Tuesday, June 27, 2023

சூரியன் எதைச் சுற்றுகிறது?

ஓவியம்: வான் கா


ஆசை

சமகாலத்தின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான பெலா டார் எடுத்த அற்புதமான திரைப்படம் ‘வெர்க்மைஸ்டர் ஹார்மனீஸ்’. இதன் தொடக்கக் காட்சி ஒரு மது விடுதியில் இடம்பெற்றிருக்கிறது.

 படத்தின் இளம் நாயகனான யானோஸ் வலுஸ்கா தனது மூன்று நண்பர்களை வைத்து சூரியன், பூமி, நிலவு நடனத்தை நிகழ்த்துவார். சூரியன் போன்று ஒருவர் நடுவில் நிற்க இன்னொருவர் பூமியின் வேடத்தில் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுவார். பூமியை நிலவு பாத்திரத்தில் ஒருவர் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு பூமியைச் சுற்றுவார். ஆக, நிலவு மனிதர் ஒரே நேரத்தில் பூமியையும் சூரியனையும் சுற்றுவார். இந்த அறிவியல் விளக்கம் ஒரு அற்புதமான நடனம்போல் படத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அருகிலிருந்த என் நண்பர் கேட்டார், “சூரியன் பாத்திரத்தை ஏற்றவர் நபர் அப்படியே இருக்கிறாரே. உண்மையில் சூரியன் அசையாமல் இருக்கிறதா, அல்லது சுற்றுகிறதா?”

கொஞ்சம் தலைசுற்றவைக்கும் கேள்விதான்! நாம் எல்லோரும் தோற்றத்தை நம்பி வாழ்பவர்கள்; எதையாவது பற்றிப் புகார் கூறினால், “நீ கண்ணால் பார்த்தியா?” என்று கேள்வி கேட்பவர்கள். ஆனால், கண்ணால் பார்ப்பதுவும் முழு உண்மையாக இருக்காது என்பதற்கு பூமி, சூரியனின் சுழற்சிகளையும்கூட நாம் சான்றாக எடுத்துக்கொள்ளலாம்.

வெகு காலம் வரை சூரியன்தான் பூமியைச் சுற்றிவருகிறது என்று மனிதர்கள் நம்பினார்கள். போலந்தைச் சேர்ந்த கோப்பர்நிக்கஸ் என்ற அறிவியலாளர்தான் ‘பூமியைச் சூரியன் சுற்றவில்லை. பூமிதான் சூரியனைச் சுற்றிவருகிறது’ என்ற கோட்பாட்டுக்கு 16-ம் நூற்றாண்டில் அடியெடுத்துக்கொடுத்தார். பேருந்தில் ஜன்னலோரம் அமர்ந்திருக்கும் குழந்தை சாலையோரம் உள்ள மரங்கள்தான் ஓடுகின்றன என்றும், பேருந்து அப்படியே இருக்கிறது என்றும் நம்புவதைப் போல அதுவரை மனிதர்கள் ‘சூரியன்தான் பூமியைச் சுற்றிவருகிறது’ என்று நம்பிக்கொண்டிருந்தார்கள்.

‘சூரியனைத்தான் பூமி சுற்றுகிறது’ என்ற கருத்து கடந்த நான்கு நூற்றாண்டுகளாக நன்றாக நிறுவப்பட்டுவிட்டது. ஆனால், ‘சூரியனும் சுற்றுகிறதா, அப்படியென்றால் எதைச் சுற்றுகிறது?’ என்ற விஷயம் மட்டும் அறிவியலாளர்களைத் தாண்டிப் பொதுமக்களுக்கு இன்னமும் அறிமுகமாகாத ரகசியமாகவே உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்தக் கேள்வியே பெரும்பாலானோருக்கும் எழுவதில்லை. ‘சூரியன் எதைச் சுற்றினால் என்ன, நமக்குக் காலையில் பொழுது விடிந்தால் போதும்’ என்ற சராசரியான மனநிலைதான் இந்த அறியாமைக்குக் காரணம்.

