Monday, June 8, 2015

ஐஐடி என்றால் எல்லோருக்கும் மேலானவர்களா?


டி.எம். கிருஷ்ணா

(‘தி இந்து’ தமிழ் நாளிதழில் 08-06-2015 அன்று வெளியான மொழிபெயர்ப்புக் கட்டுரை. தமிழில்: ஆசை)

அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்துக்கும் (ஏபிஎஸ்சி) ஐஐடி-சென்னைக்கும் இடையிலான பிணக்கு தொடர்பாகக் கடந்த ஒரு வார காலமாக ஏராளமான செய்திகளையும் கட்டுரைகளையும் படித்தாகிவிட்டது. தடை செய்யப்பட்டிருக்கிறதா அல்லது அங்கீகாரம் மறுக்கப்பட்டிருக்கிறதா? அல்லது, வெறுமனே ‘காரண விளக்கம் கோரும்’ நோட்டீஸா? இந்த விவகாரத்தில் ‘ஈடுபட்டிருக்கும்’ மாணவர்கள் வெறுமனே உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, வளாகத்தின் அமைதியைச் சீர்குலைக்கிறார்களா?
இந்த ‘வளாகக் கேள்வி’களோடு இன்னும் முக்கியமான வேறுசில கேள்விகளும் சேர்ந்துகொள்கின்றன: அரசின் கொள்கைகளையும், அதே அளவுக்குப் பிரதமரையும் எதிர்ப்பது என்பது பதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய செயலா? அநாமதேயப் புகார்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, அதற்காக மனிதவளத் துறை அமைச்சகம் ஐஐடி நிர்வாகத்தின் கருத்துகளையும் விளக்கத்தையும் கோரியது சரியா? ‘விளக்கம்’ கேட்டு அமைச்சகத்தால் அனுப்பப்படும் கடிதம் என்பது மறைமுக எச்சரிக்கை இல்லையா?
இதற்கிடையே, அரசியல் கட்சிகளெல்லாம் அவரவர் தரப்பு விளக்கங்களையும் கருத்துகளையும் அடுக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆதரவு தெரிவிக்கும் திறந்த மடல்களைச் சிலர் அனுப்புகிறார்கள், மற்றவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். இதற்கிடையே, மிகவும் விநோதமான விஷயம் எதுவென்றால், ஏபிஎஸ்சியைத் தடைசெய்ய வேண்டும் என்று கோரும் இந்து அமைப்புகள் அம்பேத்கருக்கு உரிமை கொண்டாடுவதுதான்.

மேலும், ஐஐடி-சென்னையில் பணிபுரியும் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் போன்றோரின் சாதிவாரியான பட்டியல் ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது. அம்பேத்கர்-பெரியார் குறித்த புள்ளிவிவரங்களுடன் கூடிய மேலோட்டமான விவாதமொன்றும் இணையத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.

