Thursday, October 15, 2015

எச்சரிக்கை இந்தியா! உன் மீது அறம்பாடப்படுகிறது!


ஆசை

(அச்சு இதழ்கள் எதிலும் பிரசுரமாகாதது)

ஜெயமோகனின் அற்புதமான சிறுகதைகளுள் ஒன்று ‘அறம்’. உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.

எழுத்தாளர் ஒருவர் பணக்காரப் பதிப்பகத்துக்காக நிறைய புத்தகங்கள் எழுதித்தருகிறார். அந்தப் புத்தகங்களுக்காகத் தனக்கு வர வேண்டிய தொகையைத் தேவை ஏற்படும்போது மொத்தமாக வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லிவிடுகிறார். பெண்ணுக்குக் கல்யாணம். முதல் நாள் போய் அந்தப் பதிப்பக முதலாளியிடம் தனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கேட்கிறார். அந்த முதலாளியோ எல்லா பணத்தையும் ஏற்கெனவே பைசல் செய்தாகிவிட்டது என்று அடாவடியாகக் கூறி எழுத்தாளரைத் துரத்திவிடுகிறார். வயிறெரிந்துபோய் அந்த எழுத்தாளர் குடித்துவிட்டு நேராக அந்தப் பதிப்பக முதலாளியின் வீட்டுக்குச் செல்வார். அங்கே ஆச்சி இருப்பார். அந்த முதலாளி தன்னை இப்படி வயிற்றில் அடித்துவிட்டாரே என்று சொல்லி மண்ணை வாரித் தூற்றி ஒரு அறம் பாடி அதனை வாசலில் எழுதிவைத்துவிட்டுச் சென்றுவிடுவார். தன் வீட்டுக்கு வந்து இப்படி அறம் பாடிவிட்டுப் போய்விட்டாரே என்று திக்பிரமை பிடித்த ஆச்சி தன் கணவரின் பதிப்பகத்துக்கு வந்து அவருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை உடனே கொடுக்கச் சொல்கிறார். கணவர் முரண்டு பிடித்ததும் கொதிக்கும் வெயிலில் அப்படியே தார்ச்சாலையில் ஆச்சி உட்கார்ந்து சத்தியாகிரகம் செய்ய ஆரம்பிக்கிறார். தன் குலவிளக்கு இப்படி நடுத்தெருவில் உட்கார்ந்ததைப் பார்த்து அதிர்ந்துபோய் வங்கிக்குச் சென்று பணம் எடுக்கும் நடவடிக்கைகளில் ஏதோ தாமதமாகி இறுதியில் பணத்துடன் திரும்ப வருவார் பதிப்பக முதலாளி. வந்து ஆச்சியைத் தூக்கினால் வெயிலில் அவருடைய உடல் வெந்து தரையோடு ஒட்டிக்கொண்டி, சதை பிய்ந்துபோய்விடும். எழுத்தாளரை வீட்டுக்கு வரச்சொல்லும் ஆச்சி அவருக்கு சாப்பாடு போட்டு ஒரு பவுன் நகையும் கொடுத்து, அறம் பாடியதை விலக்கிக்கொள்ளச் சொல்வாள். அவரும் சந்தோஷமாக அறத்தை விலக்கிக்கொள்வார்.

இந்தக் கதையிலிருந்து உங்களுக்குப் புரிந்திருக்கும் ‘அறம் பாடுதல்’ என்றால் என்னவென்று. சத்தியத்தின் உச்சகட்ட ஆவேசத்தில் அடிவயிற்றிலிருந்து வரும் சொல் எரித்துவிடும் என்பது நம் கலாச்சாரத்தின் நம்பிக்கை. அதுவும் புலவர், எழுத்தாளரின் சொல்லுக்கு அப்படி ஒரு முக்கியத்துவம் நமது கலாச்சாரத்தில்.

நம் கலாச்சாரத்தின் காவலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு, மகத்தான நம் கலாச்சாரத்தின் கடந்த கால மகத்துவத்தை மீட்பதற்காகப் பிறப்பெடுத்தவர்கள் என்று சொல்பவர்களுக்கு நம் கலாச்சாரத்தின் மேற்கண்ட விஷயம் தெரிந்திருக்காது என்றுதான் நம்ப வேண்டியிருக்கிறது.

ஏனெனில் நாடு முழுவதும் அறம் பாடிக்கொண்டிருக்கிறார்கள் எழுத்தாளர்கள். இவர்களில் கவிஞர்களும் அடக்கம். உண்மையில் அறம் பாடும் அனைவருமே கவிஞர்கள்தான். நாடு முழுக்க இப்படி எழுத்தாளர்கள் அறம்பாடிக்கொண்டிருப்பது இந்த அரசுக்கும் இந்திய கலாச்சாரத்தின் ஈடில்லா இணையில்லா பெருமையை மீட்கப் பிறப்பெடுத்திருக்கும் தேவதூதராக நம்பப்படுவருக்கும் அப்படி நம்புபவர்களுக்கும் கொஞ்சம் கூட உறைக்கவில்லையா? விபரீதமான ஏதோ ஒன்று நடப்பது அவர்களுக்குத் தெரியவில்லையா?

எழுத்தாளர்களை வஞ்சித்த, எழுத்தாளர்களை ஒடுக்கிய, எழுத்தாளர்களைக் கொன்ற எந்த நாடும் கலாச்சாரமும் மேல்நிலையை அடைந்ததில்லை என்பதைத் தங்களுடைய எதிரிகளாக அவர்கள் பாவிக்கும் கம்யூனிஸ நாடுகளிடமிருந்தும் இஸ்லாமிய நாடுகளிடமிருந்தும் அவர்கள் தெரிந்துகொள்ளவில்லையா? ஸ்டாலினின் அரசாட்சியில் ஓசிப் மாண்டெல்ஸ்டாம் என்ற மகாகவி சித்ரவதை முகாமில் இறந்துபோகவில்லையா?  ஸ்டாலின் அரசாங்கத்தால் சிறைவைக்கப்பட்ட தன் மகனைப் பார்ப்பதற்காக வரிசையில் மணிக்கணக்காகக் காத்திருந்த கவிதேவதை அன்னா அக்மதோவாவின் கண்ணீர், வரலாற்றில் இன்று ஸ்டாலினை எரித்துக்கொண்டிருக்கவில்லையா? எழுதி வைத்தால் அழிக்கப்பட்டுவிடும் என்று மனதில் திரும்பத் திரும்ப உருப்போட்டு தனது கவிதைகளை நண்பர்களிடமும் சொல்லி அவர்களையும் உருப்போட வைத்த அந்த தேவதைத் தாய் இன்று ஸ்டாலினின் கல்லறையின் மேல் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறாள். அவள் அறம் பாடினாள். அவளைப் போன்ற ஏராளமான எழுத்தாளர்களும் அறம் பாடினார்கள். தற்கொலையால் அறம் பாடினார், நோபல் பரிசை வென்றும் அதை வாங்க முடியாமல் குருச்சேவ் அரசால் தடுக்கப்பட்ட போரிஸ் பாஸ்டர்நாக். இன்று சோவியத்தின் நிலை?

முதலாம் உலகப் போரில் லட்சக்கணக்கான  அர்மீனியர்களைக் கொன்று இனப் படுகொலை செய்த துருக்கி அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எழுதிய துருக்கி எழுத்தாளன் ஓரான் பாமுக், அப்படிச் சொன்னதாலேயே மரண தண்டனை வரை சென்று, சர்வதேச எழுத்தாளர்களின் முயற்சியாலும், நோபல் விருது வழங்கப்பட்டதாலும் காப்பாற்றப்பட்டான். அவன் துருக்கிக்கு அறம் பாடியிருக்கிறான். இனப்படுகொலையை சங்கடமான ஒரு விஷயமாகக் கருதி வரலாற்றின் முழுச் சேற்றில் புதைப்பதற்கு முயன்றுகொண்டிருக்கும் அந்த சமூகத்தின் மனசாட்சியை நோக்கி அந்த எழுத்தாளன் அறம்பாடிவிட்டான். அதை நோபல் விருது மேலும் உரக்கத் தெரிவித்துவிட்டது உலகெங்கும். அவன் அறம் பாடியதன் நெருப்பு இனி துருக்கியை வரலாறு உள்ள மட்டும் எரித்துக்கொண்டே இருக்கும்.

அயத்துல்லா கோமேனி விதித்த பத்வாவால் இன்றுவரை உயிரபாயத்தில் திரிந்துகொண்டிருக்கும் சல்மான் ருஷ்டியும், வங்க தேசத்தில் விதிக்கப்பட்ட பத்வாவால் ஒவ்வொரு நாடாகத் தஞ்சம் புகுந்துகொண்டிருக்கும் தஸ்லிமா நஸ்ரினும் அறம் பாடியதற்கு அந்தந்த தேசங்கள் வரலாற்றில் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

இவ்வளவு உதாரணங்களும் உங்கள் எதிரிகளாகவும், அழித்தொழிக்கப்பட வேண்டியவர்களாக நீங்கள் கருதும் கம்யூனிஸ தேசங்களிலிருந்தும், இஸ்லாமிய தேசங்களிலிருந்தும்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், இதற்குச் சளைக்காத உதாரணங்களைச் சமகால இந்தியா உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

அது மட்டுமல்ல, சம கால வரலாற்றில் மனித உரிமைப் போராளியும் தமிழருமான ரஜனி திரணகமவின் படுகொலை விடுதலைப் புலிகளுக்கும், பத்திரிகையாளர் லசந்தாவின் படுகொலை ராஜபக்சேவுக்கும் அறம் பாடிக்கொண்டிருக்கவில்லையா?

