Monday, June 1, 2015

சிறையிலிருந்து ஒரு விசிலூதியின் ஓலம்


செல்சியா மேனிங் பிடிபட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்

                             செல்சியா மேனிங்கின் தற்போதைய உருவ அமைப்பைச் சித்தரிக்கும் ஓவியம்

செல்சியா ஈ மேனிங்

(இராக்-ஆப்கன் போர்கள் தொடர்பான அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு அமெரிக்காவின் முகத்தைத் தோலுரித்தவர்)

(‘தி இந்து’ நாளிதழில் 01-06-2015 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது. தமிழில்: ஆசை)

இன்றோடு 5 ஆண்டுகள் முடிவடைகின்றன, 2010-ல் இராக்கில் ராணுவப் பணியாற்றிய நான் ராணுவச் சிறைக்கு அனுப்பப்பட்டு. எவ்வளவு காலம் நான் சிறையில் இருந்திருக்கிறேன் என்பதை நினைத்துப்பார்த்தால் சில சமயங்களில் எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் நிறைய ஏற்ற இறக்கங்களுடன் உடல் ரீதியாகவும் உணர்ச்சிரீதியாகவும் ஒரு ரோலர் கோஸ்டர் சவாரிபோல்தான் அடிக்கடி நான் உணர்ந்தேன்.

2010-ம் ஆண்டின் முதல் சில வாரங்களின்போதுதான் இதெல்லாமே தொடங்கின. இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நடைபெற்ற போர்களைப் பற்றிய பயங்கரமான, தெளிவான ஒரு எண்ணத்தைத் தரும் ரகசிய ஆவணங்களை (கூடவே, ரகசியமில்லாத ஆனால் பிரச்சினைக்குரிய ஆவணங்களையும்) மக்கள் மத்தியில் கசிய விடுவதென்ற முடிவுக்கு நான் வந்தேன்; என் வாழ்க்கையையே மாற்றிப்போட்ட முடிவு இது. ஆப்கானிஸ்தானுக்கு ராணுவப் பணியாற்றச் செல்வதற்காகப் பல மாதங்கள் என்னைத் தயார்ப்படுத்திவிட்டு, 2009-ல் இராக் செல்வதற்காக ஆயத்தமாகினேன். 2009-2010-ல் இராக்கிலேயே தங்கினேன். அப்போதுதான் உலக அளவில் பார்க்கும்போது இந்த ஆவணங்களின் முக்கியத்துவத்தைச் சட்டென்று உணர்ந்துகொண்டேன்.


இராக், ஆப்கானிஸ்தான் இரண்டிலும் நடைபெற்ற தீவிரவாதத்துக்கு எதிரான போர்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அவற்றைப் பற்றி மக்கள் முழுமையாக அறிந்துகொள்வதற்கு இராக், ஆப்கானிஸ்தான் ‘போர் நாட்குறிப்புகள்’ அத்தியாவசியமானவை. போர் நடந்துகொண்டிருந்தபோது, களத்திலிருந்து ஒரு கண்ணோட்டத்தை அவை வழங்குகின்றன. இந்த ஆவணங்கள் திரட்டப்படுவதற்கு முன்பு நவீனப் போர்களின் கந்தரகோளமான நிலை குறித்து முழுமையாகப் புரியவைக்கக் கூடிய பதிவுகள்ள் மக்களுக்குக் கிடைத்திருக்கவே இல்லை. அந்த ஆவணங்களில் உள்ள நிலைச்சுட்டு எண்கள் (கோஆர்டினேட்ஸ்) எல்லாம் உண்மையான இடங்களைக் குறிக்கின்றன என்பதையும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாட்களெல்லாம் நமது சமீபத்திய வரலாறு என்பதையும், அதில் உள்ள எண்களெல்லாம் உண்மையான மனித உயிர்களை - அன்பு, நம்பிக்கை, கனவுகள், வெறுப்பு, பயம், துர்க்கனவுகள் என்று வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் கொண்டிருக்கும் மனித உயிர்களை- குறிப்பவை என்பதையும் உணர வேண்டும். அப்படி உணர்ந்துகொண்டோமென்றால் இந்த ஆவணங்களையெல்லாம் புரிந்துகொள்வது நமக்கு எவ்வளவு முக்கியமானது என்ற உணர்வு நமக்குத் தன்னாலேயே ஏற்படும், மேலும், வருங்காலத்தில் ஏற்படக்கூடிய துயரங்களையும் ஒருவேளை நம்மால் தடுக்க முயலலாம்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகளின் ரகசியத் தந்திகளின் ஆயிரக் கணக்கானவற்றைப் படிப்பதில் செலவிட்ட சில மாதங்களுக்குப் பிறகு இந்த ஆவணங்களையெல்லாம் மக்களிடையே அம்பலப்படுத்தும் விதத்தில் ‘கேபிள்கேட்’ ஆவணத் தொகுப்பில் கசிய விட்டேன். ஏராளமான ஆவணங்களைப் பாடித்துப்பார்த்தேன், அவற்றிலிருந்து பொதுநலன்கள் குறித்த பிரச்சினைகளை விரிவாகப் பட்டியலிட்டுக்கொண்டேன். அந்தப் பட்டியலில் ‘தீவிரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர்’ என்பது எந்த விதத்தில் மேற்கொள்ளப்பட்டது என்பதிலிருந்து வளர்ந்துவரும் நாடுகளை வெளியுறவுரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் திட்டமிட்டு எப்படிச் சுரண்டினார்கள் என்பது வரை அந்தப் பட்டியலில் அடங்கும். இவையெல்லாம் பொது மக்களின் முன் வைக்க வேண்டியவை என்பதை நான் உணர்ந்தேன்.