படிப்பா, அரசியலா?
ஒருவர் மாற்றி ஒருவர் குற்றம்சாட்டிக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், இந்த விவாதங்களுக்கு மத்தியில் ஒரு கருத்து மட்டும் துலக்கமாகத் தெரிகிறது. “ஐஐடிகளெல்லாம் படிப்பதற்கான இடங்களே, சமூக-அரசியல் விவாதங்களையும் போராட்டங்களையும் நடத்துவதற்கான இடங்கள் அல்ல” என்பதுதான் அந்தக் கருத்து. கூடவே, இந்தக் கூற்றும் ஒட்டிக்கொண்டுவருகிறது: “இந்தக் குழுக்கள் மாணவர்களின் மனதில் விஷத்தைக் கலக்கின்றன. அவர்களின் பிரதான இலக்கான ‘அறிவியல்’ மீதிருக்கும் கவனத்தைத் திசைதிருப்புகின்றன.” “இந்த மாணவர்கள் ஐஐடிக்குச் செல்வது படிக்கவா அல்லது அரசியலில் ஈடுபடவா?” என்றும் சிலர் கேட்கிறார்கள்.
கலைப் பாடங்களுக்கான (ஹியூமானிட்டீஸ்) நிறுவனங்கள் என்று தற்போது அழைக்கப்படும் ‘கலைக்கல்லூரி’களில் எதிர்ப்புகளோ போராட்டங்களோ நடைபெறும்போதெல்லாம் இதுபோன்ற எச்சரிக்கைகளை நாம் கேள்விப்பட்டதில்லை. ஆனால், அறிவியல் என்று வரும்போது, “அறிவியல் கல்விக்கான இடங்களில் இதையெல்லாம் அனுமதிக்கக் கூடாது” என்ற தீவிர உணர்வு ஏற்படுகிறது. ஆழமாகப் பார்க்கும்போது, சமூக அறிவியல் படிப்புகளோடு ஒப்பிடும்போது இந்தியர்களாகிய நாம் அறிவியல் கல்வியையும் அதன் துணைத் துறைகளையும் மிகவும் தீவிரமானவையாகவும், புனிதமானவையாகவும் கூட கருதுகிறோம். அறிவுத் துறையைப் பற்றிக் கணிதத்தாலும் அறிவியலாலும் உருவான நமது கண்ணோட்டத்தால்தான் மேற்கண்ட நம்பிக்கை எழுகிறது.
மோதல்கள் ஒரு பக்கம் இருக்கட்டும், அறிவியல் கல்வி என்பது ‘அன்றாட’ சமூகப் பிரச்சினைகளுக்கும் மேலானதாகவே கருதப்படுகிறது. சமூகக் கல்வித் துறைக்கே உரிய சித்தம்போக்கு என்ற இயல்பு அறிவியலுக்கு உரியதன்று என்று கருதப்படுகிறது. அறிவியலில் ஈடுபட்டிருக்கும் நபர் அன்றாட வாழ்க்கையின் அரசியலிலிருந்து விலகியிருப்பவராகவே பார்க்கப்படுகிறார். அறிவியல் மாணவரும் அறிவியலாளரும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது; அப்படிச் செய்வது சராசரியான, பலவீனமுள்ள மனிதர்கள் அளவுக்கு அவர்களைக் கீழிறக்கிவிடும். உணர்ச்சிகரமான அக்கப்போர்களெல்லாம் ‘சாதாரண’ மக்களுக்கானவை. வருங்காலப் பொறியாளர்களும் அறிவியலாளர்களும் தங்கள் வாழ்க்கையை நேர்மையான அறிவியல்ரீதியிலான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
இப்படியெல்லாம் சொல்வதில், ‘மற்றவர்கள்’ எல்லோரும் இயல்பாகவே பிழைபட்டவர்கள் என்றும், அறிவியல்தான் தூய்மையான தேடல், கிட்டத்தட்ட ஆன்மிகத் தேடலைப் போல, என்றும் ஒரு எண்ணம் தொனிக்கிறது. எனவே, அறிவியலும் ஆன்மிகமும் இயற்கையான பங்காளர்களாகப் பார்க்கவும் படுகிறது. அறிவியலாளர்களும் ஆன்மிகவாதிகளும் உலகத்தைப் பற்றிக் கொண்டிருக்கும் பார்வையில் வேறுபடலாம்; ஆனால், அவர்கள் ஈடுபாடு காட்டும் முறையில் அநேகமாக முரண்கள் ஏதும் இல்லை. இரண்டுக்குமே ஆழமான, தீவிரமான, கிட்டத்தட்ட தன்னை மறந்த சரணாகதி நிலை தேவை