‘தனக்குள் இருந்த எழுத்தாளன் இறந்துபோய்விட்டான்’ என்று ஒரு தமிழ் எழுத்தாளன் அறம்பாடினானே, அது உலகின் மூலைமுடுக்குகளிலெல்லாம் சந்தி சிரித்ததே! அப்போது நாம் என்ன செய்தோம்? என்ன சொன்னோம்? நம்மை ஒட்டுமொத்தமாக அந்த எழுத்தாளன் எரித்து பஸ்பமாக்கியிருப்பதுகூட உறைக்காமல் ‘சவுதி அரேபியாவிலோ பாகிஸ்தானிலோ அவர்களின் மதத்துக்கு எதிராக எழுதி உயிரோடு இருந்துவிட முடியுமா?’ என்று மாற்று உதாரணங்களை வைத்துக்கொண்டிருந்தோம். ஆக, நிச்சயமாக ஒன்று புலப்படுகிறது. நீங்கள் உங்கள் முன்னுதாரணமாக சவுதி அரேபியாவையும் பாகிஸ்தானையும்தான் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள்தான் உங்களுக்கு ஆதர்சம். அவர்களாவதுதான் உங்கள் லட்சியம்.

ஏற்கெனவே நீங்கள் அந்த லட்சியத்தில் பெரும் வெற்றி பெற்றுவிட்டீர்கள். நம் அனைவரின் முகம் மீதும் இத்தனை எழுத்தாளர்கள் அறம்பாடி ஒட்டிவைத்துவிட்டுப் போய்விட்டார்கள். ஆனால் நம்மைப் பொறுத்தவரை ‘அவர்கள் இடதுசாரிகள். சீக்கியக் கலவரத்தின்போது என்ன செய்தார்கள்? ஜாலியன் வாலாபாக்கின்போது என்ன செய்தார்கள்? ராவணன் சீதையைத் தூக்கிக்கொண்டு போனபோது என்ன செய்தார்கள்? உலகம் தோன்றியபோது என்ன செய்தார்கள்?’ இப்படி சமத்காரமாகக் கேள்வி கேட்டு மடக்கிக்கொண்டிருக்கிறோம் முகத்தின் மீது பாடப்பட்ட அறம், ஆறாவடுவாக மாறிக்கொண்டிருப்பதை அறியாமல்.

இப்படிக் கேள்வி கேட்கும் நம்மை விட எவ்வளவோ செய்திருக்கிறார் நயன்தாரா ஷேகல். தனது உறவினரான இந்திரா கொண்டுவந்த நெருக்கடி நிலையையே எதிர்த்து, வலதுசாரி அருண் ஷோரி உள்ளிட்ட பலருடன் கைகோத்தவர். ஜெயப்பிரகாஷ் நாராயண் தோற்றுவித்த மனித உரிமை அமைப்பான பியுசிஎல்லின் துணைத் தலைவராக நயன்தாரா இருந்தபோது 1984-ல் நடைபெற்ற சீக்கியப் படுகொலையை எதிர்த்துத் தீவிரமாகச் செயல்பட்டவர். படுகொலையை நிகழ்த்திய காங்கிரஸ் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு ஆதாரங்கள் சேகரித்து அளித்தவர். இப்போது, அதாவது மற்றுமொரு நெருக்கடி நிலையின்போது, தனது விருதைத் திருப்பியளித்திருக்கிறார். குஜராத் படுகொலை, ஒடிசாவில் கிறித்தவர்களுக்கெதிரான கலவரம், முஸாபர்நகர் கலவரம், தாத்ரி படுகொலை போன்றவற்றின்போது நாம் சிறு எதிர்ப்பையாவது வெளிப்படுத்திருக்கிறோமோ ஜீ? நமக்கு மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா ஜீ? இருந்தால் அது என்ன மதம், என்ன சாதி ஜீ?

காங்கிரஸ் ஆண்ட, ஆளும் மாநிலங்களில்தான் எழுத்தாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற வாதம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் மாநிலங்களில் கொல்லப்பட்டாலும் கொலைகளுக்குப் பின் நின்ற சித்தாந்தம் இந்துத்துவம். அந்த இந்துத்துவம் பூதாகரமாக அதிகாரத்தில் இருக்கும் இந்தத் தருணத்தைவிட எதிர்ப்பைத் தெரிவிக்கப் பொருத்தமான தருணம் வேறு என்ன இருந்திருக்க முடியும்?



ஒரு முதிய பெண்மணி. மதிப்புக்குரிய எழுத்தாளர். காங்கிரஸை எதிர்த்த அளவுக்கு பாஜகவை கூட எதிர்க்காதவர். மிக அமைதியாகத் தொடங்கிவைத்திருக்கிறார் அறம்பாடுதல் நிகழ்வொன்றை. அதன் உக்கிரத்தில் ஈர்க்கப்பட்டு ஒவ்வொரு எழுத்தாளராக தொடரோட்டமாக அறம்பாடிக்கொண்டிருக்கிறார்கள். நாம் அதையெல்லாம் கேலிக்குள்ளாக்கி, அவர்கள் எலைட்டிஸ்ட், இடதுசாரிகள், மோடியின் வளர்ச்சி அரசைப் பிடிக்காதவர்கள், உள்நோக்கம் கொண்டவர்கள் என்று தூற்றிவாரிக்கொண்டிருக்கிறோம். அதை எழுத்தாளர்களே செய்துகொண்டிருப்பதுதான் இன்னும் விசேஷம். எச்சரிக்கை, ஒரு தேசத்தின் மீது அறம்பாடப்பட்டிருக்கிறது. அந்த அறத்தின் உக்கிரத்தில் வரலாற்றில் முதலில் பொசுங்கப்போகிறவர்கள் அப்படிக் கேலி பேசும், மவுனமாக இருக்கும் எழுத்தாளர்களேதான். ஏனெனில் சொல் என்பது அவ்வளவு உக்கிரமானது. அதைச் சொல்லாமல் அமைதி காத்தால் அது திருப்பி நம்மைப் பொசுக்கிவிடும். இது மூடநம்பிக்கையல்ல. வரலாற்று உண்மை! 

Tuesday, October 6, 2015

ஓங்கி அறையும் குழந்தைகள்


தம்பி
(‘தி இந்து’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் 04-10-2015 அன்று வெளியான எனது கட்டுரை)

இணையத்தில் சமூகப் பரிசோதனை வீடியோக்கள் கணக்கின்றி உலா வரும் காலம் இது. அந்த வரிசையில் மிகவும் முக்கியமான வீடியோ இது. பெண்களை அடிப்பது குறித்து எடுக்கப்பட்ட வீடியோ.
நான்கைந்து குழந்தைகள் காட்டப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் பெயரைச் சொல்கிறார்கள். வயதையும் சொல்கிறார்கள். 7 வயதிலிருந்து 11 வயதுச் சிறுவன் வரை அவர்களில் அடக்கம். ஒவ்வொருவரும் என்னவாக ஆக ஆசை என்று கேட்கப்படுகிறது. பீட்சா தயாரிப்பவராக ஆக வேண்டும், தீயணைப்பாளராக ஆக வேண்டும், போலீஸாக வேண்டும், கால்பந்தாட்டக்காரனாக ஆக வேண்டும் என்று ஆளுக்கொரு ஆசைகளைச் சொல்கிறார்கள்.
இப்போது பதின்பருவப் பெண் ஒருத்தி அங்கே வருகிறாள். வீடியோ எடுப்பவர் அந்தப் பெண் எப்படி இருக்கிறாள், அவளிடம் அவர்களுக்குப் பிடித்தது என்ன என்று கேட்கிறார். சிறுவர்கள் அதிகமாக அவளின் கூந்தலைப் பற்றி சொல்கிறார்கள். ஒரு சிறுவன் அவளிடம் எல்லாமே பிடித்திருக்கிறது என்கிறான். இன்னொருவன் நான் உனது பாய்ஃபிரண்டாக இருக்கலாமா என்று குழந்தைச் சிரிப்புடன் கேட்கிறான்.
அந்தப் பெண்ணைத் தொட்டுப்பார்க்கும்படி வீடியோ எடுப்பவர் அந்தச் சிறுவர்களிடம் சொல்கிறார். அந்தச் சிறுவர்கள் பெரும்பாலும் அவளது தோளிலும் கையிலும் தொடுகிறார்கள். ஒரு சிறுவன் கன்னத்தில் தொடுகிறான். இது முடிந்ததும் அந்தப் பெண்ணைப் பயமுறுத்தும் விதத்தில் முகபாவத்தைக் காட்டும்படி சிறுவர்களிடம் வீடியோக்காரர் சொல்கிறார். அவர்கள் பயமுறுத்தும்படி முகத்தைக் காட்டியது அந்தப் பெண்ணுக்கும் நமக்கும் சிரிப்பையே ஏற்படுத்துகிறது.
அடுத்தது வீடியோக்காரர் சொல்கிறார், “இப்போது அந்தப் பெண்ணைக் கன்னத்தில் அறையுங்கள். நன்றாக அறையுங்கள்!” இதைக் கேட்டதும் அப்படியே ஸ்தம்பித்துப் போய் நிற்கிறார்கள் அந்தச் சிறுவர்கள். வீடியோக்காரர் திரும்பத் திரும்பக் கேட்ட பிறகு ‘முடியாது’ என்கிறார்கள். ‘ஏன் அடிக்கக் கூடாது?’ என்று கேட்டால் அதற்கு ஒவ்வொருவரும் ஒரு பதில் சொல்கிறார்கள்.
அந்த பதில்களைப் பாருங்கள்:
‘அவள் ஒரு பெண். அதனால் என்னால் அடிக்க முடியாது’ ‘நான் அவளை அடித்துத் துன்புறுத்த விரும்பவில்லை’ ‘நாமெல்லாம் கேர்ள்ஸை அடிக்கவே கூடாது.’
‘மற்றவர்களை அடிக்கக் கூடாது என்று ஏசு சொல்லியிருக்கிறார்.’
‘எல்லாவற்றையும் விட, அவள் ரொம்பவும் அழகாக இருக்கிறாள். அவள் ஒரு பெண் வேறு. ஆகவே, அவளை அடிக்க முடியாது.’
‘எனக்கு வன்முறை பிடிக்காது.’
‘பெண்களை அடிக்கக் கூடாது, பூவால் கூட அடிக்கக் கூடாது என்று ஒரு பழமொழி இருக்கிறது. பூங்கொத்தாலும் அடிக்கக் கூடாது.’
‘அது ரொம்ப மோசம்.’
இறுதியில் முத்தாய்ப்பாக ஒரு சிறுவன் சொல்கிறான், ‘ஏனென்றால் நான் ஒரு ஆண்.
அதற்கு பிறகு ஆறு வயதுச் சிறுவன் ஒருவனின் மேற்கோளைக் காட்டுகிறார்கள், “குழந்தைகளின் உலகில் பெண்களை அடிப்பதென்று ஒன்று கிடையவே கிடையாது”. வீடியோ முடியும் தருவாயில் வீடியோக்காரர் அந்தச் சிறுவர்களிடம் சொல்கிறார், ‘அவளுக்கு முத்தம் கொடுங்கள்’. ஒரு சிறுவன் குறும்பாகக் கேட்கிறான், ‘கன்னத்திலா, உதட்டிலா?’
வீடியோ முடிந்துவிடுகிறது.
அறைய முடியாது என்று சொன்னாலும் அந்தச் சிறுவர்கள் உண்மையில் அறைந்துவிடுகிறார்கள். ஆம்! மனைவி, சகோதரி, தாய், தோழி, காதலி, முன்பின் தெரியாத பெண் என்று எல்லோரையும் அடிக்கும் ஆண்களின் முகத்தில்தான் அந்தச் சிறுவர்கள் ஓங்கி அடித்துவிடுகிறார்கள். ‘குழந்தைகளின் உலகில் பெண்களை அடிப்பதற்கு மட்டுமல்ல, பெண்களை அடிப்பவர்களுக்கும் இடமில்லை’ என்ற செய்தியை ஓங்கி உரக்க ஒலிக்கிறது இந்த வீடியோ. ஆண்மை, ஆண் என்று திமிருடன் உலவிக்கொண்டிருக்கும் ஆண்களுக்கிடையில் உண்மையான ஆண் யார் என்பதை இந்தச் சிறுவர்கள் வெகுசாதாரணமாகவும் அழகாகவும் சொல்லிவிடுகிறார்கள்.
வீடியோவைப் பார்க்க இந்த இணைப்புக்குச் செல்லவும்:https://www.facebook.com/JamsPlay/videos/1030325806979614/?fref=nf
 நன்றி: ‘தி இந்து’

