Wednesday, September 30, 2015

காந்தி தாத்தாவின் செல்லக் குட்டிகள்


ஆசை

(காந்தி ஜெயந்தி வாரத்தை முன்னிட்டு ‘தி இந்து’ நாளிதழின் ‘மாயாபஜார்’ சிறுவர் இணைப்பிதழில் 30-09-2015 அன்று வெளியான கட்டுரை)

குழந்தைகளே, உங்களுக்கெல்லாம் காந்தி தாத்தாவை ரொம்பப் பிடிக்கும்தானே! காந்தி தாத்தாவுக்கும் உங்களையெல்லாம் ரொம்பப் பிடிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆமாம், அவரது ஆசிரமத்தில் எவ்வளவு குழந்தைகள் இருந்தார்கள் தெரியுமா? எல்லோரும் காந்தி தாத்தாவின் செல்லங்கள். அது மட்டுமல்லாமல், அவர் போகும் இடங்களிலெல்லாம் குழந்தைகளையும் சிறுவர்களையும் கொஞ்சி மகிழ்வதும் அவர்களுடன் விளையாடுவதும் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். பெரிய பெரிய தலைவர்களுடன் விவாதம் நடத்திக்கொண்டிருக்கும்போதுகூட அவர் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருப்பார்.

நீங்கள் ‘காந்தி’ திரைப்படம் பார்த்திருப்பீர்கள் அல்லவா! அதில் ஒரு காட்சியில் நேரு, படேல் போன்ற தலைவர்களுடன் காந்தி ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார். அப்போது ஒரு சிறுவன் ஆட்டுக்குட்டியுடன் வருவான். “பாபு, இந்த ஆட்டுக்குட்டிக்குக் கால் உடைந்துவிட்டது. இதை நாம் சரிப்படுத்துவோம்” என்று சொல்லிவிட்டு முன்னே செல்வான். உடனே, காந்தி அந்தத் தலைவர்களிடம் இப்படிச் சொல்வார்: “என்னை மன்னிக்க வேண்டும். எனக்கு முக்கியமான ஒரு வேலை இருக்கிறது. அதை முடித்துவிட்டு வருகிறேன்.”
தலைவர்கள் வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்க காந்தி அந்தச் சிறுவனைப் பின்தொடர்ந்து செல்வார். தேச விடுதலையைப் போலவே குழந்தைகளுக்கும் அவர் முக்கிய இடம் கொடுத்திருக்கிறார் பாருங்கள்.

சுதந்திரப் போரில் ஈடுபட்டு காந்தி தாத்தா பலமுறை சிறை சென்றிருக்கிறார். அப்படிச் சிறையில் இருக்கும்போது அவர் பெரும் தலைவர்களுக்கெல்லாம் கடிதம் எழுதுவார். அது மட்டுமல்ல, தனது ஆசிரமத்திலுள்ள குழந்தைகளுக்கும் கடிதம் எழுதுவார். அந்தக் கடிதங்களில் ஒன்று இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. படித்துப்பார்த்து, காந்தி உங்களையெல்லாம் எப்படி நேசித்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

சின்னஞ்சிறு குருவிகளுக்கு…
சின்னஞ்சிறு குருவிகளே, சாதாரணக் குருவிகள் சிறகு இல்லாமல் பறக்க முடியாது. சிறகு இருந்தால்தான் எல்லோருமே பறக்கலாமே. ஆனால், சிறகு இல்லாமலே பறப்பது எப்படி என்று நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது உங்கள் தொல்லைகளெல்லாம் நீங்கிவிடும். அப்படிப் பறக்க நான் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கிறேன்.
இங்கே பாருங்கள், எனக்குச் சிறகு இல்லை; என்றாலும் எண்ணத்திலே ஒவ்வொரு நாளும் உங்களிடம் நான் பறந்துவருகிறேன். அடடா! இதோ இருக்கிறாள் விமலாக்குட்டி; இதோ வருகிறான் ஹரி. இதோ இருக்கிறான் தர்மகுமார். நீங்களும்கூட எண்ணத்திலே என்னிடம் பறந்துவர முடியும்…
உங்களிலே யார் பிரபு பாயின் மாலைப் பிரார்த்தனையின்போது ஒழுங்காய்ப் பிரார்த்தனை செய்துவராதவர்? அதை எனக்குத் தெரிவியுங்கள்.
எல்லோரும் கையெழுத்திட்டு எனக்கு ஒரு கடிதம் அனுப்புங்கள். கையெழுத்திடத் தெரியாதவர். கடிதத்தில் ஒரு சிலுவைக் குறி போட்டால் போதும்.
-ஆசிர்வாதங்களுடன் பாபு (காந்தி)
(குறிப்பு: இந்த கடிதம் - லூயி ஃபிஷரின் ‘காந்தி வாழ்க்கை’ நூலிலிருந்து எடுக்கப்பட்டது; மொழிபெயர்ப்பு: தி.ஜ.ர. வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்.)

படித்தீர்கள் அல்லவா, இப்போது நீங்கள் எல்லோரும் காந்தி தாத்தாவுக்குப் பதில் கடிதம் எழுதுங்கள். காந்தி தாத்தாதான் இப்போது உயிருடன் இல்லையே, எப்படி அவருக்குக் கடிதம் எழுதுவது என்று நீங்கள் முணுமுணுப்பது காதில் விழுகிறது. அதனால் என்ன, கடிதம் எழுதி உங்கள் ஆசிரியரிடமோ அல்லது அம்மா, அப்பாவிடமோ காட்டுங்கள்!
 -  நன்றி: தி இந்து

No comments:

Post a Comment