Wednesday, June 14, 2023

மாம்பழ நிறப் புடவைக்குக் கறுப்பில் கரைக்கட்டு நெய்யும் கலை



தங்க. ஜெயராமன்

(ஆசையின் ‘இந்தப் பிரபஞ்சமே பேபல் நூலகம்தான்’ கட்டுரைத் தொகுப்பில் பேராசிரியர் தங்க. ஜெயராமன் எழுதிய மதிப்புரை)

தற்காலத் தமிழ்ச் சமூகத்தின் இலக்கிய ரசனை என்ன? அதன் இலக்கிய விமர்சனங்களில் நாம் காண்பது விமர்சனக் கோட்பாடுகளின் தேக்கமா, வளர்ச்சியா? உலக இலக்கிய வாசிப்பின் தாக்கம் நம் சமூகத்தின் இலக்கியப் படைப்புகளில் துலக்கமாகத் தெரிவதுபோல் அதன் ரசனையிலும் விமர்சனக் கோட்பாடுகளிலும் தென்படுகிறதா? தன் இலக்கிய மரபின் தொன்மையிலேயே  திளைத்துக் கிடக்கும்  சமூகத்துக்குத் தன்னைப் பற்றிய சுய விமர்சனமாக இப்படிக் கேட்டுக்கொள்ளும் முதிர்ச்சித் தருணங்கள் அனுபவமாவது உண்டா? 

இலக்கியப் படைப்புகள் மீதான மதிப்பீடுகள் என்பதோடு ஆசையின் விமர்சனங்களை இத்தகைய கேள்விகளுக்கான விடைகளாகவும் நாம் பார்க்க இயலும். சில நேரங்களில் படைப்புகளுக்கான விமர்சனம், தானே நல்ல படைப்பிலக்கியமாகப் பரிணமிக்கும். இலக்கிய மாணவர்கள் படைப்புகளைப் போல அவற்றின் விமர்சனங்களையும் அதிகம் நேசிக்கும் வழக்கத்துக்குக் காரணம் இதுதானே! இது விமர்சனக் கட்டுரையா, இதுவே இலக்கியமா என்று நாம் வியக்கும் ஆக்கங்களும் ஆசையின் விமர்சனங்களில் உண்டு.     

ஒரு நாவல், தன் புனைவுக் கோலத்தின் சாத்தியமாகக் காட்டும் முழு வீச்சையும் வசப்படுத்த வேண்டும். புனைவுப் புலத்தில் புதிய சாத்தியங்களையும் காட்ட வேண்டும். இவற்றைச் சாதித்துக்காட்டியது பா. வெங்கடேசனின் ‘பாகீரதியின் மதியம்’ என்கிறார் ஆசை. புனைவுக்கு இப்படி ஒரு உரைகல்லைக் காட்டி, ஒரு நாவலையும் அதில் உரைத்துத் தரம் காட்டுகிறது ஆசையின் விமர்சனம். நாவலை எழுதும் நாவலாசிரியர் யதார்த்தத்தில் இருக்கும் மனிதர். அந்த நாவலைக்  கதையாகச் சொல்லும்  கதைசொல்லியோ அந்தப் புனைவு சுட்டும் ஒரு படைப்பு. அந்தக் கதைசொல்லியே ஒரு கதாபாத்திரத்தின் கற்பனை. இப்படி சுவாரசியமான புனைவு உத்திகளைக் கையாள்வதான நாவல் பா. வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’. புனைவுப் புலம் பற்றிய மேலை இலக்கிய விவாதங்களில்  புனைவு உத்திகளை நுணுக்கமாகப் பேசுகிறார்கள். நம் வாசிப்பு ஆர்வத்தின் வேகத்தில் இப்படியான உத்திகளின் இயக்கத்தை நாவலில் கவனிக்கத் தவறுவோம். கதைக்குள் இயங்கும் கதைகளையும், ஒரு தளத்தின் ஊடாகத் தெரியும் இன்னொரு அர்த்தத் தளத்தையும் நமக்குக் கவனப்படுத்தும் ஆசை பாத்திரங்கள், வர்ணனைகள், சித்தாந்தப் பின்புலங்கள் போன்ற வழக்கமான விமர்சனக் கூறுகளை ஒதுக்கி ரசனையை மற்றொரு தளத்துக்குக் கொண்டுசெல்கிறார்.   