Monday, October 5, 2015

சூரியன் என்ன விலை?


ஆசை
(‘தி இந்து’ நாளிதழின் ‘உயிர்மூச்சு’ இணைப்பிதழில் 03-10-2015 அன்று வெளியான கட்டுரை)
                                      தேசிய காட்டுயிர் வாரம் அக். 2 முதல் 8

இயற்கை மீது அளவுக்கு மீறி ஏன் கைவைக்கக் கூடாது என்பதற்குப் பதில் சொல்ல வேண்டுமென்றால், அதற்குப் பல்வேறு தரப்புகளிலிருந்து பதில் வழங்க முடியும். இயற்கை என்பது அழகானது, நாம் அதனுள் உள்ளடங்கும் ஒரு அம்சம்தான் என்றும், இயற்கை என்பது கடவுள் என்றும் பல்வேறு நம்பிக்கைகளிடமிருந்து பதில்கள் வரக்கூடும். ஆனால், லாப - நஷ்டக் கணக்கில் பதில் சொல்ல வேண்டுமென்றால், இயற்கை ஆரோக்கியமாக இல்லாவிட்டால் எந்த முன்னேற்றமும் வளர்ச்சியும் இருக்காது என்றுதான் பதில் சொல்ல வேண்டும். இயற்கையை இப்படி லாப-நஷ்டக் கண்கொண்டு பார்ப்பதுதான் பெரும் ஆபத்து.

ஒரு காட்டை அது விளைவிக்கும் பொருட்கள், அங்கு வேட்டையாடப்படும் உயிரினங்களின் சந்தை மதிப்பு போன்றவற்றையும், ஒரு மலையை அதில் இருக்கும் கனிம வளங்களைக் கொண்டும் மதிப்பிடுவதுபோல்தான் இது. சமீபத்தில் பிளாட்டினம் நிரம்பிய விண்கல் கடந்துபோனபோது, உலகெங்கும் உள்ள ஊடகங்களில் ஒரு செய்தி இப்படி வெளியானது:

இந்தியாவிலிருந்து உலகத்துக்கு...


ஆசை

நந்தா, பரவசத்தில் திளைப்பவன் என்பது
உனது பெயரின் பொருள்
நந்தா, இந்த உடலைப் பார்,
நோயுற்றது, அழுக்குடம்பு, துர்மணம் வீசுவது.
எவ்வளவு கடுமையாக இருந்தாலும் பரவாயில்லை
எதைக் கொண்டேனும் பண்படுத்து
கூர்தீட்டு, கவனம்குவியச் செய்
இந்த மனதை.
திறந்த மனப்பான்மையை விதை,
ஒழியட்டும் எல்லா முன்தீர்மானங்களும்
அகங்காரத்தை வெற்றிகொண்டாலோ,
சலனமில்லா வாழ்வுனது.
- புத்த மதப் பெண் துறவிகளின் 'தெரிகாதா' கவிதை நூலிலிருந்து

இந்திய இலக்கியத்தின் மொழிபெயர்ப்பு வரலாற்றை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்தியா என்றால் சம்ஸ்கிருத இலக்கியம்தான் என்ற பிரமை ஏற்படும்படி பெரும்பாலும் சம்ஸ்கிருத இலக்கியங்களின் மொழிபெயர்ப்புதான். விட்டகுறை தொட்டகுறையாகத் தமிழ் போன்ற மொழிகளிலிருந்தும் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது.

இந்தியா என்பது ஒற்றை மொழியின், ஒற்றைக் கலாச்சாரத்தின் நாடு அல்ல. பல்வேறு வண்ணங்கள், பல்வேறு மொழிகளின் இலக்கியங்கள் எல்லாம் சேர்ந்ததுதான் அதன் கலாச்சாரப் பெருமை. அந்தக் கலாச்சாரப் பெருமையை உலகமெங்கும் எடுத்துச் செல்லும் மாபெரும் முயற்சியொன்று சமீபத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் உள்ள செவ்வியல் இலக்கியங்களை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் அமைப்பொன்றை நிறுவுவதற்காக இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயண மூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி 52 லட்சம் டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ. 33,91,38,540) ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு வழங்கியிருக்கிறார். இந்த நிதியைக் கொண்டு 'மூர்த்தி கிளாஸிக்கல் லைப்ரரி ஆஃப் இந்தியா' (Murti Classical Library of India) என்ற அமைப்பு நிறுவப்பட்டிருக்கிறது. பிரபல இந்தியவியல் அறிஞர் ஷெல்டன் பொல்லாக், இதன் தலைமை பதிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பதிப்பாசிரியர் குழுவில் ஷெல்டன் பொல்லாக்குடன் ஹைடல்பெர்க் பல்கலைக்கழகத்தின் மோனிகா ஹார்ஸ்ட்மன், போஸ்டன் பல்கலைக்கழகத்தின் சுனில் ஷர்மா, ஜெருசலேம் ஹீஃப்ரூ பல்கலைக்கழகத்தின் டேவிட் ஷுல்மன் ஆகிய முக்கியமான இந்தியவியல் அறிஞர்கள் இருக்கிறார்கள்.
செவ்வியல் இலக்கியங்களே இலக்கு

அடுத்த 100 ஆண்டுகளில் 500 புத்தகங்கள் என்பது இந்த அமைப்பின் இலக்கு. ஆதி இலக்கியங்களிலிருந்து தொடங்கி, இந்திய இலக்கியத்தில் நவீனத்தின் சாயல் நுழைய ஆரம்பிக்காத கி.பி. 1800 வரை உருவான செவ்வியல் இலக்கியங்கள்தான் இவர்களின் எல்லை. இதன் முதல்முயற்சியாக ஐந்து புத்தகங்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டன. தொடக்க நூல்களில் எதுவுமே சமஸ்கிருத நூல் இல்லை என்பது கவனிக்கத் தக்கது. முதல் நூல், 18-ம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த சூஃபி ஞானி பாபா புலே ஷாவின் சூஃபிப் பாடல்கள். தொடக்கக் கால பஞ்சாபி மொழி இலக்கியத்தின் சாதனைகளுள் ஒன்றாக இந்தப் பாடல்கள் கருதப்படுகின்றன. வாய்மொழியாகவே காலங்களைக் கடந்த வந்த இந்தப் பாடல்களுக்கு நிறைய மொழிபெயர்ப்புகள் இதுவரை வந்திருக்கின்றன. இரண்டாவதாக, அக்பரின் வரலாற்றைச் சொல்லும் அக்பர் நாமாவின் முதல் பாகம். அக்பரின் காலத்திலேயே பாரசீக மொழியில் அஃபுல் ஃபஸல் என்பவரால் எழுதப்பட்ட நூல். 

மூன்றாவதாக, புத்தரின் காலத்தைச் சேர்ந்த புத்த மதப் பெண் துறவிகளின் கவிதைகளான தெரிகாதா. பாலி மொழியில் எழுதப்பட்ட இந்தக் கவிதைகள்தான் பெண்களால் எழுதப்பட்டவற்றில் உலகிலேயே மிகவும் தொன்மையான கவிதைகள். தெரிகாதாவின் வயது சுமார் 2500 ஆண்டுகள். நான்காவது நூல், மனுவின் கதை (மனுசரித்திரமு). தெலுங்கு மொழியின் மகாகவிகளுள் ஒருவரான அல்லாசாணி பெத்தண்ணா எழுதிய காவியம். ஐந்தாவது, சுர் சாகர். 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தி மொழிக் கவிஞர் சுர்தாஸ், கிருஷ்ணரைப் பற்றி எழுதிய பாடல்களின் பெரும் தொகுப்பு.

இந்தப் பதிப்புகளின் முக்கியமான அம்சங்கள் பல. முடிந்தவரை ஆதாரபூர்வமான பிரதிகளைக் கண்டெடுத்து அவற்றை ஒப்புநோக்கி சரியான மூலப் பிரதியைக் கொடுத்திருக் கிறார்கள். ஆம், ஒரு பக்கம் மூல மொழியிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது. எதிர்ப் பக்கத்தில் மொழிபெயர்ப்பு. பிற்சேர்க்கையாக, பாடபேதங்கள், பிரதியில் உள்ள சில கலாச்சாரச் சொற்கள், மரபுத்தொடர்கள் குறித்த விளக்கங்கள் போன்றவை இடம்பெற்றிருக்கின்றன.

நம்பகத்தன்மையும் இலக்கிய நயமும்
புத்தகங்களின் தொடக்கத்தில் முன்னுரையும், அறிமுகமும் இடம்பெற்றிருக்கின்றன. நம்பகத் தன்மை, இலக்கிய நயம் இரண்டும் காப்பாற்றப் பட்டிருப்பது மொழிபெயர்ப்பின் சிறப்பம்சம். இது தவிர இன்னும் சில விஷயங்களையும் குறிப்பிட வேண்டும். இந்தப் பதிப்புகளுக்கென்று அந்தந்த மொழிகளில் பிரத்யேகமான எழுத்துருக்கள் (Fonts) உருவாக்கப்பட்டிருக்கின்றன. புத்தகத்தின் வடிவமைப்பிலும் ஒருசீர்தன்மை காணப்படுகிறது. வடிவமைப்புக்காகப் போட்டிகள் வைத்து அதில் வெற்றிபெற்ற வடிவமைப்பையே இதில் பயன்படுத்துகிறார்கள். எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் ஒரு சிறு அலமாரியையே அடைக்கக் கூடிய இந்த புத்தகங்கள் அனைத்தையும் சேர்த்தால் மொத்த விலையே ரூ.1,300 சொச்சம்தான். இந்த நூல் வரிசையில் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலிருந்தும் செவ்விலக்கிய நூல்கள் விரைவில் வரவிருக்கின்றன என்பது மகிழ்ச்சியான செய்தி!
 - நன்றி: தி இந்து (2015ல் வெளியான கட்டுரை)

கீழ்க்கண்ட கட்டுரைகளையும் தவற விடாதீர்கள்:

1. ஷெல்டன் போலக்கும் மோடியின் அறிஞர்களும்


2. மூர்த்தி கிளாசிக்கல் லைப்ரரியில் என்ன நடக்கிறது?


Saturday, October 3, 2015

காந்தி தாத்தாவ நான் காப்பாத்துவேன்!



ஆசை

(எதிலும் பிரசுரமாகாத புத்தம் புதிய காப்பி)

காலையில் ஆறு மணிக்கு மூன்றரை வயது குழந்தையை எழுப்புவது வன்முறைதான். சத்தியம் திரையரங்கில் காலை 9 மணிக்கு காந்தி தாத்தா படத்துக்குப் போகணும் என்று சொல்லி அவனை எழுப்பிக் குளிப்பாட்டுகிறேன். குளிப்பாட்டும்போது அவன் கேட்கிறான், ‘அது பேய்ப் படமாப்பா?’ பேய்ப்படங்களின் ஜுரம் அவனையும் விட்டுவைக்கவில்லை. ‘ஆமாம்பா பேய்க்கும் காந்தி தாத்தாக்கும் சண்டை நடக்கும். கடைசியில் ஒரு பேய் காந்தி தாத்தாவ சுட்டுக் கொன்னுடும்’. ‘காந்தி தாத்தாவ நான் காப்பாத்துவேன்பா’ என்று சொல்லிவிட்டு என்னை அடிக்கிறான், என்னை என்னவோ அந்தப் ‘பேயாக’ நினைத்துக்கொண்டு.

ஏழரை மணிக்குக் கிளம்பியாயிற்று. வீட்டை விட்டுப் புறப்பட்டுச் செல்லும் வழியில் ஒருவர் தென்படுகிறார். ஆஹா, காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தியல்லவா! வண்டியை நிறுத்திவிட்டுக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவரிடம் ஓடுகிறேன். பின்னாலேயே துணைவியும். ‘ஐயா வணக்கம், நீங்கள் கோபால கிருஷ்ண காந்திதானே!’ என்று கேட்டேன். ‘ஆமாம்’ என்றார். காந்தி பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு எங்களை அறிமுகப்படுத்திகொள்கிறோம். மகனுக்கு ஆசிர்வாதம் செய்கிறார். துணைவியிடமும் ஒரு புன்சிரிப்பு. ‘காந்தி படத்துக்குத்தான் போய்க்கொண்டிருக்கிறோம்’ என்று சொன்னதும் புன்சிரிப்பு. ஆனால், அவசரமாக விடுபட்டுச் செல்ல முயல்கிறார் என்பதுபோல் தோன்றியது. சரி, அவர் வாக்கிங் செல்ல வேண்டிய நேரத்தில் நாம் ஆக்கிரமித்துக்கொண்டது தவறு என்ற நினைப்புடன் அவரிடம் விடைபெற்றுவிட்டுப் பயணம் தொடர்கிறது. சத்தியத்துக்கு வரும்போது எட்டரை மணி. ‘சத்தியம்’ திரையரங்கில் ‘காந்தி’ படம்! ஒரே கூட்டம். நிஜமாகவே கண்ணீர் எட்டிப்பார்த்துவிட்டது. ‘காந்தி’ படத்துக்கு இவ்வளவு கூட்டமா! ஓரிரு நிமிடங்களிலேயே விஷயம் புரிந்துவிட்டது. அது  ‘புலி’யிடம் அடிவாங்க வந்த கூட்டம்! நம் சமூகத்தைப் பற்றி இனிமேல் தப்பாக நினைக்கக் கூடாது என்று அவர்களுக்காகப் பரிதாபப்பட்டுக்கொண்டே திரையரங்கு செல்கிறோம்.

ஏழெட்டு பேர்தான் இருந்தார்கள். போகப்போகக் கூட்டம் சேரத் தொடங்கியது. அப்படியும் கால்வாசி இருக்கைகள் காலியாகத்தான் இருந்தன. படம் தொடங்கும் முன் ‘மீண்டும் காந்தி’ என்ற தலைப்பில் காந்தி பற்றிய பத்து நிமிடக் குறும்படம் ஒன்றைக் காட்டினார்கள். காந்தியவாதிகள், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், திலகவதி உள்ளிட்ட எழுத்தாளர்கள் காந்தியைப் பற்றிப் பேசினார்கள். அப்புறம் படம் தொடங்கியது. அதுவரை சின்னத்திரையில் மட்டும் அடிக்கடிப் பார்த்திருந்த அந்த அற்புதத்தை முதன்முறையாகப் பெரிய திரையில் பார்க்கும் பரவசம் ஆரம்பத்தில் தொடங்கி இறுதிவரை அப்படியே இருந்தது. ரிச்சர்டு அட்டன்பரோ உயிரோடு, நம் அருகில் இருந்திருந்தால் அப்படியே இறுக்கி அணைத்துக்கொண்டு கண்ணீர் மல்கியிருக்கலாம்.

படம் முடிவதற்கு முன்னாலேயே மகன் தூங்கிவிட்டான். தோளில் சுமந்தபடி, இறுதியில் பெயர் ஓடி முடிந்து திரையை அணைக்கும்வரை நின்று பார்த்துவிட்டு வெளியில் வந்தோம்.
வீட்டுக்கு வந்து மகனிடம் முறையிட்டேன். ‘காந்தி தாத்தாவ காப்பாத்துறேன்னு சொல்லிட்டுக் கடைசியிலே தூங்கிட்டியே. பாவம், அவர சுட்டுட்டாங்க தெரியுமா?’ என்றேன். ஏதோ தவறு செய்துவிட்டோமோ என்ற உணர்வுடன் முகத்தை வைத்திருந்துவிட்டு இப்படிச் சொன்னான், “அடுத்த தடவ காப்பாத்துறேன்.’

எச்சரிக்கை கோட்சே, அடுத்த முறை நீ வைக்கப்போகும் குறி அதன் இலக்கைப் போய் நிச்சயம் சேராது!

    

குற்றம் கடிதல்: இதயத்தை நோக்கி ஒரு சினிமா


ஆசை

(‘தி இந்து’ நாளிதழின் ‘இந்து டாக்கீஸ்’ சினிமா இணைப்பிதழில் நான் எழுதி, காந்தி ஜெயந்தி அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது.)

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக என்னவோ நடந்துகொண்டிருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.  புதுப்பேட்டை, பருத்திவீரன், சுப்பிரமணியபுரம், நான் கடவுள் தொடங்கி மூடர் கூடம், சூது கவ்வும், ஜிகர்தண்டா என்றெல்லாம் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். கலகத் தொனியிலான படங்கள், வன்முறையை அழகியல் உணர்வுடன் சித்தரித்தல் என்று இந்தப் படங்கள் பெரும்பாலும் குவெண்டின் டாரண்டினோவின் படங்கள், அமெரோஸ் பெர்ரோஸ், சிட்டி ஆஃப் காட் போன்ற படங்களின் தன்மையில் வருகின்றன. உலகெங்கும் உள்ள பெரும்போக்கு இது. இதன் தொடர்ச்சியாகத்தான் தமிழிலும் அப்படிப்பட்ட படங்கள் வருகின்றன என்பதைப் பார்க்க வேண்டும். எனினும், இன்னொரு போக்கும் உலக சினிமாவில் இருக்கிறது. அதுதான் ஈரானிய சினிமா. தமிழில் உலக சினிமாவைப் பற்றிய பேச்சு, விவாதங்கள் மிகப் பரந்த அளவில் சூடுபிடிக்கத் தொடங்கியது 2000-க்குப் பிறகுதான். அப்போது எங்கே பார்த்தாலும் ஈரானிய சினிமாவைப் பற்றிய பேச்சுதான். 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானிய சினிமாவைப் பற்றிப் பேசிவந்திருக்கிறோம். எனினும், அதைப் பின்பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லும்படியான படங்கள் ஏதும் எடுக்கவில்லை. அந்தக் குறையை ஓரளவுக்குப் போக்கும் வகையில் சமீபத்தில் வந்த படங்கள்தான் ‘காக்கா முட்டை’, ‘குற்றம் கடிதல்’ ஆகிய படங்கள்.

