Thursday, June 8, 2023

ஜெயமோகன், ஏன் இந்த ஒன்றரை டன் வெயிட்?


ஜெயமோகன், தான் கடந்த சில  ஆண்டுகளாக இலக்கிய உலகைச் சார்ந்தவர்களைப் பற்றி கடுமையாக எழுதுவதில்லை; தனது வார்த்தைகளுக்கு ஒன்றரை டன் வெயிட் என்று நண்பர் ஒருவர் சொன்னதுதான் அதற்குக் காரணம் என்பது போன்று ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். ஆனால் அதில் கொஞ்சம்தான் உண்மை இருக்கிறது. தன் வி.பு. அதிகார வட்டத்தை (சாம்ராஜ்ஜியத்தை) விஸ்தரிப்பதற்காக அவர் இப்போது இளைஞர்களை விமர்சிப்பதில்லை. மானாவாரியாக எல்லோருக்கும் முன்னுரை, பின்னட்டை வாசகம் எழுதித் தருகிறார். அவரை நம்பி அந்தப் புத்தகங்களை வாங்கிப் படித்தால் பெரும் ஏமாற்றமே மிச்சம். இருபது ஆண்டுகளுக்கு முன் ஜெயமோகன் இலக்கிய விமர்சனங்களை நம்பிப் படித்தேன். இப்போது அது முடியாது என்ற நிலையை அடைந்துவிட்டார். முன்பு தி.க.சியைக் கிண்டலடித்தவர் இப்போது தானும் திகசி ஆகிவிட்டார். வேண்டியவர்களை வானளாவத் தூக்கி வைப்பது, வேண்டாதவர்கள் எவ்வளவு திறமையானவர்கள் என்றாலும் கீழிறக்கம் செய்வது, அல்லது புறக்கணிப்பது என்று ஜெயமோகன் மிகப் பெரிய இலக்கிய ஊழல்வாதி ஆகிவிட்டார். அதில் நமக்குப் பிரச்சினை ஏதும் இல்லை. இலக்கிய அதிகாரமும் எந்த அதிகாரமும் அற்ற எளிய மனிதர்களை ஒன்றரை டன் வெயிட்டில் அறைவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இப்போது அய்யனாரை அப்படி அறைந்திருக்கிறார். 

சில ஆண்டுகளுக்கு முன்பு என்னை உட்பட நண்பர்களைப் பற்றி ஜெயமோகன் தரக்குறைவாக எழுதினார். பத்திரிகையாளர்கள் சினிமாக்காரர்களிடம் எப்படி வழிவார்கள் என்பதையும் எப்படி காசு வாங்குவார்கள் என்பதையும் தான் பார்த்திருப்பதாக எழுதினார். இதைப் படித்தவர்களுக்கு நாங்கள் அப்படி செய்ததாகத்தானே தோன்றியிருக்கும். இத்தனைக்கும் திரையுலகினரை சந்திக்க விருப்பமற்றவன் நான். என் பத்து ஆண்டு இதழியல் அனுபவத்தில் இயக்குநர் மகேந்திரனை மட்டுமே பேட்டி எடுத்திருக்கிறேன். சகாக்கள் எத்தனையோ முறை அழைத்தும் ஒரு ப்ரீவ்யூக்குகூட நான் சென்றதில்லை. கமல், ரஜினி, இளையராஜா, ரஹ்மான் போன்ற பலரையும் சந்திக்க நண்பர்கள் அழைத்தபோதும் மறுத்தவன் நான். ஆகையால் ஜெயமோகன் அப்படி எழுதியது என்னையும் என்னைப் போன்றவர்களையும் அவமானப்படுத்தியதாகவே உணர்ந்தேன். வலித்தது. 

கதைத் திருட்டுக் குற்றச்சாட்டுக்கு ஒரு இயக்குநர் உள்ளான சமயத்தில் அவருக்கு ஜெயமோகன் வக்காலத்து வாங்கினார். 2.0 படம் ஒரு அறிவியல் படம் என்றும் ஆரா என்பது உண்மையில் இருக்கிறது என்றும் அள்ளிவிட்டார்; அதை வி.பு. வட்டமே ஆமாம் போட்டு ஆதரித்தது. சினிமாக்காரர்களின் அணுக்கத்தால் அதிக ஆதாயம் அடைந்துகொண்டிருப்பவர் ஜெயமோகன்தான். அது அவருடைய திறமை. அத்துடன் அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். எளியோர் மீது வன்மம் கக்கக் கூடாது. அவர்கள் வாழ்க்கையை அது எந்த அளவுக்கு பாதிக்குமென்று உங்களுக்கு தெரியாது ஜெயமோகன். நீங்கள் ஒரு எளிய மனிதர் மீது வன்மம் கக்குவதற்கு முன் அவர் வி.பு. வாசகர் வட்டத்தை சேர்ந்தவராக நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் கரம் பெரியது; அடியும் பெரியது; ஆகவே பெரிய முதுகைக் கொண்டவர்களை இலக்கு வையுங்கள். முடிந்தால் பெரிய மார்பை (56 இன்ச்) கொண்டவர்களை. 