‘பாகீரதியின் மதியம்’ நாவலின் கட்டமைப்பை ‘மிதக்கும் வண்ணம்’ என்ற கலைநுட்பம் தீர்மானிப்பதாகக் காண்கிறார் விமர்சகர். வண்ணங்களின் கலவையில் விளைவது ஓவியம், சொற்களின் கோர்வையில் பிறப்பது புனைவு - இரண்டுக்கும் பொதுவான கட்டமைப்பு முறையை விமர்சகர் காட்டுகிறார். கவி ஒருவர் சொற்களில் விவரிப்பதைக் கல்லில் சிற்பமாகவும், கோடுகளில் சித்திரமாகவும் நம் கண்கள் காணும் காட்சியாக மாற்றுவது போன்றதல்ல இது. ஒரு கலைப் படைப்பு எப்படி சோடித்துக் கட்டப்படுகிறது என்ற சிருஷ்டி சூட்சுமம். ததும்பும் குளங்களின் கரை உடைவதுபோல் கலை வடிவங்களுக்கு இடையேயான எல்லைகள் தீவிர ரசனையின் உச்சத்தில் உடைந்து ஒரே அனுபவ சமுத்திரமாகிவிடும்.   

மொழியின் எல்லையிலிருந்து தன் பயணத்தைத் தொடங்கி மொழியை விரிவாக்குகிறார் மெளனி என்பது ஆசையின் மதிப்பீடு. தர்க்க ஒழுங்குக்குள் ஒடுங்கிவிட்ட மொழிக்கு என்றைக்கும் அகப்படாத உணர்வு, காலமும் வெளியும் அதனதன் அடையாளம் அழிந்து கூடிக்கொள்ளும் மாயத் தருணம் - இவ்விடங்களில் வழக்கமான மொழியின் போதாமையைச் சமாளிக்க வேண்டும். இப்படிச் சொல்லும் விமர்சகர் இங்கேதான்  மெளனியின்  மொழி மீறல்கள் நிகழ்வதாகக் கூறுகிறார். 

கவிகள் மொழியை பலவந்தப்படுத்தியும், தேவைப்பட்டால் அதன் அமைப்பைக் குலைத்தும் தங்கள் அர்த்தங்களை உருவாக்கிக்கொள்கிறார்கள் என்று ஒரு கட்டுரையில் டி.எஸ். எலியட் சொல்கிறார். மொழியை இலக்கியப் படைப்பின் முதன்மையான கூறாக்கி விவாதிக்கும் ஆசை தமிழ் இலக்கிய விமர்சனத்துக்கு அதன் மூலம் வளம் சேர்க்கிறார். ஆசையின் விமர்சனங்கள் ஆய்வுக் குறிப்புகளல்ல, ஒரு தேர்ந்த ரசிகரின் ஆழமான அனுபவம். இலக்கியப் படைப்பின் கூறுகளாகவும்  தன்மைகளாகவும் பொதுக் கருத்து எவற்றை வைத்துக்கொண்டிருக்கிறதோ அவற்றிலிருந்தெல்லாம் வெகுவாக விலகிச் செல்லும் பாதை இது.   

