ஆசை
(‘தி இந்து’ நாளிதழின் ‘மாயாபஜார்’ சிறுவர் இணைப்பிதழில் 04-02-2015 அன்று வெளியான கதை)
வருணா குட்டி என்ன செய்துகொண்டிருக்கிறாள் தெரியுமா? இதுவரை யாரும் செய்யாத ஒரு வேலையைச் செய்துகொண்டிருக்கிறாள். ஆமாம், பறவைகளுக்குப் பெயர் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறாள். இதில் என்ன புதுமை, காலங்காலமாக எத்தனையோ பேர் செய்த விஷயம்தானே; எல்லாப் பறவைகளுக்கும் ஏற்கெனவே பெயர் வைத்திருக்கிறார்களே என்று கேட்கிறீர்களா? நீங்கள் கேட்டது சரிதான்.
ஆனால், வருணா குட்டி செய்வது வேறு விஷயம். இல்லாத பறவைகளுக்குப் பெயர் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறாள். அதுசரி, இதில் என்ன புதுமை? சக்கரவாகம், அண்டரண்ட பட்சி, ஃபீனிக்ஸ் போன்ற பறவைகள்கூட இல்லையே என்றுதானே கேட்கிறீர்கள்?
இதுவும் சரிதான். ஆனால், வருணா குட்டி செய்வது முற்றிலும் வேறு விஷயம். இனிமேல் புதிதாக உருவாகப்போகிற பறவைகளுக்குப் பெயர்களைக் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறாள்.
எதற்கு இந்த வேண்டாத வேலை என்கிறீர்களா? வருணா குட்டி செய்வதை யாராலும் அவ்வளவு சீக்கிரம் புரிந்துகொள்ள முடியாது. அவள் என்ன செய்தாள் என்பதை மட்டும் கேளுங்களேன்!
பறவைகளைப் பற்றி ஒருநாள் அவளிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். இந்தியாவில் ‘பறவைகள் மனிதர்’ என்றும் ‘பறவை தாத்தா’ என்றும் செல்லமாக அழைக்கப்படும் சாலிம் அலி பற்றியும் அப்போது சொன்னேன். மனிதர்கள் இல்லாவிட்டால் இந்த உலகத்துக்கு எந்த இழப்பும் இல்லை. ஆனால், பறவைகள் இல்லாவிட்டால் இந்த உலகத்துக்குப் பேரழிவுதான் என்று அவளிடம் சொன்னேன்.
அவள் ரொம்பவும் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களில் இடம்பெற்ற கற்பனைப் பறவைகளைப் பற்றி அவளிடம் சொன்னேன். பிறகு, அழிந்துபோன பறவைகளைப் பற்றியும், அழிந்துகொண்டிருக்கும் பறவைகளைப் பற்றியும் அவளிடம் சொன்னேன். அதையெல்லாம் கேட்டு அவள் அழுதேவிட்டாள். பறவைகளும் செத்துப்போகும் என்று நான் சொன்னதை அவளால் நம்பவே முடியவேயில்லை.
எல்லாப் பறவைகளைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தபோது அவள் திடீரென்று என்னிடம் கேட்டாள்: “புதுசா உருவாகப்போற பறவைகளைப் பத்தியும் சொல்லுங்க சித்தப்பா.”
“அதைப் பத்தி எனக்குத் தெரியாதே வருணா குட்டி. அந்தப் பறவைங்களோட பேரு தெரியாம எப்படி அதுங்களப் பத்தி நான் உனக்குச் சொல்ல முடியும்?” என்று கேட்டேன்.
“அந்தப் பறவைங்களுக்கு இன்னும் ஏன் பேரு வைக்கல?” என்று வருணா கேட்டாள்.
“இல்லாத பறவைகளுக்கு எப்படிப் பேரு வைக்க முடியும் வருணா?” என்று நான் பதிலுக்குக் கேள்வி கேட்டேன்.
“ஃபீனிக்ஸ் பறவைகூட இல்லையே? அதுக்கெல்லாம் பேர் வைச்சிருக்காங்களே?” என்று அவள் கேட்டதற்கு என்னிடம் பதில் இல்லை.
இப்படித்தான் அவளுடைய பெயர் வேட்டை ஆரம்பித்தது.
தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென்று விழித்துக்கொண்டு ஒரு பெயரைச் சொல்லி அது நன்றாக இருக்கிறதா என்று கேட்பாள். சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதும் படித்துக்கொண்டிருக்கும்போதும் குளித்துக்கொண்டிருக்கும்போதும் திடீர் திடீரென்று ஏதாவது பெயர்களைச் சொல்வாள்.
“நீ பேர் வைக்கிறதெல்லாம் சரி. எந்தப் பேரு எந்தப் பறவைக்குப் பொருத்தமா இருக்கும்ன்னு நமக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டேன்.
