அலோக் ஜா
('தி இந்து’ நாளிதழில் 02-06-2015 அன்று வெளியான மொழிபெயர்ப்புக் கட்டுரை. தமிழில்: ஆசை)
ஒவ்வொரு நாளும் எவ்வளவு நீர் அருந்த வேண்டும்? கிட்டத்தட்ட இரண்டு லிட்டர் என்பது சரியானதுபோல் தோன்றுகிறது அல்லவா? உங்கள் உடலில் அதிக அளவுக்கு நீரிழப்பு ஏற்பட்டால், ஏற்படக்கூடும் என்று நீங்கள் நினைக்கும் பிரச்சினைகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளுவதற்காக உங்கள் அலுவலகத்தில் உங்கள் மேசைக்கு அருகே ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொண்டு அவ்வப்போது ஒரு மடக்கு என்று நாள் முழுக்கக் குடிக்கலாமல்லவா?
பிரிட்டனின் பொதுமருத்துவர்களிடையே தேசிய நீரூட்ட மையம் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. அந்த மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக வருபவர்களில் ஐந்தில் ஒருவர் களைப்பு, தலைவலி, கவனச் சிதறல் போன்றவற்றால் அவதியுறுவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். போதுமான அளவு நீர் அருந்தாததால் ஏற்படும் பிரச்சினைகள் என்று இவை கருதப்படுகின்றன. தேசிய நீரூட்ட மையம் என்பது பாட்டில் தண்ணீர் நிறுவனங்களின் கூட்டமைப்பு என்ற தகவல், பொருட்படுத்த வேண்டாத தகவலாக நாம் விட்டுவிட முடியாது. நாம் எவ்வளவு குறைவாக நீர் அருந்துகிறோம் என்பதுகுறித்து நம்மைக் கவலையுறச் செய்வது அவர்களது தொழிலுக்கு முக்கியமல்லவா! அதே நேரத்தில் நிறையத் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது என்று சொல்லும் எளிய அறிவுரைக்கு எதிராக வாதிடுவது அவ்வளவு எளிதல்ல.
தினமும் இரண்டு லிட்டர்?
துரதிர்ஷ்டவசமாக, இந்த எளிய அறிவுரையை நிரூபிக்கும்படியான வலுவான அறிவியல் ஆதாரங்கள் ஏதும் இல்லை. ‘தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர்’ என்ற தாரக மந்திரம் அறிவுபூர்வமான யூகமாக மட்டுமே இருக்க முடியும். முதலாவதாக, நாம் உட்கொள்ளும் அனைத்திலிருந்தும் நமக்கு நீர் கிடைக்கிறது - காபி, பழச்சாறு, பியர், சாப்பாடு. அதனால் நமது தினசரி அளவைப் பின்பற்றுவதற்காகத் தினமும் இரண்டு லிட்டர் தண்ணீரை ‘மடக் மடக்’கென்று குடிக்கத் தேவையே இல்லை. மிக முக்கியமாக, நமது உடலின் நீர் அளவை நிலையாக வைத்திருப்பது எப்படி என்று நம் உடலுக்குத் தெரியும். அதிக அளவில் நாம் தண்ணீர் குடித்தால், தேவைக்கு மிஞ்சிய நீரை நமது சிறுநீரகங்கள் வெளியேற்றிவிடும். போதுமான அளவு நீரை உட்கொள்ளவில்லையென்றால், நமது உடல் முடிந்தவரை சமாளித்துக்கொள்ளும், நமக்குத் தாகம் எடுக்கும் அதே வேளையில், குறைந்த அளவே சிறுநீர் கழிப்போம்.
நீரிழப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டாலோ, வெப்பமான இடத்தில் நாம் இருந்தாலோ, மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் பாதி தூரம் வந்துவிட்டாலோ தவிர, நாம் நீரைப் பற்றி அதிகமாகக் கவலைப்படத் தேவையில்லை. லிட்டர் லிட்டராகத் தினமும் தண்ணீர் குடித்தால் மிகவும் நல்லது என்ற கருத்து, நல்ல நோக்கத்தில் சொல்லப்பட்டாலும்கூட, சற்றே அர்த்தமற்றதுதான். ‘ஆக்ஸிஜன் நல்லது’ என்பதால் தினமும் வழக்கத்தைவிட அதிக அளவில் ஆக்ஸிஜனைச் சுவாசிக்கலாமா?
