என்றாலும் இந்த எதிர்வினையின் மொழியில் அவர் உயர்கிறார்; தன் எதிர்வினையின் மொழியிலும் அகந்தையிலும் ஜெயமோகன் தாழ்கிறார். இந்த விஷயத்தில் சிவகுமாரைப் பின்பற்றி, நான் மதிக்கும் சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவர் ஜெயமோகன் என்ற என் மரியாதையை நான் இங்கே முதன்மையாகப் பதிவுசெய்ய விரும்புகிறேன். பி.கே. சிவகுமாரின் இந்த வரிகளை சமகால இலக்கிய உலகினர், வி.பு. வா.வட்டத்தினர் அனைவரும் தங்கள் மனதில் கொண்டு தீவிர பரிசீலனை செய்ய வேண்டும்: 

“ஜெயமோகன் இப்போது உட்கார்ந்திருக்கிற பீடத்தில் அவரைப் பொதுவில் விமர்சனம் செய்ய / திருத்த அவருடன் பழகும் மூத்த /  சக எழுத்தாளர்கள், திரைக் கலைஞர்கள், இளைய எழுத்தாளர்கள், நண்பர்கள் என நிறைய பேர் தயங்குகிறார்கள். இந்த நிலை மாறாத வரை இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் போல அவர் எழுதிக் கோண்டிருக்கிறார். இது எங்கே போய் முடியும் எனக் கவலையாக இருக்கிறது.”


தொடர்புடைய பதிவு: ஆசை: ஜெயமோகன், ஏன் இந்த ஒன்றரை டன் வெயிட்? (writerasai.blogspot.com)


Sunday, June 11, 2023

பெண்குஞ்சு


 

ஒன்றாய்க் குளித்துவிட்டு

அம்மணங்குண்டியாக

ஓடி வருகிறார்கள் 

அண்ணனும் தங்கையும்

‘அப்பா’

என்று கூவியபடி


ஓடிவந்த வேகத்தில்

ஆடும்

அண்ணன்காரனின் குஞ்சாமணியை உருவி

என் கைக்கு

முத்தமிட்டுக்கொள்கிறேன்


‘அப்பா என் குஞ்சுக்கும் முத்தா தா’

என்று சிணுங்குகிறாள் தங்கை

அவ்விடத்தை எக்கிக் காட்டி


அங்கே

விண்ணுக்கும் மண்ணுக்கும்

திசைகாட்டும் சிறுகோடு

என் திசையழிக்கத்

திடுக்கிட்டுச் சமைந்தேன்


’குடுப்பா’

என்று அதட்டிவிட்டு

என் கையைப் பிடித்துத் 

தன் குஞ்சின் மேல் வைக்கிறாள்

நல்ல தொடுகை

கெட்ட தொடுகை அண்டாதொரு

கருவறைக்குள் 

முழுதாய்க் குளித்துவிட்டு 

வந்தவள்


ஒட்டுமொத்த பிரபஞ்சமும்

அவ்விடத்தில்  

கொண்டுவந்து சேர்க்கப்போகும்

மர்மமும் புனிதமும் 

அவள் அதட்டலில் 

நடுங்கி உதிர்கின்றன


அனிச்சையாய் உருவிக்

குவிந்த என் கைக்கு

முத்தம் கொடுக்கிறது

என் வாய்


பொம்மையாய்

மாறிச் சிரிக்கிறது

என் பெண்குஞ்சு

                    -ஆசை

                    10-06-23

Thursday, June 8, 2023

ஜெயமோகன், ஏன் இந்த ஒன்றரை டன் வெயிட்?


