அண்ணன்காரன்
வாட்ஸப் மீம்களைத்
தம்பிக்குப் படித்துக் காட்டிவிட்டு
அவன் முகம் பார்க்கிறான்
தம்பி அண்ணன் முகம் பார்க்கிறான்
மறுபடியும் மீம்களைப் படித்துக் காட்டுகிறான்
தம்பியோ கல்மாதிரி
வெறிக்கிறான்
தம்பியை எப்படியோ
சிரிக்க வைக்க வேண்டும்
என்ற முயற்சியில்
இறங்குகிறான்
முழுவெறியில்
இன்னும் இன்னும்
குழந்தைக்கு
எளிதாய்ப் புரியும்படியாய்
மீம்கள் படித்துக் காட்டுகிறான்
அண்ணன்
தம்பியோ கதை கேட்பது போல்
உம் கொட்டுகிறான்
'பாரும்மா
எவ்வளவு ஜோக்கு
படிச்சாலும் சிரிக்க மாட்டேங்கிறான்
சரியான முட்டாளைப்
பெத்திருக்கியே
இவனைப் பேசாம
வித்துரும்மா'
என்று கடும் விரக்தியில்
கைபேசியை மெத்தையில்
தூக்கிப் போடுகிறான்
அம்மா
எடுக்கிறாள் அதை
குழந்தையை ஒரு கையால்
அணைத்தபடி
மீம்களை மனதுக்குள்
படித்துவிட்டு
வெடித்துச்
சிரிக்கிறாள்
குழந்தையோ
குலுங்கிச் சிரிக்கிறான்
அண்ணனோ
கடுப்பில் முறைக்கிறான்
- ஆசை
No comments:
Post a Comment