Wednesday, June 17, 2015

இரண்டு ஊர்கள்: வடுவூர், தாராசுரம்



ஆசை
 (‘தி இந்து’ மலரில் வெளியான சிறு குறிப்புகள்)

வடுவூர், சிலையழகு

தஞ்சாவூரிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் மன்னார்குடியிலிருந்து 13 கி.மீ. தொலைவிலும் உள்ள ஊர் வடுவூர். வடுவூரைச் சுற்றியிருக்கும் புதுக்கோட்டை (வடுவூர் புதுக்கோட்டை), தென்பாதி, வடபாதி, சாத்தனூர் போன்ற கிராமங்களும் வடுவூரில் உள்ளடக்கம். நான்கு விஷயங்களுக்காகப் பெயர்பெற்றது இந்த ஊர். 1. வடுவூர் பறவைகள் சரணாலயம், 2. கோதண்டராம சுவாமிகள் கோயில் ராமர் சிலை, 3. வடுவூர் துரைசாமி ஐயங்கார், 4. கபடி.
வடுவூர் ஏரிக்கு வெளிநாடுகளிலிருந்தும் நிறைய பறவைகள் காலம்காலமாக வந்துகொண்டிருந்தாலும் 1999-ம் ஆண்டில்தான் அந்த ஏரி, பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. நவம்பரிலிருந்து ஜனவரி வரைக்கும் பறவைகள் வரத்து அதிகமாக இருக்கும். பருவத்தின் உச்சத்தில் அதிகபட்சமாக 20000 பறவைகள்கூட இங்கு காணப்படும்.
இந்தியாவிலேயே சிறந்த விளையாட்டு கிராமங்களுள் ஒன்றாக வடுவூர் திகழ்கிறது. இங்கு வீட்டுக்கு வீடு கபடி வீரர்கள் இருக்கிறார்கள். மாவட்ட அளவிலிருந்து தேச அளவு வரைக்கும் கபடிப் போட்டிகளில் விளையாடி சாதனை புரிந்த வீரர்கள் இங்கு இருக்கிறார்கள். இந்த ஊரைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பலருக்கும் அரசு, வேலைவாய்ப்பை வழங்கி கவுரவப்படுத்துகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு கிராமத்தில் உள்விளையாட்டரங்கம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டிருப்பது இங்கேதான்.

வடுவூரின் கோதண்டராம சுவாமிகள் கோயிலில் உள்ள ராமர் விக்கிரகம் மிகவும் பிரசித்தி பெற்றது. பிற்காலச் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்தச் சிலை அதிக அலங்காரங்கள் இல்லாமல் எளிமையான அழகுடன் காட்சி தரும். அபிஷேகம் செய்யும்போது ஒரு அழகு, அலங்காரம் செய்யும்போது ஒரு அழகு, மல்லாரி வாசிப்பின் பின்னணியில் பவனி வரும்போது ஒரு அழகு என்று ராமர் சிலையின் அழகை பக்தர்கள் சிலாகிப்பார்கள். இந்த ராமரின் அழகில் மயங்கி, பவனியின்போது மல்லாரி வாசித்த ராஜரத்தினம் பிள்ளை தனது வைரக்கடுக்கனை ராமருக்குப் போட்டதாகவும் சொல்வார்கள். 'திருவாரூர் தேரழகு, மன்னார்குடி மதிலழகு, வடுவூர் சிலையழகு' என்றே ஒரு சொலவடை ஒருங்கிணைந்த தஞ்சாவூர் பக்கத்து கிராமங்களில் உண்டு.






தாராசுரம்: சிற்பங்களின் சரணாலயம்


கும்பகோணத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் இருக்கும் தாராசுரம் மிகவும் சிறிய ஊர். மொத்த மக்கள்தொகை கிட்டத்தட்ட 13,000. ஆனால், உலகப் புகழ்பெற்ற ஐராவதீஸ்வரர் கோயில் இருக்கும் ஊர் இது. தஞ்சாவூர் பெரிய கோயில் பிரம்மாண்டத்தின் உச்சம் என்றால் ஐராவதீஸ்வரர் கோயில் நுட்பத்தின் உச்சம் என்று சொல்லலாம். 40,000-க்கும் மேற்பட்ட சிற்பங்களைக் கொண்டு சிற்பங்களின் சரணாலயம் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறது தாராசுரம். இங்குள்ள சிற்பங்களில் பெரும்பாலானவை மிகமிகச் சிறியவை. விரல் நுனியளவுச் சிற்பங்களும் உண்டு, ஓரிரு அங்குலச் சிற்பங்களும் உண்டு, ஆளுயரச் சிற்பங்களும் உண்டு.
இங்குள்ள பல சிற்பங்கள் பல்வேறு காரணங்களுக்காகப் புகழ்பெற்றவை. அன்னபூரணி சிற்பத்தைப் பார்க்க ஃபிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஆயிரக் கணக்கானோர் வருகிறார்கள். அன்னபூரணியின் சிரித்த முகத்தை, டாவின்சியின் மோனாலிசா ஓவியத்துடன் ஒப்பிட்டுப் பலரும் மகிழ்கிறார்கள். காளையின் தலையும் யானையின் தலையும் ஒன்றாகச் சேர்ந்து இருக்கும் புகழ்பெற்ற சிற்பம் ஒன்று இங்கு இருக்கிறது. காளையை மட்டும் பார்க்கும்போது அந்தத் தலை காளைத் தலையாகவும், காளையை மறைத்துக்கொண்டு பார்க்கும்போது அது யானையின் தலையாகவும் காட்சியளிக்கும்.

பிள்ளையாரின் மிகச் சிறிய சிற்பம், கதை சொல்லும் எண்ணற்ற சிற்பங்கள், பல்வேறு அலங்காரக் கோடுகளையும் கோலங்களையும் தாங்கியிருக்கும் கற்சுவர்கள் என்று கோயில் முழுக்கவும் சிற்பங்களின் அற்புதங்கள். குதிரைகள் பூட்டப்பட்டு, ஓடிக்கொண்டிருக்கும் ஒரு தேரின் மேல் அமைந்திருப்பதைப் போல கோயில் அமைக்கப்பட்டிருப்பது காலத்தேரின் மேல் இந்தப் பிரபஞ்சம் பயணிப்பதை உணர்த்தும் விதத்தில் இருக்கிறது. இந்தக் கோயிலுக்கு வந்த கார்ல் சகன் என்ற வானியலாளர், பரவெளியின் ரகசியத்தைச் சுட்டிக்காட்டும் விதத்தில் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது என்று வியந்ததாகச் சொல்வார்கள்.




இரண்டாம் ராஜராஜன் காலத்தில் அதாவது 12-ம் நூற்றாண்டில் இந்தக் கோயில் கட்டப்பட்டது. ஐராவதீஸ்வரர் என்றால் வெள்ளை யானையாகிய ஐராவதத்தின் மேல் வந்தவர் என்பது ஐதிகம். தஞ்சாவூர் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம், மாமல்லபுரம் ஆகியவற்றுடன் இந்தக் கோயிலையும் பாதுகாக்கப்பட வேண்டிய கலைச்சின்னங்கள் என்று யுனெஸ்கோ அறிவித்திருக்கிறது.
 - நன்றி: ‘தி இந்து’

No comments:

Post a Comment