“அதெல்லாம் பத்தி நீங்க ஏன் சித்தப்பா கவலைப்படுறீங்க. நான் கண்டுபிடிக்கிற பேருகள்லருந்து பறவைங்களே அதுங்களுக்குப் பிடிச்ச பேர எடுத்து வைச்சுக்கும்” என்று நம்பிக்கையுடன் வருணா சொன்னபோது எனக்குப் பேச்சே வரவில்லை.
பெயர்களை அவள் கண்டுபிடிப்பதைப் பார்க்கும்போது பூ ஒன்று மலர்வதைப் பார்ப்பதுபோல் இருக்கும். காற்றிலிருந்து அவள் பெயர்களைப் பறித்துக்கொண்டாள். மொட்டுக்களைத் திறந்து அவற்றுக்குள்ளிருந்து பெயர்களைத் திருடிக்கொண்டாள்.
மழைத்துளியொன்றை எடுத்து கிளிஞ்சலுக்குள் முட்டைபோல் மூடிவைத்தாள். மயிலிறகைப் பாடப்புத்தகங்களுக்குள் வைத்துவிட்டு அந்த மயிலிறகு குட்டி போடும் என்று நாம் சொல்வோம் அல்லவா, அது போலத்தான். கிளிஞ்சலுக்குள் இருக்கும் மழைத்துளி குஞ்சு பொரித்து அதிலிருந்து பெயர்கள் உருவாகும் என்று அவள் சொன்னாள்.
பெயர் வேட்டையின்போது ஒரு நாள் மழைக்கொத்தி என்ற பெயரைக் கண்டுபிடித்தாள். சில நாட்கள் கழித்து ஒருநாள் பள்ளிக்கூடம் விட்டு வேகமாக ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள்.
“வருணா குட்டிக்கு என்ன இன்னைக்கு இவ்வளவு சந்தோஷம்?” என்று கேட்டேன்.
“சித்தப்பா, நான் இன்னைக்குக் காலையில மழைக்கொத்தியப் பார்த்தேனே” என்று கையால் கொடுக்குக் காட்டி என்னைப் பழித்தாள்.
“அப்புடியா, எங்க பார்த்தே?’ என்று கேட்டேன்.
“காலையில லேசா மழை பேஞ்சுகிட்டுருந்துச்சா. அப்ப, வானவில்லு ஒண்ணு அழகா தெரிஞ்சிச்சு. அந்த வானவில்லுக்கு உள்ளே கருப்பா ஒண்ணு இருந்துச்சு. அது என்னான்னு உத்துப் பார்த்தேனா, அது ஒரு பறவையோட கூடுன்னு தெரிஞ்சிச்சு” என்றாள் வருணா.
“அப்புறம், என்னாச்சு?” என்று கேட்டேன்.
“கொஞ்ச நேரம் உத்துப் பாத்துக்கிட்டே இருந்தேனா. எங்கேருந்தோ வந்து அந்தக் கூட்டுல ஒரு பறவை ஒக்காந்துகிட்டுச்சு. அதுதான் மழைக்கொத்தின்னு அப்பதான் எனக்குத் தெரிஞ்சிச்சு. எனக்குச் சந்தோஷம் தாங்கவேயில்லை சித்தப்பா. பள்ளிக்கூடத்துலகூட அதைப் பத்தித்தான் நெனைச்சுக்கிட்டு இருந்தேன் சித்தப்பா” என்று மூச்சு வாங்க என்னிடம் சொன்னாள் வருணா.
“அதுதான் மழைக்கொத்தின்னு எப்படிக் கண்டுபிடிச்சே வருணா குட்டி?” என்று கேட்டேன்.
“அந்தப் பறவை, மழையைக் கொத்திக்கொத்தித் தின்னுட்டிருந்துச்சே சித்தப்பா” என்றாள் வருணா.
“என்னையும் கூட்டிக்கிட்டுப் போயி காட்டுறியா?” என்று கேட்டேன்.
“மழை பெய்யிறப்பதான் மழைக்கொத்தி நம்ம கண்ணுக்குத் தெரியும். அடுத்த தடவ மழை பெய்யிறப்ப உன்னை அழைச்சிட்டுப் போறேன் சித்தப்பா” என்றாள் வருணா.
நம்பவில்லைதானே நீங்கள்? நானும் நம்பவில்லைதான். ஆனால், மழைக்கொத்தியை நாம் நம்ப வேண்டுமென்றால் நாமெல்லாம் வருணா குட்டியாக ஆக வேண்டும். இல்லையென்றால் மழையாக ஆக வேண்டும். இல்லையென்றால் மழைக்கொத்தியாக ஆக வேண்டும். அப்போதுதான் நாம் வருணா குட்டியையும் மழைக்கொத்தியையும் நம்புவோம்! என்ன குழந்தைகளே, நாமெல்லாம் மழைக்கொத்தியாக ஆகலாமா?
- நன்றி: ‘தி இந்து’, ஓவியங்கள்: ராஜே
- ‘தி இந்து’ நாளிதழின் இணையதளத்தில் இந்தக் கதையைப் படிக்க: மழைக்கொத்தியைக் கண்டுபிடித்த சிறுமி!
No comments:
Post a Comment