மெளனியின் கதைகளை இவர் ‘பாழின் வசீகரம்’ என்று சொல்வதை நாம் இங்கே கவனிக்க வேண்டும். தானே ஒரு கவிஞராக இருக்கும் ஆசை இன்னொரு படைப்பாளி பற்றி எழுதும் விமர்சனம் வழக்கமான விமர்சன பாணியிலோ மொழியிலோ இருக்க இயலுமா? எது இலக்கியம் என்பதற்கான பொது லட்சணப் பட்டியல் ஒன்றை வைத்துக்கொண்டு அதில் உள்ளவை ஒருவரின் படைப்பில் இருக்கிறதா என்று ஆராய்ந்து நமக்குச் சொல்வது அவரே கவியாக இருக்கும் ஆசை போன்ற விமர்சகர் செய்வதல்ல. சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் இப்படிக் கவிஞர்களே விமர்சகர்களாக இரட்டிக்கும் மரபு பற்றி  விவாதங்கள் நடந்திருக்கின்றன. கவித்துவமும் திறனாய்வுத் திறனும் ஒருவரிடமே கூடும்போது அதன் விளைவு என்ன என்பதை ஆரய்ந்திருக்கிறார்கள்.  எழுத்துக்கு இலக்கியத் தகுதியைத் தருவது எது? என்னென்ன தன்மைகள் இருந்தால் அதை இலக்கியம் என்று சொல்கிறோம்? இந்தக் கேள்விகளுக்கு தானே கவியாகவும் விமர்சகராகவும் இருக்கும் ஒருவரும் விமர்சனத்தைத் திறன் மேம்பாடாகப் பயின்ற இன்னொருவரும் ஒரே விடையைத் தருவார்களா? ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,/ வள்ளுவர்போல், இளங்கோவைப்போல்/ பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை’ என்ற பாரதியின் கூற்றும் விமர்சனமே. ஆனால், ஒரு விமர்சகரின் வாக்குமூலத்திருந்து இது வேறானது. ஒரு கவியாக பாரதிக்கு சிருஷ்டித் தொழிலின் வலி தெரியும் என்பதற்காக அல்ல. கவியின் இலக்கிய ரசனை வேறொரு வகையைச் சேர்ந்தது. நூறு விமர்சகர்கள் ‘கம்பன் மிகச் சிறந்த கவி’ என்று சொல்லியிருந்தாலும் தமிழ்ச் சமூகம் அவர்கள் சொல்லுக்கு மசிந்திருக்காது. ரசனையில் பிறக்கும் பாரதியின் சொற்கள் நம்மை மிக எளிதாகத் தொற்றிக்கொள்ளும். தான் உன்னதம் என்று கண்ட  படைப்புகளின் தன்மையை நாமும் உணரவும் அனுபவிக்கவும்  உதவுவதுதான் ஆசையின் விமர்சனம். அது உணர்வுத் தளத்திலும் அனுபவத் தளத்திலும் இயங்கித் தொற்றிக்கொள்ளும் ரசனை. 

இலக்கியமாகத் தான் ரசித்த ஒரு படைப்பில் தன்னை ரசிக்கத் தூண்டியவை எவை என்று அடையாளம் கண்டு அவற்றுக்குப் பெயரிடுகிறார் ஆசை. ரசனையிலிருந்துதான் கோட்பாடு பிறக்கிறது. நம் விமர்சன மரபு ஏற்கெனவே அடையாளம் கண்டவற்றைக் கைக்கொள்வதோடு அவர் திருப்தியடைவதில்லை. ‘எனக்கு இது அற்புதமாகத் தோன்றுகிறது’ என்று ஒரு படைப்பை வியந்து அதற்குமேல் எதுவும் சொல்லாமலும் சென்றுவிடுவதில்லை. ரசனையை மட்டுமே, தான் ரசித்தவற்றை மட்டுமே, அளவுகோலாக வைத்துக்கொள்ளும் சம்பலான முரண்டு என்றும் நாம் அவரை எளிமைப்படுத்திப் புரிந்துகொள்ள முடியாது. ஒரு கவி விமர்சகராக இருப்பதன் வலுவும் வலிவருத்தமும் அவருக்கு ஒருசேர வாய்த்துள்ளன. 