ஈரானிய சினிமாக்களின் பொதுப் போக்கு என்று பார்த்தாலும் அதிக அளவில் குழந்தைகளின் உலகம் வரும். ‘ஆப்பிள்’, ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ போன்றவை சரியான உதாரணங்கள். அடுத்ததாக, பெண்களின் உலகம் வரும். ‘த டே ஐ பிகேம் எ வுமன்’, ‘அட் ஃபைவ் இன் த ஆஃப்டர்னூன்’ போன்ற படங்கள். இவை தவிர போர் பற்றிய படங்கள், வாழ்வின் அழகுகள் அர்த்தங்கள் போன்றவற்றைத் தேடும் படங்கள் என்று ஈரானிய சினிமாவை வகைப்படுத்தலாம். இந்த எல்லாப் படங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை என்பது, இவை எல்லாமே ‘மறைந்திருந்து அச்சுறுத்தும் பெரிய உலகத்தின் பின்னணியில் சின்னஞ்சிறு உலகத்தை, சின்னஞ்சிறு சந்தோஷங்களை, அன்பை மிகவும் எளிமையாகச் சொல்பவை’ என்பதுதான். எளிமை என்பது ஈரானிய சினிமாவின் அடிநாதம். ‘சில்டர்ன்ஸ் ஆஃப் ஹெவன்’ படத்தைப் பார்த்துவிட்டு மேற்கத்திய விமர்சகர்கள் பலரும் சொன்னது, ‘இதென்ன இவ்வளவு எளிமையாக இருக்கிறது. ஒரு படம் என்றால் சிக்கல்கள் அதிகம் இருக்க வேண்டுமல்லவா?’ உண்மையில், எளிமையான காட்சி அமைப்பின் உள்ளே வாழ்க்கையின் சிக்கல்களை மறைத்துச் சொல்வதுதான் ஈரானிய சினிமா.

தமிழில் ஈரானிய சினிமாவுக்குச் சிறிய அளவில் முன்னோடியாக மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’, பாலு மகேந்திராவின் ‘வீடு’, ‘சந்தியா ராகம்’ போன்ற படங்களைச் சொல்லலாம். பிரம்மாண்டமான படங்களுக்கு எதிராக மகேந்திரன் எப்போதும் சொல்வார், “பிரம்மாண்டமாகப் படம் எடுப்பதற்குப் பதிலாக அன்பைப் பிரம்மாண்டமாகக் காட்டுங்கள்” என்று. அதற்கான தருணம் தமிழ் சினிமாவில் தற்போது காக்கா முட்டை, குற்றம் கடிதல் போன்ற திரைப்படங்களால் அமைந்திருப்பது ஆறுதல் அளிக்கும் விஷயம்.

Friday, October 2, 2015

இளைஞர்களுக்கும் காந்திக்கும் என்ன சம்பந்தம்?


ஆசை
(காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ‘தி இந்து’ நாளிதழின் ‘இளமை புதுமை’ இளைஞர் இணைப்பிதழில் வெளியான கட்டுரையின் முழுவடிவம் இது)

முதலில் ஒரு கேள்வி நம் எல்லோருக்கும் எழலாம். காந்திக்கும் இன்றைய அதிநவீன உலகத்துக்கும், குறிப்பாக காந்திக்கும் இன்றைய இளைஞர்களுக்கும் என்ன சம்பந்தம்? அவர் பழைய காலத்து ஆள் அல்லவா! இயந்திரங்கள், கருவிகள் போன்றவற்றுக்கு எதிரானவர் அல்லவா! நமக்கு எப்படி ஒத்துவருவார்?

நியாயமான கேள்விகளே. 

இதற்குச் சரியான பதில் என்னவென்றால் பல விஷயங்களில் காந்தி முன்னைவிட இப்போது பொருத்தமாக இருக்கிறார் என்பதே. முன்பை விட காந்தி இப்போது மிகவும் தேவைப்படுகிறார் என்பதே.

என்ன காலத்தால் ‘பின்தங்கிய’ ஆடையான அரையாடையை உடுத்திய கிழவர் முன்பைவிட இப்போதுதான் பொருத்தமாக இருக்கிறாரா? விளையாடாதீர்கள்! நாங்கள் வேறு யுகத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கும் காந்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறீர்களா?

இருக்கிறது, நிறைய இருக்கிறது.

ஹார்லே டேவிட்சன் பைக்கில் நூறு கிலோ மீட்டர் வேகத்துக்கும் அதிகமாக ஈசிஆரில் போய்க்கொண்டிருக்கிறீர்கள். அப்போது சற்று அருகே கர்ப்பிணிப் பெண் ஒருத்தர் (வெகு நேரமாகச் சாலையைக் கடக்க முயன்றுகொண்டிருந்த பெண் ஒருத்தர்) சாலையின் பாதி அளவுக்கு வந்துவிட்டார். நீங்கள் அதே வேகத்தில் போவதுதான் முக்கியம் என்றால் போய்க்கொண்டிருக்கலாம். அந்தப் பெண்ணின் மீது மோதவோ, அல்லது அவரைத் தடுமாறி விழச்செய்தோ நீங்கள் போய்க்கொண்டே இருக்கலாம். ஆனால், அந்தப் பெண்ணுக்காக வேகத்தைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தாலும் உங்களால் வேகத்தைக் குறைக்க முடியும். மிக அருகில் இல்லை என்பதனால் அது சாத்தியம். இரண்டில் எதை நீங்கள் செய்வீர்கள். நிச்சயமாக இரண்டாவதைதான் என்று நான் நம்புகிறேன். வேகம், வேகம் என்று வேகத்தையே உங்கள் வாழ்க்கையும் பைக்கும் பிரதானப்படுத்தினாலும் உங்களுக்கு அடிப்படையாக கருணையும் பரிவும் இருக்கிறதல்லவா? அந்தக் கருணைக்கும் பரிவுக்கும் உங்கள் வண்டியின் பிரேக் உதவி செய்கிறதல்லவா? அந்த பிரேக்தான் காந்தி. பிரேக்கே இல்லாத வண்டி எதையும் நீங்கள் வாங்கிவிட மாட்டீர்கள். ஏனெனில் பிரேக் என்பது மற்றவர்களுக்கு மட்டுமல்ல உங்கள் உயிருக்கும் முக்கியம்.

காந்தி தேசமும் மோடி தேசமும் நேரெதிரானவை: அ. மார்க்ஸ் நேர்காணல்


ஆசை
(காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு ‘தி இந்து’ நாளிதழில் வெளியான நேர்காணல் இது. வெளிவந்திருப்பது நீண்ட நேர்காணல் ஒன்றின் 10-ல் ஒரு பங்கு. கூடிய விரைவில் முழு வடிவத்தை நீங்கள் படிக்கலாம்.)

தீவிர இடதுசாரிப் பின்புலம் கொண்டவர் பேராசிரியர் அ. மார்க்ஸ். கூடவே, பெரியாரியத்திலும் ஈடுபாடு கொண்டவர். இப்படிப்பட்ட கோட்பாட்டுப் பின்னணியைக் கொண்ட ஒருவர், காந்தியைப் பற்றித் தொடர்ந்து ஆக்கபூர்வமான சித்திரத்தை முன்வைத்துவருவது அரிதான விஷயம். அ. மார்க்ஸுடன் பேசியதிலிருந்து…

தீவிர இடதுசாரிக் கோட்பாட்டுப் பின்புலத்திலிருந்து காந்தி நோக்கி நகர்ந்தது எப்படி?
என்னுடைய அப்பா மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஒரு கம்யூனிஸ்ட். அவர் மூலமாகத்தான் கம்யூனிஸக் கருத்துகள் சிறிய வயதிலேயே என்னை வந்தடைந்தன. என் அப்பா காந்தி, நேரு, அம்பேத்கர் போன்றவர்களைப் பற்றியும் தமிழ்நாட்டில் பெரியாரைப் பற்றியும் ஒரு ஆக்கபூர்வமான பிம்பத்தையே என்னிடத்தில் ஏற்படுத்தினார். வரலாற்றில் இவர்களை எதிரெதிர் தரப்பில் வைத்து எதிரிகளாகச் சித்தரிக்க முடியாது என்ற பார்வையை என்னிடம் அவர் ஏற்படுத்தினார். காந்தியை என்றுமே எதிரியாக நான் பார்த்ததில்லை. அவரை விமர்சித்திருக்கிறேன். என்றாலும் பலரும் காந்தியைத் தட்டையாகப் பார்ப்பதுபோல் நான் பார்ப்பதில்லை. சமூகத்தின் பன்மைத்துவத்தை நேசிக்கிற யாரும் காந்தியை வெறுக்க முடியாது.
நெருக்கடி நிலை, பாபர் மசூதி இடிப்பு, ஈழத்தில் நிகழ்ந்த இனஅழிப்பு ஆகிய மூன்று வரலாற்று நிகழ்வுகளும்தான் என்னை மேலும் காந்தியை நோக்கித் தள்ளின.
பலதரப்பு மக்களையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கக்கூடிய பார்வை என்பது இந்திய வரலாற்றில், குறிப்பாகச் சென்ற நூற்றாண்டு வரலாற்றில் காந்தியின் அளவுக்கு யாரிடமும் இல்லை.இந்தியாவை எந்த ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான தேசமாகவும் அவர் பார்க்கவில்லை. பல்வேறு சிறுபான்மை மக்களின் தொகுதியாகத்தான் அவர் இந்தியாவைப் பார்க்கிறார். இந்துக்களையும் தலித்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களை உள்ளடக்கிய சிறுபான்மைத் தொகுப்பாகத்தான் அவர் கருதியிருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்திய போராட்டங்களில் அவருடன் இருந்தவர்கள் குஜராத்திகள், முஸ்லிம்கள், தமிழர்கள். பெரிய அளவில் தலித் மக்களும் இருந்திருக்கிறார்கள். இந்தியா என்பது பல்வேறு மக்கள் சேர்ந்த தொகுதிதான் என்னும் கருத்து அவருக்கு அப்போதே உருவாகிறது.
இன்னொரு பக்கம், ஈழப் போராட்டம். 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தால் கடைசியில் யாருக்கும் விடுதலை கிடைக்காதது மட்டுமல்லாமல், இனஅழிப்பும் நிகழ்ந்தது. 1990-களுக்குப் பிறகு ஹமாஸ், ஸ்காட்லாந்தில் உள்ள ஆயுதப் போராட்ட இயக்கம் உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள் பலவும் ஆயுதப் பாதையைக் கைவிட்டு வேறு விதமான பாதைக்குச் செல்வது என்று முடிவெடுப்பதற்குப் பல பத்தாண்டுகளுக்கு முன்பே அமைதி வழியைத் தேர்ந்தெடுத்தவர் காந்தி.