அது மட்டும் அல்லாமல் ஆசை ஒரு இலக்கிய மொண்ணை என்று ஜெயமோகன் எழுதினார். ஒரே ஒரு கட்டுரையில் அவரையோ அவர் புத்தகத்தையோ பாராட்டி நான் எழுதியிருந்தால் அவர் இப்படி எழுதியிருக்க மாட்டார். நான் ஒரு இலக்கிய மொண்ணை என்றால் வி. பு. வட்டத்தில் நூறு மொண்ணைகளைப் பட்டியலிட முடியும். விதிவிலக்குகள் இருக்கலாம். ஜெ.மோ. பெரும்பாலும் தன் வட்டத்தைச் சேர்ந்தவர்களையோ தன் வட்டத்தில் சேர வேண்டும் என்று அவர் விரும்புபவரையோ மட்டுமே தொடர்ந்து ஆசிர்வதித்துக்கொண்டிருப்பார், அவர்கள் அவர் பாஷையில் மொண்ணையாக இருந்தால்கூட. அப்படி ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட ஜெயமோகனுக்குத் தங்களை எழுதிக்கொடுத்துவிடுகிறார்கள் என்பதுதான் உண்மை. மற்றவர்களை கண்டுகொள்ளாமல் விடுவது அல்லது அடித்துப் படுக்க வைப்பது. இவற்றைதான் அவருடைய இலக்கிய ஊழல் என்று குறிப்பிட்டேன். பாராட்டு, கண்டுகொள்ளல்கள் கிடைப்பது அரிதாக இருக்கும் தமிழ் இலக்கிய உலகில் அவையெல்லாம் கிடைக்கும்போது பெற்றவர்கள் தங்களை ஒப்புக்கொடுத்துவிடுவதைக் குறையாகக் கூற முடியாது. கொடுப்பவர் மீதுதான் நம் விமர்சனம்.

பௌத்த அய்யனாரைச் சில ஆண்டுகளாக அறிவேன். பிழைக்கத் தெரியாமல் இலக்கியத்துக்காகப் பணத்தை இழந்தவர். தான் பணியாற்றும் மருத்துவத் துறை வழியாக இலக்கிய நண்பர்களுக்கும் இதழியலாளர்களுக்கும் அவர் தொடர்ந்து உதவி வருவதை நான் கண்டிருக்கிறேன். அது மட்டுமல்லாமல் அவர் முன்னெடுத்த மருத்துவ முகாம்கள் மூலம் ஆயிரக் கணக்கான ஏழை எளிய மக்கள் பயன் அடைந்திருப்பதை நான் அறிவேன். ஒருவர் இலக்கியத்தில் சாதிப்பது ஒரு அளவுகோல் என்றால் இன்னொருவர் பிறருக்கு செய்யும் உதவிகளுமே அவரை அளவிடுவதற்கான அளவுகோல். ஜெயமோகன் கண்ணுக்கு அய்யனார் ஒரு விதத்தில் தெரிந்திருக்கலாம்; ஆனால் எனக்குத் தெரிந்த அய்யனார் இப்படித்தான். அய்யனார் ஜெயமோகனை எடுத்த நேர்காணலை அய்யனாரின் பெயர் குறிப்பிடாமல் வெளியிட்டதற்காக வருத்தத்துடன் அய்யனார் எழுதியதால் இப்போது அவர் மீது வன்மம் கக்கப்பட்டிருக்கிறது. ஜெயமோகன் இப்படித்தான் தக்க தருணம் பார்த்துக் கக்கிவிடுவார். அதற்கு ஏற்றார்போல் கண்டமனூர் கணேசன், வில்லியனூர் வீராச்சாமிக்கள் கடிதம் எழுதிவிடுவார்கள். 

ஆரம்ப காலத்தில் இலக்கியம் சார்ந்து சில விஷயங்களை நான் ஜெயமோகனிடம் பெற்றிருக்கிறேன். அப்புறம் விலகிவிட்டேன். இந்த நன்றியுணர்வையும் குறிப்பிட்டே இந்தக் கண்டனக் கட்டுரையை எழுதுகிறேன்.  கூடிய சீக்கிரம் வடலூர் வேணு ஒரு கடிதம் எழுதி, அதற்கான பதிலில் ஜெயமோகன் என் மீது வன்மம் கக்கினாலும் பரவாயில்லை.

3 comments:

  1. Border Line Personality Disorder- இது ஒரு வகையான உளநோய்க்கூறு . எவ்வளவு உண்மைகளையும் தர்க்கங்களையும் எடுத்துக் கூறினாலும் கூட அதனை நம்பாமல் மறுத்து, தான் நம்புவதை மட்டுமே உண்மை என்று அவதூறுகளை பேசித்திரிவது. இந்நோய் பாதிப்பு நாஜி சர்வாதிகாரி ஹிட்லருக்கு இருந்தது. இலக்கிய உலகில் ஜெமோவுக்கும் இருக்கலாம்.