நீருடன் நமக்கு நெருக்கமான உயிரியல் உறவு இருக்கிறது. நம் உடலில் மூன்றில் ஒரு பங்கு நீர்தான். நமது செல்களின் அமைப்புகளிலும் செயல்பாடுகளிலும் நீரும் நேரடிப் பங்கேற்பாளரே. புரதங்களும் டிஎன்ஏவும் முறையாக இயங்கும்படி செய்வது, ஆற்றலையும் ஊட்டச்சத்துக்களையும் கடத்துவது போன்ற செயல்களை நீர் புரிகிறது. இந்தச் சமநிலையைப் பராமரிப்பது மிகவும் அவசியம். ஆனால், மனிதர் - நீர் உறவு என்றால் நம் மனதில் முதன்மையாகத் தோன்ற வேண்டியது இதுவல்ல.
தண்ணீராய் செலவழியும் நீர்
நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் நீர் செலவிடப்பட்டிருக்கிறது. உணவுப் பயிர்களுக்கு நீர் வேண்டும், ஆடை தயாரிக்க, அலுவலகங்கள், வீடுகள் கட்ட, கார் தயாரிக்க மற்றும் நாம் உறவு கொள்ளும் அனைத்தையும் உருவாக்க, நீர் மிகவும் அவசியம். நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் பெரும்பாலான நீரை நாம் கண்ணால் காணவோ, தொடவோ மாட்டோம். ஒரு கிலோ மாட்டிறைச்சியை உருவாக்க 16,000 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. ஒரு டம்ளர் தேநீருக்கு 36 லிட்டர் நீர்; ஒரு தாளுக்கு 10 லிட்டர் நீர்; நமது மடிக்கணினியில் இருக்கும் மைக்ரோசிப்புகளில் ஒன்றை உருவாக்க 30 லிட்டர் நீர் தேவைப்படுகிறது.
ஒரு கிலோ பருத்தி உற்பத்தியில் 10,000 லிட்டர் நீர் சராசரியாகச் செலவிடப்பட்டிருக்கிறது. இந்தக் கணக்கு இடத்துக்கு இடம் மாறுபடும். இந்தியாவில் ஒரு கிலோ பருத்திக்கு 22,500 லிட்டர் நீர் செலவாகிறது. இதுதவிர, வீட்டில் ஒரு தடவை தூவல்நீரில் குளித்தால் 190 லிட்டர் நீர் செலவாகும். பல் துலக்கும்போது 10 லிட்டர் நீரும், கழிப்பறையில் 10-லிருந்து 30 லிட்டர் நீரும் செலவாகிறது.
புதுப்புது வழிகள்
பூமியின் மேற்பரப்பில் 150 கோடி கன கிலோமீட்டர் நீர் இருந்தாலும் அதில் 1 சதவீதத்துக்கும் குறைவான நீரே நமக்குப் பயன்படுகிறது. மீதமுள்ளவையெல்லாம் உப்பு நீராகவோ, துருவங்களில் பனிக்கட்டிகளில் உறைந்தோ இருக்கிறது. இந்தச் சிறிய அளவு நீரை நம்மோடு இந்த உலகத்தில் இருக்கும் தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றோடு பகிர்ந்துகொண்டாக வேண்டும். மனிதர்கள் விவசாயத்தை மேற்கொள்ளத் தொடங்கியதிலிருந்து, அதாவது 12,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து, மனிதர்கள் வளர்ந்துவரும் தங்கள் நாகரிகங்களைக் கட்டமைப்பதற்காக நீரை வீணடிப்பதில் புதுப்புது வழிகளைக் கண்டறிந்திருக்கிறார்கள். நதியின் போக்கைத் திருப்பியும், அதிகரித்துக்கொண்டே வந்த மக்கள்தொகையின் தேவைக்கு ஈடுகொடுப்பதற்கான உணவுப் பயிர்களை வளர்ப்பதற்காக நீண்ட தொலைவுக்கு நீரை அனுப்பியும்தான் நகரங்களும் சாம்ராஜ்யங்களும் எழுப்பப்பட்டிருக்கின்றன. கி.மு. 6000-த்தில் ஒட்டுமொத்த உலகின் மக்கள் தொகையே 10 லட்சம்தான். தண்ணீரை அப்போது வீணடித்ததில் ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால், இப்போது பூமியில் 700 கோடி மக்கள் அதே அளவிலான நீர் வளத்துக்காக அடித்துக்கொள்கிறார்கள்.
