ஆசை
(‘தி இந்து’ நாளிதழில் 28-06-2015 அன்று வெளியான சிறு கட்டுரை)
போர்ஹேஸின் புகழ்பெற்ற ‘பேபல் நூலகம்’ (The Library of Babel) சிறுகதை “இந்தப் பிரபஞ்சம் (மற்றவர்களெல்லாம் அதை ஒரு நூலகம் என்று சொல்வார்கள்) எண்ணற்ற, சொல்லப்போனால் முடிவற்ற அறுகோண அறைகளால் ஆனது” என்று தொடங்குகிறது. முடிவற்ற அந்த நூலகத்தை போர்ஹேஸ் விவரித்துக்கொண்டே போகும்போது கனவில் ஒரு காலும் நனவில் ஒரு காலும் வைத்து இதில் எது கனவு, எது நனவு என்பது தெரியாமல் நடந்துபோவதைப் போன்ற ஒரு உணர்வு ஏற்படும். போர்ஹேஸின் பெரும்பாலான கதைகள் ஏற்படுத்தும் உணர்வுதான் இது.
இந்தப் புவியின் அனைத்து மொழிகளின் அனைத்து எழுத்துக்களாலும் சாத்தியமாகக் கூடிய அனைத்து சொல்லிணைவுகளையும் உள்ளடக்கியதாக இருக்கக் கூடிய நூல்களைத் கொண்ட அந்த நூலகத்தில் கடந்த காலப் புத்தகங்கள் மட்டுமல்ல எதிர்காலப் புத்தகங்களும் இருக்கும் என்று அந்த நூலகத்தைப் பற்றி அந்தச் சிறுகதையில் எழுதியிருக்கிறார் போர்ஹேஸ்.
இந்தப் பிரபஞ்சத்தின் மிக அரிதான சாத்தியங்களுள் ஒன்றான புவியில், உயிர் தோன்றியது எண்ணற்ற நிறைவேறாத சாத்தியங்களுக்கிடையே நிறைவேறிய ஒற்றைச் சாத்தியம். அதுபோன்றதுதான், போர் ஹேஸின் முடிவற்ற நூலகத்தின் முடிவற்ற அடுக்குகளில் ஷேக்ஸ்பியரின் ‘ஹாம்லெட்’ நாடகத்தின் ஒரு பக்கம் காணக் கிடைப்பதும்.
போர்ஹேஸ் குறிப்பிட்டிருக்கும் அந்த நூலகத்தை இருவரால்தான் உருவாக்க முடியும். ஒருவர் போர்ஹேஸ் (கதையில் உருவாக்கியிருக்கிறார்), இன்னொருவர் கடவுள் என்று நம்பப்படும் இந்தப் பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர்த்தா. எனினும் இணைய உலகத்தில் போர்ஹேஸின் கற்பனைக்கு உரு கொடுக்க முயன்றிருக்கிறார் ஜொனாதன் பேசில் என்பவர். இயற்பியல் விதிகளையும் மனித சாத்தியங்களையும் மீறி போர்ஹேஸ் கற்பனை செய்ததுபோல் ஒரு நூலகத்தை இணையத்திலும்கூட அப்படியே உருவாக்குவது சாத்தியம் இல்லை எனினும் தன்னளவில் முயன்றிருக்கிறார் ஜொனாதன்.
13,12,000 வேறுவேறு எழுத்துக்களால் சாத்திய மாகக் கூடிய அத்தனை சேர்க்கைகளையும் கொண்டிருக்கும் முடிவற்ற இணைய நூலகமாக அது உருவாகிக்கொண்டிருக்கிறது. அதனால், பொருளேயில்லாத சொற்களும் வாக்கியங்களும் கொண்ட நூல்கள்தான் அதில் பெரும்பான்மையாக இருக்கும். தற்செயலாக ஒரு ‘ஹாம்லெட்’ பக்கமோ, போர்ஹேஸ் கதையிலிருந்து ஒரு பக்கமோ அகப்படலாம். தற்போது 3,200 எழுத்துகள் அளவில் வேலை முடிந்திருக்கிறது. இதுவரை இந்த 3,200 எழுத்துகளை மட்டும் வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் எவ்வளவு தெரியுமா? 10 என்ற எண்ணுக்குப் பின்னால் 4,677 பூஜ்ஜியங்களைப் போட்டுக்கொள்ளுங்கள். ஒரு நொடிக்கு ஒரு புத்தகம் என்று புரட்டினால்கூட எவ்வளவு ஆண்டுகள் ஆகும் தெரியுமா? 10 என்ற எண்ணுக்குப் பின்னால் 4,678 பூஜ்ஜியங்களைப் போட்டுக்கொள்ளுங்கள்! ஆனால், புவியின் உச்சபட்ச வயதாகக் கணிக்கப்பட்டிருப்பது 750 கோடி ஆண்டுகள்தான், அதாவது 75-க்குப் பின்னால் 8 பூஜ்ஜியங்கள் மட்டுமே.
“இதுவரை எழுதப்பட்டிருக்கும் எந்தப் புத்தகமும், எழுதப்பட்டிருக்கக் கூடிய எந்தப் புத்தகமும், ஒவ்வொரு நாடகமும், ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு அறிவியல் ஆய்வுக் கட்டுரையும், ஒவ்வொரு தீர்ப்பும், ஒவ்வொரு அரசியலமைப்புச் சட்டமும், ஒவ்வொரு வேதமும், இன்னும் எல்லாமும்” அந்த நூலகத்தில் இடம்பெறும் என்கிறார் ஜொனாதன்.
வேலையற்ற வேலையைப் போல்தான் இது தோன் றும். ஆனால், போர்ஹேஸ் விளையாடிய முடிவின்மை என்ற மாய விளையாட்டில் மயங்கிப்போனவர்களால் வேறு என்னதான் செய்ய முடியும்! அந்த இணையதளத்தின் முகவரி: libraryofbabel.info
- நன்றி: ‘தி இந்து’
- ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க:
வித்தியாசமான கண்ணோட்டம். பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete