ஆசை
(‘தி இந்து’ நாளிதழில் 08-09-2015 அன்று வெளியான கட்டுரை)
கரை ஒதுங்கிய பொம்மையைப் போலக் கிடந்த சிரியா குழந்தை அய்லானின் புகைப்படத்தைப் பார்த்தபோது ஒற்றைக் கால் மைனாவின் நினைவு வந்தது.
தெருவொன்றின் திருப்பத்தில் கண்ணில் பட்டது அந்த மைனா. அது தத்தியபோது ஏதோ ஒன்று வித்தியாசமாகத் தெரிந்தது. அதற்கு ஒரே ஒரு கால்தான்! கடந்துசெல்லும்போது இது கண்ணில் பட்டாலும் மனதில் ஓரிரு நொடிகளுக்குப் பிறகுதான் உறைத்தது. அதிர்ந்துபோய், சைக்கிளை நிறுத்திவிட்டுப் பார்த்தால், அந்த மைனா பறந்துபோய்விட்டது. அது நின்ற கோலமும், தத்திய கோலமும் நான்கைந்து நொடிகளுக்கு மேல் பார்வையில் விழுந்திருக்காது எனினும், அசைவுச் சித்திரம்போல் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன. ஒரு படச்சுருளைக் கையிலெடுத்துப் பார்ப்பதுபோல் ஒற்றைக்கால் மைனாவின் அந்த நான்கைந்து நொடிகளையும் மனம் எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தது.
வாலில்லாத நாய், காலில்லாத நாய் போன்றவற்றை யெல்லாம் பார்த்ததுண்டு. ஆனால், சுதந்திரமாகச் சுற்றித்திரியும் பறவையொன்று ஒற்றைக் காலுடன் இருப்பதைப் பார்த்தது அதுவே முதல்முறை.
இயற்கையின் மீது தன்னுடைய சோகம் உள்ளிட்ட உணர்வுகளை ஏற்றிச்சொல்லும் அணி ஒன்று யாப்பிலக்கணத்தில் இருக்கிறது. அதுபோன்று, அந்த மைனாவுக்கு இருப்பதாக ஒரு சோகத்தைக் கற்பனை செய்துகொண்ட மனம், அந்த சோகத்தை மைனா மீது ஏற்றிப்பார்த்து வருத்தப்பட ஆரம்பித்தது. உண்மையில் மைனாவுக்குச் சோகம் இருக்குமா இருக்காதா என்று தெரியாவிட்டாலும், அப்படியே மைனா சோகமாக இருந்தால் அதை அறிந்துகொள்ள வழியேதும் இல்லாவிட்டாலும் மைனாவின் நிலையை நினைத்து வருத்தம் மேலிட்டது.
அதற்குப் பிறகு சென்னையில் ஏராளமான ஒற்றைக் கால் காகங்கள் கண்ணில் பட ஆரம்பித்தன.
ஒற்றைச் சிறகை மட்டுமே அடித்துக்கொண்டு பறக்கும் காகம் ஒன்றும் கண்ணில் பட்டது. தத்தித் தத்தியே இரையைப் பொறுக்கிக்கொண்டிருந்தது அந்தக் காகம். தெருவின் இந்த முனையிலிருந்து அந்த முனை வரை மனிதர்கள் நடந்து போவதைப் போலவே நடந்துசென்றது. பறக்கவே பறக்காதோ என்று நினைத்துக்கொண்டிருந்த தருணத்தில், ஒற்றைச் சிறகை மட்டும் தள்ளாட்டத்துடன் அடித்துக்கொண்டு சிறு பறத்தலில் ஒரு மரத்தின்மீது போய் அமர்ந்தது.
அலகின் முனை உடைந்துபோயிருந்த காகமும் கண்ணில் பட்டிருக்கிறது. இரையைப் பொறுக்குவதற்கு அலகுதான் அத்தியாவசியம். ஆனால், அலகு உடைந்து போயிருந்ததால் இரை பொறுக்குவதில் சக காகங்களுடன் போட்டிபோட முடியாமல் மெதுவாக இங்கும் அங்குமாக இரையைப் பொறுக்கிக்கொண்டிருந்தது. அதேபோல், மின்கம்பிகளுக்கு நடுவே உறைந்துபோயிருந்த காகமொன்று நான்கைந்து நாட்கள் அப்படியே இருந்தது. அது இறந்துபோன தருணத்தை யாரோ புகைப்படம் எடுத்து அந்த இடத்தில் மாட்டியதுபோல் இருந்தது.
இதற்கெல்லாம் என்ன காரணம்? இப்படியெல்லாம் ஆவதற்கு அந்தப் பறவைகளைச் சற்றும் பொறுப்பாக்கிவிட முடியாது. அப்படியென்றால் வேறு என்ன காரணமாக இருக்க முடியும்? மனிதர்களன்றி வேறென்ன காரணம்?
கண்ணிவெடி, அணுகுண்டு, நிலநடுக்கம், எரிமலைச் சீற்றம், உலகப் போர்கள், இன அழிப்புகள் போன்ற காரணங்களெல்லாம் வேண்டாம். ஒரு மைனா தன் காலை இழப்பதற்கு, ஒரு காகம் தன் அலகை இழப்பதற்கு மனிதர்களின் சிறு முட்டாள்தனமே போதுமானது. உலகத்தைப் பொறுத்தவரை ஒரு மைனாவின் காலும், காகத்தின் அலகும் மிகவும் சிறிய விஷயம். ஆனால், உலகத்தின் மாபெரும் அழிவுகளுக்கு அடிப்படையாகச் சிறுசிறு தவறுகளின், சிறுசிறு அலட்சியங்களின் ஒட்டுமொத்த சேர்க்கை இருந்திருக்கின்றன என்பதை நம்மால் மறுக்க முடியுமா?
ஒற்றைக்கால் மைனாவுக்கும் கரை ஒதுங்கிய சிறுவனுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? யார் மீதும் எதன் மீதும் எந்தக் குற்றச்சாட்டும் இல்லாததுபோல் இயல்பாகத் திரிந்துகொண்டிருக்கிறது ஒற்றைக் கால் மைனா. அதற்கு நம் மொழி தெரிந்திருந்தால்கூட யாரையும் குற்றம்சாட்டியிருக்காது. கரையொதுங்கிய குழந்தை அய்லானும் யாரைக் குற்றம்சாட்டிவிடப்போகிறான்? இதுதான் நம்மை மேலும் மேலும் குற்றவுணர்வுக்கு ஆளாக்குகிறது. இந்த உலகின் கசடுகள் சற்றும் படிந்திடாத ஒரு வெள்ளை மனது இப்படிக் கரையொதுங்கிக் கிடப்பதைப் பார்க்கும்போது நாம் எல்லோரும் எந்த இடத்துக்கு வந்திருக்கிறோம் என்றே அதிர்ச்சி ஏற்படுகிறது.
இந்த உலகத்தின் கரையில், இந்த வாழ்க்கையின் கரையில் ஒரு குழந்தை ஒதுங்கிக்கிடக்கிறது. இன்னும் கரையொதுங்காமல் மீன்களுக்கு இரையாகிக் கடலிலே கரைந்த குழந்தைகளும், புகைப்படத்துக்கும் சமூக ஊடகங்களின் பரிமாற்றத்துக்கும் இலக்காக ஆகாமல் போன, போய்க்கொண்டிருக்கும் குழந்தைகளும்தான் ஏராளம். அந்தக் குழந்தைகளுக்கெல்லாம் சேர்த்துதான் கரையொதுங்கிக் கிடக்கிறான் அய்லான். மாபெரும் அபாயத்தின் செய்தியைச் சுமந்துவந்து, உரிய இடத்தில் சேர்ப்பித்துவிட்டு உயிர்துறந்த தூதுவனைப் போல் இறந்துகிடக்கிறான் அய்லான்.
ஆனாலும், இந்த உலகின் ஆட்சியாளர்களின், போர் உற்பத்தியாளர்களின், ஆயுத உற்பத்தியாளர்களின், மத அடிப்படைவாதிகளின் இரும்பு இதயங்களை ஊடுருவும் வல்லமை அய்லானுக்கு மட்டுமல்ல; வேறு எந்தக் குழந்தைக்கும் இல்லை என்பதுதான் உண்மை. இதுதான் நம்மை முற்றிலும் நம்பிக்கை இழக்கச் செய்கிறது. ஏனெனில், ஆழமாக யோசித்துப் பார்த்தால், அய்லான்களின் உயிரைக் கச்சாப்பொருளாகக் கொண்டு இயங்குவதுதான் நம் வாழ்க்கை என்பது நமக்குப் புரியும். நவீன வாழ்க்கை நமக்கு அளித்திருக்கும் அத்தனை சொகுசுகளின் உச்சியிலும் ஏ.சி. அறைகள் இருக்கின்றன என்றால், அவற்றின் அடியில், கரையொதுங்கிய அய்லான் களின் கல்லறைகள்தான் இருக்கின்றன. அவை கல்லறை களாகக்கூட இருப்பதில்லை. சிறு மணல்மேடுகளாக இருப்பதுதான் உண்மை. ஒரு தொடுதலில் உலகெங்கும் அய்லானின் புகைப்படத்தைப் பகிர்ந்துகொள்ளுமளவுக்கு இந்த உலகம் அதிநவீனமாக ஆனதற்கு, லட்சக்கணக்கான அய்லான்கள் கரையொதுங்க வேண்டியிருந்திருக்கிறது என்ற உண்மை நமக்கு எப்போது புரியப்போகிறது?
இந்த உலகம் இயங்குவதற்கு அதன் நுண்மைகள்தான், அதன் சின்னஞ்சிறு விஷயங்கள்தான் அடிப்படை. இந்த உலகம் ஒற்றைக்கால் மைனாக்களுக்கும் அய்லான் களுக்கும் உரியதாக இருக்கவில்லை என்றால், அது நமக்கும் உரியதாக இருக்காது. கரையொதுங்குவதற்கு முந்தைய அய்லான்களாக நாம் அனைவரும் இருந்திருக் கிறோம் என்பதை நாம் வசதியாக மறந்துபோய் விட்டிருந்திருக்கிறோம்.
- நன்றி: ‘தி இந்து’: ஒற்றைக் கால் மைனாவும் கரை ஒதுங்கிய குழந்தையும்
கரை ஒதுங்கிய குழந்தை அனைவருடைய மனதிலும் பெரும் தாக்கத்தை உண்டாக்கிவிட்டது. "சிறு மணல்மேடுகளாக இருப்பதுதான் உண்மை. ஒரு தொடுதலில் உலகெங்கும் அய்லானின் புகைப்படத்தைப் பகிர்ந்துகொள்ளுமளவுக்கு இந்த உலகம் அதிநவீனமாக ஆனதற்கு, லட்சக்கணக்கான அய்லான்கள் கரையொதுங்க வேண்டியிருந்திருக்கிறது என்ற உண்மை நமக்கு எப்போது புரியப்போகிறது?" என்ற வரிகளைப் படித்தபோது மனம் அதிகமாக கனத்தது.
ReplyDeleteதங்கள் கருத்துகளுக்கு மிகுந்த நன்றி ஜம்புலிங்கம் சார்!
Deleteஅன்புடன்
ஆசை