என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது; அது ராமனாகவும் இருக்கலாம், சிக்கலான கணிதச் சமன்பாடாகவும் இருக்கலாம். ஆகவே, மனிதர்களின் பலவீனங்களைக் கணக்கிலெடுத்துக்கொண்டு, வாழ்க்கையைப் பார்க்கும் பொருளியல் அறிஞர்கள், சமூகவியல் அறிஞர்கள், வரலாற்றாசிரியர்கள் போலல்லாமல் அறிவியலாளர்களும் பக்தர்களும் மனிதர்களின் இடையீடுகள் என்ற விஷயத்தைத் தாண்டி வாழ்க்கையைப் பார்க்கிறார்கள். சமூகவியல்ரீதியில் அறிவியலையும் மதத்தையும் நாம் உயரமான ஒரு பீடத்தில் வைத்துவிட்டிருக்கிறோம். அதற்கும் மேலே வானம் மட்டும்தான். புனிதத்தன்மை கொண்ட அர்ச்சகரும், அறிவியல் பேராசிரியரும் கிட்டத்தட்ட தெய்வாம்சம் பொருந்தியவர்களே.
சங்கீத உலகிலும் அப்படித்தான்
இதில் ஆச்சரியம் என்னவென்றால், சாஸ்திரிய சங்கீத உலகத்துக்கும் இந்த விவகாரத்துக்கும் இடையில் ஒரு ஒற்றுமையை நான் காண்கிறேன். நாங்களெல்லாம் எல்லோரையும்விட உயர்ந்தவர்களாக எங்களைக் கருதிக்கொள்கிறோம்; மோட்சத்தை அடைவதற்கு உள்ளதிலேயே விரைவான, எளிதான வழி இசைதான் அல்லவா! நாங்களெல்லாம் நாத உலகத்தில் சஞ்சரிக்கிறோம். சங்கீதத்துள் சஞ்சரிக்கும்போது சாதி, பாலின அரசியல் போன்றவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்களாக நாங்கள் ஆகிவிடுகிறோம். உருவமற்ற பரம்பொருளுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறோம், மக்களின் ஆத்மாவுக்கு வளமூட்டி அவர்களை மேல்நிலைக்குக் கொண்டுசெல்கிறோம். சங்கடம் ஏற்படுத்தும் உண்மைகள் எங்கள் முகத்தின் மேல் வெறித்தால் கூட அவற்றை நாங்கள் ஒதுக்கித்தள்ளிவிடுவோம். கர்நாடக சங்கீத உலகில் நாங்கள் ஒரு படி மேலே செல்கிறோம். எங்கள் சங்கீதம் பக்திவயமானது என்று மட்டும் நாங்கள் சொல்லிக்கொள்ளவில்லை, உள்ளதிலேயே மிகவும் ‘அறிவியல்பூர்வமான’முறை என்பதையும் நாங்கள் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டுவருகிறோம். அறிவும் ஆன்மிகமும் எங்களுக்குள் ஒருங்கே குடியிருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.
ஆனால், கண்களை இறுக மூடிக்கொண்டிருப்பவர்கள் மட்டும்தான் அறிவியல், மதம், சாஸ்திரிய சங்கீதம் ஆகியவையெல்லாம் யதார்த்த உலகைவிட மேலானவை, அவற்றுக்கு அப்பாற்பட்டவை என்று நம்புவார்கள். ஒவ்வொரு மனிதரும் தனிநபர் என்ற அளவிலும் ஒட்டுமொத்தச் சமூகத்தின் அங்கம் என்ற அளவிலும் ஏற்படும் உணர்வுநிலையை எதிர் கொண்டு போராடித்தான் ஆக வேண்டும். இதை அனுமதிக்க வில்லையென்றால் ‘விதிமுறைகளைக் கடைப்பிடியுங்கள்’ என்று அம்பேத்கர்-பெரியார் வட்டத்தை வலியுறுத்தும் செயற்கையான சமூக ஒழுங்குகள் நம்மையெல்லாம் தொடர்ந்து கட்டுப்படுத்திக்கொண்டுதான் இருக்கும்.
- டி.எம். கிருஷ்ணா, இசைக் கலைஞர், சமூக-அரசியல் விமர்சகர்,
தொடர்புக்கு: tmkrishnaoffice@gmail.com
  நன்றி: ‘தி இந்து’
 ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையை படிக்க: ஐஐடி என்றால் எல்லோருக்கும் மேலானவர்களா?


No comments:

Post a Comment