இப்போதுள்ளதைவிட 2010-ல் எனக்கு மனமுதிர்ச்சி சற்றுக் குறைவே, எனது செயல்களின் விளைவுகள் குறித்து எனக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கவில்லை. மோசமாக ஏதாவது நடக்கும் என்பதை நிச்சயம் எதிர்பார்த்திருந்தேன், ஆனால், எந்த மாதிரி மோசமான விளைவு என்பதைக் குறித்த ஆழமான உணர்வு எனக்கு அப்போது இல்லை. என்னை தீயவளாகச் சித்தரிப்பார்கள் என்பதையும் என்னைக் குறிவைப்பார்கள் என்பதையும் எதிர்பார்த்திருந்தேன், அது மட்டுமல்லாமல் எனது வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு தனிப்பட்ட முறையில் நான் செய்திருக்கக் கூடிய ஒவ்வொரு பிழையும் அலசிப்பார்க்கப்படும் என்பதையும், இவற்றையெல்லாம் மக்கள் மன்றத்தில் எனக்கெதிராகவோ அல்லது ஒட்டுமொத்தமாக மாற்றுப் பாலினத்தவர்களுக்கெதிராகவோ பயன்படுத்துவார்கள் என்பதையும் எதிர்பார்த்திருந்தேன்.

என்னைக் காவலில் வைக்கும்படி ராணுவம் உத்தரவிட்ட பிறகு என்னை குவைத்துக்கு (எனது பிரிவில் இருந்த மிகவும் நட்புணர்வு கொண்ட இருவர்) அழைத்துச்சென்றார்கள். முதலில் ஹெலிகாப்டர் மூலமாக பாக்தாதுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்து சரக்கு விமானத்தில் அழைத்துச்சென்றார்கள். குவைத்தில் உள்ள சிறை முகாமுக்கு வரும்வரை என்னை ஒரு சிறைக் கைதியாகவே நான் உணரவில்லை. தொடர்ந்து வந்த நாட்களில் பொதுமக்களும் ஊடகங்களும் எனக்கு என்ன நடந்தது என்பதைத் துழாவித் தெரிந்துகொண்டபோது நிலைமை மேலும் மோசமானது. ஒரு வாரம் எல்லோரோடும் சேர்ந்து இருக்கும்படி தங்கவைக்கப்பட்டிருந்தேன். அதற்குப் பிறகு ஒரு கூடாரத்துக்குள் அமைக்கப்பட்டிருந்த கூண்டுக்கு மாற்றப்பட்டேன்.