‘பாகீரதியின் மதியம்’ என்ற  நாவல்  அரசியலையும் சமூகப் பிரச்சினைகளையும் ரசிக்கும்படியான துடுக்கோடு பேசுகிறது. இருந்தாலும், நாவல் என்ற தன் இலக்கியத் தன்மையை இந்தப் படைப்பு இழப்பதில்லை. சமூக, அரசியல் பிரச்சினைகள் கதைசொல்லலுக்குள் ‘இழைந்து, இயைந்து பரவியிருப்பதுதான் மற்ற அரசியல் நாவல்களிலிருந்து இது விலகி இருப்பதைக் காட்டுகிறது’ என்பது ஆசையின் விமர்சனம். பா. வெங்கடேசனின் ’தாண்டவராயன் கதை’ நாவலில் உள்ள சம்ஸ்கிருதமையப் பார்வை, தேசியவாதப் பார்வை போன்றவற்றிலிருந்து நாவல் அதன் உள்ளேயே இருக்கும் கலகத் தன்மையால் மீண்டுகொள்கிறது என்கிறார் ஆசை. சுவை கூட்டும் உப்பு பதார்த்தத்தில் கரைந்திருப்பதுபோல் கலைத்தன்மை அவற்றைத் தன்மயமாக்கிக்கொள்கிறது. ஆசையின் விமர்சனக் கட்டுரைகள் பலவற்றிலும் இந்தக் கலைப் பண்பு ஒரு பொதுக் கோட்பாடாக இழைந்திருப்பதைக் காணமுடியும். நகுலனின் கவிதைகளில் அவற்றின் தத்துவச் சரம் உறுத்துவதில்லை என்றும் கவிதையில் தத்துவம் துருத்திக்கொண்டு தெரியக் கூடாது என்றும் இன்னொரு இடத்தில் சொல்கிறார். 

இலக்கியப் படைப்புகளுக்கும் அவற்றின்  தத்துவ உள்ளீட்டுக்கும் இடையே உள்ள உறவு நூறு ஆண்டுகளாக விவாதிக்கப்படும் பிரச்சினை. உயர்வான தத்துவத்தைத் தன் பொருளாகக் கொண்ட படைப்பும் அதன் காரணமாகவே உயர்வானதாகிவிடுமா? வெறும் உரைநடையில் தெளிவான கருத்துகளாகச்  சொல்லக் கூடியவற்றைத்தான் கதைகளில் சம்பவங்களாகவும் கவிதைகளில் அணிவகைகளாகவும் பொதிந்து வைக்கிறார்களா? வழக்கமான இந்தக் கேள்விகளை ஆசை வழக்கமான முறையில் அணுகவில்லை. பிரச்சினையின் பரிமாணங்கள் எல்லாவற்றையுமே பார்க்க முயல்கிறார். 

லா.ச. ராமாமிர்தத்தின் படைப்புகளைப் பற்றி, அவை அன்றாட வாழ்க்கையை தத்துவத்துக்கான சாக்காக வைத்துக்கொள்வதில்லை, அன்றாடம் தத்துவமாகவும் கவிதையாகவும் மாற்றம் பெறுகிறது என்று சொல்கிறார் ஆசை. கவித்துவமும் தத்துவமும் ஒன்றையொன்று பின்னிக்கொண்டுள்ளதாகச் சொல்கிறார். முதலாவது உணர்வு சார்ந்தது, அடுத்தது சிந்தனை சார்ந்தது.  வழக்கமாக இவை ஒன்றோடு ஒன்று பிணங்கும், முதலாவது இருக்கும் இடத்தில் அடுத்ததற்கு வேலை இல்லை என்பதுதான் பொது நம்பிக்கை. லா.ச.ரா. படைப்புகளில் இவை பின்னிக்கிடக்கும் என்றால் அது ரசனைப் புரட்சி. இதனையொத்த ஒன்றைப் பற்றி டி.எஸ். எலியட் பேசியிருக்கிறார். 17-ம் நூற்றாண்டின் ஆங்கிலக் கவிகள் சிலரிடம் சிந்தனையும் உணர்வும் ஒன்றியிருந்ததை அல்லது உணர்வை அம்பு நுனியாகக் கொண்ட அவர்களின் சிந்தனையை அக்காலத்தில் இருந்து பின்னர் மறைந்துபோய், மீட்கப்படாத ரசனையாக அவர் சிலாகித்துச் சொல்வார் (காண்க: டி.எஸ். எலியட்டின் ‘The Metaphysical Poets’ கட்டுரை).  