சூரியன் மட்டுமல்ல இந்தப் பிரபஞ்சத்தில் அணுவின் உட்கருவில் தொடங்கி விண்மீன் மண்டலங்கள் (Galaxies) வரை சுற்றாத பொருளென்று ஏதும் இல்லை. அசைவு என்பது அனைத்துக்கும் அடிப்படை.

‘சரி, சூரிய குடும்பத்தில் உள்ள எல்லா கோள்களும் சூரியனைச் சுற்றுகின்றன; அதைப் போல சூரியன் எதைச் சுற்றுகிறது?’ என்று கேட்க வருகிறீர்களா? முதலில் சூரிய குடும்பத்தில் உள்ள எல்லாக் கோள்களும் சூரியனைச் சுற்றுகின்றன என்பது உண்மையல்ல. நம் குடும்பத்தில் உள்ள எல்லாக் கோள்களும் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றினால் வியாழன் மட்டும் சூரியனுக்குச் சற்று அருகில் உள்ள ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு சுற்றுகிறது. மிகப் பெரிய கோளாக இருப்பதால் இப்படி ஒரு விசித்திர அமைப்பு.

இப்போது சூரியனுக்கு வருவோம். நமது சூரியன் ‘பால்வீதி’ எனும் விண்மீன் மண்டலத்தில் ஒரு அங்கம். இந்தப் பால்வீதி சுமார் 2 லட்சம் ஒளியாண்டுகள் விட்டம் கொண்டது. (ஒளி ஒரு ஆண்டுக்குப் பயணிக்கக்கூடிய தொலைவுதான் ஒரு ஒளியாண்டு. அதாவது 9,50,000,00,00,000 கி.மீ. இத்துடன் 2 லட்சத்தைப் பெருக்கினால் பால்வீதியின் விட்டம்). அதில் சற்றே வெளிப்புறத்தில் நமது சூரியன் அமைந்திருக்கிறது. பால்வீதியின் மையத்தில் இருக்கும் மிகப் பெரிய கருந்துளையைத்தான் சூரியன் சுற்றிவருகிறது. ஒரு முழுச் சுற்றுக்கு ஆகும் காலம் சுமார் 22-லிருந்து 25 கோடி ஆண்டுகள்.

அப்படியென்றால் சூரியன் இதுவரை எத்தனை முறை பால்வீதியின் மையத்தைச் சுற்றியிருக்கும்? ஒரு கணக்குப் போட்டுப் பாருங்களேன். பூமியின் வயது சுமார் 450 கோடி ஆண்டுகள். அப்படியென்றால் சூரியனை பூமி 450 கோடி முறை சுற்றிவந்திருக்கிறது என்று அர்த்தம். அதேபோல் சூரியனுக்குக் கணக்கிட்டுப் பார்ப்போமா? சூரியனின் வயது 460 கோடி ஆண்டுகள். பால்வீதியின் மையத்தை ஒருமுறை சுற்றிவர சூரியன் எடுத்துக்கொள்ளும் காலம் சுமார் 22-25 கோடி ஆண்டுகள். ஆக, தன் ஆயுளில் இதுவரை 19 முறைதான் சூரியன் பால்வீதியைச் சுற்றிவந்திருக்கிறது. சூரியனோடு சேர்ந்து பூமியும் கிட்டத்தட்ட 19 முறை பால்வீதியைச் சுற்றிவந்திருக்கிறது என்றும் சொல்லலாம்.

சூரியன் எவ்வளவு வேகத்தில் தன் சூறாவளி ‘சுற்று’லாவை மேற்கொண்டிருக்கிறது என்பது தெரிந்தால் மலைத்துப்போவீர்கள். மணிக்கு 8,28,000 கி.மீ. வேகம்! இந்த வேகத்தில் பூமியின் நிலநடுக்கோடு வழியாக ஒரு வாகனத்தில் (இந்த வேகத்தில் செல்லும் வாகனம் ஏதும் பூமியில் இல்லை என்றாலும்) நீங்கள் புறப்பட்டால் 2 நிமிடங்கள் 54 நொடிகளில் பூமியை ஒரு முறை சுற்றிவிட்டுப் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்வீர்கள்.

