Saturday, June 20, 2015

பெயர் திருடிக் குருவி


ஆசை

(‘தி இந்து’ நாளிதழின் ‘மாயாபஜார்’ சிறுவர் இணைப்பிதழில் 09-04-2014 அன்று வெளியான கதை.)

பெயர் திருடிக் குருவியைப் பார்த்திருக்கிறீர்களா? வருணாக் குட்டியின் செல்லப் பெயர்தான் அது. வைத்தது யார் தெரியுமா? பறவைகள்தான்.

வருணாக் குட்டிக்குத் தன் பெயர் பிடிக்கவே பிடிக்காது. “வருணாவாம் வருணா, வேற பேரே கிடைக்கலையா உங்களுக்கு?” என்று தன் அப்பா, அம்மா இருவரையும் திட்டிக்கொண்டே இருப்பாள்.

ஒருநாள் அழகான பறவை ஒன்றைப் பார்த்தாள். தரையில் அவசர அவசரமாக எதையோ கொத்திக் கொண்டிருந்தது. இவர்களைப் பார்த்ததும், அதன் கொண்டை விசிறிபோல விரிந்தது. பறவை பறந்தோடிவிட்டது.

அப்பா, இந்தப் பறவை யோட பேரு என்னாப்பா?” என்று கேட்டாள் வருணா.

அது பேரு கொண்டலாத்தி. அழகான கொண்டை இருக்குறதுனால அந்தப் பேருஎன்றார் அப்பா.

பாருங்கப்பா, அதுக்கெல் லாம் எவ்வளவு அழகா பேரு இருக்கு. எனக்கு மட்டும் ஏன்பா இப்படி வச்சிங்க?” என்று சிணுங்கினாள் வருணா.

இதையே எத்தனை தடவ சொல்வ நீ. வேணும்னா அந்தப் பறவையோட பேரைக் கடன் வாங்கிக்கஎன்று சொல்லிவிட்டு அப்பா போய்விட்டார்.

அன்றைக்கு ஆரம்பித்ததுதான் வருணாக் குட்டியின் பெயர் வேட்டை.


நாக்கை நீட்டி, மெய்மறந்து எவ்வளவு அழகாகத் தேன்குடிக்கிறாய் தேன்சிட்டே. இதோ உன் பெயரைத் திருடிக்கொள்கிறேன் பார்” - தேன்சிட்டிடமிருந்து பெயரைத் திருடிக்கொண்டு அந்த இடத்தை விட்டு நழுவினாள் வருணா.

தேன் குடித்து முடித்துவிட்டு சுயநினைவுக்கு வந்த அந்தப் பறவை அதிர்ந்துபோனது. அதனுடைய பெயரைக் காணோம்! தேன் குடித்த பூவுக்குள் விழுந்துகிடக்கிறதா என்று எட்டிப் பார்த்தது. அங்கும் இல்லை. அதன் பெயர் எங்கும் கிடைக்கவே இல்லை. அழுதுகொண்டே கூடு நோக்கிப் பறந்தது.

இப்படித்தான் மீன்கொத்தி, அதுவும் கறுப்பு வெள்ளை மீன்கொத்தி. குளத்துக்கு மேலே அந்தரத்தில், மீனுக்காகக் காத்திருந்தபடி சிறகடித்துக்கொண்டிருந்தது. தலையைக் குனிந்து கீழே மீன் ஏதும் வருகிறதா என்று உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தது. அந்தரத்தில் குத்திவைத்த பூவைப் போல அழகாக இருந்தது. இதுதான் சமயம் என்று அதன் பெயரை உருவிக்கொண்டு வந்துவிட்டாள் வருணா.

மீனைப் பிடித்துவிட்டுக் கரைக்குச் சென்று அமர்ந்தபோதுதான் அந்தப் பறவையைப் பார்த்து அதன் வாயிலிருந்த மீன் ஒரு கேள்வி கேட்டது, “பேருகூட இல்லை. நீயெல்லாம் என்னைப் பிடிக்க வந்துட்டியே?”. திடுக்கிட்டுப்போனது அந்தப் பறவை. ஆமாம், பெயர் காணோம்தான். வாயிலிருந்த மீனைத் தூக்கியெறிந்தது. மீன் போய் குளத்தில் விழுந்தது.

இதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தது ஒரு இலைக்கோழி.

பெயரில்லாப் பறவைக்குப் பெரிய மூக்கு எதற்கு?” என்று கிண்டலடித்தது. அவமானத்தோடு மரக்கிளையில் உட்கார்ந்திருந்தது பெயரை இழந்த பறவை. பாடிக்கொண்டே ஒரு இலையிலிருந்து இன்னொரு இலைக்குக் கால் வைத்தது இலைக்கோழி. அந்த இடைவெளியில் அதன் பெயரையும் திருடிக்கொண்டு வந்துவிட்டாள் வருணாக் குட்டி.

பெயரில்லாப் பறவைக்குப் பெரிய வால் எதற்கு?” என்று மரக்கிளையிலிருந்த பறவை பதிலுக்குப் பாடியது.

இப்படியே குக்குறுவான், செண்பகம், குயில், நாரை என்று கண்ணில் படும் பறவைகளிடமிருந்தெல்லாம் பெயர்களைத் திருட ஆரம்பித்தாள் வருணாக் குட்டி. பெயர்களை இழந்த பறவைகள் நிம்மதி இழந்து வானில் அங்கு மிங்கும் பறந்தன. ஒரே கூச்சல்.

இப்படியாக எத்தனையோ பறவைகளிடமிருந்து திருடிய பெயர்களை ஒரு வலைக்குள் போட்டு வைத்திருந்தாள் வருணா. தேவையான அளவுக்குப் பெயர்கள் சேர்ந்த பிறகு யாருக்கும் தெரியாமல் வலையைத் தூக்கிக்கொண்டு ஆற்றங்கரைக்கு வந்தாள்.

அதுவரை வலைக்குள் தூங்கிக்கொண்டிருந்த பெயர்களெல்லாம் சிணுங்க ஆரம்பித்தன. சில பெயர்கள் சத்தம்போட்டு அழ ஆரம்பித்தன. பெயர்களின் சத்தம் கேட்க ஆரம்பித்ததும், பெயர்களை இழந்த பறவைகள் அந்த இடத்தைத் தேடி வந்தன. அங்கே, வலைக்குள் தங்கள் பெயர்கள் இருப்பதையும் ஒரு சிறுமி அவற்றைக் காவல்காத்துக் கொண்டிருப்பதையும் பறவைகள் பார்த்தன. பறவைகள் மகிழ்ச்சி தாங்க முடியாமல் பாட ஆரம்பித்தன.

அப்போதுதான் அந்த அதிசயம்! வலையோடு சேர்ந்து பெயர்கள் பறக்க ஆரம்பித்தன. வருணாக் குட்டிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. வலையை இறுக்கமாகப் பிடித்து இழுக்கப் பார்த்தாள். முடியவில்லை. அவளையும் மேல் நோக்கி இழுத்தது வலை. கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள் வருணாக் குட்டி.

வலை மேலே மேலே போய்க்கொண்டிருந்தது. வருணாக் குட்டியும், இல்லையில்லை, பெயர் திருடிக் குருவியும் மேலே மேலே போய்க்கொண்டிருந்தாள்.

மேலே மேலேமேகத்துக்கும் மேலேநிலவுக்கும் மேலேவிண்மீன்களுக்கும் மேலேவானத்துக்கும் மேலே

குழந்தைகளே, பறவைகளின் பெயர்களும் பறக்கும் என்று வருணாக் குட்டி, இல்லையில்லை, பெயர் திருடிக் குருவி தெரிந்துகொண்டது இப்படித்தான்.


ஓவியம்: ராஜே

- நன்றி: 'தி இந்து’
 ‘தி இந்து’ நாளிதழின் இணையதளத்தில் இந்தக் கதையைப் படிக்க:  பெயர் திருடிக் குருவி

No comments:

Post a Comment