இலக்கிய ரசனையில் நம் உணர்ச்சிகளின் பங்கு அந்தந்தக் காலங்களில் ஏற்றஇறக்கம் காண்பது உண்டு. தி.ஜா. தற்காலத்தில் எப்படி வாசகர்களால் வரவேற்கப்படுகிறார் என்பதை கணிக்கும் ஆசை ‘உணர்ச்சிகளுக்கு இடம்கொடாத இன்றைய நிதானமான வாசகர்கள்’ என்று வாசர்களை விவரிக்கிறார். ரசனை அப்படியே உறைந்து இறுகிவிடுவதல்ல. வாசகர்களின் ரசனை படைப்புகளையும் படைப்புகளின் ரசனை வாசகர்களையும் தீர்மானிக்கின்றன. இந்த ஊடாடலுக்கு நல்ல விமர்சனம் ஒரு கருவி. விமர்சனங்களும் பொது ரசனையைத் தீர்மானிக்கின்றன. ஆசையின் விமர்சனங்களுக்கு இந்தப் பிரக்ஞை அடித்தளம். அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் நகுலனின் தத்துவார்த்தக் கவிதைகள் அவரது கவித்துவத்தின் பன்முகத்தை மறைத்துவிடுகின்றன என்று சொல்கிறார் ஆசை. தத்துவப் பொருளை  ஏற்று வரும் படைப்பு வாசகர்களின் இலக்கிய ரசனையை எப்படியெல்லாம் திரித்துவிடுகிறது! படிக்கும் காலத்தில் நாங்கள் கவிதைகளிலிருந்து மேற்கோள் காட்டிப் பேசுவதை எங்கள் பேராசிரியர்கள் கண்டிப்பார்கள். எங்கள் நினைவுத்திறனைப் பீற்றிக்கொள்கிறோம் என்பதற்காக அல்ல, கவிதைகளைக் கவிதைகளாகவே பார்க்கும் ரசனையை வளர்த்துக்கொள்ளவில்லை என்பதற்காக. ஞானக்கூத்தனின் கவிதைகளில், அவை மேலைத் தத்துவம், கீழைத் தத்துவம் இரண்டுமே முயங்கிப் பேசினாலும்,  தத்துவம் கனிந்து கனிந்து கவிதையாகிறது. இப்படிச் சொல்லிச் செல்லும் ஆசை இன்றைய விமர்சனக் கோட்பாடு ஒன்றையும் தொட்டுச்செல்கிறார். கவிதையில் தற்போது கதைசொல்லல் என்பது விலக்கிவைக்கப்பட்ட ஒன்றாக இருப்பதுதான் அது. இந்த விமர்சனத் தெளிவிலிருந்து நம் இலக்கிய போதனை எவ்வளவு விலகிச் செல்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். ‘கவிஞர் ஒரு நாள் ஒரு மலையின் மீது ஏறிக்கொண்டிருந்தார். அப்போது அவர்…’ - இப்படி ஒர் அநாமதேய இடத்தையும் நேரத்தையும் கதை சொல்லும் பாணியில் குறிப்பிடாமல் கவிதைகளை வகுப்பில் சொல்லித்தருவதில்லையல்லவா!. இப்போது கதை இல்லாமலேயே கவிதையை ருசிக்கக் கற்ற சமூகத்தின் ரசனை தேக்க நிலையிலிருந்து விடுபட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த இடத்தில் ஆசை இன்றைய ரசனை பற்றிக் கூறுவதை நாம் கவனிக்க வேண்டும்.  பொன்முகலியின் கவிதைகளை விமர்சிக்கும்போது இதம், கவித்துவம் போன்ற பண்புகளை இன்றைய கவிதைகள் ஒதுக்கி நகர்வதைச் சொல்கிறார். தேவதச்சன் கவிதைகளை விமர்சிக்கும்போது இப்போது செய்யுள், சந்தம், இசை, உவமை, படிமம் போன்றவற்றைக் கைக்கொள்ளாமல் கவிதை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தைக் குறிப்பிடுகிறார். 

ஒரு படைப்பு தன் பொருளாகக் கொள்வது தத்துவமானாலும், சமூகப் பிரச்சினைகளானாலும் அவை கலையாக மாற வேண்டும். தஞ்சை ப்ரகாஷின் சிறுகதைகளை விமர்சிக்கும் ஆசை, பாலியல் பிறழ்வு, குற்றம் போன்றவற்றை தஞ்சை ப்ரகாஷ் தாராளமாகப் பேசுபவர்… அதில் கலாபூர்வமான வெற்றி பெற்றுள்ளார்… சிலவற்றில் கலைத்திறமை கைகூடவில்லை என்று சொல்கிறார்.  தேம்பித் தேம்பி அழும் ஒருவர் கலையை படைப்பதில்லை. அவர் யதார்த்த உளையிலிருந்து மீள்வதில்லை. ஆனால், அப்படி அழுவதே நாடகத்தில், திரையில் வரும்போது நாம் விரும்பிப் பார்க்கும் சோகரசக்  காட்சியாகிவிடுகிறது. 