தண்ணீரை அதிக அளவில் வீணடிப்பது வளர்ச்சியடைந்த நாடுகளில்தான் அதிகம். சராசரியாக ஒவ்வொரு அமெரிக்கரும் தினமும் 575 லிட்டர் நீரைப் பயன்படுத்துகிறார். ஐரோப்பியர்கள் 250 லிட்டர் நீரைப் பயன்படுத்துகிறார்கள். வளர்ந்துவரும் நாடுகளில் உள்ள 100 கோடி மக்களுடன் இதையெல்லாம் ஒப்பிட்டுப் பாருங்கள். அவர்கள் ஒரு நாளைக்குச் சராசரியாக 19 லிட்டருக்கும் குறைவாகவே பயன்படுத்துகிறார்கள். இதைவிட இரண்டு மடங்கு மக்களோ அடிப்படைச் சுகாதார வசதிகளைப் பெறக்கூட வழியற்றவர்கள்.
பருவநிலை மாற்றம் காரணமாக உலகெங்கும் அதிகரித்துவரும் வெப்பநிலையால் விவசாய நிலங்கள் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. நீராதாரங்கள் குறைந்துகொண்டே வருவதைச் சமாளிக்க முடியாமல், ஏழை நாடுகளில் உள்ளவர்கள் திண்டாட்டத்துக்கு உள்ளாவார்கள். இந்தியாவில் தற்போது கடும் வெயிலுக்கு நாடு முழுவதும் 1,800 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதில் பலியானவர்களெல்லாம் பெரும்பாலும் சிறுவர்கள், முதியோர், மற்றும் ஏழைகளே. நீர்த் தட்டுப்பாடு வெப்பத்தின் கடுமையையும், வெப்பத்தின் கடுமை நீர்த் தட்டுப்பாட்டையும் தீவிரப்படுத்தியிருக்கின்றன.
2050 வாக்கில் 50 கோடி மக்கள் நீராதாரம் இன்றி பாதிக்கப்படுவார்கள் என்று 1995-ல் ஐ.நா. கணித்தது. இந்தக் கணிப்பை 2005-ல் ஐ.நா. மறு ஆய்வுக்கு உட்படுத்தி அந்த எண்ணிக்கையை 400 கோடியாக மாற்றியது. இந்த உலகத்தைக் கட்டமைக்க நீரைப் பயன்படுத்தியிருக்கிறோம். ஒட்டுமொத்த மனித நாகரி கத்தின் வரலாற்றைப் பற்றிய நினைவில்லாமல் அதை வீணடித்திருக்கிறோம். ஏதும் நடக்காததுபோல் தப்பித்துக்கொள்ளவும் பார்க்கிறோம். அந்த யுகத்தின் இறுதியை நோக்கி இப்போது ஓடிக்கொண்டிருக்கிறோம். நம் உடல்கள் அவற்றின் நீரைச் சமாளித்துக்கொள்வதால் நீர் என்ற விலைமதிப்பில்லா ஆதாரத்தைப் பற்றி யோசிக்கவே நமக்கு அவகாசமில்லாமல் போய்விட்டது. துரதிர்ஷ்டவசமாக, மனித சமூகங்களுக்கு அப்படிப்பட்ட சொகுசு இனியும் கிடைக்காது.
- அலோக் ஜா
‘தி கார்டியன்’ இதழின் முன்னாள் செய்தியாளர், ஐடிவி-நியூஸ் சேனலின் அறிவியலுக்கான செய்தித் தொடர்பாளர்,
‘தி வாட்டர் புக்: தி எக்ஸ்ட்ரார்டினரி ஸ்டோரி ஆஃப் அவர் மோஸ்ட் ஆர்டினரி சப்ஸ்டன்ஸ்’ நூலின் ஆசிரியர். C ‘தி கார்டியன்’.
- நன்றி: ‘தி இந்து’
‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க:
No comments:
Post a Comment