    ReplyDelete
  2. சரியான பார்வை.

    ReplyDelete
  3. "தனக்கேயான ஒரு உண்மையை உருவாக்கிக்கொண்டு அதை உண்மையென்று ஆத்மார்த்தமாக நம்பிக்கொண்டு அதையே எழுதுகிறார்" -

    உண்மை, இதுபோன்ற பிரச்சனை தனக்கு இருப்பதாக ஜெயமோகனே அவரது தளத்தில் எழுதியிருக்கிறார். ஆனால் இதுவும் ஓரளவுக்கு தான் உண்மை. தனக்கேயான "உண்மையை" இவர் யார் யாரைப்பற்றியெல்லாம் இதுவரை உருவாக்கியிருக்கிறார், அவற்றை எந்த சந்தர்பத்தில் தனது தளத்திலோ அல்லது பொது விவாதங்களிலோ முன்வைத்திருக்கிறார் எனப் பாருங்கள். கமல் சார் குறித்தோ, மணி சார் பற்றியோ, முருகநோலர் குறித்தோ இப்படி தனக்கேயான "உண்மையை" எங்காவது முன்வைத்திருக்கிறாரா? எந்தவித அதிகாரபலமோ, பணமோ, சினிமா தொடர்புகளோ அற்றவர்களிடமே ஜெமோ இத்தகு "உண்மைகளை" உருவாக்கி அவதூறுகளாக உலவ விடுகிறார். இதில் பெரும்பாலானோர் அவரது முன்னாள் நண்பர்கள், வாசகர்கள், ஏழைப் பதிப்பாளர்கள், மற்றும் ஒருசில அடிப்பொடிகள். இதன் மூலம் அவர்களின் நம்பகத்தன்மையை குலைத்து, அவர்களது குரல் பொதுவெளிக்கு வராமல் பார்த்துக் கொள்வதே அவரின் நோக்கம். சர்வாதிகாரிகளின் உத்தி.

    ஆகவே நீங்கள் நினைப்பது போன் ஜெமோ அத்தனை ஒன்றும் அப்பாவி கிடையாது. தனது படைப்பாற்றலால் பிறழ்வின் விளிம்புக்குத் தள்ளப்பட்டு அதனால் ஏற்படும் தோற்றப்பிழைகளும், உண்மை/பொய் சார்ந்த மயக்கங்களும் தான் இவை என சில காலம் குறித்து நம்மையெல்லாம் நம்ப வைக்க முயல்வார், எச்சரிக்கை. அவருடைய வன்மங்கள் எல்லையற்றவை. எப்போதோ ஒருவர் தன்னைப் பற்றியோ அல்லது தனது படைப்பு அல்லது இலக்கிய குழுமச் செயல்பாடுகளை பற்றி சொன்னதை யானை போல் ஞாபகம் வைத்து, பிறகு சமயம் பார்த்து அவர்களை ஏறி மிதித்து மகிழ்வார். இதற்கு நடுவே அவர்களையெல்லாம் தன் பெருந்தன்மையால் மன்னித்துவிட்டதாக கதைகட்டுவார்.

    அவரை எல்லாரும் சைக்கோ என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் அதுவும் அவர் உருக்காக நினைக்கும் புனைவாளுமையே. உண்மையில் அவர் ஒரு சாதரண careerist மட்டுமே. யார் தனக்கு உபயோகமாக இருபார்கள், யார் விசுவாசமாக, யார் தமது இலக்கிய அதிகாரத்தை பலப்படுத்துவார்கள்/குலைப்பார்கள் என்பதே யாரை உயர்த்திப்பிடிக்க வேண்டும், யார்யாரை உதாசீனப்படுத்தவேண்டும், யாரை சமயம் பார்த்து ஓங்கி ஒன்றரை டன் வைட்டில் மிதிக்க வேண்டும் போன்ற முடிவுகளின் ஆணிவேர்.

    ஆகவே ஜெமோவொன்றும் அவரது பிறழ்வு மனநிலையினாலும், தன்னித்த மனக்கிளர்ச்சியாலும் இத்தகைய முடிவுகளை எழுப்பதில்லை. பல லௌகீக கணக்குகள் இவற்றின் அடியில் உள்ளது என்பதை தமிழிலக்கிய சம்மூகம் ஒருநாள் உணரக்கூடும்.

    எல்லோரும் தன்னுடைய நிகரற்ற படைப்பாற்றலின் மீதுள்ள பொறாமையால் தன்னை உள்ளூர வெறுக்கிறார்கள், தனக்கெதிராக சதிசெய்கிறார்கள் - சக எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், நண்பர்கள் உட்பட - எனவும், அதை அவரே தனது உள்ளுணர்வு மூலம் கண்டுபிடித்துவிட்டதாகவும், ஜெமோ நம்புகிறார். அதுவே அவரது எல்லா சரிவுகளுக்கும் காரணம், அவரது முடிவற்ற வன்மங்களின் ஊற்றுக்கால்.

    ReplyDelete