Wednesday, September 30, 2015

காந்தி தாத்தாவின் செல்லக் குட்டிகள்


ஆசை

(காந்தி ஜெயந்தி வாரத்தை முன்னிட்டு ‘தி இந்து’ நாளிதழின் ‘மாயாபஜார்’ சிறுவர் இணைப்பிதழில் 30-09-2015 அன்று வெளியான கட்டுரை)

குழந்தைகளே, உங்களுக்கெல்லாம் காந்தி தாத்தாவை ரொம்பப் பிடிக்கும்தானே! காந்தி தாத்தாவுக்கும் உங்களையெல்லாம் ரொம்பப் பிடிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆமாம், அவரது ஆசிரமத்தில் எவ்வளவு குழந்தைகள் இருந்தார்கள் தெரியுமா? எல்லோரும் காந்தி தாத்தாவின் செல்லங்கள். அது மட்டுமல்லாமல், அவர் போகும் இடங்களிலெல்லாம் குழந்தைகளையும் சிறுவர்களையும் கொஞ்சி மகிழ்வதும் அவர்களுடன் விளையாடுவதும் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். பெரிய பெரிய தலைவர்களுடன் விவாதம் நடத்திக்கொண்டிருக்கும்போதுகூட அவர் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருப்பார்.

நீங்கள் ‘காந்தி’ திரைப்படம் பார்த்திருப்பீர்கள் அல்லவா! அதில் ஒரு காட்சியில் நேரு, படேல் போன்ற தலைவர்களுடன் காந்தி ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார். அப்போது ஒரு சிறுவன் ஆட்டுக்குட்டியுடன் வருவான். “பாபு, இந்த ஆட்டுக்குட்டிக்குக் கால் உடைந்துவிட்டது. இதை நாம் சரிப்படுத்துவோம்” என்று சொல்லிவிட்டு முன்னே செல்வான். உடனே, காந்தி அந்தத் தலைவர்களிடம் இப்படிச் சொல்வார்: “என்னை மன்னிக்க வேண்டும். எனக்கு முக்கியமான ஒரு வேலை இருக்கிறது. அதை முடித்துவிட்டு வருகிறேன்.”
தலைவர்கள் வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்க காந்தி அந்தச் சிறுவனைப் பின்தொடர்ந்து செல்வார். தேச விடுதலையைப் போலவே குழந்தைகளுக்கும் அவர் முக்கிய இடம் கொடுத்திருக்கிறார் பாருங்கள்.

சுதந்திரப் போரில் ஈடுபட்டு காந்தி தாத்தா பலமுறை சிறை சென்றிருக்கிறார். அப்படிச் சிறையில் இருக்கும்போது அவர் பெரும் தலைவர்களுக்கெல்லாம் கடிதம் எழுதுவார். அது மட்டுமல்ல, தனது ஆசிரமத்திலுள்ள குழந்தைகளுக்கும் கடிதம் எழுதுவார். அந்தக் கடிதங்களில் ஒன்று இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. படித்துப்பார்த்து, காந்தி உங்களையெல்லாம் எப்படி நேசித்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

சின்னஞ்சிறு குருவிகளுக்கு…
சின்னஞ்சிறு குருவிகளே, சாதாரணக் குருவிகள் சிறகு இல்லாமல் பறக்க முடியாது. சிறகு இருந்தால்தான் எல்லோருமே பறக்கலாமே. ஆனால், சிறகு இல்லாமலே பறப்பது எப்படி என்று நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது உங்கள் தொல்லைகளெல்லாம் நீங்கிவிடும். அப்படிப் பறக்க நான் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கிறேன்.
இங்கே பாருங்கள், எனக்குச் சிறகு இல்லை; என்றாலும் எண்ணத்திலே ஒவ்வொரு நாளும் உங்களிடம் நான் பறந்துவருகிறேன். அடடா! இதோ இருக்கிறாள் விமலாக்குட்டி; இதோ வருகிறான் ஹரி. இதோ இருக்கிறான் தர்மகுமார். நீங்களும்கூட எண்ணத்திலே என்னிடம் பறந்துவர முடியும்…
உங்களிலே யார் பிரபு பாயின் மாலைப் பிரார்த்தனையின்போது ஒழுங்காய்ப் பிரார்த்தனை செய்துவராதவர்? அதை எனக்குத் தெரிவியுங்கள்.
எல்லோரும் கையெழுத்திட்டு எனக்கு ஒரு கடிதம் அனுப்புங்கள். கையெழுத்திடத் தெரியாதவர். கடிதத்தில் ஒரு சிலுவைக் குறி போட்டால் போதும்.
-ஆசிர்வாதங்களுடன் பாபு (காந்தி)
(குறிப்பு: இந்த கடிதம் - லூயி ஃபிஷரின் ‘காந்தி வாழ்க்கை’ நூலிலிருந்து எடுக்கப்பட்டது; மொழிபெயர்ப்பு: தி.ஜ.ர. வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்.)

படித்தீர்கள் அல்லவா, இப்போது நீங்கள் எல்லோரும் காந்தி தாத்தாவுக்குப் பதில் கடிதம் எழுதுங்கள். காந்தி தாத்தாதான் இப்போது உயிருடன் இல்லையே, எப்படி அவருக்குக் கடிதம் எழுதுவது என்று நீங்கள் முணுமுணுப்பது காதில் விழுகிறது. அதனால் என்ன, கடிதம் எழுதி உங்கள் ஆசிரியரிடமோ அல்லது அம்மா, அப்பாவிடமோ காட்டுங்கள்!
 -  நன்றி: தி இந்து

Tuesday, September 29, 2015

ஃபோக்ஸ்வாகன் காரும் ஏமாற்றும் மென்பொருள்களின் யுகமும்


ஜெய்னெப் டூஃபெக்ஸி

(‘தி இந்து’ நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் 29-09-2015 அன்று எனது சுருக்கமான மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை)

கடந்த ஆறு ஆண்டுகளாக ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தார் ஒரு பொய்யைத் தொடர்ந்து விளம்பரப்படுத்திக்கொண்டிருந்தார்கள்: “உயர்தரமான, சுத்தமான டீசல்” கார்கள். அதுமட்டுமல்லாமல் எரிபொருள் திறன் மிக்க, புகைவெளியீடு அதிகம் இல்லாத கார்கள் என்றெல்லாம் விளம்பரம் வேறு. இப்போதல்லவா தெரிகிறது ஃபோக்ஸ்வாகன் கார்களெல்லாம் எந்த அளவுக்குச் சுத்தமான டீசல் கார்கள் என்று! நம்மையெல்லாம் ஏமாற்றியிருக்கிறார்கள். மாசுக்கட்டுப்பாட்டு ஆய்வுகளில் மட்டும் யோக்கியமாக நடந்துகொள்வதைப் போன்ற ஒரு மென்பொருளை அவர்கள் கார்களில் பொருத்தியிருக்கிறார்கள்.
ஆனால், ஆய்வுக்குட்படுத்தப்படும் நேரங்களைத் தவிர மற்ற நேரத்தில் அளவுக்கு அதிகமான புகையை வெளியிட்டு இந்தக் கார்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. எந்த அளவுக்கு என்றால், அனுமதிக்கப்பட்ட அளவை விட 40 மடங்கு அதிகம் நைட்ரஜன் ஆக்ஸைடை வெளியிடுகின்றன; அதாவது ஆய்வு நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில். சுற்றுச்சூழலுக்கு உகந்த கார்கள் என்று இப்படி மாறுவேஷம் போடும் கார்களை வாங்குவதற்காகக் கார்களின் உரிமையாளர்களுக்கு 5 கோடியே 10 லட்சம் டாலர் (ரூ. 337,43,35,950) அளவுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்றால் பாருங்களேன்.

Friday, September 25, 2015

எனக்கு மரண தண்டனை கொடுங்கள்!


ஆசை

(‘தமிழ் இன்று’ இணைய இதழில் 2010ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதம். இந்தக் கடிதம் இன்று மோடிக்கு அனுப்பினால் இன்னும் பொருத்தமாக இருக்கும். இந்தக் கடிதங்களால் எந்தப் புண்ணியமும் இல்லைதான். ஒரு சம்பவத்தால் பாதிக்கப்பட்டு அந்த கோபத்தில் உடனடியாக எழுதிய கடிதம் இது.)

இந்த நாட்டிலே மிகவும் சக்தியற்றவர்களுள் ஒருவனாகிய நான் என்னை விடவும் சக்தியற்ற பிரதமர் அவர்களுக்கு எழுதும் கடிதம். 'மதிப்புக்குரிய பாரதப் பிரதமர்' அவர்களுக்கு, 'மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு' என்றெல்லாம்தான் இந்தக் கடிதத்தை நான் துவங்க விரும்பினேன். ஆனால், உங்களுக்கு மதிப்போ மாண்போ உண்மையில் இருப்பதாக நீங்களே நினைக்க மாட்டீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

Wednesday, September 23, 2015

தட்டானுக்குள் வானம்


ஆசை

 (‘தி இந்து’ நாளிதழின் ‘மாயாபஜார்’ சிறுவர்கள் இணைப்பிதழில் 23-09-2015 அன்று வெளியான கதை)

வாண்டுகளின் குட்டி இளவரசி ஆனந்தியைப் பற்றிப் போன வாரம் கொஞ்சம் சொல்லியிருந்தேன் அல்லவா!