‘சூரியன் சுற்றுகிறது என்பதை ஒப்புக்கொள்கிறோம்; பால்வீதியும் சுற்றுகிறதா?’ என்று நீங்கள் கேட்பது என் காதில் விழாமல் இல்லை. ஆம், சுற்றுகிறதுதான்.

பால்வீதி மண்டலமும் அதற்கு அருகில் உள்ள ஆண்ட்ரோமிடா விண்மீன் மண்டலமும் தங்களுக்கு இடையே உள்ள ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு சுற்றுகின்றன. இடையே உள்ள புள்ளி என்றால் கருந்துளையையோ இன்னொரு விண்மீன் மண்டலத்தையோ அல்ல. இடையில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தைதான். குழப்புகிறதா? இரண்டு சிறுமிகள் ஒருவரையொருவர் கையைக் கோத்துக்கொண்டு தட்டாமாலை சுற்றுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அதைப் போலத்தான். என்ன, இந்த மண்டலங்களுக்குக் கைகள் கிடையாது. இரண்டும் ஏறக்குறைய சம அளவிலான நிறை கொண்டவை என்பதால், ஒன்றுக்கொன்று சம அளவு ஈர்ப்புவிசையைச் செலுத்துவதால் அவை இரண்டுக்கும் இடையிலான ஒரு புள்ளியை மையம் கொண்டு சுற்றுகின்றன. இப்படிச் சுற்றிக்கொண்டே சுமார் 300 அல்லது 400 கோடி ஆண்டுகளில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கலக்கும். பயப்பட வேண்டாம். விண்மீன் மண்டலங்களில் பொருட்களைவிட இடைவெளிதான் மிக அதிகம் என்பதால் நமது சூரியக் குடும்பம் இந்த மோதலில் தப்பிப் பிழைக்கவே பெரும் வாய்ப்பு இருக்கிறது.

பால்வீதியும் ஆண்ட்ரோமிடா மண்டலமும் அமைந்திருக்கக்கூடிய பிரபஞ்சப் பகுதிக்கு ‘அருகமை குழு’ (Local group) என்று பெயர். அது ‘விர்கோ பெரும்கொத்து’ (Virgo Supercluster) எனும் பிரம்மாண்டத்தைச் சுற்றிவருகிறது. ‘விர்கோ பெரும்கொத்து’ அதனை விட பிரம்மாண்டமான இன்னொன்றைச் சுற்றிவரக்கூடும். இப்படிப் பெரிதாக்கிக்கொண்டே போனால் இறுதியில் பிரபஞ்சம்தான்.

அப்படியென்றால் பிரபஞ்சம் எதைச் சுற்றுகிறது என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? கேட்டால் தப்பில்லை. இப்படி அசாதாரண விஷயங்களைப் பற்றிய கேள்விகள்தான் நமது  அறிவை விரிவாக்கிக்கொண்டே இருக்கின்றன. உங்கள் கேள்விக்கு பதில் இப்போது. சுற்றுவது என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்களுக்கிடையிலான, ஒன்றையொன்று சார்ந்த செயல். பிரபஞ்சத்தில் எண்ணற்ற கோள்களும் விண்மீன்களும் விண்மீன் மண்டலங்களும் பெருங்கொத்துகள் இருக்கின்றன. அதனால் சிறியது பெரியதைச் சுற்றிவருகிறது. ஆனால், பிரபஞ்சம் என்பது நமக்குத் தெரிந்தவரை ஒன்றுதானே இருக்கிறது. பிரபஞ்சத்துக்கு வெளியில் எதுவும் இல்லை என்பதால் பிரபஞ்சம் வேறு எதையும் சுற்றவில்லை என்று கூறலாம். சுற்றவில்லையே தவிர, பிரபஞ்சம் அசையாமல் அப்படியே இருக்கவுமில்லை. ஒரு நொடிக்கு 68 கி.மீ. வேகத்தில் இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டிருக்கிறது. ஆக, பாரதியாரைப் போல் சொல்ல வேண்டுமென்றால் ‘அசையாத பொருளில்லை இந்த இந்த அவனியிலே’!

No comments:

Post a Comment