யோகி அஸ்வினி
(‘தி இந்து’ நாளிதழில் 20-06-2015 அன்று வெளியான மொழிபெயர்ப்புக் கட்டுரை. தமிழில்: ஆசை )
நமது உடலை நமது மனமும் மூளையும்தான் கட்டுப்படுத்துகின்றன. அப்படியென்றால் மூளை யையும், மனதையும் கட்டுப்படுத்துவது எது? நிச்சயமாக உடல் அல்ல. மனதையும் மூளையையும் கட்டுப்படுத்துவது ஆன்மாவின் ஆசையே. ஆன் மாவின் ஆசை என்பது என்ன?
கண்களை மூடிக்கொண்டு, உங்கள் மூளைக் குள் என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள். குழந்தைகள், குடும்பம், மனைவி, தொழில், உணர்ச்சிகள் என்று எக்கச்சக்கமான எண்ணங்கள் நெருக்கியடித்துக்கொண்டு ஓடுவதை உணர்வீர்கள்.
மனித வாழ்க்கையின், பௌதிக உலகின் எல்லைகளை நாம் தாண்ட முடியாமல் போவதற்கு இந்த எண்ணங்களும் ஆசைகளுமே காரணம். நமது உடலுக்குள்ளேயே அமைதியையும் மகிழ்ச்சி யையும் காண முடியாமல் போவதற்கும் அவையே காரணம். பௌதிக வடிவில் உள்ளவை எல்லாம் தற்காலிகமானவையே. இந்த ஆசைகளைத் துரத்திக் கொண்டு தினமும் ஓடுவதால்தான் துயரம் ஏற்படுகிறது.
பணம், குடும்பம், தொழில், உறவுகள் போன்றவற் றிலேயே நம் மனம் மூழ்கிக் கிடக்கும் என்றால் அவற்றைத் தாண்டி நம்மால் எதையும் யோசிக்க முடியாது. ஏனென்றால், ஒரு சமயத்தில் நம்மால் ஒன்றைப் பற்றித்தான் சிந்திக்க முடியும், ஒரு செயலைத்தான் செய்ய முடியும்.
ஆகவே, சிந்திக்கும்போது நமது சிந்தனை ஒரே ஒரு விஷயத்தின்மீதுதான் இருக்க வேண்டும். ஒரே ஒரு விஷயத்தின் மீது குறியாக இருந்தால் அதைச் சாதிக் கும்படிதான் நமது உடல் அமைப்பு கள் அமைந்திருக்கின்றன. ஒருமுகப் படுத்தல்தான் வெற்றிக்கான பாதை. அதுவே யோகம்!
நமது ஆசைகள் பிளவுறும்போதுதான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. வாழ்க்கையில் என்ன செய்யப்போகிறோம் என்பது குறித்த புரிதல் இல்லாமல்தான் பலரும் வெற்றி அடைய முடியாமல் போகின்றனர்.
இந்த உலகத்தைப் பற்றி நம் மனதுக்குள் ஓடும் எண்ணங்கள்தான் நம்மை இந்த உலகத்தோடு பிணைக்கின்றன. மாயையான இந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கும் அதுதான் காரணம். அதனால்தான் அதைத் தாண்டி நம்மால் போக முடியவில்லை. கண்ணுக்குப் புலனாகக்கூடிய உலகத்தைத் தாண்டி நாம் செல்ல வேண்டும் என்றால் புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது. அவை எல்லாம் இன்னொருவரின் சிந்தனைகள், இன்னொருவரின் அனுபவங்கள். அவற்றை நம்பி நமது ஆன்மிகப் பயணத்தை மேற்கொள்ள முடியாது.
நமது மனதை அமைதிப்படுத்தினால் நம்மால் இந்த பௌதிக உலகத்தையும் தாண்டிச் செல்ல முடியும். மனது அமைதியானால், நம் எண்ணங்கள் எல்லாம் படைப்பின் திசை நோக்கிக் குவியும். அப்போது படைப்பின் ரகசியம் நமக்குப் புலனாவதுடன் மேம்பட்ட பரிமாணங்களை நோக்கியும் செல்லமுடியும்.
ஆதிப் பிரக்ஞை, வளர்ச்சியடைந்த பிரக்ஞை என்று அறிவியலில் சொல்வார்கள். மூளையின் கீழ்ப் பகுதியான முகுளம் (மெடுல்லா அப்லங்காட்டா) ஆதிப் பிரக்ஞை எனப்படுகிறது. அதுதான் அடிப்படை எண்ணங்கள், அடிப்படை சுவாசம் போன்றவற்றுக்குப் பொறுப்பு.
சுவாச முறைகளை பிராணாயாமங்கள் மூலம் மாற்றி அமைக்க வேண்டுமானால், மூளையின் மேல்நிலைப் பகுதிகளின் பங்கேற்பு அவசியம்.
அதனால்தான் அந்த சுவாச முறைகள் ‘மேம்பட்ட சுவாச முறைகள்’ எனப்படுகின்றன. மனதை நாம் அமைதிப்படுத்தினால், மூளையின் மேல்நிலைப் பகுதிகள் செயலூக்கம் பெறுகின்றன என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அதுபோன்ற அமைதி நிலையில் நாம் இருக்கும்போது மேல்நிலைப் பகுதிகளின் மேல் நம் கவனம் குவியும், அதுவரை புலப்படாதது எல்லாம் புலப்படும். இந்தப் புலப்பாடுகள் நமக்குள்தான் இருக்கின்றன. பௌதிக உலகின் காரியங்களிலேயே மும்முரமாக இருப்பதால் புலனாகாமல் இருக்கின்றன.
யோகப் பயிற்சிகள் மூலம் மனதை அமைதி நிலைக்குக் கொண்டுசெல்லும்போது அந்த உயர்ந்த ஆற்றல்களை பெறுகிறோம்.
ரிஷிகள் அமைதி நிலையை அடைந்தபோதுதான் அவர்களுக்கு வேதங்கள் புலப்பட்டன. எனவே, அமைதி நிலை மூலமாக மூளையின் மேல்நிலைப் பகுதிகள் மீது கவனத்தைக் குவியுங்கள். அமைதி நிலையில் இருந்தே எல்லாம் தோன்றுகின்றன, மறுபடியும் அமைதி நிலை நோக்கிச் செல் கின்றன.
எதையாவது படைக்கவேண்டும் என்றால் அமைதிநிலைக்குச் செல்லுங்கள். ஒருமுகமான இந்த அமைதி நிலைதான் உங்களைப் பரிணமிக்கச் செய்வதுடன் படைப்பின் ஞானத்தை உங்களுக்கு வெளிப்படுத்தும். மற்றவை உபயோகமற்றவை, நம்மை நச்சுச் சுழலில் சிக்கவைப்பவை.
-(தியான் ஃபவுண்டேஷன் என்னும் அமைப்பை வழிநடத்திவரும் யோகி அஸ்வினி வேதங்களை ஆழமாகப் பயின்றவர். சனாதன் கிரியா என்னும் யோகப் பயிற்சியை உருவாக்கிப் பயிற்றுவித்துவருகிறார். தொடர்புக்கு: dhyan@dhyanfoundation.com )
- நன்றி: ‘தி இந்து’
‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க:
அமைதியில் இருந்து அமைதியை நோக்கி..