ஜெயமோகன், தான் கடந்த சில  ஆண்டுகளாக இலக்கிய உலகைச் சார்ந்தவர்களைப் பற்றி கடுமையாக எழுதுவதில்லை; தனது வார்த்தைகளுக்கு ஒன்றரை டன் வெயிட் என்று நண்பர் ஒருவர் சொன்னதுதான் அதற்குக் காரணம் என்பது போன்று ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். ஆனால் அதில் கொஞ்சம்தான் உண்மை இருக்கிறது. தன் வி.பு. அதிகார வட்டத்தை (சாம்ராஜ்ஜியத்தை) விஸ்தரிப்பதற்காக அவர் இப்போது இளைஞர்களை விமர்சிப்பதில்லை. மானாவாரியாக எல்லோருக்கும் முன்னுரை, பின்னட்டை வாசகம் எழுதித் தருகிறார். அவரை நம்பி அந்தப் புத்தகங்களை வாங்கிப் படித்தால் பெரும் ஏமாற்றமே மிச்சம். இருபது ஆண்டுகளுக்கு முன் ஜெயமோகன் இலக்கிய விமர்சனங்களை நம்பிப் படித்தேன். இப்போது அது முடியாது என்ற நிலையை அடைந்துவிட்டார். முன்பு தி.க.சியைக் கிண்டலடித்தவர் இப்போது தானும் திகசி ஆகிவிட்டார். வேண்டியவர்களை வானளாவத் தூக்கி வைப்பது, வேண்டாதவர்கள் எவ்வளவு திறமையானவர்கள் என்றாலும் கீழிறக்கம் செய்வது, அல்லது புறக்கணிப்பது என்று ஜெயமோகன் மிகப் பெரிய இலக்கிய ஊழல்வாதி ஆகிவிட்டார். அதில் நமக்குப் பிரச்சினை ஏதும் இல்லை. இலக்கிய அதிகாரமும் எந்த அதிகாரமும் அற்ற எளிய மனிதர்களை ஒன்றரை டன் வெயிட்டில் அறைவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இப்போது அய்யனாரை அப்படி அறைந்திருக்கிறார். 

சில ஆண்டுகளுக்கு முன்பு என்னை உட்பட நண்பர்களைப் பற்றி ஜெயமோகன் தரக்குறைவாக எழுதினார். பத்திரிகையாளர்கள் சினிமாக்காரர்களிடம் எப்படி வழிவார்கள் என்பதையும் எப்படி காசு வாங்குவார்கள் என்பதையும் தான் பார்த்திருப்பதாக எழுதினார். இதைப் படித்தவர்களுக்கு நாங்கள் அப்படி செய்ததாகத்தானே தோன்றியிருக்கும். இத்தனைக்கும் திரையுலகினரை சந்திக்க விருப்பமற்றவன் நான். என் பத்து ஆண்டு இதழியல் அனுபவத்தில் இயக்குநர் மகேந்திரனை மட்டுமே பேட்டி எடுத்திருக்கிறேன். சகாக்கள் எத்தனையோ முறை அழைத்தும் ஒரு ப்ரீவ்யூக்குகூட நான் சென்றதில்லை. கமல், ரஜினி, இளையராஜா, ரஹ்மான் போன்ற பலரையும் சந்திக்க நண்பர்கள் அழைத்தபோதும் மறுத்தவன் நான். ஆகையால் ஜெயமோகன் அப்படி எழுதியது என்னையும் என்னைப் போன்றவர்களையும் அவமானப்படுத்தியதாகவே உணர்ந்தேன். வலித்தது. 

கதைத் திருட்டுக் குற்றச்சாட்டுக்கு ஒரு இயக்குநர் உள்ளான சமயத்தில் அவருக்கு ஜெயமோகன் வக்காலத்து வாங்கினார். 2.0 படம் ஒரு அறிவியல் படம் என்றும் ஆரா என்பது உண்மையில் இருக்கிறது என்றும் அள்ளிவிட்டார்; அதை வி.பு. வட்டமே ஆமாம் போட்டு ஆதரித்தது. சினிமாக்காரர்களின் அணுக்கத்தால் அதிக ஆதாயம் அடைந்துகொண்டிருப்பவர் ஜெயமோகன்தான். அது அவருடைய திறமை. அத்துடன் அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். எளியோர் மீது வன்மம் கக்கக் கூடாது. அவர்கள் வாழ்க்கையை அது எந்த அளவுக்கு பாதிக்குமென்று உங்களுக்கு தெரியாது ஜெயமோகன். நீங்கள் ஒரு எளிய மனிதர் மீது வன்மம் கக்குவதற்கு முன் அவர் வி.பு. வாசகர் வட்டத்தை சேர்ந்தவராக நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் கரம் பெரியது; அடியும் பெரியது; ஆகவே பெரிய முதுகைக் கொண்டவர்களை இலக்கு வையுங்கள். முடிந்தால் பெரிய மார்பை (56 இன்ச்) கொண்டவர்களை. 