ஆனந்தி, அழகான குட்டிப் பெண். அவளுக்குக் கண்கள் சிறியதாகவும் அழகாகவும் இருக்கும். அவளைக் கடந்து செல்லும் யாரும் அவளுடைய கண்களைப் பார்த்துவிட்டால், அவர்களுடைய முகம் பெரிதாக மலர்ந்துவிடும்.
ஆனந்திக்கு ஒரு பழக்கம். தினமும் வீட்டுக்கு வெளியில் வந்து விளையாடிக்கொண்டிருப்பாள். அப்போது தெருவில் யார் போனாலும் அவளுடன் பேசிவிட்டுப் போயாக வேண்டும். தெரிந்தவர்களோ, தெரியாதவர்களோ எல்லோரும் அவளுடன் பேசிவிட்டுத்தான் போக வேண்டும். இல்லையென்றால் அழ ஆரம்பித்துவிடுவாள்.

ஒரு நாள், தரையைப் பார்த்தபடி பூனை மாதிரி பதுங்கிப் பதுங்கிப் போய்க்கொண்டிருந்தாள் ஆனந்தி. என்னவென்று போய்ப் பார்த்தேன். நெருப்பெறும்பு ஒன்று தத்தித் தடுமாறிப் போய்க்கொண்டிருந்தது. ஆனந்தியைப் பார்த்தேன். அவள் கண்களில் நீர்.
‘ஏன்டிச் செல்லம் அழுதுட்டிருக்கிறே?’ என்று கேட்டேன்.

இனப்படுகொலையின் மறுபக்கத்தில் இரண்டு தேன்சிட்டுக்கள்



ஆசை 

வரலாறு என்பது
ஒற்றைத் தாள்தான்

அந்த ஒற்றைத் தாளின்
முதல் பக்கத்தின் பெரும் பரப்பில்
இனப்படுகொலை
நடந்துகொண்டிருக்கிறது
மறுபக்கத்தின் பெரும்பரப்பில்
தேடித் தேடித் தேன் குடிக்கும்
தேன்சிட்டுக்கள் இரண்டு

இனப்படுகொலை
தொலைநோக்குப் பார்வை கொண்டது
எதிரியாகக் கூடும் என்று
சிறுவர்களையும்
எதிரியைத் தன் கருவறையில்
சுமக்கக்கூடும் என்று
சிறுமிகளையும் அழிக்கிறது

தேன்சிட்டுக்கு
முதல் பக்கத்தின் இனப்படுகொலை
தெரியாதது போல்
இனப்படுகொலைக்கும்
மறுபக்கத்தின்
தேன்சிட்டுக்களைத் தெரிவதில்லை

மறுபக்கத்தில்
தேன்சிட்டுக்களாய் இருந்திருக்கக் கூடிய
குழந்தைகளை
அது கொல்கிறது

ஓலத்திற்குப் பதிலாக
ரத்தம் மட்டும் வெளியேறி
முதல் பக்கத்தின் பெரும் பரப்பில்
சொட்டுகிறது

மறுபக்கம்
ரத்தச் சிவப்பில் ஊறிவரும்
புள்ளி ஒன்றைக் கண்டுகொண்ட தேன்சிட்டு
தன் துணையிடம் காட்டுகிறது

தேன் குடிப்பதை விட்டுவிட்டு
ரத்தச் சிவப்பை நோக்கிப்
பறக்கின்றன இரண்டும்
 ... ... ... 
தேன்சிட்டுக்கள்
ரத்தத்தைக் குடிக்கப் பழகுவதற்கு முன்
எரித்தழித்துவிட வேண்டும்
வரலாற்றின்
அந்த ஒற்றைத் தாளை

        - 2012 வாக்கில் நான் எழுதிய கவிதை இது. சமீபத்தில்தான் கண்டெடுத்தேன்.

Thursday, September 17, 2015

பூதாகரமாகும் அகதிகளின் துயரம்


(‘தி இந்து’ நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் 15.09.2015 அன்று என் மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை)

உலகம் திடீரென்று கண்விழித்துக் கொண்டதுபோல் இருக்கிறது. ஆம், குழந்தை ஆலன் குர்தி கரையொதுங்கிய புகைப்படம்தான் உலகத்தைக் கண் திறக்கச் செய்திருக்கிறது. அகதிகள், புலப்பெயர்வு, மரணம் இந்தச் சொற்களையெல்லாம் உலகெங்கும் உச்சரிப்பதற்கு ஒரு குழந்தை கரையொதுங்க வேண்டியிருந்திருக்கிறது. அகதிகள் பிரச்சினை பூதாகரமாகியிருக்கிறது. இது புலப்பெயர்வு பிரச்சினை என்றே உலகம் சொல்லிக்கொண்டிருக்கிறது. அப்படிச் சொல்வது பிரச்சினையின் தீவிரத்தைக் குறைப்பதே. உண்மையில் இது அகதிகள் பிரச்சினைதான்.
செப்டம்பர் முதல் வாரம் வரை, ஐரோப்பாவில் தஞ்சம் புக முயன்று பலியானவர்களின் எண்ணிக்கை 2,760 என்கிறது ஒரு கணக்கு. இதனால், 2014-ஐ விட 2015 மிகவும் கொடுமையான ஆண்டாகியுள்ளது. 2014-ம் மோசமான ஆண்டுதான். இதுபோன்ற விபத்துகளில் கடந்த ஆண்டு பலியானோரின் எண்ணிக்கை 3,000-க்கும் அதிகம்.

Wednesday, September 16, 2015

பெரிய்ய்ய்ய பெரிய்ய்ய்ய வானம்…

                             ஓவியம்: ராஜே
ஆசை
(‘தி இந்து’ நாளிதழின் ‘மாயாபஜார்’ சிறுவர் இணைப்பிதழில் 16.09.2015 அன்று வெளியான கதை)

அய்யய்யோ இந்த ஆதியும் ஆனந்தியும் படுத்தும் பாடு இருக்கிறதே!
கம்ப்யூட்டரின் முன்னால் நான் உட்கார்ந்துகொண்டால் போதும் எங்கிருந்தாலும் ஓடிவந்துவிடுவார்கள். “சித்தப்பா, சித்தப்பா ஏதாவது நல்ல நல்ல ஃபோட்டோவா காட்டு” என்று அரித்தெடுப்பார்கள்.
இதில் பெரியவனும் சின்னவளும் வேறு வேறு மாதிரி.
பெரியவன் ஆதிக்குப் பெரிய பெரிய விஷயங்களாகக் காட்ட வேண்டும். சின்னவள் ஆனந்தியோ சின்ன விஷயங்களையே காட்டச் சொல்லி அடம்பிடிப்பாள்.
ஒரு நாள் கம்ப்யூட்டர் முன் உடகார்ந்திருந்த என்னிடம் ஆதி வந்தான். “பெரிய பெரிய விலங்கா காட்டு சித்தப்பா” என்றான் ஆதி.
முதலில் ஒட்டகத்தைக் காட்டினேன்.
“இன்னும் பெருசா காட்டு சித்தப்பா” என்றான்.
ஒட்டகச்சிவிங்கியைக் காட்டினேன்.
“இன்னும் பெரிசா” என்றான்.
யானையைக் காட்டினேன்.
“அட, இன்னும் பெரிசா” என்றான்.
டைனோசரைக் காட்டினேன்.
“இதுக்கும் மேல பெரிசா” என்றான்.
நீலத் திமிங்கிலத்தைக் காட்டினேன்.
“இதைவிட பெரிசா” என்றான்.
“இதுக்கும் மேலே பெருசா, எந்த விலங்கும் இல்லடா ஆதி” என்றேன்.
“போ சித்தப்பா, பொய் சொல்லாதே. கம்ப்யூட்டர் அளவுதான் இருக்குது; அதைப் போய் பெரிய விலங்குன்னு சொல்றே. இன்னும் ஏதாவது பெரிசா இருக்கும் பாரு” என்றான்.
“எவ்வளவு பெரிய விலங்கா இருந்தாலும், கம்ப்யூட்டர்ல சின்னதாத் தான் தெரியும் ஆதி. உன்னோட படத்தைக் கம்ப்யூட்டர்ல பார்த்தாலும், நீ சின்னதாதான் தெரிவே. ஆனா, நீ கம்ப்யூட்டரவிடப் பெருசாத்தானே இருக்கே” என்று கேட்டு, அவனை மடக்கிவிட்டதாக நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டேன்.
இந்தப் பதில் அல்ல, எந்தப் பதிலாலும் அவனைத் திருப்திப்படுத்த முடியாது என்றே தோன்றியது. நான் பொய் சொல்கிறேன் என்றுதான் நினைத்தான் அவன்.
பெரிய பெரிய மனிதன். பெரிய பெரிய பொக்லைன். பெரிய பெரிய சாலை. பெரிய பெரிய கடல். பெரிய பெரிய நாடு. பெரிய பெரிய பெரிய பெரிய…
இப்படி எவ்வளவு ‘பெரிய’தெரியுமா?
சலித்துப்போய் ஒரு தடவை என்னிடம், “பெருசெல்லாம் இவ்வளவு சின்னதாத்தான் இருக்குமா?” என்று கேட்டான்.
ஒருமுறை உயரமான ஈஃபில் கோபுரத்தை கம்ப்யூட்டரில் காட்டினேன். ‘இன்னும் பெரிசா’ என்றான். 102 மாடிகளைக் கொண்ட எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைக் காட்டினாலும் ‘இன்னும் பெரிசா’என்றான். 163 மாடிகளைக் கொண்ட துபாய் புர்ஜ் காலிஃபா கோபுரத்தைக் காட்டினாலும், அப்படியே கேட்டான். மனிதர்கள் கட்டியதில் இதைவிட உயரமானது வேறு ஏதும் இல்லை என்று சொன்னால், அவன் கேட்க மாட்டானே என்பதால் எவெரெஸ்ட் சிகரத்தைக் காட்டினேன்.
அப்போதும், ‘இன்னும் பெருசா’என்றே கேட்டான். கோபத்துடன் அவனை வெளியில் இழுத்துக்கொண்டு வந்தேன். இருட்டாக இருந்தது. வானத்தில் விண்மீன்களெல்லாம் கணக்கே இல்லாமல் கொட்டிக்கிடந்தன. ‘இன்னும் பெருசான்னா, இதுதான் எல்லாத்தையும் விடப் பெருசு”
என்று ஆதியிடம் வானத்தைக் காட்டினேன்.
அப்போதும் திருப்தி அடையவில்லை அவன்.
“வானத்தைவிட பெருசு எது சித்தப்பா?” என்று வெகு சாதாரணமாகக் கேட்டான். எனக்குக் கோபம் போன இடமே தெரியவில்லை. குப்பென்று சிரிப்பு வந்தது.
அவனைத் தூக்கி முத்தமிட்டுவிட்டுச் சொன்னேன்: “எல்லாத்தையும்விடப் பெருசு உன்னோட கண்ணுதான். எவ்வளவு பெரிய விஷயமா இருந்தாலும், அதை உன்னோட கண்ணு சின்னதா மாத்திடுது இல்லையா. எவ்வளவு பெரிய கட்டிடமா, மலையா, வானமா இருந்தாலும், உன்னோட கண்ணுக்குள்ள ஒரு புள்ளியாதானே மாறுது. எவ்வளவு பெரிய விஷயத்தைக் காட்டினாலும் உன்னோட கண்ணுக்கு அது பத்த மாட்டங்குதுல்ல. அதனால, இந்த உலகத்திலேயே பெருசு உன்னோட கண்ணுதான்.”
அப்போதுதான் ஆதி முகத்தில் பெரிய வியப்பு ஏற்பட்டது.
“அப்போ, என் கண்ணுதான் எல்லாத்தையும்விடப் பெரிசா சித்தப்பா?” என்று கேட்டான்.
“ஆமாண்டா என் கண்ணு. உன் கண்ணுக்கு முன்னாடி எல்லாம் சின்னதுதான்” என்றேன்.
ஆதி இப்படியென்றால், ஆனந்தி எப்படித் தெரியுமா? அடுத்த புதன்கிழமை வரை காத்திருங்கள் வாண்டுகளே!
 - நன்றி: ‘தி இந்து’
 ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கதையைப் படிக்க: 