கூண்டிலும் கூடாரத்திலும் சில வாரங்கள் இருந்த பிறகு, எனது மீது என்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன என்பது தெரியாமலும் எனது வழக்கறிஞரிடம் முழுமையாகத் தொடர்புகொள்ள முடியாத நிலையிலும் வெளியுலகில் ஊடகங்களில் சுழன்றடிக்க ஆரம்பித்திருக்கும் நெருப்புச் சூறாவளியைப் பற்றி ஏதும் அறியாமலும் இருந்த நான், மிகுந்த மனஉளைச்சலுக்குள்ளானேன். நான் எதிர்பார்த்த வகையில் என்னைக் கண்ணியமாக நடத்த மாட்டார்களோ என்ற அச்சம் என்னைக் கடுமையாக ஆட்கொண்டது. கொதிக்கும் பாலைவனத்தின் கூண்டுச் சிறையிலேயே என் வாழ்நாள் முழுதும் கழிந்துவிடுமோ, ஒரு ஆணாகவே நான் நடத்தப்பட்டுவிடுவேனோ, பொது விசாரணையை எதிர்கொள்ளாமல் இந்த உலகத்தின் பார்வையிலிருந்து நீங்கி ரகசியச் சிறைக்குள் காணாமல்போய்விடுவேனோ என்றெல்லாம் அச்சம் என்னை அரிக்க ஆரம்பித்தது.

ஆப்பிரிக்காவின் கொம்பு என்றழைக்கப்படும் பிரதேசத்தின் கடற்பரப்பில் அமெரிக்க குரூஸர் போர்க் கப்பலில் எனக்கு விசாரணை நடக்கும், அல்லது கியூபாவின் குவாந்தநாமோ வளைகுடாவின் சிறை முகாம்களுக்கு அனுப்பப்படுவேன் என்றெல்லாம் எனக்குச் சாப்பாடு கொண்டுவந்து கொடுத்த கப்பற்படைக் காவலாளிகள் சொன்னதால் எந்தப் புண்ணியமும் இல்லை. மிகவும் மோசமாக மன உளைச்சல் அடைந்திருந்த ஒரு தருணத்தில் எனக்கு நானே உறுப்பு நீக்கம் செய்துகொள்ளலாமா என்றெல்லாம் யோசித்தேன். இன்னொரு முறை நகைப்புக்குரிய அவலச் செயல் போலத் தோன்றும் ஒரு காரியத்தைச் செய்தேன். தூக்கு மாட்டித் தொங்குவதற்கேற்ற ஸ்திரமான கூரைபோன்று ஏதும் இல்லாததால் கிழிந்த போர்வையைக் கொண்டு தற்கொலை செய்துகொள்வதை யோசித்துப்பார்த்தேன். அதைக் கொண்டு எனது கழுத்தை நானே இறுக்கிக்கொள்ள முயலவும் செய்தேன். மாட்டிக்கொண்டுவிட்டதால் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடாத வகையிலான கண்காணிப்புக்கு குவைத்தில் நான் உள்ளாக்கப்பட்டேன்.

பிறகு அமெரிக்காவுக்கு என்னைக் கொண்டுவந்தார்கள். விர்ஜினியா மாகாணத்தில் குவாந்திகோவில் உள்ள கப்பல் சிறையில் என்னை அடைத்தார்கள் (அந்தச் சிறை தற்போது மூடப்பட்டுவிட்டது.) அந்தக் காலகட்டம்தான் எனக்கு மிகவும் மோசமான காலகட்டம், மிகவும் நீண்ட காலகட்டம்போல எனக்குத் தோன்றியது. பல்துலக்கும் புருசு, சோப்பு, கழிவறைக் காகிதம், புத்தகங்கள், காகிதம், சில சமயங்களின் என்னுடைய மூக்குக் கண்ணாடி என்று எந்தப் பொருளையுமே எனது சிறையறையில் நான் வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை. அவற்றைப் பயன்படுத்த வேண்டுமென்றால் அனுமதி வாங்க வேண்டும், அப்போது கூடவே யாராவது ஒருவர் இருந்து என்னைக் கண்காணித்துக்கொண்டிருப்பார். நான் முடித்தவுடனேயே அந்தப் பொருட்களைத் திருப்பித் தந்துவிட வேண்டும். நான் தற்கொலை செய்துகொள்ளக் கூடியவள் அல்ல என்று பல மனநல மருத்துவர்கள் சொல்லியிருந்தாலும்கூட நான் தற்கொலை செய்துகொள்வேன் என்பதற்காக இரவு நேரத்தில் எனது ஆடைகளையெல்லாம் நான் ஒப்படைத்தாக வேண்டும். அதற்குப் பதிலாக, ‘தற்கொலை தடுப்பு உடை’யை நான் அணிய வேண்டும். இந்த உடை மேல் பகுதி, கீழ் பகுதி என்று தனித்தனியாக இருக்காது, ஒற்றைப் பகுதியாகத்தான் இருக்கும்; அட்டைகள் வைக்கப்பட்டிருக்கும்; கிழிக்க முடியாத விதத்தில் இருக்கும்.