அது மட்டும் அல்லாமல் ஆசை ஒரு இலக்கிய மொண்ணை என்று ஜெயமோகன் எழுதினார். ஒரே ஒரு கட்டுரையில் அவரையோ அவர் புத்தகத்தையோ பாராட்டி நான் எழுதியிருந்தால் அவர் இப்படி எழுதியிருக்க மாட்டார். நான் ஒரு இலக்கிய மொண்ணை என்றால் வி. பு. வட்டத்தில் நூறு மொண்ணைகளைப் பட்டியலிட முடியும். விதிவிலக்குகள் இருக்கலாம். ஜெ.மோ. பெரும்பாலும் தன் வட்டத்தைச் சேர்ந்தவர்களையோ தன் வட்டத்தில் சேர வேண்டும் என்று அவர் விரும்புபவரையோ மட்டுமே தொடர்ந்து ஆசிர்வதித்துக்கொண்டிருப்பார், அவர்கள் அவர் பாஷையில் மொண்ணையாக இருந்தால்கூட. அப்படி ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட ஜெயமோகனுக்குத் தங்களை எழுதிக்கொடுத்துவிடுகிறார்கள் என்பதுதான் உண்மை. மற்றவர்களை கண்டுகொள்ளாமல் விடுவது அல்லது அடித்துப் படுக்க வைப்பது. இவற்றைதான் அவருடைய இலக்கிய ஊழல் என்று குறிப்பிட்டேன். பாராட்டு, கண்டுகொள்ளல்கள் கிடைப்பது அரிதாக இருக்கும் தமிழ் இலக்கிய உலகில் அவையெல்லாம் கிடைக்கும்போது பெற்றவர்கள் தங்களை ஒப்புக்கொடுத்துவிடுவதைக் குறையாகக் கூற முடியாது. கொடுப்பவர் மீதுதான் நம் விமர்சனம்.

பௌத்த அய்யனாரைச் சில ஆண்டுகளாக அறிவேன். பிழைக்கத் தெரியாமல் இலக்கியத்துக்காகப் பணத்தை இழந்தவர். தான் பணியாற்றும் மருத்துவத் துறை வழியாக இலக்கிய நண்பர்களுக்கும் இதழியலாளர்களுக்கும் அவர் தொடர்ந்து உதவி வருவதை நான் கண்டிருக்கிறேன். அது மட்டுமல்லாமல் அவர் முன்னெடுத்த மருத்துவ முகாம்கள் மூலம் ஆயிரக் கணக்கான ஏழை எளிய மக்கள் பயன் அடைந்திருப்பதை நான் அறிவேன். ஒருவர் இலக்கியத்தில் சாதிப்பது ஒரு அளவுகோல் என்றால் இன்னொருவர் பிறருக்கு செய்யும் உதவிகளுமே அவரை அளவிடுவதற்கான அளவுகோல். ஜெயமோகன் கண்ணுக்கு அய்யனார் ஒரு விதத்தில் தெரிந்திருக்கலாம்; ஆனால் எனக்குத் தெரிந்த அய்யனார் இப்படித்தான். அய்யனார் ஜெயமோகனை எடுத்த நேர்காணலை அய்யனாரின் பெயர் குறிப்பிடாமல் வெளியிட்டதற்காக வருத்தத்துடன் அய்யனார் எழுதியதால் இப்போது அவர் மீது வன்மம் கக்கப்பட்டிருக்கிறது. ஜெயமோகன் இப்படித்தான் தக்க தருணம் பார்த்துக் கக்கிவிடுவார். அதற்கு ஏற்றார்போல் கண்டமனூர் கணேசன், வில்லியனூர் வீராச்சாமிக்கள் கடிதம் எழுதிவிடுவார்கள். 

ஆரம்ப காலத்தில் இலக்கியம் சார்ந்து சில விஷயங்களை நான் ஜெயமோகனிடம் பெற்றிருக்கிறேன். அப்புறம் விலகிவிட்டேன். இந்த நன்றியுணர்வையும் குறிப்பிட்டே இந்தக் கண்டனக் கட்டுரையை எழுதுகிறேன்.  கூடிய சீக்கிரம் வடலூர் வேணு ஒரு கடிதம் எழுதி, அதற்கான பதிலில் ஜெயமோகன் என் மீது வன்மம் கக்கினாலும் பரவாயில்லை.