பெரிய்ய்ய்ய பெரிய்ய்ய்ய வானம்…

Tuesday, September 15, 2015

புலப்படாத பறவையின் உடலைத் தேடி...


ஆசை

('தி இந்து’ தமிழ் நாளிதழில் ‘பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி’யின் நிறுவன நாளை முன்னிட்டு 15-09-2015 அன்று வெளியான என் கட்டுரையின் சற்றே விரிவான வடிவம்)

முகப்பில் இருவாச்சிப் பறவையின் சின்னத்துடன் உயர்ந்தெழுந்து நிற்கிறது மும்பை சாலிம் அலி சவுக்கில் உள்ள ‘பாம்பே இயற்கை வரலாற்றுக் கழகம் (பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி). சுருக்கமாக, பி.என்.எச்.எஸ் (BNHS). மும்பையின் முக்கியமான இடங்களுள், நெரிசல் மிகுந்த இடங்களுள் ஒன்றாக இருந்தாலும் அந்தப் பிரதேசத்தில் சமீபத்திய தொன்மையின் வாசனை வீசியது. பி.என்.எச்.எஸ் கட்டிடத்துக்கு எதிரே லயன் கேட் இருக்கிறது. அருகில் விக்டோரியா மியூசியம், ஜஹாங்கிர் ஆர்ட் கேலரி, ஏசியாட்டிக்  நூலகம் போன்ற முக்கியமான கட்டிடங்கள். பெரும்பாலானவை, ஆங்கிலேயர் காலக் கட்டிடங்கள். அங்கிருந்து ஐந்து நிமிட நடையில் தாஜ் ஹோட்டலும் (அஜ்மல் கசாபால் இப்போது மேலும் பிரபலம்), அரபிக் கடலுக்கு வணக்கம் தெரிவிக்கும் இந்தியா கேட்டும்.

பி.என்.எச்.எஸ்-ஸுக்குச் செல்வதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள். 1, ஜெர்டான்ஸ் கோர்ஸர் என்னும் பறவை. 2, இந்தியாவின் பறவைத் தாத்தா என்று அறியப்படும் சாலிம் அலி (1896-1987) தன் வாழ்நாளின் கணிசமான பகுதியைக் கழித்த இடம் அது.

Monday, September 14, 2015

பாரதியும் சூரியனைச் சுட்டிக்காட்டிய மல்பெரியும்


ஆசை

(‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்கத்தில் பாரதி நினைவு வாரத்தையொட்டி 12.09-2015 அன்று வெளியான கட்டுரை)

பாரதியின் பாடல்களைப் புரட்டிக்கொண்டுவரும்போது ‘இந்த ஆள் எதையோ இடைவிடாது ஏக்கத்துடன் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்’ என்ற உணர்வு ஏற்படுகிறது. விநாயகர் அகவலில் ஆரம்பித்து ‘மனதில் உறுதி வேண்டும்’ வரை எத்தனையோ ‘வேண்டும்’ பாடல்கள். எத்தனை கனவுகள், எத்தனை தவிப்புகள்! ஆனால், இந்தச் சமூகம் அவரது ‘வேண்டும்’ வேண்டுகோளுக்குச் செவிசாய்க்கவே இல்லையே. அவரை ‘சீட்டுக்கவி’ எழுத வைக்கிறது. அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாட வைக்கிறது. அவரது வேண்டுகோளுக்கு அவர் வேண்டும் ‘பராசக்தி’யும் செவிசாய்க்கவில்லை. ஒருவேளை இவ்வளவு அழகான வேண்டுகோள்களைக் கேட்கும் வாய்ப்பை இழந்துவிடுவதைப் பற்றிய அச்சத்தில்தான் ‘பராசக்தி’ பாரதியின் ஆசைகளை நிறைவேற்றவில்லையோ?

‘ஒளியும் இருளும்’ என்ற கவிதை பாரதியின் மிகச் சிறந்த கவிதைகளுள் ஒன்று. காதல் தவிர்த்து அவர் எழுதிப் பிரபலமான கவிதைகளெல்லாம் எழுச்சி நிரம்பியவை. வேண்டுகோள் விடுத்தால்கூட அதில் ஒரு கம்பீரம், அதட்டல் இருக்கும், ‘இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ’ என்பதுபோல. ஆனால், இருள் நிரம்பிய நெஞ்சமொன்றின் குமுறலாக இந்தப் பாடல் வெளிப்பட்டிருக்கும்.
‘வான மெங்கும் பரிதியின் சோதி;
மலைகள் மீதும் பரிதியின் சோதி;
தானை நீர்க்கடல் மீதிலு மாங்கே
தரையின் மீதுந் தருக்களின் மீதும்
கான கத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள்மீதும் பரிதியின் சோதி;
மான வன்ற னுளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது வென்னே!’

Tuesday, September 8, 2015

ஒற்றைக் கால் மைனாவும் கரை ஒதுங்கிய குழந்தையும்

                                                              
ஆசை

(‘தி இந்து’ நாளிதழில் 08-09-2015 அன்று வெளியான கட்டுரை)

கரை ஒதுங்கிய பொம்மையைப் போலக் கிடந்த சிரியா குழந்தை அய்லானின் புகைப்படத்தைப் பார்த்தபோது ஒற்றைக் கால் மைனாவின் நினைவு வந்தது.
தெருவொன்றின் திருப்பத்தில் கண்ணில் பட்டது அந்த மைனா. அது தத்தியபோது ஏதோ ஒன்று வித்தியாசமாகத் தெரிந்தது. அதற்கு ஒரே ஒரு கால்தான்! கடந்துசெல்லும்போது இது கண்ணில் பட்டாலும் மனதில் ஓரிரு நொடிகளுக்குப் பிறகுதான் உறைத்தது. அதிர்ந்துபோய், சைக்கிளை நிறுத்திவிட்டுப் பார்த்தால், அந்த மைனா பறந்துபோய்விட்டது. அது நின்ற கோலமும், தத்திய கோலமும் நான்கைந்து நொடிகளுக்கு மேல் பார்வையில் விழுந்திருக்காது எனினும், அசைவுச் சித்திரம்போல் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன. ஒரு படச்சுருளைக் கையிலெடுத்துப் பார்ப்பதுபோல் ஒற்றைக்கால் மைனாவின் அந்த நான்கைந்து நொடிகளையும் மனம் எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தது.
வாலில்லாத நாய், காலில்லாத நாய் போன்றவற்றை யெல்லாம் பார்த்ததுண்டு. ஆனால், சுதந்திரமாகச் சுற்றித்திரியும் பறவையொன்று ஒற்றைக் காலுடன் இருப்பதைப் பார்த்தது அதுவே முதல்முறை.
இயற்கையின் மீது தன்னுடைய சோகம் உள்ளிட்ட உணர்வுகளை ஏற்றிச்சொல்லும் அணி ஒன்று யாப்பிலக்கணத்தில் இருக்கிறது. அதுபோன்று, அந்த மைனாவுக்கு இருப்பதாக ஒரு சோகத்தைக் கற்பனை செய்துகொண்ட மனம், அந்த சோகத்தை மைனா மீது ஏற்றிப்பார்த்து வருத்தப்பட ஆரம்பித்தது. உண்மையில் மைனாவுக்குச் சோகம் இருக்குமா இருக்காதா என்று தெரியாவிட்டாலும், அப்படியே மைனா சோகமாக இருந்தால் அதை அறிந்துகொள்ள வழியேதும் இல்லாவிட்டாலும் மைனாவின் நிலையை நினைத்து வருத்தம் மேலிட்டது.
அதற்குப் பிறகு சென்னையில் ஏராளமான ஒற்றைக் கால் காகங்கள் கண்ணில் பட ஆரம்பித்தன.