குவாந்திகோவில் நான் நடத்தப்படும் விதத்தைக் குறித்து பொதுமக்கள் கூக்குரல் எழுப்பிய பிறகும், வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் பிஜே குரோலே ராஜிநாமாவுக்குப் பிறகும், சாதாரண கைதிகள் இருக்கும் ராணுவச் சிறையொன்றுக்கு மாற்றப்பட்டேன். என் சிறை வாழ்க்கையில் இதுதான் உச்சக்கட்டம். கிட்டத்தட்ட ஒரு வருட காலம் சிறைக்காவலர்களின் இடைவிடாத கண்காணிப்பு, எனது அசைவுகளை மூன்றிலிருந்து ஆறு காவலர்கள் கட்டுப்படுத்துவது, கை கால்களில் சங்கிலியுடன் மனிதத் தொடர்புகளே கிட்டத்தட்ட இல்லாமல் வைக்கப்பட்டிருந்தது ஆகியவற்றுக்குப் பிறகு இறுதியாக சிறைக்குள் நடமாடவும் சக மனிதர்களுடன் சகஜமாகப் பேசிக்கொண்டிருக்கவும் முடிந்தது.

‘எதிரிக்கு உதவி செய்தல்’ என்ற குற்றச்சாட்டையும் (அமெரிக்க அரசியல் சட்டத்தின் அடிப்படையில் இது தேசத்துரோகக் குற்றம்), உளவுபார்த்தல் தொடர்பான சட்டம்-1917-ன் கீழும் கணினி மோசடி மற்றும் தவறான பயன்பாடு சட்டத்தின் கீழும் என்மேல் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அரசு சுமத்தியது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலான நீதிமன்ற விசாரணையின்போது அரசாங்கம் என்னைத் தண்டிப்பதற்காக எந்த அளவுக்குச் செலவுசெய்யத் தயாராக இருந்தது என்பதை நேரடியாகவே நான் கண்டுகொண்டேன்: கட்டுக்கட்டாகச் செலவு செய்யப்பட்ட பணம், பீப்பாய் பீப்பாயாகச் செலவான எரிபொருள், உருளை உருளையாக அச்சிடப்பட்ட காகிதங்கள், அதிகாரிகள், வழக்கறிஞர்கள், நிபுணர்களின் நெடிய பங்களிப்புகள்!

என்னை ‘தேசத்துரோகி’, ‘தேசவிரோதி’ என்றெல்லாம் சித்தரித்து எனக்கெதிராக வழக்கறிஞர்கள் வழக்காடியதை 100 நாட்களுக்கும் மேலாகப் பார்த்துக்கொண்டிருந்தேன், அதற்குப் பிறகு நீதிமன்றத்துக்கு வெளியே அவர்கள் என்னுடன் நட்புணர்வுடன் பழக ஆரம்பித்தார்கள், முகமன் சொல்வார்கள், அவ்வப்போது பேச்சுக்கொடுப்பார்கள். தங்களுக்கு அளிக்கப்பட்ட வேலையை அவர்கள் செய்கிறார்களே தவிர அவர்களெல்லாம் நல்ல மனிதர்கள்தான் என்பது எனக்குப் புலனானது. என் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்களே தவிர அவர்களெல்லாம் உண்மையிலேயே அதையெல்லாம் நம்புவதாக எனக்குத் தோன்றவில்லை.

எனது வழக்கு விசாரணையின் முடிவில் எப்படிப்பட்ட தீர்ப்பு வரும் என்பதையும் தண்டனை என்னவாக இருக்கும் என்பதையும் முன்கூட்டியே கணிப்பதற்குச் சிரமமாகவே இருந்தது. ‘எதிரிக்கு உதவுதல்’ என்ற குற்றச்சாட்டுக்கு ‘தண்டனை காலத்தை ஏற்கெனவே அனுபவித்தாயிற்று’ என்பதிலிருந்து ஜாமீனில் விடுவிக்க முடியாத ஆயுள் தண்டனை வரை பல்வேறு தண்டனைகள் சாத்தியம் என்பதால் எனது வழக்கறிஞர்கள் தர்ப்பினர்தான் மிகவும் கவலையோடு இருந்தார்கள். 35 ஆண்டு சிறைத்தண்டனை என்பதை நீதிபதி அறிவித்த பிறகு எனது வழக்கறிஞர்களை நான்தான் தேற்ற வேண்டியதாக ஆயிற்று. பல ஆண்டுகள் கடின உழைப்புக்கும் முயற்சிக்கும் பலனில்லாமல் போனதால் மிகவும் நைந்துபோனதுடன் அவநம்பிக்கைக்குள்ளானார்கள். எங்கள் எல்லோருக்குமே அது மிகவும் மோசமான தருணம்.