ஜான் க்ரோ ரான்சம் என்ற விமர்சகர் இரண்டு புதிய இலக்கிய கூறுகளை அறிமுகப்படுத்தினார். ஒரு படைப்பின் அமைப்பு, அது கட்டப்பட்டிருக்கும் விதம் என்பது ஒன்று. மன்றொன்றை நாம் படைப்பின் செறிவு என்பதாகப் புரிந்துகொள்ளலாம். இதற்கு அவர் நெசவில் புழங்கும் சொல்லான ‘texture’ என்பதைப் பயன்படுத்தினார். துணியின் ’ஊட்டம்’ என்று இதை நாம் புரிந்துகொள்ளலாம். இரண்டுமே உருவகங்கள்தான். அமைப்பைத் தொடக்கம் என்ற முதல், இடை, உச்சக் காட்சி, முடிவு என்ற கடை என்பதாகப் புரிந்துகொள்ளக் கூடாது. மாம்பழ நிறப் புடவைக்குக் கறுப்பில் கரைக்கட்டு நெய்யும் கலையைப் போன்றதாகப்  புரிந்துகொள்ள வேண்டும். புடவையின் ஊடும் பாவும் எவ்வளவு நெருக்கி நெய்யப்பட்டிருக்கிறதோ அது துணியின் ஊட்டத்தை தீர்மானிக்கிறது. அதை விரல்களால் நெருடி உணரலாம். ஞானக்கூத்தனின் கவிதைகளில் தத்துவத்தின் சாயலும் பகடியும் ஊடாடும் என்பது ஆசையின் விமர்சனம். அங்கே மரபும் நவீனமும் ஒரே நேரத்தில் இழையோடுவதாகவும் சொல்கிறார். அமைப்பு, ஊட்டம் என்ற இரண்டு இலக்கியக் கூறுகளும் மற்ற படைப்பாளிகளிடம் எப்படிச் செயல்படுகிறது என்று ஆசை சொல்வதை அவர் சொற்களிலேயே நாம் சுருக்கித் தரலாம்: 

நகுலனின் படைப்புகள் தத்துவம் பேசினாலும் அதை மீறிய மனோநிலையும் அங்கு உண்டு. அவருடைய பரிசோதனை முயற்சிகள் மரபின் பரிச்சயத்தோடு நிகழ்ந்தவை. சபரிநாதனின் அப்பட்டங்கள் ரகசிய மூடல்களைக் கொண்டுள்ளன. அவை தொடர்ச்சியான அர்த்தத்துக்கு எதிரான கட்டமைப்புகள். அபியின் கவிதைகளுக்கு எளிமையின் அடர்த்தி உண்டு. அடரும் எளிமை, பூடகத்துக்கும் இருண்மைக்கும் இட்டுச்செல்கிறது. பொன்முகலியினுடையவை சாதாரணமானவை என்பதாலேயே அழகானவை. ’பொம்மை அறை’ என்ற நாவலில் கதைசொல்லி நன்மை-தீமை போன்ற எதிர் நிலைகளுக்கு ஊடாக ஊசலாடுகிறார். 

இவற்றிலெல்லாம் மேற்கத்திய சொனாடா இசையின் கட்டமைப்பைக் காண முடியும். நம் விமர்சனக் கோட்பாடுகளும் இலக்கியப் படைப்புகளும் ஒரு புது ரசனையை எட்டியிருக்கின்றன. ஒரு விமர்சகர் இந்த இரண்டின் போக்கையும் கணிக்க வேண்டும். ஆசையின் விமர்சனங்கள் அந்த வகையில் ஒரு துல்லியமான கணிப்பு. 

