ஆயிரம் ரூபாய் கொடுத்து
வாங்கிய ஜேசிபி
அன்று மாலையே
அக்குவேறு ஆணிவேறாகக்
கிடக்கிறது
எது ஜேசிபியை
ஜேசிபி ஆக்குகிறது
என்று வாங்கிய உடனே தோன்றிய
ஆன்மீகக் கேள்வியின்
விளைவு அது
அல்லது
ஈவிரக்கமற்ற நபரொருவர் கையில்
அகப்படும்போது
ஜேசிபிகளின் மனதில்
என்னென்ன உணர்வுகள் எழும்
என்பதைக் கண்டறிவதற்கான
உளவியல் ஆராய்ச்சி அது
அல்லது
ஜேசிபிகளின் பின்னுள்ள
நோக்கத்தை உருவி
அங்கே எதிர்நோக்கம் ஒன்றை
உருவாக்கும் முயற்சி அது
கிரேன்கள்
கார்கள்
ஹெலிகாப்டர்கள்
கரடிகள்
புலிகள்
எல்லாவற்றுக்கும்
இதே கதிதான்
ஜேசிபியின் பாகங்கள்
வீட்டின் வெவ்வேறு திசைகளின்
ரகசியங்களை அறிந்துகொள்ள
அனுப்பப்படும்போது
அதன் கண்டுபிடிப்பாளர் கல்லறைக்குள்
நீர் நிரம்புகிறது
அது தோண்டிய பள்ளங்கள்
மலைகளாகின்றன
இப்படித்தான்
கிரேன்களின் விதியால்
கட்டிடங்கள் சரிந்து
அதே இடத்தில்
முந்தைய உயரத்தை ஈடுசெய்யும்
ஆழங்கொண்ட
கிணறுகள் தோன்றுகின்றன
புலிகளின் வயிறு குதறப்படும்போது
உள்ளிருந்து தப்பியோடுகின்றன
மான்களும் ஆடுகளும் மாடுகளும்
பெரியபெரியனவற்றின் கடவுள்
அவற்றைப் படைக்கும்போது
அவற்றின் ஆணவத்தையும்
மூர்க்கத்தையும் கண்டஞ்சினார்
பின் எல்லாவற்றுக்கும்
பொம்மை செய்தார்
பின் பெரியபெரியனவற்றின்
ஆணவத்தையும் மூர்க்கத்தையும்
பரிகசிக்கும் தேவதூதனைச் செய்தார்
தேவதூதன்
முதல் வேலையாகக் கடவுளை
அக்குவேறு ஆணிவேறாகக்
கழற்றிப்போட்டுவிட்டு
அவருக்கு எதிர்ப்பொருள் செய்தான்
அதன் பின்தான்
ஆயிரம் ரூபாய்
ஜேசிபி மீது
கை வைத்தான்
- ஆசை
23-04-23
No comments:
Post a Comment