விசாரணையின் காரணமாக பதுங்கியும் என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டும் இருந்த நான் 22-08-2013-ல், அதாவது எனது தீர்ப்புக்கு மறுநாள், எனது பெயரை மாற்றிக்கொள்ளவும் பெண்ணாக மாறி வாழவும் முடிவெடுத்து அதை அறிவிக்கவும் செய்தேன். அப்போது நான் மோசமான சூழ்நிலையில் இருந்திருந்தாலும்கூட என்னைப் பொறுத்தவரை அது மிகவும் உச்சபட்ச தருணம். எனது எதிர் பாலின உணர்வு நிலை காரணமாக நான் பெற வேண்டிய மருத்துவச் சிகிச்சையை எனக்கு அளிப்பதற்கு ராணுவம் ஆரம்பத்தில் அனுமதிக்கவில்லை. ஆண் தன்மைக்குக் காரணமான ஆன்ட்ரோஜன் சுரப்பைத் தடுக்கும் மருந்துகளையும், பெண் தன்மையை ஊட்டும் எஸ்ட்ரோஜனையும் தினசரி செலுத்தி என்னைப் பெண்ணாக வாழ அனுமதிப்பதுதான் அந்தச் சிகிச்சை. குவாண்டிகோவிலும், எனது வழக்கு விசாரணையிலும் ஆனதைப் போல இந்த முறையும் சட்டரீதியிலான நடைமுறைகள் கடுமையாக இருந்ததோடு, நீண்ட காலமும் எடுத்துக்கொண்டன.

இறுதியாக, நான்கு மாதத்துக்கும் முன்புதான் – அதாவது எனது ஆரம்ப வேண்டுகோளுக்குப் பிறகு ஒன்றரை ஆண்டுகள் கழித்து – எனக்கு ஹார்மோன் சிகிச்சை தொடங்கப்பட்டது. ராணுவ விதிமுறைப்படி ஒரு பெண் வளர்க்கக் கூடிய அளவுக்கு கூந்தலை நானும் வளர்த்துக்கொள்ள வேண்டி இன்னும் போராடிக்கொண்டிருக்கிறேன். எனினும், இந்தப் பாலின மாற்றம் என்பது என்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையில் உச்சபட்ச தருணங்களில் ஒன்றாகும்.என் ஒட்டுமொத்த வாழ்க்கையைக் கணக்கிலெடுத்துக்கொள்ளாவிடினும், கடந்த 5 ஆண்டுகளில் எனக்கு நடந்தவற்றையெல்லாம் சில சமயங்களில் புரிந்துகொள்வதற்கு கஷ்டமாக இருக்கிறது. இவற்றில் தெளிவான, மாறாத விஷயம் என்றால் எனது நண்பர்கள், குடும்பத்தினர், உலகெங்குமுள்ள கோடிக் கணக்கான மக்கள் போன்றோரிடமிருந்து எனக்குக் கிடைத்த ஆதரவுதான். தனிமைச் சிறை, நீண்ட நெடிய சட்டப் போராட்டங்கள், மனதளவில் பெண்ணாக இருந்துகொண்டிருக்கும் நான் உடலளவிலும் பெண்ணாக மாறியது என்றெல்லாம் நான் எதிர்கொண்ட, உள்ளாக்கப்பட்ட ஒவ்வொரு போராட்டத்தையும் சமாளித்து மீண்டுவருவது மட்டுமல்லாமல், வளரவும், கற்றுக்கொள்ளவும், மனமுதிர்ச்சி பெறவும் நல்ல மனுஷியாக, மேலும் தன்னம்பிக்கையுடன் நடைபோடவும் செய்கிறேன் என்பதுதான் மிகவும் முக்கியமானது.
- C ‘தி கார்டியன்’, தமிழில்: ஆசை
 நன்றி:  ‘தி இந்து’
 ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையின் சுருக்கமான வடிவத்தைப் படிக்க: சிறையிலிருந்து ஒரு விசிலூதியின் ஓலம்

No comments:

Post a Comment