தன் விமர்சனங்களில் ஆசை மீண்டும் மீண்டும் பேசுவது மொழிக்கும் கற்பனைக்கும் இலக்கியப் படைப்புகளுக்கும் உள்ள உறவு. பொதுவாக இலக்கிய மொழி தர்க்கத்தை மீறும் தன்மை கொண்டது. அந்தத் தன்மையைக்  காட்டுவதாக ஆசை சில படைப்பாளிகளைக் குறிப்பிட்டுப் பேசுகிறார்:

லா.ச.ரா.வின் ‘புத்ர’ நாவலின் மொழிக்குக் கவிதை, வசனம் என்ற பாகுபாடு இல்லை. பாரதியின் மொழி அர்த்தத்தைப் பொதியாகச் சுமக்கவில்லை. அங்கே அர்த்தத்தை சோதித்தால் அழகு மறைந்துவிடும். அவர் கவிதைகளில் மொழியின் தளை இல்லாமல் உணர்ச்சி வெளிப்படுகிறது. தேவதச்சனுடையது சுமையற்ற சொல்முறை. அபியின் சொற்கள் அர்த்தச் சுமையற்றவை. அவை மங்கலான உணர்வு நிலையிலும் அனுபவ நிலையிலும் ஒரு அநிச்சயப் பிரதேசத்தில் இயங்குபவை. பொன்முகலியின் சொற்களின் சுமை கழிவதால் ஆழம் கூடுகிறது.   

இவை எல்லாமே இலக்கிய மொழியின் அதர்க்கம் ஏற்கும்  பல்வேறு பரிமாணங்கள். 

தத்துவத்துக்கும் இலக்கியத்துக்கும், மொழிக்கும் இலக்கியத்துக்கும் உள்ள உறவைப் பற்றி ஆசை விரிவாகப் பேசுகிறார். பல இடங்களில் அவருக்குப் படைப்பூக்கமிக்க உளநோக்குகள் (insights) வாய்த்திருக்கின்றன. அவற்றை மேலும் விரிவுபடுத்திச் சென்றிருந்தால் இன்னும் பல சாத்தியங்களை அவர் அடைந்திருப்பார் என்று சொல்லத் தோன்றுகிறது. அடுத்தடுத்த தொகுப்புகளில் அது நிகழும் என்று நம்புகிறேன். 

இந்த இலக்கிய விமர்சனக் கட்டுரைகளோடு மேலும் இன்றைய படைப்பாளிகள் சிலரைப் பற்றியும் விமர்சனம் செய்து இதையே தற்காலத் தமிழ் இலக்கிய வரலாற்றுக்கு ஒரு புதிய பங்களிப்பாக ஆசை செய்ய இயலும். அப்போது உலக இலக்கியப் போக்குகள், விமர்சனக் கோட்பாடுகள், இசை மரபுகள், சித்திர மரபுகள், தத்துவ மரபுகள், நம் மரபான இலக்கியப் படைப்புகள் எல்லாம் ஆசையின் விமர்சன பார்வைக்கு மேலும் சிறப்பான விரிவையும் வீச்சையும் தரும் என்பதில் ஐயமில்லை.


தங்க. ஜெயராமன்                                                                                   திருவாரூர்               

                                                                                                                       13/11/2011

      


*தங்க. ஜெயராமன்: ஓய்வு பெற்ற ஆங்கிலப் பேராசிரியர், ‘காவிரிக் கரையில் அப்போது…’, ‘காவிரி வெறும் நீரல்ல’ ஆகிய நூல்களின் ஆசிரியர். ‘இந்து தமிழ்’ நாளிதழ், ‘அருஞ்சொல்’ மின்னிதழ் ஆகியவற்றில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார். 


நூல் விவரங்கள்:

இந்தப் பிரபஞ்சமே பேபல் நூலகம்தான்

ஆசை

வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்

தொடர்புக்கு: 99404 46650

email: discoverybookpalace@gmail.com

website: www.discoverybookpalace.com

அமேசானில் 20% கூடுதல் கழிவுடன்பெற: https://tinyurl.com/57auw4cb

அமேசானி கிண்டில் அன்லிமிட்டடில் இலவசமாகப் படிக்க: https://tinyurl.com/4ezmd7hf


No comments:

Post a Comment